Advertisement

அத்தியாயம் 15
“என்ன அம்பிகை மா, நியுஸ்ல காட்டினது உங்க மருமகளா?”
“என்னம்மா இது, இப்படி நடந்து போச்சு? உங்களுக்கா இப்படி ஒரு நிலைமை?”
“அந்த அர்த்த ராத்திரியில எதுக்கு உங்க மருமக வெளிய போனா? அதனால தான் இப்படி நடந்து போச்சு.”
“ஆமா உங்க சம்பந்திக்கு இந்த விஷயம் தெரியுமா? தெரிஞ்சா வைஷ்ணவி கல்யாணம் என்ன ஆகுறது?”
“இப்படி ஒண்ணு நடந்த வீட்டில இனிமே யாரு பொண்ணு எடுப்பாங்க?”
“இனி வைஷ்ணவி கதி என்ன ஆகப் போகுதோ தெரியலையே?”
அக்கம்பக்கம் வசிப்பவர்கள், உறவினர்கள், நண்பர்கள் எனத் தெரிந்தவர்கள் அனைவரும் தொலைக்காட்சியில் வந்த செய்தியை பார்த்துவிட்டு அம்பிகையைக் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டு இருக்க, ஏற்கனவே வேதனையில் இருந்தவரை மேலும் வேதனைப்படுத்த புறப்பட்டு வந்தார் உமா.
* * * * *
வாசலில் காலிங் பெல் அடிக்க, மருத்துவமனைக்குப் புறப்பட்டுக்கொண்டு இருந்த அம்பிகை வாசலுக்குச் சென்று கதவை திறந்தார். எதிரில் உமா நின்றுகொண்டு இருப்பதைப் பார்த்துவிட்டு அவசரமாய் ஒதுங்கி வழி விட்டார்.
“உள்ள வாங்க சம்பந்தி.”
உமாவோ அம்பிகையை ஒரு கோப பார்வை பார்த்துவிட்டு விறுவிறுவென்று உள்ளே நுழைந்தார்.
குழப்பத்துடன் சம்பந்தியை பின் தொடர்ந்து ஹாலுக்கு வந்தார் அம்பிகை.
“அன்னைக்கே நான் என்ன சொன்னேன்?”
சோபாவில் அமர்ந்தபடி கோபமாக உமா கேட்க, அவர் கேட்பது புரியாமல், தடுமாறினார் அம்பிகை.
“எதைச் சொல்றீங்க சம்பந்தி?”
அம்பிகை ‘சம்பந்தி’ என்று சொல்லியதில் உமாவின் கோபம் ரெட்டிப்பானது.
“இப்போதானே புரியுது. என் பையன் ஏன் உங்க வீடே கதின்னு கிடக்கான்னு.”
“என்ன சம்பந்தி? என்ன ஆச்சு?” லேசான நடுக்கம் அம்பிகையின் குரலில்.
“இந்தக் கல்யாணம் இனி நடக்காதுன்னு சொல்லிட்ட பின்னாடியும், என்னைச் சம்பந்தின்னு கூப்பிடுறீங்கன்னா, என் பையன வளைச்சு போட்டுட்ட தைரியமா?”
அதிர்ச்சி அடைந்தார் அம்பிகை.
“என்ன சம்பந்தி இப்படி எல்லாம் பேசுறீங்க?”
“பின்ன எப்படிப் பேச சொல்றீங்க? கல்யாணத்தை நிறுத்திட்ட பின்னாடி எதுக்கு என் பையனை உங்க வீட்டுக்கும், ஆஸ்பத்திரிக்கும் கூட்டிட்டு போறீங்க?”
“சத்தியமா இல்லை சம்ப……” சம்பந்தி என்று சொல்ல வந்தவர் உமாவின் கோப பார்வையைப் பார்த்துவிட்டு அவ்வார்த்தையைத் தவிர்த்துவிட்டுத் தொடர்ந்தார்.
“இல்லைங்க. உங்க பையனை நாங்க கூட்டிட்டு போகலை. தம்பி தான் செய்தி கேள்விப்பட்டு வராங்க.”
