Advertisement

அத்தியாயம் 8
நேரம் நள்ளிரவை தாண்டி அதிகாலை மூன்று மணியை நெருங்கிக் கொண்டு இருக்க, காயத்ரியின் வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைந்தது ராகவின் காவல்துறை வாகனம்.
சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே வந்தவன் காயத்ரியின் வீட்டை கடக்கையில் அவள் வீட்டை ஒரு பார்வை பார்த்தான். வீட்டுக்குள் ஆட்கள் விழித்திருப்பத்தின் அடையாளமாக விளக்குகள் எரிந்துகொண்டு இருந்தது.
“இதுதான் அந்தப் பொண்ணோட வீடு தம்பி.” துறை சொல்ல.
“தெரியும் அண்ணே!” என்றான் ஒப்புதலாய்.
“நிறுத்தட்டுமா தம்பி?”
“வேண்டாம் அண்ணே. நாளைக்குப் பார்த்துப்போம். ஏற்கனவே டென்ஷன்ல இருப்பாங்க. இந்த நடுச் சாமத்தில போனோம்னா அப்புறம் பயந்துடுவாங்க.”
“அதுவும் சரி தான்.”
சொல்லிவிட்டுத் துறை காரை ஓட்டுவதில் கவனமாக இருக்க,
ராகவுக்கு இப்பொழுதே காயத்ரியின் குடும்பத்தைப் பார்த்து விசாரிக்க வேண்டும் என்று ரொம்பவே ஆர்வமாக இருந்தது. ஏனெனில் அவனின் போலீஸ் மூளைக்கு, அவளின் குடும்பத்தார் மீதே சந்தேகம் இருக்கத்தான் செய்தது.
நூறு மீட்டர் இடைவெளியில் ஒரு வீடு என்றிருந்த அந்தப் பகுதி இருட்டில் வெகு ஆபத்தாய்க் காட்சியளித்தது. கூடுதலாக ஆங்காங்கே இருந்த பில்டிங் கட்டுமானங்கள், அப்பகுதியின் ஆபத்தை மேலும் சிக்கலாக்கி இருந்தது.
“அண்ணே! கொஞ்சம் மெதுவா போங்க.” கருவேல செடிகள் வளர்ந்திருந்த பகுதியை நெருங்கவும் ராகவ் சொல்ல, காரின் வேகத்தைச் சற்றே குறைத்தார் துறை.
“பார்த்தாலே ஏரியா மோசமா தெரியுது தம்பி.”
“ம்ம்.” தலை அசைத்தான் ராகவ்.
காயத்ரியின் வீடு இருக்கும் பகுதியில் உள்ள பல தெருக்களைச் சுற்றிப் பார்த்துவிட்டுக் கடைசியாக அந்தக் குறிப்பிட்ட தெருவுக்குள் நுழைந்தது கார்.
சாலையின் ஒரு பக்கம் காலி மனைகள் வரிசையாய் இருக்க, மறுபுறம் முர்செடிகள் ஆள் உயரத்திற்கு வளர்ந்திருக்க, அதன் நடுவே முடிக்கபடாமல் இருந்த ஒரு கட்டிடம், அனாதையாய் நின்றுகொண்டு இருந்தது.
“வண்டியை நிறுத்துங்க அண்ணே.”
ராகவ் சொல்ல, காரை பிரேக் போட்டு நிறுத்தினார் துறை.
காரிலிருந்து இறங்கிய ராகவ், தெருவின் இரண்டு பக்கத்தையும் பார்த்தான். தெருவிளக்கின் வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சம் இல்லை. கருப்பு போர்வையைப் போர்த்தியது போல இருட்டாக இருந்தது தெரு. கண்னுக்கு எட்டிய தூரம் வரை வீடுகள் இல்லை.
“இதுக்கு மேல வீடுங்க இல்லையா அண்ணே?”
