Advertisement

அத்தியாயம் 14
மருத்துவமனையில் இருந்து நேரே காவல் நிலையம் வந்த ராகவ், முதல் வேலையாக ஸ்ரீராமின் புகார் கடிதத்தை வைத்து எப்.ஐ.ஆர் பதிவு செய்தவன், தான் கைது செய்யப்போவது பிரபல பத்திரிகை என்பதால், கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்று அவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு நேரே சிவனின் பத்திரிகை அலுவகத்துக்கு விரைந்தான்.
* * * * *
“செய்தி தெரியுமா சர்?” எடிட்டரிடம் தொலைபேசியில் உற்சாகமாகக் கேட்டார் சிவன்.
“என்ன நியுஸ் சிவன்? சேல்ஸ் பிச்சிகுச்சா?” சொல்லிவிட்டு வெடி சிரிப்பு சிரித்தார் எடிட்டர்.
அவருடன் சேர்ந்து சிரித்தவர், “அதே தான் சர். இன்னைக்குச் சேல்ஸ் டபிள் ஆகியிருக்கு. நம்ம நியுஸ்பேப்பரை மக்கள் கேட்டு வாங்கிட்டுப் போறாங்களாம், நியுஸ் வருது.”
“எல்லாம் உன்னால தான்யா! சேல்ஸ் டவுன் ஆகிட்டு இருக்கிற நேரத்தில பார்த்து சூப்பரா ஒரு நியுஸ் கொண்டு வந்த பாரு, கில்லாடியா நீ!”
“எல்லாம் உங்ககிட்ட கத்துகிட்டது தான் சர்.” குழைந்த குரலில் சொன்ன சிவன், அப்படியே தன் கோரிக்கையை வைத்தார்.
“சர் கிட்ட சொல்லி ப்ரொமோஷனுக்குச் சொன்னீங்கன்னா, நல்லா இருக்கும் சர்.”
“சொல்றேன்யா.” அந்தப்பக்கம் எடிட்டர் பிடி கொடுக்காமல் பேசினார்.
“ஆமாம், ஏரியா இன்ஸ்பெக்டர் அங்க வந்தாராமே?”
“அவங்களுக்கு வேற என்ன சர் வேலை? ஊழல் பண்றவனையும், கொலை பண்றவனையும் பிடிக்கத் துப்பு இருக்காது. மக்களுக்கு உண்மையைச் சொல்ற, நம்ம மேல தான் அவங்க கோபத்தைக் காட்டுவாங்க.”
“எப்படியும் அந்த இன்ஸ்பெக்டர் திரும்ப வருவான். ஏதாவது பிரச்சனைனா பார்த்துக்கலாம்.”
“ஓகே சர்.
சிவன் பேசிக்கொண்டு இருக்கும்போதே, அவரின் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் ராகவ்.
அவசரமாக இருக்கையில் இருந்து எழுந்தார் சிவன்.
“பாலியல் குற்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணோட போட்டோ மற்றும் விவரத்தை நியுஸ்பேப்பர்ல பப்ளிஷ் பண்ண குற்றத்துக்காக, ஐபிசி செக்ஷன் 228A யின் கீழ உங்களை அரெஸ்ட் பண்றேன்.” சொல்லிக்கொண்டே சிவனின் கையில் விலங்கை மாட்டினான் ராகவ்.
ராகவ் சொன்னதைத் தொலைபேசி வழியே கேட்டுக்கொண்டு இருந்த எடிட்டர் அவசரமாய்த் தன் அழைப்பை துண்டித்துவிட்டு, பத்திரிகை முதலாளிக்கு அழைத்தார்.
“சர்! எடிட்டர் சர்கிட்ட சொல்லாம, இப்படி நீங்க அரெஸ்ட் பண்ணக்கூடாது.”
சிவன் முரண்டுபிடிக்க, “அதை நான் பார்த்துக்கிறேன்.” என்று கோபமாகச் சொன்ன ராகவ், அவரை இழுத்துக்கொண்டு சென்றான்.
* * * * *
போன் அடிக்க, அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தார் கமிஷ்னர்.
