Advertisement

அத்தியாயம் 7

நல்லதம்பிக்கு கட்டிடம் கட்டும் வேலையை தவிர வேறு வேலை பிடிக்கவில்லை. அறையை கட்டி முடித்த கையேடு சர்வேஷ் சரோஜாவிடம் “அம்மா கொட்டகை இருக்குற இடத்துல ஒரு மாடன் கிட்ச்சன் கிராமத்து வாசனையோடு கட்டலாமா?” என்று கேட்டான்.

“கொட்டகைள கைவச்ச கொன்னுடுவேன்” என்றவாறே வந்தான் கதிர்வேல்.

“என்ன அண்ணா… நீங்க. நல்லதம்பி மாமாவை சிறிசேன முதலாளி கடைல வேலைக்கு சேர்த்து விடலாம்னு பார்த்தேன். அவருக்கு இந்த தொழில்தான் பிடிச்சிருக்கு. செல்வாவ கடைல சேர்த்துட்டேன்.

சமையலறையை கட்டினா மாமாக்கு ஒரு வேல கிடைக்குமே என்று தான் சொல்லுறேன். நீங்க எங்களோட வந்து தூங்குங்க”

அறையை கட்டி முடித்த பின்னும் கதிர்வேல் கொட்டகையில் தான் தூங்குகின்றான். சர்வேஷ் பலமுறை அழைத்து பார்த்தான். விறகு கட்டைகளை எறிந்து இவனை துரத்தி விட்டு அவன் பாட்டில் அங்கேயே தூங்க, சர்வேஷுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அதனால் தான் சமையலறையை கொட்டகை இருக்கும் இடத்தில் கட்டலாம் என்ற முடிவுக்கு வந்தான்.

“ஏன்ப்பா… ஏற்கனவே கட்டின அறைக்கும், பாத்ரூமுக்கும் வாடகை ஒன்பது பத்து மாசம் ஆகும். இதுல சமையலறையும் கட்டினா…” சரோஜா யோசிக்க,

“ஆமா… நீ எதுக்கு நம்ம வீட்டுக்கு இம்புட்டு செலவு செய்யிற? சரியில்லையே” அப்போ அப்போ சர்வேஷ் மீது கதிர்வேலின் சந்தேக பார்வை பாயும், சர்வேஷ் ஒருவாறு பேசி சமாளித்து விடுவான்.

“ஆகா… சந்தேகப்பட ஆரம்பிச்சிட்டாரே சரியில்லையே” கதிர்வேலை பார்த்த சர்வேஷ் “அதுவா அண்ணா பேச்சுலர் பசங்க திடிரென்று பசிக்கும். சிலநேரம் சமைச்சி சாப்பிடணும் என்று தோணும். அம்மாகிட்ட கேட்டுகிட்டு இருக்க முடியுமா? அதுவும் அம்மா வேலைக்கு வேற போறாங்கல்ல. வெளியவே கிட்ச்சன் இருந்தா நாங்க பாட்டுக்கு எப்போ வேணாலும் சமைச்சி சாப்பிட்டுக்குவோம்” காரணங்களை தேடித் தேடி அடுக்கினான்.

“அது எப்படிடா… மாடன் கிச்சன் கிராமிய மணம் வீசும்?” சர்வேஷின் தலையில் கொட்டினான் கதிர்வேல்.

“கட்டின பிறகு பாரு …ண்ணா…” வலித்தாலும் கதிர்வேல் அடித்ததற்கு சர்வேஷ் கோபப்படவில்லை. சின்ன வயதில் ஒரு சகோதரன் இருந்தால் எப்படியெல்லாம் விளையாட வேண்டும் என்று எண்ணி இருந்தானோ தன்னுடைய ஆசை இப்பொழுது நிறைவேறிய உணர்வில் மனம் நிறைவது போல் இருக்க புன்னகையோடு இவனும் செல்லமாக அவன் நெஞ்சில் அடித்தான்.

“சரி என்னவோ பண்ணிக்க. ஆனா எல்லாத்துக்கும் சரியா கணக்கு வச்சுக்கணும் புரியுதா” கையை ஓங்கி அடிப்பது போல் வந்தவன் சர்வேஷின் கன்னத்தில் தட்டி விட்டு குளிக்க சென்றான்.

