Advertisement

அத்தியாயம் 25

சென்னை வந்தடைந்த செல்வா விமான நிலையத்திலிருந்தே லாவண்யா மற்றும் ஹரியை அழைத்துக் கொண்டு சர்வேஷின் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தடைந்தான்.

இரத்தினபுரி கிராமிய மனம் வீசும் குட்டி நகரம். இங்கே மலைகள் சூழ்ந்திருந்தால் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புக்கள் நிறைந்திருப்பதை பார்த்து வியந்தாள் லாவண்யா.

“இங்க உங்க வீட்டை கண்டு பிடிக்கிறதே ரொமப கஷ்டமா இருக்கும் போலயே” 

“இது என் வீடில்ல. ஆக்டர் சர்வேஷோட வீடு. நான் அவரோட மேனேஜர். கல்யாணமாகத எனக்கு எதுக்கு டபல் ரூம் பிளாட்டு என்று வாங்காம இருந்துட்டேன். யாருக்குத் தெரியும் போன இடத்துல பொண்டாட்டியோட புள்ளையும் கிடைப்பான்னு” கதவை சாத்தியவாறே கூறியவன் சிரித்தான் செல்வா.

“நடிகரா? சொல்லவே இல்ல. நான் எங்க சினிமா பார்த்தேன். வீட்டுல டீவி இருந்தும் பார்க்கத்தான் தோண மாட்டேங்குது” என்றவள் “ஆமா பிரபு அண்ணா என்ன பண்ணுறாரு?” சுரங்கணியும் சர்வேஷும் காதலிப்பது அறிந்து கொண்ட பின் அவர்களை பற்றி அறிந்துக்கொள்ளும் ஆவல் எட்டிப்பார்க்க கேட்டு விட்டு செல்வா எங்கே சொல்லப் போகிறான் என்று ஹரியை தூக்கிக் கொண்டிருந்தவள் வீட்டைப் பார்த்தாள்.

“இது தம்பி வீடு தான். கல்யாண பரிசா வீட்டை வாங்கிக்கலாமா? வீடு நல்லா இருக்கா?”

“இப்போதான் யாரோ நடிகர் வீடு என்றீங்க. இப்போ பிரபு அண்ணா வீடு எங்குறீங்க. எப்போ பார்த்தாலும் உளறிக்கிட்டு” கோபத்தில் பொரிந்தவள் உள்ளே செல்ல முனைய, ஹரியோடு சேர்த்து அவளை இறுக அணைத்தான் செல்வா.

“எங்க ஓடுற. எப்போ பார்த்தாலும் பாடிகார்ட்ட கூடவே வச்சிருக்க. கட்டிப் பிடிக்க கூட முடியுதா?  உன் அத்தான் கிட்ட தைரியமா என்னதான் கல்யாணம் பண்ணிக்கிறானு சொன்ன, சொன்னதோடு சரி ஒரு கிஸ்ஸாவது தந்தியா?”

“நான் எதுக்கு தரணும். நீங்க தானே திடு திருப்புனு வந்து கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டீங்க. கேக்க தெரிஞ்ச உங்களுக்கு கொடுக்க தெரியாதா?” என்ன இவன் திருமணம் செய்ததிலிருந்து கண்டு கொள்வதே இல்லை என்ற கோபம் இருந்ததில் கேட்டு விட்டாள்.

“பயம்டி பயம். எங்க நீ கத்தி ஊரக் கூட்டிடுவியோன்னு பயம். நீதான் என்ன கேட்டாலும் தெரியாது என்று சொல்லுறியே. கல்யாணத்துக்கு அப்பொறம் என்னவெல்லாம் நடக்கும் என்று தெரியுமா? நான் பாட்டுக்கு ஏதேதோ பண்ண போய் நீ கத்தி என் மானத்த வாங்கிடக் கூடாதில்ல. அதான் அங்க அடக்கி வாசிச்சேன். இங்க நீ கத்தினாலும் பரவால்ல” மெதுவாக அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

செல்வா பேசும் பொழுதே வெக்கத்தில் முகம் சிவந்தவளின் மேனிக்குள மெல்லிய நடுக்கம் பரவ, செல்வா முத்தமிட்டதில் விசும்பலானாள்.

