Advertisement

அத்தியாயம் 5

“எவ்வளவு சொல்லியும் கேட்காம அடம் பிடிச்சு ஸ்ரீலங்காக்கு வந்துடீங்க. அடுத்து என்ன செய்ய போறீங்க?” துணிப்பைகளை தள்ளியவாறே கேட்டான் செல்வா.

அவனை ஒருநொடி நின்று முறைத்த சர்வேஷ் “என் கூட வரச்சொல்லி உன்ன கேட்டேனா? வால் போல கூடவே தொத்திக்கிட்டு வந்ததுமில்லாம கேள்வி வேற கேட்கிறியா?” கடுப்பாக பதில் சொன்னான்.

ராஜ்பிரபுவுக்கு இன்னொரு மகன் இருக்கின்றான் என்று அறிந்து அதிர்ச்சியடைந்த சர்வேஷ் தேவியிடம் “சொல்லுங்க அம்மா. நீங்க இப்போ என்ன சொன்னீங்க. அப்பாக்கு இன்னொரு குடும்பம் இருக்கா? இதுநாள் வரைக்கும் அந்த குடும்பத்தை பத்தி நீங்களோ, அப்பாவோ பேசினதே இல்லையே. சொல்லுங்க”

தனக்கு தெரிஞ்சி அப்பா ஸ்ரீலங்காக்கு போகவே இல்லை. அப்படியென்றால் அந்த குடும்பத்துக்கு என்ன ஆனது? அந்த குடும்பத்தை விட்டு வந்தால் தான் தன்னோடு வாழ முடியும் என்று அம்மா சொன்னதால் அப்பா அங்கு செல்லவில்லையா? அம்மா அப்பாவை மன்னித்து இதை சாதாரணமாகவே ஏற்றுக்கொண்டாளா? இல்லையென்றால் அவள் எப்படி அப்பாவோடு இவ்வளவு காதலாக இருக்க முடியும்? என்ற கேள்விகள் சர்வேஷின் மண்டையை குடைந்தன.

“குடும்பமா? உங்க அப்பா அந்த பொம்பள கழுத்துல தாலி கட்டினது என்னவோ உண்மைதான். அந்த பையன் பொறந்தது தெரிஞ்சே தான் விட்டுட்டு வந்திருக்காரு. நீதான் அவர் வாரிசு. நான் தான் அவருக்கு பொண்டாட்டி” தான் காதலித்து திருமணம் செய்த ராஜ்பிரபு பொய்த்து போனதில் மனமுடைந்த தேவி சர்வேஷுக்காக மட்டும்தான் இதுநாள்வரை ராஜ்பிரபுவோடு வாழ்ந்து வந்தாள். 

சர்வேஷ் திரையில் நடித்தான் என்றால் அவனுக்கு முன்னால் சந்தோஷமாக இருப்பது போலவும், அந்நியோன்யமான தம்பதிகள் போலவும் ராஜ்பிரபுவும், தேவியும் நடித்துக் கொண்டிருந்திருக்கின்றனர்.

சர்வேஷை போலவே இந்த செய்தி செல்வாக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும், உண்மையின் நுனியை அறிந்து கொண்ட சர்வேஷ் அடிவரை அலசாமல் விடமாட்டான் என்று புரிய தேவியிடம் “மேம் நீங்க ரெஸ்ட் எடுங்க” என்றான்.

பழைய சம்பவங்கள் மனதை கீறி மேலும் ஞாபங்கள் எனும் காயத்தில் இரத்தம் வழிய, கோபத்தில் இருந்த தேவிக்கு செல்வா சொல்ல விளைவது புரியவில்லை.

 “எனக்கு ஒன்னும் இல்ல” செல்வாவை தேவி முறைத்தது மட்டுமல்லாது சர்வேஷும் முறைத்தான்.

தன்னுடைய ராஜதந்திரம் வீணானதில் அமைதியாக அமர்ந்து விட்டான் செல்வா.

“சொல்லுமா… அப்பா எப்படி அவங்கள கல்யாணம் பண்ணாரு? ஏன் அவங்கள விட்டுட்டு வந்தாரு?” இலங்கையில் தந்தைக்கு ஒரு மகன் இருப்பது என்றால், அவன் தனக்கு சகோதரன் இல்லையா? தனது தந்தை தான் அவனுக்கும் தந்தை. தனக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பவர் ஏன் அவனை விட்டு விட்டார்? ஒரு குழந்தை தந்தை இல்லாமல் வளர்வது எவ்வளவு கொடுமை. எத்தனை சினிமா பார்த்திருக்கின்றான். ஏன் அவன் நடித்த குடும்ப படத்திலும் இதை தான் வலியுறுத்தியிருந்தார் டைரக்டர்.

