Advertisement

அம்மாவின் குரலுக்கும் கடிகாரத்தின் கூக்குரலுக்கும் டிமிக்கி தந்து,

இன்னும் ஐந்தே நிமிடங்கள் அம்மா!’ என்று எப்போதும் கொஞ்சிக் குலாவி காலையில் விழிக்க மறுக்கும் பிள்ளைகள், அன்று மட்டும் ஆதவனை விட விரைந்து எழுந்தனர்.

அதற்குக் காரணம் அன்று சரஸ்வதி பூஜை. நாள் முழுவதும் புத்தகத்தை எடுக்கக்கூடாது; படிக்கவும் கூடாது என்று அன்னை சிறப்புச் சலுகை கொடுக்கும் நாளன்றோ!

பத்து வயது பூர்த்தியான இரட்டை சகோதரிகள் சந்தியா, சரண்யா இருவரும், கிளி பச்சை நிறத்தில் பட்டுப் பாவாடையும், அதற்கொப்ப ஜிமிக்கி, மரகத கற்கள் பதித்த ஆரம், பளபளக்கும் வளையல்கள் என அணிகலன்களும் அணிந்து அலங்கரித்துக் கொண்டனர்.

மான்குட்டி போல ஒரு படி விட்டு ஒரு படி தாவி மாடி இறங்கிய சகோதரிகளை வரவேற்றது, காற்றில் கலந்திருந்த தாழம்பூ ஊதுபத்தியின் வாசம்.

வாசலுக்கு அழகூட்டிய படிகோலமும், காற்றில் அசைந்தாடும் மாவிலை தோரணங்களும் கண்டுகளித்த குழந்தைகள், பூஜைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த தந்தை முன் வந்து நின்றனர்.

தோகை மயிலென பட்டுப்பாவாடை விரித்துப் பிடித்து இடவலமாக ஆடும் பிள்ளைகள், தந்தை சாயிகிருஷ்ணா கண்களுக்குப் பதுமையாகவே தோன்றினார்கள்.

“அழகாக இருக்கீங்க செல்லங்களா!” இருவரின் கன்னம் கிள்ளி கொஞ்சிய தந்தை அவர்களிடம் சந்தனம், குங்குமம் அடங்கிய தாம்பாளம் ஒன்றை நீட்டி,

“என்ன செய்ய வேண்டும் என்று ஞாபகம் இருக்கிறதா?” புருவங்கள் உயர்த்தி வினவினான்.

சரஸ்வதி பூஜை அன்று வாசற்கதவு முதல், வீட்டில் உள்ள அத்தனை அறைகளின் கதவின் மையப்பகுதியிலும், வீட்டுச் சாதனங்களான தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, கணினி, இசைக்கருவிகள் என அனைத்திற்கும் சந்தனப்பொட்டு, குங்குமம் இடுவது பிள்ளைகளுக்கு நியமிக்கப்பட்ட வேலை.

“ஆம் அப்பா!” துள்ளலாகப் பதிலளித்த சந்தியா அவ்விடங்களைப் பட்டியலிட, அவள் சொல்ல மறந்தவற்றை சரண்யா மொழிந்தாள்.

குழந்தைகளின் உற்சாகத்தைப் பாராட்டிய சாயிகிருஷ்ணா மென்சிரிப்புடன் தலையசைத்து, பூஜை மேடை அலங்காரம் செய்வதில் கவனத்தைத் திருப்பினான். போன வேகத்தில் திரும்பி வந்தனர் பிள்ளைகள்.

“நான் சந்தனம் வைத்தேன் அப்பா!” சந்தியா கூற,

“அதன்மேல் நான் குங்குமம் வைத்தேன் அப்பா!”, ஒத்தூதினாள் சரண்யா.

கொடுத்த வேலையைச் செவ்வனே செய்துமுடித்ததைப் பறைசாற்றியது அந்தத் தாம்பாளம். சந்தனம் குங்குமம் கலவையில் பிஞ்சு விரல்கள் தீட்டிய ஓவியம் தாம்பாளத்திற்கு மெருகூட்டியது. அதைப் பெற்றுக்கொண்டவன்,

“சரி! உங்கள் இருவரின் பாடப்புத்தகங்கள், எழுதுகோல் எல்லாம் கொண்டு வாருங்கள்!” அடுத்த வேலையைக் கொடுத்தான்.

அதற்காகவே காத்திருந்தவர்கள் போல, மேல் தளத்தில் இருக்கும் படிக்கும் அறைக்கு ஓடினார்கள். கைகொள்ளாத அளவிற்கு மலைபோல அடுக்கிய புத்தகங்களை தத்தித் தடுமாறி அவர்கள் எடுத்துவர, அதற்குள் சாயிகிருஷ்ணா தன் மடிக்கணினி, காசோலை புத்தகம் யாவும் பூஜை மேடையில் வைத்தான்.

“குறும்புக்கார பிள்ளைகள்!” செல்லம் கொஞ்சியபடி அவற்றை நேர்த்தியாக அடுக்கினான்.

மனைவி யாழினி வாசிக்கும் வீணை, வாய்ப்பாட்டு மற்றும் நடனம் பயிலும் மகள்களின் ஹார்மோனியம் பெட்டி, சலங்கைகள் அனைத்தையும் கொண்டு வருவதாகக் கூறி எழுந்தவன்,

“சந்தியா குட்டி! அம்மா பள்ளியில் பயன்படுத்தும் கணிப்பான்(Calculator) மற்றும் பாடப்புத்தகங்களை தரச் சொல்!” எனக் கூறி,

“சரண்யா குட்டி! நீ அப்பாவோட வா!” என்று அழைத்தான்.

