Advertisement

அத்தியாயம் 9

கதிர்வேல் பத்மினியை காதலிப்பது அவன் பாடும் பாடல்களிலும், பேசும் பேச்சிலும் மட்டுமல்ல அவளோடு போடும் சண்டையில் கூட சர்வேஷுக்கு நன்றாகவே புரிந்தது.

“ஆம் உன்னை காதலிக்கிறேன்” என்று பத்மினியிடம் தன்னுடைய காதலை ஒத்துக்கொள்வதில் இவனுக்கு என்ன பிரச்சினை?

கல்யாணத்து முந்தைய இரவு ரமேஷ் இரண்டு பேக் மட்டுமே குடித்திருப்பான் என்பதும் சந்தேகம் தானே. பாதை மாறி போனவன் கல் தடுக்கிக் கூட விழுந்திருக்கலாம். போதையானதால் மயங்கி இருப்பான்.

“சர்க்கடிச்சவனெல்லாம் காலையில் குளிச்சி கல்யாணத்துக்கு ரெடியாகிக்கிட்டு இருக்கும் பொழுது கல்யாண மாப்புள போதையில் உளறிக்கிட்டு இருந்தா போதை மாத்திர போட்டிருப்பாங்க என்றுதான் நினைப்பாங்க. அந்த ரமேஷ் கதையை விடுங்க அண்ணா. உங்க பிரச்சினைக்கு வருவோம்” என்ற சர்வேஷ்

“நீங்க அண்ணிய லவ் பண்ணுறதால தான் அந்த ரமேஷுக்கு போதை மாத்திரை கொடுத்திருப்பீங்களோ என்று அண்ணி சந்தேகப்படுறாங்க. அதனால நீங்க அண்ணிய லவ் பண்ணுறீங்க என்று அண்ணி கிட்ட சொல்லாம இருக்கிறீங்க சரியா?”

“ஆமாடா… அந்த கூறுகெட்டவ என்னமோ அவ உலக அழகியாட்டம் நான் அவள கல்யாணம் பண்ணிக்க அந்த ரமேஷுக்கு போதை மாத்திரை கொடுத்து மட்டையாக்கிட்டேன்னு நினைக்கிறா. அப்போ போய் ஆமாடி நான் உன்ன லவ் பண்ணுறேன் னு சொல்ல முடியுமா? சொன்னா நான் தான் ரமேஷுக்கு போதை மருந்து கொடுத்தேன்னு ஒத்துக்கொண்டது போல ஆகாதா?

சொல்லவும் முடியாம. சொன்னா என்ன பிரச்சினை வரும் என்று தெரிஞ்சி மனசுக்குள்ளயே போட்டு உருட்டிக்கிட்டு அவ கூட வாழவும் முடியாம, தினம் தினம் செத்துக்கிட்டு இருக்கேன்டா” கண்களில் பெருகும் கண்ணீரை அணிந்திருந்த ஷார்ட் கையில் வடித்தான் கதிர்வேல். 

“நீ போதை மருந்து கொடுக்களையே அப்போ எதுக்கு பயப்படுற? தைரியமா ஆமா நான் உன்ன தான்டி லவ் பண்ணுறேன்னு சொல்ல வேண்டியது தானே” சர்வேஷ் சாதாரணமாக கூறினான்.

“அட போடா… உனக்கு பத்மினிய பத்தி தெரியாது. ஒருவேளை அப்படி இருக்குமோ, ஒருவேளை இப்படி இருக்குமோ என்று சந்தேகப்படுவா. இல்ல இல்ல உனக்கு நான் சொல்லுறது புரியல்னு நினைக்கிறன்.

அந்த ரமேஷ் பய இருக்கானே. இவள உசார் பண்ணி முதல்ல பண்ணினது நான் இவள லவ் பண்ணுறேன் என் கிட்ட விலகி இரு என்று இவள பிரைன வாஷ் பண்ணதுதான்.  

அதான் ரமேஷ காணோம் என்றதும் என்ன சந்தேகப்பட்டா. நான் போய் லவ் பண்ணுறேன்னு சொன்னா…. அவன் போதைல மிதந்தத்துக்கு நான் தான் காரணம் என்று முடிவே பண்ணிடுவா” கோபத்தில் சீறினான்.