“சர், எங்க சப் எடிட்டரை அரெஸ்ட் செய்து இருக்காங்க உங்க ஆளுங்க. அதை என்னன்னு கொஞ்சம் பாருங்க.” சிவன் வேலை செய்யும் பத்திரிகையின் முதலாளி பதற்றமாகச் சொல்ல, பொறுமையாகப் பதில் சொன்னார் கமிஷனர்.
“இன்ஸ்பெக்டர் சரியா தான் செய்து இருக்கார் சர். இதுல நான் செய்றதுக்கு ஒண்ணுமில்லை.”
“என்ன சர் இப்படிச் சொல்றீங்க? எத்தனை குற்றத்தை நாங்க வெளிய கொண்டு வந்து உங்களுக்கு உதவி செய்து இருக்கோம். இப்போ எங்களையே அரெஸ்ட் பண்ணலாமா?”
“அத்தனை குற்றத்தை வெளிய கொண்டு வந்த உங்களுக்கு, ரேப் விக்டமோட போட்டோவை போட கூடாதுன்னு தெரியாதா சர்?”
“அது ஏதோ தெரியாம போட்டுடாங்க சர். அதுக்காக அரெஸ்ட் எல்லாம் செய்றது, ரொம்ப அதிகம்.”
“என்னால எதுவும் பண்ண முடியாது சர். நீங்க இப்படிப் பேசினதுகூட வெளிய தெரிஞ்சா, உங்க பத்திரிகைக்குத் தான் கெட்ட பேர்.”
கமிஷனர் கடைசியாய் சொன்ன வார்த்தையில் ஆடிதான் போனார் பத்திரிகை முதலாளி.
“சரி சர். நான் கோர்ட்ல பார்த்துக்கிறேன்.”
“அதுவும் கஷ்டம் தான்.” சிரிப்புடன் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்த கமிஷனரின் உதட்டோரத்தில் புன்னகை எட்டிப் பார்த்தது.
* * * * *
காயத்ரியின் அறையில் அவளின் ட்ரிப்சை மாற்றிக்கொண்டு இருந்த செவிலியர் காயத்ரியின் கருவிழிகள் அசைவதை பார்த்துவிட்டு அவள் அருகில் வந்தார்.
மெல்ல கண் விழித்த காயத்ரி சுற்றும் முற்றும் பார்வையைச் சுழலவிட, அவள் அருகில் குனிந்த செவிலியர், “அசையாம இருங்க மேடம். நான் போய் டாக்டரை கூட்டிட்டு வரேன்.” என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறியவர், ஓடி சென்று மருத்துவரை அழைத்து வந்தார்.
அவரோ, காயத்ரியின் வைட்டல்ஸ், அதாவது இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், ஆக்சிஜென் அளவு என எல்லாவற்றையும் பரிசோதித்துவிட்டு, அவளிடம் பேச்சுக் கொடுத்தார்.
“இப்போ நீங்க பத்திரமா இருக்கீங்க காயத்ரி. உங்களுக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை. வேற எதுவும் அசவுகரியம் இருக்குங்களா?”
பதிலுக்கு ‘இல்லை’ என்பது போலத் தலை அசைத்தாள் காயத்ரி.
“நான் பேசுறது தெளிவா கேட்குதா?”
“ம்ம்.” என்றவள், “என்னோட ஹஸ்பெண்ட்?” என்றாள் கேள்வியாய்.
“வெளிய இருக்கார். இருங்க கூப்பிடுறேன். ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாதீங்க.”
சொல்லிவிட்டு வெளியே வந்த மருத்துவர் செவிலியரிடம் சொல்லி ஸ்ரீராமுக்கு தகவல் கொடுக்கச் சொன்னார். அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர் முன் வந்து நின்றது காயத்ரியின் குடும்பம்.
“உங்க மனைவி கண்ணு முழிச்சிட்டாங்க ஸ்ரீராம். ஒவ்வொருத்தரா போய்ப் பாருங்க. அவங்க ரொம்ப எமோஷனல் ஆகாம பார்த்துக்கோங்க.” என்றுவிட்டு சென்றுவிட,
“அண்ணா! அண்ணிகிட்ட வேற எதையும் கேட்காத. அவங்களை அழாம பார்த்துக்கோ.” என்று அண்ணனிடம் அறிவுரை சொல்லி அனுப்பினாள் வைஷ்ணவி.