விருந்து உணவு சமைப்பதில் ஆயத்தமான அன்னையை இடையோடு சேர்த்து அணைத்த சந்தியா, காற்றில் கலந்த நெய் வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தாள்.

“அம்மா! பால் பாயசத்தில் நிறைய முந்திரி பருப்பு நெய்யில் வறுத்துச் சேருங்கள்!” கீச்சுக்குரலில் நினைவூட்ட, குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு புன்னகைத்தாள் யாழினி.

தந்தை கேட்டப் பொருட்களைத் தருமாறு அன்னையிடம் கூறினாள்.

குழந்தையின் கன்னத்தை உள்ளங்கையில் குவித்தவள், “அதெல்லாம் வேண்டாம் தங்கம்; உங்களுடைய பாடப்புத்தகங்களை வைத்து அப்பாவுடன் பூஜை செய்யுங்கள்!” தன்மையாக மறுத்தாள்.

அடுப்பில் கொதிக்கும் பாயசத்தைக் கிளறியவளின் சிந்தனை, முந்தைய இரவின் கசப்பான நிகழ்வுக்குத் திசைதிரும்பியது.

பழிச்சொல் சுமக்கும் அவள் அகமும் தானே சேர்ந்து கொதித்தது.

உள்ளூர் நடுநிலைப் பள்ளி ஒன்றில் கணிதம் கற்பிக்கும் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாள் யாழினி. கணக்கியல் மையப்பாடமாக இந்தியாவில் பயின்று, தணிக்கையாளராகும்(Auditor) எல்லாவிதமான தகுதிகள் இருந்தும், குடும்பம் லட்சியம் இரண்டிற்கும் இடையே சிக்கித்தவிக்கும் பல்லாயிரம் பெண்களின் சூழ்நிலைதான் அவளுக்கும்.

பெற்ற பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பதின் அவசியம் உணர்ந்தவள், மனதிற்கு அதிக உளைச்சல் தராத ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்தாள்.

பிறந்த மண்ணில், தன் தந்தை நிர்வாகம்செய்த தனியார் பள்ளியில் ஒரு சில ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்த அனுபவமோ, வழிவழியாக கல்வித்துறையில் பணியாற்றும் வம்சாவளியில் பிறந்ததாலோ, பாடம் கற்பிப்பது என்பது அவளுக்கு எளிதில் வந்த ஒன்று.

தெளிவான பேச்சு, பிழையில்லா உச்சரிப்பு, இசைக்கும் அவள் குரல் என அனைத்தும் மாணவர்களின் மனதை கொள்ளை கொள்ளவே செய்தது.

ஆயினும் நட்பின் வழியில் பாடம் கற்பிக்கும் அமெரிக்க கல்வி நிறுவனங்களின் அணுகுமுறை மட்டும் அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

ஆசிரியர்கள் ஓரளவிற்கு கண்டிப்புடன் நடந்து கொண்டால் தான் மாணவர்களை நல்லதொரு சிற்பமாகச் செதுக்கமுடியும் என்பது அவள் கண்ணோட்டம்; இன்றைய தலைமுறையின் அழுத்தமான வாழ்க்கை முறையில்  மாணவர்கள் போக்கில் விட்டுக்கொடுத்து போகவேண்டும் என்று வலியுறுத்தியது கல்வி அமைப்பு.

மனம் ஒப்பவில்லை என்றாலும், ஊருடன் ஒத்துவாழ் என பல விஷயங்களில் தழைந்துபோனவளின் பொறுமையைச் சோதிக்க வந்தது அந்த எச்சரிக்கை மடல்.

மாணவர்களுக்கு அதிகமாக வீட்டுப்பாடம் கொடுப்பதாக அவள்மேல் சூட்டப்பட்ட புகார் அது. பழகப் பழகத் தானே கணிதம் புலப்படும் என்னும் அவள் கூற்றை ஏற்க மறுத்த கல்வி நிறுவனம், அவள் செயல்முறைகளில் தான் தவறு என்றும் பழி சுமத்தியது.

பாடம் நடத்த அடிப்படை சுதந்திரம் கூட இல்லாத ஊரில் வசிக்க வேண்டிய கட்டாயமில்லை என்று யாழினி கணவரிடம் வாதாடினாள். சுதந்திர காற்றை சுவாசிக்க, தாய்மண்ணிற்கே சென்றுவிடலாம் என்று அவள் யோசனை சொல்ல, தவறு அவளிடம்தான் என்று சாயிகிருஷ்ணாவும் குறைகூறினான். அதனால் மனஸ்தாபங்கள் பிரளயமாக வளர்ந்தது.

யாழினி குழந்தையிடம் கூறியதை கவனித்த சாயிகிருஷ்ணா முகம் சுருங்கியது.

“நல்ல நேரம் முடியப்போகிறது யாழினி! உன் பணி சார்ந்த பொருட்களைக் கொண்டு வா மா!” மனைவியின் மனநிலை கண்டும் காணாமல் மென்மையாகவே கேட்டான்.

“பணியில்தான் என் விருப்பபடி பாடம் நடத்த சுதந்திரம் இல்லை; வீட்டில் என் விருப்பு வெறுப்புகளை வாய்விட்டு சொல்லக் கூடவா எனக்கு உரிமை இல்லை?”, படபடவென பொரிந்தாள்.

எவ்வளவு பெரிய சண்டையானாலும், குழந்தைகள் முன் காட்டிக்கொள்ளக் கூடாது என்ற தங்கள் கொள்கையை மறந்து, மனைவி நடந்துகொள்ளும் விதம் அவனுக்குப் பிடிக்கவில்லை.

“இருக்கும் இடத்திற்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ளவது தான் புத்திசாலித்தனம்!” சிடுசிடுத்தான் சாயிகிருஷ்ணா.

