Advertisement

அத்தியாயம் 9
காரிருள் மறைய தொடங்கியிருந்த நேரம். அந்த இருள் சூழ்ந்த சாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய், சிலர் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தனர்.
“நேத்து நியுஸ் பார்த்தீங்களா டாக்டர் சர்?”
“பார்த்தேன் சர்.”
“அவனுங்க எல்லாம் மனுஷனுங்களா இல்லை மிருகங்களான்னு தெரியலை. பொம்பளைங்கள போய் ட்ரெஸ் இல்லாம, நடுத் தெருவில ஊர்வலமாய்க் கூட்டிட்டு போயிருக்கானுங்க…..ச்செய்! அரக்க ஜென்மங்க. அப்படியே கண்டம் துண்டமா வெட்டிப் போடணும் போல ஆத்திரம் வருது டாக்டர் சர்.”
“உங்களுக்கு மட்டுமா, மனசாட்சியும் மனுஷ தன்மையும் இருக்கிற எல்லோருக்குமே கோபம் வரணும்.”
“வீடியோ பார்த்துட்டு உடம்பே நடுங்கி போயிடுச்சு. அவனுங்க வீட்டில எல்லாம் பொம்பளைங்க இருக்க மாட்டாங்களா? வர வர மனுஷங்களுக்கு மனசாட்சின்னு ஒன்னு இருக்கா இல்லை செத்து போயிடுச்சா?”
“மனசாட்சிக்கூட வேண்டாம் சர், மனுஷ தன்மைன்னு ஒன்னு இருந்தா கூட இப்படிச் செய்ய வராது.”
நடைபயிற்சி மேற்கொண்டபடி, நேற்று செய்தியில் பார்த்த கோரத்தை பற்றிப் பேசிக்கொண்டு வந்தனர் இரண்டு நடுத்தர ஆண்கள்.
அப்பொழுது ஒரு முற்புதரை கடக்கையில் ஏதோ சத்தம் கேட்டது.
“ஏதோ நாய்க்குட்டி சத்தம் கேட்கிற மாதிரி இருக்கு டாக்டர் சர். உங்களுக்கு?”
“எனக்கும்.” சொன்ன மருத்துவர் சுற்றும் முற்றும் பார்த்தார். எதுவும் கண்களுக்குத் தட்டுப்படவில்லை.
பின் ஏதோ தோன்றியவராய் முற்புதர் அருகே வந்தார். இப்பொழுது அந்தச் சத்தம் வெகு அருகில் கேட்பது போலத் தோன்றியது.
“சர்! சத்தம் இந்தப்பக்கம் இருந்து தான் கேட்குது.” தன் நண்பரிடம் சொல்லிவிட்டு தார் சாலையை விட்டு கீழிறங்கி சுற்றும் முற்றும் பார்த்தபடி முற்புதர் பின்புறம் சென்றார்.
சென்றவர் தான் கண்ட காட்சியில் அதிர்ந்து போய் இரண்டடி பின்னால் வந்தார்.
“என்னாச்சு டாக்டர் சர்?” கேட்டபடி மருத்துவர் பின்னோடு சென்ற மற்றவரும் அதே அதிர்ச்சியோடு வேகமாய்ப் பின்னேரினார்.
கீழே தரையில் அலங்கோல உடையில், உடல் முழுவதும் காயங்களுடன், ஊசலாடும் உயிருடன் முனங்கியபடி, கிடந்தாள் ஒரு பெண்!
“இது என்ன டாக்டர் சர், கொடுமை? ஐயோ! கடவுளே!”
மருத்துவர் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றது சில நொடிகள் தான். உடனே தன்னைச் சமாளித்துக்கொண்டு புதருக்கு பின்னே செல்ல முயன்றார். அவர் நண்பரோ அவர் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தினார்.
“சர்! வேண்டாம். போலீசுக்கு கால் பண்ணி சொல்லிடலாம். அவங்க வந்து பார்த்துக்கட்டும். நமக்கு எதுக்கு வம்பு.”
இப்படிச் சொன்ன நண்பரை முறைத்தார் மருத்துவர்.