“அவன் வந்தான்னா, உங்களுக்கு எங்க போச்சு புத்தி? இந்தக் கல்யாணத்தை நிறுத்திட்டோம். இனி நீங்க இங்க வர வேண்டாம் தம்பின்னு சொல்லி தடுத்திருக்க வேண்டியது தானே? ஏன் செய்யலை? ஓஹ்! பையனை வளைச்சு போட்டுட்டா, எப்படியும் கல்யாணம் நடந்திடும்னு நினைப்பா?”
உமா நெருப்பாய் வார்த்தைகளை அள்ளிக்கொட்ட, ஸ்தம்பித்து நின்றுவிட்டார் அம்பிகை. ஆனால் அங்கே வந்த வைஷ்ணவியோ சூடாய் பதிலடி கொடுக்கத் தவறவில்லை.
“எங்க கிட்ட வந்து கேட்கிறதுக்குப் பதிலா, உங்க பையன் கிட்ட கேளுங்க. அதுதான் சரியா இருக்கும்.”
‘உன் பிள்ளையை அடக்கத் துப்பில்லாமல் எங்களிடம் உன் கோபத்தைக் காட்டுகிறீர்களா?’ என்ற பதில் அதில் தொக்கி இருக்க, உஷ்ணமான உமா, வரம்பு மீறிய வார்த்தைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார்.
“செய்து வச்சு இருக்கிற காரியத்துக்குக் கொஞ்சம் கூட வெக்கமில்லாம இப்படி நீ பேசுறதை பார்த்தாலே தெரியுது, என் பையனை வளைச்சு போட நீ எந்த அளவுக்கும் கீழ இறங்கி இருப்பன்னு.”
“போதும் நிறுத்துங்கம்மா.” உமாவின் பேச்சை தாள முடியாமல், கத்திவிட்டார் அம்பிகை.
அதேநேரம் செய்தி கேள்விப்பட்டு ஓடோடி வந்திருந்த ஜெகனும், உமாவின் வார்த்தைகளைக் கேட்டுவிட்டு, அவரைச் சத்தம் போட்டான்.
“அம்மா! என்ன பேசுறீங்க நீங்க?”
“வா டா வா! கண்டவங்களைத் திட்டினா உனக்கு ஏன் டா கோபம் வருது?”
“யாரு சொன்னா அவங்க கண்டவங்கன்னு?”
“கண்டவங்க இல்லாம பின்ன யாரு டா அவங்க?”
“வைஷு என்னோட வருங்காலப் பொண்டாட்டி. அவங்க என்னோட வருங்கால மாமியார்.”
“யார் சொன்னா? இந்தக் கல்யாணம் எப்போவோ நின்னுடுச்சு.”
“அதை நீங்க சொல்லக்கூடாது, நான் சொல்லணும். இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க, வைஷுவை தவிர வேற யாரையும் நான் கல்யாணம் செய்றதா இல்லை.”
மகன் உறுதியாகச் சொல்ல, ஆத்திரத்துடன் வைஷு பக்கம் திரும்பினார் உமா.
“இதுவரைக்கும் நான் கிழிச்ச கோட்டை தாண்டாத என் பையனை என்னை எதிர்த்து பேசுற அளவுக்குக் கொண்டு வந்திருக்க. அப்படி என்ன டி வசியம் வச்ச என் பையனுக்கு? என்னத்தைக் காட்டி என் பையனை மயக்கின?”
“அம்மா!” ஜெகன் கர்ஜிக்க,
வைஷுவோ, “வீட்டை விட்டு வெளிய போங்க.” என்றாள் கோபத்துடன்.
“போகத்தான் போறேன். இந்த அசிங்கம் பிடிச்ச வீட்டில ஒழுக்கம் இருக்கிற யாரும் நிக்க மாட்டாங்க.”
“நீங்க பேசின வார்த்தையில இருந்தே தெரியுது, யாரு எப்படின்னு.”
வார்த்தைகள் தடித்துக்கொண்டே போக, ஜெகனும், அம்பிகையும் இடை புகுந்தார்கள்.
“வைஷு தயவு செஞ்சு அமைதியா இரு. பெரியவங்க நாங்க பேசிக்கிறோம்.” – அம்பிகை.
