Advertisement

அத்தியாயம் 8

சிறிசேன முதலாளியின் கடையிலிருந்து கிளம்பிய கதிர்வேல் சென்றது கொஞ்சம் மலைப்பாங்கான பகுதிக்கு. மழை வேற தூர ஆரம்பித்திருந்தது.

சர்வேஷ் அங்கு சென்றால் கதிர்வேல் ஒரு வீட்டின் முன் நின்று சின்ன சின்ன கற்களை பொறுக்கிக் கொண்டிருந்தான்.

அந்த வீடோ தெருவிலிருந்து பள்ளத்தாக்கில் கட்டப்பட்டிருக்க, கூரைதான் தெருவுக்கு தெரிந்தது.

எதுக்கு இங்கே வந்தோம்? அண்ணன் எதற்காக கற்களை பொறுக்கிக் கொண்டு இருக்கின்றான் என்று அறியாமல் சர்வேஷும் கதிர்வேலுக்கு உதவ கற்களை பொறுக்கலானான்.

கற்களை பொறுக்கிய கதிர்வேலோ சற்றும் யோசிக்காமல் அந்த வீட்டின் கூரையின் மீது கல் எறிய ஆரம்பிக்க, அண்ணன் செய்வதை தொடர போன சர்வேஷ் திகைத்து நின்றான்.

“அண்ணா என்ன பண்ணுறீங்க?” பதறினான் சர்வேஷ்.

“டேய் அங்க பாருடா மாடப்புறா. ஜோடியா நிக்கிது. அதுவும் கருப்பு ஜோடி. நான் வளர்த்த புறாடா. என் ஜோடிப் புறா”

“என்னது புறாவா? என்னது சின்னப்புள்ளத்தனமா இருக்கு?” கொஞ்சம் சத்தமாகவே கூறினான் சர்வேஷ். 

வீட்டுக் கூரைக்கு கல் எறிந்தால், கூரையில் ஓட்டை விழுந்து மழை பெய்யும் பொழுது நீர் கொட்டாதா? குழந்தைகள்தான் அறியாமையால் கல் எறிவார்கள் என்றால் வளர்ந்த இவன் போய் கல் எறிகின்றானே அதுவும் வீட்டு உடையக்காரர் பார்த்து விட்டால் பிரச்சினையாகுமே என்று சர்வேஷ் தான் பொறுக்கிய கற்களை கீழே போட்டு விட்டு அங்கிருந்து கதிர்வேலை கிளப்ப அவன் கையை பிடித்து இழுத்தான்.

“டேய் விடுடா… என் ஜோடிப் புறாடா. நான் பத்துவுக்காக வாங்கின புறா. வெளிய விட்டதும் வீட்டுக்கு வராம பறந்து போச்சு. வரவே இல்ல. இன்னிக்கிதான் கண்ணுல சிக்கிருச்சு” கையை சர்வேஷிடமிருந்து உதறிக் கொண்டு மீண்டும் புறாவுக்கு கல் எறிய முயன்றான்.   

“அண்ணிக்கு வாங்கிய காதல் பரிசா. அதான் துடிக்கிறாரா. சரிதான். சின்னபுள்ளயாகவே யோசிக்கிறாரே” சிரித்த சர்வேஷ் “புறாவை கொடுத்துதான் அண்ணிய கரெக்ட் பண்ணீங்களா? ஆமா வீட்டுல புறா கூண்டையே காணோம்”

“புறா பறந்து போனதால கூண்டை பத்து லாவண்யாகு கொடுத்துட்டா” சோகமாக சொன்ன கதிர்வேல் மீண்டும் கல் எறியலானான்.

“டேய் அண்ணா. வீட்டாளுங்க பார்த்தா பிரச்சினையாகிடும். உனக்கு என்ன அண்ணிக்கு பரிசு கொடுக்கணும் இல்ல. வா நாம வேற வாங்கிக்கலாம்” கதிர்வேல் இங்கிருந்து வந்தால் போதும் என்று சர்வேஷ் கூற,

“என் பொண்டாட்டிக்கு நீ வாங்கிக் கொடுப்பியா? எதுக்கு?” சீற்றமாகி கேட்டான் கதிர். தூரல் துளியாக விழுந்துக் கொண்டிருக்க இருவரும் சத்தமாகத்தான் பேசினர்.

“ஐயோ நான் அந்த அர்த்தத்துல சொல்லல. அவங்க எனக்கு அண்ணி. புரிஞ்சிக்க. இப்படி சந்தேகப்படாத” கோபத்தில் கத்தியே இருந்தான் சர்வேஷ்.

