Advertisement

அத்தியாயம் 6

ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணிக்கே சர்வேஷும் செல்வாவும் சரோஜாவின் வீட்டு வாசாலில் நின்றிருந்தனர். பத்மினியும் வேலைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள். இன்று ஞாயிற்றுக்கிழமை கதிர்வேல் வீட்டில் இருப்பானோ? வெளியே கிளம்பி விடுவானோ? அவன் வெளியே செல்ல முன்பாக வர வேண்டும் என்பதுதான் சர்வேஷின் ஆசையும்.

“அக்கா… அக்கா… இருக்கியா?” நல்லதம்பி சரோஜாவை அழைத்தவாறே உள்ளே நுழைந்தான்.

“யாரு ராஜூவா? என்னடா? காலையிலையே இந்த பக்கம்” என்று வெளியே வந்த சரோஜா வெளியே நின்றிருந்த இருவரையும் பார்த்து கண்களாளேயே யார் என்று விசாரித்தாள்.

“மட்டக்களப்புல இருந்து வந்திருக்காங்க. வாடகைக்கு வீடு வேணுமாம்” என்று நல்லதம்பி ஆரம்பிக்கவும்

“ஏன்டா என் வீடு வாடகைக்கு கொடுக்குற நிலமைலயா இருக்கு? வீட்டை வாடகைக்கு கொடுத்துட்டு நான் எங்க போவேன்” என்றாள்.

“முதல்ல உள்ள வாக்கா சொல்லுறேன்” என்று சரோஜாவை உள்ளே அழைத்து சென்ற நல்லதம்பி விலாவரியாக சொல்ல ஆரம்பித்தான்.

சர்வேஷுக்கு சரோஜாவின் குடும்பத்தில் யாரிடம் முதலில் நெருங்குவது என்று புரியவில்லை. சரோஜாவும் பத்மினியும் வேலைக்கு செல்கிறார்கள்.

“தம்பி சார் தம்பி சார். உங்க அண்ணி கிட்ட பேசப் போய் இந்த ஊர்ல தர்ம அடியெல்லாம் வாங்க முடியாது” செல்வா பின் வாங்கினான்.

அதுவும் அவளிடம் பேச வேண்டுமானால் வேலை செய்யும் சூப்பர்மார்கட்டுக்கு சென்று பேச வேண்டும். அது வீண் பிரச்சினையை உருவாக்கும்.

சரோஜாவை சந்திக்கக் கூடிய ஒரே இடம் சிறிசேன முதலாளியின் கடை தான். கடையில் யார் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு காலில் சக்கரத்தை கட்டியது போல் கிளம்பி விடுவாள்.

கையில் பொருட்கள் அதிகமாக இருந்தால் தூக்கி செல்ல உதவுவது போல் பேசி, பழகியிருக்கலாம். அன்றாடம் சமைக்க பொருள் வாங்கி செல்பவளிடம் என்னவென்று பேச?

கடைசியாக கதிர்வேலன். காலையில் கிளம்பி பஸ் ஏறிப் போகிறான். எங்க போகிறான் என்றே தெரியவில்லை. ஆறு மணிக்கெல்லாம் டான் என்று வந்து விடுவான்.

வந்தவன் ஒரு சூன் பான் வேனில் பான் விற்க கிளம்பி விடுவான். இரவு பத்து மணிவரை பான், பன், என்று விற்பவன் பதினொருமணிக்குத்தான் வீடு வருவான்.

இவர்கள் மூவரையும் நெருங்க முடியாததால் வேலையில்லாமல் இருக்கும் நல்லதம்பியை நெருங்கிருந்தான் சர்வேஷ்.

“தம்பி நானே ஒரு கூலித்தொழிலாளி. போன மாசம் இருந்த சிமெண்ட்டு விலை இந்த மாசம் மூணு மடங்கா உயர்ந்திருச்சு. வெளிநாட்டிலிருந்து எந்த பொருளையும் இறக்குமதியும் செய்யிறதும் இல்ல. பொருள் இல்லனு வேலை இல்லனு சொல்லுறதா? விலைவாசியால வேலைய நிறுத்திட்டாங்கனு சொல்லுறதா? நீங்க என் கிட்டவந்து வேல தேடி தரச் சொல்லுறீங்களே”

சர்வேஷும் செல்வாவும் தாங்கள் வேலை தேடி மட்டக்களப்பிலிருந்து வந்ததாக நல்லதம்பியிடம் கூறி பேச ஆரம்பித்தனர்.

