Advertisement

அத்தியாயம் 2
“வாங்க! வாங்க!”
மலர்ந்த முகத்துடன் அம்பிகையும், ஸ்ரீராமும் வரவேற்க, மாப்பிள்ளை வீட்டு முறுக்கோடு பட்டு சேலை சரசரக்க ஹாலுக்குள் நுழைந்தார் மாப்பிள்ளையின் தாய் உமா. அவரைத் தொடர்ந்து வந்த கணவர் பாலாஜியும், மகன் ஜெகன்னாதனும் சிநேக புன்னகையுடன் அம்பிகையைப் பார்த்துக் கை கூப்பினர்.
“வணக்கம்மா!”
“வணக்கங்க! உட்காருங்க.”
அம்பிகை கை காட்ட, சோபாவில் அமர்ந்தனர் மூவரும்.
இருக்கையில் அமர்ந்ததும் வீட்டை சுற்றிலும் ஆராய்ச்சி பார்வையைப் பார்த்தார் உமா. ‘பரவாயில்லை, நம்ம வீட்டளவுக்குப் பெருசா இல்லாட்டியும், வீடு நல்லா நீட்டா இருக்கு.’ மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.
மாப்பிளையின் தாய் சோபாவில் உட்கார்ந்த தோரணையும், கணவனையும் மகனையும் கண்களால் அதிகாரம் செய்யும் விதத்தையும் பார்க்கையில், வீட்டிற்குள் அவர் ராஜ்ஜியம் தான் என்பது அம்பிகைக்குப் புரிந்து போனது.
“என்ன சாப்பிட்றீங்க? காப்பியா? டீயா?”
“எங்க ரெண்டு பேருக்கும் டீ. பையனுக்குக் காப்பி.” சற்றே அதிகாரமாக வந்தது உமாவின் குரல்.
உமாவின் ஸ்நேகமின்மை மனதுக்குள் நெருடலை ஏற்படுத்தினாலும், சபை நாகரீகம் கருதி புன்னகையை இழுத்துப் பிடித்திருந்தார் அம்பிகை.
“காயத்ரி, காபி கொண்டு வாம்மா!” மருமகளுக்குக் குரல் கொடுத்தார்.
அடுத்த இரண்டு நிமிடத்தில், காபி மற்றும் பலகாரத்துடன் ஹாலுக்கு வந்தாள் காயத்ரி.
“வாங்க!” அவள் பங்குக்கு மாப்பிளை வீட்டினரை வரவேற்றவள், விருந்தினர்களுக்குத் தேவையானதை கவனமாக எடுத்து வைத்தாள். மிக்ஷர், ஜாங்கிரி, பேடா எனப் பலகார தட்டுக்கள் நிரம்பி வழிந்தது.
“இவ என் மருமக. பேரு காயத்ரி. அவன் என் பையன் ஸ்ரீராம், ரெவனியு டிபார்ட்மெண்ட்ல ஆபீசரா இருக்கான்.”
“மருமக என்ன பண்றா?” அழுத்தமாய்க் கேட்டார் உமா.
“கல்யாணத்துக்கு முன்னாடி ப்ரைவேட் கம்பனில வேலை பார்த்துட்டு இருந்தா. குழந்தை பிறந்ததும் நான் தான் வேலையை விடச் சொல்லிட்டேன். இப்போ வீட்டில் எனக்குத் துணையா இருக்கா.”
“இந்தக் காலத்தில போய் வேலையை விடச் சொல்லி இருக்கீங்களே. அவளும் வேலைக்குப் போனா தானே, வீட்டுக்கு ஒத்தாசையா இருக்கும். என் வீட்டுக்கு வர போர மருமகளை எல்லாம் நான் வேலையை விடச் சொல்லவே மாட்டேன்.”
உமா சட்டென்று இப்படிச் சொல்லிவிட, அம்பிகையின் முகம் வாடிப் போனது. காயத்ரி உடனே இடை புகுந்தாள்.
“டெல்லிக்கு மாற்றல் வந்தது. நான் ஒரு பக்கம் அத்தை ஒரு பக்கம்னா செட் ஆகாதுன்னு, நான் தான் வேலையை விட முடிவெடுத்தேன். என்னோட கட்டாயத்துனால தான் அத்தை சம்மதம் சொன்னாங்க.”
காயத்ரியின் பதிலை உமா காதில் வாங்கிக்கொள்ளவில்லை என்பது, மிக்ஷரை எடுத்து வாயில் போட்ட அவரின் செய்கையிலிருந்தே அனைவருக்கும் தெரிந்து போனது.