“நீ நல்லவன்டா… அவ ரொம்ப ரொம்ப நல்லவடா… என் மனசுக்குத் தெரியும். ஆனா என் புத்தி கேட்க மாட்டேங்குது. தப்பு தப்பா யோசிக்குது. எல்லாம் என் அப்பன் புத்தி”

“என்ன சொல்லுற?” இதுநாள் வரை மனம் திறக்காதவன் சட்டென்று தந்தையை பத்தி பேசியதும் சர்வேஷுக்கு ஆர்வம் அதிகமானது.

ஏதோ ஒரு நினைவில் தந்தையை பற்றி உளறி விட்டான். அதற்காக சர்வேஷ் கேட்ட உடனே சொல்லி விடுவானா?   “நீ போ நான் புறாவை புடிச்சிட்டு வரேன்” என்றான் கதிர்வேல்.

“லூசா நீ. லூசானு கேக்குறேன். கல் அடிச்சா புறா பறந்து தான் போகும். கைல வராது. அத போக விடு. வா நாம வீட்டுக்கு போகலாம். மழை வேற கொட்டுது” கொட்டிய மழையில் இருவரும் தொப்பலாக நனைந்திருந்தனர்.

“எப்படிடா விடுவேன். எப்படி அவள போக விடுவேன். மழையில் கலங்கிய கண்களோடு கதிர்வேல் வீட்டுக்கு கிளம்ப” சர்வேஷுக்கு ஒன்றும் புரியவில்லை. கதிர்வேலின் பின்னால் ஓடினான்.

வீட்டுக்கு வரும் பொழுது மழை கொட்டோ கொட்டு என்று கொட்டித் தீர்க்க, மழையில் நனைந்தவாறு நின்றிருந்தான் கதிர்வேல்.

“உள்ள வாண்ணா. எதுக்கு இப்போ மழைல நனையிற?”

“கொஞ்சம் நேரம் இருக்கேண்டா… அப்போதான் நான் அழுறது உனக்கு தெரியாது” என்ற கதிர்வேல் கண்களை துடைக்கலானான்.

சர்வேஷுக்கு கதிர்வேலை பார்க்க குழந்தையாகத் தெரிந்தான். “முதல்ல உள்ள வா. இன்னும் ப்ரேக்பஸ்ட் கூட சாப்பிடல. இப்படி மழைல நின்னா… சளி பிடிக்கும், அப்பொறம் பீவர் வரும். ஹாஸ்பிடல், மருந்து மாத்திரைன்னு படுத்து கிடக்க போறியா?” கதிர்வேலை இழுத்து வந்து அறையில் இருந்த பிளாஸ்டிக் இருக்கையில் அமர வைத்து தலையை துவட்டி விடலானான் சர்வேஷ்.

துண்டை இழுத்து “முதல்ல நீ துடச்சிக்க, நீயும் தான் நனஞ்சிருக்க, உனக்கு பீவர் வராதா?” என்று சர்வேஷை தன் அருகில் அமர வைத்து அவன் தலையை துவட்டி விடலானான் கதிர்வேல்.

சர்வேஷ் மறுக்கவில்லை. தான் தன்னுடைய சகோதரனிடம் எதை எதிர்பார்த்து வந்தானோ அது நிறைவேறும் ஆனந்தத்தில் ரசிக்கலானான்.

இருவரும் துணிகளை மாற்றிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர்.

சாப்பிட்டு முடிக்கும் வரையில் சர்வேஷ் பெய்யும் மழையை பற்றியும், ஊருக்குள் திடிரென்று பாயும் வெள்ளத்தை பற்றியும், எதுவுமே நடவாதது போல் அடுத்து சூரியன் சுள்ளென்று அடிக்கும் காலநிலையை பற்றியே மட்டுமே பேசினான்.

