Advertisement

அத்தியாயம் 12
மகனிடம் கையெழுத்து வாங்க சென்ற மகள் இன்னும் திரும்பாதது கண்டு வைஷ்ணவியைத் தேடி அறையை விட்டு வெளியே வந்தார் அம்பிகை. வந்தவர் சற்று தள்ளி தரையில் அமர்ந்து அழுது கொண்டு இருந்த பிள்ளைகளைப் பார்த்துவிட்டு பதற்றத்துடன் அவர்கள் அருகில் ஓடினார்.
“என்ன டா ஸ்ரீராம்? என்ன ஆச்சு? ஏன் அழற?” படபடக்கக் கேட்டவருக்கு, ‘ஒருவேளை காயத்ரியின் உயிருக்கு எதுவும் ஆபத்தோ?’ என்ற பயத்தில் இருதயம் வேகமாகத் துடித்தது.
“டேய்! உன்னைத் தான் கேட்கிறேன். வாயை திறந்து சொல்லு டா!” மகனை அதட்டினார்.
“நம்ம காயத்ரி.. காயத்ரி…. “ அதற்கு மேல் ஸ்ரீராமால் பேச முடியவில்லை. தொண்டை அடைத்தது. தேம்பி தேம்பி அழுதான். வைஷ்ணவி தான் நடந்ததைத் தாயிடம் சொன்னாள்.
“நாம நினைக்கிற மாதிரி அண்ணிக்கு ரோட் ஆக்ஸிடெண்ட இல்லை அம்மா. அண்ணிகிட்ட யாரோ சிலர் தப்பா நடந்து இருக்காங்களாம்மா” என்று சொல்லிவிட்டு வைஷ்ணவி முகத்தை மூடிக்கொண்டு அழ, தன் காதுகளில் விழுந்ததை நம்ப முடியவில்லை அம்பிகையால். மகளைப் பிடித்து உலுக்கினார்.
“என்ன டி உளறல் இது?”
“உண்மையைத் தான்மா சொல்றேன்.”
“யாரு டி சொன்னது அப்படி?” ஆக்ரோஷமாய்க் கத்தினார்.
அம்பிகை கேட்கவும், அவர் முன் வந்து நின்ற ராகவ், “மன்னிக்கனும் அம்மா. டாக்டர் எல்லா டெஸ்ட்டும் எடுத்துட்டு தான் உறுதியா சொல்லி இருக்காங்க.” என்றான் தயக்கமாய்.
“இருக்காது தம்பி. அப்படியெல்லாம் இருக்காது.” என்றபடி தள்ளாடி விழ போனவரை சட்டென்று தாங்கி பிடித்துக் கொண்டான் ராகவ்.
அதிர்ச்சியில் ராகவின் கைப்பிடியில் இருந்து நழுவி, அப்படியே தரையில் அமர்ந்த அம்பிகை, நெற்றியில் அறைந்து கொண்டு அழ அரம்பித்து விட்டார்.
“எம்மருமகளுக்கா இந்த நிலைமை? நான் என்ன பாவம் பண்னேன்? ஐயோ! கடவுள்! இப்போ நான் என்ன பண்ணுவேன்?”
அழும் மூவரையும் பார்த்த ராகவுக்கு இருதயம் கணக்க, தொண்டையில் எதுவோ அடைத்தது. அவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் தவித்தான்.
* * * * *
தூரத்தில் நின்றபடி, நடந்துகொண்டு இருந்த அனைத்தையும் தன் புகைப்படக் கருவியில் படம்பிடித்துக் கொண்ட சிவா, சத்தமெழுப்பாமல் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார்.
“நீ உடனே ஆபீஸ்க்கு போயி இப்போ எடுத்ததை எடிட் பண்ணி வை. மிச்சதை நான் மாயாகிட்ட சொல்லிக்கிறேன்.” தன்னுடன் வந்தவனை அனுப்பிவிட்டு மாயாவிற்குப் போன் போட்டார்.
“அந்தப் பொண்ணோட பேமிலியை பிடிக்க முடியலை சார். நானும் ரொம்ப நேரமா வெயிட் பண்றேன்.” அழைப்பை ஏற்றதும் மாயா சொல்ல,
“அவங்க இப்போ ஹாஸ்பிடல்ல இருக்காங்க மாயா. எடுக்க வேண்டியதை எல்லாம் நான் எடுத்துட்டேன். பையன் கிட்ட எடிட் பண்ணி வைக்கச் சொல்லி. கொடுத்து விட்டு இருக்கேன். நீ கூட இருந்து பார்த்துக்கோ.”