“அவங்களா பெரியவங்க? பெரியவங்க மாதிரியா பேசுறாங்க? இப்படிப் பேச அவங்களுக்கு யார் உரிமை கொடுத்தது?”
“வைஷு ப்ளீஸ்! அம்மா தான் ஏதோ கோபத்தில பேசுறாங்கன்னா நீயும் ஏன் இப்படிப் பேசுற?” – ஜெகன்.
“எப்படிப் பேசாம இருக்கச் சொல்றீங்க? எங்க அம்மா மேலையும் என் மேலையும் சேர்த்தை வாரி இறைப்பாங்க, நான் அமைதியா கேட்டுட்டு இருக்கனுமா? உங்க அம்மாவை நான் இப்படிப் பேசினா நீங்க சும்மா இருப்பீங்களா?”
வைஷு பட்டென்று இப்படிச் சொல்லிவிட, மகன் பக்கம் திரும்பினார் உமா.
“பாரு டா பாரு! எப்படிப் பேசுறான்னு?”
“வைஷு! ப்ளீஸ் நிறுத்தேன்.” திருமணத்திற்கு முன்பே மனைவிக்கும் அம்மாவுக்கும் நடுவே நிற்க வேண்டிய நிலையை நினைத்து நொந்து போனான் ஜெகன்.
“முடியாது! உங்க அம்மா பேசின வார்த்தையை எல்லாம் கேட்டீங்க தானே? சொல்லுங்க, நானா உங்களை மயக்கினேன்? நானா உங்களை ஹாஸ்பிடலுக்கு வர சொன்னேன்? சொல்லுங்க!”
“இல்லை….நானா தான் விஷயம் கேள்விப்பட்டு வந்தேன். போதுமா?”
“அதை உங்க அம்மாகிட்ட சொல்லுங்க மொதல்ல.”
“அப்படி அவனை உன் பின்னாடியே சுத்துற அளவுக்கு மயக்கி வச்சு இருக்குறியே, இதுக்கு யார் காரணம்?”
உமா இப்படிச் சொல்லவும், எங்கே வைஷ்ணவி சண்டையைப் பெரிதுபடுத்தி விடுவாளோ என்று அஞ்சிய ஜெகன், அவசரமாய் வைஷ்ணவி பக்கம் திரும்பினான்.
“வைஷ்ணவி! ப்ளீஸ்! நீ எதுவும் பேசாத! நான் வீட்டுக்கு போய் அம்மாகிட்ட பேசுறேன். இப்போதைக்கு நீ கொஞ்சம் அமைதியா இரு.”
“இனிமே பேச என்ன இருக்கு மிஸ்டர் ஜெகன்?”
வைஷ்ணவி ‘மிஸ்டர் ஜெகன்’ என்றதும் குழப்பத்துடன் அவள் முகம் பார்த்தான் ஜெகன்.
அம்பிகையோ மகள் ஏதோ முடிவெடுத்து விட்டாள் என்று புரிந்து அவளைப் பேசவிடாமல் தடுக்க முயன்றார்.
“வைஷு! பேசாம இரு. நாங்க பேசிக்கிறோம். நீ ஹாஸ்பிடல் கிளம்பு.”
“போறேன் அம்மா. அதுக்கு முன்னாடி நான் சொல்ல வந்ததைச் சொல்லிட்டு போறேன்.”
தாய் பக்கம் திரும்பி அழுத்தத்துடன் சொன்னவள், அதே வேகத்தில் ஜெகன் பக்கம் திரும்பினாள்.
“இனி இந்தக் கல்யாணம் நடக்காது மிஸ்டர் ஜெகன். நீங்க உங்க அம்மாவை கூட்டிட்டு கிளம்புங்க மொதல்ல.”
“வைஷு?! என்ன பேசுற நீ?” அதிர்ந்து போனான் ஜெகன்.
“என்ன சொல்லணுமோ அதைத் தான் சொல்றேன் மிஸ்டர் ஜெகன். இனி இந்த வீட்டுக்கோ இல்லை ஹாஸ்பிடலுக்கோ தயவு செஞ்சு எப்போவும், வராதீங்க.”
சொல்லிவிட்டு அறைக்குள் வைஷ்ணவி சென்றுவிட, அவளைப் பின்தொடர்ந்து சென்றான் ஜெகன்.