தான் மட்டும் சொகுசாக வாழ தன்னுடைய சகோதரன் என்ன மாதிரியான இன்னல்களை அனுபவிக்கின்றானோ என்று கண்டேயிராத சகோதரனுக்காக கவலை கொண்டான் சர்வேஷ்.

“அத தெரிஞ்சி கிட்டு நீ என்ன பண்ண போற?” செல்வா இதற்குத்தான் சொன்னானா? என்று அவனையும் பார்த்தாள் தேவி.

“நான் அப்போவே சொன்னேன் மூடிக்கிட்டு தூங்க சொல்லி. இப்போ ளுக்கு விட்டா? என்னால ஒன்னும் பண்ண முடியாது” செல்வாவின் மைண்ட் வாய்ஸ் தேவியை பார்த்து சிரிக்க, அமைதியாக வேடிக்கை பார்த்தான்.

“நீ தானே சொன்ன அப்பாவோடு இன்னொரு மகன் வந்து கிட்டி டனர் பண்ணட்டும் என்று. அதான் கேக்குறேன். தேடிப் போக வேணாம்” சாதாரண முகபாவனையில் சொன்னவனை ஆயாசமாக பார்த்தாள் தேவி.

“நீ சொல்லவில்லையென்றால் என் அப்பாவுக்கு நான் சிறுநீரகம் கொடுப்பேன்” என்று மிரட்டுபவனை தேவியால் சமாளிக்க முடியாது.

அதைவிட இனிமேல் மகன் முன் நடிக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிம்மதி அவள் மனதுக்குள் பரவ வாய் திறந்தாள்.

“உங்க அப்பா சூட்டிங்கு போன இடத்துல தான் அந்த பொம்பளய சந்திச்சு இருக்கணும். காதலிச்சு கல்யாணம் பண்ணங்களா? இல்ல உங்கப்பா அந்த பொம்பளைய ஏமாத்தவே தாலி கட்டினாரா? அதெல்லாம் எனக்குத் தெரியாது.

உனக்கு பதினாலு வயசிருக்கும் போது பீவர் வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருந்தோமே ஞாபகம் இருக்கா? நீ ஐ.சி.யுல இருக்குறத பார்க்க முடியாம உங்க அப்பா அழுதுகிட்டே இருந்தாரு. உன் மேல என்ன விட அவருக்குத்தான் பாசம் அதிகம் என்று நானே பலநேரம் பொறாமை பட்டிருக்கேன்.

உன்ன கவனிக்க ஹாஸ்பிடல் பக்கத்துலயே ஹோட்டல்ல ஒரு ரூம் எடுத்து தங்கி இருந்தோம். அன்னக்கி நைட் உங்க அப்பா கனவு கண்டு அலறி எழுந்துட்டாரு. எழுந்தவரு “சரோஜா என்ன மன்னிச்சுடு. உன்னையும், பையனையும் விட்டுட்டேன். அந்த பாவம் தான் சர்வேஷ துரத்துது என்று என்ன கட்டிபிடிச்சிகிட்டு கதறினார்.

எனக்கு ஒன்னும் புரியல. “என்ன ஆச்சு? யாரு சரோஜா?” என்று கேட்டேன். 

அப்பொறம் தான் அவர் கண்ணுக்கு தான் தெரிஞ்சேன் போல…..

“தேவி என்ன மன்னிச்சுடு தேவி. என்னாலதான் சர்வேஷுக்கு இப்டியாச்சு. நான் சரோஜாவை விட்டுட்டு வந்துட்டேன். அவன் என் பொண்டாட்டி. பையன் வேற இருக்கான். அவங்க எப்படி இருக்காங்களோ” என்று பிதற்ற ஆரம்பிச்சிட்டாரு.

நீ ஹாஸ்ப்பிட்ட இருந்த கவலை. உங்க அப்பா என்ன சொல்லுறாரு என்ற அதிர்ச்சி, கனவு கண்டு உளறுகிறாரோ என்றுதான் முதல்ல நினச்சேன்.