தம்பிக்கு வேலை இருக்கு என்றதும் சரோஜாவும் மறுக்கவில்லை.

ஒம் பணம் பணம்… எம் பணம் பணம்

எம் பணம்… ஒம் பணம்… ஐ…

எம் பணம் பணம்… ஒம் பணம் பணம்

ஒம் பணம்… எம் பணம்… ஐய்யோ…  

படிச்சி தான் பழக்கம் இல்ல‌

புத்தகத்த பார்த்ததில்ல‌

அடமழ பெய்ஞ்சாலும்

அந்த பக்கம் ஒதுங்கவில்ல‌

காச தெனம் எண்ணி எண்ணி

கணக்க நான் கத்துகிட்டேன்

வறுமைக்கு பொறந்ததால

படிக்காம பட்டம் பெற்றேன்

காசுதான் அது மெய்யடா

அத கவனத்துல வைய்யடா

வாழ்க்கையே ஒரு பள்ளிடா

அத படிச்சவன் பெரும் புள்ளிடா

ரேடியோவில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க அதற்கு ஏத்தது போல்

பணம் இருந்தா

எதுவேனா செய்யலாம்டா..

பத்து நாள்ல கட்டிடம்

கட்டலாம்டா…    

என் பத்துவுக்கு தாஜ்மகால் கட்டுவேன் நான்

குளித்து விட்டு வந்து தலையை துவட்டிக் கொண்டே கட்டி முடிக்கப்பட்டிருந்த அறையை பார்த்தவாறு பாடினான் கதிர்வேல்.

“கட்டுவ கட்டுவ. கட்டின பொண்டாட்டிக்கு கட்டிக்க ஒரு போடவையாவது வாங்கிக் கொடுத்திருக்கியா? தீபாவளி, பொங்கல்னா அவ சம்பாதிச்சு உனக்கு வாங்கி கொடுக்குறா. மானம் கெட்டவன்” சரோஜா வசை பாடியவாறே வேலைக்கு கிளம்பிச் சென்றாள்.

அவள் பின்னாலையே வந்த பத்மினி “எப்படா நான் சாவேன்னு இருக்கியா?” என்று கதிர்வேலை பார்த்து கேட்டாள். 

“ஏய் என்னடி காலையிலையே ஆரம்பிக்கிற” வழக்கமாக இரவில் தானே சண்டை போடுவாள் என்ன இது இன்று காலையில் ஆரம்பிக்கிறாள் என்ற அர்த்தத்தில் கதிர்வேல் கேட்கவில்லை. அவள் அடுத்த என்ன சொல்ல போகிறாள் என்று அறிந்து தான் கேட்டான். 

“பின்ன தாஜ்மகால் யாரு? யாருக்காக கட்டினாங்க. ஏன் கட்டினாங்க என்று தெரியுமா? படிச்சிருந்தா தானே தெரியும். என்ன உசுரோட கொல்லுறது பத்தாது என்று சமாதிவேற கட்ட பாக்குறியா?”

   

“ஒரு பாட்டு பாடினது குத்தமா? பிரிச்சி மேஞ்சி அர்த்தம் கண்டு பிடிக்கிறியே. உனக்காக எவ்வளவு பாட்டு பாடுறேன் ஒன்னத்தையும் கண்டுக்காத. இத மட்டும் கேளு” மனதுக்குள்ளே அவளை முறைத்தவன்

“சீ.. போ… தாஜ்மகால் கேன்சல். இந்த மூஞ்சிக்கு தாஜ்மகால் கட்டணும் என்று நினைச்ச என்ன தான் செருப்பால அடிக்கணும்” வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தமையால் கதிர்வேல் பத்மினியை முன்னாடி செல்லுமாறு தள்ளி விட்டான்.

அவனை திரும்பி நின்று முறைத்தவள் “பிஞ்ச செருப்பா பார்த்து உச்சந் தலையிலையே நச்சுன்னு அடி. புத்தி வருதான்னு பாப்போம்” என்றவாறே சர்வேஷின் ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள்.

“ஆ… ஆ… உன் கால் இருக்குற செருப்பையே கழட்டி பிச்சி கொடு புத்தி வருதான்னு அடிச்சி பாக்குறேன்” கடுப்பாக கத்தினான் கதிர்வேல்.

