Advertisement

எண்ணெயில் படபடத்த தாளிப்பைக் கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாரில் கொட்ட அது கிளப்பிய சத்தம் காதையும் , அதன் நெடி மூக்கையும் நிரப்பியது.  தொண்டையை செருமிக் கொண்டு புகை போக்கியின் சொடுக்கியை  தட்ட அது பெரும் சப்தம் எழுப்பிக் கொண்டு இயங்கத் தொடங்கியது.

‘ஆபீஸ் போனதும் மீட்டிங் இன்வைட் அனுப்பனும்’

‘வரும்போது பருப்பும் எண்ணெய்யும் வாங்கிட்டு வரணும்’

‘டாக்டர் அர்த்தநாரிக்கு போன் பண்ணி அப்பாயின்மன்ட் புக் பண்ணனும். ஷானுக்கு ஒரு வாரமா இருமல் ரொம்ப ஜாஸ்த்தி ஆயிடுச்சு. சொல்ற பேச்சை கேட்குறதே இல்லை’

கை ஒரு பக்கம் சுழன்றுக் கொண்டிருக்க, மூளை வேலைகளைப் பட்டியலிட, மனதின் ஓரத்தில் ஒரு அரிப்பு உழன்றுக் கொண்டே இருந்தது. கவலையின் விதை என் மனதில் விதைக்கப்பட்டிருந்தது. விதைத்தது என் செல்வ மகள் இயலிசை!

சமையலறையிலிருந்து தலையை நீட்டி வரவேற்பறையின் இருக்கையில் அமர்ந்து நகத்தைக் கடித்துத் துப்பியபடி அமர்ந்திருந்த இயலிசையை பார்த்தேன்.

புருவம் சுருங்கி யோசனை விரிந்தது. ஒரு வாரத்திற்கு மேலாகவே மகளின் நடவடிக்கையில் சிற்சில மாற்றங்கள். வழக்கமாய் குடிகொண்டிருக்கும் கலகலப்பு காலி செய்து விட்டு புது குடித்தனம் வந்திருக்கும் மௌனம்! கல்லூரியிலிருந்து திரும்பியதும் லொடலொடக்கும் வாய்க்குப் பெரிய திண்டுக்கல் பூட்டு! உணவில் கவனக்குறைவு! அலைப்பேசியில் கவனமிகுதி! அடித்துப் பிடித்து சண்டை போட்டு வாங்கிய வண்டியை புறக்கணித்து விட்டு பேருந்து பயணம்!

அவளின் மாற்றங்கள் எனக்கு நெருடல்கள்! பேசி விட வேண்டும், இன்று எப்படியாவது பேசி விட வேண்டும்! முடிவெடுத்த நான் சமையல் கட்டை ஒதுக்கி வைத்து விட்டு, ஷானுக்கும், எனக்கும் இரண்டடுக்கு செல்லோவில் உணவை கட்டி எடுத்துக் கொண்டு, இயலிசைக்கு சின்ன டப்பர்வேர் டப்பாவில் முடிந்த அளவு அழுத்தி சாத்தை வைக்கும் போதே மீண்டும் நினைவலைகள் மகளின் பின்னால் சென்றது.

“மீ! நீங்க ஒன்னு பண்ணுங்க. ஒரு பிரெஸ்சிங் மெஷின் வாங்கி அதுல சாத்தை வச்சு பிரஸ் பண்ணுங்க. அப்போ இன்னும் கொஞ்சம் சாதம் வைக்கலாம். சீரியஸ்லி மீ! யு ஆர் ஹாரிபிள்! அப்படியே தோண்ட தோண்ட சாதம் வந்துட்டே இருக்குது. இப்படியே சாப்பிட்டேனா என்னோட ஜீரோ சைஸ் ட்ரீம் ஜீரோவாயிடும்’ தினமும் சலித்து கொள்ளும் மகள், ஒரு வாரம் எந்த குறையும் கூறாமல் காலி டிபன் பாக்சுடன் வந்து நிற்கிறாள்.