ஆனா உங்கப்பா குடிச்சா கூட உளற மாட்டாரு. உன்ன நினைச்சி மனக்கஷ்டத்துலதான் தான் அவர் மனசுல இருக்குற உண்மைய சொல்லுறாரு என்று எனக்கு புரிஞ்சதும் “எங்க” என்று கேட்டேன். 

“ஸ்ரீலங்கால. சர்வேஷுக்கு ஒன்னும் ஆகாது இல்ல” ராஜ்பிரபு கதற, தேவியின் கண்களிலிருந்து கண்ணீர் பெறுக, மெளனமாக அழ ஆரம்பித்தாள். 

“உன்ன கல்யாணம் பண்ண பிறகு அப்பா ஸ்ரீலங்காக்கு போனாரா?” யோசனையாக கேட்டான் சர்வேஷ்.

“இல்ல அதற்கு முன்னால” என்ற தேவிக்கு தான் ராஜ்பிரபுவின் இரண்டாவது தாரம் என்றதே கசந்தது.

“போலீஸா ஒரு கேரக்டர் கூட பண்ணல ஆனா சார் நல்லாவே இன்வெஸ்டிகேஷன் பண்ணுறாரு” என்ற பார்வைதான் செல்வாவிடம்.

“ஆமா உனக்கும் அப்பாகும் கல்யாணம் எப்படி ஆச்சு?”

தந்தையோ தீவிரசிகிச்சை பிரிவில் இருக்கிறார். அவரிடம் இப்போது எதுவும் கேட்க இயலாது. அன்னைக்கு எந்தளவுக்கு தந்தையின் முதல் திருமணத்தை பற்றி தெரியுமோ? அதை வைத்துத் தானே அடுத்து என்ன செய்வது என்ற முடிவுக்கு வர முடியும். சின்ன சின்ன தகவல் கூட முக்கியம் என்றுதான் இந்த கேள்வியை கேட்டான்.

“உங்கப்பா புகழின் உச்சில இருந்தாரு. புகழ தேடிக் கொடுத்த அஞ்சி படங்களை ப்ரொடியூஸ் பண்ணதே என் அப்பாதான். சூட்டிங் பார்க்கப் போனப்போதான் ராஜ் பழக்கமானாரு. பிடிச்சிருந்தது அப்பாகிட்ட சொன்னேன். அப்பா மறுக்காம கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாரு.

உங்கப்பா ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சு என்ற உண்மைய மறச்சி என்ன கல்யாணம் பண்ணிகிட்டாரு. பதினஞ்சு வருஷம்… பதினஞ்சு வருஷமா உண்மை தெரியாம நானும் அவர் கூட வாழ்ந்துகிட்டு இருந்தேன்” நெஞ்சம் முழுக்க இருந்த வேதனையை கொட்டி முடித்த உடன் ஏங்கி ஏங்கி அழுதாள் தேவி.

அன்னையை அணைத்து “அப்பா அவங்கள ஏன் விட்டுட்டு வந்தார் என்று எனக்குத் தெரியாது. ஆனா அவர் உன் மேலையும், என் மேலையும் உண்மையான அன்பு வச்சிருக்காரு” என்றான் சர்வேஷ்.

அது தேவிக்கு தெரியாமலில்லை. இதுநாள்வரை அவளும் சரோஜாவை பற்றி பேசி ராஜ்பிரபுவோடு சண்டை போட்டதில்லை. ஆனால் ஏமாற்றம். ஏமாற்றமடைந்த அவள் மனம் ராஜ்பிரபுவை மன்னிக்க தயாராக இல்லை.

சரோஜா குழந்தையோடு இலங்கையில் இருக்கின்றாள். கடல் கடந்து வர முடியாததால் அவள் அவளது வாழ்க்கையை பார்த்து கொண்டிருக்கிறாளோ அல்லது ராஜ் எங்கே இருக்கின்றார் என்று தெரியாததால் வராமல் இருக்கின்றாளோ. ஒருவேளை இங்கு இருந்தால் தேடி வந்திருப்பாளே. அப்பா புரிந்துகொள்வார். சர்வேஷ்… சர்வேஷுக்கு எப்படி புரிய வைப்பேன் என்ற கோபம்தான் ராஜ்பிரபுவிடமிருந்து தேவி விலகி இருக்க காரணம்.

கீறல் விழுந்த கண்ணாடி தான் தேவியின் மனது. ராஜ்பிரபுவால் ஒட்ட முடியாமலும், சர்வேஷால் உடைய முடியாமலும் இத்தனை வருடங்கள் அப்படியே இருந்து விட்டாள்.   