‘விடு காயத்ரி. இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம்.’ என அம்பிகை கண் ஜாடை காட்ட தன் உதடுகளை இறுக மூடிக்கொண்டாள் காயத்ரி.
மாப்பிளையின் தந்தை தான் சூழ்நிலையைத் திசை திருப்பும் பொருட்டுப் பேச்சை மாற்றினார்.
“ரெவனியு டிபார்ட்மெண்ட்லையா வேலை செய்றீங்க தம்பி? ரொம்ப வேலை இருக்குமே?”
“ம்ம்..ஆமாம் சர்.”
“என்னோட தங்கச்சி பையன் கூட அங்க தான் வேலை பார்க்கிறான். பேரு செந்தில்.”
“ரொம்பச் சந்தோசம் சர். ஆபீஸ் போகும்போது பார்க்கிறேன்.”
அதன்பின் பேச்சுக்கள் மற்ற விஷயங்களுக்குச் சென்றுவிட, வைஷ்ணவியைத் தயார்படுத்தும் பொருட்டு அறைக்குள் சென்றுவிட்டாள் காயத்ரி.
“என்ன அண்ணி? அவங்க பேசுற முறையே சரி இல்லை.”
அறைக்குள் வந்ததும் அண்ணியைப் பிடித்துக்கொண்டாள் வைஷ்ணவி.
“ஷ்! சத்தம் போடாத வைஷு. அவங்க காதில விழப் போகுது.”
“விழுந்தா விழட்டும்.” விட்டேரியாய் பதில் சொன்னாள் சின்னவள்.
“அவங்க பேசுறதை எல்லாம் நீ ஏன் காதில போட்டுக்கிற. மாப்பிள்ளை எப்படி இருக்கார் தெரியுமா? போட்டோவில பார்த்ததை விட நேர்ல் ஜம்முனு இருக்கார். உனக்குப் பிடிச்ச நடிகர் சொல்லுவியே அசப்பில அவர் மாதிரியே இருக்கார்.”
நாத்தனாரின் மனதை திசை திருப்பினாள் காயத்ரி.
“அப்படியா? நிஜம்மாவா சொல்றீங்க அண்ணி?”
“நிஜம்மா தான். கொஞ்ச நேரத்தில நீயே பார்ப்ப.”
அண்ணி சொல்லவும், கற்பனை உலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கிவிட்டால் வைஷ்ணவி.
நாத்தனாரின் ஆடையையும், அலங்காரத்தையும் சரி செய்தபடி ஹாலில் நடப்பவற்றைக் கவனித்துக்கொண்டு இருந்தாள் காயத்ரி.
வெளியே….
“இது உங்க சொந்த வீடா?”
“உங்களுக்குக் கூடப் பிறந்தவங்க எத்தனை பேர்?”
“இந்த வீட்டை தவிர வேற சொத்து எதுவும் இருக்கா?”
காவல்துறை விசாரணை போல அம்பிகையைக் கேள்விகளால் துளைத்தெடுத்து விட்டார் உமா.
“நல்ல நேரம் முடிய போகுது உமா. பொண்ணைப் பார்த்திடலாம்.” கணவர் சொல்லவும் தான், தன் கேள்விக்கணைகளை நிறுத்திக் கொண்டார்.
“பொண்ணைக் கூட்டிட்டு வாங்க.”
உமா சொல்லவும், “வைஷுவை கூட்டிட்டு வாம்மா காயத்ரி.” என்று உள் அறை நோக்கி குரல் கொடுத்தார் அம்பிகை.
ஐந்து நிமிடத்தில் நாத்தனார் வைஷ்ணவியை அழைத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள் காயத்ரி.
“வணக்கம்!” அனைவருக்கும் பொதுவாய் ஒரு வணக்கத்தை வைத்தாள் வைஷ்ணவி.
ஜெகன்னாதன் வைஷ்ணவியை ஆசையாய்ப் பார்த்துக்கொண்டு இருக்க, அவன் தாய் உமாவோ, அவளை மேலிருந்து கீழ் வரை எடைபோட்டார்.
ஜெகனின் பார்வையைப் பார்த்துவிட்டு கணவன் ஸ்ரீராமை திரும்பி ஓரக்கண்ணால் பார்த்தாள் காயத்ரி. அவனும் இவளைத் தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.
‘நீங்களும் இப்படித்தானே என்னை முழுங்கிடுறது மாதிரி பார்த்தீங்க?’
‘நான் மட்டுமா?! நீயும் தான், ஓரக்கண்ணால என்னையே பார்த்துட்டு இருந்த.’
