Advertisement

அத்தியாயம் 13
“என்னங்க! இந்த நியுஸ்பேப்பரை கொஞ்சம் பாருங்க?” மூச்சு வாங்கியபடி தன் முன் வந்து நின்ற மனைவியின் கையிலிருந்த செய்தித்தாளை வாங்கிப் பார்த்தார் உமாவின் கணவர், பாலாஜி.
அவர் கண்களை அவராலே நம்ப முடியவில்லை.
“இந்தப் போட்டோல இருக்கிற பொண்ணு, நம்ம பையனுக்குப் பொண்ணு பார்த்திருக்கிற வீட்டு மருமக தானே?”
“ஆமாங்க! அந்தப் பொண்ணே தான். என்ன அநியாயம் இது?! இப்படி ஒரு விஷயம் நடந்து இருக்கு. நம்மகிட்ட ஒரு வார்த்தை சொல்லலை பாருங்க. அன்னைக்குப் போன் போட்டு கேட்டப்போ கூட, ஊருக்கு போயிருக்கான்னு பொய் சொன்னாங்க. என்ன நெஞ்சழுத்தம் அவங்களுக்கு?”
“கோபப்பட வேண்டாம் உமா. யாரா இருந்தாலும் இப்படி ஒரு விஷயத்தை வெளிய சொல்ல யோசிக்கத் தான் செய்வாங்க.”
“அது வெளி ஆளுங்க கிட்ட. ஆனா நம்ம கிட்ட?! நம்ம கிட்ட சொல்லனுமா இல்லையா? நாளைக்கு அவங்க பொண்ணு இங்க வந்து வாழ போகுதேன்னு கொஞ்சம் கூடப் பயம் இல்லை பாருங்க.”
“சரி விடு ஏதோ நடந்தது நடந்து போச்சு. அவங்களே வேதனையில இருப்பாங்க. இதுல நீ வேற இப்படி எல்லாம் பேசி அவங்க மனசை கஷ்டப்படுத்த வேண்டாம். என்ன இருந்தாலும் நம்ம சம்பந்தி தானே.”
“சம்பந்தியா?! யார் சொன்னது?”
“உமா! என்ன பேசுற நீ?” அதிர்ச்சி அடைந்தார் பாலாஜி.
“என்ன சொல்லணுமோ அதைத் தான் சொல்றேன். அவங்க வீட்டில பொண்ணு எடுக்க எனக்கு இஷ்டமில்லை. இந்தக் கல்யாணம் வேண்டாம்.”
“யாரோ ஒரு காவாலிப் பையன் செய்ததுக்கு, அந்தப் பொண்ணு என்ன பண்ணும்? இதுக்காகப் போய் ஒரு கல்யாணத்தை நிறுத்தலாமா?”
“வெறும் இதுக்காக மட்டும் சொல்லலங்க. இப்போவே இப்படி ஒரு பெரிய விஷயத்தை நம்ம கிட்ட இருந்து மறைச்சவங்க நாளைக்கு என்னவேனா செய்வாங்க. யாருக்கு தெரியும், இந்தக் கல்யாணத்தில கூட ஏதாவது விஷயத்தை மறைச்சு இருக்கலாம்.”
“உமா! நீ பேசுறது சரி இல்லை.” கத்தினார் பாலாஜி.
“நான் சரியா தான் பேசுறேன். அந்தப் பொண்ணோட போட்டோ இப்போ ஊருக்கே தெரிஞ்சு போச்சு. நாளைக்குக் கல்யாணத்தில வச்சு அந்தப் பொண்ணைப் பார்த்துட்டு யாராவது வந்து நம்ம கிட்ட கேட்டா என்ன சொல்ல போறீங்க? விஷயம் தெரிஞ்சுதுனா, நம்ம சொந்தக்காரங்க நம்மளை மதிப்பாங்களா? கேவலமா பார்க்க மாட்டாங்க?! நாளைக்கு நம்ம பையனுக்கு என்ன மரியாதை இருக்கும்? விஷயம் தெரிஞ்சும் இந்தக் கல்யாணத்தை நடத்த நான் ஒன்னும் முட்டாள் இல்லை. நீங்க கொஞ்சம் வாயை மூடிட்டு அமைதியா இருங்க. உங்க இறக்க குணத்தைக் காட்ட நம்ம பையன் வாழ்க்கை தான் கிடைச்சுதா உங்களுக்கு.”
படபடவெனப் பட்டாசாய் பொரிந்து தள்ளிய உமா, பாலாஜியின் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாமல், அம்பிகைக்குப் போன் போட்டார்.
