Advertisement

அத்தியாயம் 1
கதிரவனின் செங்கதிர்கள் பூமியின் இருளை விரட்டியடிக்க முயன்றுகொண்டு இருக்க, அவ்வெளிச்சம் தன் முகத்தில் படரவும், தூக்கத்தில் இருந்து மெல்ல கண் விழித்தாள் காயத்ரி.
அவள் விழிகளுக்குப் பரிசாய் அமைந்தது, மகள் ஸ்வாத்தியின் கள்ளம் கபடமில்லா மழலை முகம். தாயை கட்டிப்பிடித்துக்கொண்டு திறந்திருந்த வாயில் கட்டை விரலை வைத்தபடி அயர்ந்து உறங்கிக்கொண்டு இருந்தாள் சின்னவள். ஐந்து வயதாகியும் அவளுடைய இந்தப் பழக்கம் மட்டும் இன்னும் மறைந்தபாடில்லை.
மகளின் அழகில் தன்னைத் தொலைத்த காயத்ரி, அவள் கேசத்தைச் சரி செய்து, நெற்றியில் முத்தமொன்றை வைத்தாள். நிமிர்ந்தவளின் பார்வை கணவன் ஸ்ரீராமின் மேல் விழுந்தது. அவன் முகத்தை ஆராய்ந்தாள். அழுத்தமான உதடுகள் இன்னும் அழுத்தமாய் மூடியிருக்க, புருவங்கள் லேசாகச் சுருங்கி இருந்தது. திருமணமான இந்தப் பன்னிரண்டு வருடமும் அவன் உறங்குவது இப்படித்தான்.
‘கனவு எதுவும் கண்டுட்டு இருக்காரா? அதுலேயும் அந்தச் சிடுசிடு மனேஜர் வந்து இருப்பார் போல, அதான் முகம் இப்படிச் சீரியஸா இருக்கு.’ மனதுக்குள் நினைத்தவள் தன்னை மறந்து சிரித்து விட்டாள்.
இவளின் சிரிப்புச் சத்தம் கேட்டு ஸ்ரீராம் லேசாக அசையவும், வாயை இறுக மூடியவள், எழுந்து குளிக்கச் சென்றாள்.
அன்றைய தினம் பிள்ளையார் சதுர்த்தி என்பதால் மற்ற நாள்களை விட இரண்டு மடங்கு வேலை இருக்கும், எனவே எழுந்ததுமே சுருசுருப்பாக வேலையை ஆரம்பித்துவிட்டாள் காயத்ரி.
காலை கடன்களை முடித்து, குளித்துவிட்டு வந்தவள், வாசல் தெளித்துச் சிறிய அளவில் கலர் கோலம் ஒன்றை போட்டு அதன் கீழே பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள் என்று கோலமாவில் எழுதியவள், கேட்டில் கட்டப்பட்டிருந்த பையிலிருந்து பால் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றாள்.
பால் குக்கரில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துவிட்டு, இரவு முழுவதும் ஊற வைத்திருந்த வெள்ளை சுண்டலை மற்றொரு அடுப்பில் வேக வைத்தாள்.
சிறிது நேரத்தில் பால் குக்கரில் விசில் வரவும், காபி போட்டு எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வர, அதே நேரம் மற்றொரு படுக்கை அறையிலிருந்து எழுந்து வந்தார் காயத்ரியின் மாமியார் அம்பிகை.
“இந்தாங்க அத்தை காபீ!”
“கொண்டாம்மா.” மருமகள் கொடுத்த டம்ப்ளரை வாங்கிகொண்டு சோபாவில் அமர்ந்தார்.
“வைஷு எழுந்துட்டாளா அத்தை?”
“அவ என்னைக்குச் சீக்கிரம் எழுந்து இருக்கா? எப்போவும் எட்டு மணிக்கு மேல தானே! நாளைக்கு மாமியார் வீட்டுக்கு போயிட்டு என்ன பண்ண போறாளோ? ரொம்பக் கவலையா இருக்கு காயத்ரி.”
“அதெல்லாம் சமாளிச்சிடுவா அத்தை. இதுக்குப் போய் எதுக்குக் கவலைப்பட்டு உடம்பை கெடுத்துக்குறீங்க? மாப்பிள்ளை வீட்டில இருந்து எதுவும் தகவல் வந்துதா அத்தை?”
“இன்னும் இல்லை காயத்ரி. ஜாதகம் அனுப்பி ஒரு வாரம் ஆகப் போகுது. இன்னும் ஒரு தகவலும் இல்லை. நல்ல இடம், கிடைச்சா நம்ம வைஷ்ணவி சீரும் சிறப்பா இருப்பா.”