“எங்கையோ நடந்த சம்பவத்துக்கு அவ்வளவு கோபம் வருதுன்னு இப்போ தானே சர் சொன்னீங்க? அதே மாதிரி ஒரு கொடுமையை இப்போ உங்க கண்ணு முன்னாடி பார்த்ததும் ஏன் சர் பின் வாங்குறீங்க? உங்க புரட்சி எல்லாம் வெறும் பேச்சில தானா?”
“அதில்லை சர்….போலீஸ் கேஸ் எல்லாம் சும்மா இல்லையே…”
“சும்மா இல்ல தான். அதுக்காக அவங்க வர வரைக்கும் காத்துட்டு இருக்கச் சொல்றீங்களா? அதுக்குள்ள உயிருக்கு ஏதாவது ஆச்சுனா என்ன பண்ணுவீங்க?” கோபமாகச் சொன்ன மருத்துவர், நண்பரின் பதிலுக்கு எதிர்பாராமல் புதருக்குப் பின் சென்றவர், அங்கே கீழே அலங்கோலமாய்க் கிடந்த பெண்ணின் முன் மண்டியிட்டார்.
தன் இரு விரல்களைக் கழுத்துக்கு அடியில் வைத்துப் பார்த்தார். நல்லவேளையாக உயிர் இருப்பதற்கு அறிகுறியாக இதயத்துடிப்பை உணர முடிந்தது. ஆனால் நிம்மதி அடையும் அளவுக்கு அது சீராக இல்லை.
“பல்ச கொஞ்சம் வீக்கா இருக்கு. ஒரு நிமிஷம் பார்த்துக்கோங்க. நான் போய்க் காரை எடுத்துட்டு வரேன்.”
சொன்ன மருத்துவர், வேகமாக எழுந்து ஓடினார்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் தெருவின் கடைகோடியில் இருந்த தன் வீட்டுக்கு சென்று பார்க் செய்திருந்த காரை எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தார் மருத்துவர். காரை நிறுத்துவிட்டு, வேகமாகப் புதருக்குப் பின் சென்றவர் கையேடு கொண்டு வந்திருந்த போர்வையை அப்பெண் மீது போர்த்திவிட்டு, அவளைத் தூக்கிக்கொண்டு வந்து காரில் பின்னிருக்கையில் கிடத்தி கதவை சாத்தினார்.
“வந்து வண்டியில ஏறுங்க சர்.” நண்பரிடம் சொல்லிவிட்டு ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவர் நண்பர் தயங்கி நிற்பதை பார்த்துவிட்டுப் பதில் எதுவும் சொல்லாமல் காரை ஸ்டார்ட் செய்துகொண்டு நகர்த்தினார்.
அதிகாலை வேளை போக்குவரத்து இல்லாத சாலையில் காரை மின்னலாய் பாயச் செய்து பதினைந்தே நிமிடத்தில், அந்த மிகப்பெரிய பல்நோக்கு மருத்துவமனை வராண்டாவில் கொண்டு சென்று காரை நிறுத்தியவர், அதே வேகத்தில் பின்னிருக்கை கதவை திறந்து அப்பெண்ணைத் தூக்கிக்கொண்டு உள்ளே ஓடினார்.
“நர்ஸ், எமெர்ஜென்சி ரூம் எங்க?”
வழியில் வந்த செவிலியரிடம் கேட்டுவிட்டு வலப்புறமிருந்த அந்த அறைக்குள் சென்று படுக்கையில் கிடத்திவர் அங்கிருந்த மருத்துவரிடம் விவரத்தை சொன்னார்.
அவர்களோ செவிலியரை அழைத்து அந்தப்பகுதி காவல்துறைக்கு விவரத்தை அழைத்துத் தெரிவிக்கும்படி சொல்லிவிட்டு அப்பெண்ணுக்கு சிகிச்சையை ஆரம்பித்தனர்.
அடுத்த அரை மணிநேரத்தில், அம்மருத்துவமனையைப் பரபரப்புத் தொற்றிக்கொண்டது.
கான்ஸ்டபிள் இருவருடன் அந்த ஏரியா ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வந்து சேர்ந்தார். உள்ளே சிகிச்சை நடந்துகொண்டு இருந்தமையால், அப்பெண்ணைக் கொண்டு வந்து அட்மிட் செய்த மருத்துவரிடம் தங்கள் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர்.
“உங்க பேர்?”
“சந்தோஷ்.”
“என்ன வேலை பார்க்குறீங்க?”