‘ச்சு! இதெல்லாம் ஒரு விஷயமா? ஃப்ரெண்ட்ஸ் கூட ஷேர் பண்ணியிருப்பாளா இருக்கும்’ ஒரு மனம் நினைக்கும் போதே மறுமனம் இடித்துரைத்தது ‘அவளுக்கு யார் சாப்பாட்டையும் வாங்கி சாப்பிடவும் பிடிக்காது, இவளோடதை கொடுக்கவும் பிடிக்காதே?’

எல்லா குழப்பத்துக்கும் தீர்வு இன்று கிடைத்துவிடும். உறுத்திய என் உள்ளத்துக்கு ஆறுதல் உரைத்துவிட்டு இயலிசையையும், ஷானையும் அனுப்பிவிட்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பினேன்.

நான் பொன்.பாகீரதி!

————————————————————————————————–

“பாகீரதி”

“என்னட்டி?என்ன சொன்ன?”

“புள்ளைக்கு பாகீரதினு பேர் வைக்கலாங்க”

“அது என்னட்டி ஆக்கங் கெட்ட பேரு? பாக்கி, போக்கினுட்டு”

“இல்லைங்க அது கங்கை நதியோட அம்மை…..”

ஏட்டி! பேசாம பொன்னாத்தானு பேரு வைக்கலாம்னு பாக்கேன். பக்கத்து வீட்டு முருகன் பொண்ணு பொறந்தா மகாலட்சுமி பொறந்த கணக்கானு அனத்திட்டு இருக்கான் . இது பொறந்த நேரமாது வியாவாரத்தை பெருசு பண்ணி நாலு காசு பாக்கலாம்ல”

“அப்போ இப்படி வேணா பண்ணலாமா? பொன் பாகீரதினு வச்சிக்கிடலாம்”

“ஏதோ ஒரு பேரு. பேர்ல பொன் வந்தா சரி. விளக்கமாத்துக்கு பட்டு குஞ்சலம் ஒண்ணு தான் குறைச்ச!!”

பொன். பாகீரதியின் தந்தை பொன்மாணிக்கவேல். ஒரு சின்ன ஜவுளி கடையில் கணக்கர் வேலை. நிறைய காசு சம்பாதிக்க வேண்டுமென்ற அவா அவாளை விடாமல் ஓட வைத்தது. கணக்கர் வேலை தவிர ரியல் எஸ்டேட் ஏஜென்ட்க்கு ஆள் பிடித்து கொடுப்பது, நிலம் வாங்கல் விற்றலில் ப்ரோக்கர் வேலை, சின்ன அளவில் வீட்டிலேயே கிரைண்டர் வைத்து மாவு அரைத்து விற்பது என்ற ஏதாவதொரு வேலை பின்னால் ஓடிக்கொண்டே இருந்தார்..

தன் பேரில் மட்டுமே இருக்கும் ‘பொன்’ அடைமொழி தன் மகள் காலத்திலாவது கையில் இருக்கவேண்டுமென்பது அவரது கனவு!!!

“சார்! உங்களுக்கு பொம்பளை புள்ளை பொறந்திருக்கு. இந்தாங்க குழந்தையை வாங்கிக்கோங்க”

குழந்தையை இரண்டு நிமிடம் உறுத்து விழித்தவர் , முகத்தை சுழித்துக் கொண்டு அங்கிருந்து அகன்றார்.

“என்னமா!? உன் வீட்டுக்காரர் பொம்பளை புள்ளையை பார்த்ததும் கிளம்பி போய்ட்டார். நம்பி புள்ளையை வீட்டுக்கு அனுப்பலாமா? வேற யாரும் உன் துணைக்கு வரல?”