“எதுக்கு நான் வெறுங்காலோட வேலைக்கு போகவா? போ… போ.. போய் நல்லா கொட்டிக. சோத்து மூட்ட”

“ஏய் குத்தவச்ச குள்ள வாத்து. வேலைக்கு போறதா இருந்தா அமைதியா போ… என்ன சீண்டணும் என்று நினைச்ச அப்பொறம் நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது”

“இவன் குடிச்சாலும், குடிக்கலைனாலும் ஒரே மாதிரிதான் இருக்கான். திருந்தாத பய. இவன் கிட்ட போய் பேசுற என்ன சொல்லணும்” தலையில் அடித்துக் கொண்ட பத்மினி ஆட்டோவை எடுக்கும்படி சர்வேஷை பார்த்தாள். 

இவர்களின் சண்டையை சுவாரச்சயமாக பார்த்திருந்த சர்வேஷ் பத்மினியிடம் “நீங்க ரெண்டு பேரும் எப்பவும் இப்படித்தான் சண்டை போடுறது போலவே கொஞ்சிக்கிறீங்களா?” என்று கேட்டு விட்டு ஆட்டோவை கிளப்பினான்.

“எங்களை பார்த்தா கொஞ்சுறது போலவா தெரியுது” கடுப்பாக கேட்டாள் பத்மினி.

“அண்ணனுக்கு உங்க மேல லவ்வோ லவ்வு. உங்களுக்கும் அண்ணன் மேல லவ் இல்லாமலையா அவர திட்டுறீங்க. நீங்க என்ன திட்டினாலும் அவர் கைநீட்ட மாட்டாரே இதெல்லாம் பார்த்து தான் சொல்லுறேன்”

சர்வேஷ் தான் பார்த்ததை வைத்து ஒரு யூகத்தில் தான் கூறினான்.

கதிர்வேலுக்கு தன் மீது காதலா? என்று ஆராயாக் கூட அவள் மனம் விரும்பவில்லை. ரமேஷ் கூறியதுதான் மின்னல் போல் அவள் மதில் வந்து போனது. “அவன் உன்ன லவ் பண்ணுறான். அதான் சதி பண்ணி கல்யாணத்த நிறுத்திட்டான்”

ஒரு பெருமூச்சு விட்டு தலையை உலுக்கிக் கொண்டவள் “மேல மட்டும் கை வைக்கட்டும். கைய ஒடச்சி அடுப்புல வைக்கிறேன்” முணுமுணுத்த பத்மினி சர்வேஷுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை.

“இத்தனை நாளாகியும் இவங்கள பேச வைக்கிறது எப்படி என்று எனக்கு புரியல” சர்வேஷும் முணுமுணுத்தான். 

இரவு பகல் பாராமல் நல்லதம்பி நண்பர்களோடு வேலை செய்ததில் சர்வேஷனுக்கான அறையையும் குளியலறையையும் சீக்கிரமாகவே கட்டி முடித்திருந்தான்.

இப்பொழுது சர்வேஷும் செல்வாவும் புதிதாக கட்டிய அறையில்தான் தங்கியிருக்கின்றனர்.

அறையை கட்டி முடிக்கும் வரை தான் உண்டு தன் வேலையுண்டு என்று சர்வேஷ் இருந்து விடவில்லை. தினமும் சரோஜாவின் வீட்டுக்கு வந்து பத்மினியை சூப்பர்மார்க்கட்டுக்கு அழைத்து செல்லலானான்.

“என்னடா…” கதிர்வேல் சர்வேஷை ஆரம்பத்தில் சந்தேகமாக பார்த்து ஆட்டோவில் ஏறினாலும் அவனோடு பேச ஆரம்பித்த பின் தோழமையாக பழக ஆரம்பித்தான்.

“நீயே கூட்டிட்டு வா. அந்த ரமேஷ் வந்து பேசுறான்னா என் கிட்ட வந்து சொல்லணும் புரியுதா?”

சர்வேஷ் “அண்ணா… அண்ணா..” என்று அழைப்பதினாலையே சிக்கினாண்டா ஒரு அடிமை என்று அவனை அதிகாரம் செய்ய ஆரம்பித்திருந்தான் கதிர்வேல்.

“அண்ணா யாரு அந்த ரமேஷ்?” சர்வேஷ் புரியாமல் கேட்டான்.