“என்ன? சந்தர்ப்ப சூழ்நிலையால உன்ன கல்யாணம் பண்ணிகிட்டேன்னு நினைச்சியா? உன்ன ரொம்ப பிடிக்கும் என்னால உனக்கு எந்த பிரச்சினையும் வந்துடக் கூடாது என்று தான் விலகி இருந்தேன். எப்போ விக்னேஷ் வந்து பிரச்சினை பண்ணானோ அப்போவே முடிவு பண்ணேன். தக்காளி என்ன பிரச்சினை வந்தாலும் பாத்துக்கலாம்டா னு” மனிதர்களை படிக்க தெரிந்த செல்வாவுக்கு மனனவியின் மனதை படிக்காத தெரியாதா?   

தன்னை எவ்வளவு நேசித்திருந்தால், எவ்வளவு புரிந்து வைத்திருந்தால் என்னை பற்றி யோசித்தித்து முடிவெடுத்திருப்பான் என்று புரிந்து கொண்ட லாவண்யா மனம் நிறைய புன்னகைத்தவள் “இப்போ கூட நீங்க என்ன சொல்லவரீங்க என்று எனக்கு சுத்தமா புரியல. விடுங்க முதல்ல. ஹரி பயந்துட போறான்” சதா நக்கல் செய்து சிரித்துக் கொண்டிருக்கும் செல்வாவின் வாழ்க்கையிலும் தன்னை போலவே பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது அதை அவனே சொல்லும் நேரம் வரும். இது அதற்கான நேரமல்லவே. அதனால் ஹரியை காரணமாகி அவனை விட்டு விலகி நின்றாள் லாவண்யா.

அவள் புரிந்துதான் விலகி நின்றாள் என்று செல்வாவுக்கு நன்றாகவே புரிந்தது. சிரித்தவாறே “ஆமா ஆமா குழந்தையை தூங்கவை இல்லனா உன்னையும், என்னையும் பார்த்தே நிஜமாவே பயந்துடா போறான்”

“எனக்கு வேல இருக்கு. உங்க கிட்ட வீணா பேசிகிட்டு இருக்க முடியாது” செல்வாவின் மறைமுகமான பேச்சின் அர்த்தம் வெக்கத்தில் முகம் சிவக்க வைக்க நடையை எட்டிப் போட்டு அறைக்கு சென்றாள். 

“இன்னும் வேகமா போ… சீக்கிரமா எல்லா வேலையையும் முடிச்சா தான் இன்னக்கி நைட்டுல விழிச்சி இருக்க முடியும்” சத்தமாக சிரித்தான் செல்வா.  

காதலிக்கும் பொழுதே லாவண்யாவனுக்காக யோசித்தான் கல்யாணத்துக்கு பிறகு நிச்சயமாக யோசித்துதான் செயல்படுவான். லாவண்யாவும் செல்வாவை நன்றாக புரிந்து வைத்திருக்கின்றாள் இனி இவர்களது வாழ்க்கையில் எந்தப்பிரச்சினையும் வராது.

வீட்டுக்கு வந்த சர்வேஷை தேவி அமைதியாக வரவேற்றாள். அவன் எங்கு சென்று வந்தாலும் த்ரிஷ்டி கழித்து, அவனை பிரிந்து இருந்த நாட்கள் எவ்வளவு நீளமானது என்ற அன்னையின் புலம்பல்கள் எதுவும் இல்லாதது சர்வேஷுக்கு வேதனையாகத்தான் இருந்தது.

“நீ வந்த உடனே அப்பா உன்ன பார்க்கணும் என்று சொன்னாரு” என்ற தேவி ஒதுங்கிக் செல்ல, சர்வேஷ் ராஜ்பிரபுவை காணச் சென்றான்.

ராஜ்பிரபு முற்றாக குணமடைந்திருந்தார். வழமையாக மகனை பார்த்ததும் கட்டித் தழுவி நலம் விசாரிப்பவர் இன்று ஒரு புன்னகையில் முடித்துக் கொண்டார். 

சரோஜாவிடம் உண்மையை கேட்டறிந்த பின் சர்வேஷாலும் தந்தையோடு முன்பு போல் சகஜமாக பேச முடியவில்லை.

“எதுக்கு என்ன பார்க்கணும் என்று சொன்னீங்க” எதோ தொழில் ரீதியான பேச்சு வார்த்தைக்கு வந்தது போலவே ஆரம்பித்தான் சர்வேஷ்.

