Advertisement

“பொட்ட புள்ளைக்கு என்னத்துக்கு படிப்பு வேண்டி கிடக்கு? பேசாம நல்ல காசுள்ள குடும்பமா பாத்து கட்டிக் கொடுத்துட்டா ஆச்சு. நாளபின்ன நமக்கும் ஒத்தாசையா இருக்கும்”

“இல்லைங்க. காலேஜ்….”

“என்னட்டி சொல்லுத? காலேஜா? ஏய் கூறு கெட்டவளே! நம்ம குடும்பத்துல எந்த பொம்பளை பிள்ளையாவது வீடு தாண்டி வெளியூர் போய் படிச்சிருக்கா? அப்படி போய் படிச்சா நம்ம குடும்ப கௌரவம் என்னாகுறது?”

“அதில்லைங்க. இப்ப உள்ள பசங்க படிச்ச புள்ளைய தான் கட்டிகிடுதானுங்க. இவளும் ஏதாவது படிச்சிருந்தா தான் பெரிய இடத்துல சம்பந்தம் பண்ண முடியும். அதாம்…”

“அதெல்லாம் ஒரு மன்னாங்கட்டியும் வேணாம்”

துண்டையும் பாகீரதியின் மனசையும் சேர்த்து உதறிவிட்டுப் போகும் கணவனை எப்படி வழிக்கு கொண்டு வருவதென்று யோசித்துக்கொண்டிருந்தார் ராஜேஸ்வரி!!

“ஏ கேர்ள், என்னாச்சு? உங்க பாப்ஸ், விறைப்பு வீராசாமி வழிக்கு வந்தாரா  இல்லையா ?”

“இல்லட்டி, இப்போ தான் அம்பை ஆர்ட்ஸ் காலேஜ்னா சரினு சொல்லிருக்கார்  . இன்னும் நம்ம போர்க்கால திட்டமெல்லாம் தெரிஞ்சுச்சு  ‘ஏ கே ஃபார்ட்டி’  செவன்  கையில எடுத்து என்னை போட்டு தள்ளிடுவார் :”

“விடு கேர்ள்!  அம்பை ஆர்ட்ஸ் காலேஜ் வரைக்கும் வந்தவர், கொஞ்சம் ட்ரெயின்  பிடிச்சு சிவகாசி வர மாட்டாரா என்ன?”

“பாப்போம்“

அகஸ்தியர் கோயில் வாசலில் பேசிக்கொண்டே உள்ளே சென்ற முப்பெரும் தோழிமார் மூவரும் ஒரே வேண்டுதலை அகஸ்தீஸ்வரர் முன்பு வைக்க, அவர் வேண்டுதலை நிறைவேற்றாமல் இருப்பாரா என்ன ?!

“ஏங்க, அவ இஞ்சினியர் படிக்க ஆசை படுதா”

“அதுக்குன்னு தின்னவேலி வரைக்கும் அவளை அனுப்ப சொல்றியா?!”

“தின்னவேலி இல்லைங்க, அங்கன கூட நமக்கு தெரிஞ்ச புள்ளைங்க யாரும் சேரல. சிவகாசில ஏதோ காலேஜாம்…நம்ம சுப்பையா, சரவணன் புள்ளைங்க மானசா, தேன்மொழி கூட அங்கன தான் சேர போகுதுங்களாம்”

“ஏம்ட்டி, அந்த சுப்பையா புள்ள கூட கூட்டு சேராதனு இவளுக்கு எத்தனை மட்ட சொல்லிருக்கேன். இன்னும் ‘அந்த’ ஜாதி (?!) புள்ளைக் கூட தான் ஊர் சுத்துதாளா? இதுல அவ படிக்க போற காலேஜ்லேயே சேக்கலாம்னு வேற சொல்லுத!”