மாமியார் சொல்வது உண்மை தான். தங்களைப் போல மத்தியதர குடும்பம் இல்லை மாப்பிள்ளை வீடு. சொந்தமாக நிறுவனம் வைத்திருக்கும் கோடீஸ்வர குடும்பம். வைஷ்ணவிக்கு மட்டும் அக்குடும்பத்தில் திருமணம் நடந்துவிட்டால், அவள் வேலைக்குப் போகத் தேவையில்லை. ராணி மாதிரி வாழலாம்.
“நிச்சயம் அத்தை. கவர்ன்மென்ட் வேலை பார்க்கிறா வைஷு. யாரும் வேண்டான்னு சொல்ல மாட்டாங்க. அவளைக் கல்யாணம் கட்டிக்க மாப்பிள்ளைங்க கியூல நிற்பாங்க.”
“அது ஒண்ணு தான் உங்க மாமனார் செய்த உருப்படியான காரியம். ஸ்ரீராமையும், வைஷுவையும் எக்சாம் எழுத வச்சு எப்படியோ அரசாங்க வேலை வாங்க வச்சுட்டார். அந்தப் புண்ணியம் இன்னைக்குச் சொந்த வீடு, நல்ல சாப்பாடுன்னு ஓர் அளவுக்கு நல்லா இருக்கோம்.”
“வேணும்னா உங்க பையனை விட்டு மாப்பிள்ளை வீட்டுக்கு போன் பேச சொல்லவா அத்தை? என்ன விவரம்னு கேட்போம்.”
“நாமளா பேச வேண்டாம் காயத்ரி. எதுவும் தப்பா நினைக்கப் போறாங்க. அவங்களா பேசட்டும். இன்னும் ஒரு வாரம் பொறுத்து பார்ப்போம்.”
“சரி அத்தை.”
“பலகாரம் செய்றதுக்கு அடுப்பில வச்சுட்டியா காயத்ரி?”
“ஆரம்பிச்சிட்டேன் அத்தை. கொஞ்ச நேரத்தில செய்து முடிச்சிடுவேன்.”
“ஸ்ரீராம் என்ன பண்றான்? எழுந்துக்கலையா?”
“நேத்து நைட் வரைக்கும் ஆபீஸ் வேலை பார்த்துட்டு இருந்தார் அத்தை. அதான் கொஞ்சம் அசந்து தூங்கிட்டு இருக்கார்.”
“அவனுக்குச் செல்லம் கொடுத்து கெடுத்து வச்சுருக்கக் காயத்ரி. கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாம், அவன் முகத்தில பக்கெட் தண்ணியைக் கொண்டு வந்து ஊத்தி எழுப்புவேன். அந்த அளவுக்கு அழுசாட்டியம் பண்ணுவான்.”
மாமியார் சொல்ல சிரிப்பு வந்தது காயத்ரிக்கு. அதற்குள் குக்கர் விசில் அடிக்க, எழுந்து சமயலறைக்குப் போனாள். அதன்பின் வேலை அவளை இழுத்துக்கொண்டது.
அவித்த சுண்டலை தேங்காய் துருவல் தூவி தாளித்து எடுத்து வைத்தவள், கொழுக்கட்டை மாவை பிசைந்து அதற்குள் பூரணம் வைத்து உருட்டி வேக வைத்தாள். பின் ஊற வைத்த உளுந்தை மாவாக அரைத்து அதில் பச்சை மிளகாய், கருவேப்பலை, வெங்காயம் நறுக்கி போட்டு மடமடவென வடையாகச் சுட்டு எடுத்தாள். அதற்குள் கொழுக்கட்டை வெந்து இருக்க, அதை ஓரம் வைத்துவிட்டுப் பாயாசம் செய்வதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தாள்.
“அண்ணி எதுவும் ஹெல்ப் வேணுமா?”
பின்னாடி குரல் கேட்க, திரும்பினாள் காயத்ரி.
தலைக்குக் குளித்து மலர்ந்த முகத்தோடு நின்றிருந்தாள் இருபத்தியேழு வயது நிரம்பிய வைஷ்ணவி. ஸ்ரீராமை விடப் பத்து வயது சிறியவள்.
“அழகா இருக்க வைஷு!”
“உங்களை விடவா?” வெட்கத்தோடு சொன்னாள் வைஷ்ணவி.
“அதென்ன உங்களை விடவா? உலக அழகியை விட அழகா இருக்கத் தெரியுமா?” பெருமையாகச் சொன்னாள் காயத்ரி.
அண்ணி சொல்லவும் எழுந்த வெட்கத்தை மறைக்கும் வண்ணம், பேச்சை மாற்றினாள் இளையவள்.
“நான் கேட்டதுக்கு நீங்க பதிலே சொல்லல. எதுவும் ஹெல்ப் வேணுமா அண்ணி?”