உண்மையை அறிந்த சர்வேஷ் குழந்தையல்லவே. தேவியின் வேதனை அவனுக்கு புரியாமல் இல்லை. தான் தான் அவர்களை விட்டு விட்டு வந்தேன் என்று ராஜ்பிரபு கூறும் பொழுது நடந்தது என்ன என்று அறியாமல் சரோஜாவை குற்றம் சொல்ல முடியாது.

இதில் தேவி பாதிக்கப்பட்டது போல் சரோஜாவும் பாதிக்கப்பட்டிருக்கின்றாள். அதை விட அவள் பெற்ற மகன். அவனுக்கு ஒரு நியாயம் செய்ய வேண்டும்.     

சின்ன வயதில்லையே கூடப் பிறந்தவர்கள் இல்லையே என்ற ஏக்கத்தோடு வளர்ந்தவன். தனக்கு ஒரு சகோதரன் இருக்கின்றான் என்று அறிந்து கொண்டதும் அவனை சந்திக்க வேண்டும் என்ற ஆவலும், ஆசையும் பிறந்தது.

தேவி மறுப்பு தெரிவிப்பாள் என்று தெரிந்தும் “சரிம்மா நான் ஸ்ரீலங்காக்கு போய் அவங்க எங்க இருக்காங்க, என்ன நிலமைல இருக்காங்க என்று பார்த்துட்டு வரேன்” என்றான்.

“சர்வேஷ் விளையாடுறியா? உங்கப்பாவே அந்த குடும்பம் வேணாம் என்று இத்தனை வருஷமா இருந்துட்டாரு. நீ எதுக்கு அங்க போற?” கோபமாக சீறினாள் தேவி.

“அப்பா சந்தோஷமாக இருந்திருந்தா டைலி குடிச்சி இப்படி ரெண்டு கிட்னியும் பெயிலியர் ஆகியிருக்காது. ஹார்ட் அட்டாக் வேற. மனசுல வலி இல்லாமலையா ஹார்ட் அட்டாக் வந்திருக்கும்”

இலங்கையில் இருக்கும் குடும்பத்தை நினைத்ததால் தான் தந்தைக்கு இந்த நிலைமை. அவர்கள் நன்றாக இருப்பதை கண்கூடாக பார்த்து அதை தந்தைக்கு எத்தி வைத்தால் அவர் மனம் நிம்மதியடையும் என்று தான் எண்ணுவதாக சர்வேஷ் தேவிக்கு புரிய வைத்தான்.

செல்வா என்றொரு ஜீவன் அங்கே இருக்கின்றானே என்று அன்னையும், மகனும் கண்டு கொள்ளாமல் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.

சர்வேஷுக்கு எல்லாமே செல்வாதான் என்று தேவிக்கும் தெரியும் அதனால்தான் குடும்ப விஷயம் பேசுகிறோம் என்று அவனை வெளியே துரத்தவில்லை.

“வேண்டாம் சர்வேஷ். செல்வா சொல்லு” இந்த விஷயத்தில் தான் சொல்வதை கேட்க மாட்டான் என்றதும் செல்வாவை பேசச் சொன்னாள் தேவி.

“இங்க பாருமா… நான் கிட்னி கொடுக்க வேணாம் என்றால் என்ன ஸ்ரீலங்காக்கு போக விடு. இல்லனா நான் அப்பாக்கு கிட்னி கொடுப்பேன். சினிமாகும் டாடா சொல்லிட்டு அமேரிக்கா போய் செட்டில் ஆவேன்” என்று அமைதியான குரலில் மிரட்டினான்.

“இவரு அடங்கவே மாட்டாரா?” என்று பார்த்த செல்வா “சார் நீங்க என்ன சாதாரண ஆளா? ஸ்டார் சார் ஸ்டார். மாஸ்க் இல்லாம வெளிய கூட போக முடியாது. கொரோனா கூட இல்ல. அங்க போய் யாராச்சும் உங்கள அடையாளம் கண்டு கொண்டா எவ்வளவு சிக்கல்”

சர்வேஷ் இலங்கைக்கு செல்லாமல் தடுக்க இருக்கும் ஒரே வழி அவனுடைய ஸ்டார்டம். அதை கூறி பயணத்தை தடுக்க முயன்றான் செல்வா.