* * * * *
பேர் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, மருத்துவமனைக்குக் கிளம்பிக்கொண்டு இருந்தனர் அம்பிகையும், வைஷ்ணவியும்.
“அம்மா இங்க பாருங்க.” முகம் முழுவதும் பதற்றத்துடன் ஓடி வந்த மகளிடம் என்னவெனக் கேட்டார் அம்பிகை.
“அண்ணி பத்தின விஷயத்தை நியுஸ்பேப்பர்ல் போட்டு இருக்காங்க.”
மகள் சொல்லவும் அதிர்ச்சியுடன் அவள் கையிலிருந்த மொபைலை வாங்கித் திரையைப் பார்த்தார் அம்பிகை.
காயத்ரியின் புகைப்படத்துடன் கூடிய செய்தியை படித்துப் பார்த்துவிட்டு அதிர்ந்து போனார்.
“கடவுளே! இது என்னடி சோதனை? சம்பந்தி காதுக்கு இந்த விஷயம் போனா என்ன ஆகுறது?”
அம்பிகை சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவரின் மொபைல் போன் அடிக்க, படபடக்கும் இதயத்துடன் பையிலிருந்து கைபேசியை வெளியே எடுத்து அழைப்பது யாரென்று பார்த்தார்.
உமாவின் பெயர் திரையில் மின்னியது.
“யாரு அம்மா? அத்தையா?”
பதிலுக்கு ‘ஆம்’ எனத் தலை அசைத்தவர், பச்சை பொத்தானை அழுத்தாமல் திரையை வெறித்துப் பார்த்தபடி நின்றுகொண்டு இருந்தார்.
“அம்மா!” மகள் தொட்டு உலுக்கவும், மூச்சை இழுத்துப்பிடித்தவர், தயக்கத்துடன் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தார்.
எடுத்த எடுப்பிலேயே உமாவிடமிருந்து கோபமாக வந்து விழுந்தது வார்த்தைகள்.
“என்ன நடக்குதுங்க அங்க? நியுஸ்பேப்பர்ல் ஏதேதோ போட்டு இருக்கான்.”
“……..”
“இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்.”
உமா சத்தம் போடவும், குரலை செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தார் அம்பிகை.
“மன்னிச்சிடுங்க சம்பந்தி. நானே உங்க கிட்ட விஷயத்தைச் சொல்லனும்னு தான் நினைச்சேன், அதுக்குள்ள….”
அம்பிகை பேசிக்கொண்டு இருக்கும்போதே இடை புகுந்தார் உமா.
“அப்போ நியுஸ்பேப்பர்ல போட்டு இருக்கிற விஷயம் உண்மைன்னு சொல்ல வரீங்க,”
“……”
“உங்க மருமக ஊருக்கு போயிருக்கான்னு எதுக்குப் பொய் சொன்னீங்க?”
“பொய் சொல்லனும்னு நினைக்கல சம்பந்தி. கிடைச்சிடுவான்னு நினைச்சோம்.”
“நல்லா நினைச்சீங்க போங்க. உங்க மருமக காணாம போன விஷயத்தையும் என்கிட்டே இருந்து மறைச்சிட்டீங்க. அவளுக்கு இப்படி ஒண்ணு நடந்து இருக்கின்றதையும் மறைச்சுட்டீங்க.”
“ஐயோ! மறைக்கணும்னு சத்தியமா நினைக்கல சம்பந்தி. எங்களுக்கே நேத்து தான் விஷயம் தெரியும்.”
“எப்போவோ தெரிஞ்சிட்டு போகுது. இனிமே, உங்க குடும்ப விஷயம் எனக்கு எதுக்கு?”
“சம்பந்தி?!”
“இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுங்க. என் பையனுக்கு வேற இடத்தில பொண்ணு பார்த்துக்கிறேன்.”
“சம்பந்தி தயவு செஞ்சு அப்படிச் சொல்லாதீங்க. நாள மறுநாள் கல்யாணம். பத்திரிகை அடிச்சுச் சொந்தக்காரங்களுக்கு எல்லாம் கொடுத்தாச்சு.”
“அதான் இப்போ ஊருக்கே விஷயம் தெரிஞ்சு போச்சே. இனிமே யாரு கல்யாணத்துக்கு வர போறாங்க?”
“என் பொண்ணோட வாழ்கையைப் பத்தி கொஞ்சம் நினைச்சு பாருங்க சம்பந்தி. ப்ளீஸ்!”
“அதே மாதிரி என் பையனோட வாழ்கையைப் பத்தி நான் நினைக்க வேண்டாமா?”
