Advertisement

அத்தியாயம் 24

செல்வா லாவண்யாவை திருமணம் செய்து கொண்டதே சர்வேஷுக்காக. சர்வேஷ் தனது முடிவில் உறுதியாக இருப்பான் என்றெண்ணினால் அவனோ திருமணம் முடிந்த கையேடு சென்னை செல்லலாம் என்றான்.

“என்ன தம்பி வந்த காரியம் இன்னும் நிறைவேறவே இல்லையே. ஊருக்கு போகணும் என்று சொல்லுறீங்க?” செல்வா புரியாமல் கேட்டான்.

“அந்த விக்னேஷ் எப்போ வந்து பிரச்சினை செய்வான்னு தெரியல. நான் எங்கப்பாவுக்கு பையன் என்று இந்த ஊரே தெரிஞ்சிக்க முன்னாடி பெட்டி படுக்கையை கட்டிக்கிட்டு ஊர பார்த்து போறதுதான் உசிதம்” செல்வாவை போலவே நக்கலாக பேசினான் சர்வேஷ்.

“உங்களுக்காகத்தான் வந்தேன். இந்த லாவண்யா புள்ளைய அவசர அவசரமாக கல்யாணம் பண்ணதும் உங்களுக்காகத்தான். நீங்க என்னடான்னா இப்போ ஊரப் பார்த்து போகணும் என்று சொல்லுறீங்க. உங்களுக்கு என்ன செய்யணுமோ செய்யுங்க” பவ்வியமாக பதில் சொன்னான் செல்வா.

“டேய் டேய் நடிக்காதேடா… எப்படியாவது லாவண்யாவ கல்யாணம் பண்ணனும் என்று காத்துக் கிடந்த. சந்தர்ப்பம் அமைஞ்சதும் பண்ணிக்கிட்டு. இப்போ எனக்காக என்று கத சொல்லுறியா? ஹனிமூன் போகணும் என்று கூட அடம் பிடிக்காம நீ அடங்குறது அந்த விக்னேஷுக்கு பயந்து ஊர விட்டு ஓடத்தானென்று எனக்குத் தெரியாதா? ரொம்ப நடிக்காத” செல்வாவை அடிக்க கையோங்கிய சர்வேஷ் “லாவண்யா, ஹரி ஊருக்கு போக எல்லா ஏற்பாடும் எந்த பிரச்சினையுமில்லாம முடிஞ்சிருச்சே” என்று விசாரித்து அறிந்து கொண்டான்.

“அவனெல்லாம் ஒரு ஆளு, உங்கண்ணன் விட்ட ஒரே அடிக்கு துண்ட காணோம், துணிய காணோம் என்று ஓடிப்போன பயலுக்கு நான் பயப்படுவேனா? என்ன ஓட்ட உங்களுக்கு அவன் கெடச்சானே. அவனை விடுங்க. ஏன் தம்பி வந்த காரியம் முடியாம ஊருக்கு போக மாட்டீங்க என்று சொன்னீங்க. இப்போ என்னடான்னா இப்படி சட்டுனு கிளம்பிட்டீங்க. அந்த சுரங்கணி புள்ள நோ சொல்லிட்டது தான் காரணமா?”

“போய்யா போய்யா ஊருக்கு போற வேலைய பாரு. சும்மா கொடஞ்சி கிட்டு” என்ற சர்வேஷ் ஏன் சென்னை செல்ல முடிவெடுத்தான் என்று கூறாமல் மழுப்பினான்.

“உங்க பயணம், உங்க குடும்பம், உங்க இஷ்டம். என்ன வேணா பண்ணிக்கோங்க. நான் என் பொண்டாட்டிய கொஞ்ச போறேன்” செல்வா சர்வேஷுக்கு பழிப்பு காட்டியவாறே நகர

“டேய் கடுப்பேத்தாம போடா” செல்வாவை துரத்திய சர்வேஷ் தான் ஏன் ஊருக்கு செல்ல முடிவெடுத்தான் என்று யோசித்துப் பார்த்தான்.  

“டேய் சர்வேஷ் எங்கடா இருக்க? அம்மா என்னென்னமோ சொல்லுறாங்க” அலைபேசியில் பதறினார் ராஜ்பிரபு.