“பாடப்புத்தகங்களை அலட்சியமாகக் காலடியில் போட்டும், பயிற்சித் தாள்களைக் குப்பைக் காகிதங்களாக வீசி எறியும் மாணவர்களைத் தினமும் பார்க்கிறேன் அல்லவா; அதனால்தான் எனக்கும் புத்தகங்களைக் கடவுளாக பாவிக்கும் நம் கலாச்சாரம் மறந்துவிட்டது! வழிபாட்டிலும் நம்பிக்கை குறைந்துவிட்டது!” ஏளனமாக உரைத்தாள்.

“மாற வேண்டியது அவர்கள் இல்லை; நீ தான் யாழினி! இருக்கும் இடம் மறந்து இப்படியா பொறுமையிழந்து வார்த்தையை விடுவது?” என்று கடிந்தவன், குழந்தைகள் நிற்கும் திசையில் கண் காட்டினான்.

கணவர் தன்னை குறைகூறியதும், பெண்ணவளின் கண்கள் வெள்ளப் பெருக்கெடுத்தது. தன்மானமும் சேர்ந்து உரச, படபடவென்று மாடி ஏறியவள், அவன் கேட்டப் பொருட்களைக் கொண்டுவந்தாள். அவற்றை, அவன் கையில் திணித்துவிட்டு, மௌனமாகச் சமையலறை நோக்கி நகர்ந்தாள்.

எத்தனையோ கருத்து வேறுபாடுகளில், முகம் சுளிக்காமல் நிதானத்தைக் கடைப்பிடிக்கும் மனைவி, இன்று கடுமையாகப் பேசியதில் அவள் வேதனையை உணரவே செய்தான். தான் அவளுக்கு ஆதரவாகப் பேசாததனால் மலர்ந்த வலி என்றும் உணர்ந்தான்.

குழந்தைகளின் வாடிய முகத்தைக் கவனித்தவன் அவர்கள் முன்னே மண்டியிட்டு அமர்ந்தான். இருவரின் கரங்களையும் சேர்த்துப் பிடித்தவன்,

“அம்மாவிற்கு நேற்றிலிருந்து தலைவலி; அதனால்தான் அவளால் பூஜையில் கவனம் செலுத்த முடியவில்லை; பூஜைக்கு வேண்டிய  பிரசாதம் செய்ய அவளுக்கு உதவிவிட்டு வருகிறேன். அதுவரை நீங்கள் இருவரும் தோட்டத்தில் விளையாடுங்கள்!” மழுப்பலாகச் சமாதானம் சொன்னான்.

ஒற்றைத் தலைவலியால் அன்னை அவதிப்படுவதும், அச்சமயங்களில் தந்தை வீட்டு வேலைகளைப் பகிர்வதும் பார்த்துப் பழகிய பிள்ளைகள், அவன் விளக்கத்தை நம்பவே செய்தார்கள்.

“அம்மாவிற்கு அதிக வேலை என்றால், பாயசத்தில் முந்திரி பருப்பு சேர்க்க வேண்டாம்!” சந்தியா அப்பாவியாகக் கூற,

“தடபுடலான விருந்து உணவு கூட வேண்டாம் பா!” வருந்தினாள் சரண்யா.

விருந்து உணவு சமைப்பதில் தங்களுக்குச் சிரமமில்லை என்று கூறி மென்மையாகச் சிரித்தான்.

மனைவியின் உப்பிப்போன கன்னங்களைத் தன் இருகரங்களில் குவித்தவன், கண்பார்த்துப் பேச ஏதுவாக வலுக்கட்டாயமாக அவள் முகத்தை நிமிர்த்தினான்.

“ஆயிரம் தான் நமக்குள்ளே மனஸ்தாபங்கள் இருந்தாலும், அதைக் குழந்தைகள் எதிரில் காட்டக்கூடாது என்று நீ தானே சொல்வாய். நாம் இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் பொறுமையாகச் சிந்தித்துப் பேசுவோமே!” மென்மையாக அவன் கேட்க,

“பேசி….” ஏளனமாக உதட்டினை வளைத்தாள்.

அவள் விழிநீர் உதிரவா உள்வாங்கவா என்று விளிம்பில் நின்றது.

“பேசி ஒரு நல்ல முடிவுக்கு வருவோம்!” வாக்கியத்தை முடித்து, அவள் கண்களை விரல்களால் துடைத்தான்.

“உங்களுக்குச் சாதகமாகத் தானே முடிவெடுப்பீங்க!” இத்தனை வருட இல்லறத்தில் அப்படித்தானே சண்டைகள் சமாதானமானது என்று இடித்துக்காட்டினாள்.

“ம்ஹூம்!” மறுப்பாய் தலையசைத்தவன், “யாழினிக்கு சாதகமாக!” என்றான்.

அப்போதும் பெண்ணவள் சிலையாக நிற்க, “நம்பு டி! முதலில் நாம் நம் குழந்தைகளுக்கு நல்வழி கற்றுக்கொடுப்போம்!” தீர்கமாகக் கூறி, நெற்றியோடு நெற்றி முட்டினான்.

சமரசமானவள் குழந்தைகளை உள்ளே அழைத்து அரவணைத்தாள். நால்வரும் நேர்வரிசையில் அமர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சரஸ்வதி தேவியின் சிலை முன் மலர்களைச் சமர்ப்பித்து நேர்த்தியாக வழிப்பட்டனர். ஒரு மணி நேரத்தில் பூஜையும் செவ்வனே முடிய, வடை பாயசம் என தடபுடலாக விருந்து உணவு அருந்தினர்.

மறுநாள் காலை விஜயதசமி முன்னிட்டு, குழந்தைகள் ஹார்மோனியம் வாசித்தப்படி சரஸ்வதி துதி பாடினர். அதன்பிறகு பாடத்தில் ஒரு பகுதியைக் கடவுள் சன்னிதானத்தில் உரக்கப் படித்து வழிப்பட்டனர்.

