Advertisement

அத்தியாயம் 5
“அம்மா! அத்தை எங்கம்மா?”
பள்ளிப்பாடம் எழுதிக்கொண்டு இருந்த கண்ணன் கேட்கவும், அவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்த காயத்ரி நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தாள்.
நேரம் எழு மணியைத் தாண்டி ஓடிக்கொண்டு இருந்தது.
“கொஞ்ச நேரத்தில வந்துடுவா கண்ணா. நீ சீக்கிரம் ஹோம்வொர்க் முடி.” மகன் கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னவளுக்கு மனம் சற்றே கலக்கமுற்றது.
‘இன்னும் என்ன பண்றா?’ மனதுக்குள் எண்ணங்கள் ஓடிக்கொண்டு இருக்க, அதற்குள் கோவிலுக்குச் சென்றிருந்த அம்பிகை வீடு திரும்ப, அவரும் அதே கேள்வியைத் தான் கேட்டார்.
“வைஷு இன்னும் வரலையா?”
“இல்லை அத்தை.”
“உன்கிட்ட எதுவும் சொன்னாளா?”
“ஆபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு, வர லேட் ஆகும்னு சொன்னா அத்தை.”
“அஞ்சு மணிக்கே ஆபீஸ் முடிஞ்சிடும் தானே, இன்னும் என்ன வேலை? கல்யாணம் நடக்கப்போற பொண்ணு காலாகாலத்தில வீடு வந்து சேர வேண்டாமா? கொஞ்சம் கூடப் பொறுப்பே இல்லை. ஆமா ஸ்ரீராம் எங்க? இன்னும் ஆளை காணோம்?”
“ஆபீஸ்ல கூட வேலை பார்க்கிறவருக்கு இன்னைக்கு ரிஷப்ஷனாம், அங்க போயிட்டு வரேன்னு சொல்லி இருக்கார் அத்தை.”
“என்னவோ போ!” சலித்துக் கொண்டார் அம்பிகை.
கையைப் பிசைந்தாள் காயத்ரி.
* * * * *
“டேய! ஜெகன்! டிஜே வந்துட்டார். பாட்டைப் போட சொல்லுவோமா?” ஜெகனின் நண்பன் கேட்கவும், சரியெனத் தலை ஆட்டினான் அவன்.
அடுத்தப் பத்து நிமிடத்தில் மெலிதான இசை அந்த அறை முழுவதும் நிறைந்தது.
“டேய்! ஜெகன் உன்னோட வருங்கால மனைவியோட ஒரு டேன்ஸ் ஆடேன். ப்ளீஸ்!”
கூட்டத்தில் ஒருவன் கேட்க, நண்பர்கள் பட்டாளம் அவனோடு சேர்ந்து கொண்டது.
“ஜெகன்! ஜெகன்!”
அனைவரும் ஆர்பரிக்க, இந்தச் சத்தம் பெண்கள் பக்கமும் தாவியது.
“போங்க வைஷு! டேன்ஸ் பண்ணுங்க. போங்க! இப்போ ஆடாட்டி அப்புறம் சேன்ஸ் கிடைக்காது.”
“அச்சோ! டேன்ஸ் எல்லாம் ஆடி பழக்கமில்லைங்க.”
“இங்க யாருக்கு தான் டேன்ஸ் தெரியும்? சும்மா உங்களுக்குத் தெரிஞ்சதை ஆடுங்க. போங்க வைஷு.”
பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வைஷுவை வற்புறுத்த, ஒரு கட்டத்தில் அவளின் கைபிடித்துக் கூட்டத்தின் நடுவே கொண்டு வந்து விட, அதேநேரம் ஜெகனை பிடித்துத் தள்ளிவிட்டனர் அவனின் நண்பர்கள்.
எல்லோரும் கைதட்டி கரகோஷம் எழுப்ப, வேறு வழி இல்லாமல், வைஷுவின் முன் தன் கையை நீட்டி நடனமாட அழைப்பு விடுத்தான் ஜெகன்.
கூட்டம் ‘ஹே!’வெனக் கூச்சலிட்டது.
வெட்கத்துடன் ஜெகனின் கையைப் பற்றினாள் வைஷு.
மின்சார நிலவு படத்திலிருந்து ‘வெண்ணிலவே! வெண்ணிலவே!’ பாடல் ஒலிக்கப்பட,
வைஷுவின் இடையில் கைகோர்த்து அவளைத் தன்னோட அணைத்தவாறே, தன் அசைவுகளுக்கு ஏற்ப நடனமாட வைத்தான் ஜெகன்.