“சின்னதுலேர்ந்து ஒண்ணு மன்னா வளருதுங்க. அதுங்க கூடவே இவளும் சேர்ந்தா, இவளும் என்ன பண்றா, வைக்கிறானு நமக்கும் தெரிய வரும். நம்ம கண் பார்வையில இருப்பா. அதுமட்டுமில்லாம அந்த காலேஜ் ரொம்ப கட்டுக்கோப்பான காலேஜாம். புள்ளைங்க அப்படி இப்படி ஒன்னும் பண்ணிட முடியாது. அவளோ கட்டுப்பாடு இருக்காம். எல்லாத்துக்கும் மேல அங்க நம்மாளுங்க தான் அதிகம். அதுக்கு மேல வேண்டாம்னா விடுங்க, நாம தின்னவேலில சேர்த்துடுவோம்”

சரியாக கல்லெறிந்தார் அவர். அவர் எறிந்த கல் சரியாக குழம்பிய குட்டைக்குள் விழுந்தது. ஒருமனதாக சிவகாசி கல்லூரியில் சேர தலையசைத்தார்!!

மானசாவுக்கு விளையாட்டு கோட்டாவில் இடம் கிடைக்க, தேன்மொழிக்கும் பாகீரதிக்கும் பொறியியல் கலந்தாய்வின்  மூலம் இடம் கிடைத்தது, கடவுளுக்கு பல லஞ்சங்கள், கிஞ்சங்கள்  தருவதான பல வேண்டுதல்களுக்கு பின் கிடைத்த இடமாததால் தோழிமார் மூவரும் கொண்டாடி தீர்த்தனர் !!!

எப்படி நிற்க வேண்டும், எப்படி நடக்க வேண்டும், எப்படி உடை உடுத்த வேண்டும், யாருடன் பேச வேண்டும் போன்ற பல அறிவுரைகளை வழங்கிய வண்ணம் அவளைக் கொண்டு வந்து கல்லூரியில் சேர்த்தார் பொன்மாணிக்கவேல்.

கல்லூரி ஆரம்பிக்கும் நாளுக்கு முந்தின தினமே,  சிவகாசியிலேயே ஒரே தங்கும் விடுதியில் பாகீரதி, தேன்மொழி குடும்பத்தாரும், வேறோரு விடுதியில் மானசா குடும்பத்தாரும் தங்கி (??) காலையில் முதல் நாள் வகுப்புக்கு தயாராகினர்.

கண்களில் கலர் கலர் கனவுகளுடன் தயாராகி வந்தாள் பாகீரதி.

மகளின் சௌந்தர்யத்தை அன்னை கண் குளிர ரசிக்க, அங்கிருந்த மாணவர் பட்டாளத்தையும், ஒன்றிரண்டு மாணவர்கள் பாகீரதியை திரும்பிப் பார்த்துவிட்டுச் செல்வதையும் கவனித்த மாணிக்கவேல் ரௌத்திரமாய் நின்றார்!!

“என்னட்டி இது? இப்ப எவனை கவர இப்படி அலங்கரிச்சிட்டு வந்து நிக்க? இவ்ளோ நாள் இல்லாம காலேஜ்ல கொண்டு விட்டோனே புதுசா எதுக்கு இந்த மினுக்கு?”

அவர் கத்திய கத்தில் ஒன்றிரண்டு மாணவர்கள் இவளைத் திரும்பிப் பார்க்க, கூனி குறுகி போனாள் பாகீரதி.

“ஆமா! தலை வாரி ஒரு கிளிப் போட்டிருக்கா. அது ஒங்களுக்கு மினுக்காக்கும். பாகீ நீ வா கிளாஸ்க்கு மணி ஆயிரும். காலேஜ் நுழையும் போது ஒரு சின்ன பிள்ளையார் கோயில் பாத்தேன். அங்க போய் கும்பிட்டுட்டு போலாம் வா. ஏங்க நீங்க இங்கனையே இருந்து இவளுக்கு என்ன ரூம் குடுக்காங்கனு பாத்து வையுங்க”

அவர் பேச்சை வளர்க்காமல் வெட்டி விட்டு, தரதரவென அவள் கையை பிடித்து இழுத்தபடி கோயிலை நோக்கிச் சென்றார்.