“வேலை கூட பரவால்ல மாமா எதோ நாங்களே தேடிக்கிறோம். வாடகைக்கு வீடு வேணும். ஊருல அங்காளி, பங்காளி பிரச்சினை. இருக்குற நிலத்த வித்து கைல கொஞ்சம் காசு வச்சிருக்கோம். ஏதாவது தொழில் தொடங்கலாம். ஆனா பேச்சுலர் பசங்க என்றதும் யாரும் வாடகைக்கு வீடு தர மாட்டேங்குறாங்க” தான் சொல்லும் கதையை நல்லதம்பி நம்ப வேண்டும் என்பதில் சர்வேஷ் கவனமாக இருந்தான்.

“ஆமாப்பா குடும்பம் என்றா கொடுப்பாங்க. யுத்தம் முடிஞ்சாலும் தமிழனுங்க என்றா அதுவும் வடக்குல இருந்து வந்தா கொஞ்சம் சந்தேகமாத்தான் பார்ப்பாங்க. உங்களுக்கு வேற சிங்களமும் தெரியல. என் வீட்டுல இருக்குறது ஒரே ரூமு. இருந்தா உங்களுக்கு வாடகைக்கு விட்டிருப்பேன்” வேலையில்லாமல் இருக்கும் பொழுது இந்த வழியிலாவது பணம் ஈட்டலாம் என்று எண்ணி கூறிய நல்லதம்பி “என்ன தொழில் செய்ய போறீங்க?” என்று கேட்டான்.

“ஆட்டோ வாங்கி ஓட்டலாம் என்று நினச்சேன். ஆனா ஆட்டோ இங்க வாடகைக்கு கூட கிடைக்குதே. எதுக்கு சொந்தமா வாங்கணும். வீடுதான் முக்கியம் எனக்கு ஒரு யோசனை இருக்கு, ஆனா அதுக்கு அவங்க ஒத்துப்பாங்களானு தெரியல” என்றான்.

“எவங்க…” நல்லதம்பி புரியாமல் கேட்டான்.

“அது வந்து மாமா உங்களுக்கு தெளிவா சொல்லனும்னா… இப்போ எங்களுக்கு யாரும் வாடகைக்கு வீடு தர சம்மதிக்கிறது இல்லையே. ஆனா இந்த ஊருல நிலம் இருந்தும் வீடு கட்ட முடியாம இருக்குறவங்க இருக்காங்க இல்லையா?” என்று சர்வேஷ் சொல்ல,

“பாதி வீட்டை கட்டி மீதி வீட்டை கட்ட முடியாம இருக்குறவங்க இருக்காங்களே தம்பி” என்றான் வேர்க்கடலையை சாப்பிட்டவாறே  செல்வா.

“ஆமா நிறைய பேர் இருக்காங்க. நீங்க என்ன சொல்ல வரீங்க? அத சொல்லுங்க”

“அப்படி யாராவது வீடு கட்ட வசதி இல்லாம இருக்குறவங்க வீட்டுல வாடகைக்கு தங்கி வீட்டையும் கட்டி கொடுக்கலாம் என்றுதான் யோசிக்கிறேன்” 

“புரியல”

“என்னடா உளறுற” சர்வேஷ் கூறியதை நல்லதம்பி சரோஜாவிடம் கூறிய போது அவளும் இவ்வாறுதான் கேட்டாள்.

“அட அக்கா…. முன் பணம் மூணு மாசமோ, ஆறு மாசமோ கொடுக்குறதுக்கு பதிலா ஒரு அறைய கட்டி அந்த பசங்க தங்கிக்கிறாங்களாம். மாச மாசம் வாடகை வேண்டும் என்றா வாடகை. வீட்டை கட்டணும் என்றா கொஞ்சம் கொஞ்சமா வீட்டை கட்டிக் கொடுக்குறாங்களாம். சாப்பாடு செலவு, லொட்டுலொசுக்குனு எல்லா செலவைக்கும் கொடுக்குறானுகலாம். அதுவும் சம்பாதிச்சு”

“நம்புற மாதிரியா இருக்கு?” சரோஜா தம்பியை திட்ட ஆரம்பித்தாள்.

“என்ன தம்பி உள்ள போனவங்கள இன்னும் காணோம். நம்மள திரும்பிப் போக சொல்லுவாங்க போலயே?” செல்வா யோசனையாக பார்த்தான்.

சரோஜா உடனே சம்மதிப்பாள் என்று சர்வேஷுக்கு தோன்றவில்லை. கதவை பலமாக தட்டினான். 