ஆனால் சர்வேஷ் ஒரு திரைப்படத்தில் நடிக்க கதை கேட்கும் பொழுதே அந்த கதாபாத்திரமாக வாழ ஆரம்பிப்பவன். அதற்காக தன்னையே அர்பணிப்பவன். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்கு தெரியாதா?

“செல்வா…. முதல்ல அம்மா ஆசைப்படி அப்பாக்கு ஒரு டானர தேடு. கண்டிப்பாக அப்பாவோடு பூர்வீக வீட்டுல அந்த குடும்பத்தோட போட்டோ, இல்லனா ஏதாவது தகவல் கிடைக்கும். ஓவர்சீஸ் டிடெக்ட்டிவ் கிட்ட கொடுத்தா இப்போ அவங்க எங்க இருக்காங்க என்ன நிலமைல இருக்காங்க என்று சொல்வாங்க. அதற்கு பிறகு என்ன பண்ணலாம் என்று பார்க்கலாம்” என்றான்.

“ஒரு மனுஷன் நீட் அண்ட் க்ரேட்டா இருந்தா எப்பவும் பிரச்சினை தான்” முணுமுணுத்த செல்வா தேவியை பார்த்தான்.

சர்வேஷ் பிடிவாதக்காரன் சொன்னால் சொன்னதை செய்து விடுவான். அவனது சினிமா கனவு கலையக் கூடாது என்று நினைத்த தேவி “அவன் சொல்லுறபடி செய் செல்வா” என்றாள்.  

ராஜ்பிரபுவுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யவும், இலங்கையில் இருக்கும் சரோஜாவின் குடும்பத்தை பற்றி தகவல் திரட்டவும் இரண்டரை மாதங்கள் ஓடியிருந்தது.

இந்த இரண்டரை மாதங்களில் முடியையும் வளர்த்து. கொஞ்சம் தாடியும் வைத்து தன்னுடைய அடையாளத்தை கொஞ்சம் மாற்றி இருந்தான் சர்வேஷ்.

“மரு வச்சவனெல்லாம் வில்லனா? தாடி வச்சா கெட்டப் சேஞ்சா? என்ன உலகமடா இது? திரையை பாக்குற ஆடியன்ஸே கண்டு பிடிக்கிறாங்க. நேர்ல பார்த்தா கண்டு பிடிக்க மாட்டாங்களா?” சர்வேஷை கிண்டல் செய்து சிரித்தான் செல்வா.

பொது இடங்களுக்கு முகக்கவசம் அணிந்து கொண்டுதான் செல்ல வேண்டும் அதனால் யாரும்  தன்னை அடையாளம் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற சர்வேஷ். “இந்த உலகத்துல ஒரே மாதிரி ஏழு பேர் இருக்காங்க செல்வா அண்ணே. சர்வேஷ போல ஒருத்தன் இருக்க மாட்டானா?” இலங்கைக்கு சென்றால் தன்னை சார் என்று அழைக்கக் கூடாது என்பது தான் சர்வேஷின் முதல் கட்டளை. அவனும் செல்வாவை அண்ணா என்று அழைப்பதாக கூறி இருக்க இன்றே ஆரம்பித்திருந்தான்.

“அப்படியா தம்பி. பேர மாத்துவீங்க, ஊர மாத்துவீங்க, ஐடன்டியவே மாத்துவீங்க. ஆனா அந்த ஊர்ல சிங்களம் பேசுவாங்களே உங்களால பேச முடியுமா?”

சினிமாக்காக ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று கத்துக்கிட்டியே சிங்களம் கத்துக்கிட்டியா? உன் டாடி உன்ன லாங்குவேஜ் கிளாஸ்ல சேர்த்து விடும் போது இங்கிலீசு கத்துகிட்ட, ஜாப்பனீஸ் கத்துகிட்ட, பிரென்ச் கூட கத்துகிட்ட ஏன் சிங்களம் கத்துக்கல?” ஆவேசமாக கேட்பது போல் நக்கல் செய்தான் செல்வா.

“உனக்குள்ளயும் ஒரு நடிகன் இருக்காண்டா…” என்ற சர்வேஷ். “ஒரே நாள்ல ஹிந்தி பேசுறதுக்கு புக் இருக்கும் போது சிங்களத்துக்கு இருக்காதா? எப்பயோ வாங்கிட்…டேன். படிச்சிட்டே…ன்”

என்றவனை “அடப்பாவி முன்னவே சொல்ல மாட்டியா?” என்று பார்த்தான் செல்வா.