“அவனா… உன் அண்ணியோட டாவு” சிறிசேன முதலாளியின் கடையில் அமர்ந்து டீ சாப்பிட்டவாறே இருவரும் பேசிக் கொண்டிருக்க, சர்வேஷுக்கு புரையேறியது.

“டேய் பார்த்துடா…” என்று கதிர்வேல் சொல்ல.

“தம்பிசார் பார்த்து” பதறினான் செல்வா.

“என்ன ரகம்டா இவன். பொண்டாட்டிக்கு காதலன் இருக்கான்னு சாதாரணமாக சொல்லுறான். இவன் என்ன நினைக்குறான்னு தெரியலையே” குழம்பி நின்றான் சர்வேஷ்.

“அது என்னடா தம்பிசார்? நீங்க ரெண்டு பேரும் அண்ணன் தம்பி தானே?”

“இல்ல. எங்கப்பா இவங்க அப்பாகிட்ட டைவரா வேல பார்த்தாரு” செல்வா வாயில் வந்த பொய்யை பட்டென்று சொல்லி சமாளித்தான். 

சர்வேஷ் தம்பி என்று அழைக்க கூறி இருக்க, செல்வாவோ சில நேரம் தம்பி என்பான் சில நேரம் சார் என்பான். ஐயோ பாவம் அவனே குழம்பி போவதால் தம்பிசார் என்பான். இன்று கதிர்வேலிடம் சிக்கியிருந்தான்.

“அதான் தம்பியோட சாரா…. விளங்கும்டா…”

“தம்பி என்று அழைக்க சொன்னால் தம்பிசார் என்று அழைத்து இப்படியா சிக்கலில் மாட்டி விடுவ? என்று சர்வேஷ் செல்வாவை முறைத்தான். 

“உன் பேரு செல்வா? இவன் பேரு என்ன?”

“மண்டையில் இருக்கும் கொண்டையை மறந்து போன கணக்கா, பெயர் வைக்க மறந்து விட்டோமே” என்று செல்வா சர்வேஷை பார்த்தான்.

என்னதான் திட்டம் போட்டாலும் ஏதாவது ஒரு சொதப்பல் வரத்தானே செய்யும்.

“பேரு…” உண்மையான பெயரை சொல்ல முடியாது? என்ன பெயர் சொல்வது?” சர்வேஷ் யோசிக்க,

“பிரபு…” என்ற செல்வா சர்வேஷை பார்த்து பெருவிரலை உயர்த்தி சரி தானே என்று சைகை செய்தான்.

தந்தையின் பெயரில் ஒரு பகுதி என்றதும் “ஆமா ஆமா” என்று அதில் பொருந்திக் கொண்டான் சர்வேஷ்.

“பிரபுவா… இருக்கட்டும் இருக்கட்டும்” என்றான் கதிர்வேல்.

“ஆமா அண்ணா நீங்களும் அண்ணியும் எப்படி கல்யாணம் பண்ணீங்க? லவ் மேரேஜ் தானே” மெதுவாக கேட்கலானான் சர்வேஷ்.

கதிவேலுக்கு உண்மையிலயே என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. அவன் வைன்சாப்புக்கு சென்று மது பாட்டில் எடுத்து வருவதை பார்த்திருக்கிறான். ஆனால் வீட்டில் அருந்துவதில்லை. அப்படியென்றால் இவன் எங்கே சென்று மது அருந்துகின்றான்?

மாலை ஆறு மணிக்கு பான் விற்க கிளம்பினால் பத்து மணிவரை வேனில் சுற்றுபவன் பேக்கரிக்கு சென்று வேனை ஒப்படைத்து விட்டு வீட்டுக்கு வருவான். வரும் வழியில் ஏதாவது தெரிந்த ஆட்டோவில் ஏறி சவாரியோடு சவாரியாக வந்து விடுவானே ஒழிய ஆட்டோவுக்கும் காசு செலவு செய்ய மாட்டான்.

இதில் இவன் எப்பொழுது குடிக்கிறான் என்றே தெரியவில்லை. வீட்டுக்கு வரும் பொழுது நன்றாக குடித்து விட்டுத்தான் வருகிறான்.

