Advertisement

அத்தியாயம் 11
கான்ஸ்டபிள் மாணிக்கம் கொடுத்த காயத்ரியின் தகவல்களைத் தனக்குத் தெரிந்த காவல்துறை நண்பருக்கு அனுப்பி, அவளின் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரங்களையும், அவளின் வீட்டு முகவரியையும் பெற்றுக்கொண்ட சிவா, உடனே மாயாவை தொலைபேசியில் அழைத்தார்.
“சொல்லுங்க சர்.”
“விஷயத்தைக் கறந்துட்டேன் மாயா.”
“சிவா சாரனா சும்மாவா! எலி நுழைய முடியாத இடத்தில கூட நீங்க நுழைஞ்சுடு வீங்களே!”
மாயா புகழ்ந்து பேச, சிரித்துக்கொண்டார் சிவன்.
“அப்படி என்ன கேசை சர், போலீஸ்காரங்க ரகசியமா வச்சு இருக்காங்க?”
“கேங் ரேப் கேஸ். ஆனா நியுஸ் இன்னும் யாருக்கும் தெரியாது. அந்தப் பொண்ணோட வீட்டு அட்ரெஸ உனக்கு வாட்சப் பண்றேன். நீ அங்க போ. யாருக்கும் தெரியாம அந்தக் குடும்பத்தைப் படம்பிடி. நான் அந்தப் பொண்ணோட ஏரியால இருக்கிற போலீஸ் ஸ்டேஷனுக்குப் போறேன்.”
“சர், அவங்க குடும்பத்தைப் பேட்டி எடுக்கணுமா?”
“இப்போதைக்கு வேண்டாம். மாணிக்கம் சொல்றதைப் பார்த்தா, அந்தப் பொண்ணோட புருஷனுக்குக் கூட விஷயம் தெரியாதுன்னு நினைக்கிறன்.”
“ஓகே சர். அப்போ நான் உடனே புறப்படுறேன்.”
“ஓகே.”
பேசிவிட்டு வைத்த சிவா, தன் உதவியாளர் ஒருவனை வர செய்து அவனுடன் ராகவ் பணி புரியும் காவல் நிலையத்துக்குச் சென்றவர், காரில் அமர்ந்தபடி ஸ்ரீராமின் வருகைக்காகக் கேமராவுடன் காத்திருந்தார்.
அதேநேரம் அங்கே காயத்ரியின் வீடு இருக்கும் பகுதிக்கு சென்ற மாயா, சற்றுத்தள்ளி நின்றபடி அவள் வீட்டின் நடவடிக்கைகளைப் படம்பிடிக்கக் காத்திருந்தாள்.
* * * * *
கைபேசி அடிக்க, வேகமாக அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தான் ஸ்ரீராம்.
“மிஸ்டர் ஸ்ரீராம், நான் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ராகவ் பேசுறேன்.”
“காயத்ரி கிடைச்சிட்டாளா சர்?”
“பதற்றபடாம நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க ஸ்ரீராம்.”
“சொல்லுங்க சர்.”
“உங்க மனைவி கிடைச்சிட்டாங்க. அது சம்பந்தமா உங்ககிட்ட பேசணும். கொஞ்சம் ஸ்டேஷன் வரை வரீங்களா?”
“இதோ உடனே வரேன் சர்.” என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டு உற்சாகத்துடன் கத்தினான்.
“அம்மா! அம்மா! ஓடி வா.”
மகனின் குரலை கேட்டுவிட்டு ஹாலுக்கு ஓடி வந்தார் அம்பிகை. கூடவே வைஷ்ணவியும்.
“என்ன டா? காயத்ரி பத்தி எதுவும் தகவல் கிடைச்சுதா?”
“காயத்ரி கிடைச்சிட்டாளாமா. ஸ்டேஷன் வர சொல்லி இன்ஸ்பெக்டர் போன் பண்ணார்.”
“என்ன அண்ணா சொல்ற? தேங் காட்!”
“நிஜம்மாவாடா?” அம்பிகை கேட்க, வேகமாய்த் தலை ஆட்டினான் ஸ்ரீராம்.
“நேரா வீட்டுக்கு கூட்டிட்டு வர வேண்டியது தான டா, எதுக்கு ஸ்டேஷன் வர சொல்றாங்க?”