“வேணும்னா நான் மாப்பிள்ளை கிட்ட பேசி பார்க்கிறேன்.”
“கல்யாணமே வேண்டாம்னு சொல்றேன். அப்புறம் என்ன மாப்பிள்ளை வேண்டி கிடக்கு. போனை வைங்க.”
அழைப்பு துண்டிக்கப்பட, ஸ்தம்பித்தபடி சோபாவில் அமர்ந்தார் அம்பிகை.
“என்னம்மா ஆச்சு? அத்தை என்ன சொன்னாங்க?”
தன்னருகில் மண்டியிட்டுக் கண்களில் எதிர்பார்ப்புடன் கேட்ட மகளின் கன்னத்தை வருடியவர் உடைந்த குரலில் சொன்னார்.
“உன் கல்யாணத்தை நான் இனி எப்படி நடத்த போறேனோ தெரியலையே!”
தாயின் இந்த ஒற்றை வரியில் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொண்ட வைஷு, கண்ணீர் கோர்த்துவிட்ட கண்களுடன், தாயின் மடியில் தலை சாய்ந்து கொண்டாள்.
“பரவாயில்லை விடு அம்மா. என்னைக்கும் நான் உன் பொண்ணாவே இருந்துட்டு போறேன்.”
மகள் கலங்கிய குரலில் சொல்ல, ‘எப்படியாவது உமாவிடம் பேசி அவர் மனதை மாத்த வேண்டும்.’ என மனதுக்குள் முடிவெடுத்துக் கொண்டார் அம்பிகை.
* * * * *
அங்கே ஜெகனின் வீட்டில், தொழில் சம்பந்தமாக வெளியூர் சென்றுவிட்டு, காலை விமானத்தில் அப்பொழுதுதான் வீடு திரும்பியிருந்த ஜெகன், தந்தையைப் பார்ப்பதற்காகப் பெற்றோர் அறைக்கு வந்தான்.
அப்பொழுது உமா, திருமணத்தை நிறுத்தப்போவதாகச் சொல்லிக்கொண்டு இருப்பதைக் கேட்டுவிட்டு, வேகமாக உள்ளே வந்தான்.
“என்ன அம்மா? என்ன நடந்துச்சு? இப்போ எதுக்குக் கல்யாணத்தை நிறுத்த போறேன்னு சொல்லிட்டு இருக்கீங்க?”
மகன் கேட்கவும் செய்தித்தாளை அவன் முன் நீட்டினார் உமா.
“அந்தக் கேவலத்தை நீயே பாரு.”
தாய் நீட்டிய செய்தித்தாளை வாங்கிப் பார்த்தான். பார்த்தவன் அதிர்ந்து போனான்.
‘காயத்ரி அக்காவுக்கு இந்த நிலைமையா?’ கோபம் மனதுக்குள் எரிமலையாய்க் கனன்றது.
அதே வேகத்தோடு அறையை விட்டு வெளியேற போனவனைத் தடுத்து நிறுத்தினார் உமா.
“டேய்! இப்போ எங்க போற?”
“காயத்ரி அக்காவை பார்க்க.”
“இந்தக் கல்யாணமே நடக்கப்போறது இல்லை. அப்புறம் என்ன அக்கா? மொதல்ல உன் ரூமுக்கு போ.”
“இதுக்குதான் கல்யாணம் வேண்டாம்னு சொல்றீங்களா?”
“பின்ன? அவங்க வீட்டு மருமக காணாம போயிருக்கா, அதையும் நம்ம கிட்ட சொல்லல. இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கு. இதையும் சொல்லல, நியுஸ்பேப்பர் பார்த்து தெரிஞ்சுக்க வேண்டியதா போச்சு. எல்லாத்துக்கும் மேல, பேப்பர் வரைக்கும் நியுஸ் வந்த பிறகு எப்படி அந்த வீட்டில பெண்ணெடுக்க முடியும்? அந்த வீட்டில சம்பந்தம் வச்சுக்க எனக்கு விருப்பமில்லை.”
“இதுக்கும் என்னோட கல்யாணத்துக்கும் என்னம்மா சம்பந்தம்?”
“உன்னோட கல்யாணம்னா உன்னோட முடிஞ்சிட போற விஷயம்னு நினைக்குறியா ஜெகன். நம்ம சொந்தக்கறாங்க என்ன நினைப்பாங்க? ரெண்டு குடும்பமும் நாளைக்கு ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து பேசிக்க வேண்டாமா?”
“அப்போ என்னோட விருப்பம் உங்களுக்கு முக்கியமில்லையா?”
“அதுக்காகத்தான் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னேன். ஆனா இனிமே முடியாது.”