“இல்லைங்க டாக்டர். எனக்கு சொந்த பந்தம் பெருசா இல்லை. எங்க அம்மை மேலுக்கு முடியாம கிடக்கு. அது வராது”

“குழந்தையை பார்த்துக்கோ.  வேளா வேளைக்கு குழந்தையை செக்கப் கூட்டிட்டு வரணும். கேட்டியா? வரலேனா நானே உன் வீட்டுக்கு வந்திடுவேன்”

“ஆகட்டும் டாக்டர். நான் பாத்துக்கேன்“

—————————————————————————————————

வரவேற்பறையில்  அமர்ந்திருந்த இயலிசையாய் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்த நான் அவளுக்கு பிடித்த போண்டாவை பொறித்து விட்டு “இயல்! கேரம் விளையாடலாமா?” என்றேன்.

செல்ல நடிகர், லவ்வர் பாய், மொக்கை ஹீரோயின், குக் வித் கோமாளி அஸ்வின், அர்னாப் கோஸ்வாமி, கமலா ஹாரிஸ், பக்கத்து வீட்டு ஷீதல் போன வாரம் வாங்கிய ஐ. போன் 15 ப்ரோ, ஐ. பி. எல், தல தோனி, கல்லூரியில் பேராசிரியரிடம் வாங்கிய திட்டு, பரிட்சையில் அடித்த காப்பி, உற்ற தோழி, பெஸ்டி, ஃஎப்.பி, ஹாஷ்டேக், இன்ஸ்டா, இத்யாதி இத்யாதி என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் ஃபோரம் அந்த கேரம் விளையாட்டு.

எல்லாம் முடிக்கும் போது அந்த போர்டை போல மனமும் காலியாய் இருக்கும்.

போண்டாவை ஒரு கடி கடித்துக் கொண்டே கல்லூரி நிகழ்வுகளை வளவளத்துக் கொண்டிருக்க, பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்தேன். பதுங்கிக் கொண்டிருக்கும் புலி பாயக் காத்திருந்தேன். இயலின் முகத்தில் வந்து போன தயக்கம் என் படபடப்பை அதிகரித்தது.

“மீ! ஒருவாரமா நான் உன் கிட்ட ஒன்னு சொல்லணும் சொல்லனும்னு யோசிச்சிட்டே இருந்தேன்”

‘ஹான். புலி வெளியே வந்துடுச்சு’.

“யோசிச்சா சொல்லிடனும் டியர்”

“போன வாரம் என் காலேஜ் சீனியர் ஒருத்தங்க வந்து என் கிட்ட ப்ரபோஸ் பண்ணிட்டாங்க மா”

காய்களை குறிபார்த்துக் கொண்டிருந்த நான் நிமிர்ந்து அவள் கண்களை பார்த்தேன். அந்த கண்களிலிருந்து எதுவும் கணிக்க முடியவில்லை. என் உள் மனம் எதிர்பார்த்த ஒன்று தான் அவள் வாயிலிருந்து வந்ததோ?!

“ஓ”

“நான் ஒன் வீக் டைம் கேட்டிருந்தேன். நாளைக்கு பதில் சொல்லணும்”

“ஓ”

“அவன் பேரு ஹர்ஷா. ஹர்ஷவர்தன் விஸ்காம் பைனல் இயர். ஒரு கல்டுரல்ஸ்ல மீட் பண்ணினோம். ஜஸ்ட் ஃப்ரெண்ட்லியா பழக ஆரம்பிச்சோம். ஆஸ் எ ஃப்ரெண்ட் அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்கு மேல நான் யோசிக்கலை. ஒரு வாரம் முன்ன திடீருன்னு ப்ரொபோஸ் பண்ணிட்டார்”

“நீ என்ன நினைக்கிற?”

“எதை பத்தி?”

“ஹர்ஷவர்தன் பத்தி”

இந்த கேள்விக்காகவே காத்திருந்ததை போலவே எரிமலையை வெடித்துக் கொண்டு கிளம்பும் நெருப்பு குழம்பாய் பதில் வெளிவந்தது.