“ஒரு தனியார் மருத்துவமனையில டாக்டரா வேலை பார்க்கிறேன் சர். இது என்னோட ஐடி.”
அவர் நீட்டிய அடையாள அட்டையை வாங்கி ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் அடுத்தக் கேள்வியைக் கேட்டார் இன்ஸ்பெக்டர்.
“உங்களுக்கு எந்த ஏரியா?”
இடத்தைச் சொன்னார் மருத்துவர்.
“அந்தப் பொண்ணை எங்க வச்சு பார்த்தீங்க?”
“டெயிலி வால்கிங் போற ரூட்ல தான் பார்த்தேன் சர்.”
“உங்கக்கூட வேற யாராவது பார்த்தாங்களா?”
“யாரும் இல்லை சர். நான் மட்டும் தான்.” நண்பருக்கு தொல்லை கொடுக்க விரும்பவில்லை இவர்.
“நீங்க பார்த்தப்போ எந்த நிலைமையில இருந்தாங்க விக்டம்?”
“அரைகுறைய சுயநினைவுல இருந்தாங்க. லேசான முனங்கள் சத்தம் கேட்டுச்சு. மூச்சு விட்டுட்டு இருந்தாங்க. ஆனா பல்ஸ் வீக்கா இருந்துச்சு. ட்ரெஸ்செல்லாம் கிழிஞ்சு இருந்துச்சு. உடம்பில அங்க இங்க கீறல்களும் காயமும் ரத்தமுமா இருந்துச்சு. முகமெல்லாம் வீங்கி இருந்துச்சு.”
“உங்ககிட்ட அவங்க எதுவும் சொன்னாங்களா?”
“இல்லை சர். வர்ற வழியிலேயே முழு மயக்கத்துக்குப் போயிட்டாங்க.”
“சந்தேகப்படும்படியா எதையாவது பார்த்தீங்களா, லைக் கத்தி அந்த மாதிரி?”
“எதுவும் இல்லை சர்.”
“அவங்களோட பர்ஸ், ஐடி எதுவும்?”
“இல்லை சர்.”
“தேங்க்ஸ் டாக்டர் சர். மேற்கொண்டு ஏதாவது விவரம் தேவைபட்டா உங்களுக்கு இன்பார்ம் பண்றோம்.”
“நிச்சயமா இன்ஸ்பெக்டர் சர்.”
மருத்துவரிடம் விசாரணை முடித்துவிட்டு அவசரசிகிச்சை அறைக்கு முன் காத்திருந்தனர் அனைவரும்.
ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்தார் மருத்துவர். இன்ஸ்பெக்டரை பார்த்ததும் வேக நடையுடன் அவர் அருகில் வந்தார்.
“வணக்கம் இன்ஸ்பெக்டர்.”
“வணக்கம் டாக்டர். அந்தப் பொண்ணுக்கு இப்போ எப்படி இருக்கு?”
சிறு தயக்கத்திற்குப் பிறகு பதில் சொன்னார் அந்த மருத்துவர்.
“கேங் ரேப் இன்ஸ்பெக்டர் சர். உடம்பில பல ரத்த கீறல்கள் இருக்கு. பார்த்தா கத்தியில குத்தின மாதிரி தெரியுது. கொஞ்சம் சீரியஸ் தான். உடனடியா அவங்களை ஐசியுவுக்குக் கொண்டு போகணும்.”
மருத்துவர் சொல்ல, அதிர்ச்சி அடைந்தனர் எதிரில் இருந்தவர்கள்.
“சுயநினைவு எப்போ வரும் டாக்டர்?”
“இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது இன்ஸ்பெக்டர். குறைஞ்சது ஒரு நாள் போனா தான் எதையும் சொல்ல முடியும்.”
“ஓகே டாக்டர், பேஷண்டை இப்போதைக்கு மூவ் பண்ண முடியுமா? ஜிஎச் கூட்டிட்டு போகணும் ஆஸ் பேர் ப்ரோசீடர்.”
“அது கொஞ்சம் ரிஸ்க் தான் இன்ஸ்பெக்டர். நாளைக்குப் பார்த்துட்டு சொல்றேன்.”