“இங்க பாருங்க தம்பி நீங்க சொல்லுறது நடைமுறைக்கு சரிவராது. என் தம்பி தான் புரியாம பேசுறான்” என்று வெளியே வந்தவாறே பேசலானாள் சரோஜா

அவளை பேச விடாது “அம்மா… எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்ல. சொந்த ஊருக்கு போகுற எண்ணமும் இல்ல. இந்த வழியில ஒரு குடும்பத்தை தேடிகிட்டா நாளைக்கு எனக்கு ஒரு நல்லது கெட்டது என்றா நீங்க வருவீங்க என்றுதான் இப்படி கேட்டேன். தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க” என்றான்.

“ஆகா ஆகா… எழுதி கொடுத்ததத்தான் படிப்பாரு என்று பார்த்தா சொந்தமா டயலாக் பேசுறாரு. அப்பா டைரக்டர் ஆச்சே மகனுக்குள்ள கொஞ்சூண்டு கதை, திரைக்கதை வசனம் எழுத வராதா?” செல்வா சர்வேஷை மனதுக்குள் பாராட்டி கொண்டிருக்க.

சரோஜாவுக்கு அவனை பார்த்தால் பாவமாகவும் இருந்தது. அதற்காக யார் என்றே தெரியாதவனை வீட்டில் தங்க வைக்க முடியுமா?

சரோஜா யோசிப்பது பார்த்த சர்வேஷ் “உங்களுக்கு இன்னொரு மகனா கண்டிப்பா நான் இருப்பேன் ம்மா…”

“இருக்கறவனையே சமாளிக்க முடியல இதுல நீ வேற” சரோஜா கதிர்வேலை நினைத்து பொருமினாள். 

செல்வா சத்தமாக சிரித்து விட, “கதிர் பத்தி ஏற்கனவே சொல்லிட்டேன்” அக்காவின் காதருகே கிசுகிசுத்தான் நல்லதம்பி.

குடும்ப விஷயத்தையெல்லாம் கண்டவங்க கிட்ட சொல்லுவியாடா என்று சரோஜா தம்பியை முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கையில்

“செல்வா அண்ணா…” பல்லை கடித்த சர்வேஷ் “அம்மா நீங்க நினைக்கிறது புரியுது. வீட்டை கட்ட போறது உங்க தம்பிதான். வேல இல்லாம இருக்குற அவருக்கு இப்போதைக்கு வேல கிடைச்சது போலவும் இருக்கும். எங்களால உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. காலைல எட்டு மணிக்கு வேலைக்கு கிளம்பினா நைட் எட்டு மணிக்கு வீட்டுல இருப்போம். முக்கியமா குடிக்க மாட்டோம். ஆட்டோதான் ஓட்ட போறோம். நீங்க எங்கயாச்சும் போகணும் என்றா நானே கூட்டிட்டு போறேன். நாங்க ஒழுங்கா இருக்குறத பார்த்தே உங்க பையன் திருந்துவான். நீங்க வேணா பாருங்களேன்” இன்னும் என்னவெல்லாம் சொல்லலாம் என்று சர்வேஷ் யோசிக்க,

“என்ன அக்கா நீ. தம்பிதான் இவ்வளவு சொல்லுதே ஒத்துகோகா…” நல்லதம்பி வற்புத்தலானான்.

கதிர் திருந்துவான் என்றதும் சரோஜாவின் மனம் கரைந்தது “சரி என்னமோ சொல்லுறீங்க. உங்க ரெண்டு பேரையும் பார்த்தாலும் பாவமாதான் இருக்கு. என்னகி அறைய கட்டி குடியேற போறீங்க”

“இதோ இப்போவே பொருள் வாங்க கிளம்பிடுறோம். மாமா வாங்க” என்றவன் முதலில் வீட்டை சுற்றிப் பார்த்தான்.

வாசல், ஒரு படுக்கையறை, சமையலறை தான் வீடு. குளியலறையும் கழிவறையும் வெளியேதான் இருந்தது.

சமையலறை பக்கம் கொஞ்சமாகத்தான் இடம் இருந்தது. அறை இருக்கும் பக்கம் தான் கொட்டகையும் தாராளமாக இடமும் இருந்தது.

இவர்கள் வீட்டை பார்க்க ஆரம்பிக்கும் போது கதிர்வேல் இவர்கள் பின்னாலையே வந்தான்.

“வணக்கம் அண்ணா” செல்வா கதிவேலுக்கு பணிவாக வணக்கம் வைத்தான். 