“ஹீ இஸ் சிம்ப்ளி கிரேட் மா. வெரி வெரி ஆம்பிசியஸ். ஆப் டிவலப்மன்ட்ல (App Development) அவனை அடிச்சிக்க ஆளே கிடையாது. எங்க ஸ்டாஃப்ஸ்க்கு கூட அவன் டவுட் கிளியர் பண்ற அளவுக்கு ப்ரைனி. காலேஜ் முடிச்சிட்டு டூ இயர்ஸ் ஆன்சைட்ல வொர்க் பண்ண போறான். அண்ட் தென் ஹி இஸ் கோயிங் டு இன்வெஸ்ட் தட் மனி அண்ட் ஸ்டார்ட் ஹிஸ் ஒன் பிசினஸ். கல்யாணத்துக்கு முன்னாடி சொந்த காரும், வீடும் எர்ன் பண்ணிருவேன்னு சொல்றான். ஐ க்னோ ஹி கேன் டூ தாட்”

“அவங்க அப்பா பெரிய பிசினெஸ்மேன். ஆனா ஹர்ஸ் அவனோட சொந்த கால்ல நிக்கனும்னு நினைக்கிறான். அவனோட அந்த ஆட்டிடுட் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. சப்போஸ் அந்த பிசினஸ் பெய்லியர் ஆனாலும் ஹி கேன் வித்ஸ்டான்ட் எனிவேர்”

“என்னையுமே அவன் என்கரேஜ் பண்ணிட்டே இருப்பான். லைப்ல ஏதாவது ஒரு ஆம்பிஷன் வச்சிக்கோ. அதை எயிம் பண்ணி டிராவல் பண்ணுனும்னு  சொல்லிட்டே இருப்பான். கல்யாணத்துக்கு பின்னாடியும் கேர்ள்ஸ் அவங்க பேஷனை பாலோ பண்ணனும்னு சொல்லுவான்”

“எல்லாரோடையும் ஃப்ரெண்ட்லி பேசுவான். ஓவரா வழிய மாட்டான். பேசும் போது கண்ணை பார்த்து பேசுவான்.  நான் பேசுறதுக்கு ஸ்பேஸ் கொடுப்பான். என் விருப்பத்தை கன்சிடர் பண்ணுவான். அதுக்காக நான் சொன்னதை மட்டுமே மண்டையை ஆட்டிட்டு செய்ய மாட்டான். தப்புன்னு தோனிச்சுனா சொல்லிடுவான்”

“செமயா கிடார் வாசிப்பான். அழகா பாடுவான். எல்லா கல்டுரல்ஸ்லயும் ‘ஹர்ஷ் அன்ப்ளக்ட்’ க்கு அவ்ளோ கிரேசி பேன்ஸ் கூட்டமே இருக்கும் தெரியுமா?”

இது எல்லாம் இந்த ஒரு வாரமாய் மகள் சிந்தித்து கணித்து வைத்த கணக்குகள் என்பது புரிந்தது. கிட்டத்தட்ட பத்து நிமிடம் அவனை பற்றிய அவளின் அலசலில், அவள் கண்களில் தெரிந்த உறுதியை மனம் கண்டுக்கொண்டது. கடைசியில் அவள் கண்ணில் மின்னிவிட்ட மறைந்த நாணத்தையும் பாகீரதியின் கண்கள் தவறாமல் படம்பிடித்தது.

‘ஏன்ட்டி அவனை லவ் பண்ற?’

‘அவன் மீசை அழகா இருக்குலட்டி அதான்ட்டி லவ் பண்றேன்’ மனப்பாறைகளில் பாகீரதியின் நேற்றைய குரல் மோதி எதிரொலித்தது!!

மண்ணோடு வேர்விட்டுத் தழைத்த ஆலமரமாய் மனதில் கவலை வளர்ந்து நின்றது. குரலை இலகுவாய் மாற்றும் பெருமுயற்சியில் பாதி தான் வெற்றி கிட்டியது.