ஒருவித சந்தோஷ மனநிலையில் ஐசியு அறைக்குள் நுழைந்தான் ஸ்ரீராம். காயத்ரி படுத்திருந்த படுக்கைக்கு அருகில் வந்து நின்றவன், மெதுவாகக் குரல் கொடுத்தான்.
“காயத்ரி!”
சோர்வுடன் கண்களைத் திறந்த காயத்ரிக்கு, கணவனைப் பார்த்ததும், அன்றைய நாள் நினைவுக்கு வர, முட்டிக்கொண்டு வந்தது கண்ணீர்.
“ஷ்….ஷ்…அழக் கூடாது அம்மு! இப்போ எதுக்கு அழற நீ?” சின்னக் கண்டிப்புடன் மனைவியின் கண்ணீரை துடைத்து விட்டவன், உணர்ச்சி பெருக்கில் அவள் கன்னத்தில் இதமாய் முத்தமொன்றை வைத்தான்.
பதிலுக்கு உதடுகள் துடிக்க எதையோ சொல்ல முயன்றாள் அவள். குற்ற உணர்ச்சி அவள் கண்களில் கண்ணாடியாய்த் தெரிந்தது.
“நீ எதுவும் சொல்ல வேண்டாம். எல்லாத்தையும் ஒரு கனவா நினைச்சு மறந்துடு காயத்ரி. மொதல்ல உடம்பை பாரு. பிள்ளைங்க உன்னைத் தேடுதுங்க.”
“வைஷு? அவ கல்யாணம்?” பயத்துடன் ஒலித்தது காயத்ரியின் குரல்.
“தேதி தள்ளி வச்சுருக்கு.” மனைவிக்காகப் பொய் சொன்னவனுக்கு, இது உண்மையாக இருக்கக் கூடாதா என்று உள்ளுக்குள் ஒரு நப்பாசை இருக்கத்தான் செய்தது.
கணவனைச் சந்தேகமாகப் பார்த்தாள் காயத்ரி. ஆனால் அவனோ பேச்சை மாற்றினான்.
“நல்லா இருக்கியா காயத்ரி? உடம்பு எப்படி இருக்கு?”
“நல்லா இருக்கேங்க. நீங்க? பிள்ளைங்க எல்லாம் சாப்பிட்டாங்களா?”
“நாங்க எல்லோரும் நல்லா இருக்கோம் காயத்ரி. நீ எப்போவும் கிண்டல் செய்வியே, பிள்ளைங்களை என்னால சமாளிக்க முடியாதுன்னு, இப்போ பாரு எவ்ளோ சமத்தா நான் சொல்ற பேச்சை கேட்கிறாங்க தெரியுமா?” நிலைமையைச் சகஜமாக்க வேண்டி ஸ்ரீராம் சொல்ல, கண்ணீர் கோர்த்திருந்த கண்களுடன் சிரிக்க முயன்று தோற்றுப் போனாள் அவள்.
“வைஷுவும் அம்மாவும் வெளிய வெயிட் பண்றாங்க. உள்ள கூப்பிடட்டுமா?”
‘சரி’ எனத் தலையாட்டிவளுக்கு இந்நிகழ்வை அம்பிகை எப்படி எடுத்துக் கொள்வாரோ?! என்று நினைத்து சிறு அச்சம் எழுந்தது.
அடுத்த இரண்டு நிமிடத்தில் வைஷுவும், அம்பிகையும் அழுத வழிந்த கண்களுடன் உள்ளே வந்தனர்.
“நல்லா இருக்கியா மா?” கலங்கிய குரலில் அம்பிகை கேட்க, ‘ஆம்’ எனத் தலை அசைத்த காயத்ரிக்குமே, அழுகை எட்டிப் பார்த்தது.
