Advertisement

அத்தியாயம் 3
“என்ன சுரேஷ்? இப்படிக் கேட்டா எப்படி?”
“இதுல என்ன தப்பு இருக்கு மீனு? நமக்குத் தான் கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சே!”
“அதுக்காக வீட்டில சொல்லாம எப்படி உங்க கூட அவ்வளவு தூரம் வர்றது? அது தப்பில்லையா?”
“நிச்சயம் ஆனாலே பாதிப் புருஷன் மாதிரி தானே. உன் புருஷன் கூட வர்றதுக்கு என்ன தயக்கம்? இதுல யார் பெர்மிஷன் வேணும்?”
தொலைக்காட்சி சீரியலில் கதாநாயகனும், கதாநாயகியும் காரசாரமாக விவாத்தித்துக் கொண்டிருந்ததை ஆர்வமாய்ப் பார்த்துக்கொண்டு இருந்தாள் காயத்ரி.
“டிங்….டாங்!”
வாசலில் அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்க, ரிமோட்டை எடுத்துத் தொலைக்கட்சி சத்தத்தைக் குறைத்தவள் சுவற்றிலிருந்த கடிகாரத்தில் நேரத்தை பார்த்தாள்.
“இரண்டு மணி தானே ஆகுது! பசங்க வர இன்னும் நேரம் இருக்கே! இந்த நேரத்தில யாரு?”
குழப்பத்துடன் எழுந்து வாசல் அருகே சென்றவள் கதவுக்குப் பக்கத்தில் இருந்த ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். ஆண் உருவம் ஒன்று மங்கலாகத் தெரிந்தது.
“யாருங்க?” என்றாள் சத்தமாக.
“அக்கா! நான் தான் ஜெகன்.” வெளியே நின்றபடி குரல் கொடுத்தான், வைஷுவுக்கு நிச்சயம் செய்திருக்கும் மாப்பிளை ஜெகன்னாதன்.
காயத்ரியோ, அவசரமாகக் கதவை திறந்தவள் இரும்பு கேட்டையும் திறந்துவிட்டாள்.
இரண்டு கைகளிலும் கனமான பிளாஸ்டிக் பைகளைச் சுமந்தபடி வீட்டிற்குள் வந்தான் ஜெகன். அவனைச் சோபாவில் உட்கார சொன்னவள், அவனுக்குக் குடிக்க ஜூஸ் எடுத்து வந்து கொடுத்தாள்.
“என்ன தம்பி இந்த நேரத்தில வந்து இருக்கீங்க? அம்மா எதுவும் சொல்லி விட்டாங்களா?”
“மொதல்ல இதைப் பிடிங்க அக்கா.” என்றவன் பைகளைக் காயத்ரியிடம் நீட்டினான்.
ஒரு பையில் ஆப்பிள், ஆரஞ், மாதுளை எனப் பழங்கள் நிரம்பி வழிய, மற்றொன்றில் பிஸ்கட், சாக்கலேட், முருக்கு என விதவிதமான தின்பண்டங்கள் அடைத்துக்கொண்டு இருந்தது.
“இதெல்லாம் எதுக்குத் தம்பி? வீட்டுலையே நிறைய இருக்கு.”
“இருக்கட்டும் அக்கா. உங்க வீட்டு வருங்கால மாப்பிளை வாங்கிக் கொடுத்தா வாங்கிக்க மாட்டீங்களா என்ன?” என்றுவிட்டுச் சிரித்தான் ஜெகன்.
“வாங்க மாட்டோம்ன்னு யார் சொன்னா? அதுக்காக இவ்வளவா?” பதிலுக்குச் சிரித்தபடி கேட்டாள் காயத்ரி.
“பசங்களை எங்க அக்கா காணோம்? இன்னும் ஸ்கூல் விட்டு வரலையா?”
“கொஞ்ச நேரத்தில வந்துடுவாங்க தம்பி.”
“பசங்க என்ன படிக்கிறாங்க அக்கா?”