ஒரு சின்ன அரசமரம் அதனடியில் அம்சமாய் சின்ன விநாயகர் எழந்தருளியிருக்கக் கோயிலின் நடையிலேயே சங்கு பூ செடி பூக்களை சொறிந்து அர்ச்சித்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் சின்ன சின்ன செடிகளும் மரங்களுமாயிருக்கக் கோயில் முன்னே இருவரும் கண்மூடி அமர, மனம் பேரமைதி கொண்டது! மகளின் மனம் வாடாமல் , கணவரின் கோபத்துக்கு ஆளாகாமல் மகளை காக்க வேண்டி அந்த விநாயகருக்கு மனதிற்குள்ளேயே ஒரு தேங்காயை உடைத்தது அந்த தாயுள்ளம்!!

“அம்மா!!” யாரோ கூப்பிடும் குரல் கேட்டு கண் விழித்தார் ராஜேஸ்வரி.

“அம்மா, என்ன தெரியுதா?”

“தெரியலேயே பா. நீயி.. ஆங்க்.. கல்லிடைக்குறிச்சி சரசு புள்ளை தானே? நல்லாருக்கியா பா? அம்மா அப்பா நல்லா இருக்காங்களா?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க மா. நீங்க என்னமா இங்க? “

“எம்மவளை இந்த காலேஜ்ல தான் சேர்த்துருக்கோம் “

“அப்படியா நானும் இந்த காலேஜ் தான் மா”

“ரொம்ப சந்தோஷம் பா. ஏட்டி, பாகீ. இந்த புள்ளை எந்த கிளாஸ்னு கேட்டுக்கோட்டி. ஏதாவதுனா உதவியா இருக்கும். இவங்க அம்மா நம்ம சொந்தம் தான். ஆச்சி உசுரோட இருந்தப்போ வந்துட்டு போய்ட்டு இருந்தோம். அப்புறம் விரிசல் விட்டு போச்சு. அம்மா வரலயா பா?”

“இல்லமா. அக்காவுக்கு இன்னும் ரெண்டு நாள்ல டாக்டர் டேட்  சொல்லிருக்காங்க. அதான் அப்பா அம்மா ரெண்டு பெரும் வரல. முதல் குழந்தை வேறயா அதான் . நீங்க மட்டுமா வந்தீங்க? அப்பா வரல?”

“அவரு.. அவரு வரல பா .. நாங்க மட்டும் தான் வந்தோம்.. சரிப்பா நாங்க வாரோம். பாத்துக்கோ..”

அங்கிருந்து அகன்றதும், “ஏம்மா அப்பா வரலனு பொய் சொன்ன?”

“உங்கப்பாவுக்கு என் சொந்த பந்தம் யாருமே ஆவாது. அதும் இந்த சரசுவை அவருக்கு பிடிக்கவே பிடிக்காது. இவம் பாட்டுக்கு உங்கப்பா கிட்ட பேச போய் அவர் இப்போ வெறுமன ஆடிட்டு தான் இருக்கார், இவன பத்தி தெரிஞ்சா ருத்ரதாண்டவம் ஆட ஆரம்பிச்சுடுவார் . நீயுமே இந்த புள்ளை கிட்ட கொஞ்சம் பார்த்தே நடந்துக்கோ. அது தான் உனக்கும் உன் படிப்புக்கும் நல்லது. உங்கப்பா பொம்பளை புள்ளைனாலே தரம் கெட்டு  தான் போகும்னு நம்பறார், அவர் நம்பிக்கையை நீ உடைக்கணும் . என்ன மாதிரி இல்லாம நீயாவது நல்ல படிச்சு உன் சொந்த கால்ல நிக்கணும். கேட்டியா?”

அவர் கண்களில் கண்ணீரில்லை, ஒரு திடம் தெரிந்தது. தன் பிள்ளைக்கு ஒரு நல்லது செய்துவிட்ட திடம் அது! ஆயிரம் வலிகளைத் தாங்கிய திடமது !!கண்ணீரை விடவும் வலியது அது!!

