Advertisement

அத்தியாயம் 6
தெரிந்தவர்கள் வீடுகளில் எல்லாம் தேடித் பார்த்துவிட்டு களைத்துப் போய் வீடு வந்து சேர்ந்தான் ஸ்ரீராம்.
“என்ன டா? வைஷு கிடைச்சாளா?”
“இல்ல அம்மா. தெரிஞ்ச இடத்தில எல்லாம் கேட்டுப் பார்த்துட்டேன். அவ எங்கேயும் போகல.”
“கடவுளே! இந்தப் பொண்ணு எங்க தான் போய்த் தொலைஞ்சா? அடுத்த வாரம் கல்யாணம். இந்த நேரத்தில இப்படி ஒரு பிரச்சனை தேவையா?” புலம்பினார் அம்பிகை.
அம்பிகை பேசிக்கொண்டு இருக்க, அப்பொழுதுதான் ஸ்ரீராம் கவனித்தான், மனைவி காயத்ரி வீட்டில் இல்லை என்று.
“காயத்ரி எங்க அம்மா?”
“அக்கம்பக்கத்துல எங்கையாவது வைஷு போயிருக்காளான்னு தேட போயிருக்கா டா.”
அதிர்ந்து போனான் ஸ்ரீராம்.
“எப்போ போனா?”
“இப்போ தான் ஒரு அரை மணி நேரம் இருக்கும்.”
“என்ன அம்மா நீங்க? மணி பன்னிரண்டு ஆகப்போகுது. இப்போ போய் அவளைத் தனியா அனுப்பி இருக்கீங்களே?”
“நானா டா போகச் சொன்னேன். அவளா தான் கிளம்பிப் போனா.”
“மொபைலையாவது எடுத்துட்டு போனாளா?”
“இல்லையே.”
தலையில் அடித்துக்கொண்டான் ஸ்ரீராம்.
“நான் போய் அவளைக் கூட்டிட்டு வரேன். நீங்களும் எங்கேயும் போயிடாதீங்க. வீட்டுலையே இருங்க.” அழுத்தமாய்ச் சொன்னவன், எரிச்சலுடன் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
அவர்கள் தெருவுக்கு அருகருகே இருக்கும் தெருக்களில் எல்லாம், ஒவ்வொரு தெருவாய்ப் பார்த்துக்கொண்டு வந்தான் ஸ்ரீராம். காயத்ரியை எங்கேயும் பார்க்க முடியவில்லை. தெரு விளக்குகளைத் தவிர வேறு வெளிச்சம் இல்லாத காரணத்தால், ஒருவேளை எங்கேயும் தவற விட்டுவிட்டோமா என்று எண்ணியவன் மீண்டும் மீண்டும் அதே தெருக்களைச் சுற்றி சுற்றி வந்தான்.
முஹூம்! காயத்ரியை காணவில்லை.
“வைஷ்ணவியைத் தேட போய் இவ எங்க போனா? கடவுளே!”
“இந்நேரம் ஒருவேளை வீட்டுக்கு போயிருப்பாளா?” திடீரென ஒரு நப்பாசை தோன்ற, மொபைலை எடுத்து வீட்டுக்கு அழைத்தான்.
“காயத்ரி வீட்டுக்கு வந்துட்டாளா அம்மா?”
“இல்லையே டா ஸ்ரீராம்.”
“சுத்தி எல்லா இடத்துலையும் பார்த்துட்டேன் அம்மா, காயத்ரியை காணல.”
“என்ன டா சொல்ற? பக்கத்தில போயிட்டு வரேன்னு தானே சொன்னா? நல்லா பார்த்தியா?”
“மெயின் ரோடு வரைக்கும் போய்ப் பார்த்துட்டு வந்துட்டேன் அம்மா. அவளைக் காணோம்.”
“கொஞ்சம் பொறுமையா நல்லா தேடித் பாரு டா. பின்னாடி தெருவில அவளுக்குத் தெரிஞ்ச பொண்ணு இருக்கு. அங்க இருக்காளா பார்த்துட்டு வா டா.”