இதை கண்டு பிடிக்க, சர்வேஷ் இவன் பேக்கரிக்கு சென்ற உடன் ஆட்டோவோடு சென்று இவனுக்காக காத்துக்கொண்டு நின்றால் தள்ளாடியபடிதான் ஆட்டோவில் ஏறுவான்.

“பேக்கரிலேயே ஊத்திக்கிட்டாரா?” என்று பார்த்தால் மற்ற ஓட்டுனர்கள் சாதாரணமாகத்தான் செல்வார்கள். அப்படியென்றால் இவன் மட்டும் எப்படி குடிப்பான். அதுவும் தினமும்.

ஒருவேளை சிறிசேன முதலாளி கூறிய அந்த ஐஸ் போதைபொருளை பாவிக்கின்றானோ? இல்லையே அத பற்றி முதலாளி வேறு விதமாகத்தானே சொன்னாரு. 

பத்மினிக்கும், கதிர்வேலுக்கும் இடையில் எதோ ஒரு பிரச்சினை இருக்கிறது. அதனால் தான் கதிர்வேல் வெளியே தூங்குகிறான். அதுவும் கொட்டகையில்.

கதிர்வேல் மனம் விட்டு பேசினால் தான் உண்மையை அறிய முடியும் என்பதால் காதல் திருமணமா என்று போட்டு வாங்க முயன்றான்.

“அத தெரிஞ்சிக்கிட்டு நீ என்ன பண்ண போற?”

“அங்க அண்ணி எந்த கேள்வி கேட்டாலும் வாயவே திறக்க மாட்டாங்க. இங்க இவரு கேள்வி கேட்டா உல்ட்டாவா பதில் சொல்லுறாரு. இவங்கள வச்சிக்கிட்டு” மானசீகமாக தலையில் கைவைத்த சர்வேஷ் “நானும் லவ் பண்ணி, கல்யாணம் பண்ணி செட்டில் ஆகலாம்னு தான்” என்று இழுத்தவாறே கேஷியரில் அமர்ந்திருந்த சுராங்கணியை பார்த்தான்.

சர்வேஷ் என்னமோ எதேச்சையாகத்தான் பார்த்தான் அதை கதிர்வேல் பார்த்து விட்டான். “நீ செல்வாவ இங்க வேலைக்கு சேர்த்து விட்டு, கடைக்கு அடிக்கடி வரும் போதே நினச்சேன். இந்த பொண்ணுக்கு ரூட்டு விடுறன்னு.

ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணிட்டீனா

ஊருப்பட்ட பிரச்சினையெல்லாம் உன்ன தேடி வந்துடும் தம்பி

காதலிச்ச பொண்ண நீ கைவிடாதே  தம்பி

உன்னையே நம்பி அவ வந்தவ தம்பி

பாட ஆரம்பித்தவன் சட்டென்று “இங்க பாரு தம்பி அண்ணன் சொல்லுறேன் கேளு. அது படிச்ச புள்ள. உனக்கும் அவளுக்கும் செட்டே ஆகாது. ஆனா ஒன்னு… நீ உசார் பண்ணிடீனா நான் உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன். சிறிசேன முதலாய நீ சமாளி. ஓகே வா?”        

சர்வேஷுக்கு சிரிப்பாக இருந்தது. அவனுக்கு சுராங்கணி என்ற பெயர் பிடித்திருந்தது. அதற்காத்தான் அந்த பெண்ணை பார்த்தான். பார்த்த உடன் காதல் வரும் என்றதில் அவனுக்கு துளியளவேனும் நம்பிக்கை இல்லை. பார்த்த உடனே காதல் வருவது என்றால் அழகான பெண்கள் மீதுதான் வர வேண்டும். அவன் எத்தனை பெண்களை கடந்து வந்திருக்கின்றான். அந்த பெண்களின் மீது வராத காதல் இந்த பெண் மீதா வர போகிறது?

சுராங்கணியை சும்மா பார்த்ததற்கே கதிர் தான் அவளை காதலிப்பதாக நினைத்து, காதலுக்கு படிப்புதான் பிரச்சினை என்று பேசியது சர்வேஷுக்கு சிரிப்பாக இருந்தது. மதம் ஒரு பிரச்சினையாக அவனுக்கு தெரியவுமில்லை. அவன் பொருட்படுத்தவுமில்லை. கொஞ்சம் வித்தியாசமாகத்தான் சிந்திக்கின்றான்.