சர்வேஷின் அலட்ச்சிய பேச்சிலையே அவனுக்கு உண்மை தெரிந்து விட்டது என்று புரிந்து கொண்ட ராஜ்பிரபு பெருமூச்சு விட்டவாறே “உங்கண்ணன பார்த்தியா? எப்படி இருக்கான்?” என்று கேட்டார். சரோஜாவை கைகழுவி விட்டார். அதற்காக பெற்ற மகனின் மீது பாசம் இல்லாமலா? இருப்பதினால் தானே கதிர்வேலை தன்னோடு அழைத்து செல்வதாக சரோஜாவிடம் கூறினார்.

தனக்கு ஏற்கனவே திருமணமான விஷயம் தேவிக்கு தெரியக் கூடாதென்று தானே கதிரை அநாதை ஆசிரமத்தில் வைத்து பார்த்துக்கொள்வதாக கூறினார்.

“ஆறு வருஷம். ஆறு வருஷம் சரோஜா அம்மாவை லவ் பண்ணி கல்யாணம் பண்ண உங்களால பணத்துக்காக அவங்கள விட்டு என் அம்மாவ கல்யாணம் பண்ண முடிஞ்சது?

ஆறு வருஷம் நீங்க அந்த ஊர்ல இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. அடிக்கடி சரோஜா அம்மாவுக்காக வேண்டியே போயிட்டு வந்திருக்குறீங்க. அப்படிப்பட்ட நீங்க உண்மையிலயே பணத்துக்காகத்தான் அம்மாவ கல்யாணம் பண்ணீங்களா?”

சரோஜாவின் பக்க நியாயத்தை கேட்டாயிற்று, இவர் பக்க நியாயத்தையும் கேட்டு விட்டுத்தான் எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என்று தான் சர்வேஷ் இந்தக் கேள்வியை கேட்டான்.

“ஆமா… உன் தாத்தா வந்து உன் அம்மாவ கல்யாணம் பண்ண சொல்லி கேட்டப்போ, எனக்கு காதல விட கெரியர் முக்கியமா பட்டுச்சு. உடனே உங்கம்மாவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதுக்காக நான் சரோஜாவ ஏமாத்த நினைக்கல. அவ கிட்ட உண்மைய சொல்லி அவள விவாகரத்து பண்ணிட்டேன்” என்றான்.

 “ஆஹ்… உங்க பக்கம் கொஞ்சமாச்சும் நியாயம் இருக்கும் என்று நினச்சேன். ஆனா பணத்துக்காக…. சே… இத்தனை வருஷமா அம்மாவ ஏமாத்தி நடிச்சிகிட்டு இருந்தீங்க. அந்நியோன்யமான ஜோடியா நீங்க ரெண்டு பேரும்? உலகத்துக்கு முன்னாடி என்னமா நடிக்கிறீங்க? அது சரி உங்க புள்ள இல்ல நான். அதான் அவ்வளவு ட்ரைனிங் கொடுத்தீங்களா? ஆனா உங்க மூத்த மகனுக்கு எந்த டிரைனிங்கும் வேணாம் அப்படியே உங்களை போல மகா நடிகனா தான் இருக்கான்” வெறுப்பை கக்கினான் சர்வேஷ். 

இவர் ஒழுங்கான தந்தையாக இருந்தால் நிச்சயமாக கதிர்வேல் தன் போக்கில் வளர்ந்திருக்க மாட்டான். கதிர்வேல் நல்லவன் தான். பத்மினியிடம் மன்னிப்பு கேட்கவில்லையே. அந்த குணம் இவரால் வந்தது என்று சர்வேஷ் தந்தை மீது கோபம் கொண்டான்.

“ஆமா இந்த உலகத்துல இருக்குற எல்லாருமே நடிகர்கள்தான். யாரும் யாருக்கும் எந்த டிரைனிங்கும் கொடுக்க அவசியமில்லை. சின்ன வயசுல தப்பு பண்ணிட்டு அம்மா, அப்பா முன்னாடி தப்பிக்க பொய் பொய்யா சொல்லி முயற்சி செஞ்சி தப்பிக்கிறோமே, நாம அங்கேயே சிறந்த நடிகன் என்று நிரூபிச்சிடுறோம்.