“எல்லாத் தெருவுலையும் ஒன்னுக்குப் பத்து தடவை சுத்திட்டேன். எல்லார் வீடும் பூட்டி இருக்கு.”
“கடவுளே! இப்போ என்ன டா பண்றது?”
தாய் கேள்வி கேட்க, பயம் நெஞ்சை கவ்வி பிடித்தது ஸ்ரீராமுக்கு.
நெற்றியை அழுத்தக் கோதினான்.
“நீ சீக்கிரம் வீட்டுக்கு வா டா ஸ்ரீராம். எனக்கு என்னமோ படபடன்னு வருது.”
அம்பிகை நடுங்கும் குரலில் சொல்ல, பைக்கை வீட்டுக்குச் செலுத்தினான்.
* * * * *
“கொஞ்சம் சீக்கிரம் போங்க ஜெகன்.”
“இதோ வந்துட்டோம் வைஷு. டூ மினிட்ஸ்.”
பதற்றத்தில் நகத்தைக் கடித்தாள் வைஷ்ணவி.
“வீட்டில யாரவாது கேட்டா நடந்த உண்மையைச் சொல்லிடலாம் வைஷு.”
பதில் சொல்லவில்லை அவள்.
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்பொழுதே கார் வைஷ்ணவியின் வீட்டின் முன் போய் நிற்க, எதிரில் பைக்கில் வந்துகொண்டு இருந்தான் ஸ்ரீராம்.
“வைஷு உங்க அண்ணா!”
சீட்பெல்ட்டை கழட்டியபடி ஜெகன் சொல்ல, நிமிர்ந்து பார்த்த வைஷ்ணவிக்குப் பயத்தில் இருதயம் படபடத்தது.
“போச்சு! அண்ணா திட்டப் போறாங்க. செத்தேன் நான்.”
“நான் பேசுறேன் வைஷு. பயப்படாத.”
வீட்டு வாசலில் பைக்கை கொண்டு வந்து நிறுத்திய ஸ்ரீராம் ஜெகனின் காரை அப்பொழுதுதான் பார்த்தான். பைக்கை ஸ்டேன்ட் போட்டுவிட்டு வந்தவனின் முன் தயக்கத்துடன் வந்து நின்றனர் ஜெகனும் வைஷ்ணவியும்.
“சாரி அண்ணா!” திக்கித்திணறி சொன்னாள் வைஷ்ணவி.
“சாரி மாமா. ப்ரெண்ட்ஸ் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தாங்க. நான் தான் வைஷுவை அங்கே கூட்டிட்டு போனேன். சீக்கிரம் முடிஞ்சிடும்னு நினைச்சோம். ஆனா கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.”
தயக்கத்துடன் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான் ஜெகன்.
தங்கையை முறைத்தான் ஸ்ரீராம்.
“ஒரு வார்த்தை போன் பண்ணி சொல்லி இருக்கலாம்ல?” கோபத்துடன் வந்து விழுந்தது வார்த்தைகள்.
ஜெகன் அருகே இருக்கும் காரணத்தால் தங்கையை அடிக்க எழுந்த கைகளைச் சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டான் ஸ்ரீராம்.
இந்த நள்ளிரவு நேரத்தில் பைக்குடன் எங்கிருந்தோ ஸ்ரீராம் வந்ததைப் பார்த்துவிட்டு, வைஷ்ணவியைத் தேடி தான் அவன் சென்றிருப்பான் என்று நினைத்த ஜெகனுக்கு, ஸ்ரீராமின் முகத்தில் நிம்மதி இல்லாமல் ஒருவித பதற்றம் இருப்பதைப் பார்க்க முடிந்தது.
“என்ன ஆச்சு மாமா? உங்க முகமே சரி இல்லை.”
“ஒண்ணுமில்லை ஜெகன். வைஷ்ணவியைத் தேடின அலைச்சல். அவ்ளோதான்.”
ஸ்ரீராமின் பதிலை ஜெகனால் நம்ப முடியவில்லை.