“எல்லாம் முடிஞ்சுது வைஷு. நீ போய் எல்லோரையும் எழுப்பிக் குளிக்கச் சொல்லு. அப்படியே சாமி படத்தை எடுத்து வை. அத்தை குளிச்சாச்சா?”
“அம்மா எப்போவோ ரெடி.”
“அப்போ சீக்கிரம் ஓடு.”
அண்ணி சொல்ல, வேகமாக அவர்களின் அறைக்கு ஓடினாள்.
அண்ணன் ஸ்ரீராமை போராடி எழுப்பிக் குளிக்க அனுப்பிவிட்டு, மூத்தவன் கண்ணனையும் எழுப்பிவிட்டாள். சின்னவள் ஸ்வாதியை எழுப்பித் தங்கள் படுக்கையறைக்குத் தூக்கி வந்தவள் அவளைக் குளிக்க வைத்துப் புத்தாடை உடுத்தி ஹாலுக்கு அழைத்து வந்து தொலைகாட்சியை உயிர்ப்பித்து அதன் முன் உட்கார வைத்தாள்.
பின் ஹால் ஷெல்பில் சாமி படங்களுக்கு எல்லாம் பூ வைத்து, நேற்று கடைத்தெருவில் வாங்கி வந்திருந்த களிமண் பிள்ளையார் சிலையாய் நடுவில் வைத்தாள். அவர் முன் பழம், பாக்கு வெற்றிலை, சூடம், சாம்பிராணி, எனப் பூஜை பொருட்களை எல்லாம் எடுத்து தயாராக வைத்தாள்.
அதற்குள் பலகாரங்கள் அனைத்தையும் தட்டில் போட்டு எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்த காயத்ரி, வாழை இலையில் பலகாரங்களை அடுக்கி, கூடவே மற்ற பூஜை பொருட்களையும் எடுத்து வைத்தாள்.
அதற்குள் குளித்துப் பட்டுவேஷ்டி சட்டையில் தயாராகி வந்திருந்தான் ஸ்ரீராம். அவன் பின்னோடு கண்ணனும் தயாராகி வந்தான்.
ஸ்ரீராம் பூஜையை ஆரம்பிக்க, மற்றவர்கள் அனைவரும் அவனோடு சேர்ந்து சாமியை கும்பிட்டனர்.
சாமி கும்பிட்டு முடிந்ததும், அனைவருக்கும் தோசை சுட்டு எடுத்துவந்து கொடுத்த காயத்ரி, அத்தோடு சிறு சிறு தட்டில் பிரசாதத்தை எடுத்து வந்து கொடுத்தாள். அதை வாங்கிக்கொண்டு வழக்கம்போலத் தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்து விட்டனர் ஸ்ரீராமும் குழந்தைகளும்.
எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு கால் வலியுடன் சோபாவில் வந்து உட்கார்ந்தாள் காயத்ரி. காலை ஆறு மணிக்கு ஆரம்பித்த வேலை இதோ ஒன்பது மணிக்கு மேல் தான் முடிந்தது. சாப்பிட கூடத் தோன்றவில்லை, கையில் காப்பிக் கோப்பையுடன் வந்தமர்ந்தாள்.
“என்ன அண்ணி தோசை சாப்பிடலையா? இது என்ன இப்போ போய்க் காப்பிக் குடிக்குறீங்க?”
“பசியில்லை வைஷு. அப்புறம் சாப்பிடறேன்.”
“தினமும் இப்படித்தான் செய்றீங்க அண்ணி. காலையில சாப்பிடுறதே இல்லை. வெறும் காப்பியை குடிச்சிட்டு எப்படித்தான் இருக்க முடியுதோ உங்களால!” கோபப்பட்டாள் இளையவள்.
பதில் சொல்லாமல் புன்னகையை உதிர்த்தாள் காயத்ரி.
அந்தநேரம் ஸ்ரீராமின் தொலைபேசி அடித்தது. சின்னவன் கண்ணன் வேகமாக ஓடிச்சென்று தந்தையின் மொபைலை எடுத்துவந்து கொடுத்தான்.
மொபைல் திரையைப் பார்த்த ஸ்ரீராமின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பலப்.
“அம்மா! மாப்பிள்ளை வீட்டில இருந்து தான் பேசுறாங்க.”
மகனின் முகத்திலிருந்த மகிழ்ச்சி பெரியவரின் முகத்திலும் ஒட்டிக்கொண்டது.
“சீக்கிரம் ஆன் செய்து பேசு ஸ்ரீராம். கடவுளே! நல்ல செய்தியா இருக்கணும்.” மகனிடம் சொல்லிவிட்டு, அவசரமாய் ஒரு வேண்டுதலை வைத்தார்.
“வணக்கங்க!”
“…….”
“ரொம்பச் சந்தோசங்க!”
“……”
“தாராளமா வாங்க. அட்ரெஸ வாட்சப்ல அனுப்புறேன்.”