“ஓகே சார்.”
“இன்னைக்கு எப்படியாவது வேலை முடியனும். நாளைக்குக் காலை பிரிண்ட்ல வந்தே ஆகணும்.”
“ஓகே சர்.”
“நம்ம பேப்பரை கை துடைக்கத் தான் லாயக்குன்னு சொல்லிட்டு இருந்தானே அந்த எதிர் கோஷ்டிக்காரன் அவன் முகத்தில கரியை பூசனும், சொல்லிட்டேன்.”
“நிச்சயமா முடிச்சிடலாம் சர். நீங்க கவலைப்படாதீங்க.”
பேசிவிட்டு வைத்த சிவா, பத்திரிகை ஆசிரியரை சந்திக்க அவசரமாகப் புறப்பட்டார்.
அங்கே மாயாவோ, சிவாவிடம் பேசிவிட்டு உடனே புறப்பட்டு அலுவலகம் வந்தவள், சிவாவின் ஆள் வரவும், அவனிடமிருந்து மெமரி கார்டை வாங்கிக்கொண்டு தனது கணினியை உயிர்பித்தாள், இரண்டு பெண்களின் தலையெழுத்தை மாற்றியமைக்க!
* * * * *
அம்பிகை, ஸ்ரீராம் மற்றும் வைஷ்ணவி மூவருக்கும் வெகு நேரம் பிடித்தது தங்களைக் கட்டுப்படுத்தக்கொள்ள. செவிலியர் வந்து அழைக்கவும் ஸ்ரீராமும், ராகவும் மருத்துவரை பார்க்க சென்றுவிட, வைஷ்ணவியின் மொபைல் போன் அடித்தது.
சோர்வுடன் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள்.
“வைஷ்ணவி! நான் பக்கத்து வீட்டுல இருந்து பேசுறேன். காயத்ரியோட பிள்ளைங்க ஸ்கூல்ல இருந்து வந்துட்டு, ரொம்ப நேரமா காலிங் பெல்லை அடிச்சீட்டு இருக்காங்க. நீங்க வீட்டில இல்லையா?”
பக்கத்து வீட்டு பெண்மணி செய்தியை சொல்லவும் தான், அண்ணனின் பிள்ளைகள் நினைவுக்கு வர, குரலை செருமிக்கொண்டு பதில் சொன்னாள் வைஷ்ணவி.
“சாரி ஆண்டி. நாங்க வெளியில இருக்கோம். நாங்க வர வரைக்கும் உங்க வீட்டில பார்த்துக்குறீங்களா பிளீஸ்!”
“இதுக்கு எதுக்குப் பிளீஸ் எல்லாம் போடுற. பார்த்துக்கச் சொன்னா பார்த்துக்கப் போறேன்.”
“தேங்க்ஸ் ஆண்டி.”
“பரவாயில்லை வைஷ்ணவி. ஆமா உன் குரல் என்ன ஒரு மாதிரி இருக்கு? எதுவும் பிரச்சனையா?”
அப்பெண்ணமணி இப்படிக் கேட்கவும் சட்டென்று என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்த வைஷ்ணவி, வாயில் வந்ததை உளறினாள்.
“கொஞ்சம் உடம்பு சரி இல்லை ஆண்டி.”
“கல்யாண பொண்ணு இப்படியா சொல்றது?. உடம்பை பார்த்துக்கோ வைஷு. நான் வைக்கட்டா?”
“சரி ஆண்டி.”
பேசிவிட்டு வைத்த வைஷ்ணவிக்குப் புதிதாய் ஒரு பயம் முளைத்தது.
‘அத்தைக்கு விஷயம் தெரிஞ்சா, இந்தக் கல்யாணம் நடக்குமா?’
“வைஷ்ணவி!.. வைஷ்ணவி!”
தன் நினைவில் மூழ்கி இருந்தவள் தாய் அழைக்கவும், அவர் பக்கம் திரும்பினாள்.
“யார் போன்ல?”
“பக்கத்து வீட்டு ஆண்டி. பிள்ளைங்க ஸ்கூல்ல இருந்து வந்துட்டாங்கலாம். அதான் அவங்க வீட்டில பார்த்துக்கச் சொல்லி இருக்கேன். “
மகள் சொல்லவும் அம்பிக்கைக்குப் பேர பிள்ளைகள் நினைவு வர, மீண்டும் முட்டிக்கொண்டு வந்தது அழுகை.
‘நாளைக்கு அந்தப் புள்ளைங்களுக்கு விஷயம் தெரிஞ்சா என்ன ஆகுமோ? கடவுளே!’ நினைத்தபடி, மனதுக்குள் புழுங்கினார்.