“பெரியவன் ஃபிப்த் படிக்கிறான். சின்னவ ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறா. ஆமா நீங்க எதுக்கு வந்து இருக்கீங்கன்னு சொல்லவே இல்லையே?”
“அது ஒண்ணுமில்லை அக்கா. இன்விடேஷன் டிசைன்ஸ் உங்ககிட்ட காட்டிட்டு வர சொன்னாங்க அம்மா.” என்றவன் தோள்பையிலிருந்து நான்கைந்து திருமணப் பத்திரிகை அட்டைகளை எடுத்துக் காயத்ரியிடம் கொடுத்தான்.
அதை வாங்கி ஒவ்வொரு அட்டையாகத் திறந்து பார்த்தாள் காயத்ரி. தங்கம், பிங்க், நீலம், மெஜந்தா எனப் பல்வேறு நிறங்களில் தங்க இழைகள் கொடியாய்ப் படர்ந்திருந்த அந்தப் பத்திரிகைகள் அழகில் ஒன்றோடு போட்டிபோட்டது.
“எல்லாமே அழகா இருக்கு தம்பி. அத்தை வெளியே போயிருக்காங்க. அவங்க வந்ததும் காட்டுறேன்.”
“வைஷு எப்போ வருவாங்க?”
ஜெகன் தயங்கி தயங்கி கேட்ட விதத்தில் சிரித்துவிட்ட காயத்ரி, “கவலைப்படாதீங்க தம்பி, அவகிட்டையும் காட்டிட்டு தான் முடிவெடுப்போம்.” என்றாள்.
காயத்ரி சொன்ன விதத்தில் உண்டான வெட்கத்தை மறைக்கப் பின்னந்தலையைக் கோதியபடி தலையைக் குனிந்தான் ஜெகன்.
“ரொம்ப அழகா வெட்கப்படுறீங்க தம்பி.”
ஜெகனை மேலும் வம்புக்கு இழுத்தாள் காயத்ரி.
“அக்கா!” கீழ் உதட்டை கடித்தபடி நெளிந்தான் அவன்.
“சரி!….சரி!….” என்றவள் உதட்டை இறுக மூடி, வெடித்துக்கிளம்பிய சிரிப்பை அடக்கப் பெரும்பாடுபட்டாள்.
ஜெகனை காப்பாற்றும் ரட்சகனாகக் காயத்ரியின் மொபைல் போன் அடித்தது. எடுத்து திரையைப் பார்த்தாள். ஸ்ரீராமின் பெயர் மின்னியது.
“உங்க அத்தான் தான் பேசுறார். ஒரு நிமிஷம் தம்பி.” என்றவள் மொபைலை எடுத்துக்கொண்டு எழுந்து சென்றாள்.
காயத்ரி சென்றதும், தொலைகாட்சியைப் பார்த்துக்கொண்டு இருந்தவன், அதன் மேலே இருந்த புகைப்படத்தைப் பார்த்துவிட்டு எழுந்து அருகில் சென்றான்.
ஸ்ரீராமின் குடும்பப் புகைப்படம், ஸ்ரீராம் காயத்ரி திருமணப் புகைப்படம், குழந்தைகளின் புகைப்படம் என வரிசையாக இருக்க, அதன் நடுவே அழகாகச் சிரித்துக்கொண்டு இருந்தாள் வைஷ்ணவி.
வேகமாகப் பின்னாடி திரும்பி காயத்ரி வருகிறாளா என்று பார்த்த ஜெகன், வைஷுவின் புகைப்படத்தை எடுத்து உதட்டருகே கொண்டு போன நேரம், “அம்மா!” என்ற கூச்சலுடன் ஹாலுக்குள் ஓடி வந்தனர், காயத்ரியின் பிள்ளைகள்.
அந்தச் சத்தத்தில் கையிலிருந்த புகைப்படத்தைத் தவறவிட்டவன், அது தரையைத் தொடுவதற்கு முன்பு, உருண்டு கீழே படுத்துப் புகைப்படத்தைத் தன் நெஞ்சின் மேல் தாங்கிக் கொண்டான்.