“இல்ல தம்பி. இந்தத் தெருவோட இந்தக் காலனி முடியுது. அதுக்கு அந்தப்பக்கம் குளம் தான்.”
துறை சொல்லவும், மேலே நிமிர்ந்து பார்த்தான்.
“என்ன அண்ணே, ஒரு சிசிடிவி கூட இல்லை.”
“ஆளுங்க கம்மியா இருக்கிறதால பில்டர்ஸ் சிசிடிவி பொறுத்தலைன்னு நினைக்கிறன் தம்பி.”
அவரை நோக்கி கோபமாகத் திரும்பினான் ராகவ்.
“கம்மியா ஆள் இருக்கிற பகுதியில தானே கட்டாயம் சிசிடிவி பிக்ஸ் பண்ணனும். பில்டர் யாருன்னு நாளைக்கு எனக்கு விவரம் வரணும்.”
“சரி தம்பி.”
அவர் பதில் சொல்ல, சிறிது தூரம் நடந்து சென்று முடிக்கப்படாமல் இருந்த அந்த ஒற்றைக் கட்டிடத்துக்குள் சென்று பார்த்தான். கொஞ்சம் செங்கல், சிலப்பல சிமின்ட் மூட்டைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை.
வெளியே வந்தவன், மொபைல் டார்ச் உதவியுடன் பக்கத்திலிருந்த செடிகளை மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்துட்டு துரையின் அருகில் வந்தான்.
“இந்த வீட்டு ஓனர் யாருன்னு விசாரிச்சு வைக்கச் சொல்லுங்க.”
“சரி தம்பி.”
மீண்டும் செடிக்கு அருகில் வந்தவன் வெகு நேரம் வரை அங்கேயே நின்றுகொண்டு இருந்தான்.
“என்ன தம்பி?”
“இந்த இடத்தில ஏதோ இருக்குன்னு என் போலீஸ் மூளை சொல்லுது அண்ணே.”
“இருக்காது தம்பி. அந்தப் பொண்ணு வீட்டுக்கும் இந்தத் தெருவுக்கும் ரொம்பத் தூரம். இவ்ளோ தூரம் தனியா அந்தப் பொண்ணு வந்து இருக்கும்னு எனக்குத் தோணலை தம்பி.”
ஆனால் ராகவின் மனம், துறை சொன்னதை ஏற்றுக்கொள்ளத் தயாராய் இல்லை. ‘இந்த இடத்தில ஏதோ உள்ளது.’ திட்டவட்டமாகச் சொன்னது அவன் மனம்.
அந்தநேரம் ராகவின் மொபைல் போன் அடிக்க, தன் நினைவுகளில் மூழ்கி இருந்தவன், அதிலிருந்து விடுபட்டு மொபைலை எடுத்து திரையைப் பார்த்தான். பார்த்துவிட்டு அவசரமாக அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தான்.
“சொல்லு ரமேஷ்.”
“சர், அந்த இரட்டை கொலை கேஸ்ல அடாப்சி ரிசல்ட் சம்பந்தமா உங்களை உடனே ஜி.எச்சுக்கு வர சொல்லி டாக்டர் போன் பண்ணார்.”
“ஓகே ரமேஷ்.”
பேசிவிட்டு வைத்தவன், துறையிடம் காரை எடுக்கச் சொல்ல, இருவரும் அரசு பொது மருத்துவமனைக்குப் பயணப்பட்டனர்.
* * * * *
சூரிய வெளிச்சம் முகத்தில் பட, மெல்ல கண் விழித்தான் ஸ்ரீராம். இரவு முழுவதும் தூங்காததால் கண்கள் இரண்டும் எரிந்தது. மெல்ல புரண்டு படுத்தான். படுக்கை காலியாக இருக்க, அதன்பின்பே நேற்று இரவு நடந்தது எல்லாம் நினைவுக்கு வந்தது. வேகமாக எழுந்து அமர்ந்தான்.
தனது மொபைலை தேடி எடுத்தவன், காவல்நிலையத்துக்கு அழைத்தான்.