இருவரும் காதலித்தால் இவனே திருமணம் செய்து வைப்பேன் என்று சொல்வது அல்டிமேட். ஆனால் சிறிசேன முதலாளி பிரச்சினை செய்வார் என்று இவன் பிரச்சினையில் சிக்காமல் கழண்டு கொண்டு சர்வேஷை பார்த்துக்கொள்ள சொன்னதில் கதிர் புத்திசாலி என்று சொல்லாமல் சொல்லி விட்டான்.

“ஒரு கை அசைச்சா… ஓசை வராதே அண்ணா… அந்த பக்கம் ரெஸ்பான்ஸ் பண்ணா பார்க்கலாம்” என்ற சர்வேஷ் கதிர்வேலை இந்த வழியில் மடக்கலாம் என்று நினைத்து தான் சுராங்கணியை காதலிப்பதாக கதிர்வேலன் கூறியதை மறுக்காமல் “நீங்களும் அண்ணியும் லவ் மேரேஜ் தானே. அதான் சூப்பரா டிப்ஸ் கொடுக்குறீங்க” என்றான்.

“ஏன் டா நீ வேற….” அலுப்போடு கூறினான் கதிர்வேல். 

“அப்போ ஒரு கை ஓசை தானா? யாரு கை… உங்க கையா…” பத்மினிக்கு லவ்வர் இருப்பதாக சொன்னீங்களே என்று எல்லாம் சர்வேஷ் கேட்கவில்லை. கதிர்வேலே அவன் மனதில் இருப்பதை சொல்ல வேண்டும் என்று நினைத்தான்.

அவ்வளவு இலகுவில் மனம் திறப்பவனா கதிர்வேல். அவன் பாட்டுக்கு பாட ஆரம்பித்தான்.

காதல் வளர்த்தேன்

காதல் வளர்த்தேன் உன்மேல்

நானும் நானும் புள்ள காதல்

வளர்த்தேன் காதல் வளர்த்தேன்

காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள

கூடு கட்டி காதல் வளர்த்தேன்

யே இதயத்தின்

உள்ள பெண்ணே நான்

செடி ஒன்னு தான் வெச்சு

வளர்த்தேன் இன்று அதில்

பூவாய் நீயே தான் பூத்தவுடனே

காதல் வளர்த்தேன்

“என்னடா பண்ணுறது” என்று சர்வேஷ் பார்த்திருந்தான்.

“செல்வா அய்யே…” என்று செல்வாவை அழைத்த சுராங்கணி பொருட்களை வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று சிங்களத்தில் கூற அவன் தலையை சொறியலானான்.

அதை பார்த்த கதிர்வேல் பாட்டை நிறுத்தி “இந்த இந்த வேலைகளை பண்ணி வை செல்வா” என்று சிங்களத்தில் சுராங்கணியிடம் எதையோ கூறி சிரிக்க, அவளும் சிரித்தாள்.

“போச்சு… ஒன்னு கூடிட்டாங்க” முணுமுணுத்த செல்வ  “அதைத்தான் சொன்னாங்களா… சரிதான். பாஷை தெரியல்னா எந்த ஊருக்கு போனாலும் பொழைக்குறது கஷ்டமப்பா…” முணுமுணுத்தவாறே செல்வா வேலையை பார்கலானான்.

அமர்ந்திருந்த கதிர்வேல் “டேய் இருடா வரேன்” என்று கிளம்ப, சர்வேஷும் கிளம்ப எழுந்தான்.

“அய்யே அய்யே.. தேவலட சல்லி தீலா யன்ன” {குடிச்ச டீக்கு காசு கொடுத்துட்டு போங்க} சுராங்கணி கத்த சர்வேஷ் அவசர அவசரமாக பணத்தை நீட்டினான்.

செய்யும் வேலையை விட்டு ஓடி வந்த செல்வாவோ “பிரபு தம்பி என்ன இப்படி ஆயிருச்சு?” கலவரமாக முகபாவனையோடு கூறினாலும் அவன் குரலில் நக்கல் கொட்டிக் கிடந்தது. 

“என்ன…..?” கதிரின் பின்னால் செல்லும் அவசரத்தில் சிடுசிடுத்தான் சர்வேஷ்.