“ஆமான்டா… இந்த ஊருல மட்டும்தான் எப்போ மழை பெய்யும், எப்போ வெயில் அடிக்கும் என்றே தெரியல. மழை பெய்ய ஆரம்பிச்சா கொட்டிக்கிட்டே இருக்கும். வெள்ளம் வந்து தான் நிக்கும். வெயில் அடிச்சா போதும்டா சாமி எங்குற அளவுக்கு அடிக்கும். தண்ணி பஞ்சமும் வரும். தண்ணி ஊருக்குள்ளயும் வரும்”

வெயிலோடு விளையாடி

வெயிலோடு உறவாடி

வெயிலோடு மல்லுக்கட்டி

ஆட்டம் போட்டோமே

என்னை கொஞ்ச

கொஞ்ச கொஞ்ச கொஞ்ச

வா மழையே நெஞ்சம் கெஞ்ச

கெஞ்ச கெஞ்ச கெஞ்ச தா மழையே

இன்னும் கிட்ட

கிட்ட கிட்ட கிட்ட வா

மழையே என்னை தொட்டு

தொட்டு தொட்டு தொட்டு

போ மழையே

பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்

ஓட்டம் போட்டு திரிஞ்சோம்

வெயிலத் தவிர வாழ்க்கையில

வேற என்ன அறிஞ்சோம்

அடடா மழைடா அட மழைடா

அழகா சிரிச்சா புயல் மழைடா

கதிர்வேல் சட்டு சட்டுனு பாட்டை மாற்றி பாட, எந்த பாட்டை பாடுவது என்று பார்த்த சர்வேஷ் சிரித்தான்.

“என்னடா…”

“அண்ணா… உனக்கும் அண்ணிக்கும் உண்மையிலயே என்னதான் பிரச்சினை? நான் உன்ன என் கூடப் பொறந்த அண்ணனா தான் பாக்குறேன். என்ன பிரச்சினைனு சொல்லு நான் தீர்த்து வைக்கிறேன்”

சர்வேஷின் வார்த்தைகள் மனதிலிருந்து வந்தவை. கதிர்வேலன் வாழ்க்கையை சீரமைக்க வேண்டும் என்பது தானே அவன் எண்ணம். அதற்குதான் கதிர்வேலிடமும், பத்மினியிடமும் பேசிப் பேசி பார்க்கின்றான்.

நீதான் என் அண்ணன் என்று இப்பொழுது கூற முடியாது. அதற்கான நேரம் வரும். வரும் பொழுது கூறலாம். கூறும் பொழுது கதிர்வேல் தன்னை சகோதரனாக முழுமனதாக ஏற்றுக்கொள்ளவும் வேண்டுமே.

ஆனால் கதிர்வேலோ “நீ என் தம்பிதான். கூடப் பிறந்த தம்பிதான்” கதிர்வேல் என்ன சொல்கிறான் என்று சர்வேஷ் ஒரு நொடி அதிர்ந்து நிற்க, “மணி எப்படியோ நீயும் எனக்கு அப்படித்தான்” என்றான்.

“போ …ண்ணா… என்ன நாய் னு சொல்லுறியா? கிண்டல் பண்ணாத”

“டேய் மணிய நாய் னு சொல்லாத”

“நாய நாய் னு சொல்லாம கழுத என்றா சொல்லுவாங்க” என்றவனோ “பாத்தியா பாத்தியா நான் என்ன கேட்டேன். நீ எதை எதையோ பேசி பேச்ச மாத்துற. சொல்லுனா. நான் அண்ணிகிட்ட பேசுறேன்” கதிர்வேலை உலுக்கினான் சர்வேஷ்.

“சொல்லாம விட மாட்டியா? என்ன சொல்ல? ஏது சொல்ல…” 

“டேய் அண்ணா.. எனக்கு இப்போ செம்மையா கோவம் வரும். பாடுறத நிறுத்திட்டு சொல்லு” கடுப்பானான் சர்வேஷ்.

“ம்ம்…. வீட்டுல எனக்கும் பத்துவுக்கும் கல்யாணம் பண்ணலாம் என்று முடிவு பண்ணாங்க. ஆனா பத்து ரமேஷ லவ் பண்ணுறதாக சொன்னா. சரி அவ ஆசைப்பட்டுட்டாளே கட்டிக்கிட்டு சந்தோசமா இருக்கட்டும் என்று விட்டுட்டேன்”

அன்று என்ன நடந்தது என்று கதிர்வேலின் கண்களுக்குள் வந்து போனது.

பத்மினிக்கும் இருபத்தியைந்து முடியப் போகிறது. கதிர்வேலுக்கும் இருபத்தியேழு வயசாகிறது. எப்பயோ கல்யாணம் பண்ணி வைச்சிருக்கணும். கொரோனா என்று மூணு வருஷம் ஓடிருச்சு. இப்போவாச்சும் நிச்சயம் பண்ணிக்கலாம் என்று கமலம் சரோஜாவை அழைத்திருந்தாள்.

