Advertisement

அத்தியாயம் 4
திரும்பும் திசையெங்கும் ஆடம்பரம் நிரம்பி வழிந்த அந்தப் பிரபல துணிக் கடைக்கு முன் வந்து காரை நிறுத்தினான் ஸ்ரீராம்.
“நீங்க கார் பார்க் பண்ணிட்டு வாங்க. நாங்க முன்ன போறோம்.” கணவனிடம் சொல்லிவிட்டு, மகளைத் தூக்கிக்கொண்டு காரிலிருந்து காயத்ரி இறங்கிக்கொள்ள, அவளைத் தொடர்ந்து மற்றவர்களும் இறங்கினர்.
அனைவரையும் வாசலில் வைத்தே வரவேற்றான் ஜெகன்.
“வாங்க அத்தை! வாங்க அக்கா! ஹாய் கண்ணா!”
“அம்மா வந்துட்டாங்களா தம்பி?”
“இப்போதான் வந்தாங்க அத்தை. உள்ள வாங்க.”
ஜெகன் முன்னே செல்ல அவனைப் பின்தொடர்ந்து மாடியேரினர் மற்றவர்கள். அவர்கள் நேரே சென்று நின்ற இடம் பட்டு சேலை பகுதி.
சம்பந்தி வீட்டாரை பார்த்தும் உமாவின் முகத்தில் துளியும் புன்னகை இல்லை. ‘ஒரு வழியா வந்தாச்சா?’ என்ற பாவனைத் தான் தெரிந்தது அவரிடம். இருந்தும் காயத்ரியும், அம்பிகையும் வழிய சென்று பேசினார்.
“எப்படி இருக்கீங்க சம்பந்தி?”
“ம்ம். நல்லா இருக்கோம்.”
“நீங்க எப்படி இருக்கீங்க?” பாலாஜி தான் ஆர்வமாய் விசாரித்தார்.
“நல்லா இருக்கோம் சம்பந்தி.”
அதற்குள் ஸ்ரீராம் வந்து சேர, திருமணத்துக்குத் தேவையான ஆடைகளைத் தேர்வு செய்வதில் கவனம் சென்றது.
ஒவ்வொரு ஆடையிலும் ஆடம்பரத்தை எதிர்பார்த்தார் உமா. முஹூர்த்த புடவையாக ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள புடவையை அவர் தேர்வு செய்ய, சற்றே தடுமாறித் தான் போயினர் வைஷுவின் குடும்பத்தார்.
ஏற்கனவே திருமண நிகழ்வுகளைத் தனித்தனி நாளில் வைக்க முடியாமல் போனதற்கே தங்களைத் தாழ்வாகப் பார்க்கும் உமாவின் முன் தங்கள் கவுரவத்தை விட்டுக்கொடுக்க முடியவில்லை அம்பிகையால். பின்னே இதற்கும் சேர்த்து வைத்து அவரின் பேச்சுக்களை வாழ்க்கை முழுவதும் கேட்கப்போவது தன் மகள் தானே என்ற பயம் அவருக்கு.
இறுதியில் உமா தேர்வு செய்த ஆடைகளையே வாங்க வேண்டியதாகப் போயிற்று.
மணமக்களுக்கான ஆடைகளை எடுத்து முடித்ததும், வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு உமா கிளம்பி சென்றுவிட, குடும்பத்தாருக்கு ஆடைகள் எடுக்கச் சென்றனர் மற்றவர்கள்.
அம்பிகையும் வைஷுவும் ஒரு பக்கம் ஆடைகளைப் பார்த்துக்கொண்டு இருக்க, மறுபக்கம் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தான் ஜெகன்.
“என்னங்க! இது ரெண்டுல எது எனக்கு நல்லா இருக்கும்?” பச்சை மற்றும் பிங்க் நிற புடவைகளைக் கைகளில் வைத்தபடி கணவன் ஸ்ரீராமிடம் கேட்டாள் காயத்ரி.
அவனோ வெகு நேர யோசனைக்குப் பிறகு, மேஜை மேலிருந்த மாம்பழ நிற புடவையை எடுத்து, “காயு! இந்தக் கலர் உனக்கு நல்லா இருக்கும்.” என்றான் மனைவியை வெறுப்பேற்றும் புன்னகையுடன்.
“பன்னிரண்டு வருஷம் உங்க கூடக் குடும்பம் நடத்தியும் உங்க கிட்ட போய்க் கேட்டேன் பாருங்க, என்னைச் சொல்லணும்.” சலிப்புடன் சொன்னாள் காயத்ரி.