தந்தையை சமாளிக்க முடியாமல் அன்னை தான் எங்கே சென்றேன். எதற்காக சென்றேன் என்று கூறியிருப்பாள். அதனால் தான் தந்தை பதட்டமாக அலைபேசி அழைப்பு விடுத்திருக்கிறார் என்று சர்வேஷுக்கு புரிந்தது.

“நான் உங்க மூத்த மகன தான் பார்க்க வந்தேன். எனக்கும் உங்க கிட்ட நிறைய விஷயங்கள் பேச வேண்டி இருக்கு. போன்ல பேசுற விஷயமா இது? செல்வாக்கு கல்யாணம். கல்யாணம் முடிஞ்ச கையோட நான் கிளம்பி வரலாம் னு இருக்கேன். வந்து பேசுகிறேன். அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியா இருங்க. சும்மா, சும்மா போன போட்டு ஸ்கூல் போற பையன தேடுறத போல தேடாதீங்க. எனக்கும் கல்யாண வயசுதான்” என்று அலைபேசியை துண்டித்தான் சர்வேஷ்.

தனக்கும் கல்யாண செய்து வைக்குமாறு கூறினானா அல்லது, தானும் செல்வாவும் ஒரே வயது தான் என்று கூறினானா. கோபத்தில் கூறினா தெரியவில்லை.

கதிர்வேலை காணத்தான் இங்கு வந்தான். பார்த்து விட்டான். அவர்களின் நிலைமையை பார்த்து உதவி செய்ய நினைத்தான்.

பணம் தான் முக்கியம் என்று ஆறு வருடங்களாக காதலித்த சரோஜா அம்மாவையே தூக்கியெறிந்த அப்பாவால் இவர்கள் பணத்தை மதிப்பதில்லை. பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மனிதர்களை மதிக்கிறார்கள், பாசம் காட்டுகிறார்கள் என்று அறிந்து கொண்டான்.  

பணம் மட்டுமே எல்லாவற்றுக்கும் தீர்வு கிடையாது என்பதை புரிந்து கொண்டதால் தன்னுடைய உதவி இனி இவர்களுக்கு தேவை படாது. அண்ணா சொல்வது போல் நான் அவனுக்காகவும், அவன் எனக்காகவும் பார்த்தால் எங்களை பெற்ற அன்னையர்கள் கவலையில் ஆழ்ந்து விடுவார்கள்.

செல்வாவின் திருமணத்தின் பொழுது கதிர்வேலை சந்தித்து தான் ஊருக்கு செல்ல முடிவு செய்ததாக கூறினான் சர்வேஷ்.

“சந்தோசம். நல்லபடியா போய் சேரு” போயிட்டு வா என்று கூறாமல், திரும்பி வந்து விடாதே என்ற தொனியில் தான் பதில் கூறினான் கதிர்வேல்.

“எதுக்கு இப்போ நீ முகத்த “உர்” என்று வச்சிக்கிட்டு பேசுற? அப்பா பண்ணதுக்கு நான் பொறுப்பாக முடியாது. நேர்லதான் வராதே. பேசாதே என்று சொல்லுற. போன்லயாச்சும் என் கூட பேசலாம்ல. பழகின இந்த கொஞ்சம் நாள்ல உனக்கு என் மேல தம்பி எங்குற பாசம் வரவே இல்லையா?” ஏக்கமாகத்தான் கேட்டான் சர்வேஷ்.

“இல்ல” முகத்தில் அடித்தது போல் பதில் கூறிய கதிர்வேலை ஆழ்ந்து பார்த்து விட்டு வந்து விட்டான். 

ஒட்டும் வேண்டாம். உறவும் வேண்டாம் என்பவனிடம் வழிய சென்று எவ்வாறு உறவை தொடர்வது?

சென்னை செல்ல விமானம் நிலையத்துக்கு கூட யாரும் வரவில்லை. செல்வா, லாவண்யா ஹரியோடு சர்வேஷ் மட்டும் கிளம்பி வந்திருந்தான்.  

“வரும் பொழுது யாருக்கும் தெரியாம திருட்டுத்தனமாக வந்தோம். போகும் போது வழியனுப்பி வைக்கக் கூட ஆளில்ல” புலம்பியவாறே விமானநிலையத்துக்குள் அடியெடுத்து வைத்தான் செல்வா.