* * * * *
“நீங்க பேசிட்டு இருங்க டாக்டர். அவசரமா ஒரு போன் கால் பண்ணனும்.” என்று பொய் சாக்கு சொல்லிவிட்டு ஸ்ரீராமிற்கும் மருத்துவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு வெளியேறினான் ராகவ்.
“இன்ஸ்பெக்டர் உங்க கிட்ட எல்லா விவரத்தையும் சொல்லி இருப்பார்ன்னு நினைக்கிறேன்!” மருத்துவர் கேட்க ‘ஆம்’ என்பது போலத் தலையை ஆட்டினான் ஸ்ரீராம்.
சிறு தயக்கத்திற்குப் பின் தொடர்ந்தார் மருத்துவர்.
“உங்களுக்கு இது அதிர்ச்சியான விஷயமா இருக்கும். ஆனா அதுக்காகத் தயவு செய்து மனசை தளர விடாதீங்க மிஸ்டர் ஸ்ரீராம். ஒரு ஆக்ஸிடெண்ட் நடந்தா உடம்பில தழும்பு விழற மாதிரி இதுவும் ஒரு ஆக்ஸிடெண்ட், அவ்வளவு தான். இதை நீங்க மனசில புரிஞ்சு வச்சுக்கணும். மத்தபடி ஷீ இஸ் பைன். உங்க மனைவிக்கு உடல் ரீதியா வேற எந்தப் பிரச்சனையும் இல்லை. உங்களுக்குள்ள கணவன் மனைவி உறவில எந்தப் பாதிப்பும் இருக்காது. படிச்சவங்க நீங்க உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன். மத்தபடி, மனசளவில அவங்களை நார்மலா வச்சுக்கிறது உங்களோட பொறுப்பு. தேவைபட்டா சொல்லுங்க, சைக்காலஜி கவுன்சிலிங்குக்கு ஏற்பாடு பண்றோம்.”
“புரியுது டாக்டர்.” சோர்வுடன் சொன்னவன் நிமிர்ந்து, “அவ எப்போ கண்ணு முழிப்பா டாக்டர்?” என்றான் ஒருவித எதிர்பார்ப்போடு.
“கூடிய சீக்கிரத்தில கண் முழுச்சிடுவாங்க ஸ்ரீராம். கோமா ஸ்டேஜூக்கு எல்லாம் போகலை. பயப்பட வேண்டாம்.”
“தேங்க்ஸ் டாக்டர்.” என்றவன், மருத்துவரிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தான்.
அதேநேரம் அவனை நோக்கி வந்த ராகவ், “கேஸ் விஷயமா அவசரமா போக வேண்டி இருக்கு ஸ்ரீராம், பார்த்துக்கோங்க” என்றவன் ஆறுதலாய் அவன் தோள் தட்டி, “வேற எதுவும் சீரியஸா ஆகாம, நல்ல படியாய் கிடைச்சிட்டாங்களேன்னு நினைச்சுக்கோங்க.” என்றான் ஆதரவாய்.
பதிலுக்கு, ‘சரி’ என்பது போலத் தலை ஆட்டினான் ஸ்ரீராம்.
அவனை வேதனையுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றான் ராகவ்.
அன்று மாலை வரை மருத்துவமனையில் இருந்துவிட்டு அம்பிகையும் வைஷ்ணவியும் வீட்டிற்குக் கிளம்பி சென்றுவிட, காயத்ரிக்குத் துணையாக மருத்துவமனையில் தங்கி கொண்டான் ஸ்ரீராம்.
கண்ணீரும் வேதனையுமாக அந்த இரவு கழிந்தது மூவருக்கும்.
* * * * *
“தங்கம்! ஐயாவுக்குக் காப்பிக் கொடுத்துட்டியா?” என்றபடி மாடி படிகளில் இறங்கி வந்தார் உமா.
“ஐயாவுக்கும் தம்பிக்கும் காப்பிக் கொடுத்துடேன் அம்மா. உங்களுக்குக் காபியும், நியூஸ் பேப்பரையும் டேபிள்ல எடுத்து வச்சு இருக்கேன்.”
“சரி! நீ போய் வேலையைப் பாரு.” உத்தரவை கொடுத்துவிட்டு வந்து சோபாவில் அமர்ந்தார் உமா.