இருவருக்கும் தங்களின் பெண் பார்க்கும் படலம் நினைவுக்குக் கண்களாலேயே செய்தியை பரிமாறிவிட்டு ஒருவரை ஒருவரை பார்த்து ரகசியமாய்ப் புன்னகைத்துக் கொண்டனர்.
“என்னம்மா படிச்சு இருக்க?”
“எங்க வேலை பார்க்கிற?”
“வேலை எப்போ முடியும்?”
“நல்லா சமைப்பியா?”
வீட்டு ஆட்களைத் துளைத்தது போதாதென்று, பார்க்க வந்த பெண்ணையும் கேள்வி கேட்டே முழி பிதுங்க வைத்தார் உமா.
“என் பையன் ஆசைபட்டான்னு தான் பொண்ணு பார்க்க வரவே சம்மதிச்சேன். பரவாயில்லை, எங்க அளவுக்கு வசதி இல்லாட்டியும் பொண்ணு பார்க்க லட்சணமா தான் இருக்கா.”
திடீரென்று உமா இவ்வாறு உண்மையைப் போட்டு உடைத்துவிட, அனைவருக்குமே சங்கடமாய்ப் போனது. மகனையும் மருமகளையும் ஒரு பார்வை பார்த்தார் அம்பிகை.
“சொத்துபத்தா முக்கியம் உமா. வாழ போறவங்க விருப்பம் தானே முக்கியம். அது இல்லாட்டி, கோடி கோடியா சொத்து இருந்தும் என்ன பிரயோசனம்.”
மனைவியின் பேச்சுப் பிடிக்காமல் மனதில் உள்ளதை கொட்டிவிட்டார் பாலாஜி.
“விருப்பம் மட்டும் இருந்தா போதுமாங்க? குடும்பத்தை நடத்த காசு பணம் வேண்டாம்மா? அது இல்லாட்டி காலப்போக்கில அன்பும் பாசமும் காணாம போயிடும்.”
அடுத்தவர் முன் தன் ஈகோ பறிபோவதை விரும்பாமல் பதில் வாதம் செய்தார் உமா.
உமாவின் பேச்சுப் பிடிக்காமல் பதில் பேச வந்த மருமகள் காயத்ரியை கண்களால் அடக்கினார் அம்பிகை. அவளோ கணவனைத் திரும்பி பார்த்தாள். ‘விடு! அம்மா சொல்றபடி கேளு.’ சத்தமில்லாமல் உதடுகளை அசைத்தான் அவன். தாய் சொல்லை தட்டாத மகனாக இருந்தான் ஸ்ரீராம். எரிச்சலுடன் தன் கோபத்தை அடக்கிக் கொண்டாள் காயத்ரி.
பாலாஜியோ, “பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருக்கா. இவளை கட்டிக்கக் கொடுத்து வச்சு இருக்கணும்.” என்றார் பெண் வீட்டினரை ஆறுதல்படுத்தும் விதமாக.
பின் மகன் பக்கம் திரும்பி, “என்னடா சொல்ற?” என்றார் சிரிப்புடன்.
“அந்தக் கொடுத்து வச்ச பையன் நானா இருக்கணும்னு ஆசைப்படுறேன் அப்பா.”
கணீரென்ற குரலில் அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னான் மாப்பிள்ளை ஜெகன்னாதன்.
அவனின் பாவனையே சொல்லாமல் சொன்னது, ‘என் அம்மாவின் பேச்சை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாதீர்கள்.’ என்று.
அதன்பின்பே வைஷ்ணவியின் வீட்டினர் முகத்தில் இறுக்கம் தளர்ந்து மகிழ்ச்சி பூத்தது.
“வைஷுவை உள்ள கூட்டிட்டு போ காயத்ரி.”
“சரி அத்தை.”
பெண்கள் இருவரும் அறைக்குள் வந்ததும், அக்கடா என்று கட்டிலில் அமர்ந்தனர்.
“மாப்பிள்ளையை உனக்குப் பிடிச்சு இருக்கா வைஷு?”
“ம்ம். பிடிச்சு இருக்கு அண்ணி.” கன்னங்கள் சிவக்க சொன்ன வைஷு அதே வேகத்தில் முகம் வாடினாள்.
“என்ன வைஷு?”
“அவரோட அம்மாவை பார்த்தா தான் உடம்பெல்லாம் நடுங்குது அண்ணி.”
தனக்குமே அவரைப் பிடிக்கவில்லை தான் என்றாலும், நாத்தனாரை கலவரப்படுத்த விரும்பவில்லை காயத்ரி.