அங்க ஆரம்பிக்கிற பயணம் ஸ்கூல் காலேஜ், காதலி, மனைவி, குடும்பம், நண்பன், என்று எல்லார் கிட்டயும் பொய் சொல்லி நடிக்கிறது மட்டுமில்லாம, தொழில் பார்க்குற இடத்திலையும் நடிக்க வேண்டியதா இருக்கு.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் ஒரு நடிகன் இருக்கான். அவன் சொல்லுற பொய்யும், தப்பிக்கிற விதத்துலையும் தான் அவன் மகா நடிகன் என்று நிரூபிப்பான்.

நான் பண்ணது மத்தவங்களுக்கு தப்பா தெரியலாம். எனக்கு அது தப்பா தெரியல” என்றார் ராஜ்பிரபு.

இதற்கு மேல் இவரிடம் என்ன பேச வேண்டி இருக்கிறது? “உங்களுக்கு இன்னொரு குடும்பம் இருக்கு, இன்னொரு மகன் இருக்கான். அம்மா ரெண்டாவது தாரம் என்று வெளி உலகத்துக்கு தெரிஞ்சா அசிங்கமா போய்டும் என்று முயன்ற மட்டும் மூடி மறச்சிட்டீங்க. என்னாலையோ, என் அண்ணனாலையோ உங்க வெட்டி கௌரவத்துக்கு எந்த பங்கமும் வந்துடாது” என்றவன் கோபமாக வெளியேறினான்.

சர்வேஷ் வெளியேறிய உடன் உள்ளே வந்த தேவி “சர்வேஷ் கிட்ட உண்மைய சொல்லி இருக்கலாம்” என்றாள்.

லால் பிரகாஷ் தேவியை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜ்பிரபுவிடம் கேட்ட பொழுது எந்த காரணத்தையும் கூறாமல் தான் ராஜ்பிரபு மறுத்திருந்தார். 

எந்த காரணமும் கூறாததால் ராஜ்பிரபு வாழ்க்கையில் சாதித்து விட்டு திருமணம் செய்து கொள்ளலாமென்று இருக்கிறார் என்றெண்ணி தேவி ஒரு பார்ட்டியில் வைத்து ராஜ்பிரபுவை சந்தித்து தான் யார் என்று கூறாமல் ராஜ்பிரபுவின் விசிறியாக சந்தித்து பழகலானாள். 

ஒரு பார்ட்டியில் அதிகமா குடித்த ராஜ்பிரபு கண் விழித்தது தேவியின் அணைப்பில் என்ற பொழுதுதான் தான் செய்த தப்பு புரிந்தது.

தேவி தூங்கிக் கொண்டிருப்பதால் அன்று அவசர அவசரமாக அங்கிருந்து ராஜ்பிரபு கிளம்பி விட்டார். அன்றிலிருந்து ராஜ்பிரபுவின் தூக்கம் பறிபோனது.

சில நாட்களுக்கு பிறகு தேவி ராஜ்பிரபுவை சந்திக்க வந்து தான் கர்ப்பமாக இருப்பதாக கூற, ராஜ்பிரபு அதிர்ந்து என்ன செய்வது என்று யோசிக்கையில் “வாழ்த்துக்கள் மாப்புள” என்று உள்ளே வந்தார் லால் பிரகாஷ். 

அப்பொழுதுதான் தேவி அவர் மகள் என்று அறிந்து கொண்டார் ராஜ்பிரபு. தான் செய்த தவறால் இதிலிருந்த தன்னால் மீள முடியுமா? என்று திகைத்து நின்றார்.

தேவி-ராஜ்பிரபு திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்க, ராஜ்பிரபு தேவியிடம் தனக்கு திருமணமானதை கூறி விடலாம் என்று முடிவு செய்து தேவியின் வீட்டுக்கு சென்றார்.

அன்று தேவி வீட்டில் இல்லை. பாலர் சென்றிருக்கிறாள் என்று லால் பிரகாஷ் கூற, இவரிடம் கூறலாமென்று ராஜ்பிரபு தனக்கு திருமணமாகி குழந்தை இருப்பதை கூறினார்.