வேலைக்காரி வைத்துவிட்டு போன காபியை ஒரு மடக்கு குடித்துவிட்டு செய்தித்தாளை பிரித்தார். பிரித்தவரின் கண்கள் முதல் பக்கத்தில் வந்திருந்த செய்தியை பார்த்துவிட்டு ஸ்தம்பித்து நின்றது.
‘பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிருக்குப் போராட்டம். சென்னையில் நடந்துள்ள அதிர்ச்சி சம்பவம்.’
என்ற செய்தி அச்சடிக்கப்பட்டிருக்க, அதற்குக் கீழே காயத்ரியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இடம் பெற்றிருந்தது.
அதிர்ந்து போனவராய், கண்ணாடியை மாட்டிக்கொண்டு உன்னிப்பாகப் படித்தார்.
‘சென்னை புறநகர் பகுதியை சேர்ந்த காயத்ரி என்ற முப்பதியாறு வயது மதிப்புள்ள திருமணமான பெண் மர்ம நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நடு ரோட்டில் வீசப்பட்டுள்ளார். தற்பொழுது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கிறார். இவர் இரண்டு குழந்தைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.’
மட்டரகக் காகிதத்தில் மட்டரகமாய்ச் செய்தி வெளியாகி இருந்தது.
‘காயத்ரி! அதே பேர் தான். நம்ம பையனுக்குப் பொண்ணு பார்த்து இருக்கிற வீட்டு மருமக.’
அதிர்ந்து போனார் உமா. செய்தித்தாளை எடுத்துக்கொண்டு கணவனின் அறை நோக்கி வேகமாய் மாடி ஏறினார்.
* * * * *
போன் விடாமல் அடித்துக்கொண்டு இருக்க, குளித்துக்கொண்டு இருந்த ராகவ், துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு வேகமாய் ஹாலுக்கு ஓடி வந்தவன் அதே வேகத்தோடு அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தான்.
“என்ன அண்ணே? என்ன விஷயம்? காலங்ககாத்தால போன் செஞ்சு இருக்கீங்க?”
“தம்பி ஒரு பெரிய பிரச்சனை?”
“என்ன அண்ணே?’
“அந்தக் காயத்ரி பொண்ணு பத்தின செய்தி பேப்பர்ல வந்து இருக்கு.”
அதிர்ந்து போனான் ராகவ்.
“என்ன அண்ணே சொல்றீங்க?”
“ஆமா தம்பி! இன்னைக்குப் பேப்பரை பாருங்க. அந்தப் பொண்ணோட போட்டோவை வேற போட்டு இருக்காணுங்க பாவி பசங்க.”
அந்தப்பக்கம் அவர் பேசிக்கொண்டு இருக்கும்போதே, அழைப்பை துண்டித்து விட்டு வேகமாய் ஹாலுக்கு ஓடி வந்தவன், வாசல் கதவு அருகே கீழே கிடந்த செய்தித்தாளை எடுத்து அவசரமாய் விரித்தான்.
‘பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிருக்குப் போராட்டம். சென்னையில் நடந்துள்ள அதிர்ச்சி சம்பவம்.’
காயத்ரியின் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் கூடிய செய்தி இடம்பெற்றிருந்தது.
செய்தியை படித்துவிட்டு அதிர்ந்து போனான் ராகவ்.
காக்கி உடையை அவசரமாய் மாட்டியபடி, சம்பந்தப்பட்ட அந்தப் பத்திரிகை அலுவலகத்துக்குப் போன் போட்டான். பெல் அடித்துக்கொண்டு இருந்ததே தவிர, அழைப்பு எடுக்கப்படவில்லை.
கோபத்துடன் கைப்பேசியைச் சோபாவில் விசிறி அடித்தவன், வேகவேகமாய் ஆடையை மாட்டிக்கொண்டு செய்தித்தாளை கையில் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறியவன் நேரே சென்று நின்றது பத்திரிகை அலுவலகத்தில் தான்.
“எடிட்டர் ரூம் எது?”
காக்கி சட்டையில் கோபத்துடன் ராகவ் வந்து கேட்கவும் பயந்து போன வரவேற்பு பெண், உள் பக்கம் கை காட்ட, புயலென உள்ளே நுழைந்தான்.
சலசலவெனச் சத்தத்துடன் மும்முரமாய்ச் செயல்பட்டுக்கொண்டு இருந்தது பத்திரிகை அலுவலகம்.
“இங்க எடிட்டர் யாரு?” நடு ஹாலில் நின்றபடி கத்தினான்.
ஆனால் பதில் வரவில்லை.
“இங்க எடிட்டர் யாரு?” அந்தத் தளமே அதிரும்படி கர்ஜித்தான் ராகவ்.