“வைஷ்ணவியைத் தவிர வேற யாரையும் நான் கல்யாணம் செய்துக்க மாட்டேன்.”
“அது நான் உயிரோட இருக்கிற வரைக்கும் நடக்காது. அந்தக் குடும்பத்து பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளா வரக்கூடாது.”
“இந்த வீட்டு மருமகளா வேண்டாம். என்னோட பொண்டாட்டியா கூட்டிட்டு வரேன்.”
“ஜெகன்!” கர்ஜித்தார் உமா.
பாலாஜி தான் வேகமாக எழுந்து வந்து மகனை சமாதானம் செய்தார்.
“தம்பி! கோபப்படாத. நான் அம்மாவுக்குப் பேசி புரிய வைக்கிறேன். அது வரைக்கும் நீ கொஞ்சம் பொறுமையா இருப்பா.”
“நாளன்னிக்கி கல்யாணம் அப்பா. இப்போ வந்து இப்படிப் பேசுனா எப்படி?”
“அவங்களுக்குப் போன் பண்ணி, கல்யாணத்தை நிறுத்த சொல்லிட்டேன்.”
உமா விட்டேரியாகச் சொல்ல, அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தான் ஜெகன்.
பின் மடமடவெனக் கிளம்பி வைஷ்ணவியின் வீட்டுக்கு வந்தான்.
* * * * *
“வைஷு! நீ முன்னாடி போ. நான் கோவிலுக்குப் போயிட்டு வரேன்.”
தாய் சொல்லவும், “பத்திரமா வாங்க அம்மா.” என்று சொல்லிவிட்டு பைகளை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்த வைஷ்ணவி, கதவை திறக்க, எதிரில் வேர்த்து வழிந்த முகத்துடன் நின்றிருந்தான் ஜெகன்.
பதில் சொல்லாமல் கலங்கிய கண்களுடன் அவனைப் பார்த்தபடி வைஷ்ணவி நின்றிருக்க, அவளைக் கை பிடித்து ஹாலுக்கு அழைத்து வந்தான் ஜெகன்.
ஜெகனை பார்த்ததும் சோபாவிலிருந்து அவசரமாய் எழுந்து நின்றார் அம்பிகை.
“அக்கா எப்படி இருக்காங்க அத்தை?”
“ஆபத்து எதுவும் இல்லைன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க மாப்பிள்ளை. ஆனா காயத்ரி இன்னும் கண்ணு முழிக்கல.”
ஒரு பெரு மூச்சை வெளியேற்றிவிட்டு, உறுதியான குரலில் பேச்சை தொடர்ந்தான் ஜெகன்.
“அம்மா பேசுன எதையும் மனசில வச்சுக்காதீங்க அத்தை. இந்தக் கல்யாணம் நிச்சயம் நடக்கும், அதுக்கு நான் பொறுப்பு. இப்போ மொதல்ல அக்கா குணமாகி வரட்டும். மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்.”
“தேங்க்ஸ் மாப்பிள்ளை.” அம்பிகையின் குரல் உடைந்து ஒலிக்க, வைஷ்ணவியின் கையிலிருந்த பையை வாங்கிகொண்டான் ஜெகன்.
“சீக்கிரம் வாங்க. இப்போ போய் அக்காவை பார்க்கலாம்.” என்றுவிட்டு அவன் முன்னே நடக்க, பெண்கள் இருவரும் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.
* * * * *
“குட் மார்னிங் சர்!” விறைப்பாகச் சல்யுட் வைத்த ராகவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“நானே உங்களைக் கூப்பிடனும்னு இருந்தேன் ராகவ். உட்காருங்க.”
கமிஷனர் சொல்ல அவருக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
அவன் முன் செய்தித்தாளை நீட்டியபடி கேட்டார் கமிஷனர்.
“சோசியல் மீடியா புல்லா இது தான் இன்னைக்கு நியுஸ். ப்ரெஸ்ஸுக்கு எப்படி நியுஸ் கிடைச்சது?”
“தெரியல சர்.”
“தெரியலைன்னு சொல்லாதீங்க ராகவ். அது யார் என்னன்னு கண்டுபிடிங்க.”
“சியூர் சர். இந்தப் பேப்பர் எடிட்டரை அரெஸ்ட் பண்ண உங்க பெர்மிஷன் வேணும் சர்.”
“முகாந்திரம் இல்லாம எப்படி அரெஸ்ட் பண்ணுவீங்க. அவனுங்க ப்ரெஸ்காரனுங்க வேற. ஒண்ணுமில்லாததை ஊதி ஊதி பெருசாக்கிடுவானுங்க. மொதல்ல விக்டமோட பேமலிகிட்ட இருந்து ரிட்டன் கம்ப்ளெயின்ட் எழுதி வாங்கிட்டு வாங்க.”