வைஷ்ணவியோ, தன் மேல் உள்ள கோபம் தான், எனத் தவறாகப் புரிந்துகொண்டு அண்ணனிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டாள்.
“சாரி அண்ணா! இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டேன். ப்ளீஸ் அண்ணா. மொபைல்ல வேற சார்ஜ் இல்லாம சுவிட்ச் ஆப் ஆகிடுச்சு. அதான் போன் பண்ணி சொல்ல முடியல. ப்ளீஸ் அண்ணா சாரி.”
“உனக்குக் கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா? படிச்ச பொண்ணு தானே?! வீட்டில ஒரு வார்த்தை சொல்லிட்டு போறதுக்கு என்ன? நீ செஞ்ச முட்டாள்தனத்தால இப்போ காயத்ரியை காணோம்.”
தங்கை பேசவும் மனைவி காணாமல் போன கோபம் மேலெழும்ப, உண்மையைப் போட்டு உடைத்துவிட்டான் ஸ்ரீராம்.
அதிர்ந்து போயினர் ஜெகனும், வைஷ்ணவியும்.
“என்ன அண்ணா சொல்ற?”
“என்ன மாமா சொல்றீங்க?”
இருவரும் ஒரே சேர கேட்க, தலையில் கை வைத்தபடி கேட் வெளியே இருந்த சிமென்ட் திண்ணையில் அமர்ந்துவிட்டான் ஸ்ரீராம்.
“புரியும்படியா சொல்லு அண்ணா? அண்ணி எங்க?”
“என்ன சொல்லுவேன்?! உனக்குப் போன் போட்டுப் போட்டுப் பார்த்தும் எடுக்கலைன்னதும் உன்னைத் தேடி பைக்கை எடுத்துட்டு நான் கிளம்னேன். எங்க தேடியும் உன்னைக் காணல. அதனால அக்கம்பக்கத்தில போய்த் தேடித் பார்க்கிறேன்னு கிளம்பி போன காயத்ரியை இப்போ காணோம்.”
“எப்போ கிளம்பினாங்க?”
“ஒரு மணி நேரத்துக்கு மேல இருக்கும்.”
“ஐயோ!” தலையில் கை வைத்தாள் வைஷ்ணவி.
“எல்லா இடத்துலையும் தேடித் பார்த்தீங்களா மாமா?”
“பார்த்துட்டேன் ஜெகன். முஹூம்! அவளைக் காணோம். எங்க போனாளோ தெரியல?!” குரல் கம்மியது ஸ்ரீராமுக்கு.
ஸ்ரீராமின் வருத்தம் ஜெகனையும் பாதிக்க, மடமடவெனச் செயல்பட்டான் அவன்.
“வைஷு! நீ உள்ள போ. மாமா எழுந்து வந்து கார்ல ஏறுங்க. மறுபடியும் ஒரு தடவை பார்த்துட்டு வருவோம். சீக்கிரம் ஏறுங்க!”
ஜெகன் சொல்ல, தளர்வுடன் எழுந்த ஸ்ரீராம், வைஷ்ணவியை வீட்டில் விட்டுவிட்டு ஜெகனுடன் அவன் காரில் புறப்பட்டுச் சென்றான்.
வீட்டிற்குள் வந்த வைஷ்ணவியை வார்த்தைகளால் விளாசிவிட்டார் அம்பிகை.
“கல்யாணத்துக்கு முன்னாடி அதென்ன வெளிய போறது? அதுவும் ராத்திரி நேரத்தில? நாளபின்ன மாப்பிளை வீட்டுக்கு தெரிஞ்சா உன்னைப் பத்தியும் நம்ம குடும்பத்தைப் பத்தியும் என்ன நினைப்பாங்க? அப்படியே மாப்பிள்ளை கட்டாயப்படுத்தினாலும் எங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்கணுமா இல்லையா? அதென்ன பொய் சொல்லிட்டுத் திருட்டுத்தனமா போறது? ஒரு வாரத்தில கல்யாணம். கல்யாணம் முடிஞ்ச பின்னாடி நீ எங்கவேணா எப்போவேணா போ, யார் உன்னைக் கேட்க போறா? இப்போ பாரு, உன்னால காயத்ரியை காணோம். அடுத்த வாரம் கல்யாணத்தை வச்சுக்கிட்டு இந்தத் தொல்லையெல்லாம் இப்போ தேவையா? எல்லாம் உன்னால தான்.”