விமானம் ஏறியவர்கள் ஒருவழியாக இலங்கையில் தரையிறங்கி இரத்தினபுரியையும் வந்தடைந்து ஒரு வாரம் ஓடியிருந்தது.

“இப்படி ஹாட்டல் ரூம்லயே இருந்தா உங்கண்ணன் எப்படி சந்திக்கிறது? சும்மா பாலோ பண்ண சொன்னா என்ன அர்த்தம்?”

இரண்டரை மாதங்கள் காத்திருந்து இலங்கைக்கு வந்தது சகோதரனை சந்திக்கத் தானே. சட்டுபுட்டுனு காரியத்தில் இறங்காமல் இது என்ன பாடிசோடா கணக்கா பாலோ பண்ணுறது? எனும் தோரணையில் கேட்டான் செல்வா.

“அண்ணனை சந்திக்கிறது மட்டுமில்ல. அவங்க வாழ்க்கையையையும் சீரமைக்கணும். பெரியம்மாவும், அண்ணியும் வேலைக்கு போய் வந்த பிறகு இவன் வேலைக்கு போறான். வீட்டை பாத்தியா?”

“நல்லவேளை மாறு வேஷத்துல போனேன். அந்த கீழ் வீட்டு பொண்ணு என்ன திருடன பாக்குறது போலவே பார்த்தா” லாவண்யாவின் பார்வையை நினைத்து தலையை உலுக்கினான் செல்வா.

லாவண்யாவை குற்றம் சொல்ல முடியாது. எரிபொருள் பிரச்சினையால் வேலை இல்லா திண்டாட்டம். அதனால் கிடைப்பதை களவாடி செல்ல ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்க, யாரை பார்த்தாலும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டிய சூழ்நிலை.

“என்ன வேஷத்துல போன?” சர்வேஷ் சந்தேகமாக கேட்க,

“பிச்சைக்காரன் வேஷம் தான்” சலிக்காமல் செல்வா சொல்ல சத்தமாக சிரித்தான் சர்வேஷ்.

“என் பொழப்பு சிரிப்பா இருக்கா?” சர்வேஷை செல்வா முறைக்க,

“என் அண்ணன் என்னமோ தப்பு பண்ணுறான். என்ன பண்ணுறான்னு புரியல. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை சரோஜா பெரியம்மா வீட்டுல இருப்பாங்க. நாம போலாம்” என்றான்.

“என்ன திட்டம் வச்சிருக்காரு என்றே தெரியலையே” செல்வா புலம்ப சிறிசேன முதலாளியின் கடையை அடைந்தனர்.

“இன்ஸ்டால் நூட்லஸ்ட் பாக்கட் வாங்கிக்கலாம்” என்ற சர்வேஷ் சிறிசேன முதலாளியின் கடைக்குள் எறியவாறே “முதலாளி நூட்லஸ் பாக்கட் நாலு தங்க” என்றான்.

கடைக்கு வந்து ஏதாவது பொருள் வாங்கி சென்றால் தான் இவர்கள் இந்த ஏரியாவில் இருக்கிறார்கள் என்று நம்புவார்கள் என்று சர்வேஷ் கூற, செல்வா மட்டும் வந்து பொருள் வாங்கி சென்றிருந்தான். இன்றுதான் சர்வேஷும் வந்திருந்தான்.

“இது யாழ்பாணத்து தமிழா? கிளிநொச்சி தமிழா?” என்றவாறே “சுராங்கணி துவே {பொண்ணே} இவங்க கேட்டதை கொடுங்க” என்றார் சிறிசேன முதலாளி.

“இத்தனை வருஷமா சுராங்கணி யார் என்று பார்க்கணும் பார்க்கணும் என்று இருந்தேன். பார்த்துட்டேன். பார்த்துட்டேன்” கொஞ்சம் உரத்தக் குரலில் கூறினான் செல்வா.

“நீ ஊமையில்லையா?” செல்வாக்கு சிங்களம் தெரியாததால் பொருளை கைகாட்டிதான் கேட்பான். ஊமை என்று சிறிசேன முதலாளி இதுநாள்வரை பேசியிருக்கவில்லை.

“டேய் சும்மா இருடா…” சர்வேஷ் அதட்ட, சுராங்கணி எனும் சிறிசேன முதலாளியின் பேத்தி “யார்டா இவனுங்க கோமாளிங்க” என்று பார்த்து விட்டு நூட்லஸ் பாக்கட்டை எடுத்துக் கொடுத்தாள்.