“சர், நான் ஸ்ரீராம் பேசுறேன். நேத்து நைட் என்னோட மனைவியைக் காணோம்னு வந்து கம்ப்ளெயின்ட் கொடுத்துட்டு போனேன். ஏதாவது தகவல் தெரிஞ்சுதா சர்?”
அந்தப்பக்கம் ரமேஷ் பதில் சொன்னான். “இன்னும் எந்தத் தகவலும் கிடைக்கல சர். எதுவும் கிடைச்சா நாங்களே உங்களைக் கூப்பிட்டு விடுவோம்.”
“கொஞ்சம் சீக்கிரம் தேடிப் பாருங்க சர். ப்ளீஸ்.” குரல் உடைந்திருந்தது.
“உங்க கேஸ் விஷயமா தான் இன்ஸ்பெக்டர் சர் நேத்து பார்க்க போனார் சர். இன்னும் ஸ்டேஷன் வரல. கவலைப்படாதீங்க, உங்க வைஃபை சீக்கிரம் கண்டு பிடிச்சிடலாம்.” என்றுவிட்டு ரமேஷ் அழைப்பை துண்டிக்க,
விரக்தியுடன் மொபைல் திரையை வெறித்துப் பார்த்தான் ஸ்ரீராம். கண்ணீரில் பளபளத்தது அவன் கண்கள்.
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தானோ தெரியவில்லை, வைஷ்ணவி வந்து அழைக்கவும் தான் நிமிர்ந்தான்.
“என்ன வைஷு கேட்ட?”
“ஸ்டேஷனுக்குப் போன் போட்டு கேட்டியா அண்ணே?”
“ம்ம்.” சோர்வாக வந்தது அவன் குரல்.
“என்ன சொன்னாங்க?”
வைஷு கேட்க, பதில் சொல்லாமல் தலை குனிந்தவனிடமிருந்து லேசான விசும்பல் சத்தம் வந்தது.
பயந்து போன வைஷ்ணவி வேகமாய் அண்ணன் அருகே சென்று அமர்ந்தாள்.
“அழாத அண்ணே! ப்ளீஸ்! அண்ணி சீக்கிரம் கிடைச்சிடுவாங்க. அவங்களுக்கு ஒன்னும் ஆகாது. ப்ளீஸ் அண்ணே அழாத.”
அண்ணனின் கண்ணீர் இவளையும் தாக்க, அழுதபடி ஆறுதல் சொன்னாள் வைஷு.
ஸ்ரீராமின் அழுகை நின்றபாடில்லை. தேம்பி தேம்பி அழுதான்.
சத்தம் கேட்டு எழுந்து வந்த அம்பிகை, மகனின் அழுகையைப் பார்த்துப் பதறிப்போய் அவன் அருகில் சென்றவர் மகனை அணைத்துக் கொண்டார்.
“ஸ்ரீராம்! என்ன டா சின்னப் பிள்ளையாட்டம் அழற. நீயே இப்படி இருந்தா அப்புறம் பிள்ளைங்கள எப்படிச் சமாளிக்க?! காயத்ரி கிடைச்சிடுவா டா. என் சாமி என்னைக் கை விடாது. நீ அழாத டா.” என்றவர் வைஷுவின் பக்கம் திரும்பி அவள் முதுகில் கோபத்துடன் ஒரு அடி அடித்தார்.
“எல்லாம் இவளால வந்தது. வெளியே போறேன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருந்தனா, இவ்வளவும் நடந்து இருக்குமா? இப்படி நாம கஷ்டப்பட வேண்டி இருக்குமா?!” குரல் கரகரக்க சொன்னவர் மீண்டும் மகளை அடிக்கப் போக, அவரைத் தடுத்து நிறுத்தினான் ஸ்ரீராம்.