“அதெல்லாம் போகப் போகச் சரி ஆகிடும் வைஷு. அதான் அவங்களுக்கும் உன்னைப் பிடிச்சுப் போச்சே.”
“என்னவோ போங்க. ஒருபக்கம் ஹேப்பியாவும் இருக்கு. இன்னொரு பக்கம் திகிலாவும் இருக்கு.”
கவலையுடன் சொன்ன சின்னவளை தட்டிக்கொடுத்துவிட்டு எழுந்து சென்றாள் காயத்ரி.
“நகைநட்டு, பாத்திரம் பண்டம், எல்லாம் உங்க விருப்பம் போலச் செய்ங்க. உங்க பொண்ணு கொண்டு வந்துதான் என் வீடு நிறையனும்னு அவசியமில்லை. இருந்தாலும் என் சொந்தக்கறாங்க முன்னாடி உங்க பொண்ணு கவுரவமா நிக்கணும். அதுக்கு ஏத்த மாதிரி செய்வீங்கன்னு நம்புறேன். ஒரே பொண்ணு அவளுக்குச் செய்யாம என்ன பண்ணப் போறீங்க.”
‘உங்க அந்தஸ்துக்குச் செய்யக்கூடாது. என் அந்தஸ்துக்குச் செய்யணும்.’ உமா சொன்ன வார்த்தைகளின் உள் அர்த்தத்தை நன்றாகப் புரிந்து கொண்டார் அம்பிகை.
“நிச்சயமா சம்பந்தி. உங்க கவுரவத்துக்கு எந்தக் குறைச்சலும் வராதபடி பார்த்துக்கிறோம்.”
“அப்போ சரி, வீட்டுக்கு போய் ஜோசியர் கிட்ட கேட்டுட்டு நாள் குறிச்சு அனுப்புறேன். இப்போ கிளம்புறோம்.” என்று சொல்லிவிட்டு எழுந்துகொண்ட உமா, அம்பிகையிடம் எதுவும் சொல்லாமல், ஏன் சிறு புன்னகை கூடச் செய்யாமல் வெளியேறிவிட, ஆண்கள் இருவரும் அனைவரிடமும் வணக்கம் சொல்லி விடைபெற்றுக்கொண்டார்.
“வரேங்க. பொண்ணுகிட்ட சொல்லிடுங்க. வரேன் தம்பி.”
அனைவரையும் அனுப்பிவிட்டு சோர்வுடன் சோபாவில் அமர்ந்தார் அம்பிகை. புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது. மொத்தத்தில் நடந்து முடிந்த களேபரத்தில், திருமணம் உறுதியான மகிழ்ச்சிக்கூடப் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
“என்ன அம்மா இது? அந்தம்மா ஏன் இப்படிப் பேசுறாங்க? எனக்குச் சுத்தமா பிடிக்கல.” தன் அதிருப்தியை வெளிப்படுத்தினான் ஸ்ரீராம்.
“பையன் பார்க்க லட்சணமா இருக்கான். மாசம் இரண்டு லட்சம் சம்பளம். இதுக்கு மேல என்ன வேணும் சொல்லு? குடும்பத்தில ஒருத்தர் முசுடா இருந்தா இன்னொருத்தர் அன்பா இருப்பாங்க ஸ்ரீராம். பையனும் அவன் அப்பாவும் நல்ல முறையில தான் பேசுறாங்க. பையனுக்கும் நம்ம வைஷுவை ரொம்பப் பிடிச்சு இருக்கு. அதுபோதும் நமக்கு.”
“என்னவோ போங்க!” சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்துவிட்டான் ஸ்ரீராம்.
கணவன் சென்றதும் மாமியார் அருகில் வந்து அமர்ந்தாள் காயத்ரி.
“வைஷுகிட்ட பேசுனியா காயத்ரி? அவளுக்குப் பிடிச்சு இருக்கா?”
“பிடிச்சு இருக்குன்னு சொன்னா அத்தை.”
“வேற எதுவும் சொன்னாளா?” மகளின் குணம் அறிந்து கேட்டார் அம்பிகை.
“உங்க பையன் சொலிட்டு போனதை தான் வைஷுவும் சொன்னா அத்தை. மத்தபடி வேற ஒண்ணுமில்லை.” என்றவள் அம்பிகையின் கவலையான முகத்தைப் பார்த்துவிட்டுப் பேச்சை மாற்றினாள்.
“வைஷுவுக்கு இன்னும் இரண்டு வளையல் எடுக்கனும்னு சொன்னீங்களே அத்தை? எப்போ போயிட்டு வரலாம்?”