“ரெண்டு முட்டையும் கொடுங்க” என்ற சர்வேஷின் தலைக்குள் சுராங்கணி. சுராங்கணி. சுராங்கணிட மாலு கேனவா என்ற பாடல் ஒலிக்கலானது.

அவன் உதடு வளைவதை பார்த்து முறைத்தவாறே பணம் இவ்வளவு கொடுங்க என்றாள் சுராங்கணி.

“தம்பி சார் தம்பி சார் விஜய் ஆண்டனி சோங் ஆத்திச்சூடிக்கு இந்த பொண்ணு கிட்ட அர்த்தம் கேட்கலாமா? அதுல எதோ சிங்கள வார்த்த வருதே” சர்வேஷை செல்வா சுரண்ட

“வாய மூடுடா கொரங்கு” சர்வேஷுக்கு செல்வாயை அடிக்க வேண்டும் போல் இருந்தாலும், அடிக்க முடியாமல் பல்லை கடித்தவாறு கூறினான்.

“தம்பி நீங்க கெரக்டராகவே மாறிட்டிங்க” அவன் கோபப்படுவது புரியாமல் கிண்டல் செய்தான் செல்வா.

“ஊருக்கு புதுசா” சிறிசேன முதலாளி கேட்க,

“ஆமா… வாடகைக்கு வீடு தேடுறோம், பேச்சுலர் எங்குறதால வீடு கிடைக்கல” சர்வேஷ் சொல்ல

“நீ நடத்து சித்தப்பு” என்பது போல் வேடிக்கை பார்க்கலானான் செல்வா.

“நூட்லஸ் வாங்கும் போதே நினச்சேன்” என்ற சிறிசேன முதலாளி இப்போ எங்க தங்கி இருக்கிறீங்க?”

“தெரிஞ்சவங்க வீட்டுலதான்”

“தெரிஞ்சவங்க வீட்டுல எந்தநாளும் தங்க முடியாதே”

“என்ன வேலை செய்யிறீங்க?”

“வேலை தேடிகிட்டு இருக்கோம் முதலாளி” செல்வா முந்திக் கொண்டு சொன்னான்.

“எனக்கும் வயசாகிருச்சு. நானும் கடைல வேல பார்க்க ஒரு பையன தேடிகிட்டு இருக்கேன்” என்றார் சிறிசேன முதலாளி.

“இதோ இவங்க இருக்காங்களே” சுராங்கணியை கைகாட்டினான் செல்வா.

“என் பேத்தி யுனிவேசிட்டில படிச்சுக்கிட்டு இருக்கா. லீவுக்கு வந்தா. அவ போய்டுவா”

“ஓஹ்… நாங்க வேற ஊருக்கு புதுசு. எங்களை வேலைக்கு சேத்துக்க மாட்டீங்க. ஊருல தெரிஞ்சவங்கள தானே சேர்த்துப்பீங்க” செல்வா பேச, சர்வேஷ் யோசனையாக நின்றிருந்தான்.

“தாத்தா யார்னு தெரியாதவங்க நல்லா பேசுறாங்க என்றதும், வேலை போட்டு கொடுக்காதீங்க. நாட்டு நிலமையால ஏற்கனவே நிறைய பேருக்கு வேலை இல்லை. எல்லா இடத்துலயும் திருட்டு சம்பவங்கள் நடக்குது. இவனுங்க மூஞ்ச பார்த்தா எனக்கு சந்தேகமா இருக்கு” சுராங்கணி சிங்களத்தில் கூற,  சர்வேஷும், செல்வாவும் புரியாமல் முழித்தனர்.

“நம்ம ஊருல இருக்குறவனுங்கள நம்ப முடியல. குடி, கஞ்சா, ஐஸ் னு சுத்திகிட்டு இருக்கானுங்க. நாங்க கொடுக்குற சம்பளத்துக்கு பொறுப்பா வேலை பார்க்க நாடு இருக்குற நிலைமைல எவனும் தயாராகவும் இல்ல” என்றார் சிறிசேன முதலாளி.

“என்ன பேசிக்கிறாங்க? நம்மளதான் திட்டுறாங்களோ?” செல்வா சர்வேஷை பார்க்க,

“நமக்கு வேலை போட்டு கொடுக்கலாமா? வேணாமா? என்றுதான் பேசிக்கிறாங்க என்று நினைக்கிறன்” தனக்கு புரிந்ததை கூறினான் சர்வேஷ்.