“சின்ன வயசுல எனக்கும் ஒரு காதல் கதை இருந்துச்சு தெரியுமா?”

இயல் முகத்தில் அதிர்ச்சியில்லை ஆனால்  ஒருவித எரிச்சல் வந்தமர்ந்தது. பழம்பெருமை என்ற பெயரில் ஏதோ அறிவுரை கூறப் போகிறேன் என்ற முடிவுக்கு அவள் வந்திருப்பாள்!

மீண்டும் அழுத்திக் கேட்டேன், “சொல்லவா?”

“ம்ம் சொல்லு மீ” சலிப்புடன் கேட்க ஆரம்பித்தாள்.

————————————————————————————————–

ஏய்! மானே! தேனே! பொன்மானே!. மிஸ்சு வந்துருவாங்கட்டி பேசாம இருங்கட்டி இல்லேனா இந்த தடவை கண்டிப்பா போர்ட்ல பேரு எழுதி போட்ருவேன்”

குனிந்து குசுகுசுத்துக் கொண்டிருந்த மூன்று தலைகள் நிமிர்ந்து முன்னால் நின்றுக் கொண்டிருந்தவளை முறைத்தன!

“ஏ கேர்ள் ! இவளுக்கு ஏத்தம் கூடி போச்சுட்டி. கிளாஸ் லீடர்ங்கிற மிதப்பு. இவளை ஏதாச்சும் பண்ணனும்ட்டி. என்ன சொல்லுதே?”

“ஆமா கேர்ள், வரட்டும் அவ சட்டையில இங்க் அடிச்சு விட்டுருவோம்ட்டி”

“அவளே அழுக்குச்  சட்டை தான் போட்டுட்டு வாரா. இங்க் அடிச்சா அசால்ட்டா போயிடுவா. பேசாம அவ ரெகார்ட் நோட்டை எடுத்து ஒளிச்சு வச்சிருவோம்ட்டி”

“ஆமாட்டி அது தான் கரெக்ட்டு. பெறவு மிஸ்கிட்ட அடி வாங்கியே சாவட்டும்”

அம்பை ராணி ஸ்கூலுக்கு வெளியே நின்ற எக்கச்சக்கமான சைக்கிள்களில் மூன்றை எடுத்துக் கொண்டு, கிளாஸ் லீடர் மல்லிகாவின் ரெகார்ட் நோட்டை எப்படி ஆட்டையை போடலாம் என்று கலந்தாலோசித்துக் கொண்டே சைக்கிளில் குரங்கு பெடல் போட்டுபடி சென்றுக்கொண்டிருந்தனர் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் அந்த முப்பெரும் தோழிகள் மானசா என்ற மானே! தேன்மொழி என்ற தேனே! பொன்.பாகீரதி என்ற பொன்மானே!

வீட்டிற்குச் சென்ற பாகீரதி வாசலில் கிடந்த இரண்டு ஜோடி செருப்புகளையும், வீட்டினுளிருந்து சத்தமாக ஒலித்த ‘சின்ன சின்ன ஆசை’ பாட்டும் அவள் அத்தை வந்திருப்பதை கட்டியங்கூறியது.

“ஏட்டி பாகீ! வாட்டி வாட்டி என் ராசாத்தி! ஏங்க பாருங்க! எம்மருமவ எவ்ளோ வளந்துட்டா?“

அவளை நெட்டி முறித்த அத்தையைச் சுற்றிக் கொண்டு அடுக்களைக்குள் நுழைய முற்பட்ட பாகீரதியின் கைகளைப் பிடித்து அவள் அன்னை ராஜேஸ்வரி தடுத்தாள்.