“பின்ன என்ன காயு! நீ என்ன சின்னக் குழந்தையா? முப்பத்தியாறு வயசு ஆகுது. உனக்குப் பிடிச்ச புடவையை நீ எடுத்துக்க வேண்டியது தானே. என்கிட்டே எதுக்குக் கேட்கிற?”
“அது எனக்குத் தெரியாதா? இருந்தும் எதுக்குக் கேட்கிறாங்களாம், உங்க பொண்டாட்டி உங்க கண்ணனுக்கு அழகா தெரியனும்னு தான்.” வெட்கமும் சலிப்பும் கலந்து காயத்ரி பதில் சொல்ல,
மனைவியின் காதருகே குனிந்த ஸ்ரீராம், “எனக்கு நீ எப்படி இருந்தாலும் அழகா தான் தெரிவு காயு.” என்றான் கிசுகிசுப்பாய்.
கன்னம் சிவந்து போனாள் காயத்ரி. இறுதியில் கணவன் தேர்வு செய்த மாம்பழ நிற பட்டுப்புடவையைத் தான் இவளும் தேர்வு செய்தாள்.
அந்த நேரம் ஜெகன் அழைக்கவும், தன் வெட்கத்தை மறைத்துக்கொண்டு அவன் அருகில் சென்றாள்.
“என்ன தம்பி?”
“இந்த ட்ரெஸ் கண்ணனுக்கு சரியா இருக்குமா அக்கா?”
“பிள்ளைங்க ரெண்டு பேருக்கும் டிரஸ் எடுத்தாச்சு தம்பி.”
“அது நீங்க எடுத்தது. இது நான் எடுக்கிறது.”
“அச்சோ அதெல்லாம் வேண்டாம் தம்பி. ரெண்டு பேருக்கும் வீட்டில நிறைய ட்ரெஸ் இருக்கும்.”
“நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. இது அளவு சரியா இருக்குமா? பிடிவாதமாய் ஜெகன் கேட்க, வேறு வழியின்றி, அவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு ஆடை எடுப்பதற்கும் சம்மதம் சொல்லிவிட்டாள் காயத்ரி.
“அக்கா! இன்னொரு டவுட்?”
“என்ன தம்பி?”
“வைஷுவுக்கு என்ன பிடிக்கும்?”
வெட்கத்துடன் ஜெகன் கேட்ட தோணியில் எழுந்த சிரிப்பை அடக்கிக்கொண்ட காயத்ரி, வேண்டுமன்றே தெரியாதது போலக் கேட்டாள்.
“எதுக்குத் தம்பி கேட்கிறீங்க?”
“அது….அது வந்து வைஷுக்குக் கிஃப்ட் கொடுக்கலாம்னு ஒரு ஐடியா….”
இதற்கு மேல் அவனைச் சோதிக்க விரும்பாத காயத்ரி, வைஷுவுக்குப் பிடித்த பொருட்களின் லிஸ்டை சொல்லிவிட்டுப் பில் செக்ஷனுக்கு வர, அங்கே வைத்து வைஷு அவளை இழுத்துக்கொண்டு சென்றாள்.
“என்ன வைஷு? என்ன ஆச்சு? புடவை கலர் பிடிக்கலையா?”
“ஐயோ! அதெல்லாம் இல்லை அண்ணி.” என்றவள் குரலை தாழ்த்திக்கொண்டு “அவருக்குப் பரிசு வாங்கிக் கொடுக்கலாம்னு ஒரு ஐடியா. அதுக்கு ஏதாவது ஐடியா கொடுங்க.” என்றாள் கிசுகிசுப்பாய்.
‘புருஷனும் பொண்டாட்டியும் ஒரே மாதிரி கேட்குறீங்களே, சரியான ஜோடி தான்.’ என்று மனதுக்குள எண்ணம் தோன்ற, “அவரா? எவரு?” என்று பதிலுக்கு நாத்தனாரை வேண்டுமென்றே சீண்டினாள் காயத்ரி.
“அவரு தான், உங்க தம்பி.”
“என் தம்பியா? யாரை சொல்ற, என் சித்தப்பா பையன் சுரேஷையா?”
“அண்ணி!! உங்களை…” பல்லைக் கடித்தாள் வைஷு.
“ஹா…ஹா…சரி…சரி…விளையாடல. வேணும்னா ஜெகன் கிட்ட கேட்கட்டுமா என்ன பிடிக்கும்னு?”