“விடுங்க அம்மா. ஏற்கனவே குற்ற உணர்ச்சியில நைட்டெல்லாம் அழுதுட்டே இருந்தா. இதுல மறுபடியும் மறுபடியும் இதையே பேசி, மேற்கொண்டு அவ மனசை கஷ்டபடுத்த வேண்டாம்.”
மகன் சொல்ல, வைஷுவை முறைத்துவிட்டு தன் கையை இறக்கினார் அம்பிகை.
அப்பொழுது திடீரென்று “அப்பா! அம்மா எங்க?” என்றபடி கண்களைக் கசக்கிக்கொண்டு அறைக்குள் கண்ணன் வரவும், அனைவரும் தங்கள் கண்களை அவசரமாகத் துடைத்துக் கொண்டனர்.
அம்பிகையோ எழுந்து பேரன் அருகில் வந்து அவனைத் தூக்கிக் கொண்டார்.
“உங்க அத்தைக்கு அடுத்த வாரம் கல்யாணம்ல அதுக்காக உங்க அம்மா ஊருக்கு போயிருக்கா.”
“அப்பா போகலையா பாட்டி?”
“அப்புறம் போவான். நீ மொதல்ல பாத்ரூம் போனியா?”
“இல்லை.” உதடு பிதுக்கினான் கண்ணன்.
“ஸ்கூலுக்கு டைம் ஆச்சு இன்னுமா பாத்ரூம் போகலை. வா…வா…சீக்கிரம் ரெடி ஆவோம்.”
பேரனிடம் சொல்லிவிட்டு மகன் பக்கம் திரும்பியவர், “எழுந்து குளிச்சிட்டு வா ஸ்ரீராம்.” என்றுவிட்டு அறையிலிருந்து வெளியேறினார்.
தாய் நகர்ந்ததும் அண்ணனிடம் மன்னிப்பு கேட்டாள் வைஷ்ணவி.
“ரொம்பச் சாரி அண்ணா. அம்மா சொல்றபடி நான் மட்டும் கால் பண்ணி சொல்லி இருந்தேன்னா, அண்ணி காணாம போயிருக்க மாட்டாங்க.”
குரல் தழுதழுத்த தங்கையின் தலையைப் பரிவுடன் தடவிக் கொடுத்தான் ஸ்ரீராம்.
“இதையே நினைச்சிட்டு இருக்காத வைஷு. முகமெல்லாம் பாரு வாடி போய் இருக்கு. போ…போயி குளிச்சிட்டு சாப்பிடு. ஆபீஸ் போகணும்ல.”
“நீங்க?”
“இல்லை வைஷு. ஆபீஸ்ல சொல்லி லீவு கேட்கணும்.”
“அப்போ நானும் போகலை. அடுத்த வாரம் கேட்டிருந்த லீவை ப்ரீபாண்ட் பண்ணப் போறேன். எப்படியாவது அண்ணியைத் தேடி கண்டு பிடிக்கணும்.” உறுதியான குரலில் வைஷு சொல்ல, தங்கையைக் கவலையுடன் பார்த்தான் ஸ்ரீராம்.
கல்யாண கனவுகளில் மிதந்து கொண்டிருக்க வேண்டியவள். ஆனால் விதி இப்படி விளையாடிக்கொண்டு இருக்கிறது.
* * * * *
இரட்டைக் கொலை சம்பந்தமாக அரசு பொது மருத்துவமனை மருத்துவரை பார்த்துவிட்டு அது சம்பந்தமான மேலும் சில வேலைகளை முடித்துவிட்டு அப்பொழுதுதான் காவல்நிலையம் வந்து சேர்ந்தான் ராகவ்.
வந்ததுமே காவல் கண்காணிப்பு அறையைத் தொடர்பு கொண்டான்.
“கண்ட்ரோல் ரூம்? நான் XX ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ராகவ் பேசுறேன்.”
“சொல்லுங்க சர்.”
“காயத்ரின்ற பெர்சன் மிஸ்ஸிங் கேஸ் சம்பந்தமா டீடைல்ஸ் கொடுத்து இருந்தோம, எனி அப்டேட்ஸ்?”