“ஆ… ஆ… இருக்கட்டும். இருக்கட்டு… ஆமா மாசம் வாடகை எவ்வளவு? கீமணி எவ்வளவு எதுவும் பேசாம நீ பாட்டுக்கு வீட்டை பாக்குற? உன் பேர் என்ன? உன்ன எங்கயோ பார்த்தா மாதிரி இருக்கு. போலீஸ் வான்டட் போஸ்டர்ல இருக்கியா என்ன?” சர்வேஷை பார்த்துக் கேட்டான் கதிர்வேல். சினிமா பார்க்கிறவனுக்கு சர்வேஷை தெரியாமலா இருக்கும்.    

“அடிக்கடி போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் வாறவனுத்தான் பொறம்போக்கோட போஸ்டாரெல்லாம் தெரியும்” மகனின் முதுகில் அடித்தாள் சரோஜா.  

கதிவேல் சரோஜாவின் மேல் பாய முன் “வணக்கம் அண்ணா” என்று சர்வேஷ் கதிர்வேலன் கைகளை பிடித்து குலுக்கினான்.

தன்னையும் ஒருத்தன் மதிக்கிறானே என்று உச்சிகுளிர்ந்தான் கதிர்வேல்.

ஆனாலும் “டேய் இங்க பாரு அண்ணான்னு கூப்பிடுறத்துக்காக வீடு கட்ட ஒத்துக்கிட்டேன். நான் தூங்குறது கொட்டகைள. என் இடத்துல கை வைக்கக் கூடாது. புரிஞ்சுதா?” சர்வேஷை மிரட்டினான் கதிர்வேல்.

“கொட்டகைலயா தூங்குறீங்க? கட்டுற அறைல நம்ம கூட தூங்கலாம் அண்ணே டோன்ட் ஒர்ரி” என்றான் செல்வா.

“நான் கேட்டேனா? மூடிக்கிட்டு கெட”

“ஏன்டா… எனக்கேன்னே வருவியா?” என்று சர்வேஷ் செல்வாவை முறைக்க,

சர்வேஷின் தோளில் கைபோட்டு “அப்பொறம் தம்பி அறை வாடகை மாசம் பத்தாயிரம் என்று சொன்னீங்கல்ல. மாசம் பதினைஞ்சாயிரம். அதுல ஐயாயிரம் எனக்கு வரணும். இல்ல அறையோடு சேர்த்து ரெண்டு பேரையும் கொளுத்திடுவேன்” என்று மிரட்டி விட்டு சென்றான்.

இருந்தாலும் கடலமுத்து ரொம்ப ஸ்டிக்ட்டுப்பா. காமடி பீஸ் என்று நினச்சா பகல் கொள்ள அடிக்கிறான்” செல்வா முணுமுணுக்க, சர்வேஷ் மீண்டும் முறைத்தான்.

எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை அவனுக்கு அவனுடைய சகோதரனோடு இருக்க வேண்டும். அது நடக்கப் போகிறதே.

புதிதாக கட்டும் அறையை இந்த வீட்டோடு இணைத்து கட்டாமல் தனியாக கட்டினால் இந்த வீட்டை இடித்துக் கட்ட வசதியாக இருக்கும் என்று நல்லதம்பியிடம் கூறிய சர்வேஷ் அறையை கட்ட என்ன பொருட்கள் வேண்டும்? தனியாக உங்களால் வேலை பார்க்க முடியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்கலானான்.

எந்தெந்த பொருட்களை பணம் கொடுத்து எங்கே வாங்கலாம். என்ன பொருள் தன்னிடம் இருக்கிறது. என்ன பொருளை இலவசமாக நண்பர்களிடம் பெற்றுக்கொள்ளலாம் என்று சட்டென்று பட்டியலிட்ட நல்லதம்பி சுசுறுசுறுப்பாக காரியத்தில் இறங்கியிருந்தான்.

வேலை இல்லாமல் இருக்கும் நல்லதம்பியை சரோஜா தன்னோடு தேயிலை தோட்டத்தில் வேலைக்கு வருமாறு அழைத்தாள். நல்ல தம்பிக்கு அதில் விருப்பமில்லை. அதனால் மறுத்து கட்டிடவேளை தேடி அலைய, வீட்டு சூழ்நிலையால் கமலம் வீட்டு வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள்.

கமலத்தை வீட்டு வேலைக்கு அனுப்புகின்றானே என்ற கோபத்தில் தான் சரோஜா நல்லதம்பியை திட்டுவாள்.

பத்மினியும் கமலத்திடம் வேண்டாம் என்று கூறிப் பார்த்தாள்.

“சம்பளம் மட்டுமில்ல சாப்பாடும் கொடுக்குறாங்க. எந்த வேலைல சாப்பிடும் கொடுத்து சம்பளமும் கொடுப்பாங்க சொல்லு? இப்போ இருக்குற சூழ்நிலைல இந்த வேலை தான் சரி. சாப்பாட்டு செலவு மிச்சம் பாரு” என்றாள் கமலம்.