“ஓகே சர்.” என்றுவிட்டு விடைபெற்றுக்கொண்டு நேரே மருத்துவமனை வந்தான் ராகவ்.
அதேநேரம் எதிரில் அம்பிகையும், வைஷ்ணவியும் யாரோ ஒரு இளைஞனுடன் நடந்து வருவதைப் பார்த்துவிட்டு அவர்கள் அருகில் சென்றான்.
“வணக்கம் அம்மா.”
“வணக்கம் தம்பி. காலையிலேயே இங்க வந்து இருக்கீங்க?”
அம்பிகை கேட்கவும், அருகில் நின்றிருந்த ஜெகனை கேள்வியாய் பார்த்தான் ராகவ்.
ராகவின் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு பதில் சொன்னார் அம்பிகை.
“இது வைஷ்ணவியைக் கட்டிக்கப்போற மாப்பிள்ளை. அவருக்கும் எல்லா விஷயமும் தெரியும்.”
“வணக்கம் சர்.” ஜெகன் சிநேகமாய்ப் புன்னகைக்க,
பதிலுக்கு, “வணக்கம்.” என்றவன், அம்பிகை பக்கம் திரும்பி, “நியுஸ் பார்த்தீங்களா?” என்றான் தயக்கத்துடன்.
“ம்ம்.” அவர் தலை ஆட்ட,
சில நொடிகள் அங்கே கனத்த அமைதி. பிறகு பேச்சை தொடர்ந்தான் ராகவ்.
“அது சம்பந்தமா உங்க கிட்ட புகார் ஒண்ணு எழுதி வாங்கிட்டுப் போகத் தான் வந்தேன் மா. மேல போகலாம் வாங்க.”
சொல்லிவிட்டு ராகவ் முன்னே செல்ல, அவனைப் பின்தொடர்ந்தனர் மூவரும்.
ஸ்ரீராமிடம் தான் வந்த செய்தியை சொல்லி, புகார் கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு வெளியே வந்தவனை அழைத்தான் ஜெகன்.
“என்ன ஜெகன்?”
“அக்காவுக்கு இப்படிச் செய்தது யாருன்னு தெரிஞ்சுதா சர்?”
இப்படிக் கேட்டவனை ஆச்சரியமாய்த் தான் பார்த்தான் ராகவ். தன் தங்கைக்குக் கிடைத்திருக்கும் உறவுகள் எல்லாம் நல்லவர்களாக இருப்பது அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
“விசாரணை போயிட்டு இருக்கு ஜெகன்.”
“கொஞ்சம் சீக்கிரம் சர். அக்காவுக்கு இப்படிச் செய்தவனுக்குச் சீக்கிரம் தண்டனை கிடைக்கனும்.”
“சியூர்.” என்றுவிட்டு அங்கிருந்து ராகவ் புறப்படவும், ஸ்ரீராமை சந்திக்கச் சென்றான் ஜெகன்.
உமா திருமணத்தை நிறுத்திவிட்ட செய்தி அறிந்து ஜெகனிடம் கோபம் கொண்டான் ஸ்ரீராம்.
“என்ன ஜெகன் இது? கொஞ்சமாச்சும் மனசாட்சியோட தான் பேசுறாங்களா உங்க அம்மா? இப்படி நடந்ததுக்குக் காயத்ரி எப்படிக் காரணமாவா? இதுக்கும் வைஷ்ணவியோட கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்?”
“அண்ணா! அத்தை பேசுனதுக்கு அவர் மேல ஏன் கோபப்படுற?”
ஜெகனுக்கு ஆதரவாய் பேசிய தங்கையை முறைத்தான் ஸ்ரீராம்.
“மாமா! அம்மா பேசுனதுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். எக்காரணம் கொண்டும் இந்தக் கல்யாணம் நிக்காது. அதுக்கு நான் பொறுப்பு. வைஷ்ணவி இல்லாம வேற யாரையும் நான் கல்யாணம் செய்துக்கிறதா இல்லை. இது சத்தியம்.”
உறுதியான குரலில் ஜெகன் சொல்ல, அப்போதைக்கு அமைதியான ஸ்ரீராமுக்கு தங்கையின் எதிர்காலத்தை நினைத்து புதிதாய் ஒரு கவலை முளைத்தது.
இந்நிலையில் மயக்கத்திலிருந்து கண் விழித்தாள் காயத்ரி.

Advertisement