“என்னது நான் கதிரை கல்யாணம் பண்ணுறதா? நான் ரமேஷ லவ் பண்ணுறேன்” கதிரை முறைத்தவாறே தான் கூறினாள் பத்மினி. 

“ஏய் என்னடி இப்படி குண்ட தூக்கி போடுற?” கமலம் மகளை அடிக்க ஆரம்பித்தாள்.

“அத்த அவள விடுங்க” கமலத்தை தடுத்த கதிர்வேலன் “எந்த ரமேஷ்” என்று பத்மினியிடம் கேட்கும் பொழுதே ரமேஷ் அன்னையோடு உள்ளே நுழைந்தான்.

தானும் பத்மினியும் காதலிப்பதாக கூறி கமலம் மற்றும் நல்லதம்பியின் காலில் விழுந்து விட்டான்.

கமலத்துக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. கதிரைத்தான் பார்த்தாள். 

“என்ன அத்த பாக்குற அவ ஆசைப்படி கல்யாணம் பண்ணி வை” முகத்தில் எந்த ஒரு பிரதிபலிப்பையும் காட்டாமல் கூறினான் கதிர். 

“நீ அண்ணிய லவ் பண்ணுறல்ல அத அவங்க கிட்ட சொன்னியா?” சர்வேஷின் குரலில் நடப்புக்கு வந்தான் கதிர்வேல்.

 “ஒருத்தன லவ் பண்ணுறேன்னு சொல்லுற பொண்ணுகிட்ட போய் நான் உன்ன லவ் பண்ணுறேன்னு சொல்லுறது அநாகரீகம். இது கூட தெரியாதா? லூசுப் பய. அந்த சுராங்கணி புள்ள நோ சொன்னா அசிட் கீஸிட் அடிச்சிடாத” தீவீரமான முகபாவனையில் கதிர்வேல் கூற

“என்ன பார்த்த எப்படி தெரியுது?” சர்வேஷுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“என்ன போல ரகட் பாய்ச்ச கூட நம்பலாம். உன்ன மாதிரி அம்மாஜி போல மூஞ்ச வச்சிக்கிட்டு இருக்குறவங்கள நம்ப முடியாது” சிரித்தான் கதிர்வேல்.

“நான் அம்மாஜியா? சரி சொல்லு உனக்கும் அண்ணிக்கும் எப்படி கல்யாணம் ஆச்சு?”

“கல்யாணம் தானே…” என்ன நடந்தது என்று கூறலானான் கதிர்வேல். 

“விடிஞ்சா கல்யாணம் இப்போ பேச்சுலர் பார்ட்டி அவசியமா? அதுவும் நீர்வீழ்ச்சிக்கு போகணும் மீன் பிடிக்கணும் என்று எல்லாம் சொல்லுறான் லூசா அவன்?” ரமேஷை திட்டினான் கதிர்வேல்.

“அவன் ப்ரெண்ட்ஸ் சொந்தகாரங்க எல்லாரும் வந்திருக்காங்க. அவன் என்ன சின்ன பையனா? கூட நீயும் போற இல்ல. பாத்துக்க மாட்டியா?” பத்மினி கதிர்வேல் மீது எரிந்து விழுந்தாள்.  

“சரி சரி போய்த் தொலையிறேன்” என்ற கதிர்வேலன் நீர்வீழ்ச்சிக்கு கிளம்பினான்.

இரவு ஏழு மணி இருக்கும் நிலவொளியில் நீர்வீழ்ச்சி பிரகாசமாக ஜொலித்தது.

சின்ன நீர்வீழ்ச்சசி தான். சுற்றி கற்கள் சூழ்ந்திருக்க, குளம் போல் நீர் தேங்கி குளிக்க வசதியாக இருந்ததோடு. சிலர் கற்களின் மேல் அடுப்பு பற்றவைத்து சமைத்து சாப்பிடுவதும், சிலர் குளிக்கும் வரையில் கழுவிய துணிகளை கற்களின் மேல் காயப்போடுத்தும் என்று பகலில் கூட்டம் நிரம்பி வழியும்.

“இன்னைக்கின்னு பார்த்து நிறைய மீன் கிடைச்சிருக்கு. பாண்டியன் இறால் வேற பிடிச்சிருக்கான்” முகம் நிறைய பூரிப்போடு கூறினான் ரமேஷ்.

“சரக்கு வாங்க யார்டா போனான்?” என்றவாறே கல்லின் மீது அமர்ந்தான் கதிர்வேல்.