“ஏதாவது பார்மாலிட்டியா இருக்கும்மா. நான் உடனே கிளம்புறேன்.”
“இரு டா நாங்களும் வரோம். காயத்ரி ரொம்பவே பயந்து போயிருப்பா. எங்களைப் பார்த்தா கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.”
“நீங்க சொல்றதும் சரி தாம்மா. பிள்ளைங்க எப்போ ஸ்கூல்ல இருந்து வருவாங்க.”
“இன்னும் நேரம் இருக்கு டா. நாம அதுக்குள்ள காயத்ரியை கூட்டிட்டு வந்துடலாம்.”
அம்பிகை சந்தோஷத்துடன் சொல்ல, வீட்டை பூட்டிக்கொண்டு மூவரும் புறப்பட்டுக் காவல்நிலையம் வந்து சேர்ந்தனர்.
வந்தவர்கள், காவல்நிலையத்துக்குள் நுழைந்ததும் காயத்ரி எங்கே என்று தேடினர். ஆனால் அவளைக் காணவில்லை.
உடனே ஸ்ரீராம் கான்ஸ்டபிள் ஒருவரை அணுகி, விவரத்தை சொல்ல, அவர் ராகவிடம் வந்து விவரத்தை சொன்னார்.
“சர், அந்தப் பொண்ணோட வீட்டுக்காரர் வந்து இருக்கார்.”
“கான்ஸ்டபிள் கேஸ் விஷயமா நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன். அந்த ரெட்டை கொலை கேஸ் சம்பந்தமா யாராவது வந்தாங்கன்னா, எஸ்ஐயை பார்த்துக்கச் சொல்லுங்க.”
“சரிங்க சர்.’
கான்ஸ்டபிள் சொல்லவும், தொப்பியை எடுத்து மாட்டிக்கொண்டு, அறையை விட்டு வெளியே வந்த ராகவ், ஸ்ரீராமுடன் அம்பிகையும், வைஷ்ணவியும் நின்றுகொண்டு இருப்பதைப் பார்த்துவிட்டு, தயங்கி நின்றான். ஸ்ரீராமிடமே விஷயத்தை எப்படிச் சொல்வது என்று நினைத்துக்கொண்டு இருக்கையில் பெண்கள் இருவரும் வருவார்கள் என்று இவன் எதிர்பார்க்கவில்லை.
சங்கடத்துடன் அவர்கள் அருகில் வந்தான்.
“காயத்ரி எங்க தம்பி?” ஆர்வமாய்க் கேட்டார் அம்பிகை.
“அது…அதுவந்து மா, அவங்களுக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட். ஹாஸ்பிடல்ல அட்மிட் செஞ்சு இருக்காங்க.” என்று மென்று முழுங்கினான் வார்த்தைகளை.
ராகவ் சொல்லவும் அதிர்ச்சி அடைந்தனர் அனைவரும்.
“ஆக்ஸிடென்ட்டா? என்ன சொல்றீங்க இன்ஸ்பெக்டர்?’
“என் கூட ஜிஎச் வாங்க ஸ்ரீராம், சொல்றேன்.” என்று சொல்லிவிட்டு ராகவ் வேகமாக முன்னே சென்றுவிட, குழப்பத்துடன் அவனைப் பின் தொடர்ந்தனர் மூவரும்.
காவல்துறை வாகனத்தில் ராகவ் முன்னே செல்ல அவனைப் பின்தொடர்ந்தது ஸ்ரீராமின் கார்.
நடந்து முடிந்த அனைத்தையும் தன் உதவியாளன் மூலம் கேமராவில் படம் பிடித்துக்கொண்ட சிவா, அவர்களைப் பின்தொடர்ந்து ஜிஎச் மருத்துவமனைக்குச் சென்றார்.
சாலை விபத்து, உடல்நோவு, உடல் வலி, எனப் பல்வேறு விதமான நோயாளிகள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்க, அவர்களை எல்லாம் ஒரு பார்வை பார்த்தபடி கடந்து சென்ற அம்பிகையும், வைஷ்ணவியும், ராகவ் ஐசியு வார்டில் இருந்த ஒரு அறைக்குள் செல்லவும் அவனைப் பின்தொடர்ந்து உள்ளே சென்றனர்.