“சுரங்கணி இங்க என்ன பண்ணுறா? யாரை வழியனுப்ப வந்திருக்கா?” லாவண்யா தான் சுரங்கணியை பார்த்தாள். சுரங்கணிக்கும், சர்வேஷுக்கும் இடையில் நடக்கும் மௌன யுத்தம் லாவண்யாவுக்குத் தெரியாதே. சுரங்கணியை பார்த்த உடன் சத்தமாக முணுமுணுத்ததாள்.

சர்வேஷ் சுரங்கணி எங்கே என்று கண்களால் அலச, இவனை கண்டு முகம் மலர்ந்தவாறு அவளே நெருங்கி வந்தாள்.

“ஓஹ்… சிறிசேன முதலாளி என்ன பத்தி சொல்லிட்டாரா? அதான் வழியனுப்ப வந்திருக்காளா?” என்று சர்வேஷ் யோசிக்க,

“என்ன சொல்லாம கொள்ளாம கிளம்பிட்ட?” சுரங்கணி கேட்க, சர்வேஷ் அமைதியாக அவளை பார்த்தான்.  

“வா லயா நாம அந்த பக்கமா போய் உக்காரலாம்” செல்வா லாவண்யாவை அழைத்துக் கொண்டு நகர்ந்து சென்று அமர்ந்து கொள்ள,

“அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுறாங்களா” லாவண்யா ஆர்வத்தில் கேட்டு விட்டாள். 

“யாருக்குத் தெரியும்?” தோளில் தூங்கு ஹரியை தட்டிக் கொடுத்தவாறே பட்டும் படாமலும் பதில் சொன்னான் செல்வா.

சர்வேஷுக்கு சுரங்கணியின் மீது விருப்பம் இருக்கிறது உண்மைதான். அவளுக்கு இருக்கிறதா? அவனை பற்றிய உண்மைகளை அறிந்தால் அவள் சர்வேஷை விரும்புவாளா? மாட்டாளா? என்ற குழப்பம் வேறு இருக்க லாவண்யாவிடம் உண்மையை கூற முடியுமா? இன்னும் லாவண்யாவிடம் சர்வேஷ் நடிகன் என்ற உண்மையையே செல்வா கூறவில்லை.

“உங்களுக்குத் தெரியாதா? சொல்ல விருப்பமில்லைனா சொல்ல முடியாது என்று முகத்துல அடிச்சா போல சொல்லுங்களேன். எதுக்கு மழுப்புறீங்க” நாட்டை விட்டு போகிறோமே என்ற கவலையில் இருந்தவளுக்கு செல்வாவின் பதில் கடுப்பை ஏற்படுத்த சிடுசிடுத்தாள்.

“பார்டா என் பொண்டாட்டி கோபப்படுறா. அவங்க பஞ்சாயத்து நமக்கெதுக்கு? எதுக்குன்னு கேக்குறேன். நமக்கே ஆயிரம் பிரச்சினை. இதுல அடுத்தவங்க பிரச்சினைல மூக்கை நுழைக்கணுமா? பிரச்சினைக்கு தீர்வு சொல்ல முடிஞ்சா மட்டும் தான் மூக்கை நுழைக்கணும். முடியலையா மூடிக்கிட்டு உக்காரனும்”

“ஐயா சாமி நா எதுவும் கேட்கல. கொஞ்சம் அமைதியா இருக்கிறீங்களா. பேசியே கொல்லுறீங்க” முகம் திருப்பினாள் லாவண்யா.

“இல்ல நான் என்ன சொல்ல வரேன்னா என்ன பிரச்சினை என்று தெரியாம நான் உன் கிட்ட என்னனு சொல்லுறது” செல்வா சமாதானப்படுத்த முயல.

“நீங்க ஒன்னும் சொல்ல வேணாம். பேசாம இருந்தா போதும்” என்றாள் லாவண்யா.

செல்வா திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்ட நேரம், திருமணமும் அவசர, அவசரமாக அடுத்த முகூர்த்தத்திலையே நடந்தேறியிருக்க, அவளிடம் அமைதியாக அமர்ந்து அன்பாக பேசக் கூட அவனுக்கு நேரமில்லை. இவளையும், ஹரியையும் இந்தியா அழைத்து செல்லும் வேலைகளில் மும்முரம் காட்டினான்.