‘நல்ல வேளை நான் தப்பிச்சேன்.’ என்று மனதுக்குள் நினைத்தவன், வேகமாக எழுந்து புகைப்படத்தை இருந்த இடத்தில வைக்கப் போன நேரம் காயத்ரியிடம் மாட்டிக்கொண்டான்.
“என்ன தம்பி பண்றீங்க?”
ஜெகனின் செயலை அந்த நொடி வரை சிரித்தப்படி பார்த்துக்கொண்டு இருந்தவள், ஒன்றும் தெரியாதது போலக் கேட்டாள்.
“அது…அது….ஒண்ணுமில்லை அக்கா. போட்டோல ஒரே தூசி. அதான் துடைக்கலாம்னு….” மாட்டிக்கொண்ட அதிர்ச்சியில் தந்தி அடித்தது அவனின் உதடுகள்.
‘துடைக்க ட்ரை பண்ணீங்களா? எது உதட்டை வச்சா?’ மனதுக்குள் எழுந்த கேள்வியை வெளியே சொல்ல முடியாமல், ஜெகனை பார்த்து சிரித்தாள்.
‘அக்கா பார்த்திருப்பாங்களோ?’ அவனோ காயத்ரியை பார்த்து திருதிருவென முழித்தான்.
அதற்குள் அவனைக் காப்பாற்றி விட்டனர் பிள்ளைகள்.
“ஹாய் அங்கிள்? நீங்க அன்னைக்கு எங்க வீட்டுக்கு வந்தீங்க தானே?” ஆர்வமாய்க் கேட்டான் கண்ணன்.
காயத்திரியின் பார்வையைத் தவிர்த்துவிட்டு சின்னவனின் அருகே குனிந்தான் ஜெகன்.
“ஹாய் கண்ணா? எப்படிக் கரெக்டா கண்டு பிடிச்சீங்க? உங்களுக்கு மெமரி பவர் ஜாஸ்தி.”
“எங்க அம்மாவும் இதையே தான் சொல்லுவாங்க.” என்றவன் அடுத்து கேட்ட கேள்வி ஜெகனை திணற வைத்தது.
“எங்க அத்தையைப் பார்க்க தானே வந்து இருக்கீங்க?”
மகனின் கேள்வியில் எழுந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு அவனை அறைக்குள் இழுத்து சென்றாள் காயத்ரி.
“கண்ணா! ட்ரெஸ மாத்து, போ! டிப்பன் சாப்பிட வேண்டாமா? மாமா உனக்குப் பிடிச்ச சாக்கலேட் வாங்கிட்டு வந்து இருக்காங்க, பாரு.”
“உங்க பையன் ரொம்பப் புத்திசாலி.” நெளிந்தபடி சொன்னான் ஜெகன்.
அதன்பின் சிறிது நேரம் பிள்ளைகளுடன் விளையாடிவிட்டு புறப்பட எழுந்தவன், தயங்கி நிற்க, அவன் தயக்கம் புரிந்து என்னவென்று கேட்டாள் காயத்ரி.
“என்ன தம்பி? ஏதாவது கேட்கணுமா?”
“வைஷுவோட போன் நம்பர் கிடைக்குமா அக்கா?”
“எதுக்குத் தம்பி?”
“ஆபீஸ் ப்ரெண்ட்ஸுக்குக் கொடுக்கத் தனியா வெட்டிங் கார்ட் பிரிண்ட் பண்ணலாம்னு இருக்கேன். அதான் வைஷ்ணவி கிட்ட ஐடியா கேட்கலாம்னு…”
“போன் நம்பரை ஒரு பேப்பர்ல எழுதிக் கொடுக்கட்டுமா தம்பி….”
“பேப்பர்லையும் எழுதிக் கொடுக்கலாம், சப்போஸ் பேப்பர் இல்லைனா பரவாயில்லை, வைஷ்ணவி போட்டோ ஏதாவது இருந்தா அதுக்குப் பின்னாடி கூட எழுதிக் கொடுக்கலாம்.”