லால் பிரகாஷ் அதிர்ந்தாலும் “இது தெரிஞ்சா என் பொண்ணு தற்கொலை பண்ணிக்குவா. என் பொண்ண கொன்னுடாதீங்க மாப்புள” ராஜ்பிரபுவின் காலில் விழுந்து விட்டார் லால் பிரகாஷ்.

தேவி ராஜ்பிரபுவிடம் உண்மையான அன்பு வைத்திருந்தாள். அது அவள் நடத்தை, பேச்சு என்று பிரதிபலிக்க, லால் பிரகாஷ் கூறியது போல் உண்மையை அறிந்தால் தேவி நிச்சயமாக தற்கொலை செய்துகொள்வாள் என்று ராஜ்பிரபுவுக்கே புரிந்தது.

அதற்காக இரண்டு பெண்களோடு வாழ முடியுமா? அதனால் ஆறு வருடங்களாக காதலித்து திருமணம் செய்த சரோஜாவையே விவாகரத்து செய்ய முடிவு செய்தார்.

அப்படியொரு முடிவை எடுக்கக் காரணமும் சரோஜாவை பற்றி நன்கு அறிந்திருந்தமைதான். தான் செய்த தப்பை நிச்சயமாக சரோஜா மன்னிக்க மாட்டாள். தான் இல்லையென்று ஒருநாளும் அவள் தற்கொலை செய்துகொள்ளப் போவதில்லை. தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்வாள். அவள் தன்னை வெறுத்தாலும் பரவாயில்லை என்றுதான் பணத்தை காரணமாக்கி விலகி வந்து விட்டார்.

“வேணாம் தேவி. அவனுக்கு எந்த உண்மையும் தெரிய வேணாம். சில உண்மைகள் என்னைக்கும் வெளிய வரக் கூடாது. நான் தப்பானவனாக இருந்தாலும் பரவால்ல, சர்வேஷால தான் நம்ம கல்யாணமே நடந்தது என்று அவனுக்குத் தெரிய வேணாம்” என்றார் ராஜ்பிரபு.

ராஜ்பிரபுவிடம் தேவி முகம் கொடுத்து பேசாமல் இருக்கவே என்ன விஷயமென்று பொறுமையாக கேட்க, அழுதவாறே சர்வேஷ் இலங்கைக்கு சரோஜாவை காணச் சென்றதை கூறினாள் தேவி.

என்ன நடந்தது என்று அறிந்து கொண்ட ராஜ்பிரபு தேவியிடம் அவர் பக்க நியாயத்தை கூற,

தன்னை மன்னித்து விடும்படி கண்ணீர் விட்டு அழுதாள் தேவி.

“உனக்கு எதுவுமே தெரியாது. தெரியவும் கூடாது என்றுதான் இத்தனை வருஷம் அமைதியாக இருந்தேன். உனக்கு சரோஜாவை பற்றி தெரியும் என்று தெரிஞ்சிருந்தா புரிய வைச்சிருப்பேன்” என்றார்.

தேவி அழுதவாறே இருந்தாலே ஒழிய எதுவும் பேசவே இல்லை.

ராஜ்பிரபு சொன்னது உண்மைதான். சில இரகசியங்கள் வெளியே சொல்ல முடியாது. புதையல் போல் புதைந்து கிடைப்பது தான் நல்லது. 

“என்ன மன்னிச்சிடுங்க. அப்பாகிட்ட நீங்க பேசும் பொழுதே நான் வீட்டுக்கு வந்துட்டேன். அப்போவே உங்களுக்கு கல்யாணமான விஷயம் எனக்கு தெரியும். என் வயித்துல உங்க வாரிசு இருந்ததால என்னால உங்கள விட்டுக் கொடுக்க முடியல.

என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு நல்லா உங்களையும், சர்வேஷையும் பார்த்துக்கிட்டேன். எந்த உண்மைய நம்ம பையனுக்கு தெரியக் கூடாது என்று நீங்க நினைச்சீங்களோ அந்த உண்மை என் வாயலையே உளறிட்டேன். எப்படியோ சமாளிச்சிட்டேன்.

அதுவே இவ்வளவு பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறதே. அந்த குற்றஉணர்ச்சியாலதான் உங்க கிட்ட பேச முடியாம தவிச்சேன். இதில் எனக்கு ஏற்கனவே உண்மை தெரியும் என்று உங்களுக்குத் தெரிந்தால் என்னவெல்லாம் பிரச்சினை வருமோ? நீங்க சொல்லுறது போல் அந்த உண்மை என்னோடு புதைந்து போட்டும் என்று கதறினாள்.