“ஒரே நாள்ல சிங்களம் படிச்சா இப்படித்தான்” முணுமுணுத்த செல்வா “ரெண்டு பேர் வேலை செய்ய இந்த கடைல என்ன இருக்கு?” சுற்றிலும் பார்த்தான்.

மளிகை கடை தான். கொஞ்சம் காய்கறி, பழங்கள், ஒரு பக்கம் காலை, மாலை உணவுகள் வைத்து விற்கின்றார்.

“ஏன் முதலாளி நல்லதம்பி மாமா எப்படி? அவரை வேலைக்கு வச்சிக்கலாமே” சர்வேஷ் சட்டென்று கேட்டு விட்டான்.

“என்னடா இது நமக்கு வேலை கேட்பார் என்று பார்த்து மாமாக்கு வேலை கேக்குறாரு?” என்று செல்வா பார்க்க,

“யார்டா நீ. உனக்கே வேல இல்ல. நீ யாருக்கோ வேல கொடுக்க சொல்லுற?” என்று பார்த்தாள் சுராங்கணி.

“யாரு ராஜூவா? நல்லவன்தான். உழைப்பாளிதான். ராஜூவை கடைல வச்சா அவன் மருமகன் இருக்கானே கதிர். அவன் என் கடையையே விப்பான். இந்த ஊருல பசங்க ஐஸுக்கு அடிமையாகிட்டாங்க. நேத்து பணக்காரனாக இருந்தவன் இன்னக்கி வேற வழியில்லாம பணம் சம்பாதிக்க ஐஸ் விக்கிறான். இவன் பணம் சம்பாதிக்க எத வேணா விப்பான். ஆனா வீட்டுக்கு செலவு பண்ண மாட்டான்”

“என்ன முதலாளி நீங்களே ப்ரிஜ்ஜுல கூல்ட்ரிங்க்சு, ஐஸ், ஜோக்கட்டு விக்கிறீங்களே” என்று செல்வா சொல்ல சுராங்கணி சிரித்தாள்.

“சரிதான். அப்பாவி பசங்களா இருக்கீங்களேடா… ஐஸ் எங்குறது ஒரு வித போதைபொருள். யுத்தம் செய்யும் போது ஆக்டிவ்வா இருக்கணும் என்று ஜப்பான் ஆர்மிக்கு கொடுத்த ட்ராக்ஸ் இப்போ மார்கட்டுல போதைப்பொருளா கிடைக்குது. நம்ம ஊருலதான் தாராளமா கிடைக்குதே”

“பாருடா… வயசானாலும் முதலாளி இந்தியன் தாத்தா ரேஞ்சுக்கு அப்டேட்டாகி இருக்காரு” செல்வா கிண்டல் செய்தாலும் “எந்த நாட்டுலையும் இந்த போதைப்பொருள் தான் ராஜ இல்ல” என்றான்

“எங்க காலத்து ஒரு பீடி, ஒரு சிக்கரெட்டு, கஞ்சா அடிக்கிறவங்கள தேடி பிடிக்கணும். இப்போ எவன் போதைல இருக்கான். எவன் தெளிவா இருக்கான்னே தெரியல. இதுக்கு பெரிய தலைல இருந்து சின்ன தலை வரைக்கும் உடைந்தை இல்லாமலா இருக்கும்?”

“ஆகா… அரசியல் பேச ஆரம்பிச்சிட்டாருடா… வேண்டாத தலைவலி நமக்கு எதுக்கு?” செல்வா சர்வேஷை போலாம் என்று இழுக்க,

“முதலாளி கதிரை நான் பாத்துக்கிறேன். நீங்க ராஜு மாமாவை வேலைல வைக்கிறத பத்தி யோசீங்க”

“சரிப்பா யோசிச்சு சொல்லுறேன்” சிறிசேன முதலாளி சொல்ல

“வரேன் சுராங்கணி” என்று அவளிடமும் விடைபெற்றான்.

அவளோ இவனை வினோதப்பிறவி போல் பார்த்து தலையசைத்தாள்.  

“இப்போ எதுக்கு அந்த பொண்ணுகிட்ட போய் பாய் சொன்னீங்க தம்பி” சர்வேஷை குறுகுறுவென பார்த்தான் செல்வா.

“மாலு என்றா மீன். மாலு வேணுமான்னு கேட்கத்தான்” என்று சிரித்தான் சர்வேஷ்.

Advertisement