உயர்ந்த வேலை, தாழ்ந்த வேலை என்று எந்த வேலையும் இல்லை. வேலை பாக்குறதே சம்பளம் வாங்கத்தான். எல்லா இடத்திலும் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது.

கமலம் பக்கத்து தெரிவில் உள்ள தெரிந்தவர்களின் வீட்டுக்கு செல்வதால் தான் நல்லதம்பியே சரியென்று இருந்தான்.

பத்மினி புரிந்து கொண்டாள். சரோஜாவுக்கு பிடிக்கவில்லை. அதனால் தம்பியை திட்டுவாள். இன்று தம்பி ஆர்வமாக தன்னுடைய வீட்டை கட்டும் வேலையில் இறங்கியதை ஆசையோடு பார்த்தாள்.

“தம்பி அவசர அவசரமா ரூம் கட்டி குடியேறுறத பத்தி யோசிச்சீங்களே. டாய்லட் வந்தா எப்படி போவீங்க? இங்க வெஸ்டன் டாய்லட் கிடையாது. உங்களுக்கு இந்த சிஸ்டம் சரிவராது. முதல்ல பாத்ரூம் கட்டுற வழிய பாருங்க” என்றான் செல்வா.

சூட்டிங்காக கிராமத்துக்கு சென்று தண்ணீர் இல்லாமல் காட்டுக்குள் அல்லாடியதைத்தான் செல்வா கூறுகிறான் என்று சர்வேஷுக்கு புரிந்தது. ஒருநாள் ரெண்டு நாள் என்றால் பொறுத்துக் கொள்ளலாம். மாதக்கணக்கில் ஆனால் என்ன செய்வது? என்று யோசித்த சர்வேஷ் கழிவறை கட்டுவதை பற்றியும் கூறினான்.

“பாத்ரூம் பிட்டிங்ஸ் கிடைக்குமான்னே தெரியல தம்பி. இப்போவே ஆடர் கொடுத்துடலாம்” என்று மூவரும் பொருள் வாங்க டவுனுக்கு கிளம்பினர்.

சர்வேஷ் செல்லும் பொழுதே சரோஜாவிடம் பணம் கொடுத்து விட்டு சென்றிருக்க, மதியத்துக்கு அவர்களுக்கும் சேர்த்து சமைத்தாள்.

வெளியே சென்றவர்கள் மண், செங்கற்கள், சீமெந்து என்று தேவையான எல்லா பொருட்களையும் வாங்கிக் கொண்டு வர இரண்டு மணியாகி இருந்தது.

அறையை சீக்கிரம் கட்டி குடியேற வேண்டும் என்பதால் இன்னும் இருவரை வேலைக்கு சேர்த்துக்கொள்ள சர்வேஷ் கூறி இருக்க, செல்லும் வழியில்லையே அலைபேசியில் உரையாடி இருவரை வரவழைத்திருந்தார் நல்லதம்பி.

இரவு எட்டுமணிவரை அறைக்கும், குளியலறைக்குமான அடித்தாளத்துக்கு குழியையும் தோண்டி அடித்தளத்தையும் போட்டு முடித்தனர்.

மதியம் வேலை ஆரம்பமானதால் இரவு எட்டுமணி வரை வேலை இருந்தது. முடிந்த அளவு வேலையை முடிக்கும்படி சர்வேஷ் கேட்டுக் கொண்டிருக்க, இன்று அடித்தளத்தை போட்டு விடலாம் ஒரு வாரத்துக்கு  பிறகுதான் சுவர் எழுப்ப வேண்டும் என்றார் நல்லதம்பி.

“ஒரு வாரம் ஆகுமா?” சர்வேஷும் செல்வாவும் ஒரே நேரத்தில் கேட்டனர்.

“வீடு கட்டுறது வாழுறதுக்கு. இடிஞ்சி விழாம இருக்கணும் இல்ல” சிரித்தான் நல்லதம்பி.

“இல்ல மாமா இப்போ எல்லாம் ஒரே நாள்ல கட்டிடம் கட்டுறாங்களே”

“நிஜமாவா?” செல்வா குறுக்கே புகுந்து சர்வேஷிடம் கேள்வி கேட்க, அவனை முறைத்தான் சர்வேஷ்.

“அதுவா தம்பி. நம்ம நிலத்துல அப்படியெல்லாம் பண்ண முடியாது. நாம சாதாரணமாகவே பண்ணலாம். என்ன அவசரம்?”