பயந்துகொண்டு அவன் அருகில் வந்தான் ஓர் ஊழியன்.
“சர்! எடிட்டர் இன்னும் வரல.”
“அப்போ சப் எடிட்டர் யாரு?”
“நான் தான். யார் வேணும் உங்களுக்கு?”
பின்பக்கம் சிவனின் குரல் கேட்க, கோபமாய்த் திரும்பியவன், தன் கையில் இருந்த செய்தித்தாளை அவர் முன் நீட்டி, “இந்த நியூஸ யார் பப்ளிஷ் பண்ணது?” என்றான் அடக்கபட்ட கோபத்துடன்.
ராகவ் நீட்டிய செய்தித்தாளை வாங்கிப் பார்த்துவிட்டு தெனாவட்டாய் பதில் சொன்னான் சிவா.
“ஏன்? நான் தான்.’
சிவா சொல்லி முடிக்கவில்லை, அவன் கன்னத்தில் இடியாய் இறங்கியது ராகவின் உள்ளங்கை.
ராகவ் அடித்த வேகத்தில் இரண்டடி பின்னால் போன சிவா, எப்படியோ தன்னைச் சமாளித்துக்கொண்டு நின்றார்.
“இப்போ எதுக்குச் சர் அடிக்கிறீங்க?” அடி வாங்கிய பயம் கொஞ்சம் கூட இல்லாமல் சிவா கேட்கவும், அவனை நோக்கி பாய்ந்தான் ராகவ். அதற்குள் ஒருவன் இருவருக்கும் இடையில் வந்து நின்று கொண்டு ராகவை இழுத்துப் பிடித்தான்.
“சர் பிளீஸ்! அடிதடி வேண்டாம். எதுவா இருந்தாலும் நேரடியா கேளுங்க சர்.”
ஆனால் ராகவின் கோபம் சற்றும் குறையவில்லை. தன்னைப் பிடித்திருந்தவனின் பிடியில் இருந்து திமிறியபடி சிவாவை நோக்கி ஆக்ரோஷமாய்க் கத்தினான்.
“யாரை கேட்டு இந்த நியூஸ போட்ட? எந்த நியூஸ் கிடைச்சாலும் போட்டுடுவியா? போலீஸ்ல வெரிபை பண்ண மாட்டியா?” மரியாதை பறந்திருந்தது அவன் வார்த்தைகளில்.
“நியூஸ் உண்மைன்றதுக்கு என்கிட்ட ஆதாரம் இருக்கு சர்.” பதிலுக்கு எகிறினான் சிவா.
“எங்க எடுத்து வந்து காட்டு?”
“அதெல்லாம் முடியாது சர். காண்பிடென்ஷியல் பைல் அது.”
“உன்னோட ரகசியம் உனக்கு முக்கியம். ஆனா பாதிக்கப்பட்டவங்க ரகசியத்தைக் காத்துல பறக்கவிட்டுடுவ, அப்படித்தானே?”
சிவா பதில் சொல்லாமல் மவுனமாய் நிற்க, “விக்டமோட போட்டோவையும் அவங்களைப் பத்தின விவரத்தையும் போடக்கூடாது. அது சட்டபடி குற்றம். உனக்குத் தெரியுமா தெரியாதா?”
இப்பொழுதும் பதில் சொல்லவில்லை சிவா. ஆனால் அவன் பார்வை, ‘அதெல்லாம் தெரியும், இப்போ அதுக்கு என்ன?’ என்ற செய்தியை தாங்கி இருக்க, வெறி ஏறியது ராகவுக்கு.
“உன்னை வந்து வச்சுக்கிறேன். இரு!” என்று பற்களைக் கடித்தபடி அழுத்ததுடன் சொன்னவன், சிவாவை முறைத்துவிட்டு வேகமாய் வெளியேறினான்.
மனம் முழுவதும் கோபதில் கழன்று கொண்டு இருந்தது. விட்டால் துப்பாக்கியை எடுத்து சிவாவை சுட்டிருப்பான். ஆனால் காக்கி சட்டை அவனைத் தடுத்துவிட்டது.
பத்திரிகை அலுவலகத்தை விட்டு வெளியேறியவன் நேரே கமிஷனர் முன் போய் நின்றான்.
இதற்கிடையில், செய்தித்தாளில் வந்துள்ள செய்தி போட்டோ எடுக்கப்பட்டு, காட்டுதீயாய் பரவ, சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிளும் பரவியது.
இந்நிலையில் உமாவிடமிருந்து அம்பிகைகக்கு போன் வந்தது.

Advertisement