“அண்ணி! அழக்கூடாது. சொல்லிட்டேன்!” துப்பட்டாவால் அண்ணியின் கண்களைத் துடைத்தபடி செல்லமாய் உத்தரவிட்ட வைஷுவுக்கே தன் கண்களில் வழியும் கண்ணீரை தடுக்க முடியவில்லை.
பதிலுக்கு நாத்தனாரின் கண்ணீரை துடைத்துவிட்ட காயத்ரி, அவள் கன்னத்தை வருடினாள். தன்னால் இவள் திருமணம் தள்ளிப்போய் விட்டதே என்று வேதனையாக இருந்தது அவளுக்கு.
வைஷுவும் நடந்த எதையும் காயத்ரியிடம் சொல்லவில்லை.
பெண்கள் இருவரும் இங்கே பேசிக்கொண்டு இருக்க, அங்கே ராகவிடம் விஷயத்தைச் சொன்னார் மருத்துவர்.
சிவனைச் சிறையில் அடைத்துவிட்டு, தன் வீட்டுக்கு வந்திருந்த ராகவ் வடிவேலுவின் ஊருக்குப் புறப்பட்டுச் செல்வதற்காகக் கிளம்பிக்கொண்டு இருந்தான்.
மொபைல் அடிக்கவும் அதை எடுத்தவன் மருத்துவரின் பெயர் திரையில் தோன்றவும் வேகமாய் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தான்.
“சொல்லுங்க டாக்டர்.”
“உங்க சிஸ்டர் கண்ணு முழிச்சிட்டாங்க ராகவ்.”
மகிழ்ச்சியில் திளைத்துப் போனான் ராகவ்.
“எப்போ டாக்டர்?”
“இப்போ தான் ஒரு பதினைந்து நிமிஷம் இருக்கும். அவங்க பேமிலியை பார்த்து பேசிட்டு இருக்காங்க.”
“ரொம்பத் தேங்க்ஸ் டாக்டர்.”
“என்னோட கடமையைத் தான் செய்தேன் ராகவ். இதுல தேங்க்ஸ் சொல்ல எதுவுமில்லை.” என்றவர் சிறு தயக்கத்துடன் அக்கேள்வியைக் கேட்டார்.
“காயத்ரியோட குடும்பத்துக்கு உங்களைப் பத்தி தெரியுமா?”
“தெரியாது டாக்டர். நாங்க ரெண்டு பேரும் சின்ன வயசிலயே பிரிஞ்சிட்டோம்.”
“உங்களைப் பார்த்தா அவங்களுக்கு அடையாளம் தெரியும் தானே?”
“தெரியும்னு தான் நினைக்கிறன். பார்க்கலாம்.”
“அப்போ ஒரு ரெக்வஸ்ட்.”
“சொல்லுங்க டாக்டர்.”
“இப்போதைக்கு அவங்க எமோஷனல் ஆகாம பார்த்துக்கோங்க.”
“நிச்சயமா டாக்டர்.”
“விசாரணை கூட இப்போவே பண்ண வேண்டாம். ஒரு ரெண்டு மூணு நாள் போகட்டும்.”
“ஓகே டாக்டர். நான் பார்த்துக்கிறேன். நீங்க கவலைப்பட வேண்டாம். காயத்ரி நல்லா இருக்காங்களா?”
“நல்லா இருக்காங்க. நான் கேட்ட கேள்விக்கு எல்லாம் நல்லாவே ரெஸ்பான்ஸ் பண்ணாங்க. வேற எதுவும் ப்ராப்ளம் இல்லை.”
“தேங்க்ஸ் டாக்டர்.” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தவன், தன் பயணத்தைத் தற்காலிகமாக ஒத்திவைத்துவிட்டு, பல வருடங்கள் கழித்துத் தங்கையைப் பார்க்கப் போகும் மகிழ்ச்சியில், காக்கிச் சட்டையை மாட்டிக்கொண்டு மருத்துவமனை விரைந்தான்.
மருத்துவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, ஐசியு அறைக்கு வந்தான். மூச்சை ஆழமாக இழுத்து விட்டுத் தன்னைச் சமன் செய்து கொண்டவன் மெதுவாக ஐசியு அறைக்குள் நுழைந்தான்.