“ஆமாம் காயத்ரி மறந்தே போயிட்டேன். அவளுக்கு எப்போ லீவ் கிடைக்கும்னு கேட்டு வை. எல்லோரும் போயிட்டு வந்துடலாம்.”
“சரி அத்தை.”
* * * * *
பெண் பார்த்துவிட்டு போன ஒரு வாரம் வரை பெண் வீட்டுக்கு மேற்கொண்டு எந்தத் தகவலும் தெரிவிக்காமல் திகிலை கொடுத்துவிட்டு ஒரு வாரம் கழித்துத் தொலைபேசியில் அழைத்த உமா, ஜோதிடர் குறித்துக் கொடுத்திருந்த முஹூர்த்த தேதிகளைச் சொல்லிவிட்டு, “உங்க பொண்ணுக்கு எது வசதிப்படும்ன்னு கேட்டு சொல்லுங்க.” என்றுவிட்டு வைத்துவிட்டார். வேறு எந்த நல விசாரிப்பும் அவரிடமிருந்து வரவில்லை.
‘எப்படி இருக்கீங்கன்னு கூட ஒரு வார்த்தை கேட்கலையே’ என உள்ளுக்குள் வருத்தம் இருந்தாலும். திருமண வேலைகளில் தன் கவனத்தைத் திசை திருப்பினார் அம்பிகை.
இரு வீடுகளின் கலந்தாலோனைக்குப் பிறகு ஒருவழியாகத் திருமணத் தேதி நிச்சயக்கப்பட்டது. இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்க, திருமண ஏற்பாடுகளில் மூழ்கியது இரண்டு குடும்பமும்.
“எங்க வசதிக்கு நிச்சயதார்த்தம், கல்யாணம், ரிசப்ஷன் மூனையும் வேற வேற நாளில் வைக்கலாம் தான். ஆனா உங்களால முடியாதுன்னு மூனையும் ஒரே நாள் மண்டபட வாடகையில முடிச்சிக்கலாம்னு முடிவு செஞ்சு இருக்கேன்.” மண்டபட வாடகை கொடுக்கக் கூட உன்னால முடியாது என்று மீண்டும் ஒரு கொட்டு வைத்தார் உமா.
அன்று இரவு ஸ்ரீராம் கூடச் சொல்லிப் பார்த்தான். “பேசாம என் பேர்ல லோன் வாங்கி, அவங்க சொல்றபடி செய்திடலாம் அம்மா. அவங்க நம்மை ஏதோ பிசைக்கரங்க மாதிரி சொல்றாங்க.”
அண்ணனுடன் சேர்ந்து கொண்டாள் வைஷ்ணவி. “அண்ணாவுக்கு லோன் கிடைக்கலைனா என் பேர்ல லோன் போடலாம்மா.”
ஆனால் அம்பிகையோ பிள்ளைகளின் அறிவுரையை உறுதியாக மறுத்துவிட்டார்.
“நீங்க ரெண்டு பெரும் எதுவும் செய்ய வேண்டாம். நாளைக்கு உங்களுக்குன்னு ஒரு வீடு வாங்கவோ இல்லை உங்க பிள்ளைகளுக்குப் படிப்பு, கல்யாணம் செய்றதுக்கோ தேவைப்படும்.” என்றவர் மகள் பக்கம் திரும்பி, “உன் பேர்ல லோன் வாங்கி உன் தலையில சுமையை ஏத்த வேண்டாம் வைஷு.” என்றுவிட்டு மகன் பக்கம் திரும்பி, “உங்க அப்பா சேர்த்து வச்சு இருக்கிறதே போதும் ஸ்ரீராம். உனக்கும் ரெண்டு பிள்ளைங்க இருக்கு ப்பா. அதையும் மனசில வச்சுக்கோ.” என்றார் முடிவாய்.
“அத்தை சொல்றதும் சரி தாங்க. சம்பந்தி சொல்றபடி தனித்தனி பங்க்ஷன் வச்சோம்னா எல்லாத்துக்கும் ஆள் வரணுமே? சாப்பாடு, வாடகைன்னு பணம் தான் வேஸ்ட் ஆகும். அந்தப் பணத்துக்கு வைஷுக்கு கூடுதலா நகை போடலாம். அதுவாவது உபயோகமா இருக்கும்.”
காயத்ரி சொல்வது சரியெனப்பட அண்ணனும் தம்பியும் அப்பேச்சை கைவிட்டனர்.
இவ்வாறு பல்வேறு மனக்காயங்களுக்கு நடுவே வைஷுவின் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருந்தது, அது நடக்கபோவது இல்லை என்ற உண்மை தெரியாமல்.

 

Advertisement