“இங்க பாருங்கடா… விடிஞ்சா கல்யாணம் மினி என்ன குடிக்கக் கூடாது என்றெல்லாம் மிரட்டல. அதுக்காக குடிச்சி மட்டையாக முடியாதில்ல. ரெண்டே ரெண்டு பேக் தான் அதுக்கு கூட குடிக்க மாட்டேன். அப்பொறம் நான் வீட்டுக்கு கிளம்புறேன். நீங்க என்ஜோய் பண்ணுங்க” என்றான் ரமேஷ்.

“ஓகேடா மச்சான்”

“சரிடா மச்சான்” என்ற குரல்களோடு

“இதுக்கு நீ குடிக்காமலே இருக்கலாம்” என்ற கதிர்வேல் “மாமா பாரின் சரக்கு பாட்டில் ரெண்ட ஒளிச்சு வச்சிருந்தார் அதுல ஒண்ண நான் தூக்கிட்டு வந்துட்டேன்” என்று பையிலிருந்த பாட்டிலை வெளியே வைத்தான். கூடவே அருந்த பிளாஸ்டிக் கப்புகளும் இருந்தன.

“கில்லிடா நீ”

“செல்லம்டா நீ”

கொஞ்சியவாறே பிடித்த மீன், இறால், நண்டு என்று அனைத்தையும் நெருப்பு மூட்டி சுட, சரக்கும் வந்து சேர்ந்தது.

றபான எனும் இசைக்கருவியை தட்டியவாறே பாடல் பாட ஆரம்பித்தவர்கள் குடிப்பதும், சாப்பிடுவதுமாக ஆனந்தமாக பொழுதை கழிக்க,

“டேய் ரமேஷ் மணி பத்தாக போகுது நீ கிளம்பு” என்றான் கதிர்வேல்.

“டேய் இருடா மச்சான். இன்னும் கொஞ்சம் நேரம் வரைக்கும் இருக்கேன்” என்றான் ரமேஷ்.

“இப்படியே இருந்தா நீ விடியிற வரைக்கும் இருப்ப. பத்மினிகிட்ட போட்டுக் கொடுக்கவா இல்ல வீட்டுக்கு கிளம்புறியா?” சிரித்தவாறே கதிர் மிரட்ட,

“போறேன்டா… போறேன்” என்று ரமேஷ் கிளம்ப ஆயத்தமானான்.

“டேய் மச்சான் அந்த பாரின் சரக்க கொடுடா…” என்றான் ஒருவன்.

“பாரின் சரக்கா…” என்று ரமேஷ் நிற்க

“எல்லாம் ஒண்ணுதான் நீ கிளம்பு” கதிர்வேல் ரமேஷை அனுப்ப முயன்றான்.

“அட இருடா குடிச்சிட்டு போறேன்” என்று ரமேஷ் சொன்னதும் கதிர்வேல் தான் அனைவருக்கும் ஊத்திக் கொடுத்தான்.

அதை அருந்திய பின் ரமேஷ் கிளம்பி விட்டான்.

“இருட்டுல போற பார்த்துப் போ…” என்று கதிர்வேல் அமர்ந்து கொண்டான்.

அரை மணித்தியாலத்து பின் “டேய் சரக்கு காலி. மாப்புள போய்ட்டான். என்ன பேச்சுலர் பாட்டிடா இது” என்று ஒருவன் சொல்ல

“அவன் போனா போகட்டும். சரக்கு கிடைக்குமா?” என்றான் ஒருவன்.

“இந்த நேரம் கடை மூடி இருக்கும்டா போய் போய் தூங்கு” என்றான் கதிர்வேல்

“அதான் உன் மாமா ஒளிச்சு வச்ச சரக்கு பாட்டில் இருக்கே அதையும் எடுத்துட்டு வா” கதிர்வேலை ஒருவன் வற்புறுத்தலானான்.

“செம்ம மச்சான் செம்ம. போ… சீக்கிரம் போ…” என்று இவர்கள் அவனை அனுப்பி வைக்க, வீட்டுக்கு சென்றவன் அரைமணிநேரத்தில் பாட்டிலோடு வந்தான்.

“ஏன்டா நடந்து போனா பத்மினி வீட்டுக்கு பத்து நிமிஷம் கூட ஆகாது. அரைமணிநேரமா சாராயம் காச்சி எடுத்து வந்தியா?” ஒருவன் கிண்டல் செய்ய,

“போன உடனே வர முடியுமா? கல்யாண வீடு. யார் கண்ணுலேயாவது பட்டா வேலை கொடுப்பாங்க. பாட்டுல பார்த்தா பிரச்சினை வராதா? லூசு” அவனை திட்டி விட்டு சரக்கை ஊத்திக் கொடுத்தான்.