காயத்ரி படுத்திருந்த படுக்கைக்கு அருகில் வந்ததும், ஸ்ரீராம் பக்கம் திரும்பினான் ராகவ்.
“அவங்களுக்குச் சுயநினைவு இன்னும் திரும்பல. சத்தம் போடாம பாருங்க. நான் போய் டாக்டரை பார்த்துட்டு வரேன்.” என்றுவிட்டு அவன் வெளியேறிட, அம்பிகையும், வைஷ்ணவியும் பொங்கி வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு காயத்ரியை நெருங்கி அவளின் முகத்தைக் கவலையுடன் பார்த்தனர்.
“என்ன டா இது? காயத்ரி இப்படி அடிபட்டு படுத்து இருக்கா? பாக்கவே முடியல டா!” அழுகையுடன் அம்பிகை மகனிடம் சொல்ல, வைஷ்ணவியோ அழ தொடங்கி விட்டாள்.
இருவரையும் ஸ்ரீராம் தான் அமைதிப்படுத்தினான்.
“சத்தம் போட வேண்டாம்மா. மத்த பேஷண்ட்ஸ் இருக்காங்க.”
ஆனால் அம்பிகை மகனின் பேச்சுக்குச் சமாதானம் ஆகவில்லை. கோபத்துடன் கத்தினார்.
“எப்படி டா அழாம இருக்க முடியும்? அவளைப் பாரு! உடம்பெல்லாம் எப்படிக் காயமா இருக்கு. நினைவு வேற இல்லை. என்ன ஆச்சோ? எந்தப் பாவி பய இப்படி ஆக்சிடென்ட் பண்ணானோ?!”
தாயின் கேள்விகளுக்கு ஸ்ரீராமால் பதில் சொல்ல முடியவில்லை. மனைவியின் முகத்தைத் திரும்பி பார்த்தான், வேதனையுடன்.
அந்தநேரம் ராகவுடன் மருத்துவரும் செவிலியரும் அங்கு வர, பெண்கள் இருவரும் தங்கள் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டனர்.
வரும்போதே ராகவ் சொல்லி விட்டதால், எதுவும் சொல்லாமல் காயத்ரியை பரிசோதிப்பதில் தன் கவனத்தைச் செலுத்தினார் மருத்துவர்.
சிறிது நேரம் அங்கே நின்றபடி தங்கையைக் கவலையுடன் பார்த்த ராகவ், பின் ஸ்ரீராம் பக்கம் நெருங்கி, “கொஞ்சம் வெளிய வரீங்களா ஸ்ரீராம், உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.” என்றான் கிசுகிசுப்பாய்.
‘இதற்கு மேல் பேச என்ன இருக்கிறது?’ எனக் குழப்பத்துடன் ராகவை பார்த்த ஸ்ரீராம், அவனைப் பின்தொடர்ந்து அறையை விட்டு வெளியே வந்தான்.
“என்ன இன்ஸ்பெக்டர் பேசணும்? காயத்ரிக்கு எதுவும் சீரியசா…..?” ஸ்ரீராம் வார்த்தைகளை இழுக்க,
எப்படிச் சொல்வது என்ற வெகு நேர தயக்கத்திற்குப் பிறகு, விஷயத்தை மெல்ல சொன்னான் ராகவ்.
“நீங்க நினைக்கிற மாதிரி உங்க மனைவிக்கு ரோட் ஆக்சிடென்ட் எதுவும் நடக்கலை.”
“பின்ன?”
“அவங்களை யாரோ சிலர் ரே….ரேப் செஞ்சு இருக்காங்க.”
ஒரு நிமிடம் ராகவ் சொன்னது ஸ்ரீராமுக்கு புரியவில்லை.
“என்ன சொல்றீங்க இன்ஸ்பெக்டர்? எனக்குப் புரியல.”
“உங்க வைப் காயத்ரி ஒரு ரேப் விக்டம்.”
ராகவ் சொல்ல வருவது புரியவே ஸ்ரீராமுக்கு சில நிமிடங்கள் பிடித்தது. அடுத்த நொடி ஸ்தம்பித்து நின்று விட்டான். வாயிலிருந்து வார்த்தைகளே வர வில்லை. ராகவின் முகத்தை வெறித்துப் பார்த்தான்.