ஆத்திரத்தில் அடித்துவிட்டார் மகளை.
“அதான் நான் வந்துட்டேன்ல. இப்போ அண்ணியைத் தேடுவோம். அண்ணி எங்க போறதா உன்கிட்ட சொல்லிட்டு போனாங்க?”
“பக்கத்து தெரு வரைக்கும் போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போனா டி. இப்போ அவளையும் காணோம். எனக்குப் பயமா இருக்கு.”
தாய் சொன்ன விதத்தில் வைஷ்ணவிக்குமே வயிற்றுக்குள் என்னவோ செய்தது. இருந்தும் அப்போதைக்கு அம்பிகைக்குச் சமாதானம் சொன்னாள்.
“அண்ணாவும் அவரும் மறுபடியும் தேடப் போயிருக்காங்க. பயப்படாத அம்மா.”
* * * * *
கிட்டத்தட்ட அரை மணி நேரமாகச் சுற்றி சுற்றிப் பார்த்தும் எங்கேயும் காயத்ரியை கண்டுபிடிக்க முடியவில்லை. சோர்வுடன் ஒரு ஓரமாய்க் காரை நிறுத்தினான் ஜெகன்.
“இப்போ என்ன பண்றது மாமா?”
“எனக்குத் தெரியலையே ஜெகன். பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கு.” சொல்லிவிட்டு தலையைப் பிடித்துக்கொண்டான் ஸ்ரீராம்.
“பேசாம போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணிடலாமா மாமா?”
ஜெகன் போலீஸ் என்று சொன்னதும் அதிர்ச்சியுடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தான் ஸ்ரீராம்.
“போலீஸா?!”
“வேற வழியில்லை மாமா. நாமளும் எவ்வளவு நேரம் தான் தேடுறது? பக்கத்தில தான் போயிருக்காங்கன்னா நிச்சயம் அவங்களைக் கண்டு பிடிச்சு இருக்கலாம். எங்க தேடியும் அவங்களைக் காணலைனா….”
முடிக்காமல் விட்டான் ஜெகன்.
ஜெகனின் சந்தேகம் ஸ்ரீராமை பயத்தில் ஆழ்த்தியது.
‘ஒருவேளை அவளுக்கு ஆக்சிடென்ட் எதுவும்?’
‘இல்லனா யாராவது கடத்தி….’
மேற்கொண்டு யோசிக்க முடியவில்லை ஸ்ரீராமால்.
இதுநாள் வரை செய்தித்தாள்களில் படித்ததோடு கடந்துவிட்ட நிகழ்வு, இன்று தன் வீட்டில்….
நினைக்கவே பயமாக இருந்தது.
“யோசிக்க வேண்டாம் மாமா. நாம வேஸ்ட் பண்ற ஒவ்வொரு நிமிஷமும் கஷ்டம்.”
‘சரி’ எனத் தலையாட்டினான் ஸ்ரீராம். அவனுக்குமே அதற்கு மேல் எதுவும் யோசிக்கத் தோன்றவில்லை.
ஸ்ரீராம் சம்மதம் கொடுக்கவும், உடனே வைஷ்ணவிக்கு அழைத்தான் ஜெகன்.
“சொல்லுங்க ஜெகன், அண்ணி கிடைச்சாங்களா?”
“இல்லை வைஷ்ணவி. எல்லா இடத்துலையும் தேடித் பார்த்துட்டோம். கிடைக்கல. அதனால போலீஸ்ல கம்ப்ளெயின்ட் கொடுக்கலாம்னு அங்கதான் போயிட்டு இருக்கோம்.”
“ஐயோ! போலீசா?”
அதிர்ச்சி அடைந்தாள் வைஷ்ணவி. இவளின் அதிர்ச்சி அம்பிகையையும் தொற்றிக்கொண்டது.