பன்னிரண்டு மணி தாண்டித்தான் அனைவரும் வீட்டுக்கு கிளம்பினர்.

கல்யாண முகூர்த்தம் காலை ஒன்பது மணிக்கு. மணப்பெண் வீட்டில் கோவிலுக்கு செல்ல அனைவரும் தயாராகிக் கொண்டிருக்க, ரமேஷ் வீட்டில் ரமேஷை காணவில்லை என்று அவன் அன்னை புஷ்பவள்ளி பதறிக் கொண்டிருந்தாள்.

“ராவெல்லாம் பார்ட்டினு நண்பர்களோட போனவன் அவங்க கூட வந்து அறைல தூங்குறான்னு நினச்சேன். எங்கடா போனான்”

ரமேஷை வீடு முழுக்கத் தேடிய பின் காணாமல் நல்லதம்பியின் வீட்டுக்கு தகவல் அனுப்பியிருந்தாள்.

“என்ன சொல்லுறாங்க. மாப்பிள்ளையை காணோமா? எங்க போனாரு?” அலைபேசியில் பேசியவாறே பதறினார் நல்லதம்பி.

அலைபேசி வழியாக வந்த செய்தியை நல்லதம்பி சத்தமாகவே சொல்லியிருக்க, மொத்த குடும்பமும் அங்கே கூடி விட்டனர்.

 “என்னப்பா… என்னாச்சு” பத்மினி உள்ளுக்குள் பதறினாலும் அமைதியாக கேட்டாள்.

“மாப்பிளையை காணோமாம்” என்று நல்லதம்பி கூறும் பொழுதே கதிர் கல்யாண மாலையோடு  உள்ளே நுழைந்தான்.

அவன் எதிரே சென்று நின்ற பத்மினி “பளார்” என்று அவன் கன்னத்தில் அறைந்து “ரொம்ப நல்லவன் போல ரமேஷுக்கே என்ன கல்யாணம் பண்ணி கொடுக்க சொன்னியே இதுக்குத் தானா? ரமேஷ என்ன பண்ண? கொலையே பண்ணிட்டியா?” அடித்தது மட்டுமில்லாம அவனை பிடித்து உலுக்கினாள்.

அனைவரும் அவனையே பார்க்க, “என்னாச்சு?” என்று கதிர் புரியாமல் கேட்டான்.

பத்மினி கதறி அழ, ஆளாளுக்கு கதிரை கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.

“ரமேஷ் பத்து மணிக்கே நீர்வீச்சில இருந்து கிளம்பிட்டானே” என்று கதிர்வேல் சொல்ல, கூட இருந்தவர்களையும் விசாரிக்க அவர்களும் அதையே தான் கூறினார்கள்.

ரமேஷை தேடிச் சென்றதில் அவன் வேறு எங்கும் சென்றிருக்கவில்லை. வீட்டுக்கு வர வேண்டிய பாதைக்கு வராமல் காட்டுப்பாதைக்குள் சென்று மயங்கி விழுந்திருந்தான்.

கதிர்வேல் தான் அவனை அடித்திருப்பானோ என்று பத்மினி ஓடிச் சென்று பார்க்க, அவன் போதையில் உளறிக் கொண்டிருந்தான்.

“எழவெடுத்த பய. தாலி கட்ட இவன தேடினா. இவன் போதையாகி மல்லாக்க படுத்துகிட்டு நிக்கிறான்” ரமேஷை வசைபாட ஆரம்பித்தான் அவனின் அண்ணன் பாண்டி.

“ஏன்டா.. இவன் குடிக்கவே இல்லையே எப்படிடா இம்புட்டு போதையானான்?” நண்பர்கள் பேசிக்கொள்ள கதிர்வேல் தான் ரமேஷை ஏதோ செய்திருப்பான் என்று நினைத்தாள் பத்மினி.

“உண்மைய சொல்லு நீதானே ரமேஷோட இந்த நிலைமைக்கு காரணம்”

“நீ ஏன் இப்படி பேசுற”

“ஏன்னா நிச்சயதார்த்தம் முடிஞ்சதிலிருந்து உன் மூஞ்சே சரியில்ல. ரமேஷ் கூட சொன்னான். நீ என்ன லவ் பண்ணுறான்னு. நான் தான் நம்பள. நேத்து நைட் பத்தரை மணிக்கு நீ வீட்டில இருந்து போறத பார்த்தேன். நீர் வீழ்ச்சில இருந்தவன் எதுக்கு வீட்டுக்கு வந்த?” கோபத்தில் கேள்வியாய் கேட்டு கொன்றாள்.