அவர்கள் இருவரின் ஜோடி பொருத்தம் நடனத்தைக் கூடுதல் அழகாக்க, நண்பர்கள் பட்டாளம் கைதட்டி ஆர்பரித்தது.
நேரம் செல்ல செல்ல, பின்புறம் ஒலிக்கப்பட்ட பாடல்களில் காதல் ரசம் அதிகரிக்க, ஜெகன், வைஷுவின் நெருக்கம் அதிகமானது.
ஒரு கட்டத்தில் உற்சாகம் அடைந்த கூட்டம், “கிஸ்! கிஸ்!” எனக் கத்த ஆரம்பித்தது.
வைஷுவின் நெருக்கத்தில் ஏற்கனவே உணர்வுகளின் பிடியில் இருந்த ஜெகன், நண்பர்களின் உற்சாகத்தில் வைஷுவை ஒரு சுழற்று சுழற்றி அவள் இடையில் கைகோர்த்து வளைத்தவன், அவன் இதழ் நோக்கி குனிந்தான்.
* * * * *
அழைப்பு மணி சத்தம் கேட்க, இரவு சமையலுக்குக் காய்கறிகள் நறுக்கிக்கொண்டு இருந்த காயத்ரி, வைஷ்ணவி தான் வந்து இருக்கிறாள் என்ற எதிர்பார்ப்போடு வேகமாக வாசலுக்குச் சென்று கதவை திறந்தாள்.
ஆனால் வாசலில் நின்றிருந்தது ஸ்ரீராம்.
முகம் வாடிப் போனாள் காயத்ரி.
“என்ன ஆச்சு காயத்ரி? ஆசையா ஓடி வந்த, ஆனா உன் முகம் வாடி போச்சு?”
“காலிங் பெல் அடிக்கவும் வைஷுவோன்னு நினைச்சேன்.”
“வைஷு இன்னும் வரலையா?”
“முஹூம்! இன்னும் வரல.”
“போன் போட்டு பார்த்தியா?”
“போட்டேன். பெல் அடிச்சிட்டே இருந்தது. ஆனா எடுக்கலை.”
ஜெகனின் காரிலேயே கைப்பையை வைஷ்ணவி வைத்துவிட்டுச் சென்றிருக்க, காயத்ரியின் அழைப்பு அவளுக்குத் தெரியாமல் போனது.
செருப்பைக் கழட்டிவிட்டு ஹாலுக்கு வந்து சோபாவில் அமர்ந்தபடி கைகாடிரத்தைப் பார்த்தான் ஸ்ரீராம். நேரம் ஒன்பது மணி என்று காட்டியது.
“வந்துடுவா விடு!”
“மணி ஒன்பது ஆகுதுங்க.”
“பத்து மணிக்கு மேல கூடச் சில சமயம் வீட்டுக்கு வந்து இருக்கா காயு.”
“எனக்கு என்னமோ பயமா இருக்குங்க.”
“சின்னக் குழந்தையா அவ? எதுக்குப் பயப்படுற?”
ஸ்ரீராம் பேசிக்கொண்டு இருக்கும்போதே, பிள்ளைகள் பசிக்கிறது என்று வந்து சொல்ல, அப்போதைக்குச் சமையலில் தன் கவனத்தைத் திருப்பினாள் காயத்ரி. ஆனால் மனம் விடாமல் அடித்துக்கொண்டது.
* * * * *
நடனத்தின் முடிவில் ஜெகன் தன்னை நோக்கி குனியவும், சட்டென்று சுதாரித்துக்கொண்ட வைஷு, அவனிடமிருந்து லாவகமாகத் தன்னைப் பிரித்தெடுத்துக்கொண்டாள்.
கூட்டம் ஏமாற்றம் அடைந்தது.
அதற்குள் உணவருந்தும் நேரம் ஆரம்பித்துவிட, நண்பர்கள் பட்டாளம் களைந்து சென்றது.
அனைவரும் சென்றதும் வைஷுவை வெளியே கடற்கரைக்கு அழைத்து வந்தான் ஜெகன்.
“இங்க எதுக்கு ஜெகன் கூட்டிட்டு வந்தீங்க?”
“உனக்கு ஒரு பரிசு கொடுக்கணும் வைஷு.” என்றவன் பாக்கெட்டிலிருந்து ஒரு பெட்டியை எடுத்து அவளிடம் நீட்டினான்.
தயக்கத்துடன் அதை வாங்கித் திறந்த வைஷு உள்ளே வைர பென்டன்டுடன் கூடிய சங்கிலி இருக்க, அதிர்ச்சி அடைந்தாள்.