—————————————————————————————————-

கை நிறைய புத்தகங்களையும் எஞ்சினியரிங் டிராயிங் கிட்டையும் நெஞ்சோடு சேர்த்தனைத்தவாறே அடுத்த ஐந்து நிமிடங்களில் ஆரம்பிக்க இருக்கும் வகுப்புக்கு கால்களை எட்டு, பதினாறு என்று போட்டவாறு ஓடிக்கொண்டிருந்த அந்த முப்பெரும் தோழிகள்.

“பாகீ”

பின்னால் கேட்ட குரல் அவர்களை நிறுத்த சட்டென்று திரும்பி பார்த்தனர். அவர்கள் வகுப்பு மாணவர்கள் மூன்று பேர் பின்னால் வந்துக்கொண்டிருந்தனர்.

“என்ன பாக்கி டா? ஏதாவது கடன் பாக்கியா? இல்லை டீக்கடைல பாக்கி வச்சிருக்கியா?”

“இல்ல மச்சி இது வேற பாக்கி மச்சி. அது உனக்கு புரியாது. நம்ம சூர்யா  கிட்ட கேட்டா அவனுக்கு தெரியும்”

பின்னால் வந்துக்கொண்டிருந்தவர்களின் இந்த பேச்சுகளைக் கேட்டும் கேட்காதது போல நடை வேகத்தை கூட்டினாள் பாகீரதி.

“ஏட்டி பாகீ! அவனுக உன்ன தான்ட்டி ஓட்டுரானுக”

“எனக்கு தெரியும்ட்டி. விரசா வாங்க”

வகுப்பறைக்குள் இவர்கள் மூவரும் நுழைந்ததும் சலசலத்துக் கொண்டிருந்த மாணவர்கள் மத்தியில் ஒரு கலகலப்பு. மாணவர்கள் வரிசையில் கடைசி பெஞ்சுக்கு திரும்பிய தன் கண்களை கஷ்டப்பட்டு அடக்கிவிட்டு தன் இடத்தில் சென்று அமர்ந்தாள் பாகீரதி. அதற்குள் மாணவர்கள் பகுதியிலிருந்து ‘சூர்யா’, ‘சூர்யா’ என்ற இரண்டு மூன்று குரல்களும் அதை தொடர்ந்து கேலி சிரிப்புகளும் எழ, ஆசிரியரின் வருகை அதை அடக்கியது.

வகுப்பு தொடங்கி சிறிது நேரம் கழித்து, மெலிதாக தலையைத் திருப்பி கடைசி பெஞ்சை நோட்டமிட்ட பாகீரதியை இரு சிரிக்கும் கண்கள் சந்தித்தது!! பார்த்தும் பார்க்காதது போல்  சட்டென்று திரும்பிக் கொண்டாள்!!

புகழ் பெற்ற அவர்கள் கல்லூரியில் பல விதிமுறைகள் உண்டென்றாலும் மாணவ, மாணவியர் பேசிக் கொள்ளக் கூடாது என்பதே முழுமுதற் முக்கிய விதிமுறை! மீறி பேசினால் அபராதம். அதையும் தாண்டி யாராவது இருவர் காதலிப்பதாகவோ, அல்லது நட்பாக கூட நடப்பது போல சந்தேகம் வந்தாலே அவர்கள் கல்லூரியிலுருந்து விலக்கப்படுவர்.

மனித மனம் எப்போதும் மறைந்திருப்பதை அறிய முற்படவே ஆசைப்படும். மூடி மூடி வைப்பதை திறந்து பார்க்க விழையும்.  விலகிப் போவதை அருகில் சென்று பார்க்க நினைக்கும் . அப்படியே ஆண் பெண் நட்பும். இயல்பாய் இருக்கும் வரைக்கும் அது சாதரான ஒரு உணர்வே! இயல்பை மீறி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பொழுது, அது கரையை உடைக்கவே முயற்சிக்கும்!!

அதுவே அங்கே நடந்துக் கொண்டிருந்தது. வகுப்பில் ஆளுக்கொரு ஆள் வைத்து அவர்கள் இருவரையும் சேர்த்துத் தொடர்ந்து கேலி செய்து ஒரு அற்ப சந்தோஷத்தை அடைந்து கொண்டிருந்தனர்! அதில் முதலிடம் பாகீரதி, சூர்யப்ரசாத்!!!