“உன்ன கற்பழிச்சி கல்யாணம் பண்ணிக்கலாம்னு வந்தேன் போதுமா… கேக்குறா கேள்வி. என்ன கடுப்பேத்தாம போ”

“ஏன்மா… அவன் உங்கப்பா ஒளிச்சு வச்ச சரக்கு பாட்டிலை எடுக்க போனான்மா…” என்றான் ஒரு நண்பன்.

“அப்போ இவன் ஒன்றும் செய்யலையா?” பத்மினி குழம்பி நிற்க,

“ஐயோ… ஐயோ… ஐயோ என் பொண்ணு வாழ்க போச்சே. இப்போ என் பொண்ண யாரு கல்யாணம் பண்ணிக்குவான்” கமலம் நிலத்தில் விழுந்து கதறி அழுதாள்.

“அத்த விடு அத்த. இன்னக்கி நின்ன கல்யாணம் இன்னொரு நாள் நடக்கும். வா வீட்டுக்கு போலாம்” கதிர்வேல் கமலத்தை தூக்க,

“இல்ல. இல்ல இன்னைக்கே என் பொண்ணுக்கு கல்யாணம் நடக்கணும். ஜோசியர் சொன்னாரே ஜாதகத்துல பிரச்சினை இருக்கு. கல்யாணம் தடைபட்டா இவளுக்கு கல்யாணமே நடக்காது என்று சொன்னாரே” கமலம் புலம்ப ஆரம்பித்தாள்.

“என்னடி சொல்லுற?” சரோஜா பயந்து விட்டாள்.

“என்னத்த சொல்ல. எல்லாம் முடிஞ்சி போச்சு” தலையில் அடித்துக் கொண்டாள் கமலம்.

“இங்க பாரு இந்த கல்யாணம் நடக்கும். டேய் கதிர் பத்மினிய கூட்டிட்டு கோவிலுக்கு வா. உனக்கும் பத்மினிக்கும் இன்னைக்கே கல்யாணம்” என்றாள் சரோஜா.

“அம்மா…”

“என்னடா… அம்மா… நான் சொன்னா பத்மினியே கேட்பா. நீ கேட்க மாட்டியா? எனக்காக இல்லைனாலும் உன் அத்தைக்காக இவள கட்டிக்க மாட்டியா?” என்று பத்மினியை இழுத்து முன்னால் நிறுத்த, கதிர்வேல் அவளை தான் பார்த்தான். பத்மினி சரோஜாவை மறுத்து எதுவுமே பேசவில்லை. பேசவும் மாட்டாள். சரோஜாவின் மீதிருக்கும் பாசம் பேசவும் விடாது.

ரமேஷை காதலிக்கிறேன் என்ற போது “இல்ல நீ என் மகனை தான் திருமணம் செய்திருக்க வேண்டும்” என்று சரோஜா கூறி இருந்தால் பத்மினி கதிர்வேலை திருமணம் செய்திருப்பாள். இப்பொழுது மறுப்பாளா?

இவர்கள் ஒரு பக்கம் உரையாடிக் கொண்டிருக்க, ரமேஷை அவனது குடும்பத்தார் தூக்கிச் சென்றிருந்தனர்.

கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது போல் நிகழ்ந்தது. மாப்பிள்ளை மட்டும் மாறிப் போய் இருந்தான்.

கதிர்வேல் ஒரு பக்கம் யோசனையாக இருக்க, பத்மினி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.

முதலிரவுக்கான ஏற்பாடு சரோஜாஜாவின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, இளசுகளுக்கு தனிமை வேண்டும் என்று சரோஜா தம்பியின் வீட்டுக்கு கிளம்பியிருந்தாள்.

சரோஜா கொடுத்து விட்டு சென்ற பால் டம்ளரோடு கோபமாக பத்மினி அறைக்குள் நுழைய கதிர்வேல் அறையில் இல்லை.

“எங்க போனான் இவன்?” என்றவாறே வீடு முழுவதும் தேடி விட்டு வராண்டாவுக்கு வர படிக்கட்டில் அமர்ந்து மணியை கொஞ்சிக் கொண்டிருந்தான்.