“என்ன அண்ணா… நீ சின்னப்புள்ளத்தனமா யோசிக்கிற? அதுக்காக அண்ணிகிட்ட இருந்து விலகி இருந்தா சரியா? கோபப்பட்டா சரியா?” எதுக்கு இதெல்லாம் பண்ணுற? என்று கேட்டான் சர்வேஷ்.

“அவளாகவே என்ன ஏத்துக்கணும், சந்தேகப்படுறத விட்டுடனும் என்றுதான். இதுல அந்த ரமேஷ் வேற ஊருக்கு வந்துட்டான். ரெண்டு பேரும் சேர்ந்து ஊர விட்டு ஓடிப் போவாங்களோனு பயமா இருக்கு. அத நினச்சா மனசு பக்கு, பக்குனு அடிக்குது”

கதிர்வேல் சொன்னா விதத்தில் சத்தமாக சிரித்த சர்வேஷ் “அண்ணி அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க. ஆனா நீ ஓவராதான் அலும்பு பண்ணுற அண்ணா…

அண்ணி உன்ன ஏத்துக்கணும்னா நீ அவங்களுக்கு பிடிச்சா மாதிரி நடந்துக்கணும் இப்படி தினமும் குடிச்சிட்டு வந்து அழிச்சாட்டியம் பண்ணக் கூடாது” குழந்தைக்கு புரிய வைப்பது போல் புரிய வைத்தான்.

“நான் ஒன்னும் அவளால குடிகல. கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே குடிக்கிறேன். என்ன அம்மாக்கு தெரியல. கல்யாணத்துக்கு பிறகு வேணும்னே தெரியும்படி குடிச்சிட்டு வர ஆரம்பிச்சேன். இல்லனா அம்மா அவளை திட்ட ஆரம்பிப்பாங்க.

டேய் நான் அவகிட்ட நல்ல முறைல நடந்துகிட்டா நான் நடிக்கிறதா சொல்லுவாடா. நடிக்கிறியா. நடிக்கிறியா என்று சந்தேகப்பட்டு சண்டை போட்டு அவ என் கிட்ட இருந்து விலகி இருக்குறதுக்கு நானே அவகிட்ட இருந்து விலகி இருந்துட்டு போறேன்.

அத விட நான் அவகிட்ட நல்லபடியா நடந்துகிட்டு எங்க அவ என் கிட்டயே வந்து அத்தான் என்னால ரமேஷ மறக்க முடியல. என்ன அவன் கூடயே சேர்த்து வை அத்தானு சொல்லிடுவாளோனு பயமா இருக்கு. எனக்கு அவ முக்கியம். அத விட அவ சந்தோசம் முக்கியம். என்ன போக விடு அத்தான்னு அழுது ஸீன் கிரியேட் பண்ணா நானே போ..னு சொல்லிடுவேனோனு எனக்கு பயம்.

அவ என் பொண்டாட்டிடா. நான் ஒன்னும் தியாகி இல்ல. எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாட்டு பாடி வாழ்த்தி வழியனுப்பி வைக்க” ஆவேசமாக கத்தியவன் அமைதியாக “நானும் மனுஷன் தாண்டா எனக்கும் ஆசாபாசம் இருக்கு. அவள எவ்வளவு லவ் பண்ணுறேன்” என்றவன் “அந்த வெத்தல மூஞ்சிக்கு என்ன பிடிக்கல. அந்த சுமார் மூஞ்சி ரமேஷத்தான் பிடிச்சிருக்கு. இவள அவன் கூட போக விட்டுட்டு அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சலை அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில என்று பாட சொல்லுறியா?” என்று கத்தினான்.

அந்த பயம் தான், தான் பத்மினியை சாதாரணமாக நெருங்கியதை கூட தப்பாக பேச வைத்தது என்று சர்வேஷுக்கு இப்பொழுது புரிந்தது. பத்மினி மேல் இவ்வளவு காதலா? இவன் காதலை அறிந்து கொண்டு பத்மினி இவனை புரிந்து கொண்டு வாழ்ந்ததால் சாந்தோம் என்று சர்வேஷ் மனதுக்குள் பூரித்துக் கொண்டிருந்தான். 