கண் மூடி படுத்திருந்தாள் காயத்ரி.
“காயத்ரி!” மெதுவாக அழைத்தான்.
குரல் கேட்கவும் நிமிர்ந்து ராகவை பார்த்தாள்.
“வணக்கம். உங்க கேசை விசாரிக்கிற இன்ஸ்பெக்டர் நான். என் பேர் ராகவ்.”
ராகவின் பெயரும், அவனின் குரலும் பரிச்சியமானதாக இருக்க, கண்களைச் சுருக்கி அவனைப் பார்த்தாள் காயத்ரி.
பழக்கப்பட்ட முகம்! நெருக்கமான குரல்!
குழப்பம் அவளைச் சூழ, தயங்கி தயங்கி அந்தக் கேள்வியைக் கேட்டாள்.
“உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. நீங்க…..நீங்க?”
“என்னை அடையாளம் தெரியுதா அம்மு?” குரல் கரகரக்க ராகவ் கேட்க,
‘அம்மு! இப்படித் தன்னை அழைப்பது அவன் ஒருவன் மட்டும் தானே! அவனா? அவனே தான்!’ மகிழ்ச்சி பிரவாகம் காயத்ரியின் முகத்தில்.
“ராகவ் அண்ணா?” கேள்வியாய் அவள் குரல் ஒலிக்க, ‘ஆம்’ எனத் தலை ஆட்டினான் ராகவ்.
“இத்தனை நாளா எங்க போன நீ? என்னை ஏன் தேடி வரல? உன்னை எவ்ளோ தேடினேன் தெரியுமா?” சிறு பிள்ளையென முகத்தைச் சுருக்கி கேட்டவளுக்கு, வெடித்துக் கிளம்பியது அழுகை. கேவி கேவி அழுதாள்.
வேகமாய் அவள் முன் மண்டியிட்டு தங்கையின் கைகளைத் தன் கைக்குள் பொத்திக் கொண்ட ராகவுக்கு அவளின் கேள்வியில் தொண்டை அடைத்தது.
‘உன்னைப் பார்க்க வந்தேன். ஆனா உன் அப்பா தான் என்னை இனிமே வரக்கூடாதுன்னு சொல்லிட்டாரே.’ என்ற எண்ணம் மனதுக்குள் எழுந்தாலும் வெளியே சொல்ல முடியாமல், தங்கையை ஆறுதல் படுத்தினான்.
“சாரி டா அம்மு! என்னை மன்னிச்சிடு மா.” தங்கையின் தலையை வருடியபடி மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டவன், தங்கையின் கண்ணீரை துடைத்துவிட்டான்.
“என் பட்டுல. அழக்கூடாது. சொன்னா கேட்கணும். ப்ளீஸ் டி! அழாத! அப்புறம் டாக்டர் வந்து என்னைத் திட்டப் போறார்.”
ராகவ் கடைசியாய் சொன்ன வார்த்தை, தனக்கு நடந்ததைக் காயத்ரிக்கு நினைவுப்படுத்த, இப்படி ஒரு நிலைமையில் அண்ணனை சந்திக்க நேர்ந்ததே என்ற எண்ணத்தில் மீண்டும் அழ தொடங்கினாள்.
இதை நன்றாகவே புரிந்து கொண்டான் ராகவ்.
“அம்மா அழாத! உனக்கு ஒண்ணுமில்லை. ரோட்டில போற ஏதோ ஒரு நாய் செய்ததுக்கு நீ ஏன் அழனும்? இப்படி உடைஞ்சு போகலாமா? உன் மனசை திடமா வச்சுக்கிட்டாலே போதும், இதெல்லாம் ஒண்ணுமேயில்லை. சின்ன வயசில எவ்ளோ போல்டா பேசுவ, இப்போ என்ன சின்னப் பிள்ளையாட்டம்?”
“தெரியல, எதுக்கு அழறேன்னு?” ஈனமாய் ஒலித்தது காயத்ரியின் குரல்.
உடைந்து போனான் ராகவ். தன் தங்கைக்கு ஏன் இந்த நிலைமை வந்தது என்ற வேதனையில் மனம் துடித்தது.