“ஓகே டாக்டர். ஆனா இப்போதைக்கு இந்த நியுஸ் வெளியில யாருக்கும் தெரிய வேண்டாம். முக்கியமா ப்ரெஸ் மீடியாவுக்கு. ப்ளீஸ்!”
“சியூர் சர். நான் அட்மின்ல சொல்லிடறேன்.”
“தேங்க்ஸ் டாக்டர்.” என்ற இன்ஸ்பெக்டர், அப்பெண்ணைக் காப்பாற்றிய மருத்துவர் சந்தோஷுக்கும் சில பல அறிவுரைகளைக் கொடுத்துவிட்டு, மீண்டும் தன் நன்றியை தெரிவித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அப்பொழுது அவரைக் கடந்து சென்ற ஒரு பெண், இன்ஸ்பெக்டரை அடையாளம் கண்டு கொண்டு, அவசரமாய்த் தன் கைப்பையிலிருந்து மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தாள்.
“நான் தான் மாயா பேசுறேன். ஏரியா இன்ஸ்பெக்டர பார்த்தேன்.”
“……”
“என்னோட ப்ரெண்ட் அட்மிட் ஆகி இருக்கிற ஹாஸ்பிடல்ல.”
“……..”
“தெரியல. ஆனா ஆள் ரொம்ப டென்ஷனா போறார். ஏதோ பெரிய சம்பவம்னு நினைக்கிறன். நீங்க ஸ்டேஷன் போய் என்னன்னு விசாரிங்க. நான் எடிட்டர்கிட்ட சொல்றேன்.”
பேசிவிட்டு வைத்த, காலை எக்ஸ்ப்ரெஸ் செய்தித்தாளின் பத்திரிகையாளர் மாயா, தன்னைக் கடந்து சென்ற ஆட்டோவை கைகாட்டி நிறுத்தி ஏறிக் கொண்டு பத்திரிகை அலுவகத்துக்கு விரைந்தாள்.
* * * * *
“சூடா ஒரு டி வாங்கிட்டு வர சொல்லுயா?” இருக்கையில் டென்ஷனாய் வந்து அமர்ந்த இன்ஸ்பெக்டர் சொல்ல, எதிரில் நின்றிருந்த கான்ஸ்டபிள்களில் ஒருவர் வேகமாய் வெளியேறினார்.
“ஏற்கனவே எம்எல்ஏ மர்டர் கேஸ், நாலு பேர் தற்கொலை கேஸ், மூணு பேர் கொலை கேஸுன்னு, மண்டை காயுது. இதுல இது என்னையா புதுத் தலைவலி?”
“இப்போ என்ன சர் பண்றது?”
“என்ன பண்றது? அந்தப்பொண்ணு கண்ணு முழிக்கிற வரைக்கும் காத்துட்டு இருக்க வேண்டியது தான்.”
இன்ஸ்பெக்டர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே தொலைபேசி அடிக்க, ரீசிவரை எடுத்துக் காதில் வைத்தார்.
“நான் கமிஷனர் பேசுறேன்.”
அந்தப்பக்கத்திலிருந்து வந்து விழுந்த வார்த்தைகளைக் கேட்டுவிட்டு, படாரென இருக்கையிலிருந்து எழுந்து சல்யூட் வைத்துவிட்டு பேச ஆரம்பித்தார் இன்ஸ்பெக்டர்.
“சொல்லுங்க சர்.”
“எம்எல்ஏ மார்ட கேஸ்ல ஆளை கண்டு பிடிச்சீங்களா இல்லையா?”
“சாரி சர். விசாரணை இன்னு…..”
இன்ஸ்பெக்டர் பேச்சை முடிப்பதற்குள், பட்டாசாய் பொரிந்து தள்ளிவிட்டார் கமிஷனர்.
“எத்தனை நாளுயா இதையே சொல்லிட்டு இருக்கப் போற? உன்னால எனக்கு இங்க மண்டகப்படி விழுது. இன்னும் ரெண்டு நாள்ல ஒழுங்கு மரியாதையா உபயோகமான தகவல் வரணும். இல்லைன்னு வச்சுக்கோ, சஸ்பென்ஷன் ஆர்டரை வாங்கிட்டு ஊரை பார்க்க போயிடு.”
போன் படாரென வைக்கப்பட, ரீசவரை வைத்துவிட்டு, ‘ங்கோயன்று’ வலிக்கும் காதை தேய்த்தபடி இருக்கையில் அமர்ந்தார் இன்ஸ்பெக்டர்.