இதில் ஹரி இவளை விட்டு தூங்க மாட்டானென்று முதலிரவின் போதும் குழந்தை இவர்களோடுதான் தூங்கியது. அன்று செல்வா கோபப்படாதது லாவண்யாவுக்கு நிம்மதியை கொடுத்தாலும், அவன் இவளை விட்டு விலகி இருப்பது போலவே தோன்ற, “எதற்கு இந்த திருமணம்” என்ற கேள்வி அவளை குடைந்து கொண்டிருந்தது.

“அன்பினாலா? அனுதாபத்தினாலா? புரியவில்லை. எதை பேசினாலும் செல்வா நக்கலடிப்பதும், புரியாமல் பேசி குழப்பவாதும் என்று லாவண்யாவுக்கு கோபம் மட்டும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

இவர்கள் வார்த்தை யுத்தம் நடாத்திக் கொண்டிருக்க சர்வேஷும், சுரங்கணியும் மௌன யுத்தம் நடத்திக் கொண்டிருந்தனர்.

தான் பேசியும் இவன் பதில் சொல்லாமல் இருக்கின்றானே. இவனுக்கு தன் மேல் கோபமா?” என்று சுரங்கணி சர்வேஷை பார்த்தாள்.

“உன் தாத்தா சொல்லித்தான் இங்க வந்தியா?” சிறிசேன முதலாளி கூறாமல் நிச்சயமாக சுரங்கணி இங்கே வந்திருக்க முடியாது. தன் மீது விருப்பமில்லாதவள் ஏன் வந்தாள் என்ற கேள்வி சர்வேஷை குடையவே கேட்டான்.

அவனை ஆழ்ந்து பார்த்தவள் “என் கிட்ட விருப்பம் கேட்டியே அதுக்கு பதில் தெரிஞ்சிக்காமலையே போறியே. அத சொல்லிட்டு போகலாம் என்று தான் வந்தேன்” என்றாள்.

சர்வேஷுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. தான் யார் என்று அறிந்து கொண்ட பின் தான் இவள் தன்னை காதலிக்க முடிவு செய்தாளா? அப்படியென்றால் இவளுக்கும் பணம் தான் முக்கியமா?

ராஜ்பிரபு செய்த காரியத்தால் ஒரு நொடி, ஒரே நொடி சுரங்கணியின் மீது சந்தேகப் பார்வையை வீசினான் சர்வேஷ்.

“சீ சீ… இவள் அப்படிப்பட்டவல்லல” என்று அவன் மனம் சமாதானம் கூற,

“என்ன பதில் வேணாமா?” என்று சுரங்கணி குறும்பாக சிரித்தாள்.

“நீ இங்க வந்து நிற்கும் பொழுதே உன் பதில் என்னானு எனக்கு புரியாம இல்ல. நான் தெரிஞ்சிக்க ஆச போடுறது உன் தாத்தா உன் கிட்ட என்ன சொன்னார் என்று” காதலிலும் சரி, கணவன் மனைவிக்கிடையில் சரி சந்தேகம் என்ற ஒன்று வந்து விட்டால் அந்த உறவில் விரிசல் மட்டும் தான் இருக்கும்.

இன்று தீப்பொறியாய் தன் மனதில் எழுந்த இந்த சந்தேகம் நாளடைவில் கொழுந்து விட்டு எரியும் தீயாய் மாறி தங்களது உறவையே எரித்து விடக் கூடாதல்லவா. தன்னை காதலிக்க மறுத்த சுரங்கணியின் மனமாற்றத்துக்கு என்ன காரணம் என்று அறிந்துகொள்ளவே கேட்டான்.

“எனக்கு உன்ன பிடிக்காமலில்லை. ஆனா காதலிக்கிற அளவுக்கு பிடிச்சதா என்று தெரியல. நீயா கேட்டப்போ கூட புரியல. ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் தாத்தா போன் பண்ணாரு. நீ கதிரோட தம்பி என்று சொன்னாரு. நீ இந்தியால இருந்து வந்திருக்க, அதுவும் அவங்கள பார்க்க, பாசமா பழக என்று உன்ன பத்தி நல்ல விதமா சொன்னாரு. அப்போ கூட உன் மேல எனக்கு எந்த ஈர்ப்பும் இருக்குறது போல தோணல. 