தேவியின் மனதில் இருக்கும் இரகசியம் தெரியாமல் தேவியை சமாதானப்படுத்தலானார் ராஜ்பிரபு.

“மாலு, மாலு, மாலு தென் கேனபு மாலு. ப்ரெஷ் பிஷ். ப்ரெஷ் பிஷ். ஹுருள்ளோ, செமன் போல்லோ, கெழவல்லோ, தலபத், இஸ்சோ, தெல்லோ, மெகரல், சாடின், ஹால்மெஸ்ஸா, பாராமெஸ்ஸா”

சொந்த மீன் கடை ஆரம்பித்து கூவிக் கொண்டிருந்தான் கதிர்வேல்.

சேமித்த காசை வைத்து சிறிசேன முதலாளியின் கடைக்கு அருகில் ஒரு கடையை மாதாந்த வாடகைக்கு எடுத்து மீன் கடையை ஆரம்பித்திருந்தான்.

கதிர்வேல் இந்த ஊர்க்காரன், நம்பிக்கையானவன் என்றதும் கடை உரிமையாளர் “இரண்டு மாத வாடகை முன் பணமா போதும். எனக்கு ஒரு உதவி செய். என் அக்கா பையன் வெட்டியா தான் இருக்கான். அவனை கூட வச்சிகிரியா. அவனுக்கு மீன் வெட்ட நல்லா தெரியும்” என்று கூறி கேட்டிருந்தார்.

பத்மினி பார்க்கும் வேலையை விட்டு கதிர்வேலுக்கு உதவியாக இருப்பதாக கூறினாள். நல்லதம்பியும் மருமகனுக்கு உதவியாக கடையில் இருப்பதாக கூறியிருக்க, அதிகாலையிலையே எழுந்து நகரத்து மீன் வழங்கும் இடத்துக்கே சென்று வகை வகையான மீன்களை வாங்கி வருபவன் கடைபரப்பி விற்கலானான்.

சென்று வர ஒரு ஆட்டோ இருந்தால் காசு மிச்சமாகும், அதே போல் மற்ற ஏரியாவிலும் ஒரு ரவுண்ட் போய் வந்தால் தான் அன்றாடம் வாங்கும் மீன்களை விற்றுத் தீர்க்கலாமென்று கதிர்வேல் யோசித்துக் கொண்டிருந்தான்.

உதவிக்கு ஆள் இருந்தால் நல்லா இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது கடை உரிமையாளர் கேட்டிருக்க, பத்மினியும் சம்மதித்தாள்.

குத்தகைக்குத்தான் ஆட்டோவை வாங்கி இருந்தான். ஆட்டோவில் கதிர்வேல் மீன் விற்க செல்ல, கடையில் நல்லதம்பியும், உதவிக்கு வந்த மாதவனும் இருப்பார்கள். நல்லதம்பி வெளியே செல்லும் நேரம் மட்டும் பத்மினி இருப்பாள். 

இரவு எட்டு மணிவரை கடை திறந்திருக்க, மாலை ஐந்து மணிக்கு கதிர்வேல் கடைக்கு வந்து விடுவான். வருமானமும் நல்ல முறையில் தான் இருந்தது.

“சொந்தமா ஆட்டோ இருக்கு என்றுதான் பெயர். இதுல எங்கயாச்சும் பயணம் போக முடியுதா? மீன் வாட குடலை பொரட்டுது” சரோஜா கதிர்வேலை திட்டலானாள்.

“யம்மோ ஆட்டோ வாங்கினது நீ ஊர் சுத்தவல்ல. மீன் விக்க”

“இந்த வியாக்கியானம் மட்டும் பேசு. அந்த கோழிக் கடைக்காரனோடு உனக்கென்னடா பிரச்சினை?”