“இல்லை சர்.”
“மத்த ஸ்டேஷனுக்கு எல்லாம் தகவல் சொல்லியாச்சா?”
“கொடுத்தாச்சு சர்.”
“தேங்க்ஸ்.” என்றுவிட்டு வைத்தவன், க்ரைம் ப்ரேஞ்சுக்கும் அழைத்து விவரத்தை சொல்லிவிட்டு, புறப்பட்டுக் காயத்ரியின் வீட்டுக்கு விசாரணைக்கு வந்தான்.
“நான் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ராகவ். உங்க மருமக காணாம போனது சம்பந்தமா உங்ககிட்ட கொஞ்சம் என்கொயரி பண்ணனும்.”
“உள்ள வாங்க சர்.” ராகவுக்கு வழிவிட்டு அவனைப் பின்தொடர்ந்து சென்ற அம்பிகை, அவனைச் சோபாவில் உட்கார சொல்லிவிட்டு எதிர் இருக்கையில் அமர்ந்தார்.
வீட்டை சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அம்பிகையிடம் தன் கேள்விகளை அடுக்கினான் ராகவ்.
“நேத்து நைட் என்ன நடந்தது?”
“உங்க மருமக எப்படி?”
“அவங்களுக்கும் உங்களுக்கும் உறவு எப்படி?”
“உங்க மகனுக்கும் உங்க மருமகளுக்கும் என்னைக்காவது சண்டை வந்து இருக்கா?”
“உங்க பொண்ணுக்கும் உங்க மருமகளுக்கும் உறவு எப்படி?”
“உங்க மருமகளுக்கும் அக்கம்பக்கத்தில இருக்கிறவங்களுக்கும் ஏதாவது சண்டை சச்சரவு வந்து இருக்கா?”
“வேற யார் கூடையாவது அதாவது வேலைக்காரி, பேப்பர் கடை, பால்காரர், மளிகை கடைக்காரர், இப்படி உங்க மருமகளுக்கோ இல்லை உங்க குடும்பத்தில யாருக்காவதோ பிரச்சனை வந்து இருக்கா?”
“உங்க பேர பிள்ளைங்க படிக்கிற ஸ்கூல்ல டீச்சர்ஸ் கூட ரிலேஷன் எப்படி?”
ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லும்போதும், அம்பிகையின் முகப் பாவனையை மிகவும் கூர்மையாகக் கவனித்துக் கொண்டு இருந்தான் ராகவ்.
“உங்க பையனும் பொண்ணும் எப்போ வருவாங்க?”
“மருமகளைத் தேடி போயிருக்காங்க.”
அம்பிகை பேசிக்கொண்டு இருக்கும்பொழுதே, ஸ்ரீராமும், வைஷ்ணவியும் சோர்வுடன் வீட்டிற்குள் நுழைந்தனர்.
“இவங்க தான் உங்க பையனும் பொண்ணுமா?”
“ஆமாம் சர்.” என்றவர் கேள்வியாகப் பார்த்த மகனிடம் ராகவை அறிமுகம் செய்தார்.
“ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் விசாரணைக்கு வந்து இருக்கார் ஸ்ரீராம்.”
“வணக்கம் சர்.” அவசரமாக ராகவ் பக்கம் திரும்பி கை கூப்பினான் ஸ்ரீராம்.
அவனைக் கண்களால் எடைப் போட்டப்படி, பதிலுக்குத் தலை அசைத்தான் இவன்.
“நீங்க இப்போ ப்ரீயா? உங்கிட்ட ஒரு ஷார்ட் என் என்கொயரி.”
“சியூர் சர்.” என்றவன் வைஷு பக்கம் திரும்பினான்.
“நீ உள்ள போ வைஷு.”