உமாவோ, இனி இந்தத் திருமணம் நடக்காது என்ற திருப்தி அடைந்தவர், தன் பர்சை திறந்து, பத்து லட்சத்துக்கான செக்கை எடுத்து டேபிள் மீது வைத்தார்.
“கல்யாண ஏற்பாட்டுக்கு நீங்க செலவு பண்ண பணம், எடுத்துக்கோங்க.” விட்டெறியாய் சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார்.
மகளின் திருமணம் நின்றுவிட்ட உண்மை உரைக்க, உமா பேசிய பேச்சுக்களின் வீரியமும் சேர்ந்துகொள்ள, கனத்த இதயத்துடன் சோபாவில் அமர்ந்துவிட்டார் அம்பிகை.
உள்ளே அறையில்,
தன்னிடம் பேசிவிட்டு விறுவிறுவென உள்ள நுழைந்த வைஷ்ணவியின் கையைப் பிடித்து நிறுத்தினான் ஜெகன்.
“யாரை கேட்டுக் கல்யாணத்தை நிறுத்தனும்னு சொல்ற நீ?”
கோபமும் வேதனையும் நிறைந்து இருந்தது அவன் முகத்தில்.
“யாரை கேட்கனும்னு சொல்றீங்க ஜெகன்?” உடைய ஆரம்பித்திருந்த குரலை இறுகி பிடித்தபடி பதில் கேள்வி கேட்டாள் வைஷ்ணவி.
“அப்போ நான் யாரு உனக்கு?” ஆற்றாமையுடன் கேட்டான் அவன்.
ஜெகனின் கேள்வியில் கண்ணீர் கோர்த்துவிட்ட கண்களை அவனுக்குக் காட்ட விரும்பாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் வைஷ்ணவி.
அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்பினான்.
“சொல்லு வைஷு, நான் யாரு உனக்கு?”
ஜெகன் கேட்கவும், சற்று முன் உமா பேசிய பேச்சுகள் நினைவுக்கு வர, இளக ஆரம்பித்திருந்த வைஷ்ணவியின் மனம் மீண்டும் இறுகியது. கண்ணீரை விரலால் சுண்டி விட்டவள், கோபத்துடன் பதில் சொன்னாள்.
“எக்ஸ் ஃபியான்சே!”
வைஷ்ணவியின் வார்த்தையில் ஸ்தம்பித்து நின்று விட்டான் ஜெகன். கோபம் உண்டானது.
“அக்காவுக்கு எதுவும் நடக்காம இருந்திருந்தா இந்நேரம் நான் கட்டிய தாலி உன் கழுத்தில தொங்கிட்டு இருக்கும் டி. நீயும் நானும் புருஷனும் பொண்டாட்டியா வாழ்கையை ஆரம்பிச்சு இருப்போம். ஆனா இப்போ என்னடான்னா நான் உனக்கு எக்ஸ் பியான்சேவா? அதுக்குள்ளவாடி என் மேல இருந்த காதல் மறைஞ்சு போச்சு?” கர்ஜித்தான் ஜெகன்.
பதில் சொல்லாமல் மவுனமாக நின்றிருந்தாள் வைஷ்ணவி.
“எங்க அம்மா பேசுன பேச்சுக்கு என்னையும் சேர்த்து தண்டிக்குறியா வைஷு?”
இப்பொழுது அவளிடம் பதில் இல்லை.
“அப்போ இத்தனை நாளா நீ என்கிட்டே காட்டின பாசமெல்லாம் பொய் அப்படித்தானே?”
“போதும் நிறுத்துங்க ஜெகன். என்னமோ பல வருஷமா காதலிச்ச காதலர்கள் மாதிரி பேசுறீங்க?! பெரியவங்க நிச்சயம் பண்ண கல்யாணம் இது, அவ்வளவு தான். கல்யாணம் நிச்சயம் ஆன மத்த கப்பிள்ஸ் எப்படி இருப்பாங்களோ அப்படித்தான் நாமளும் பழகினோம். அதுக்கு மேல ஒண்ணுமில்லை.”