“அய்யய்யோ! பிளானையே கெடுத்துடுவீங்க போலையே…அதெல்லாம் கேட்க வேண்டாம். அண்ணாக்கு நிறையக் கிப்ட்ஸ் வாங்கிக் கொடுத்து இருப்பீங்கள்ள, அதை வச்சு சொல்லுங்கன்னா, ரொம்பத்தான் பண்றீங்க…”
“ஹா…ஹா…” வெடி சிரிப்பு சிரித்தவள், நாத்தனாருக்கு சில பல ஐடியைக்களைக் கொடுக்க, முடிவில் ஜெகனுக்குப் பரிசாகக் கொடுப்பதற்காகக் கைகடிகாரத்தைப் பரிசாக வாங்கினாள் வைஷ்ணவி.
ஒருவழியாக ஆடைகளை வாங்கிவிட்டு, நகை கடைக்குச் சென்றவர்கள் தேவையான நகைகளை வாங்கிக்கொண்டு இரவு உணவை முடித்துக்கொண்டு வீடு திரும்பினர்.
நாட்கள் வேகமாக ஓடியிருந்தது. திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருந்த நிலைமையில், அன்றொரு நாள் வைஷுவை தொலைபேசியில் அழைத்தான் ஜெகன்.
“என்ன பண்ற வைஷு?”
“வேலை நேரத்தில் கால் பண்ணிட்டு என்ன பண்றேன்னு கேட்டா…”
“ஹி….ஹி….நாளைக்கு நீ ஃப்ரீயா?”
“எதுக்குக் கேட்குறீங்க?”
“என்னோட ஆஃபீஸ் கொலீக்ஸுக்கு எல்லாம் ஒரு பார்ட்டி கொடுக்கலாம்னு இருக்கேன். நீயும் வந்தா நல்லா இருக்கும். உன்னை அழைச்சிட்டு வர சொல்லி ஒரே கம்பல்சன்.”
“வீட்டில திட்டுவாங்களே.”
“ப்ளீஸ் வைஷு. எப்படியாவது பெர்மிஷன் கேட்டு வாயேன்.”
“பார்ட்டி எங்க ஜெகன்?”
இடத்தைச் சொன்னான் அவன்.
“சீக்கிரம் முடிஞ்சிடும் தானே?”
“ஈவ்னிங் ஆறு மணிக்கு ஆரம்பிச்சு ஒரு மணிநேரத்தில முடிஞ்சிடும் வைஷு. அதுக்கு அப்புறம் நானே உன்னைச் சேஃபா கொண்டு வந்து விடுறேன்.”
“சரி! உங்களுக்காக வரேன்.”
“தேங்க்ஸ் வைஷு. தேங்க் யு சோ மச்!”
* * * * *
“அண்ணி! இன்னைக்கு நான் வீட்டுக்கு வர லேட் ஆகும். ஆஃபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு.”
“எவ்வளவு நேரம் ஆகும் வைஷு?”
“தெரியல அண்ணி.”
“சரி! வேலை முடிஞ்சதும் இருட்டிறதுகுள்ள சீக்கிரம் வீடு வந்து சேரணும். அப்படியே கல்யாணத்துக்கு லீவ் சொல்லிட்டு வந்துடு வைஷு.”
“சரிங்க அண்ணி.”
பொய் சொல்கிறோம் என்ற வருத்தம் உள்ளுக்குள் இருந்தாலும் அதையும் தாண்டி வருங்காலக் கணவனுடன் வெளியே செல்கிறோம் என்ற மகிழ்ச்சி மனதை வியாபித்திருக்க, துள்ளலுடன் கிளம்பிச் சென்றாள் வைஷ்ணவி.
அலுவக வேலைகளை முடித்துக்கொண்டு மாலை சீக்கிரமே அனுமதி வாங்கிக்கொண்டு வெளியே வந்தவளை காரில் அழைத்துக்கொண்டு பார்ட்டி நடக்கும் இடத்திற்குப் புறப்பட்டான் ஜெகன்.
சிறிது தூரம் சென்றதும் கார் வேறு ஒரு பாதையில் பயணிக்க, குழம்பிப் போனாள் வைஷ்ணவி.
“என்ன இந்தப் பக்கம் போறீங்க ஜெகன், பார்ட்டி நடக்கிற இடம் வேற சொன்னீங்களே?”
“சாரி வைஷு. கடைசி நேரத்தில ஒரு சின்ன ப்ராப்ளம். அதனால பார்டி இடத்தை மாத்த வேண்டியதா போச்சு.” என்றவன் இடத்தைச் சொன்னான்.
அதிர்ச்சி அடைந்தாள் வைஷ்ணவி.
“அவ்வளவு தூரமா? திரும்பி வர லேட் ஆகிடுமே ஜெகன்!”