* * * * *
“யோவ் மாணிக்கம் எப்படி இருக்க?”
டீக்கடை வாசலில் நின்றுகொண்டு இருந்த கான்ஸ்டபிள் மாணிக்கத்தை நெருங்கி கேட்டார் மாயாவின் சீனியர் பத்திரிகையாளர் சிவம்.
“ம்ம். நல்லா இருக்கேன்.”
“ஆனா உன் முகம் அப்படி இல்லையே. என்னையா! ஏதாவது புதுக் கேஸா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லையா. தலைவலி அவ்வளவு தான்.”
“அட! இந்த நடிப்பு தான வேண்டாங்கிறது. கொஞ்ச நேரம் முன்ன ஹாஸ்பிடல்ல உன்னைப் பார்த்தேனே!” போட்டு வாங்கினார் சிவம்.
“ஆக்ஸிடென்ட் கேஸ்.” மழுப்பலாய் பதில் சொன்ன கான்ஸ்டபிள் மாணிக்கம், அவசரமாய்ச் சில்லறையைக் கொடுத்து டீயை வாங்கிக்கொண்டு கடையை விட்டு வெளியே வந்தவர், சாலையைக் கடந்து எதிரிலிருந்த காவல்நிலையத்துக்குள் சென்று மறைந்தார்.
போகும் அவரையே பார்த்துக்கொண்டு இருந்த சிவத்திற்கு, எதுவோ சரியில்லை என்று தோன்றியது.
* * * * *
மருத்துவர் சொன்ன இரண்டு நாட்கள் வேகமாய் ஓடிவிட, அப்பெண்ணின் உடல்நலத்தில் எந்த முன்னேறமும் ஏற்படவில்லை. உடனே இன்ஸ்பெக்டரை தொடர்புகொண்டு விவரத்தை சொன்னார் மருத்துவர்.
“உயிருக்கு எதுவும் ஆபத்து இருக்கா டாக்டர்?”
“இல்ல இன்ஸ்பெக்டர். அந்த ஸ்டேஜை கடந்துட்டாங்க. ஆனா சுயநினைவு திரும்பத் தான் டைம் எடுக்குமோன்னு தோணுது.”
“ஓகே டாக்டர்.” என்றுவிட்டு வைத்த இன்ஸ்பெக்டர், அரசு ஜிஎச் மருத்துவமனைக்குத் தகவல் தெரிவித்து அவர்கள் மூலம் அப்பெண்ணைப் பொது மருத்துவமனைக்கு மாற்றினார்.
ஒரு பக்கம் அவளுக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட, மறுபக்கம் அவள் யாரெனக் கண்டுபிடிப்பதற்கான வேலைகளில் மும்முரமானார் இன்ஸ்பெக்டர்.
“முப்பதுல இருந்து நாப்பது வயசுக்குள்ள ஏதாவது மிஸ்ஸிங் கம்ப்ளைன்ட் வந்து இருக்கான்னு பாருங்கையா.”
சில பல மணிநேரங்கள் கழித்து, பதில் வந்தது.
“இல்லை சர். நம்ம ஜூரிக்கு கீழ அப்படி எந்தப் புகாரும் வரலை.”
“வேற ஸ்டேஷன்ல இருந்து வந்து இருக்கானு பாருங்க.”
சிறிது நேரத்தில் அதற்கும் பதில் வந்தது.
“வந்து இருக்கு சர். xx ஸ்டேஷன்ல இருந்து பேக்ஸ் வந்து இருக்கு, முப்பத்தியாறு வயசுல ஒரு லேடியை காணோம்னு.”
“பேர் என்ன?”
“காயத்ரி.”
கான்ஸ்டபிள் கையிலிருந்த காகிதத்தை வாங்கி அதிலிருந்த புகைப்படத்தைப் பார்த்த இன்ஸ்பெக்டரின் புருவங்கள் சுருங்கியது.
“ஜிஎச்சுக்கு போய், அந்த லேடியோட கைரேகையை வாங்கி டேட்டாபேஸ்ல செக் பண்ண சொல்லுங்க மாணிக்கம்.”
அவசரமாய் வந்து விழுந்தது வார்த்தைகள்.

 

Advertisement