Advertisement

அத்தியாயம் 7
வாயிலில் மங்கலான வெளிச்சத்துடன் டியூப்லைட் ஒன்று எரிந்துகொண்டு இருக்க, எந்தவித சலனமுமின்றி வெகு அமைதியாக இருந்தது காவல் நிலையம்.
தயக்கத்துடன் படிகளில் ஏறி உள்ளே நுழைந்தனர் ஜெகனும், ஸ்ரீராமும்.
கோப்புகள் நிரம்பி வழிந்தபடி வரிசையாய் நான்கைந்து மேசைகள் ஆளின்றிக் காலியாக இருக்க, அவற்றில் ஒன்றில் அமர்ந்தபடி நோட்டில் எதையோ மும்முரமாக எழுதிக்கொண்டு இருந்தான் ரைட்டர் ரமேஷ்.
ரமேஷின் அருகில் சென்ற ஜெகன் அவரை அழைத்தான்.
“சர்!…..சர்!”
நிமிர்ந்து பார்த்தான் அவன்.
“என்னங்க? என்ன வேணும்?”
“ஒரு கம்ப்ளெயின்ட் கொடுக்கணும்.”
“என்ன கம்ப்ளெயின்ட்?”
“இவர் மனைவியைக் காணோம்.”
“மிஸ்ஸிங் கம்ப்ளெயின்ட்டா?”
“ஆமாம் சர்?”
“நீங்க யாரு?”
“இவரோட தங்கைக்கும் எனக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கு.”
ஜெகன் சொல்ல, தான் எழுதிக்கொண்டு இருந்த நோட்டை மூடி ஓரம் வைத்தவர், ஒரு காகிதத்தை எடுத்து ஜெகனிடம் நீட்டி நடந்த விபரத்தை எழுதி தர சொன்னார்.
பத்து நிமிடம் செலவு பண்ணி நடந்ததை ஸ்ரீராம் எழுதி கொடுக்க, இருவரும் அக்காகிதத்தைக் காவலரிடம் கொடுக்கவும், இருவரையும் உட்கார சொல்லிவிட்டு, சில பல கேள்விகளைக் கேட்டார் அவர்.
“நகை எதுவும் போட்டு இருந்தாங்களா?”
“ஆமாம் சர். பத்து பவுன்ல தாலி சங்கிலியும் அஞ்சு பவுன்ல ஒரு செயினும், ரெண்டு பவுன்ல கம்மல், ஒரு பவுன்ல மோதிரம், போட்டு இருந்தா.”
“வேற எதுவும் பழக்கம் இருக்கா?”
“புரியல சர், நீங்க கேட்கிறது?”
“அதான் சர், ஆம்பள ப்ரெண்ட்ஸ், அக்கம்பக்கத்துல..இப்படி…”
அவர் கேட்க வருவது புரிந்து எரிச்சல் அடைந்தான் ஸ்ரீராம். ஒரு பெண் காணாமல் போனால் ஒன்று காதல் அல்லது கள்ளக்காதல் விவகாரமாகத் தான் இருக்க வேண்டுமா?
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை சர். நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் என் வைப் கிடையாது சர்.”
“கேட்க வேண்டியது எங்க கடமை சர். அக்கம்பக்கத்தில யார் கூடையாவது உங்க மனைவிக்குச் சண்டை சச்சரவு?”
“இல்லை சர்.”
மேற்கொண்டு சில கேள்விகளைக் கேட்டவர், காயத்ரியின் அங்க அடையாளங்களைக் கேட்டுக் குறித்துக்கொண்டு, அவளின் புகைப்படத்தை வாங்கி வைத்துக்கொண்டனர்.
“தகவல் எதுவும் கிடைச்சா சொல்லி அனுப்புறோம்.”
“சர், இன்ஸ்பெக்டர் சர் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிடுறோம்.”
“அவர் ரவுண்ட்ஸ் போயிருக்கார். அதான் கம்ப்ளெயின்ட் கொடுத்திட்டீங்களே, கிளம்புங்க சர்.”
காவலர் எரிச்சலுடன் சொல்லிவிட்டு, விட்ட வேலையைத் தொடர, ஸ்ரீராமை கை பிடித்து எழுப்பினான் ஜெகன்.
“கொஞ்சம் சீக்கிரம் கண்டுபிடிச்சு கொடுங்க சர், ப்ளீஸ்! வீட்டில பிள்ளைங்க இருக்கு.”
“புரியுது சர்.”
“வாங்க மாமா!.” நின்று பேசிக்கொண்டு இருந்த ஸ்ரீராமை நகர்த்திக்கொண்டு வெளியே வந்தான் ஜெகன்.
“என்ன இப்படி அசால்ட்டா பேசுறாங்க? இவங்க இப்படிப் பேசுறதை பார்த்தா எனக்கு நம்பிக்கையே வர மாட்டேங்குது ஜெகன்.” கலங்கிய குரலில் நொந்து கொண்டான் ஸ்ரீராம்.