தலையை உலுக்கிய கதிர்வேல் “இப்போ நான் நடத்துகிற விதத்துல. இப்போ மாமியாரும், மருமகளும் எல்லா விசயத்திலையும் ஒன்னு கூடி என்ன கும்மியடிக்கிறாங்களே நான் கெட்டவனாகவே இருந்துட்டு போறேன். ஆனா பத்து என் கூடவே இருக்கணும்.

“டேய் தம்பி நாம லவ் பண்ணுற பொண்ணு வேற ஒருத்தன லவ் பண்ணுறான்னா தான் விட்டுட சொன்னேன். பொண்டாட்டிய விட்டுக் கொடுக்க சொல்ல. என்னால விட்டுக் கொடுக்கவும் முடியாது. இந்த லூசு அப்படி ஏதாவது முடிவெடுக்குமான்னு எனக்கு பயமா இருக்கு.

அந்த பயத்துனால தான் நான் அவ கிட்ட இருந்து விலகியே இருக்கேன். அவ அம்மா கூட ஒட்டி கிட்டா அம்மாக்காக எந்த தப்பான முடிவையும் எடுக்க மாட்டா. அந்த ரமேஷ் வேற ஊருக்கு வந்திருக்கான். என்ன நடக்குமோ” என்ன செய்யப் போகிறேன்? என்ன நடக்கும் என்ற அச்சம் கதிர்வேலன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

சர்வேஷும் பார்த்திருக்கிறான். கதிர்வேல் சரோஜாவை ஒரு வார்த்தை சொன்னால் பத்மினி எகிறிக் கொண்டு வருவாள். பத்மினியோடு கதிர்வேல் சண்டை போட்டால் சரோஜா வக்காலத்து வாங்குவாள்.

“ஓஹ்…  அதான் கல்யாணம் ஆனா அன்னைக்கே அண்ணிக்கு சாதகமா பேசி கொட்டகையை குத்தைகைக்கு எடுத்தியா?” சர்வேஷுக்கு சிரிப்பாக இருந்தது. மறுநொடி “நீ இவங்கள பத்தி யோசிக்கிற இவங்க ரெண்டு பேரும் உன்ன புரிஞ்சிக்கலையே” கவலையாக சொன்னான்.

காலங்கள் மாறும்

கோலங்கள்மாறும்

ஒருநாள் உலகம்

இவன் யார் என்று

அறியும்

இங்கே எல்லாரும் நல்லவங்கதான்

நாம தூங்குறப்போ

எல்லாரும் கெட்டவங்கதான்

தூங்கி முழிக்கிறப்போ

“டேய் அண்ணா ஏதாவது ஒரு பாட்ட பாடு. எந்த படத்துல இருந்து எந்த பாட்டு என்று கண்டு பிடிக்கிறதுக்குள்ள என் மூள டயட் ஆகிடுது” இதுதான் பிரச்சினை என்று அறிந்து விட்டதால் இனி பத்மினியிடம் பேசி புரிய வைத்து விடலாம் என்று நினைத்தான் சர்வேஷ்.

“உன் கிட்ட பேசின பிறகு மனசு பறக்கிறது போலவே ஒரு பீல் டா…” சர்வேஷின் தோளில் தட்டினான் கதிர்வேல்.

“அப்படியா…. அப்போ நீ இன்னொரு உண்மையையும் சொல்லணும்”

“என்ன உண்மைடா…”

“வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காம இருக்குறது கூட அம்மா உன்ன திட்டனும், அண்ணி பக்கம் நிற்கணும் என்று எனக்கு புரியுது. ஆனா… காலையிலையே பஸ் ஏறி போறவன் எங்க போற? என்ன பண்ணுற? சூன் வேன்ல பான் விக்க போறியே எப்போ குடிக்கிற? முக்கியமா நீ ஐஸ் அடிக்கிறியா?”

“அடப்பாவி… என்ன வேவு பாத்தியாடா. உன்ன…” சர்வேஷின் தலையில் “நங்கு நங்கு” என்று சத்தம் வர பலமாக கொட்டினான் கதிர்வேல்.

“டேய் அண்ணா வலிக்குது”

“மணியோட ஒப்பிட வேணாம்னு சொன்ன. மணிய விட மோசமான நாயா இருக்கியேடா” கதிர் சிரிக்க, சர்வேஷ் அவனை முறைத்தான்.

“சரி சரி முறைக்காத. நீ நிறைய கேள்வி கேட்டியே முதல்ல எந்த கேள்விக்கு ராசா பதில் வேணும்” கதிர்வேல் நக்கல் பண்ண சர்வேஷ் மீண்டும் முறைத்தான்.