“நமக்கு அவசரம்….” என்று செல்வா சொல்ல,

“சரி மாமா நீங்க உங்க விருப்பப்படியே செய்ங்க. உங்களுக்குத் தெரியாததா?” என்ற சர்வேஷை செல்வா முறைத்தான்.

வேலைக்கு வந்தவர்கள் கிளம்பியிருக்க, இவர்களை சாப்பிட்டு செல்லுமாறு கூறினாள் சரோஜா.

 இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது பத்மினி  உள்ளே நுழைந்தாள்.

“வாம்மா… இப்போதான் வரியா?” என்று நல்லதம்பி கேட்க,

“ஆமா …ப்பா…” என்றவளோ சர்வேஷ் மற்றும் செல்வாவின் புறம் திரும்பினாலில்லை.

“வணக்கம் அண்ணி” என்று சர்வேஷ் சொல்ல, அவனை தொடர்ந்து செல்வாவும் பத்மினிக்கு வணக்கம் வைத்தான்.

தலையசைத்தவாறே உள்ளே சென்ற பத்மினி சரோஜாவிடம் யார் இவர்கள் என்று விசாரிப்பதும், சரோஜா பதில் சொல்வதும் மெதுவான குரலில் கேட்டது.

பத்மினி காலையில் இவர்களை பார்த்தாள் தான். உரிமையாக அண்ணி என்று அழைக்கிறான் சொந்தக்காரர்களா? இதுவரை பார்த்ததே இல்லையே என்றுதான் மாமியாரிடம் விசாரித்தாள்.

இவர்கள் கிளம்பிய பின் கதவை சத்தி விட்டு கதிருக்காக காத்திருந்தனர்.   

காசு பணம் துட்டு money money

காசு பணம் துட்டு money money

குரங்குகிட்ட மாட்டிகிட்ட மால போல

என் கிட்ட மாட்டிக்கிட்டான்டா ஒரு இளிச்ச வாயன்

கரன்சி நோட்டு கட்டு

வாசனையே போதை ஏத்துதே

எந்த சரக்கும் அந்த அளவு 

போதை இல்லையே

நல்ல வாயன் சம்பாதிச்சத

நாற வாரன் துன்னுறேன்

“சே நான் நாற வாயனா? பாட்ட மாத்து கதிரு” தள்ளாடியவாறே வீடு வந்து சேர்ந்தான் கதிர்வேல்.

வழக்கம் போல் சோத்துக்கு பஞ்சாயத்து பண்ணி விட்டு தூங்க கிளம்பினான்.

“டேய் பார்த்து போடா… சீமெந்துள கால வச்சி நாசம் பண்ணிடாத. அப்பொறம் பட்ட கஷ்டமெல்லாம் வீணாகிடும்”

“என்ன சொல்லுற?” என்று கேட்டவனை காலைல நீயும் தானேடா இருந்த குடிகாரா என்று பத்மினி திட்டினாள்.

“ஏன்டா… அறை கட்டி வாடகைக்கு விடப் போறோம் என்று உனக்குத் தெரியாதா?” கோபமாக கேட்டாள் சரோஜா. 

“என்ன ரூம் கட்டி ரென்டுக்கு விடப் போறியா? இதோட… ரூம் கட்ட காசு எங்க இருந்து வந்தது? ஓடிப் போன உன் புருஷன் அனுப்பினானா?” கோபமாய் கேட்டான் கதிர்.

கணவனை பற்றி பேசியதும் கண் கலங்கினாள் சரோஜா.

“டேய் லூசு. அந்த பசங்க முன் பணத்துக்கு ரூம் கட்டி குடியேறுறதும், மாசா மாசம் வாடகை பணத்துக்கு வீட்டை கட்டிக்க கொடுக்கிறதா சொன்னதும் உனக்குத் தெரியாதா? குடிச்சா என்ன பேசுற, என்ன செய்யிற என்றே தெரியல” கதிர் மேல் பாய்ந்தாள் பத்மினி.

“லூசா நீ. லூசானு கேட்குறேன். ரூமுக்கு மாசம் பத்தாயிரம் கேட்டாலும் எப்போ வீட்டை கட்டுறது? எப்போ அவனுங்க இங்க இருந்து போறது?” உரத்த குரலில் கத்தினான் கதிர்.

“அப்போ நீ வீட்டை கட்டு. முடியாதில்ல. மூடிக்கிட்டு இரு” கடுப்பில் பத்மினியும் கத்தினாள்.

“ஏய்… இது என் வீடு. முடிவெடுக்க வேண்டியது நான்” கதிர் பத்மினியின் மேல் பாய்ந்தான்.