பின் இருவரும் வீடு வந்து சேர, நடந்ததைத் தாயிடமும் தங்கையிடமும் சொன்னான் ஸ்ரீராம்.
“நமக்கு ஏன் டா இப்படி ஒரு சோதனை? நாம யாருக்கு எந்தக் கெடுதல் செஞ்சோம்? நாளைக்குக் கண்ணன் எழுந்து அம்மா எங்கன்னு கேட்டா, என்ன பதிலை சொல்லப் போறேன். அடுத்த வாரம் இதோ இவளுக்குக் கல்யாணம். அதுக்கூட இப்போ நடக்குமான்னு கவலையா இருக்கு டா. என் மருமக எந்த ஆபத்தும் இல்லாம சீக்கிரம் கிடைச்சிடனும், ஆண்டவா!”
அம்பிகை கண்ணீருடன் புலம்ப, தாயின் பேச்சில் வைஷுவுக்கு அழுகையாக வந்தது.
“அழாதீங்க அத்தை. அக்கா சீக்கிரம் கிடைச்சிடுவாங்க. வைஷுவை பத்தி நீங்க கவலைப்படாதீங்க. இந்த ஜென்மத்தில அவ தான் என்னோட மனைவி. எங்க கல்யாணம் நல்ல படியா நடக்கும். நீங்க பார்க்கத்தான் போறீங்க.”
ஜெகன் ஆறுதல் சொல்ல, அவனை நன்றியுடன் பார்த்தார் அம்பிகை. அதன்பன் சில பல நிமிடங்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு வீட்டிற்குக் கிளம்பி சென்றான் ஜெகன்.
“என்ன டா இவ்ளோ லேட்? போன் போட்டு எவ்ளோ நேரமாகுது.” வீட்டிற்குள் நுழைந்த ஜெகனிடம் கோபத்துடன் கேட்டார் உமா.
“வழியில ரோடை ப்ளாக் பண்ணிட்டாங்க அம்மா. ஏதோ அக்சிடென்ட்.” பொய் உரைத்தான் ஜெகன்.
“இதுக்குதான் காலாகாலத்தில வீடு வந்து சேருன்னு சொல்றது. எங்க என் பேச்சை கேட்கிற.”
எரிச்சலுடன் சொல்லிவிட்டு உமா உறங்க சென்றுவிட, தன் அறைக்கு வந்த ஜெகனுக்கு மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள்.
‘அடுத்த வாரம் கல்யாணம், அக்கா அதுக்குள்ள கிடைச்சிடுவாங்களா?’
‘அம்மாகிட்ட விஷயத்தைச் சொல்லலாமா வேண்டாமா?’
‘விஷயம் தெரிஞ்சா அம்மா எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க?’
‘ஒருவேளை அக்கா ஒரு வாரத்தில கிடக்காம போயிட்டா…..?’
ஜெகனின் மனதை இனம்புரியாத பயம் சூழ்ந்தது.
* * * * *
“ரவுண்ட்ஸ் வந்ததில இருந்து நானும் பார்த்துட்டு இருக்கேன், என்னமோ கேட்கனும்னு யோசிக்கிற மாதிரி தெரியுது?! எதுவா இருந்தாலும் மனசில இருக்கிறதை கேட்டுடுங்க, அண்ணே!”
தன் அருகில் அமர்ந்து காரை ஓட்டிக்கொண்டு இருந்த ஓட்டுனர் துறையிடம் கேட்டான் ராகவன்.
“அது, ஒண்ணுமில்லை சர்…”
துறை பேசிக்கொண்டு இருக்கும்போதே, இடைபுகுந்தான் ராகவ்.
“எத்தனை தடவை உங்களுக்குச் சொல்லி இருக்கேன், சார் வேண்டாம் தம்பின்னு கூப்பிடுங்கன்னு.” செல்ல கோபத்துடன் இவன் சொல்ல, சிரித்தார் ஓட்டுனர்.
“சரிங்க தம்பி.”
“இப்போ கேளுங்க. என்ன கேட்கணும் என்கிட்ட.”
“பார்க்க நல்லா வாட்டசாட்டமா இருக்கீங்க, இன்ஸ்பெக்டர் உத்தியோகம், சொந்த வீடு, பாசமான அப்பா அம்மா. இவ்வளவு இருந்தும் ஏன் தம்பி இன்னும் நீங்க கல்யாணம் செய்துக்கல?”
துறை கேட்கவும், அழகான பல்வரிசை தெரிய வாய்விட்டுச் சிரித்தான் ராகவ்.
“நானா அண்ணே கல்யாணம் வேண்டாம்னு சொல்றேன். யாரும் பொண்ணு தர மாட்டேங்குறாங்களே! நான் என்ன பண்ண?” உதட்டை பிதுக்கி பாவமாய் இவன் சொல்ல,
“உங்களுக்குப் பொண்ணு தர மாட்டேன்னு சொல்றானுங்களா? யார் அதுன்னு சொல்லுங்க, நான் போய்ப் பேசுறேன்.”