அதைக் கண்டவள், “பார்த்தீங்களா சாயி! சந்தியாவும், சரண்யாவும் பாடப்புத்தகங்களுக்கு எவ்வளவு அழகா மரியாதை செலுத்துகிறார்கள். இந்தப் பண்பு நீடித்து நிலைக்க வேண்டுமானால், நாம் இந்தியா செல்வதுதான் ஒரே வழி!” தன் ஆதங்கத்தை நினைவூட்டினாள்.

அவனுக்கும் அவள் கவலை புரியாமல் இல்லை; அதற்காக அவள் பேசுவது அத்தனையும் சரியென்று ஏற்கவும் இயலவில்லை. அவள் கரம்பற்றி அருகில் அமரும்படி கண்ணசைத்தான்.

“யாழினி! குழந்தைகள் பண்பு அறிந்து நடக்கவும், கலாச்சாரம் போற்றுவதற்கும் காரணம், நாம் வாழும் இடமில்லை; அவர்களை நல்வழியில் நடத்தும் பெற்றோர் கையில் தான்!” வித்தியாசத்தைத் தெளிவுபடுத்தியவன், அவ்விதத்தில் யாழினி சாலச் சிறந்தவள் என்றும் பாராட்டினான்.

“தெரியுமே! இப்படி ஏதாவது பேசி, நாம் இங்கேயே இருப்பதுதான் சரி என்று சொல்லத்தானே!” கோபம் கொண்டவள், பள்ளியில் தான் சகித்துப்போகும் பல விஷயங்களை மறுபடியும் அடுக்கினாள்.

“உன் எண்ணம் தவறென்று நான் சொல்லவில்லை யாழினி! ஆனால் நீ கடிவாளமிட்ட குதிரை போல ஒரே கோணத்தில் மட்டும்தான் பிரச்சனைகளைப் பார்க்கிறாய்!” பிழையைச் சுட்டிக்காட்டினான்.

“வீட்டுப்பாடம் கொடுப்பதில் பிழை என்ன உள்ளது? இந்த வயதில் படிப்பைத் தவிர அவர்களுக்கு வேறென்ன தலையாய வேலை உள்ளது?” கொந்தளித்தவள்,

“படிக்க வணங்காத இப்பிள்ளைகளைக் கல்வி நிறுவனங்களும், பெற்றோரும் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்; ஆசிரியர்களைக் குறைகூறுகிறார்கள்!” என்றும் முணுமுணுத்தாள்.

“அப்படியில்லை யாழினி! நம் தலைமுறையினர் கல்வி பயின்ற முறைக்கும், இப்போது உள்ள கல்வி முறைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நாம் அன்று அறிவியல் என்ற ஒரு பாடம் தான் பத்தாம் வகுப்பு வரை படித்தோம்; ஆனால் அதுவே இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாகப் பல கிளைகளாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அவ்வளவு ஏன்! நாம் பயிலும்போது, கணினி அறிவியல் என்ற ஒரே பட்டப்படிப்பு மட்டும்தான். ஆனால் இன்று இயந்திர மனிதவியல்(Robotics), செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) என்று எண்ணிலடங்கா கிளைகள்.

படிப்பில் இத்தனை மாற்றங்கள் என்றால், விளையாட்டுத்துறை, கலைத்துறை என்று திரும்பும் திசையெல்லாம் மறுமலர்ச்சி.” என்றவன்,

பள்ளிப்படிப்பைத் தாண்டி மாணவர்கள் ஆய்வு செய்ய பல விஷயங்கள் இருப்பதாகவும், அதனால் கைவசம் இருக்கும் நேரத்தின் அளவு சுருங்கிவிட்டது என்றும் விளக்கினான்.

“சரி சாயி! விளையாட்டு சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதும், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அறிவை வளர்த்துக்கொள்வதும் முக்கியம் தான். நீங்கள் சொல்வதை நான் ஒப்புக்கொள்கிறேன்! ஆனால் வீட்டுப்பாடம் திணிப்பதால் பிள்ளைகளுடன் செலவிடும் குடும்ப நேரம் பாதிப்பதாகக் குற்றம் சுமத்தும் எத்தனை பெற்றோர், தரமான நேரம் குழந்தைகளுடன் செலவிடுகிறார்கள்!” என்றவள்,

“நடுநிலைப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு நவீனநுட்பங்கள் அடங்கிய கைபேசி வாங்கிக்கொடுப்பதால், பெரும்பாலான குழந்தைகள் சமூக ஊடகங்களில் பேசிப்பழகத்தானே ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.வகுப்பில் கைபேசியில் மூழ்கியிருக்கும் மாணவன், வீட்டில் பெற்றோருடனா கதைக்கப்போகிறான்.” இடித்தும்காட்டினாள்.

அதை அவனால் மறுக்க முடியவில்லை; இளநகையுடன் ஆம் என்று தலையசைத்தவன், அவள் விரல் கோர்த்து,

“ஒரு நாணயத்திற்கு இருபக்கம் என்பது போல, நாகரிக வளர்ச்சியில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு! ஆனால் கெட்டதையும் நன்மையாக்கும் சக்தி ஒரு ஆசிரியருக்கு மட்டும்தான் உண்டு!” என்று கண்சிமிட்டினான்.

அவன் பேச்சு புலப்படாமல் யாழினி குழப்பத்துடன் பார்த்தாள்.

“சில விஷயங்களைப் பற்றி வீண்வாதம் செய்வதைவிட விவேகமாக நடந்துகொள்வது புத்திசாலித்தனம் யாழினி!”