“என்னமோ தெரியலடா உன் கூட ஜாலியா விளையாடலாம்னு தோணுது. அடிக்கணும்னு தோணுது. நீயும் கண்டுக்க மாட்டியே அதனால கூட இருக்கலாம்” அவனே காரணம் சொல்லி புன்னகைக்க,

“எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும் அண்ணா. நீ சந்தோசமா சிரிச்சிகிட்டு இருக்குறத பார்க்கணும். முக்கியமா அண்ணி கூட சேர்ந்து வாழனும். அது போதும்” என்ற சர்வேஷ் “காலைல எங்க போற?” என்று கேட்டான்.

“வெளிப்பொலைல {ஆற்றங்கரை} மண் கரை போடத்தான்” ஒரு டிப்பருக்கு இவ்வளவு காசு தேறும் என்றவன் ஆற்றில் வெள்ளம் வந்தால் மண் அல்ல முடியாததால் தண்ணீர் குறைந்த அளவு இருக்கும் பொழுது முடிந்த அளவு அள்ளி வைப்போம். “நாலு பேர்தான் வேலை செய்யிறதால ஒரு நாளைக்கு மூணு இல்லனா நாலு டிப்பர் மண் அள்ளிடுவோம். அதனால கொஞ்சம் காசு அதிகமாகவே கிடைக்கும்” என்றான்.

“ஆத்துல தண்ணி அதிகமான நாளைக்கு? எங்க போற?”

இந்த மூன்று நாட்களாக மழை கொட்டோ கொட்டு என்று கொட்டிக் கொண்டிருக்க, ஆற்றில் நீர் மட்டம் அதிகமாகத்தான் இருந்தது. இன்று அதிசயமாக கதிர்வேல் வெளியே கிளம்பால் இருந்தான். இன்றுதான் சர்வேஷ் முதன் முதலாக கதிர்வேல் வீட்டில் இருப்பதை பார்க்கின்றான்.

“லைப்ரரிக்கு போய் புக்கு படிப்பேண்டா…”

“என்ன?” இந்த பதிலை சர்வேஷ் எதிர்பார்க்கவில்லை.   

“என்ன இம்புட்டு ஷாக் ஆகுற? ஆரம்பத்துல லைப்ரரிக்கு போய் புக்கு படிச்சேன். இப்பதான் போன்லேயே புக் படிக்க எத்தனையோ ஆப் வந்திருக்கே. இப்போ கொஞ்சம் கம்பியூட்டர் கத்துக்கலாம் என்று கத்துக்கிட்டு இருக்கேன். நாளை பின்ன எனக்கும் பத்மினிக்கு புள்ள பொறந்தா அப்பன் படிக்கலைனு சொல்லக் கூடாதில்ல” சாதாரணமாக கூறியனவை ஆச்சரியமாக பார்த்தான் சர்வேஷ்.

“தான் இத்தனை நாள் பார்த்த கதிர்வேலா இவன்? உழைக்க வேண்டும், பத்மினியோடு வாழ வேண்டும் என்று மட்டும் எண்ணவில்லை. எதிர்காலத்தையும் நினைத்து தான் செயல்படுகிறான். இவன் தப்பானவனாக இருப்பானா? தப்பு செய்வானா? நிச்சயமாக இல்லை” மனம் நிறைய புன்னகைத்தான் சர்வேஷ்.

“பதல்ல {gem mine} கொஞ்ச நாள் வேல செஞ்சேன். கல்லு {மாணிக்க கல்} பார்க்க தெரியும் அப்போ அப்போ ஈரொட்டு வியாபாரமும் பண்ணுவேன். {{விலை குறைந்த}மாணிக்க கற்களை வாங்கி {சேகரித்து} விற்பது} இப்போ கல்லு கூட நம்ம ஊருல அதிகம் கிடைக்கிறது இல்லன்னுதான் நிறைய பேர் மடகஸ்கார் போறாங்க. பணம் இருந்தா போலாம். இல்லாதவன் என்ன பண்ணுறது?

“சரி உன்ன பாலோ பண்ணதுல நீ எங்க குடிக்கிறன்னே தெரியல. எப்போ குடிக்கிற? எவ்வளவு குடிக்கிற?” வந்த அன்றிலிருந்து இருக்கும் சந்தேகம் அல்லவா.