‘இருக்காது இப்படி நடந்திருக்காது. எங்கோ செய்திகளில் படித்த கொடூரமான நிகழ்வு எப்படி என் வீட்டில்? இருக்காது காவல்துறை ஏதோ தவறாகப் புரிந்திருகிறது.’ மனதுக்குள் பட்டிமன்றம் நடத்தியவன், அதையே ராகவிடம் கேட்டான்.
“இருக்காது இன்ஸ்பெக்டர். அப்படி நடந்து இருக்காது. காயத்ரி ரொம்பத் தைரியசாலியான பொண்ணு. என் தங்கைக்கே எத்தனை டிப்ஸ் அட்வைஸ் செய்திருக்கா, அவளுக்குப் போய் அப்படி நடந்து இருக்காது. நீங்க ஏதோ தப்பா….”
தன்பாட்டில் பேசிக்கொண்டே போனவனைத் தோள் தொட்டு அமைதிப்படுத்தினான் ராகவ்.
“ப்ளீஸ் ஸ்ரீராம். கண்ட்ரோல் யுவர்செல்ப்.”
“ஐயம் பைன் இன்ஸ்பெக்டர். ஆனா நீங்க சொல்றது உண்மையில்லை. காயத்ரி மயக்கமா இருக்கும்போது அவளுக்கு இதுதான் நடந்துச்சுன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?”
அதிர்ச்சியில் ஏதேதோ பேசினான்.
“டாக்டர்ஸ் டெஸ்ட் செஞ்சுட்டு தான் சொன்னாங்க ஸ்ரீராம்.”
அழுத்தமாய் ராகவ் சொல்ல, என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஸ்ரீராம் நிற்க, அப்பொழுது கைபேசி கீழே விழுந்து நொறுங்கும் சத்தம் கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தனர்.
பார்த்தவர்கள் அதிர்ந்து போயினர்.
ஏனெனில் தூரத்தில் இவர்களையே பார்த்தபடி, நிலைத்துப்போன விழிகளுடன் வைஷ்ணவி நின்றுகொண்டு இருந்தாள்.
செவிலியர் ஏதோ படிவத்தில் ஸ்ரீராமின் கையெழுத்தை வாங்கி வர சொல்லியிருக்க, அதற்காக அண்ணனை தேடி அறையை விட்டு வெளியே வந்தவள், ஆண்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்ததைக் கேட்டுவிட்டாள்.
மனைவிக்கு இப்படி ஆகி விட்டதே என்ற அதிர்ச்சி ஒரு பக்கமென்றால் தங்கைக்கு உண்மை தெரிந்துவிட்டதே என்ற விரக்தி ஒரு பக்கம் என நிலைகுலைந்து போனான் ஸ்ரீராம். நின்ற இடத்திலிருந்து பின்னோக்கி நகர்ந்தவன் சுவற்றில் மோதி, அப்படியே தொப்பென்று தரையில் அமர்ந்து தலையைக் கைகளால் தாங்கிப்பிடித்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தான்.
வைஷ்ணவிக்கோ, தான் கேட்ட அதிர்ச்சியில் தலையில் இடி விழுந்தது போல இருக்க, அப்படியே இரண்டாக மடிந்து அமர்ந்தவளுக்குக் காதுகளில் விழுந்த விஷயத்தை ஜீரணிக்கவே முடியவில்லை.
தூரத்தில் தரையில் அமர்ந்திருந்த அண்ணனை வெறித்துப் பார்த்தாள்.
ராகவுக்குத் தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஸ்ரீராமை எழுப்ப முயற்சித்தான், முடியாமல் போகவே, வைஷ்ணவி அருகில் சென்றவன் அவளைக் கைப்பிடித்துத் தூக்கினான்.
அப்பொழுதுதான் சுயநினைவுக்கு வந்தவள், ராகவிடம் கண்ணீருடன் கெஞ்ச ஆரம்பித்தாள்.
“நீங்க சொல்றது உண்மையில்லைன்னு சொல்லுங்க இன்ஸ்பெக்டர். எங்க அண்ணிக்கு அப்படி எல்லாம் எதுவும் நடக்கலைன்னு சொல்லுங்க!. எங்க அண்ணி ரொம்ப நல்லவங்க. அவங்க இதுவரைக்கும் யாரையும் ஒரு வார்த்தை தப்பா பேசினதில்லை. யாருக்கும் கெடுதல் செஞ்சது இல்லை. அவங்களுக்குப் போய் இப்படி…..இருக்காது இன்ஸ்பெக்டர். நீங்க பொய் சொல்றீங்க.”