“எதுக்கு ஜெகன் இவ்ளோ காஸ்ட்லியான கிப்ட்?”
“என்னோட வைஃப் வைஷு நீ! உனக்கு வங்கிக் கொடுக்காம வேற யாருக்கு வாங்கிக் கொடுக்கப் போறேன்.”
“இருந்தாலும், கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கி இருக்கலாமே…”
“இப்போ மட்டும் என்னவாம், கல்யாணத்துக்கு அதிக நாளா இருக்கு? இன்னும் ஒரே வாரம் தான்.”
ஜெகன் அவ்வளவு சொல்லியும் வைஷு தயங்க, பெட்டியிலிருந்து செயினைத் தானே எடுத்த ஜெகன் அவளைத் திரும்பி நிற்க சொன்னான்.
“பரவாயில்லை ஜெகன். நானே போட்டுக்கிறேன்.”
“முஹூம்! நீ போட்டுக்க மாட்ட. பெட்டியோட பீரோவில பூட்டி வச்சுப்ப.”
“அதெல்லாம் இல்லை ஜெகன்….”
“நான் என் கையாள போட்டு விடுறேன் வைஷு.” அழுத்தமாய்ச் சொன்னவன், வைஷ்ணவியைத் திரும்பி நிற்க வைத்து, அவளின் முதுகு பக்கம் நின்றபடி சங்கிலியை அவளின் முன்பக்கம் கொண்டு வந்து கொக்கிய மாட்ட முயன்றான்.
அந்த இருளில் போதிய வெளிச்சம் இல்லாததால், சற்றே சிரமமாக இருந்தது ஜெகனுக்கு.
சங்கிலியின் கொக்கியை மாட்ட எடுத்துக்கொண்ட நேரத்தில் வைஷுவின் மேலிருந்து வந்த வாசம் அவன் நாசிகளுக்குள் சென்று அவன் உணர்வுகளை மீண்டும் தூண்ட ஆரம்பித்தது.
வெகு நேர போராட்டத்திற்குப் பிறகு ஒரு வழியாய் மாட்டி விட்டவன், வைஷு நகர முற்படவும், அவளை இழுத்து தன் நெஞ்சோடு சாய்த்துக்கொண்டு பின்புறமிருந்து அனைத்துக்கொண்டான்.
திடிகிட்டாள் வைஷ்ணவி.
“ஜெகன் ப்ளீஸ்!” மறுப்புடன் விலக முற்பட்டவளை விடவில்லை ஜெகன்.
“ப்ளீஸ் வைஷு. ஒரு டூ மினிட்ஸ். அசையாம நில்லேன்.”
“ஜெகன்….” அவள் குரல் உள்ளே போயிருந்தது.
ஜெகனின் பிடி இறுகவும், உள்ளுக்குள் எழுந்த மயக்கத்தில் அசையாமல் நின்றாள் வைஷ்ணவி.
சில நிமிடங்கள் இருவரும் அப்படியே நின்றிருக்க, வைஷ்ணவியின் காதோரம் தன் உதடுகளைப் பதித்தான் ஜெகன்.
கூச்சத்தில் கண்களை மூடிக்கொண்டாள் வைஷ்ணவி.
வைஷ்ணவியின் ஒத்துழைப்பு ஜெகனுக்கு வசதியாகப் போக, அவனின் இதழ்களும் விரல்களும் அடுத்தக் கட்டத்திற்குச் சென்றது.
* * * * *
“ஏங்க! மணி பத்தாகப் போகுது. எனக்கு என்னமோ பயமா இருக்குங்க.” தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருந்த கணவன் முன் பரிதவிப்புடன் வந்து நின்றாள் காயத்ரி.
அம்பிகையும் இதையே வந்து சொல்ல, யோசனையில் ஆழ்ந்தான் ஸ்ரீராம்.
“அவளுக்குப் போன் போடு ஸ்ரீராம்.”
அம்பிகை சொல்ல, தன் மொபைலை எடுத்து தங்கைக்கு அழைத்தான் ஸ்ரீராம்.
‘தாங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.” என்ற ரெகார்டட் வாயிஸ் பதிலாகக் கிடைக்க, ஸ்ரீராமின் முகம் சுருங்கியது.
“என்னங்க என்ன ஆச்சு?”
“ஸ்விட்ச் ஆப்’ன்னு வருது.”
பயந்து போனாள் காயத்ரி.
“மறுபடியும் போடுங்க.”
மனைவி சொல்லவும் மீண்டும் முயற்சி செய்து பார்த்தவன் உதடுகளைப் பிதுக்கினான் ‘இல்லை’ என்பதாய்.