அப்பொழுதுதான் வைஷ்ணவியின் முகத்தைப் பார்த்தான் ராகவ். அவளின் அழுது வீங்கியிருந்த கண்களும் வாடிப் போயிருந்த முகமும், காயத்ரியின் மேல் அவளுக்கு இருக்கும் பாசத்தைச் சொல்லாமல் சொன்னது.
“அவங்க கிட்டையும் என்கொயரி பண்ணனும் சர்.” ஸ்ரீராமிடம் சொன்னவன், வைஷு பக்கம் திரும்பினான்.
“நீங்க போய் ப்ரெஷப் ஆகிட்டு வாங்க. அதுக்குள்ள உங்க அண்ணன் கிட்ட என்கொயரியை முடிச்சிடுறேன்.”
வைஷுவோ அண்ணனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, சரி என்பதாய் தலை ஆட்டிவிட்டு அறைக்குள் சென்றாள். போகும் அவளைப் பின்தொடர்ந்தது ராகவின் கண்கள்.
“சொல்லுங்க சர் என்கிட்டே என்ன கேட்கணும்?”
ஸ்ரீராமின் கேள்வியில் அவன் பக்கம் திரும்பியவன் சற்று முன் அம்பிகையிடம் கேட்ட கேள்விகளைக் கேட்டதோடு கணவனாய் அவனிடம் கூடுதலாய் சில கேள்விகளைக் கேட்டான்.
“உங்க மனைவியைத் தேடி நீங்க போனதா உங்க அம்மா சொன்னாங்களே…”
“ஆமாம் சர். ப்ரெண்ட்ஸ் வீடுங்க வரைக்கும் போயிட்டு வரேன்.”
“உங்களுக்கும் உங்க மனைவிக்கும் ஏதாவது கருத்து வேறுபாடு வந்து இருக்கா?”
“பெருசா சொல்ற மாதிரி எதுவும் இல்லை சர்.”
“அப்போ சின்னச் சின்னச் சண்டைகள் வந்து இருக்கு?!”
“எப்போவாவது வரும் சர். அதுவும் ஒரு நாளைக்கு மேல் நீடிச்சது இல்லை.”
“அப்படிச் சண்டை வந்தப்போ என்னைக்காவது உங்க மனைவி கோவிச்சுகிட்டு யார் வீட்டுக்காவது போயிருக்காங்களா?”
“இல்லை சர்.”
“அவங்க தினப்படி ரொட்டீன்ஸ் என்ன?”
“நானும் பிள்ளைகளும் கிளம்பிப்போன பிறகு மோஸ்ட்லி வீட்டில தான் சர் இருப்பா. எப்போவாவது தேவைபட்டா, மெயின் ரோட்டில இருக்கிற கடைகளுக்குப் போவா. மத்தபடி பெரிய பர்சேஸுக்கு எல்லோரும் ஒன்னா போவோம் இல்லைனா நானும் அவளும் போவோம்.”
“ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு?”
“அவளுக்கு அவ்வளவா ப்ரெண்ட்ஸ் கிடையாது சர். இங்க ஏரியால ஒரு சிலர் கூடப் பேசுவா அவ்வளவு தான்.”
“உங்க மனைவியோட மொபைல் போன் வேணும் இன்வெஸ்டிகேஷனுக்கு.”
ராகவ் கேட்க, எழுந்து தொலைகாட்சி மேசையில் இருந்த கைபேசியை எடுத்துவந்து ராகவிடம் கொடுத்தவன், “காயத்ரிக்குன்னு தனியா போன் எதுவும் கிடையாது சர். வீட்டுக்கு காமனா ஒரு போன் உண்டு. அதைதான் அவளும் அம்மாவும் யூஸ் பண்ணுவாங்க.”
ஸ்ரீராம் கொடுத்த மொபைலை வாங்கிப் பாக்கெட்டில் போட்டவன், ஸ்ரீராமிடம் காயத்ரியின் தோழிகளின் வீட்டு முகவரியையும், அவர்களின் உறவினர்கள் வீட்டு முகவரியையும் கேட்டு வாங்கிக் கொண்டான்.