மீண்டும் பாகீரதியின் கண்கள் பின்பக்கம் அலைபாய்ந்தது. அழகிய கோலிகுண்டு கண்கள், கூர் நாசி, இறுகிய தாடை, முறுக்கிய பெரிய மீசை, புசுபுசுவென்று அடர்ந்த முடி, மொத்தத்தில் அவள் கனவுகளின் நாயகன் சூர்யா, சூர்யப்ரசாத்..

போன வாரம் கல்லூரி விடுதியில் வைத்து டே ஸ்காலர் ஒருவளின் அலைபேசியில் திருட்டுத்தனமாகப் பார்த்த ‘காதலுக்கு மரியாதை’ படத்தின் தாக்கத்தினாலோ என்னவோ ஒவ்வொரு தடவை அவனைப் பார்க்கும் போதும்

‘விழியில் விழி மோதி இதய கதவின்று திறந்ததே……

இரவு பகலாகி இதயம் கிளியாகி பறந்ததே’

என்ற பிஜியம் பின்புறம் ஒலிக்கும். அது அவனுக்கும் கேட்டாற்போல சட்டென்று திரும்பி இவளைப் பார்த்து விஜய் போலவே புருவங்களை ஏற்றி இறக்கி, நாக்கை கன்னக்கதுப்புக்குள் சுழற்றுவான்!

அவ்வளவு தான் அவ்வளவே தான்! கன்னங்களில் மருதாணி பூசிக் கொள்ள, இதயம் மத்தளம் வாசிக்க படக்கென திரும்பிக் கொள்வாள்.

“ஏ கேர்ள்? இன்னைக்கும் அதானா?” மான் தேனின் காதை கடிப்பாள்.

“அது தான். அதே தான் கேர்ள்” தேனு நமட்டு சிரிப்புடன் பதிலுரைப்பாள்.

“என்னல கோட்டி கணக்கா பேசுதீக ரெண்டு பேரும்?”

“ஒண்ணுமில்லட்டி இந்த பொன்மான் திடீருனாப்ல லாஸ்ட் பெஞ்சுக்கு ஓடி போயிடுதே அதான் ஏன்னு யோசிக்கோம்?”

“அதெல்லாம் ஒன்னுமில்லட்டி. அவன் தான் என்னய பாக்கான். நான் பாக்கல”

“எப்டி எப்டி?! லாஸ்ட் பெஞ்சுல இருக்கறவன் உன்ன பாத்தான். அது உனக்கு பாக்காமலே தெரியுது. முதுகுலயும் உனக்கு கண்ணு இருக்கோட்டி?”

“ஏய்! தேனே!”

“சொல்லு பொன்மானே!”

“ஊர்லேர்ந்து வாரப்போ ஃப்ரியா வந்த எட்டு பத்து பஸ்ஸை விட்டுட்டு எட்டரை பஸ்ல யாரோ ஏறுனாளாம்லா. அது யாருட்டி?”

“நம்ம மானு தான் பொன்மானே”

“ஏட்டி பேச்சை மாத்தாதே. எங்கதை கிளை கதை தான். உன்னுது தான் மெயின் ஸ்டோரி. நான் ஹீரோயின் ஃப்ரெண்ட்டு. நீ தான் ஹீரோயின்னு”

“அடி போடி இவளே!”

சத்தமாக ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியை பட்டென்று அணைத்தது போன்ற அமைதி. நிமிர்ந்து நேரே பார்க்க கையில் சாக்பீசும், கண்களில் கனலுடனும் ப்ரொபசர்.

“பாகீரதி! ஆல் த்ரீ ஆப் யு கெட் அவுட்”

சந்தோஷமாக சென்று வாசலில் நின்றுக் கொண்டு தன் இஷ்ட தெய்வத்தை தடையில்லா தரிசனம் செய்துக்கொண்டிருந்தாள் பாகீரதி!!!!!

Advertisement