“என்ன பாலோ பண்ணியே என்ன கண்டு பிடிச்ச முதல்ல அத சொல்லு ஏன்னா தம்பி இது தொழில் ரகசியம். நாளை பின்ன நீ எனக்கு எதிரா கடைய தொறந்திட்டீனா?” தீவிரமான முகபாவையில் தான் கூறினான் கதிர்வேல்.

“வயின் ஷாப்ல ஒரேயொரு சரக்கு பாடில வாங்குற. சூன் வேன் பான்ல எரிட்டினா சுத்திக்கிட்டே இருப்ப. திரும்ப பேகரிக்கு வருவ. அங்க இருந்து வீடு”

“இதுதான் நீ வேவு பார்த்த லட்சணமா? ஒருவே…ளை. ஒருவேளை நீ சி.ஐ.டியாக {உளவுத்துறை} இருக்குமோ என்று சந்தேகப்பட்டேன். நீ வேவு பார்த்த லட்சணத்துல நீ என் தம்பிதான்னு புரிஞ்சி போச்சு” சத்தமாக சிரித்தான் கதிர்வேல்.

“அண்ணா… ஓட்டாத… சொல்லு”

“டேய் தம்பி இந்த கொரோன இருக்கே கொரோனா. இதனால பலபேரோட பிஸ்னஸ் படுத்திருச்சு. மக்கள் வீட்டுல இருந்தே பொருள் வாங்க பழகிட்டாங்க. ட்ரன்கஸ் மட்டும் விதிவிலக்கா என்ன?

நம்ம ஏரியால இருந்து டவுனுக்கு வர பஸ்ஸு டைம்க்கு தான் இருக்கும். ஆட்டோலதான் வரணும். ஆட்டோக்கு கொடுக்குற காசுக்கு கொஞ்சம் சரக்க உள்ள தள்ளலாமே என்று நம்ம எரிய குடிகார சங்கத்தலைவருக்கு ஐடியா கொடுத்தேன். பொறுப்பை என் கிட்ட கொடுத்துட்டாரு”

“நீ சொல்லுறது சுத்தமா புரியல”

“பேக்கரி ஓனருக்கு கமிஷன் கொடுத்து காதும் காதும் வச்சா போல பான் விக்கிறதோட சரக்கையும் சேர்த்து விக்கிறேண்டா மடையா?”

“என்னண்ணா சொல்லுற?” அதிர்ந்தான் சர்வேஷ்.

“ஷாக்க கொறடா… கொரோனா காலத்துல ஆரம்பிச்ச பிஸ்னஸ். இப்போ பெட்ரோல் விலையால எவன் டவுனுக்கு போக காச செலவு பண்ண விரும்புறான்? சரக்க சப்லை பண்ணுறது நம்ம வண்டிதான்” சினிமாவில் கள்ளக்கடத்தல் ஸீனை மிஞ்சும் அளவுக்கு கதை சொன்னான் கதிர்வேல்.

“அடப்பாவி…” என்று சர்வேஷ் நினைத்தாலும் அறிவாளிதான் என்றும் நினைத்தான்.

“இத பத்து கிட்ட சொல்லிடாத, அவ என்ன உரிச்சு உப்பு போட்டு ஊறுகாயா காய போட்டுடுவா” நடுங்க வேறு செய்தான் கதிர்வேல்.

“அந்த பயம் இருக்கில்ல. அப்போ எதுக்கு இந்த வேலைய பாக்குறீங்க? போலீஸ் பிடிக்க போகுது”

“இது சர்விஸ் பா…” என்றவன் போலீஸ் என்றதும் “இதுவரைக்கும் மாட்டல. மாட்டினா மாமூல் கொடுத்து எஸ் ஆக வேண்டியதுதான்”

“நீ எப்போ குடிக்கிற? எவ்வளவு குடிக்கிற? அத சொல்லு”

“வியாபாரம் பண்ணும் போதுதான்”

“வியாபாரம் பண்ணும் போதுனா… வண்டியோட்டும் போதா? உன்ன என்ன பண்ணலாம். எவ்வளவு குடிப்ப?” பதறினாலும் முகத்தில் காட்டாமல் அடுத்த கேள்விக்குத் தாவினான் சர்வேஷ்.