“கடவுளே! ஏன்பா எங்களை இப்படிச் சோதிக்கிற?” நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சோபாவில் அமர்ந்துவிட்டார்.
“நல்லா தேடித் பார்த்தீங்களா ஜெகன்?”
“ம்ம். பார்த்துட்டோம். போலீஸ்ல சொல்றது தான் இப்போதைக்கு நமக்கு இருக்கிற ஒரே வழி வைஷு.”
“புரியுது ஜெகன். ஆனா வெளிய யாருக்காவது தெரிஞ்சா? முக்கியமா உங்க அம்மாவுக்கு?”
“அதுக்காக என்ன செய்ய முடியும் வைஷு? நாமளே எவ்ளோ நேரம் தான் தேடித் பார்க்க முடியும்? இல்லை அவங்களே வரட்டும்னு வெயிட் பண்ண தான் முடியுமா?”
“எனக்குப் பயமா இருக்கு ஜெகன். அண்ணிக்கு எதுவும் ஆகக்கூடாது.”
“ஒன்னும் ஆகாது வைஷு. நீ பயப்படாத. அப்புறம் அத்தைக்கு டென்ஷன்.”
“ம்ம். அத்தை போன் பண்ணாங்களா உங்களுக்கு?”
“பண்ணாங்க. ஆனா என்னால பேச முடியல. வீட்டுக்குப் போய்ப் பேசிக்கிறேன்.”
ஜெகனின் குரலை கேட்டுவிட்டு பின்பக்கத்திலிருந்து அவசரமாகப் பேசினார் அம்பிகை.
“இந்த விஷயத்தை இப்போதைக்குச் சம்பந்திகிட்ட மாப்பிள்ளையைச் சொல்ல வேண்டாம்னு சொல்லு வைஷு.”
“அத்தை என்ன சொல்றாங்க வைஷு?
“அத்தைகிட்ட இப்போதைக்கு இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டாம்னு சொல்றாங்க.”
“ம்ம்….சரி சொல்லல. ஸ்டேஷன் வந்துடுச்சு. வைக்கட்டுமா?”
“ஒரு நிமிஷம் ஜெகன், அண்ணா எப்படி இருக்காங்க?”
“டென்ஷனா தான் இருக்காங்க,”
“கொஞ்சம் பார்த்துக்கோங்க ஜெகன்.”
“நான் பார்த்துக்கிறேன் வைஷு.”
“போலீஸ்ல பேசிட்டு கால் பண்ணுங்க.”
“ம்ம். நீ பயபடாம இரு. அத்தையையும் பயப்படாம இருக்கச் சொல்லு. அக்கா எப்படியும் கிடைச்சிடுவாங்க.”
“ம்ம்.”
அழைப்புத் துண்டிக்கப்பட, மொபைலை அணைத்துப் பாக்கெட்டில் போட்ட ஜெகன், அந்த இருட்டுக்குள் கருஞ்சிவப்பு நிறத்தில் கம்பீரமாக நின்றுகொண்டு இருந்த அந்தக் கட்டிடத்தின் காம்பவுண்ட்டுக்குள் சென்று காரை நிறுத்தினான்.
இந்தப்பக்கம், பூஜை அறைக்குச் சென்று கடவுளிடம் கண்ணீருடன் தன் வேண்டுதலை வைத்துக்கொண்டு இருந்தார் அம்பிகை.
“கடவுளே! என் மருமகளை நல்லபடியா மீட்டுக் கொடுத்துடு. என் பொண்ணு கல்யாணத்தையும் எந்தப் பிரச்சனையும் இல்லாம நடத்திக் கொடுத்துடு. உனக்குப் புண்ணியமா போகும். உன் சன்னதிக்கு வந்து மொட்டை போடுறேன்.”
கையைப் பிசைந்தபடி கவலையுடன் தாயை பார்த்துக்கொண்டு இருந்தாள் வைஷ்ணவி. அவள் மனம் முழுவதும் பயம் வியாபிக்க ஆரம்பித்தது.

Advertisement