“வைஷ்ணவி ப்ளீஸ்! உங்க அண்ணிக்கு மட்டுமில்லை வேற யாருக்குமே இப்படி நடக்கக் கூடாதுன்னு தான் நாங்க தினம் தினம் நினைக்கிறோம். ஆனா….” இடைவெளி விட்டவன், “தயவு செஞ்சு உங்க அண்ணாவை பாருங்க. அவருக்கு நீங்க தான் சப்போர்ட்டிவா இருக்கணும்.” என்றான் அழுத்தமாய்.
ராகவ் சொல்லவும், அவன் பிடியிலிருந்து திமிறி அண்ணனிடம் ஓடியவள், அவனைப் போட்டு உலுக்கினாள்.
“என்ன அண்ணா இதெல்லாம்? இன்ஸ்பெக்டர் சொல்றதெல்லாம் உண்மையா? இல்லைன்னு சொல்லு! அண்ணிக்கு எதுவும் ஆகலைன்னு சொல்லேன். ப்ளீஸ்!”
கதறி அழும் தங்கையைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்ட ஸ்ரீராமுக்கு கண்களிலிருந்து நிற்காமல் வழிந்தது கண்ணீர்.
‘இந்த நொடி இந்த உலகம் அழிந்து விடக்கூடாதா?’ வேதனையுடன் கண்களை இறுக மூடிக்கொண்டான் ஸ்ரீராம்.
இப்படி ஒரு நிகழ்வு மட்டும் நம் வீட்டுப் பெண்களுக்கு எப்பொழுதும் நடந்துவிடக் கூடாதென்று ஒவ்வொரு குடும்பமும் வேண்டிக்கொள்கிறது. ஆனால் ஒவ்வொரு பதினைந்து நிமிடத்துக்கு ஒரு முறையும் ஒரு பெண் வன்புணர்வு செய்யப்படுவதாக ஆய்வறிக்கை சொல்கிறது.
அப்பொழுது ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும், இங்கே ஒரு குடும்பம் கண்ணீர் சிந்திக்கொண்டு இருக்கிறது என்பதை என்ன சொல்வது?
திருமணமாகாத ஒரு பெண்ணிற்கு இப்படி ஒரு கொடுமை நடந்தாலே அதன் பின்விளைவுகள் நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது. அப்படி இருக்கையில் திருமணமான, இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான ஒரு பெண்ணிற்கு இப்படி ஒன்று நடந்தால், அதன் விளைவுகளின் வீரியம் என்ன வென்று நமக்குச் சொல்லப்பட்டு இருக்கிறதா?
திருமணமாகாத பெண் பாதிக்கப்படும்போது அவளுக்கு ஆறுதலாக இருக்கவும், அவளை ஏற்றுக்கொள்ளவும் அவளின் குடும்பமும், நண்பர்களும் இருக்கின்றனர். #justicefor_____ என்று அவளுக்காகக் குரல் கொடுக்கவும், அவள் சார்பாய் நீதி கேட்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது.
ஆனால் திருமணமான பெண்ணின் நிலைமையோ இப்படி இல்லை. புகுந்த வீடும் புறக்கணிக்க, பிறந்த வீடும் ஏற்றுக்கொள்ளத் தயங்க, முடிவில் அவள் ஒரு பெரும் சுமையாகி போய், இரண்டு வீட்டுக்கும் நடுவில் பந்தாடப்படுகிறாள். மேலும் அவளின் நிலையால் அவளின் பிள்ளைகளின் எதிர்காலமும் தர்மசங்கடத்துக்குள் தள்ளப்பட, அவளின் குடும்பக் கட்டமைப்பே உடைந்து போகும் அபாயத்துக்குத் தள்ளப்படுகிறது.
இங்கே காயத்திரிக்கு என்ன மாதிரி ஒரு நிலைமை ஏற்படப் போகிறது என்பதை அடுத்து வரும் அத்தியாயங்களில் பொறுத்திருந்து பாப்போம்.

Advertisement