அளவாத்தான் குடிப்பேன். அம்மாவையும், பத்துவையும் வெறுப்பேத்த கொஞ்சம் ஸீன் கிரியேட் பண்ணுவேன். அதெல்லாம் தனி சுகம். உனக்கு சொன்னா புரியாது. உன் கேள்வி முடிஞ்சிருச்சா” என்று கதிர்வேல் சிரிக்க,

“ஐஸு, ஐஸு..” சர்வேஷ் முக்கியமான கேள்வி என்று சொல்ல வந்தான்.

“டேய் யார்டா இந்த புள்ள” என்று அவனை வார, சர்வேஷ் முறைத்தான்.

“ஐஸு கூட இப்போ எல்லா இடத்துலயும் கிடைக்கிது. நான் ஐஸ் எல்லாம் அடிக்கல. எடுத்தா ஜிவ்வுணுதான் இருக்கும். ஆனா… அதோட சைட் எபெக்ட்டால நிறைய பேர் பாதிப்படைஞ்சிருக்காங்க. வெட்டுக்குத்து சம்பவங்கள் வேற நடந்திருக்கு. உடம்பு கேடு என்று தான் சிகரெட் குடிக்கிறான். நானே சர்க்கடிக்கிறேன். அதுக்கு கவலை என்ற காரணம் இருக்கு. ஆனா போதை மருந்து வேற விஷயம். அதுக்குள்ள எல்லாம் போக கூடாது. டேஞ்சர் சோன்.

ஐஸு புள்ளய கை மாத்தி விடச் சொல்லி எனக்கு கூட ஒரு ஓபர் வந்தது. சரக்கு லீகல். மாட்டினா வெளிய வரலாம். ஐஸு இல்லீகல் டச்சு பண்ணவே கூடாது” சிரித்தான் கதிர்.

“சந்தோசம். பணத்துக்காக பல குடும்பத்தோட சாபத்தை வாங்காம இருக்கிறியே. அப்படியே அந்த சரக்கு பிஸினஸையும் நிறுத்திட்டு. நாம வேற பிஸ்னஸ் பண்ணலாம்”

“டேய் இது பிஸ்னஸ் இல்ல சர்விஸ்”

“ஆமா… ஆமா… கூலிவேலைக்கு போய் கஷ்டப்பட்டு வர்றவங்க உடம்பு வலிக்கு குடிக்கிறது, காதல் தோழ்வினால மனச ஆத்திக்க ஊத்திக்கிறது, பிரச்சினைகளை மறக்க குடிக்கிறது, கல்யாணம், காதுகுத்து, இழவு வீடு. பர்த்டே பார்ட்டி என்று குடிக்க ஆயிரம் காரணம் இருக்கு. தப்பு என்று தெரிஞ்சே குடிக்கிறவன திருத்த முடியாது. அவனுக்கு ஊத்திக் கொடுக்காதே என்றுதான் சொல்லுறேன்”

“சரிடா… சரிடா… பார்க்கலாம்” புன்னகைத்தான் கதிர்வேல்.

கதிர்வேலின் புன்னகையை பார்த்து சர்வேஷின் மனம் நிறைந்தது. கூடிய சீக்கிரம் பத்மினியோடு பேசி இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணினான்.

“இந்த மழைல எங்கேயும் போக தோணல நான் தூங்கபோறேன். நீ என்ன பண்ண போற? சர்வேஷை பார்த்துக் கேட்டான்  கதிர்வேல்.

சர்வேஷின் அலைபேசி அடிக்கவே “இதோ சவாரி வந்திருச்சு. நான் போறேண்ணா… நீ தூங்கு” என்று சர்வேஷ் கிளம்ப கதிர்வேல் தூங்கலானான்.

சர்வேஷ் ஆட்டோ ஓட்டி பிழைக்கவா இலங்கைக்கு வந்தான்? அவன் நினைத்திருந்தால் அலைபேசியை அனைத்து விட்டு அண்ணனோடு இருந்திருக்கலாம். ஏற்ற கதாபாத்திரத்தை சிறப்பாக ஏற்று நடிப்பவன் இப்பொழுது பிரபுவாக அவதாரம் எடுத்தும்தமையால் பிரபுவாகவே வாழ எண்ணினான். அதனால் வந்த சவாரியை ஏற்ற கிளம்பினான்.