தான் உடைந்து போனால் தன் தங்கையும் உடைந்து போவாள் என்பதால், தன் உணர்வுகளை இறுக்கிப் பிடித்தான்.
“தப்பு செஞ்சவனுங்க தான் அழனும். நீ எதுக்கு அழற? அழாத அம்மு. நீ அழுதா எனக்குக் கஷ்டமா இருக்கும்னு தெரியும் தானே உனக்கு?”
அதட்டலுடன் ராகவ் சொல்ல, வெகு நேரத்துக்குப் பிறகு தன்னைச் சமன் செய்துகொண்ட காயத்ரி, கண்களில் ஆசையுடன் கேட்டாள், “அவரையும் பிள்ளைங்களையும் பார்த்தியா?”
“பார்த்தேனே!” வேகமாய்த் தலை அசைத்த ராகவ், “என் மருமகளும் மருமகனும் அப்படியே உன்னை உரிச்சு வச்சு இருக்காங்க.” என்றான் சிரிப்புடன்.
“அப்பா உன்னைப் பத்தி சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டார். அதனால அத்தைகிட்டயும் அவர்கிட்டயும் உன்னைப் பத்தி இதுநாள் வரை நான் சொல்லல. மன்னிச்சிடு அண்ணா.”
“இதுக்கு எதுக்கு மன்னிப்பு கேட்கிற நீ? அப்பா சொன்னா காரணம் இருக்கும். விடு! அதேமாதிரி இனியும் சொல்ல வேண்டாம். அப்பாவுக்குத் தெரிஞ்சா திட்டப் போறார்.”
“அப்பாவும் அம்மாவும் இப்போ இல்லை. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே இறந்து போயிட்டாங்க.” வருத்தத்துடன் சொன்னாள் காயத்ரி.
“ஓஹ்!” என்றவன் சிறு இடைவெளிக்கு பிறகு கேட்டான்.
“அப்பாவும் அம்மாவும் உன்னை நல்லா பார்த்துக்கிட்டாங்களா அம்மு? நீ சந்தோஷமா இருந்தியா?”
“பெத்த அம்மா அப்பா மாதிரி என்னை நல்லா பார்த்துக்கிட்டாங்க அண்ணா. ஒரு குறையும் வைக்கலை. அவங்க சக்திக்கு மீறி நகை போட்டு என்னைக் கல்யாணம் செய்து கொடுத்தாங்கன்னா பார்த்துக்கோயேன்.”
“அப்படியா! ரொம்பச் சந்தோசம் அம்மு.”
ராகவ் சொல்ல, காயத்ரியோ அவனின் காக்கிச் சட்டையைப் பெருமையுடன் பார்த்தாள்.
“இத்தனை நாளா நீ எங்க இருந்த?”
“என் கதையை அப்புறம் பேசலாம். நான் வந்து ரொம்ப நேரம் ஆகுது. நான் கிளம்புறேன். நீ சீக்கிரம் சரி ஆகிட்டு வா அம்மு!”
என்றுவிட்டு எழுந்து கொண்டவனின் கையைப் பற்றினாள் காயத்ரி. ‘என்ன’ என்பது போலப் பார்த்தான் ராகவ்.
“உன்னைப் பத்தி வீட்டில சொல்லப் போறேன். இனிமேயும் மறைக்க விரும்பல.”
அவள் கையைத் தட்டிக் கொடுத்தவன், “உன் இஷ்டம்.” என்றான் சம்மதமாய்.
காயத்ரியை பார்த்ததில் இருந்தே, தனக்கும் தங்கை இருக்கிறாள், சொந்தங்கள் பல உண்டு, என்று உலகத்திற்குச் சொல்ல வேண்டும் என்ற ஆசை முளைத்திருந்தது ராகவின் மனதுக்குள்.
இந்நிலையில் ஜெகன் மருத்துவமனைக்கு வந்து செல்லும் செய்தி உமாவிற்குத் தெரியவர, அம்பிகையைத் தேடி நேரே வீட்டிற்கு வந்து நின்றார் அவர்.

Advertisement