தாத்தா திடிரென்று நான் யாரையாச்சும் லவ் பண்ணுறேனான்னு கேட்டாரு. இல்லனு சொன்னேன்” என்று விட்டு சர்வேஷை குறும்பாக பார்த்தாள்.

“இல்லையா? அப்போ எதுக்கு இவ்வளவு தூரம் வந்தாளாம்” என்று அவளை முறைத்தான் அவன்.

“அப்பொறம் தான் சொன்னாரு என் கிட்ட ப்ரொபோஸ் பண்ணத நீ தாத்தாகிட்ட சொன்னியாம். ஊருக்கு திரும்ப போகப்போறியாம். போனா திரும்ப வரவே மாட்டியாம். உண்மையா?”

“ஆமா…” என்றவனின் குரல் கடுமையாகத்தான் ஒலித்தது.

“உனக்கு அவனை பிடிச்சிருக்கா? தமிழன் எங்குறதால வேணாம்னு சொல்லிரியான்னு கேட்டாரு” கையை கட்டிக் கொண்டு இவள் யோசனையாக பேச கோபத்தில் இருந்த சர்வேஷ் “இவள் இப்பொழுது என்ன சொல்ல விளைகிறாள்?” என்று பார்த்தான்.

“நீ ஊருக்கு போற திரும்பி வரவே மாட்ட என்றது எனக்கு ஒரு மாதிரியாகிருச்சு. அப்போவே உன்ன பார்க்கணும் போல இருந்தது. உன்ன மிஸ் பண்ணிட்டேனோன்னு தோண ஆரம்பிச்சது. தாத்தா வேற உன்ன லவ் பண்ணுறியான்னு கேட்டுட்டாரா, இல்லனு சொல்ல தோணல.

அப்படி எல்லாம் இல்ல தாத்தா. பிரபு நல்ல பையன் தான். எனக்கு அவனை பிடிச்சிருக்கு. ஊருக்கு வந்த பிறகு வீட்டுல பேசிட்டு, அவனை பார்த்து பேசிக்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ளே ஊருக்கு போறான்னா போகட்டும் என்று அவர் கிட்ட சொன்னேன். ஆனாலும் மனசு கேட்கல. நீதான் போனா வர மாட்டேன்னு சொன்னியாமே அதான் வழியனுப்பி வைக்க வந்தேன்” என்று சிரித்தாள்.

சுரங்கணி பிரபு என்று கூறியதில்லையே அவளுக்கு தான் யாரென்று தெரியாது. சிறிசேன முதலாளி எதுவும் கூறவில்லை என்று புரிய அவளை சந்தேகப்பட்ட தன்னையே நொந்து கொண்டவன் அவளை இழுத்து அணைத்திருந்தான் சர்வேஷ்.

“என்ன பண்ணுற? எல்லாரும் நம்மளாதான் பாக்குறாங்க” என்ற சுரங்கணி அவனை விட்டு விலகத்தான் இல்லை.

“உன் கிட்ட நிறைய விஷயம் பேசணும். நான் கிளம்ப போற நேரத்துல வந்து நிக்கிறியே. இப்போ நான் எத சொல்ல? உண்மையிலயே உனக்கு என்ன பிடிக்குமா?” அவள் கையை பிடித்தவாறே அமர்ந்து கொண்டான் சர்வேஷ் 

“ஹாஹாஹா சத்தியமா தெரியல. நீ பேசின அன்னைல இருந்து, நீ பேசியதுதான் என் மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு. நீ என்ன ரொம்ப டிஸ்டப் பண்ணிட்ட. உன்ன துரத்த தொம்ப பாடுபட்டேன் முடியல. நீ ஊருக்கு போற, திரும்பி வரவே மாட்ட என்றதும் உன்ன மிஸ் பண்ண கூடாது என்று தோணிருச்சு. போறியா? போகாதே என்று போன் போட்டு சொல்லத் தெரியாதா? உன்ன பார்க்கணும் போல இருந்தது வந்துட்டேன். போன்ல பேசி பத்தாது. நேர்லயே பார்க்கணும், பார்த்தேயாகணும் என்று மனசு சொல்லிச்சு வந்துட்டேன்”

அவளுடைய அந்த பதிலே அவள் அவனை விரும்புவதை உணர்த்த போதுமானதாக இருந்தது.