“அப்படி என்றால்!”

“வீட்டுப்பாடம் தான் குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தைக் குறைக்கிறது என்று புலம்புபவர்களுக்கு அவர்கள் வழியிலேயே சென்று பதிலடி கொடு. நீ வடிவமைக்கும் வீட்டுப்பாடங்கள், மாணவர்களை மட்டும் சார்ந்தில்லாமல், அதைக் குடும்பத்தினராக ஒன்றுகூடி செய்யும் விதத்தில் மாற்றி அமைத்துப்பாரு!

உதாரணத்திற்கு, நாம் பிள்ளைகளுடன் அன்றாட வேலைகள் செய்யும்போது கூட்டல், கழித்தல் கணக்கு விளையாடி மனக்கணக்குப் பயிற்சி கொடுப்பது போல!”

அதைக்கேட்டவளின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது. அவன் சொன்னது முற்றிலும் உண்மைதான். சாலை பயணங்களில் கூட அவர்கள் பிள்ளைகளுடன் விளையாடும் சின்ன சின்ன விஷயங்கள் தானே ஆழமான அஸ்திவாரம் தந்தது.

நடுநிலைப் பள்ளியில் இருக்கும் மாணவர்கள் எட்டாம் வாய்பாடு அறியாமல் திண்டாடுவது ஒப்பிடும்போது அவர்களின் மகள்கள் இருவரும் துல்லியமாக மனக்கணக்குப் போடுவதை எண்ணிய தாய்மனதில் ஒரு பெருமிதம்.

மனைவியின் முகத்தில் பரவிய தெளிவின் ரேகைகளை கண்டுகொண்டவன், “பிரச்சனைகளைக் கண்டு பயந்து ஓடாமல், அதை எப்படித் தகர்க்கலாம் என்று நேர்மறையாக யோசி யாழினி! அப்போது எதையும் சமாளித்துவிடலாம் என்ற தன்னம்பிக்கை பிறக்கும்!” என்றான்.

“இது தான் யாழினிக்கு சாதகமான தீர்ப்பா!”, அவன் கன்னத்தை கிள்ளி குறும்பாகச் சிரித்தவள்,

“ஆனாலும் ஒரு விஷயம் மென்பொருள் பொறியாளர் கணவரே! உங்களின் இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியால் தான் இன்று மாணவர்களுக்கு எழுதிப் பழகும் கலை முற்றிலும் மறந்துவிட்டது. தொட்டதுக்கு எல்லாம் கையடக்க இசைக்கேளி(iPad) என்கிறார்கள்!” என்று கண்சிமிட்டினாள்.

அதை ரசித்தவன், “அடியேய் பழைய பஞ்சாங்கமே! செல்லமாகக் கடிந்தவன்,

“இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் தான் இரண்டு வருடங்களாக உலகத்தையே புரட்டிப்போட்ட கொரோனா காலத்திலும், மாணவர்கள் தங்குதடையின்றி கல்வி கற்க முடிந்தது!” என்று கூறி,

“எதிலும் நேர்மறை விஷயங்கள் பார்க்க பழகிக்கொள்! வளர்ச்சியின் பாதையில் பயணிக்கும் இத்தருவாயில், மறுமலர்ச்சியும் மகிழ்ச்சி தரும்!மாற்றம் ஒன்றே மாறாதது!” என அவள் தலையில் செல்லமாகத் தட்டினான்.

அவன் அடித்தது வலித்தது போல முகம்சுளித்த பெண்ணும், “ஏதேதோ சொல்லி எனக்கு மூளைசலவை செய்துவிடுவார் என் சாயி!” கண்சிமிட்டி அவன் கன்னத்தில் இதழ்கள் பதித்தாள்.

விளையாட்டுக்குச் சொன்னாலும் அதுதானே உண்மை. திருமணத்தில் தொடங்கி, பிள்ளைப்பெறுவது, அமெரிக்காவிற்கு வருவது என எல்லா முக்கியமான முடிவுகளிலும் அவன் எண்ணம்தானே கடைமுடிவாக வென்றது.

தன்னைச் சார்ந்து வந்ததால் மனையாளின் லட்சியப் பாதை திசைமாறியதைப் பற்றி சிந்தித்தவன்,

“யாழினி!” என்று, எழுந்துச் செல்லும் அவள் கரத்தைப் பற்றி இழுத்தான்.

“ஒரு வருஷம் நான் சொன்னதைச் செயல்படுத்திப் பார்; அதற்குப் பின்னும் இங்கு வசிப்பதில் உனக்கு உடன்பாடு இல்லை என்றால், உன் முடிவே என்னுடையது!” தாழ்ந்த குரலில் விட்டுக்கொடுத்தான்.

தனக்கும் பிள்ளைகளுக்கும் சுகமான வாழ்க்கை அமைத்துதர ஓடாய் தேய்பவனின் நற்குணம் அறிந்தவள் சம்மதம் என்று தலையசைத்தாள்.

திங்கட்கிழமை புத்துணர்ச்சியுடன் பணிக்குத் திரும்பினாள்.

சந்தோஷம் உன்னை நெருங்க விடுவேனா!’ விதி எள்ளி நகையாடுவதை போல சோதிக்க வந்தான் அந்த மாணவன்.

“ஆசிரியை! என்னிடம் எழுதுகோல் இல்லை!” அலட்சியமாகக் கூறினான் ஆதித்யா.

பள்ளிக்கூடத்திற்கு, அதுவும் கணக்கு வகுப்புக்கு எழுதுகோல் கூட எடுத்துவராத அவனின் அலட்சியத்தைக் கண்டு கடுப்பானவள், திட்டுவதற்குத் தயாராக,

எதையும் நேர்மறையாக யோசி!’ கணவன் அறிவுரை கண்முன் வந்து மறைந்தது.