தான் இவ்வளவு கெஞ்சியும் தன் காதலை மறைத்து, தன் அழுகையை மறைத்துக்கொண்டு, வீம்பாக அவள் பேசுவது ஜெகனை காயப்படுத்த, பிடித்திருந்த அவள் கையை விட்டவன், அழுத்தத்துடன் பதில் சொன்னான்.
“நீ சொல்றது உண்மைனா, கூடிய சீக்கிரம் ஒரு கல்யாணத்தைப் பண்ணு! அப்போ நம்புறேன், என் மேல உனக்குக் காதல் இல்லைன்னு. ஆனா ஒண்ணு டி, நம்ம கல்யாணம் நடந்தாலும், நடக்காட்டியும் இந்த ஜென்மத்தில நீ தான் என் பொண்டாட்டி.”
கோபத்துடன் சொன்னவன் விறுவிறுவென வெளியேறினான், அறையை விட்டும், அவள் வீட்டை விட்டும்.
வைஷ்ணவியோ, உடல் தோய்ந்து தொப்பென்று தரையில் அமர்ந்துவிட்டாள்.
அவள் விழியோரத்தில் கண்ணீர் துளிகள்!
* * * * *
வடிவேலுவின் ஊருக்கு கிளம்பி வந்து இருந்தான் ராகவ். தன் பங்குக்கு அவன் மனைவியிடம் விசாரித்தான்.
உள்ளூர் காவல் அதிகாரிகளிடம் சொன்ன அதே பதிலை தான் ராகவிடமும் சொன்னாள் அப்பெண்.
“வேலை விஷயமா வெளியூர் போயிருக்காங்க ஐயா! வேற எதுவும் எனக்குத் தெரியாது.”
“எந்த ஊர்?”
ஊர் பெயரை சொன்னாள் அப்பெண்.
உடனே தனது தோழனை தொடர்பு கொண்டான் ராகவ்.
“சொல்லு ராகவ்.”
“நான் சொல்ற போன் நம்பர் எங்க ஆக்டிவ்ல இருக்குன்னு பார்த்து சொல்லு சதீஷ்.”
அடுத்தப் பத்து நிமிடத்தில் தொடர்புகொண்டான் சதீஷ்.
“இந்த நம்பர் இப்போதைக்கு ஆக்டிவ்ல இல்லை ராகவ். கடைசியா நீ தங்கி இருக்கிற ஊர்ல இருக்கும்போது ஆக்டிவ்ல இருந்து இருக்கு. அதுக்கு அப்புறம் இல்லை.”
வடிவேலுவின் மனைவி குறிப்பிட்ட ஊரின் பெயரை சொன்னவன், “அங்க இருக்கான்னு பார்த்தியா?”
“எல்லாத்தையும் தரோவா பார்த்துட்டேன். இப்போதைக்கு இந்த நம்பர் டிஆக்டிவ்ல இருக்கு.”
“தேங்க்ஸ் டா சதீஷ்.” சொல்லிவிட்டு வைத்தவனுக்கு வடிவேலுவின் மனைவி சொல்வது பொய், அவன் வெளியூர் எங்கும் செல்லவில்லை. வீட்டில் தான் இருக்கிறான் என்ற சந்தேகம் எழுந்தது.
உள்ளூர் கான்ஸ்டபிள்களை வைத்து அவன் வீட்டை இரவும் பகலும் கண்காணித்தான்.
அப்படி ஒரு நாள் அதிகாலை மூன்று மணிக்கு வீட்டை விட்டு வடிவேலு வெளியே வந்தபொழுது கையும் களவுமாக அவனைப் பிடித்து வந்து விசாரித்தான் ராகவ்.
பல மணி நேர போலீஸ் விசாரணைக்குப் பிறகு உண்மையைச் சொன்னான் வடிவேலு.
“ஆமாங்கையா நீங்க காட்டின சிசிடிவி வீடியோல இருக்கிறது நான் தான். அந்தப் பொண்ணைக் கெடுத்ததும் நானும் என் கூட்டாளிகளும் தான்.” என்றவன் அன்று நடந்தவற்றை முழுமையாகச் சொன்னான்.