“நான் லவ்வ சொன்னப்போ நீ விட்டுட்டு போன. இப்போ நீ வந்து சொல்லுற நேரம் நான் போறேன்”

தான் யார் என்று கூறினால் இவள் ஏற்றுக்கொள்வாளோ என்ற அச்சம் இருக்கத்தான் செய்தது. ஆனாலும் தான் கதிர்வேலன் தம்பி இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன் என்று அறிந்துதான் அவள் விருப்பத்தை கூறியிருக்கின்றாள். ஆகையால் தான் சர்வேஷ் என்ற உண்மையை கூறும் பொழுது அதையும் ஏற்றுக் கொள்வாள் என்று எண்ணினான் சர்வேஷ். 

“என் படிப்பு முடிய ஆறு மாசம் தான். படிச்ச படிப்புக்கு ஒரு ஆறு மாசம் இங்க வேலை பாக்குறேன். அங்க வந்து என்ன செய்யணுமோ அதையும் பார்க்கணுமில்ல. அதுவரைக்கும் போன்லேயே லவ் பண்ணலாம்ல. உனக்கு ஓகேவா?” சுரங்கணி எதையுமே தீர யோசித்து செயல்படுத்துபவள். விலகி இருந்து காதலிப்பது எவ்வாறு? ஒரே வழி அலைபேசி தானே. ஆனால் சர்வேஷுக்கு அவ்வாறல்லவே

“என்ன உசுரோட கொல்ல முடிவு பண்ணிட்டியே?” தன்னுடைய அலைபேசி கூட தன்னிடம் இருக்காது. அது செல்வாவின் கையில் தான் அதிக நேரம் இருக்கும் என்று இவளிடம் எவ்வாறு சொல்வான்?

“என்ன? நான் ஓகே சொன்ன நேரம் நீ என்ன பிரேக் அப் பண்ணிட்டியா?” கிண்டலடித்தாள் சுரங்கணி. தன்னுடைய அலைபேசி என் அவனிடமிருந்தும் தன்னை தொல்லை செய்யாதவன், தனக்கு விருப்பமில்லை என்று முடிவு செய்து விலகி இருந்தவன். நான் பேச மாட்டேன் என்று நினைக்கின்றானா? என்று சர்வேஷை பார்த்தாள் சுரங்கணி.

“நீ படிக்கணுமில்ல…”

தனக்காக யோசிக்கின்றான் என்னு சுரங்கணி புன்னகைக்க, சர்வேஷ் அவனுக்காகத்தான் யோசித்தான் என்று புன்னகைத்தான்.

“நைட்ல பேசலாம். ஒன்னும் பிரச்சினை இல்ல. இந்தியாக்கும், ஸ்ரீலங்காகும் ஒரே டைம் சான் தான்”

அது அவனுக்குத் தெரியாதா? அவனோடு பேச அவள் காத்திருப்பது மனதுக்கு இதமாக இருந்தது. “உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். இப்போ சொல்ல நேரமுமில்லை. எனக்கு சுத்தமா மூடுமில்ல. திரும்ப நாம நேர்ல சந்திக்கும் பொழுது நானே சொல்லுறேன்” விமானத்துக்கான அழைப்பு வரும் வரையில் அவள் கைகளை பிடித்தவாறு பேசிக் கொண்டிருந்தவன் விடைபெற்று சென்றான்.

“இந்நேரம் விமானம் கிளம்பியிருக்குமில்ல” அமைதியாக அமர்ந்திருந்த கதிர்வேலின் அருகே அமர்ந்தாள் பத்மினி.

“ம்ம் போய் இருப்பான்” என்றவன் வேறெதுவும் பேசவில்லை.

“என்ன தம்பி இருக்குற வரைக்கும் போ… போ.. என்று துரத்திட்டு போன உடனே சோகமா மூஞ்ச வச்சிக்கிட்டு இருக்கிறியா?” கதிர்வேலன் முகத்தை தன் புறம் திருப்பிக் கேட்டாள்.