மென்சிரிப்புடன் அவனிடம் ஒரு எழுதுகோலை நீட்டினாள்.

வழக்கமாக அறிவுரை என்ற பெயரில், இளைய சமுதாயத்தின் ஒழுக்கமின்மை பற்றிச் சொற்பொழிவாற்றும் ஆசிரியை அமைதியாகச் சிரித்ததும் அவனால் நம்பமுடியவில்லை.

தப்பித்துவிட்டோம் என்று ஆதித்யா நகர,

“ஒரு நிமிஷம் ஆதித்யா!” தடுத்தவள், “கடன் அன்பை முறிக்கும் என்பார்கள். அதனால், நீ என்னிடமிருந்து கடனாக வாங்கிய இந்த விலைமதிப்பில்லாத எழுதுகோல் பத்திரமாகத் திருப்பித் தரும்வரை, உன்னுடைய கைபேசி என்னிடம் இருக்கட்டும்!” அடகு வியாபாரி போல ஒப்பந்தம் போட்டு கையை நீட்டினாள்.

ஆதித்யாவும் வேறுவழியில்லாமல் ஆருயிர் தோழனாக கருதிய தன் கைபேசியை கொடுக்க வேண்டியதாயிற்று.

அன்றுமுதல் எழுதுகோல் தானே என்று கவலையின்றி தொலைத்துவிடும் மாணவர்களின் அலட்சியப்போக்கு மாறியது. வகுப்புக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வரவில்லை என்றால், தங்களுக்குப் பிரியமான கைபேசியை யாழினியிடம் அடகுவைக்க நேரும் என்ற பயத்தில், பொறுப்பாகவும் நடந்துகொள்ளத் துவங்கினர்.

வீட்டுப்பாடங்களை மாணவர்கள் ஒரு இயந்திரக் கருவியாக கருதாதபடி வடிவமைத்தாள். ஒவ்வொரு கணக்குப் பாடத்தின் தத்துவத்தையும் நடைமுறையில் செலுத்திப் புரிந்துகொள்ளும் விதமாக, சவால் நிரம்பியதாகக் கொடுத்தாள்.

சமையல் அறையில் அம்மாவுடன் பதார்த்தங்கள் செய்யும்போது பொருட்களை அளவிடுவது, தந்தையுடன் கடைக்குச் செல்லும் பிள்ளைகள், வாங்கிய பொருட்களுக்குப் பணம் செலுத்தி, மீதி சில்லறை பெறுதல் என்ற அன்றாட வேலைகளில் பயிற்சி கொடுத்தாள்.

விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களிடம் கணிதப் பாடத்தின் அடிப்படையில் வீரர்கள், பயிற்சியாளர்கள் வரையும் யுக்திகளை விவரித்தாள். அதன் அடிப்படையில் வீட்டுப்பாடம் கொடுக்க, அவர்களும் அதை உற்சாகமாகவே செய்துமுடித்தனர்.

இணையதளம் விளையாட்டுகள் பிரதானம் என்னும் மாணவர்களுக்கு, அவர்கள் கற்றப் பாடத்திலிருந்து விளையாட்டுகளை வடிவமைக்கச் சொன்னாள்.

வடிவியல், இயற்கணிதத்தில் உள்ள சூத்திரங்கள், அத்துறைச் சார்ந்த சொற்கள் மையமாக கொண்ட விளையாட்டை அவர்களே வடிவமைத்து வகுப்பு நேரத்தில் விளையாட அனுமதித்தாள். குழுக்களாக(Team) விளையாடிய மாணவர்களிடையே ஒற்றுமையும் கூடியது; பாடமும் எளிதாக அவர்களுக்குப் புரிந்தது.

கணவர் அறிவுரைபடி வெவ்வேறு கோணங்களில் யோசிக்கத் துவங்கியவளிடமும் ஒருவித உற்சாகம். காணும் யாவற்றிலும் நேர்மறை விஷயங்களைத் தேடப் பழகியவளுக்கு, வேறொரு சிந்தனையும் தோன்றியது.

வகுப்பில் கொடுக்கும் பயிற்சித் தாள்களை, பாடம் முடிந்த கையோடு அவற்றைப் பந்தாகச் சுருட்டி குப்பைத்தொட்டியில் இடுவதும், புத்தகங்களைக் கால்படும் இடத்தில் வைக்கும் மாணவர்களின் அலட்சியப்போக்கை ஆராய்ந்தாள்.

காகிதங்களைச் சமையலறையிலும், குளியல் அறையிலும், சுத்தம் செய்யும் திசு காகிதமாகப்(Tissue Paper) பயன்படுத்தும் வழக்கம் கொண்டவர்கள் அவர்கள். புத்தகங்களைக் கடவுளுக்குச் சமமாகப் போற்றும் இந்தியர்களின் மரபு அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று உணர்ந்தாள்.

ஒருவருடைய கலாசாரத்தின் பெருமைகளைப் பகிரலாமே தவிர, அதை யார்மீதும் திணிக்கக்கூடாது என்ற பகுத்தறிவு கொண்டவள், மாணவர்களுக்குப் பொருட்களை மதிக்கும் ஒழுக்கம் புகட்ட அதை வேறொரு முறையில் கையாண்டாள்.

“இந்த ஆண்டு பள்ளிக்கூடம் முடியும் தருவாயில், நீங்கள் விரும்பும் ஒன்றை நாம் ஒன்றுகூடி செய்யலாம். அனைவரும் கலந்தாலோசித்து உங்கள் விருப்பத்தைச் சொல்லுங்கள்!”, என்று அறிவித்தாள்.