“நானும், என் ரெண்டு கூட்டாளிங்க பாண்டி, அப்புறம் செல்வம் மூணு பேரும் சென்னையில ஒரு மேஸ்திரி கிட்ட வேலை பார்த்துட்டு இருந்தோம். அப்படி ஒரு வீட்டில வேலைப் பார்த்துட்டு இருக்கும்போது பணம் இல்லாததால வேலை பாதியில நின்னு போச்சு. அதனால ரொம்ப நாளா அந்த வீடு ஆள் நடமாட்டம் இல்லாம இருந்துச்சு. நாங்க மூணு பேரும் நைட் நேரத்தில அந்த வீட்டில வச்சு ஒண்ணா தண்ணி அடிப்போம். அப்படி ஒரு நாள் தண்ணி அடிச்சிட்டு, பாத்ரூம் போக வெளிய போனப்போ, அந்தப் பொண்ணு ரோட்டில தனியா நடந்து வந்துட்டு இருந்துச்சு. போதையில இருந்த எனக்கு அந்தப் பொண்ணைப் பார்த்ததும் தப்பான ஆசை வந்துச்சு. உடனே பக்கத்தில இருந்த ஒரு புதருக்கு அந்தப்பக்கம் ஒளிஞ்சு நின்னுகிட்டு அந்தப் பொண்ணு கிட்ட வர வரைக்கும் காத்திட்டு இருந்தேன். கிட்ட வந்ததும் கீழ கிடந்த கண்ணாடி பாட்டிலை எடுத்து அந்தப்பொண்ணு மண்டையில ஓங்கி ஒரு அடி அடிச்சேன். அடிச்ச அடியில ரத்தம் வழிய அந்தப் பொண்ணு மயங்கி விழுந்துடுச்சு. உடனே அதைப் பில்டிங் உள்ள தூக்கிட்டு போனேன். அங்க வச்சு பாண்டி ஒரு ஐடியா கொடுத்தான். இங்கேயே வேண்டாம் போலீஸ்ல மாட்டிப்போம் அப்படின்னு. அதனால அந்தப் பொண்ணை ஒரு சாக்கு பையில மூட்டைக்கட்டி பைக்ல வச்சு வீட்டோட பின்பக்கம் புதர் வழியா தூக்கிட்டு போனோம். ஆள் நடமாட்டமில்லாத ஒரு இடத்தில வச்சு அந்தப் பொண்ணுகிட்ட நாங்க மூணு பேரும் மறுபடியும் மறுபடியும் தப்பா நடந்துகிட்டோம். ஒரு கட்டத்தில எங்களுக்குப் போதை தெளிஞ்சதும், எங்க மாட்டிக்கப் போறோம்னு பயந்து போய் அந்தப் பொண்ணை மறுபடியும் அதே பைக்ல வச்சு தூக்கிட்டு போய் ஒதுக்குப் புறமா இருந்த ஒரு இடத்தில போட்டுட்டு போயிட்டோம்.”
வடிவேலு சொல்ல சொல்ல, ராகவின் கை முஷ்டி இறுகியது.
“ஏன் டா பொருக்கி நாயே! தண்ணி அடிச்சா ரோட்டில போற பொண்ணு மேல கை வைக்கத் தோணுமா உனக்கு?”
ஆத்திரத்துடன் கர்ஜித்தவன், வடிவேலு அமர்ந்திருந்த நாற்காலியை ஓங்கி ஒரு மிதி மிதித்தான்.
ராகவ் மிதித்த வேகத்தில், பின்பக்க தலை சிமின்ட் தரையில் நச்சென்று மோதியபடி சாய்ந்த வடிவேலு தலையைப் பிடித்துக்கொண்டு வலியில் துடித்தான்.
ராகவோ விடவில்லை. லத்தியை எடுத்து வந்து அவனை விளாசி எடுத்துவிட்டான். மற்ற காவலர்களோ ஓடி வந்து ராகவை கஷ்டப்பட்டு இழுத்து பிடித்தனர்.
“விடுங்க சர்! செத்துட கித்துட போறான்.”
புசுபுசுவென மூச்சை விட்டபடி, வடிவேலுவை முறைத்துவிட்டு வெளியேறினான் ராகவ்.
அடுத்த இரண்டே நாட்களில் வடிவேலுவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவனின் கூட்டாளிகளான செல்வத்தையும் பாண்டியையும் கைது செய்த ராகவ், மூவரையும் சிறையில் அடைத்தான்.