 “ஆத்தி…. என்ன இது கரண்டு பில்லு இப்படி ஏறிறுச்சு. டீவியை தவிர வீட்டுல ஒரு கரண்டு சாமான் கூட இல்ல. ராவைக்கு தூக்கம் வராது னு பேன கொஞ்சம் போட்டுகிறேன். போன மாசம் எழுநூறு ரூபா கட்டினேன். இப்போ என்ன ஆயிரத்து எட்டுநூறு ரூபா கேக்குறான். சம்பாதிக்கிறது பூரா இவனுங்களே புடிங்கி கிட்டா சோத்துக்கு சிங்கி அடிக்க வேண்டியது தான்” ஆதங்கமாக புலம்பலானாள் ரமேஷின் அன்னை புஷ்பவள்ளி.

“அம்மா நான் என்ன கேக்குறேன். நீ என்ன பொலம்புற? இப்போ கரண்டு பில் தான் பிரச்சினையா?”

“ஆமாண்டா… பிரச்சினை தான். ஒண்ணுமே பாவிக்காம சும்மா பில்லு கட்ட சொல்லுரானே பிரச்சினை இல்லையா?” உரத்த குரலில் மகனிடம் காய்ந்தாள் புஷ்பவள்ளி.

ரமேஷ் மறுவாழ்வு மையத்திலிருந்து வந்த அன்றிலிருந்து பத்மினியை திருமணம் செய்ய வேண்டும் என்று நச்சரித்துக் கொண்டிருந்தான்.

“ஏற்கனவே திருமணமானவளுக்கு எப்படிடா திருமணம் செய்வாங்க லூசா நீ. உன்ன மறுவாழ்வு மையத்துல சேர்த்ததுக்கு பதிலா. அங்கொடைல கொண்டு போய் சேர்த்திருக்கணும்” புஷ்பவள்ளி ரமேஷை கை வலிக்கும் வரை அடித்தாள். 

“அம்மா… எனக்கு பத்மினிய பிடிச்சிருக்கு. அவளுக்கு என்ன பிடிச்சிருக்கு. நடுவுல வந்தது அந்த கதிர். வேண்டா வெறுப்பா மினி அவன் கூட வாழ்ந்து கிட்டு இருக்கா. அவ என் கூடத்தான் வாழனும். புரிஞ்சிக்க”

“டேய் பாண்டி… டேய்… இவன கொண்டு போய் அங்கொடைல விடுடா” சமையலறையிலிருந்து எட்டி மேல் வீட்டை பார்த்து கத்தினாள்.

சரோஜாவின் வீடு போலவே புஷ்பவள்ளியின் வீடும் ஒரு குன்றில் தான் இருந்தது. மூத்தமகன் பாண்டியின் வீடு இவள் வீட்டுக்கு மேல் இருக்க, அதுவும் சமையலறை பக்கத்தில் இருந்து பேசினால் கேட்கும். எப்போ வேண்டுமானாலும், மகனோடும் மருமகளோடும் கத்திப் பேசுவாள் புஷ்பவள்ளி.

இன்றும் அவ்வாறுதான் பேசினாள். 

“ஆரம்பிச்சிட்டாங்களா? பெட்ரோல் விக்கிற விலைக்கு பசங்க நடந்து ஸ்கூல் போய்கிட்டு இருக்காங்களே என்று நான் கவலைல இருக்கேன். இவங்க என்னடான்னா…” ரமேஷின் அண்ணி லதா பொருமினாள்.

“ஏன்டி கத்துற கேட்டுட போகுது. அவங்க சொன்னா மட்டும் ஆட்டோல கூட்டிட்டு போக முடியுமா? வாரத்துக்கு அஞ்சு லீடர் தான் டோக்கனுக்கு தாரானுவ. இதுல ஹயர் {சவாரி} ஓடி எப்படி சம்பாதிக்கிறது? வீட்டு செலவையே சமாளிக்க முடியல. இதுல இந்த மாசத்துல இருந்து கரண்ட் பில்ல வேற ஏத்திட்டானுவ” ரமேஷின் அண்ணன் பாண்டி குடும்ப செலவை எவ்வாறு சமாளிப்பது என்ற கவலையில் பேசினான்.