கலந்துரையாடிய மாணவர்கள், கோடை விடுமுறையில் உள்ளூரில் உள்ள சுற்றுலா ஸ்தலத்திற்கு அழைத்துச் செல்லும்படி கேட்டனர். கல்வி நிர்வாகிகளுடன் பேசி சம்மதம் பெறுவதாக உறுதியளித்தவள்,

“இதைப் பெறுவதற்கு, நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக நான் கூறும் ஒரு சவாலை வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டும்.” என்றாள்.

மாணவர்களிடையே மௌனம் நிலவியது.

“இன்று முதல் பள்ளியின் கடைசி நாள்வரை பாடரீதியான தாள்களைக் கசக்காமல், சுருட்டாமல், தேதி வாரியாக ஒரு கோப்பில் பராமரித்து வரவேண்டும்!” நிபந்தனை இட்டாள்.

‘இவ்வளவுதானே!’ ஜம்பமடித்த பல மாணவர்கள் ஒரு வாரத்திற்குத் தாள்களை நேர்த்தியாக வைத்துக்கொள்ளவே சிரமப்பட்டனர். போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென்ற உத்வேகம் கொண்ட மாணவர்கள், மறு வாய்ப்பு தரும்படி கெஞ்ச, யாழினி மகிழ்ந்து சம்மதித்தாள்.

அவள் எதிர்பார்த்த ஒழுக்கமும் மாணவர்கள் மத்தியில் தன்னிச்சையாக வளர்வதைக் கண்டவளுக்குப் பேரானந்தமே!

எனினும் அவள் கண்ணை உறுத்திய மற்றொரு விஷயம் கணிப்பான்(Calculator).

அதை உபயோகிக்க கூடாது என்று சொல்வதற்கு அவளுக்கு அதிகாரமில்லை.

மனக்கணக்கின் அத்தியாவசியத்தை எடுத்துரைத்து, இயந்திரங்கள் தவிர்ப்பது நல்லது என்று விளக்கினாள்.

“வசதிகள் இருக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொள்வது தானே சாமர்த்தியம்!” என்ற கதிர்,  “வாகனங்கள் இருக்கும்போது யாராவது தொலைதூரம் பயணம் செய்ய உடலை வருத்திக்கொண்டு நடந்துதான் செல்வேன் என்பார்களா!” கேட்டு தர்க்கம் செய்தான்.

சொல்லிப் புரியவைக்க முடியாது என்று மௌனம் காத்தாள் யாழினி.

மாலை வீடு திரும்பிய கணவரிடம் அன்று வகுப்பில் நடந்ததைக் கூறிப் புலம்பினாள். கேட்டவனும் பரிதாபம் கொள்ளவில்லை. இரவு உணவு செய்யும் அவளை மேலும் கீழுமாக குறுகுறுவென பார்த்தான்.

“அவன் சொல்வது சரிதானே யாழினி! மின்சாரத்தில் இயங்கும் கலவைக்கருவிகள் வந்த பிறகு, நீ மட்டுமென்ன, மாவு அரைப்பதற்கு அம்மிக்கல்லும் ஆட்டுக்கல்லுமா உபயோகிக்கிறாய்!” கேலியும் செய்து,

“சில சமயம் இயந்திரத்தில் அரைக்கும் வேலையும் இந்த அப்பாவித் தலையில் கட்டிவிடுவாய்!” அவள் காதோரம் கிசுகிசுத்தான்.

வெடுக்கென்று அவன் முகம்பார்க்க திரும்பியவள், கையில் வைத்திருந்த தோசைத் துடுப்பை அவனிடம் திணித்து, “ அப்படியே மாவை தோசையாக மாற்றுவதற்கு ஏதாவது இயந்திரம் இருந்தால் சமைத்துச் சாப்பிடுங்கள்!” என சினந்து வேகநடையிட்டாள்.

“யாழினி கைப்பக்குவத்திற்கு எதுவுமே ஈடுஇணையில்லை மா!” உரக்கச் சொல்லி வம்பிழுத்தான்.

அவன் குறும்பு பேச்சில் சரிந்த பெண்ணின் இதழோரம் புன்னகை மலர, அதைக்கண்டு கொண்டவனின் உள்ளம் நெகிழ்ந்தது; உள்ளங்கையும் காதலுடன் இரவு உணவை சமைத்தது.

கணிப்பான் மாணவர்களுக்கு நடுநிலைப் பள்ளியில் அறிமுகம் செய்வதற்கான அவசியம் என்னவென்று தான் பங்குகொண்ட ஆசிரியர்கள் மாநாட்டில் வெளிப்படையாகவே கேட்டாள்.

மற்ற குழந்தைகளுக்கு ஈடுகொடுத்து வேகமாக கணக்கிட இயலாத மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு வகுப்பில் உபயோகிக்கப் பரிந்துரை செய்ததாக ஒரு ஆசிரியர் கூறினார்.

அப்பிரச்சனைக்குத் தீர்வுகாண பல கோணங்களில் சிந்திக்கத் துவங்கினாள் யாழினி.

வகுப்பு நேரத்தில் எளிமையான சில குறுக்குவழிகளைக் கற்றுக்கொடுத்தாள். வேதகால கணிதமுறைபடி பெருக்கல், வகுத்தல் என வழிமுறைகளை விவரிக்க, மாணவர்களும் பிரமிப்புடன் கவனித்து உள்வாங்கினர்.

கணிப்பான் உபயோகிக்காத மாணவர்களுக்கு வெகுமதியாகக் கூடுதல் மதிப்பெண், கூடுதல் அவகாசம் என்று அறிவிக்க, அத்திட்டங்களை மாணவர்கள் நல்லவிதமாக வரவேற்றனர்.