“ஏட்டி! அத்தை வந்திருக்குது. வாங்கத்த, எப்படி இருக்கியனு ஒரு வார்த்தை சொல்லாம அப்டியே போற. எத்தன மட்ட சொல்லிருக்கேன் பெரியவங்களுக்கு மரியாதை கொடுன்னு” மகளைக் கடிந்தவள், தன் நாத்தனாரிடம் திரும்பி

“ஹி..ஹி…..நீங்க வாரது அவளுக்கு தெரியாதுல. அதாம் உறைஞ்சு போய் நிக்குதா. இல்லட்டி?”

இந்த இடத்தில மகளை கடிந்துக்கொள்ளாவிட்டால் அடுத்து நடக்கும் நிகழ்வுகளை அறிந்தவர் அவர் மட்டுமே.

“விடு ராஜி! அவள ஏன் ஏசுத? எம்மருமவ தானே! கேக்கலேனா இப்ப என்ன வந்துச்சாம்?”

“அத்த! நீங்க மட்டுமா வந்தீங்க? ராசு வரல?”

“அவன் புறவாசல்ல நிப்பான்ட்டி. ஆமா அது என்னாது ராசுனு பேர் சொல்லி கூப்பிடுற  ? அவன் உன்னை கட்டிக்கிட போறவன் கேட்டியா? வாய் நிறைய அத்தான்னு கூப்பிடுட்டி”

அத்தையின் கூற்றில் அவள் முகம் சட்டென்று சிவந்தது. வெட்கம் பிடுங்கி திங்க, காற்றில் அறைந்து சாற்றப்படும் கதவு போல அவள் மனம் சத்தமாக அடித்துக் கொண்டது.

ராஜவேல் என்ற ராசு உறவையும் தாணடி அவள் சிறு வயது தோழன். அவளை விட இரு வயது பெரியவன். கோலி, பம்பரம் விளையாடுவது, பட்டம் விடுவது, ஆற்றில் மீன் பிடிப்பது எல்லாம் அவனுடன் தான். ஏன் அவளுக்கு சைக்கிள் ஓட்டவும், நீச்சல் அடிக்கவும் கற்றுக் கொடுத்ததே அவன் தான்.

அவள் அப்பாவால் ராஜவேலுக்கு மட்டும் விதிவிலக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. அவன் வரும் வேளைகளில் எல்லாம் அவளை அழைத்துக் கொண்டு சந்தைக்கு சென்று அவளுக்கு ஏதாவது வாங்கி கொடுப்பான்.

இன்று முதல் முறையாக அவனைப் பற்றிய வேறு ஒரு பரிமாணத்தை அவளுள் விதைத்திருக்கிறார் அவள் அத்தை.

‘அத்த சொல்றது நெசமா? நான் ராசுவை தான் கட்டிக்கிட போறேனா? ஐய்யா ஜாலி! அவனை கட்டிகிட்டா நெதம் சேமியா ஐஸ் சாப்பிடலாம். ஆத்துல முங்கு நீச்சல் அடிக்கலாம். விளக்கு வச்ச பின்னால சைக்கிள் ஓட்டலாம்’

“வெயிட் வெயிட் மா! சீரியஸ்லி ஒரு ஐஸ்க்ரீம்காக உன் அத்தை பையனை கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா? சில்லி” அவள் குரலில் கிண்டலும் கேலியும் வழிந்தோடியது.

“ஏய்! அப்போ எனக்கு பதிமூணு வயசு தான்டி ஆச்சு.

அப்போ எனக்கு ஐஸ்க்ரீம் தான் பெருசாதெரிஞ்சிச்சு”

“OMG! சரி சொல்லு”

கலர் கலர் கனவுகள் கண்ணில் மின்ன அவள் அறையில் அமர்ந்திருந்த பாகீரதியை, வெளியே கேட்ட கட்டைக் குரல் கவர்ந்தது.

‘யாரது பேசுதா? குரல் புதுசால இருக்கு?’ காதை பட்டை தீட்டினாள்.

“யம்மா! ஸ்கூல் பை கிடக்கு. பாகீ வந்துடுச்சா மா?”