“இங்கதான் இருக்கியா? உண்மைய சொல்லு. ரமேஷுக்கு யார் சரக ஊத்திக் கொடுத்தது?”

“ஏன் டி என்னமோ நான் தான் நீர்வீழ்ச்சிக்கு கூட்டிட்டு போய் ஊத்திக் கொடுத்தா மாதிரியே பேசுறியே. நான் போக வேணாம்னு தானே சொன்னேன்”

“அதாண்டா எனக்கு சந்தேகமாக இருக்கு”

“இங்க பாரு நான் என்ன சொன்னாலும் நீ நம்ப போறதில்ல. நம்பாதவ கிட்ட பேசி பிரயோஜனமும் இல்ல. போ போய் தூங்கு” என்றான் கதிர்வேல்.

“எதுக்கு நீ கல்யாணத்த நிறுத்தல. ரமேஷ் சொன்னது போல நீ என் மேல ஆச வச்சிருக்க, அதனால திட்டம் போட்டு என்ன கல்யாணம் பண்ணியிருக்க”

“என்ன கடுப்பேத்தாத, உன் கூட சண்டை போட எனக்கு மனசுல தெம்பும் இல்ல. போ… போய் தூங்கு”

“என்ன தூங்கு தூங்கு என்று விரட்டுற? பின்னாலயே வரதுக்கா?” கோப மூச்ச்சுக்களை இழுத்தவாறே முறைத்தாள் பத்மினி.

“அடியேய். நான் கல்யாணத்த நிறுத்தலானு கத்துறியே. நீ ஏன் நிறுத்தல. உனக்கு என்ன பிடிக்கலைன்னா எதுக்கு தாலி கட்ட விட்ட? தட்டி விட்டு எந்திரிச்சு போய் கிட்டே இருக்க வேண்டியது தானே. யாராச்சும் உன் கைய பிடிச்சி உக்கார வச்சிருந்தாங்களா? லூசுக் கழுத. வந்துட்டா விசாரணை பண்ண. அவன் விரல் சூப்பும் பாப்பா பாரு. அவனுக்கு ஒண்ணுமே தெரியாது”

ஆமா அவன் சொல்வது உண்மை தானே யாரும் தன்னை பிடித்து வைக்கவில்லையே. தான் இவன் மேல் பாய்வது சரியா? பத்மினிக்கு புரியவில்லை. தூங்காமல் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

கத்தோ கத்து என்று கத்திய கதிர்வேல் கொட்டகையில் மெத்தையை போட்டு தூங்கலானான்.  

அடுத்த நாள் காலை உணவோடு வந்த சரோஜா இதை பார்த்து பதறினாள். “டேய் என்னடா இது? இங்க தூங்குற?”

அத்தையின் சத்தத்தில் பத்மினி வெளியே வந்தாள்.

“இங்க பாரு எனக்கு அவள புடிக்கல. எவனையோ காதலிப்பாளாம். அவன் இல்லனதும் இவளுக்கு நான் வாழ்க கொடுக்கணுமா?”

“டேய் என்னடா பேசுற?” மகனை அடிக்கவே பாய்ந்தாள் சரோஜா.

“பத்மினிக்கு புரியவில்லை. என்ன இவன் அத்தையிடம் எதற்காக இப்பொழுது இப்படி பேசுகிறான்?” குழப்பமாக பார்த்திருந்தாள்.

“அத்தனை பேர் முன்னாலையும் கட்டுடா தாலிய என்றதும் கட்டி உன் மானத்த காப்பாத்திட்டேன்ல இப்போ என்ன என் பாட்டுல விடு. புரியுதா?” அன்னையை மிரட்டியவன்

கண்ட கனவு

அது கானா ஆச்சு

கண்ணு முழிச்சா அது

வாழாது வட்ட நிலவு

அது மேலே போச்சு

கட்டியிழுத்தா அது வாராது

வீணாச

தந்தவரு யாரு

யாரு

 கல்லிலடிச்சா

அது காயம் காயம்

சொல்லிலடிச்சா அது

ஆறாது பஞ்சு வெடிச்சா

அது நூலாப்போகும்

நெஞ்சு வெடிச்சா

அது தாங்காது

சேதாரம்

செஞ்சவரு யாரு

யாரு

பாடியவாறே குளிக்க சென்றான் கதிர்வேல்.

“ஏன் அண்ணா அம்மா கிட்ட இப்படி பேசுனீங்க?” சர்வேஷுக்கும் குழப்பமாக இருந்தது.

Advertisement