அன்று தேர்வு நடைபெறும் நாளில், “யாருக்காவது கணிப்பான் வேண்டுமா!” அவள் வினவ,

அனைவரும் மௌனம் சாதித்தனர். அதுவே தன் முயற்சிக்குக் கிடைத்த சன்மானம் என நெகிழும் நொடி,

“ஆசிரியை!” கைதூக்கினாள் வாஹினி.

மனம்நொந்து பெருமூச்சுவிட்ட யாழினி அவளிடம் ஒரு கணிப்பான் நீட்ட,

அதை வாங்க மறுத்தவள், “எனக்கு வேண்டாம் ஆசிரியை! ஆனால் கதிரிடம் நான் ஒரு விஷயம் சொல்லவேண்டும்; அனுமதி தருவீர்களா?”  பணிவுடன் கேட்டாள்.

ஆம் என்று யாழினி தலையசைக்க, தோழன் பக்கம் திரும்பியவள், “ வசதிகள் இருக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறேதுமில்லை; சௌகரியம் கருதி, நடப்பதை விட வாகனத்தில் செல்வது நல்லதுதான். ஆனால் அந்த வாகனம் பழுதடையும் சமயத்தில், அங்கேயே தேங்கி நிற்காமல், நம்மை இலக்கை நோக்கி அழைத்துச் செல்ல உதவுவது கால்களே;

நடைப்பழகுவது அத்தியாவசியம்; ஆடம்பரம் இல்லை;” என்றாள்.

அதைக்கேட்டு தலைகுனிந்தவன், “மன்னிச்சிடுங்க ஆசிரியை! கணிப்பான் பயன்படுத்துவதைக் காட்டிலும், நானே படிப்படியாகக் கணக்கு போடும்போது மனநிறைவாக இருக்கிறது.” யாழினியிடம் கூறியவன், தன்னை சரியாக வழி நடத்தியதற்கு நன்றிகளையும் தெரிவித்தான்.

மாணவர்களின் மனமாற்றம் கண்டவளின் கண்கள் பனித்தன. மகிழ்ச்சி தந்த மறுமலர்ச்சியின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டாள்.

சில நாட்களில் பள்ளி ஆண்டு நிறைவுக்கு வர, மாணவர்கள் தாங்கள் சேகரித்த பாடப்பகுதிகள் அடங்கிய கோப்பை காட்டியதில் பெண் மனம் நெகிழ்ந்துதான் போனது. அவளும் கொடுத்த வாக்கிற்கு இணங்க மாணவர்கள் விரும்பிய சுற்றுலா ஸ்தலத்திற்கு அழைத்துச் சென்றாள்.

யாழினி அன்பில் கரைந்த மாணவர்களும் இனி எப்போதும்  அக்கறை உள்ளவர்களாக இருப்போம் என்று ஆரவாரத்துடன் கோஷமிட்டனர்.

அன்று வீடு திரும்பியவளின் மனம் மகிழ்சியில் தத்தளித்தது. சிந்தனையில் கலந்தபடி வீட்டிற்குள் நுழைந்தவளை,

“வாழ்த்துக்கள் ஆசிரியை!” ஆரவாரத்துடன் வரவேற்றனர் கணவரும், குழந்தைகளும்.

“அம்மா! மாவட்டம் அளவில் நடந்த வாக்கெடுப்பில், உங்களுக்குத் தான் இந்த வருடத்தின் சிறந்த ஆசிரியர் விருது அறிவித்திருக்கிறார்கள்!” சந்தியா கடிதத்தை நீட்ட,

அன்னையின் கன்னத்தில் முத்தமிட்டு, அவளுக்கு இனிப்பு ஊட்டினாள் சரண்யா.

பிள்ளைகள் தந்த முத்தங்களைப் பரிசாகப் பெற்ற பெண்ணின் விழிகள், வெகுமதி கேட்டு கணவனை ஊடுருவியது.

என்ன வேண்டும் கேள் பெண்ணே!’ அவன் கண்கள் கவிபாட,

“இந்தியாவிற்கு திரும்பிவிடலாமா?” கண்சிமிட்டி அவனை வம்பிழுத்தாள்.

அவள் தோளினை வளைத்து அணைத்தவன், “அதில் எனக்கொரு பிரச்சனையும் இல்லை; ஆனால் அமெரிக்காவின் அதிபர் இப்போதுதான் என்னை தொடர்புகொண்டார்.

யாழினி சேவை இந்நாட்டிற்குத் தேவை!’ என்று கூறி நமக்கு குடியுரிமை அங்கீகரித்து விட்டார்!” அலட்டலே இல்லாமல் குடியுரிமை நேர்காணல் பற்றிய மற்றொரு கடிதத்தை நீட்டினான்.

இன்பதிர்ச்சி கொண்ட பெண்ணின் கருவிழிகள் பளபளத்தன. குடியுரிமை பெறுதல் தன்னவனின் எத்தனை நாள் தவம் என்று உணர்ந்தவள் அவனை இறுக கட்டியணைத்து முத்தமிட்டாள்.

“என் லட்சியங்களைத் தனதாக்கிக் கொண்டு, யாழினி என்னுடன் கைகோர்த்து பயணம் செய்ததால் மட்டும்தான் இது சாத்தியமானது!” அவள் காதோரம் இசைத்தவன், மனையாள் விட்டுக்கொடுத்த பல தருணங்களை நினைவுகூர்ந்தான்.

“ம்ஹூம்!” மறுப்பாகத் தலையசைத்து, “எதிலும் நேர்மறை விஷயங்களைப் பார்ப்பதற்குக் கற்றுக்கொடுக்கும் கணவரின் கைகோர்த்து நடக்கும்போது, காண்பவை யாவும் அழகே!” என்று விழிமூடி அவன் தோள் சாய்ந்தாள் யாழினி.

-வித்யா வெங்கடேஷ்

Advertisement