“நீ சம்பாதிச்சு கட்டின வீடா? எங்கப்பா வீடுடா இது. எனக்கு கொடுத்த வீடு. நான் உனக்கு கொடுக்கல” சரோஜா சீற

“அப்போ எனக்கு இந்த வீட்டுல எந்த உரிமையும் இல்லனு சொல்லுறியா?” 

“இல்ல னு சொன்னா வீட்டை விட்டு உங்கப்பா போல ஓடிப் போகலாம்னு பக்குறியா? கால ஓடிச்சி மூலைல உக்கார வச்சிடுவேன். ஏற்கனவே உனக்கு தண்ட சோறு தான் போடுறோம். ஊனமாகிட்டா சோறு போடுறத்துக்கும் காரணம் இருக்கு. உரிமையை பத்தி பேசுற? அப்படி என்ன வீட்டுக்காக பண்ணி கிழிச்ச னு உரிமையை பத்தி பேசுற?” சரோஜா பதில் சொல்ல முன்பாக பத்மினி பதில் சொன்னாள்.

“என்ன மாமியாரும், மருமகளும் ஒன்னு கூடி திட்டம் போடுறீங்களா?” லுங்கியை மடித்துக் கட்டியவன் ஷார்ட் கைகளையும் ஏற்றி விட்டவாறு விறைப்பாக நின்றான்.

“இன்னக்கி அளவாத்தான் குடிச்சியா? அசையாம நிக்குற. கத்தாம போய் தூங்கு. உன்னோட மல்லு கட்ட எங்களால முடியாது. நாங்க காலைல வேலைக்கு போகணும்” என்ற பத்மினி “வாங்க அத்த நாம தூங்கலாம். இவன் கெடக்குறான். காமடி பீசு” கதிர்வேலை கண்டு கொள்ளாது உள்ளே செல்ல சரோஜா மகனை முறைத்து விட்டு சென்றாள்.

“போங்கடி போங்க” என்ற கதிர்வேல் சிரித்தவாறே தூங்க சென்றான். 

இவர்கள் என்னதான் சத்தம் போட்டாலும் மணி குறைக்கவே இல்லை. அது பாட்டுக்கு வராண்டாவில் படுத்தவாறு பார்த்திருந்து. ஒருநாள் சண்டை போட்டால் பயந்து குறைக்கும். தினமும் கத்தி, சண்டை போடுவதால் மணிக்கும் பழகிருச்சு. 

அடுத்த நாள் காலை சரோஜா வேலைக்கு செல்லும் முன்பாக சர்வேஷ் வந்து விட்டான்.

“என்ன தம்பி காலையிலையே வந்துட்டீங்க”

“நீங்க வேலைக்கு கிளம்ப முன்னதாக வந்துடலாம்னுதான்” என்று சர்வேஷ் இழுக்க, பேச்சுக்கு குரல் கேட்டு படுத்தவாறே இவர்களை கவனித்துக் கொண்டிருந்தான் கதிர்வேல்.

அவனை போலவே மணியும் கண்களை திறந்து பார்த்து விட்டு படுத்துக்க கொண்டது.

ஒரு வாரத்தில் தானே மீண்டும் வேலை ஆரம்பமாகும் எதற்கு இவன் வந்தான்? ஏதாவது தேவையா? இல்லை பிரச்சினையா? என்று அவனை ஏறிட்டாள் சரோஜா.

“வாங்கம்மா நான் உங்கள பக்டரில விடுறேன். நம்ம ஆட்டோலேயே போலாம்” என்றான் சர்வேஷ்.

“அட என்னப்பா நீ. இதுக்குதான் வந்தியா? எனக்குதான் வண்டி வருதே. தெருவுக்கு போன வண்டி வந்துடும். வேலை முடிஞ்சா அவங்களே கொண்டு வந்தும் விடுவாங்க” சிரித்தாள்.

“ஓஹ்… அப்படியா?” இந்த ஒரு வாரம் சரோஜாவை பின் தொடர்ந்ததால் சர்வேஷுக்கு இந்த விஷயம் தெரியும், அவன் வந்தது சரோஜாவை அழைத்து செல்லவா?

“அத்த நான் கிளம்புறேன்” அவர்களை தாண்டி பத்மினி செல்ல,

“அப்போ அண்ணி நீங்க வாங்க. உங்கள எங்க விடணும் என்று சொல்லுங்க விடுறேன்” என்றான்.