“எனக்கென்ன சோகம். சந்தோசம் தான்” பத்மினியின் முகத்தை பாராமல் பதில் கூறினான் கதிர்வேல்.

“பார்த்தாலே தெரியுது. பிடிக்காத தம்பி மேல பாசம் இல்லாததனாலதான் அவனுக்கு கொடுக்க வேண்டிய காச கொடுக்காம இருந்தியா?”

செல்வா-லாவண்யா திருமணத்தின் பொழுது அறை கட்ட செலவான பணத்தை கதிர்வேல் கொடுப்பதாக கூறியிருக்க, திருமணத்தின் பொழுது அவனிடம் வந்த சர்வேஷ்

“ரூம் கட்ட செலவான பணத்தை நீ எனக்கு கொடுக்க வேணாம். பழனி அங்கிள், அமுதா ஆன்டிக்கு மாசா மாசம் செலவுக்கு கொடுத்து விடுறியா? போன உடனே செல்வாவுக்கு நிறைய செலவு இருக்கு. நான் காசு கொடுத்தாலும் அவன் வாங்க மாட்டான்.

நான் வேணாம் என்றாலும் நீ இந்த காச கொடுக்கத்தான் போற. உதவியா இத எனக்கு செய்யேன்” சாதாரண முகபாவனையில் தான் கேட்டான்.

அவனை ஒரு நொடி பார்த்த கதிர்வேல் எதுவும் பேசாமல் தலையை ஆட்டுவித்து வந்து வந்து விட்டான்.

கதிர்வேலுக்கு சர்வேஷ் மீது பாசம் இல்லாமல் இல்லை. அவன் சொந்த தம்பி என்று அறியா விட்டால் சர்வேஷின் குணத்துக்கு பாசத்தை பொழிந்திருப்பான்.

ராஜ்பிரபு என்ற தனி மனிதனை வெறுக்கும் ஒரே காரணத்தினால் சர்வேஷோடு எந்த உறவையும் வைத்துக்கொள்ள கதிர்வேல் அஞ்சினான்.

ஆம் அது ஒரு வகையான அச்சம் தான். ராஜ்பிரபு ஒரு தந்தையாக கதிர்வேலுக்கு எதுவுமே செய்ததில்லை. இனி செய்ய வேண்டும் என்று கதிர்வேல் எதிர்பார்ப்பதுமில்லை. பணத்துக்காக ஆறு வருடங்கள் காதலித்த அம்மாவையே பெற்ற மகனோடு தூக்கியெறிந்தவர் சர்வேஷின் மூலமா எந்த ஒரு உறவையும் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்றுதான் சர்வேஷையே ஒதுக்கினான்.

“பணமா? என்ன பணம்? அதான் ரூமை கட்டி வாடகைக்கு கொடுத்து தின்ன சோறு போட்டோமே அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு” இதையும் பத்மினியை பாராமல் தான் கூறினான்.

“நம்பிட்டேன் நம்பிட்டேன். எங்க பணத்தை கொடுத்தா உன் தொம்பி மனசு நோகும் என்று அவன் சொன்ன ஐடியாகு ஒத்துகிறது போல வந்துட்ட. ஏன் நீ பழனி மாமாவையும், அமுதா அத்தையும் பாத்துக்க மாட்டியா? நீ என்ன பாத்துக்கிறது? அவங்களே இன்னும் வேலைக்கு போய்கிட்டுதானே இருக்காங்க. அந்த விக்னேஷ் வந்து பிரச்சினை பண்ணாதான் உன் ஹெல்ப் தேவ படும்”

சர்வேஷுக்கும் அது தெரியும். தெரிந்து தானே பணத்தை அவர்களுக்கு கொடுக்குமாறு கூறினான். அது கதிர்வேலுக்கும் புரிந்ததினால் தான் மெளனமாக வந்து விட்டான்.       

அண்ணன்-தம்பி உறவை முற்றாக முறித்துக் கொள்ள இருவருமே எண்ணவில்லை. விலகி இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர் காரணம் ராஜ் பிரபு.

Advertisement