“அதுவா? டவுன்லேயே கோழி ஆயிரத்தி எம்பது ரூபாக்குக்குத்தான் போகுது. நான் ஆயிரத்து நூறு ரூபாக்கு கொடுக்கலாம்னு பார்த்தா அவன் ஆயிரத்து அம்பது ரூபாக்கு கொடுத்து கஸ்டமர் அவன் பக்கம் சாய்க்க பார்த்தான். நான் மீன் தானே விக்கிறேன். கோழி சைடு பிஸ்னஸ் தானே அவன் கண்ணுல படுற மாதிரி ஒரு போடு போட்டேன். கோழி ஆயிரம் ரூபா. வெட்டினா ஆயிரத்து எம்பது ரூபானு. பதறியடிச்சிகிட்டு வந்து சமாதானமும் பேசி சரண்டராகிட்டான்”    

“ஏன்டா கோழி ஆயிரம் ரூபா தானே. ஐம்பது, நூறு என்று லாபத்துக்கு வித்தா கட்டுப்படுயாகுமா?”

“நீ வேற… முழுக்கோழியே நம்ம ஏரியால சில வீடுகள்லதான் வாங்குறாங்க. வெட்டி பார்ட்ஸ் தான் பசங்களுக்கு மட்டும் வாங்குறாங்க. சும்மா கொடுத்த பாலிதீன் பாகுக்கும் காசு. நாடு நாசமா போச்சு”

“அத்தான் லாவண்யா பேசுறா…” என்றவாறே வந்த பத்மினி சரோஜாவை பார்த்து அமைதியானாள்.

“எப்படி இருக்கலாம். அவ புருஷன் அவள நல்லா பாத்துகிறானாமா?” சரோஜா விசாரிக்க, கதிர்வேல் அலைபேசியோடு நகர்ந்து விட்டான்.

பத்மினி சரோஜாவுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க, “எப்படி இருக்க லயா? என்ன உன் வீட்டுக்காரன் தகராறு பண்ணுறானா? பண்ணுறான்னா சொல்லு வந்து வகுந்துடுறேன்” கதிர்வேல் அலைபேசியில் செல்வாவை மிரட்ட

“அவர நானே பாத்துக்கிறேன். நீங்க எல்லாரும் எப்படி இருக்கிறீங்க? பொங்கலுக்கு அனுப்பின டிரஸ் எல்லாம் எல்லாருக்கும் சரியா இருந்ததா?” என்று கேட்டாள்.

“எல்லாருக்கும் அளவு சரியா இருந்தது. நான் அனுப்பின டிரஸ் கிடைச்சதா?” என்று ஆவலாக கதிர்வேல் விசாரிக்க,

“எல்லாம் கிடைச்சது. எனக்கு எதுக்கு நாலு ஷார்ட் அனுப்பி இருக்க கதிர் மச்சான்? ரெண்ட உன் தம்பிக்கு கொடுத்தேன். அவரு போட்டோ வேற எடுத்து அனுப்பியிருக்காரு அனுப்புறேன் எப்படி இருக்கு என்று சொல்லு” லாவண்யா ஸ்பீக்கர் மூடில் போட்டு பேசிக்கொண்டிருப்பாள் போலும் செல்வா குறுக்கே பேசினான்.

“அவனுக்கென்ன ராஜா மாதிரி இருப்பான். அவன் கொடுத்த வேட்டி, சட்டையைத்தான் நானும் போட்டேன் போட்டோவை அவனுக்கு அனுப்பி இருப்பியே” லாவண்யா அனுப்பியதாக சொன்ன உடைகள் சர்வேஷ் வாங்கிக் கொடுத்தது என்று தனக்குத் தெரியும் என்று போட்டுடைத்தான் கதிர்வேல்.

“யோவ் அண்ணனும் தம்பியும் ஜோக்கு காட்டுறீங்களா? இவங்க பேச மாட்டங்களாம். பரிசு மட்டும் கொடுத்துக்குவாங்கலாம். உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான் மாட்டிகிட்டு படாதபாடு படுறேன்”

“அவனை பேசச் சொல்லுடா… நான் பேசுறேன்”

“நான் எதுக்கு பேசணும்? போன்ல கூட பேசக் கூடாது என்று அவர் தானே சொன்னாரு. அவரையே பேச சொல்லு” செல்வாவின் அருகிலிருந்து பதில் கூறினான் சர்வேஷ்.