“உங்க ரூமை கொஞ்சம் பார்க்கலாமா?”
“பிள்ளைங்க ட்ரெஸ் எல்லாம் சிதறி கொஞ்சம் குப்பையா இருக்கும் சர்.”
“பரவாயில்லை சர்.”
ராகவ் சொல்ல, ஸ்ரீராம் எழுந்து முன்னே செல்ல, அவனைப் பின்தொடர்ந்து சென்றான் ராகவ்.
ஸ்ரீராம் சொன்னது போல அல்லாமல் சுத்தமாகவே இருந்தது அறை. வாசலில் நின்றபடி பார்வையைச் சுழல விட்டான் ராகவ். நான்கு பக்க சுவரிலும், காயத்ரியும், ஸ்ரீராமும், அவள் பிள்ளைகளும் புகைப்படங்களாய்ச் சிரித்துக்கொண்டு இருந்தனர்.
“உங்க பசங்களா?”
“ஆமாம் சர். ஒரு பையன் ஒரு பொண்ணு.”
காயத்ரியின் பிள்ளைகளை ஆசையாய் பார்த்தான் ராகவ். அவன் உள்ளம் பூரிப்படைந்தது.
அப்பொழுது ஸ்ரீராமின் மொபைல் அடிக்க, எடுத்துப் பார்த்தவன் அவனின் உயர் அதிகாரி அழைப்பதை பார்த்துவிட்டு, ராகவ் பக்கம் திரும்பி, “ஆபீஸ் கால் சர்.” என்றான் சங்கடமாய்.
“நீங்க பேசுங்க சர். நோ வொரீஸ்.” என்றுவிட்டு அறைக்கு வெளியே வந்த ராகவ், எதிரிலிருந்த குளியலறையிலிருந்து, துண்டால் முகத்தைத் துடைத்தப்படி வெளிய வந்த வைஷ்ணவியுடன் நேருக்கு நேருக்கு மோதினான்.
“சாரி! சாரி!” ராகவின் இதழ்களிலிருந்து அவசரமாய் வந்து விழுந்தது வார்த்தைகள்.
“பரவாயில்லை சர். தப்பு என் மேல தான்.” சங்கடமாய்ப் பதில் சொன்னாள் வைஷ்ணவி.
சிறு தலை அசைப்புடன் அங்கிருந்து நகர்ந்து ஹாலுக்குச் சென்றுவிட்டான்.
அடுத்த இரண்டு நிமிடத்தில் அவன் முன் வந்து அமர்ந்தாள் வைஷ்ணவி.
மற்ற இருவரிடம் கேட்டது போல வைஷுவிடமும் கேள்விகளைக் கேட்டவன் அவளின் முகபாவனையை எடைபோட மறக்கவில்லை.
அடுத்தப் பத்து நிமிடத்தில் தன் விசாரணையை முடித்துக்கொண்டு எழுந்தவன் எதையோ சொல்ல நினைத்துப் பின் விட்டுவிட்டான்.
“நான் கிளம்புறேங்க.” சொல்லிவிட்டு கிளம்பியவன் நேரே சென்று நின்றது நேற்று பார்த்த அந்தத் தெரு.
“நேத்தே இந்த இடத்தைப் பார்த்துட்டோமே தம்பி!”
“இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் வித்தியாசம் இருக்கு அண்ணே. இருட்டுக்குள்ள வெள்ளை தெளிவா தெரியும். பகல்ல கருப்பு நல்லா தெரியும்.”
ராகவின் பேச்சுச் சாமார்த்தியத்தில், புருவத்தை உயர்த்தினார் துறை.
வெகு நேர தேடலுக்குப் பிறகு, ஒரு புதருக்குள் கிடந்த துண்டு காகிதம் ஒன்று ராகவின் கண்களில் பட்டது. அதை எடுத்துப் பார்த்தான். ஏதோ பொருள் வாங்கிய சீட்டு மாதிரி தெரிந்தது. காகிதத்தை முழுவதுமாக விரித்துப் பார்த்தான்.