“நீங்க இந்த புள்ளைய சைட் அடிக்கிறீங்க. இந்த புள்ள என்னடான்னா உங்கள அண்ணான்னு கூப்பிடுது”

“என்ன சொல்லுற?” தான் இவளை சைட் அடிக்கிறதா இவர்களே முடிவு பண்ணிட்டார்களா? நினைக்கையில் சர்வேஷுக்கு சிரிப்பாக இருந்தது. மறுக்கத் தோணவில்லை. செல்வாவிடம் விளையாட எண்ணினான். 

“சிங்களத்துல அய்யானா அண்ணான்னு அர்த்தம் பிரபு தம்பி” பெரிய பிரச்சினை போல் செல்வா கூறினான்.

சிரிப்பை அடக்கியவாறே “அய்யராத்து பொண்ணா இருக்கும்” என்ற சர்வேஷ் சுராங்கணி கொடுத்த சில்லறையை பாக்கட்டில் போட்டவாறு கதிர்வேலன் பின்னால் ஓடினான்.

“என்னது அய்யராத்து பொண்ணா?” தன் காதில் சரியாகத்தான் விழுந்ததா? காதை குடைந்தவாறே சுராங்கணியை மேலும் கீழும் பார்த்தவன் அவள் அணிந்திருந்த குட்டை கவுனை பார்த்து விட்டு “தப்பா சொல்லிட்டு போறாரு. நஸ்ரியா பேனா இருப்பாங்க” என்றான் செல்வா.

அது சுராங்கணியின் காதில் விழ “யாரு நஸ்ரியா” சம்பந்தமே இல்லாமல் ஒரு பெண்ணின் பெயரை கூறினால் எந்த பெண்தான் கேட்காமல் இருப்பாள்.

“நீங்க தமிழ் படமே பார்க்க மாட்டீங்களா?”

“டிவில போட்டா பார்ப்பேன். பேரெல்லாம் தெரியாது” என்று சுராங்கணி தமிழில் சொன்னாள்.

“என்னம்மா தமிழ்ல பேசுற? உனக்கு தமிழ் தெரியுமா?” அதிர்ந்தவரே கேட்டான் செல்வா.

“எனக்கு தமிழ் தெரியாது என்று நான் சொன்னேனா? நல்லாவே தெரியும். என்ன டக்குனு பேச வராது சிங்களம் தான் வருது”

சுராங்கிணி கூறியதை செல்வாவுக்கு தமிழில் புரிய வைத்த கதிர் சுராங்கணியிடம் “உனக்குத்தான் தமிழ் தெரியுமே. எதுக்கு சிங்களத்துல பேசி இவன கொல்லுற” என்றுதான் கேட்டிருந்தான்.

“இப்படி அதிர்ச்சி கொடுக்காதம்மா… பக்கோ…னு இருக்கு” தான் சர்வேஷிடம் கூறியதை இந்த பெண் கேட்டிருந்தால் என்ன நினைப்பாள். என்று நினைக்கையில் ஆடி நின்றான் செல்வா.

“பேங்குக்கு பணத்தை டெபாசிட் பண்ண போன தாத்தாவ இன்னும் காணோம். நீங்க போய் சாப்பிடுங்க. நான் பாத்துக்கிறேன்”

“இல்லமா தாத்தா வரட்டும்” என்று செல்வா கூறும் பொழுதே லாவண்யா குழந்தையை தூக்கிக் கொண்டு கடைக்கு வந்தாள்.

“இவ அவ இல்ல. சீசீடிவி” மெல்ல முணுமுணுத்தவன் “கல்யாண் ஆச்சா. குழந்தை கூட இருக்கு. சரோஜா அம்மா தமிழ் பொண்ணு என்று சொன்னாங்க. தாலி இல்ல. குங்குமம் இல்ல. கல்யாணம் ஆச்சு என்று நாம எப்படி கண்டு பிடிக்கிறது? இந்த ஊரு பொண்ணுங்க என்ன நினைச்சுகிட்டு இருக்காங்க?” இவன் பாட்டுக்கு புலம்பிக் கொண்டிருக்க,

லாவண்யா சுராங்கணியிடம் என்ன கேட்டாளோ “ஒண்ணே ஒன்னு இருக்கு. இரு எடுத்து தரேன்” என்று செல்வாவை அழைத்தாள்.