“ஹா! ஹா! அண்ணே! முப்பத்தியாறு வயசு கிழவனுக்கு, யாரு அண்ணே பொண்ணு தருவா? அதுவும் போலீஸ்காரனுக்கு?”
“கிழவனா? யார் சொன்னது தம்பி? இப்போக்கூட உங்களைப் பார்த்தா இருபது வயசு மாதிரி இருக்கீங்க.”
“ஓவர் ஐஸ் வைக்குறீங்க அண்ணே!” தலை சாய்த்து ராகவ் சொல்ல, பதிலுக்குச் சிரித்தார் துறை.
இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போதே அவர்களின் காவல்நிலையம் நெருங்க, உள்ளே இருந்து ஜெகனின் கார் வெளியேறியதை பார்த்தான் ராகவ்.
“யாரு தம்பி இந்த நேரத்தில வந்துட்டு போறது?”
“தெரியல அண்ணே.” என்றவன் தங்கள் கார் உள்ளே சென்று நின்றதும் இறங்கிக்கொண்டு காவல்நிலையத்துக்குள் நுழைந்தான்.
“யாரு ரமேஷ் வந்துட்டு போறது?”
ராகவின் குரல் கேட்க, எதையோ எழுதிக்கொண்டு இருந்த ரைட்டர் ரமேஷ், எழுந்து நின்று விறைப்பாய் ஒரு சல்யுட்டை வைத்தான்.
“மிஸ்ஸிங் கம்ப்ளெயின்ட் சர்.”
அவனை நெருங்கினான் ராகவ்.
“யாரு?”
“ஒரு லேடி சர்.”
புருவங்கள் சுருங்கியது ராகவுக்கு.
“வயசு என்ன?”
“முப்பத்தியாறு சர்.”
“எந்த ஏரியா?”
இடத்தைச் சொன்னான் ரமேஷ்.”
“பைலை எடுத்துட்டு உள்ள வாங்க.” என்றவன் தன் அறைக்குள் சென்றுவிட, அடுத்த இரண்டு நிமிடத்தில் ராகவ் முன் வந்து நின்ற ரமேஷ், கையில் வைத்திருந்த கோப்பை அவனிடம் நீட்டினான்.
“என்ன ஆச்சு?” கோப்பை கையில் வாங்கியபடி கேட்டான் ராகவ்.
“அவங்க நாத்தனார் வீட்டுக்கு வர லேட் ஆகவும் அவங்களைத் தேடிட்டு போன இடத்தில காணாம போயிருக்காங்க சர்.”
வேகமாய் கோப்பை திறந்து, சற்றுமுன், ஸ்ரீராம் எழுதிக் கொடுத்தவற்றை முழுவதுமாய்ப் படித்தவன், காகிதத்தோடு கிளிப் செய்யப்பட்ட, காயத்ரியின் புகைப்படத்தை நிமிர்ந்து பார்த்தான்.
பார்த்தவன் அதிர்ந்து போனான்.
“என்ன பேர் சொன்னீங்க ரமேஷ்?” அவசரமாக வந்தது வார்த்தைகள்.
“காயத்ரி சர்.”
‘சந்தேகமேயில்லை, என் காயத்ரியே தான்.’ தனக்குள் சொல்லிக் கொண்டவனுக்கு, அவள் காணாமல் போன செய்தி அதிர்ச்சியாக இருந்தது.
இருக்கையில் இருந்து வேகமாக எழுந்து கொண்டான்.
“போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு சொல்லிட்டீங்களா?”
“இன்னும் சொல்லல.”
“இதைக்கூடப் பண்ணாம, இவ்ளோ நேரமா என்ன செய்துட்டு இருந்தீங்க?” கோபத்துடன் சொன்னவன், “உடனே கண்ட்ரோல் ரூமுக்கு போன் போட்டு சொல்லுங்க.” என்ற உத்தரவை பிறப்பித்துவிட்டு, அறைக்கு வெளியே வந்தான்.
“அண்ணே! போய் வண்டிய எடுங்க.”
“இப்போதானே தம்பி, ரவுண்ட்ஸ் முடிச்சிட்டு வந்தோம்.”
“மிஸ்ஸிங் கேஸ் அண்ணே. சீக்கிரம் வாங்க.”
ராகவ் அவசரப்படுத்தவும், களைத்துப் போய் அமரப்போன ஓட்டுனர் துறை தொப்பியை மாட்டிகொண்டு எழுந்து வெளியே போனார்.
அடுத்த இரண்டு நிமிடத்தில் காயத்ரியின் வீட்டு முகவரியை குறித்துக்கொண்டு ராகவ் வெளியே வர, காரை ஸ்டார்ட் செய்தார் துறை.
“என்ன தம்பி ஒரு மாதிரி இருக்கீங்க? தெரிஞ்சவங்களா?” காரை ஓட்டியபடி துறை கேட்க ‘ஆம்’ எனத் தலையசைத்த ராகவின் கண்கள் சாலையைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டு இருந்தது.

Advertisement