“கவலைப்படாத வைஷு. பார்மாலிட்டிக்கு ஒரு ஒரு மணி நேரம் இரு. அதுக்கு அப்புறம் கிளம்பிடு.”
“ம்! ஓகே….” சொல்லும்போதே வயிற்றுக்குள் எதுவோ பிசைந்தது வைஷ்ணவிக்கு.
கிட்டத்தட்ட ஒரு மணி நேர பயணத்திற்குப் பிறகு கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த அந்த மிகப் பெரிய ரெஸ்டாரென்ட்டுக்கு வந்து சேர்ந்தனர் ஜெகனும் வைஷுவும்.
ஜெகனை பார்த்ததும் ஆர்பரித்த நண்பர்கள் பட்டாளம், வைஷ்ணவியின் அழகை புகழ்ந்ததோடு இருவரின் ஜோடி பொருத்தத்தைப் பார்த்து விசில் அடித்தனர்.
சிறுது நேர கிண்டல் கேலி பேச்சுக்களுக்குப் பிறகு, ஜெகன் மற்றும் வைஷ்ணவி பெயர் எழுதப்பட்டிருந்த மிகப் பெரிய கேக் ஒன்று வெட்டப்பட்டுக் கொண்டாட்டங்கள் ஆரம்பமானது.
நண்பர்கள் அனைவரும் அவரவர் துணைகளுடன் வந்திருக்க, கே கட்டிங் கொண்டாட்டங்கள் முடிந்ததும், மது கோப்பைகளுடன் ஆண்கள் ஒரு பக்கம் ஒதுங்கிவிட, நொறுக்குத் தீனிகளுடன் பெண்கள் ஒரு பக்கம் கூட்டமாகக் கூடி கதை பேச ஆரம்பித்தனர்.
“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க வைஷு!”
“ஜெகனை எதுக்கு உங்களுக்குப் பிடிச்சது?”
“ஹனிமூன் எங்க போகப் போறீங்க?”
என வைஷுவிடம் வரிசையாய் கேள்விகள் கேட்டு அவள் கன்னத்தைச் சிவக்க வைத்தனர் பெண்கள்.
மறுபக்கம்,
“உன் பியான்சே ரொம்ப அழகா இருக்காங்க டா.”
“அதிர்ஷ்டசாலி டா நீ! அழகான வைப் கிடைக்கப் போறாங்க. நாங்க தான் ஏமாந்துட்டோம்.”
“ஹனிமூனுக்கு எங்க போகலாம்னு பேசி முடிவெடுத்துட்டீங்களா? இல்லைனா சொல்லு எனக்கு நிறைய இடம் தெரியும்.”
“ரெண்டு பேரும் கிஸ் பண்ணீங்களா?”
“தனியா எங்கேயாவது போனீங்களா?”
இன்னும் பல அந்தரங்க கேள்விகளைக் கேட்டு, ஜெகனின் உணர்சிகளைத் தூண்டிக்கொண்டு இருந்தனர் அவனின் நண்பர்கள்.
வயிற்றுக்குள் போன மதுவும், நண்பர்களின் சூடான பேச்சும் ஜெகனை கொஞ்சம் கொஞ்சமாக மதியிழக்க செய்தது.
திரும்பி வைஷுவைப் பார்த்தான்.
பார்ட்டிக்குப் போகிறோம் என்பதால் நீல நிறத்தில் கற்கள் பதித்த சற்றே மெலிதான புடவை உடுத்தி இருந்தாள் வைஷ்ணவி. அதற்குப் பொருத்தமாகப் பெரிதான காதணியும், டிசைனர் நெக்லஸும், விரித்து விடப்பட்ட கூந்தலும், மெலிதான மேக்கப்பும் எனப் பார்ப்பதற்குக் கூடுதல் அழகுடன் காட்சி அளித்தாள்.
வைஷ்ணவியின் இத்தோற்றத்தை பார்த்த ஜெகனின் கண்கள் அவள் உடலில் அலை பாய்ந்தது.
மெலிதான புடவை வழியே தெரிந்த பளிசென்ற நிறம், புடவை மறைக்காத இடங்களில் தென்பட்ட உடல்வளைவுகள், பேசும்போதும் தோள்களை உரசும் கம்மல், காற்றில் அசைந்தாடும் கூந்தல், கண்மை பூசப்பட்ட அழகான கண்கள், லிப்ஸ்டிக் மின்னும் உதடுகள்….
ஜெகனின் உள்ளுக்குள் இருந்த காதலனை எழுப்பிக்கொண்டு இருந்தாள் வைஷ்ணவி.

Advertisement