சந்தடி சாக்கில் வருங்கால மனைவியின் போட்டோவுக்கு அடி போட்டான் ஜெகன்.
“பிழைச்சீப்பிங்க தம்பி.” சொல்லிவிட்டு சிரித்த காயத்ரி, அறைக்குள் சென்று வைஷுவின் புகைப்படம் ஒன்றை எடுத்துவந்து கொடுத்தாள். அதன் பின்பக்கம் அவளின் மொபைல் எண் எழுதப்பட்டு இருந்தது.
வாயெல்லாம் பல்லாக அதை வாங்கிக்கொண்டவன், பிள்ளைகளிடம் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
* * * * *
மும்முரமாக வேலைப் பார்த்துக்கொண்டு இருந்த வைஷ்ணவி, மொபைல் சத்தம் கொடுக்கவும், அதை எடுத்து திரையைப் பார்த்தாள்.
தெரியாத நம்பரிலிருந்து, ‘ஹாய்’ என வாட்சப் குறுஞ்செய்தி வந்து இருந்ததைப் பார்த்துவிட்டு வாட்சப் செயலியை ஓபன் செய்தாள்.
திறந்ததும் அடுத்தச் செய்தி வந்து விழுந்தது.
‘ஹாய் வைஷு! நான் ஜெகன்.’
ஜெகனின் ‘வைஷு’ என்ற அழைப்பில் குப்பென்று வேர்த்துப் போனது வைஷ்ணவிக்கு. சுற்றும்முற்றும் ஒரு பார்வைப் பார்த்தவள், மொபைலை கையிலெடுத்து திரையை இமைக்காமல் பார்த்தாள்.
“இருக்கீங்களா வைஷு? பதிலையே காணோம்.”
இப்பொழுதும் பதில் இல்லை.
அடுத்து சில புகைப்படங்கள் அனுப்பப்பட்டது.
ஒவ்வொன்றாய் டவுன்லோட் செய்து திறந்து பார்த்தாள். காயத்ரியின் பிள்ளைகளுடன் ஜெகன் எடுத்திருந்த புகைப்படங்கள் அவை.
கூடவே ஒரு குறுஞ்செய்தி.
“இப்போதான் உங்க வீட்டுக்கு போயிட்டு வரேன். கண்ணனும், ஸ்வாதியும் சோ ஸ்வீட். என்கூட ஈஸியா ஒட்டிக்கிட்டாங்க. மாமா மாமான்னு ஒரே கலாட்டா.”
‘மாமா’ என்ற வார்த்தையைப் பார்த்ததும் கன்னம் சிவந்து போனது இவளுக்கு.
“அக்காகிட்ட உங்க நம்பரை கேட்டு வாங்கினேன்.”
ஜெகனின் ‘அக்கா’ என்ற உரிமையான சொல்லாடல், வைஷ்ணவியை மேலும் மயங்க செய்தது.
“வைஷு?…”
அடுத்து வந்த குறுஞ்செய்தியை இவள் படிப்பதற்குள் அவனிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது.
‘அச்சோ! கால் பண்றாரே? இப்போ என்ன செய்றது? எடுப்போமா? வேண்டாமா?’ இதயம் படபடக்க மொபைல் திரையை வெறித்தாள் வைஷு.
அதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டு மீண்டும் அடித்தது.
இருக்கையிலிருந்து அவசரமாக எழுந்தவள், மொபைலை எடுத்துக்கொண்டு வெளியே வந்து, குரலை செருமிக்கொண்டு அழைப்பை ஏற்று மொபைலை காதில் வைத்தாள்.
“ஹலோ!”
“வைஷு? என்ன ஆச்சு? பதில் எதுவும் வரலைன்னதும் கால் பண்ணேன். சாரி! வேலையா இருக்கீங்களா?”
“சுபீரியர் ஆபிசர் பக்கத்தில இருந்தார். அதான் ரிப்ளை பண்ண முடியல. சாரி.” பொய் சொன்னாள் பேதை.