“ஆமா எங்க ஊரு பொண்ணு கிட்ட மட்டும் ராத்திரி பூரா பேசுறான். என் கிட்ட பேச மாட்டனா? அவனுக்கு பொண்ணு கொடுக்க வேணாம்னு சொல்லிடுவேன்” கதிர்வேல் மிரட்ட

“யோ அத்தான் உன் தம்பி கல்யாணத்துல நீங்க ரெண்டு பேரும் பேசுவீங்க என்று நினச்சா கல்யாணத்த முன்ன நின்னு நடாத்த வேண்டிய நீயே கல்யாணத்த நிறுத்த பாக்குறியா?” பத்மினி அலைபேசியை பிடுங்கியவாறு கதிர்வேலன் முதுகில் அடித்தாள். 

சர்வேஷ் அந்த பக்கம் சிரிப்பை அடைக்கயவாறு நிற்க “ரெண்டு பேரும் நல்லா கண்ணாமூச்சி ஆடுறீங்க” செல்வா முறைத்தான்.

அலைபேசியை அனைத்த கதிர்வேலோ “எதுக்கு நீ இப்போ சும்மா சும்மா டென்ஷாணாகுற? சுரங்கணியோட கிராஜுவேஷனுக்கு வந்தவன் ஒரு வாரம் கண்டில இருந்துட்டுதான் போய் இருக்கான். நம்மள பார்க்க வந்தானா?”

“ஆமா வந்தா சிவப்பு கம்பளம் விரிச்சி வரவேற்ப பாரு” கணவனை முறைத்தாள் பத்மினி.

சுரங்கணியின் கிராஜுவேஷனுக்காகவே வந்த சர்வேஷ் அவளை சந்தித்து தான் யார் என்ற உண்மையை கூறி இருந்தான்.

அமைதியாக அவனை பார்த்தவள் “தமிழ் படம் பார்த்திருக்கேன். ஆனா நான் நீ நடிச்ச எந்த படமும் பார்த்ததில்லை” என்றாள்.

“இத விட பெரிய பால்பா யாராலயும் கொடுக்க முடியாது” சிரித்தவன் ஊருக்கு சென்றால் கதிர்வேலை பார்த்தால் அவனை பற்றி தகவல்கள் கூறும்படி கேட்டுக் கொண்டான்.

சர்வேஷ் இரண்டு நாள் தான் இலங்கையில் தங்கி இருந்தான். சுரங்கணிதான் ஒரு வாரம் என்று கூறி கதிர்வேலை வெறுப்பேற்றி இருந்தாள்.

இலங்கை வந்தும் தங்களை பார்க்க வரவில்லை என்று தம்பியின் மீது இருந்த கதிர்வேலின் கோபம் சர்வேஷுக்கு சந்தோஷத்தை கொடுத்தது.

சுரங்கணி கதிர்வேலை சந்திக்கும் பொழுதெல்லாம் சர்வேஷை பற்றி பேசுவாளென்றால் வீட்டில் பத்மினியும் கதிர்வேலை குடைவாள்.

பாசமிருந்தாலும் விலகி இருப்பதுதான் சரி என்று கதிர்வேல் முடிவு செய்திருந்தாலும் அவனையும் மீறி தம்பியின் மீது பாசம் வெளிப்படத்தான் செய்கிறது.

சர்வேஷுக்கு கதிர்வேல் மீது கோபமெல்லாம் இல்லை. அவன் என்ன நினைக்கிறான்? ஏன் விலகி நிற்கின்றான் என்றும் தெரியும்.

இருவரும் விலகி இருந்தாலும், இருவரும் சந்திக்கும் நாள் கூடிய விரைவில் வந்து விடும். பாசமாய் பேசிக்கொள்வார்கள் அதில் எந்த சந்தேகமும் இல்லை. அது சர்வேஷின் கல்யாணநாளாக கூட இருக்கலாம்.

ராஜ்பிரபு சர்வேஷுக்காக உண்மையை கூறாமல் இருப்பதும், தேவி கணவனை நினைத்தும், மகனை நினைத்தும் உண்மையை மறைப்பதும், சர்வேஷும், கதிர்வேலும் பெற்ற அன்னையர்களை நினைத்து கண்ணாமூச்சி ஆடுவதும். ஒருவர் மற்றவர் மீது வைத்திருக்கும் பாசத்தினால் தான்.

இதில் யார் சிறந்த நடிகன்? தன்னை வெல்பவனே மகா நடிகன்.

 நன்றி

வணக்கம்

By MILA

Advertisement