படுக்கையறைக்கு ஓடி சென்று தன் மொபைலை எடுத்து வந்த காயத்ரி, வைஷ்ணவியின் உடன் வேலை பார்க்கும் பெண்ணுக்கு அழைத்தாள்.
“ஹலோ கீர்த்தி!”
“ஹலோ யாருங்க?”
“கீர்த்தி! நான் வைஷுவோட அண்ணி பேசுறேன்.”
“சொல்லுங்க அக்கா? என்ன இந்த நேரத்தில கால் பண்றீங்க?”
“வைஷு இன்னும் வீட்டுக்கு வரல.”
“என்னது? இன்னும் வீட்டுக்கு வரலையா? நாலு மணிக்கே பெர்மிஷன் கேட்டு கிளம்பிட்டாளே அக்கா. இன்னுமா வீட்டுக்கு வரலை?”
அதிர்ந்து போனாள் காயத்ரி.
“நாலு மணிக்கே கிளம்பிட்டாளா? ஆபீஸ்ல வேலை இருக்கு லேட் ஆகும்னு என்கிட்டே சொன்னாளே.”
“இல்லையே அக்கா! ஆபீஸ்ல எதுவும் வேலை இல்லையே.” என்றவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது காயத்ரியின் பதில்.
“கிளம்பும்போது உன்கிட்ட எதுவும் சொல்லிட்டுப் போனாளா கீர்த்தி?”
“இல்லையே அக்கா. எதுவும் சொல்லலையே. வீட்டுக்கு தான் போறான்னு நானும் நினைச்சேன்.”
“கடவுளே!” தலையில் கைவைத்தார் அம்பிகை.
“கீர்த்தி உனக்குத் தெரிஞ்ச ப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் கேட்டு பார்த்துட்டு கால் பண்றியா?”
“நிச்சயம் அக்கா. கேட்டுட்டு நானே உங்களுக்குக் கால் பண்றேன்.”
அழைப்பு துண்டிக்கப்பட, விஷயத்தை நடுக்கத்துடன் சொன்னாள் காயத்ரி.
புலம்ப ஆரம்பித்துவிட்டார் அம்பிகை.
“அவ ப்ரெண்ட்ஸுக்கு போட்டு பார்க்கிறேன்.” சொன்ன காயத்ரி, வைஷ்ணவியின் தோழிகள் ஒவ்வொருவருக்கும் போன் போட்டாள்.
நேரம் தான் ஓடியதே தவிர, சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. கீர்த்தியும் கை விரித்துவிட, பயம் தொற்றிக்கொண்டது மூவருக்கும்.
“தெரிஞ்சவங்க வீட்டில போய்ப் பார்த்துட்டு வரேன்.” சொல்லிவிட்டுப் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான் ஸ்ரீராம்.
அவன் சென்ற அரை மணி நேரதில், தானும் கிளம்பினாள் காயத்ரி.
“பிள்ளைகளைப் பார்த்துக்கோங்க அத்தை. அக்கம்பக்கத்தில போய் விசாரிச்சுட்டு வரேன்.”
“பிள்ளைகளை நான் பார்த்துக்கிறேன். நீ சீக்கிரம் போயிட்டு வா.”
அம்பிகை சொல்லவும் வேகமாகக் கிளம்பியவள், கைபேசியை எடுக்க மறந்து கிளம்பி சென்றாள்.
* * * * *
“ட்ரிங்! ட்ரிங்!
அந்த இருளின் அமைதியை கிழித்துக்கொண்டு சத்தம் எழுப்பியது ஜெகனின் மொபைல் போன்.
அச்சத்தத்தில் மயக்கத்திலிருந்து விடுபட்டு இருவரும் வேகமாக விலகி நின்றனர்.
பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுத்து திரையைப் பார்த்தான் ஜெகன். உமாவின் பெயர் மின்னியது.
“அம்மா கால் பண்றாங்க.” என்றவன் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தான்.
“சொல்லுங்க அம்மா.”
“…….”
“இங்க தான் இருக்கேன் அம்மா. இன்னும் பார்டி முடியல.”
“……”
“இதோ ஒரு பத்து நிமிஷத்தில கிளம்பிடறேன் அம்மா. நீங்க பேசுறது விட்டு விட்டு கேட்குது.”
“…….”
“என்னது வைஷுவா, அவ…..அவ அப்போவே கிளம்பிட்டா.” அன்னை திட்டுவார்கள் என்பதால் பொய் சொன்னான் ஜெகன்.
“…….”