“பெட்ரோல் தட்டுப்பாடு இருந்தப்போ நைட்டு கண்ணு முழிச்சி வரிசைல நின்னு பத்து லீடர், இருப்பது லீட்டர் என்று கேன் கேனா பெட்ரோல் வாங்கி கொள்ளை லாபத்துக்கு வித்தியே. அதனாலதான் அரசாங்கம் வண்டிக்கு ஏத்தது போல வாரம் இவ்வளவு லீட்டர் எரிபொருள் என்று  ரூல்ஸ் போட்டிருக்காங்க.

ஏற்கனவே நாடு விழுந்திருக்கும் போது அடுத்தவனுக்கு இருக்குதோ இல்லையோ நாம சம்பாதிச்சா போதும் என்று நினச்சா இப்படித்தான்” பாண்டியை கிணடல் செய்தாள் லதா.

“என்னடி பண்ணுறது? ஹயர் ஓடினா… சொச்சமா காசு கிடைக்கும் என்று பெட்ரோல் வித்தேன். வரிசைல இருக்க பிடிக்காத பணக்காரங்க எவ்வளவு விலையானாலும் பரவால்லன்னு வாங்கி கிட்டாங்க. அதனால அரசாங்க வேலைக்கு போறவங்களுக்கு பெட்ரோல் இல்லாம டாக்டருங்க, நர்ஸுங்க, ஸ்கூல் மிஸ்ஸுங்க என்று ஸ்ட்ரைக் பண்ண ஆரம்பிச்சாங்க. இதுல அவங்க வரிசைல நின்னுதான் பெட்ரோல் போடணும் என்று மக்கள் சண்டை வேற போடுறாங்க. இவங்க பெட்ரோல் போட்டு டியூட்டிக்கு போனா, எப்படி பசங்களுக்கு பாடம் எடுப்பாங்க? நோயாளிக்கு மருத்துவம் பார்ப்பாங்க. எல்லாரும் சுயநலவாதிங்கதான். யாரு இப்போ அடுத்தவனை பத்தி கவலை படுறாங்க? நான் தானே என் குடும்பத்தை பார்க்கணும். பணம் கொடுத்தப்போ வாங்கி செலவு பண்ணியே அப்போ இந்த பேச்சு பேசினியா?” தான் செய்தது தவறே இல்லை என்றான் பாண்டி.

பொருளாதார வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்டெடுக்க, அரசாங்கத்தை மட்டுமே குற்றம் சொல்லிக் கொண்டு இருந்தால் அந்த நாடு ஒரு காலமும் முன்னேறாது. மக்கள் சுயநலமாக சிந்திப்பதை விட்டு விட்டு அன்றாடம் தனக்கு தேவையான பொருட்களை மட்டும் எடுத்து சென்றால் மற்றவர்களின் தேவைகளும் நிறைவேறும். பிரச்சினையிலிருந்து மீண்டு வரலாம். அதை விட்டு விட்டு சுயநலமாக செயல்பட்டால் பாதிக்கப்படுவதும் மக்களே. பிரச்சினையும் ஓயாது.  

“அம்மா பத்மினி இல்லனா நான் செத்துடுவேன்” புஷ்பவள்ளியை மிரட்டலானான் ரமேஷ்.

“செத்துத்தொலைடா… உன்ன போல ஒரு புள்ள இருக்குறத விட சாகுறதே மேல்” புஷ்பவள்ளி கண்ணை கசக்க,

“நான் சாகுறது என்றா தனியா எல்லாம் சாக மாட்டேன் உன்னையும் கொன்னுட்டுதான் நான் சாவேன்” ரமேஷ் கோபத்தின் உச்சியில் இருந்தான். 

“கொல்லுடா கொல்லு. எவளோ ஒரு சிறுக்கிமவளுக்காக பெத்த அம்மாவையே கொல்லு. அவதான் உன்ன உசுப்பேத்தி அனுப்பினாளா?”

“இங்கபாரு என் மினியா ஒன்னும் சொல்லாத. உன் சம்மதம் இல்லாம இந்த கல்யாணம் நடக்காது. என்ன பார்க்க வராதே என்று அவ தெளிவா சொல்லிட்டா. அதனாலதான் உன் கிட்ட பொறுமையா பேசிகிட்டு இருக்கேன். இல்ல வகுந்துடுவேன்” பைத்தியம் பிடித்தவன் போல் கத்தினான் ரமேஷ். 

Advertisement