“இட்ஸ் ஒகே வைஷ்ணவி. நான் தான் உங்ககிட்ட சாரி கேட்கணும், வேலை நேரத்தில உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.”
“பரவாயில்லை.”
அதன்பின் சில நிமிடங்களுக்கு அங்கே பலத்த அமைதி. பின் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தான் ஜெகன்.
“வெட்டிங் இன்விடேஷன் மாடல்ஸ் கொடுக்க உங்க வீட்டுக்கு போயிருந்தேன்.”
“ம்ம்.”
“அப்போ தான் உங்க நம்பரை அக்காகிட்ட கேட்டு வாங்கினேன்.”
“ம்ம்”
“ஆபீஸ் ப்ரெண்ட்ஸுக்கு கொடுக்கிறதுக்குத் தனியா இன்விடேஷன் அடிக்கலாம்னு இருக்கேன். அது சம்பந்தமா பேசுறதுக்குத் தான் நம்பர் வாங்கினேன். தப்பா எடுத்துக்காதீங்க.”
ஜெகன் சொன்ன விதத்தில் சட்டெனச் சிரித்து விட்டாள் வைஷு. அந்தப்பக்கம் அவனும் சிரித்திருப்பான் போல, சத்தம் கேட்டது.
சில நொடிகள் கழித்து,
“நீங்க எப்போ ப்ரீயா இருப்பீங்க வைஷு? வந்து, உங்களை வைஷுன்னு கூப்பிடலாம் தானே?”
“……..”
“மவுனத்தைச் சம்மதம்னு எடுத்துக்கலாமா?”
“……..”
“தேங்க்ஸ் வைஷு! நீங்க என்னைக்கு ப்ரீயா இருப்பீங்கன்னு சொன்னீங்கன்ன, வெட்டிங் கார்ட் டிசைன் செலெக்ட் பண்ணிடலாம்.”
“அம்மாகிட்ட ஒரு வார்த்தை கேட்கணும்.”
“நான் பேசி பெர்மிஷன் வாங்குறேன். கவலைப்படாதீங்க.”
“நாளன்னைக்கு எனக்கு லீவ் தான்.”
“அப்போ அன்னைக்கே போயிட்டு வந்திடலாம். ரெடியா இருங்க.”
சொன்னபடி வைஷ்ணவியின் வீட்டில் பேசி அனுமதி வாங்கியவன், தன் வருங்கால மனைவியை முதன்முறையாக வெளியே அழைத்துச் சென்றான்.
ஜோடியாக முதலில் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்தவர்கள் அடுத்து அந்தப் பிரபல திருமண அழைப்பிதழ் அச்சடிக்கும் கடைக்குச் சென்றனர்.
செவ்வக வடிவில் நீளமாக இருந்த அந்த முகப்பு அட்டையின் உள்ளிருந்து பத்திரிகையை வெளியே இழுத்தால், முகப்பின் ஒரு முனையில் நின்றிருக்கும் மணப்பெண் உருவம் நகர்ந்து மறுமுனையில் நின்றுகொண்டு இருக்கும் மணமகனுடன் ஜோடி சேரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த அந்தத் திருமண அழைப்பிதழ் இருவருக்கும் பிடித்துப்போக அதையே தேர்வு செய்தனர்.
அழைப்பிதழுக்கான ஆர்டரை கொடுத்துவிட்டு வெளியே வந்தவர்கள் மதிய உணவை முடித்துக்கொண்டு அவரவர் வீடுகளுக்குச் சென்று சேர்ந்தனர்.
அதன்பின் வந்த நாட்களில் இருவருக்குமிடையே குறுஞ்செய்தியின் எண்ணிக்கையும், அழைப்புகளும் கால நேரமும் அதிகரிக்க, அவர்களுக்குள் நெருக்கம் அதிகமானது.
இதற்கிடையில் ஒரு நாள் ஜெகனுடன் வெளியே சென்ற வைஷ்ணவி, வீடு வந்து சேரவில்லை.

Advertisement