“ஆமால. பிள்ளை இப்பதான் வந்துச்சு. உள்ளார இருக்கும் போய் பாரு”

‘அய்யயோ! உள்ள வந்துடுவானோ?’

வேகவேகமாக கண்ணாடி முன் சென்றவள் எச்சில் தொட்டு தலை முடியை கை வைத்து வழித்து விட்டு, ஜடையை எடுத்து முன்னாடி போட்டுக் கொண்டு ரிப்பனை சரிசெய்தவள், அங்கிருந்த பாண்ட்ஸ் பவுடரை எடுத்து பூசிக் கொண்டாள். எல்லாம் சரியாய் இருப்பதை உறுதி செய்துவிட்டு மின்னலென அறையை விட்டு வெளியே வந்தவள், உள்ளே நுழைய போன ராசுவின் மேல் மோதிக் கொண்டாள்.

“ஏட்டி! பாத்து. இப்போ எந்த ஏரோபிளேனை புடிக்க போறவ? எப்படி இருக்கட்டி பாகீ?”

‘ராசு குரலா இது? ஏன் இப்படி மழையில நனைஞ்ச எருமைமாடாட்டம் இருக்கு?’

“ம்ம்”

நிமிர்ந்து அவனை பார்க்காமலே வாசலை நோக்கிச் சென்ற அவளை அன்னையின் குரல் தடுத்தது.

“உனக்கு புடிச்ச முட்டைகோஸ் போண்டா வாங்கி வச்சிருக்கேன்ட்டி. சாப்பிட வா”

“எனக்கு வேண்டாம்மா. மண்டை இடிக்கு”

“அப்போ சுக்காப்பி போட்டு தரட்டுமாட்டி”

“வேண்டாம்மா. நான் தோட்டத்துக்கு போறேன்” சிட்டு குருவியாய் பறந்து செல்லும் அவளை ராசுவின் பார்வை தொடர்ந்தது.

வாழைத் தோட்டத்து வரப்பின் மேல் நடந்துக் கொண்டிருந்தவள் பின்னால் காலடி சத்தம் கேட்கத்  திரும்பி பார்த்தாள். ராஜவேல் வந்துக் கொண்டிந்தான். உருண்டுவந்து தொண்டைக் குழியை அடைத்த பயப்பந்தை எச்சிலை கூட்டி விழுங்கி உள்ளே தள்ளினாள்.

“பாகீ! என்னல? பாத்தும் பாக்காம போற?  உங்கூட பேசணும்னு தானேல வந்தேன்? அம்மை என்னை தான் கட்டிகிடனும்னு சொல்லிச்சே? இவங்கூட எப்டி பேசுறதுன்னு கூச்சபடுதியோ?”

கேட்டுவிட்டுச் சிரித்தபடி அவள் முகத்தை பார்க்க அடுத்த நிமிடம் கை கால்கள் நடுங்க கண்ணில் நீர் வடிய கேவி கேவி அழும் பாகீரதியை பார்த்துத் திகைத்து போனான் மீசை முளைக்கும் அந்த பதினைந்து வயது விடலை!!!

அழும் அவளை விட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். அத்துடன் அவள் முதல் காதல் (??) அனுபவமும் ஓட்டம் எடுத்தது!!

அதன்பின் அத்தை குடும்பத்திற்கும் அவள் குடும்பத்திற்கும் நடந்த வாய்க்கால் தகராற்றில் இரண்டு குடும்பமும் எதேச்சையாய் சந்தித்தாலே கழுத்து சுளுக்கும் அளவுக்கு வெட்டிக் கொண்டு போக,. ராசுவும் மேல் படிப்பிற்கு வெளியூர் சென்றுவிட, முதல் முதலில் தன்னிடம் காதல் வசனம் பேசிய அந்த அரும்பு மீசைக்காரனை அவள் மனம் முற்றிலும் மறந்து போனது.

Advertisement