“…….”
“அப்போ வச்சுடறேன்.”
பேசிவிட்டு வைத்த ஸ்ரீராம், தாயின் பக்கம் சந்தோஷத்துடன் திரும்பினான்.
“அம்மா! மாப்பிள்ளை வீட்டுக்கு நம்ம வைஷுவை ரொம்பப் பிடிச்சு இருக்காம். ஜோசியர் ஊரில இல்லாததால பதில் சொல்ல லேட் ஆகிடுச்சாம். வர்ற புதன்கிழமை பொண்ணு பார்க்க நம்ம வீட்டுக்கு வராங்களாம்.”
“ரொம்பச் சந்தோசம் டா ஸ்ரீராம். நல்ல நாள் அதுவுமா நல்ல செய்தி வந்து இருக்கு. பிள்ளையாரப்பா!”
“கங்க்ராட்ஸ் நாத்தனாரே!” அந்தப்பக்கம் வைஷ்ணவிக்குத் தன் வாழ்த்துக்களைச் சொல்லி கிண்டல் செய்தாள் காயத்ரி.
“போங்க அண்ணி. பொண்ணு தானே பார்க்க வராங்க. எல்லாம் முடிவாகட்டும், அப்புறம் உங்க வாழ்த்துக்களை அக்சப்ட் பண்றேன்.” சிரிப்பை அடக்கியபடி பதில் சொன்னாள் வைஷு.
“இதுக்கு மேல என்ன இருக்கு. உன் போட்டோ பார்த்து பிடிச்சுப் போய்த் தானே பொண்ணு பார்க்க வராங்க. இது ஜஸ்ட் பார்மாலிட்டி தான். அனேகமா அடுத்த வாரமே கல்யாண தேதியை குறிச்சிடுவாங்க.”
அண்ணி சொல்ல, வெட்கத்தில் தலை குனிந்தாள் இளையவள்.
உடனே கையிலிருந்த காபி கோப்பையை டீப்பாய் மேல் வைத்துவிட்டு, நாத்தனாரின் கையைப் பிடித்து எழுப்பித் தன் அறைக்கு அழைத்துச் சென்ற காயத்ரி, பீரோவை திறந்து, தனக்கென்று வாங்கி இன்னும் உடுத்தாமல் வைத்திருந்த புதுப் பட்டுப் புடவைகள் சிலவற்றை எடுத்துக் கட்டிலில் போட்டாள்.
“இதுல எதுவும் பிடிச்சு இருக்கான்னு சொல்லு வைஷு?”
“அச்சோ! அண்ணி, இதெல்லாம் அண்ணன் உங்களுக்காக வாங்கினது.”
“இனிமே எனக்கு எதுக்கு இதெல்லாம். உனக்கு எதுவும் பிடிச்சு இருக்கா, அதை மொதல்ல சொல்லு?”
“ம்ம்…தெரியலையே அண்ணி.”
“தனக்கு எது பிடிச்சு இருக்குன்னு கூடச் சொல்ல தெரியாம ஒரு பொண்ணு இருப்பாளா?” சொல்லிவிட்டு சிரித்த காயத்ரி, நாத்தனாரை கண்ணாடி முன் நிற்க வைத்து, ஒவ்வொரு புடவையாய் அவள் மேல் வைத்து பார்த்தாள்.
எந்த நிறமும் அவளுக்கு எடுப்பாக இருப்பதாய் தெரியவில்லை.
“இன்னைக்கு ஈவ்னிங் ஏதாவது வேலை இருக்கா வைஷு?”
அண்ணி திடீரென்று இப்படிக் கேட்கவும், குழப்பத்துடன் இல்லை எனப் பதில் சொன்னாள் அவள்.
“அப்போ ரெடியா இரு. ஈவ்னிங் ஷாப்பிங் போகலாம்.”
“எதுக்கு அண்ணி ஷாப்பிங்?”
“எதுக்கா? பொண்ணு பார்க்க வராங்க. அவங்க அளவுக்கு இல்லைனாலும், ஓர் அளவுக்கு ரிச்சா இருக்க வேண்டாமா!”
“பொண்ணு பார்க்கிறதுக்கு எல்லாம் புதுப் புடவை யாரும் எடுப்பாங்களா?”
“பொண்ணு பார்க்கிறது தான் அவங்களுக்கு நாம கொடுக்கிற பஸ்ட் இம்ப்ரெஷன். பஸ்ட் இம்ப்ரெஷன் இஸ் த பெஸ்ட் இம்ப்ரெஷன், தெரியாதா உனக்கு.”
“அதுக்காக….”
“நீ எதுவும் பேச வேண்டாம். ஈவ்னிங் ரெடியா இரு.”
முடிவாய் சொல்லிவிட்டாள் காயத்ரி.

Advertisement