“என்ன கேக்குறா இவ?” என்று செல்வா பார்க்க

“உள்ள காப்போர்ட்டுல நீல கலர் பாக்கட் இருக்குல்ல அத கொண்டு வாங்க. நல்லா பேப்பர்ல சுத்தி கொண்டு வாங்க” என்றாள்.

“செனிடைசரா பாக்கட்டா… அதான் கலர் சொல்லுறாங்களா? எந்த காலத்துல இருக்காங்க? பொண்ணுங்க முன்னேறிட்டாங்கனு சொன்னாலும் இன்னும் சில விஷயம் மாறல. இவங்க இப்படி பண்ணுறதாலதான் பசங்க பொண்ணுகளோட வலியையும் புரிஞ்சிக்கிறதில்ல. பெண்களை அபியூசும் பண்ணுறாங்க. கட்டின புருஷன் கிட்ட உதை வாங்குங்க. புருஷனோட மரியாதை குறையக் கூடாது என்று கண்ணீரை துடைச்சு கிட்டு எதையுமே வெளிய சொல்லாதீங்க” சானிடைசர் பாக்கட்டுக்கள் அங்கே தான் செல்பில் இருந்தன. செல்வா பார்த்திருந்தாலும் கவனிக்கவில்லை.

உள்ளே சென்றவன் நீல நிற பாக்கட் குழந்தைகளுக்கான பால்மா என்றதும் அதிர்ந்தான்.

“என்ன கொடும இது? எதுக்கு இத ஒளிச்சு வச்சிருக்காங்க” புரியாமலே சுராங்கணி கூறியது போல் நன்றாக பேப்பரில் சுற்றி கொண்டு வந்து கொடுத்தான்.

பாதி பணத்தை கொடுத்த லாவண்யா பால் பாக்கட்டை எடுத்துக் கொண்டு சென்றாள்.

“இல்ல எனக்கு புரியல. எதுக்கு இப்போ பால்மா பாக்கட்ட இப்படி மூடி மறச்சி எடுத்துட்டு போறாங்க? கண்ணு படும் என்றா?” இடுப்பில் கை வைத்தவாறு செல்லும் லாவண்யாவை வினோதமாக பார்த்தான் செல்வா.

“அட நீங்க வேற அய்யே. அந்த பால்மா நானூறு கிராம் மூவாயிரம் ரூபாக்கு மேல வரும். எல்லா இடத்துலயும் கிடைக்கிறதுமில்லை. களவாணி பயலுங்க கண்ணுல பட்டா தங்கத்த விட்டுட்டு பால்மாவைதான் திருடுவானுங்க. அதான்” என்றாள் சுராங்கணி.

 “அடக் கொடுமையே! பொம்பளைங்க நகையை போட்டுக்கிட்டு ரோட்டுல போனா பைக்குல வந்து செயின பறிக்கிறான்னு பார்த்தா… குழந்தைக்கு ஒரு பால்மா பாக்கட்டு கூடவா கொண்டு போக முடியாது”

“தாத்தா குடை எடுத்து போறாரே எதுக்குன்னு நினைக்கிறீங்க? நூறு இருநூறு ரூபாவை பாக்கட்டுல வச்சிட்டு மத்த அமவுண்ட்ட குடைக்குள்ளதான் வைக்கிறார்”

“ஆஹ்… தாத்தாவா கொக்கா… ஒன்னு மட்டும் தெரிஞ்சி போச்சுடா… இந்த ஊருல பொழைக்க அறிவாளியா இருந்தா மட்டும் பத்தாது சூட்சமமும் தெரிஞ்சிருக்கணும்”

“கஷ்டப்பட்டு உழைக்கணும், முன்னுக்கு வரணும் என்று நினைக்குறவங்களுக்கு மத்தியில எப்படியாவது ஏமாத்தி பொழைக்கணும் என்று சிலர் இருக்கத்தான் செய்யிறாங்க. அது இங்க மட்டுமில்ல. எல்லா இடத்துலயும் அப்படித்தான்”

“அவனுங்கள கண்டு புடிச்சி தண்ணி இல்லாதா தீவுக்குள்ள விடணும்” கடுப்பானான் செல்வா.

“புடிக்கலாம் புடிக்கலாம் போங்க. போய் சாப்பிடுங்க” சிரித்தாள் சுராங்கணி.

Advertisement