“சரி….சரி….இன்னும் பத்து நிமிஷத்தில் கிளம்புறேன்.”
அந்தப்பக்கம் அழைப்பு துண்டிக்கப்பட, மொபைலை அணைத்தவன் அப்பொழுது தான் நேரத்தைப் பார்த்தான்.
நேரம் பதினொன்றை நெருங்கிக்கொண்டு இருந்தது.
வைஷ்ணவியும் பார்த்துவிட்டாள்.
“கடவுளே! டைம் ஆச்சு! போச்சு அம்மா திட்டப் போறாங்க. நான் கிளம்புறேன்.”
“நைட் ஆகிடுச்சு வைஷு. நீ தனியா போக வேணாம். நானே வந்து டிராப் பண்றேன்.”
இருவரும் அந்த மணலில் வேகமாக நடைபோட்டு உணவகத்திற்குச் சென்று நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.
கார் அந்தக் காலியான சாலையில் சீறிப் பாய்ந்து கொண்டு இருக்க, வைஷ்ணவி தனது கைப்பையிலிருந்து மொபைலை எடுத்துப் பார்த்தாள். அது சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.
“சாரி வைஷு! டைமை பார்க்கவே இல்லை நான்.” காரை ஓட்டியபடி சங்கடத்துடன் சொன்னான் ஜெகன்.
அவளோ பதில் சொல்லாமல் முகத்தில் தவிப்பை காட்டிக்கொண்டு இருந்தாள்.
“என்ன ஆச்சு வைஷு?”
“மொபைல்ல சார்ஜ் இல்லை. வீட்டுக்கு போன் போடணும்.”
“சார்ஜிங் கேபிள் அந்தக் கேபின்ல இருக்கானு பாரு.”
ஜெகன் சொல்ல வேகமாய்த் தன் முன் இருந்த மூடியை திறந்தாள். உள்ளே ஒன்றுமில்லை.
“இல்லையே ஜெகன்.”
வைஷ்ணவி சொல்லவும், தன் பக்கமிருந்த கேபினை திறந்து பார்த்தான் ஜெகன். முஹூம்! அதிலும் சார்ஜிங் கேபிள் இல்லை.
“இல்லை போல வைஷு. பரவாயில்லை இந்தா என்னோட போன்ல இருந்து கால் போடு.”
ஜெகன் சொல்ல அவனின் மொபைலை வாங்கினாள். ஆனால் டவர் இல்லை எனக் காட்டியது கைபேசி.
“டவர் இல்லை ஜெகன்.”
“தெரியல வைஷு. ஈவ்னிங்ல இருந்தே டவர் ப்ராப்ளம் இருக்கு. சரி விடு, பதினைந்து நிமிஷத்தில போயிடலாம். கவலைப்படாத.”
வைஷுவோ படபடக்கும் இதயத்தோடு ரோட்டை வெறித்தாள்.
* * * * *
நடையாய் நடந்து கால்கள் ஓய்ந்து போனது காயத்ரிக்கு. தெரிந்தவர்கள் வீடுகளில் எல்லாம் கேட்டுப் பார்த்தாயிற்று. வைஷுவை பற்றி உருப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
எங்கோ ஒரு நாய் குறைக்கும் சத்தம் கேட்கவும் சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு அப்பொழுதுதான் உரைத்தது வீட்டிலிருந்து வெகு தூரம் வந்துவிட்டோம் என்று.
கணவனை அழைக்கலாம் எனக் கைபேசியைத் தேடினாள். அதுவும் இல்லாமல் திண்டாடி போனாள்.
“கடவுளே! மொபைலை எடுத்து வராத தன் தவறை உணர்ந்து தலையில் அடித்துக்கொண்டாள்.
“வைஷு இந்நேரம் வந்து இருப்பாளா?” மனம் யோசனையில் ஆழ்ந்தது.
நேரம் பன்னிரெண்டை நெருங்கிக்கொண்டு இருந்தமையால், அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த வீடுகளில் எல்லாம் விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க, தெரு விளக்குகளிலிருந்து கசிந்த ஒளி, இருட்டை விரட்ட போராடிக்கொண்டு இருந்தது.
காலியான பிளாட்கள் சூழ்ந்த அந்தச் சாலையில் நடையை எட்டி போட்டாள் காயத்ரி.
சிறிது தூரம் வந்து இருப்பாள். பின்பக்கம் ஏதோ சத்தம் கேட்க திரும்ப முயன்றாள்.
அதற்குள், அவள் வாயை பொத்தி புதருக்குள் இழுத்துச் சென்றது ஒரு உருவம்.

Advertisement