அது மதுக்கடை பில்!
‘ஆள் நடமாட்டம் இல்லாத இந்த இடத்தில இந்தப் பில் எப்படி?’ தனக்குள் கேள்வி கேட்டவனுக்கு, காயத்ரி காணாமல் போனது இந்த இடமாகத்தான் இருக்கும் என்று மனம் உறுதியாய்ச் சொன்னது.
உடனே வண்டியை எடுத்துக்கொண்டு பக்கத்துத் தெருக்களில் இருந்த வீடுகளில் எல்லாம் விசாரித்துப் பார்த்தான்.
“நேத்து நைட்டோ இன்னைக்குக் காலையோ, இந்தப்பக்கம் வெளி ஆள் யாரையாவது பார்த்தீங்களா?”
“அதோ அந்தக் கடைசித் தெருவில யாரையாவது பார்த்தீங்களா?”
எப்படி மாற்றி மாற்றிக் கேட்டாலும், ‘இல்லை சர், பார்க்கலையே.’ என்பதே பதிலாக வந்தது.
மொபைலை எடுத்து காவல்நிலையத்துக்கு அழைத்தான்.
“அந்தப் பில்டிங் ஓனர் பத்தி விசாரிக்கச் சொன்னேனே? விசாரிச்சீங்களா?”
“விசாரிச்சு கூட்டிட்டு வந்துருக்கோம் சர். ஸ்டேஷன்ல உங்களுக்காகக் காத்திட்டு இருக்கார்.”
“இதோ வரேன்.” என்றவன் அடுத்தப் பத்து நிமிடத்தில் காவல்நிலையம் வந்து சேர்ந்தான்.
கட்டிட உரிமையாளரிடம் தன் விசாரணையை மேற்கொண்டான். அவரோ பணப் பற்றாக்குறையால் கட்டுமானத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாகவும், பல மாதமாகத் தான் அந்தப்பக்கம் போகவில்லை என்றும், கட்டிடத்தில் யாரும் தங்கி இருக்கவில்லை என்றும் கூறினார்.
அவரை அனுப்பிவிட்டு, காயத்ரியின் கைப்பேசியை அலசினான். சந்தேகப்படும்படியான தகவலோ அல்லது உபயோகமான தகவலோ, எதுவும் கிடைக்கவில்லை. பின் புறப்பட்டு மதுக்கடைக்குச் சென்றான் விசாரணைக்கு.
“ஒரு நாளைக்குப் பல பேர் வராங்க சர். இது யார் வாங்கினான்னு எப்படிச் சர் நியாபகம் வச்சுக்கிறது.”
பெட்டிக்கடை போல இருந்த அந்த மதுக்கடையின் ஊழியன் இவ்வாறு சொல்லிவிட, கடைக்கு அருகில் சிசிடிவி எதுவும் இருக்கிறதா என்று சுற்றும்முற்றும் பார்த்தான்.
அவன் நல்ல நேரம் எதிரே ஒரு கடையின் வாசலில் சிசிடிவி பொருத்தப்பட்டு இருந்தது. உடனே அக்கடைக்குச் சென்று, விவரத்தை சொன்னவன், சிசிடிவியில் பதிவான காட்சிகளின் நகலை வாங்கிக்கொண்டு காவல்நிலையம் வந்து சேர்ந்தான்.
பில்லில் அச்சடிக்கப்பட்டிருந்த நேரத்தில், யாரெல்லாம் கடைக்கு வந்து போயிருக்கிறார்கள் என்பதைக் குறிப்பெடுத்துக்கொண்டு, அவர்களின் விவரங்களைச் சேகரிக்கச் சொல்லி சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தான்.
இந்நிலையில் காயத்ரி கிடைத்துவிட்டாள் என்ற தகவல் அவனுக்கு வந்து சேர்ந்தது.

Advertisement