“யார் என்றே தெரியாத இவன் கூட எப்படி போறது?” என்று பத்மினி யோசிக்க,

“டேய் யார்டா நீ. அந்த ரமேஷ் தான் உன்ன அனுப்பினானா? இல்ல என் பொண்டாட்டிய உசார் பண்ண நீயா வந்தியா?” லுங்கியை மடித்துக் கட்டியவாறு இவர்களை நெருங்கினான் கதிர்.

“சீ அசிங்கமா பேசாத” சரோஜா கத்த.

“நாய் புல்லு சாப்பிடாதாம். சாப்பிடுற மாட்டையும் சாப்பிட விடாதாம். இவனும் அப்படித்தான். நீங்க வாங்க நாம போலாம்” என்ற பத்மினி சர்வேஷின் ஆட்டோவில் ஏறி அமர்ந்தே விட்டாள்.

“ஏய் என்ன என்ன வெறுப்பேத்துறியா?” கதிர் கோபத்தில் உறும.

“அண்ணா எதுக்கு இப்போ டென்சன் ஆகுறீங்க? வேணா நீங்களும் கூட வாங்க” என்றான் சர்வேஷ்.

தூங்கி எழுந்த மூஞ்சோடு ஆட்டோவில் ஏறி அமர்ந்தவனை பார்த்து “அறிவிருக்கா? நைட்டுல குடிச்சிட்டு வந்து குளிக்காம தூங்கிட்டு இப்போ பல்லு கூட விளக்காம வர?”

“நான்  பல்லு விளக்கி குளிச்சிட்டு வர்றதுக்குள்ள நீ இவன் கூட எஸ் ஆகவா?” செப்பல் போட்டுட்டு வா என்று குழந்தையை உள்ளே அனுப்பி விட்டு வண்டியில் கிளம்பு தந்தையிடம் முறையிடும் குழந்தையாய் பத்மினியை முறைத்தான் கதிர்வேல்.

“ஐயோ நான் ஆட்டோலேயே போகல நடந்தே போறேன்” பத்மினி ஆட்டோவை விட்டு இறங்க முட்பட,

“ஐயோ அண்ணி… அண்ணன் அமைதியா வருவாரு நீங்க வாங்க” சர்வேஷ் பத்மினியை சமாதானப்படுத்தி அழைத்து செல்ல, கதிர்வேலை முறைத்தவாறே வந்தாள்.

அவளை சூப்பர்மாக்காட்டில் இறக்கி விட்ட சர்வேஷ் “நைட் தனியா வர வேணாம் அண்ணி. உங்கள கூட்டிட்டு வர நான் வரேன்” என்றான்.

அவனுக்கு எந்த பதிலும் கூறாமல் பத்மினி உள்ளே சென்று விட்டாள். 

“டேய் உன் பேச்சே சரியில்லையே. எதுக்கு நீ அவளுக்கு ரூட்டு விடுற?”

“அண்ணா… நீங்க கோபப்படுறதுலையே அண்ணிய நீங்க எவ்வளவு லவ் பண்ணுறீங்க என்று புரியுது. ஏன் நீங்க போய் அவங்க கூட்டிட்டு வரக் கூடாது” ஏன் தான் இவன் இப்படி இருக்கானோ என்ற கோபம் சர்வேஷுக்குள் கொஞ்சம் இருக்கான் செய்தது. ஆனால் கோபத்தை காட்ட முடியாதே.

“லவ்வா” கைகொட்டி சத்தமாக சிரித்தவன்

“காதல் என் காதல் அது கண்ணீருல..

போச்சு அது போச்சு வெள்ளம் தண்ணீருல..

காயம் மனக் காயம் சரக்கூத்தி ஆத்திப்பேன்..

ஆனா அவ காதல்…”

பாட்டை சட்டென்று நிறுத்தியவன் “நீ ஆட்டோவை பார்த்து ஓட்டு. “ஆமா எங்கம்மா கிட்ட என்னோ நீ என்ன திருத்த போறதா சொன்னேயே. என் காதுல தெளிவா விழுந்தது”

“அதுவா அண்ணா. அப்படி சொன்னா தானே  வீட்டை வாடகைக்கு கொடுப்பாங்க அதான்….” என்று இழுத்தான் சர்வேஷ்.

“நானே ஒரு நடிகன். எங்கம்மா முன்னாடி நடிப்பேன். நீ என்னையே மிஞ்சிடுவா போலயே’

“ஆமாண்ணே நான் நடிகன் தான்” சிரித்தான் சர்வேஷ்.

“நான் மகா நடிகன் டா… உன்னால என்ன வெல்ல முடியாது” சத்தமாக சிரித்தான் கதிர்வேல்.

Advertisement