கோர்டில் விசாரணை தொடங்கியது!
* * * * *
அம்பிகை மூலம் வைஷ்ணவி பேசியது ஸ்ரீராமிற்குத் தெரியவர, உமாவின் மேல் கோபம் கொண்டவன் தங்கை பேசியது சரி தான் என் வாதிட்டான்.
“இதுக்கு மேலையும் இந்தச் சம்பந்தத்தில ஆசைப்பட வேண்டாம் அம்மா. வைஷுவுக்கு வேற இடத்தில மாப்பிள்ளை பாப்போம்.”
“என்ன இருந்தாலும் இப்படி ஒரு சம்பந்தம் கிடைக்காது ஸ்ரீராம். இந்த வைஷ்ணவி கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாம்.”
“என்னம்மா இப்படிச் சொல்றீங்க? உங்களையும் அவளையும் அசிங்கமா பேசி இருக்காங்க. இதுக்கு மேலையும் எப்படி அமைதியா இருக்க முடியும்?”
“அதான் மாப்பிள்ளை நான் பேசுறேன்னு சொல்லி இருந்தாரே டா!”
“அப்படியே அவர் பேசி இந்தக் கல்யாணம் நடந்தாலும், நம்ம வைஷு அங்க போய் நிம்மதியா இருப்பான்னு நினைக்குறியா அம்மா நீ?”
“வாழ்க்கைனா அப்படி இப்படித் தான் டா இருக்கும். போற இடத்தில எல்லோருக்கும் நம்மைப் பிடிச்சிடும்ன்னு சொல்ல முடியுமா? உங்க அத்தைகளுக்கு இன்னைக்கும் என்னைப் பார்த்தா பிடிக்காது. அதுக்காகப் பார்த்துட்டு இருக்க முடியுமா சொல்லு.”
இப்படிச் சொன்ன அம்மாவை விசித்திரமாய்ப் பார்த்தான் ஸ்ரீராம்.
“வேண்டாம் அம்மா! இவ்வளவு நடந்த பிறகும் நீங்க இப்படிப் பேசுறது சரியில்லை. இனி இந்த மாதிரி பேசாதீங்க. நம்ம வைஷுவுக்கு என்ன குறைச்சல்? கவர்ன்மென்ட் வேலை. கை நிறையச் சம்பளம். அவனவன் போட்டிப் போட்டுட்டு வருவான். ஜெகனை விட, ஆயிரம் மடங்கு நல்ல இடம் அமையும். பார்த்துட்டே இருங்க.”
சொல்லிவிட்டு மகன் சென்றுவிட, அம்பிகையின் மனம் அமைதி அடையவில்லை. நல்ல இடம் கைவிட்டு போய் விட்டதே என்று மனம் அடித்துக்கொண்டது.
இதற்கிடையில் வைஷ்ணவியின் திருமணம் தள்ளிப் போகவில்லை, நின்றுவிட்டது என்ற செய்தி கசிய ஆரம்பிக்க, எல்லாவற்றுக்கும் காரணம் காயத்ரி தான் என்று பேசிய உறவினர்கள், அவள் வீட்டில் இருக்கும் வரையில் வைஷ்ணவிக்குத் திருமணம் நடக்காது, என அம்பிகையின் மனதுக்குள் விஷத்தை விதைக்க ஆரம்பித்தனர்.
இதன்பலனாகக் காயத்ரியை பார்பதற்காக மருத்துவமனைக்குச் செல்வதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொள்ள ஆரம்பித்தார் அம்பிகை.
மகளின் திருமணம் நடக்காதோ என்ற அம்பிகையின் பயம் காயத்ரியின் பக்கம் கோபமாய்த் திரும்ப ஆரம்பித்திருந்தது.
மகுடிக்கு மயங்கிய பாம்பாய் உறவினர்களின் பேச்சுக்கு மயங்க ஆரம்பித்த அம்பிகை ஒரு கட்டத்தில் மனதுக்குள் தேங்கி இருந்த விஷத்தை வார்த்தைகளாய் கொட்டினார் மருமகளைப் பார்த்து.

Advertisement