Advertisement

அத்தியாயம் 4

“வேலைக்கு கிளம்பிட்டியா? இன்னக்கி லீவ் என்று நினச்சேன்” பத்மினி வேலைக்கு செல்ல தயாராகுவதை பார்த்தவாறே கேட்டாள் சரோஜா.

“நான் என்ன அரசாங்க வேலையா பாக்குறேன்? வாரத்துல ஏழு நாளும் வேல. வேலைக்கு போனா தானே சம்பளம் கொடுப்பாங்க. வீட்டு செலவை பார்க்க முடியும். சூப்பர்மார்கட்டுல வேல பாக்குறதால லீவே கிடையாது” என்ற பத்மினி மதிய சாப்பாட்டை கட்டலானாள்.

இரவு வடித்த சாதம் எஞ்சினால் அதில் தண்ணீரையும், சின்ன வெங்காயத்தையும் போட்டு வைத்து காலையில் கொஞ்சம் தேங்காய் பச்சை மொளகாய் சுட்ட கருவாடு என்று காலை உணவை முடித்துக் கொள்வார்கள்.

தயிர் இருந்தால் தேங்காய்க்கு பதிலாக தயிர் சேர்த்துக்கொள்வார்கள்.

சின்ன வெங்காயத்தின் விலை தங்கத்தின் விலை போல் தினமும் ஏறிக் கொண்டே போக, பெரிய வெங்காயத்தின் பக்கம் சாய்ந்து விட்டவர்களுக்கு தேங்காயின் விலையும், பால் தட்டுப்பாட்டால் தயிரின் விலையும் தலைவலியை ஏற்படுத்தியிருந்தது. 

“மீன் கொலம்போ, ஏதாவது கொலம்போ எஞ்சியிருந்தா ஒரு பான வாங்கி மணிக்கும் கொடுத்து நாலு பேரும் சாப்பிடலாம்னு பார்த்தா… எழுபது ரூபாக்கு இருந்த பான் ஒரு வருஷத்துல இருநூறு ரூபாக்கு விக்கிறான். பானும், பருப்பும், தேங்காய் சாம்பலும் ராஜ போஜனயாக இருக்கு. அந்த காலத்துல திடிரென்று எத்தனை பேர் வீட்டுக்கு வந்தாலும் பானும், தேங்கா சாம்பல், பருப்பு. மீன் என்று குறைஞ்ச விலைல இரவுணவை ஏற்பாடு பின்னி கொடுத்திருக்கிறோம். இப்போ என்னடான்னா…” 

“ஆமா அத்த ஒரு றாத்தல் பான் நானூத்தி அம்பது கிராம் இருக்கணும் என்று அரசாங்கம் சொல்லிச்சே. இப்போ என்னடான்னா கோதுமை விலை ஏறினதால பான் எடை முன்னுதி அம்பது கிராம் ஆகிருச்சு”

“பாவிங்களா பணத்தையும் கொடுத்து பாதி வயித்துக்கு கூட சாப்பிட முடியாதபடி பண்ணிட்டானுங்களே” இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்று நினைத்தவள் நேற்றிரவு சாதம் எஞ்சாததால் காலை, மதியம் சாதம் வடித்து ஒரே ஒரு உருளை கிழங்கு போட்டு லீக்ஸ் அவியல் பத்மினி செய்திருந்ததை பார்த்து

“இன்னக்கி வேல் இன்னும் தூங்குறான். எத்தனை மணிக்கு எழும்பி, எப்போ வெளிய கிளம்புவானோ. நீ இன்னக்கி கடைல சாப்பிடு. சமச்சத அவனுக்கு வை” மருமகளை பார்க்காமல் கூறிய சரோஜா தனக்கான மதிய உணவை பத்மினி கட்டி வைத்திருக்கவும் அதை எடுத்துக் கொண்டு வேலைக்கு கிளம்பினாள்.

“நைட்டு மட்டும் சோறு போட மாட்டேன் என்று அந்த கத்து கத்தினியே. ஆமா நீ குடிச்சியா? அவன் குடிச்சிட்டு வந்தான்னே தெரியல. குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு” மாமியாரை நக்கல் செய்தவள் வேலைக்கு கிளம்பினாள்.

பத்மினி இரத்தினபுரியிலிலுள்ள பிரபல சூப்பர்மார்கட்டில் காய்கறிகள், மற்றும் பழங்களை நிறுத்துக் கொடுக்கும் வேலையை பார்க்கின்றாள்.

காலை எட்டு மணிக்கு சென்றால் மாலை நான்கு மணிவரை வேலை. ஆனால் வீட்டு நிலமையால் மேனேஜரிடம் பேசி இரவு எட்டு மணிவரை வேலை பார்க்கின்றாள்.

“இங்க பாரும்மா. வேலைக்கு வச்சிக்கிறது ஒன்னும் பிரச்சினை இல்ல. போக, வர வண்டி எல்லாம் நாங்க ஏற்பாடு பண்ணி கொடுக்குறது இல்லை. நைட் நேரம் பொம்பள புள்ள தனியாக போய் ஏடாகூடமா ஏதாவது ஆச்சுன்னா யார் பதில் சொல்லுறது? வீட்டிலிருந்து கூட்டிட்டு போக யாராவது வருவங்களா சொல்லு. எட்டுமணி வரைக்கும் வேலைல இருக்க விடுறேன்.

ஆமா எட்டுமணி தாண்டி வீட்டுக்கு போய், அடுத்த நாள் காலைல எட்டு மணிக்கெல்லாம் வந்துடுவியா? இங்க வந்து தூங்கி வழிய மாட்டியே?

நம்ம நாட்டு நிலமையால உனக்கு மட்டும் இந்த நிலைமை இல்ல, எனக்கும் தான். இப்போ பணம் எவ்வளவு முக்கியம் என்று எனக்கு புரியாம இல்ல. மனுஷனுக்கு தூக்கமும் முக்கியம். புரியுதா?”

மேனேஜர் அனில் பத்ரபால ஒரு பௌத்தன். முப்பத்தி மூணு வயதிருக்கும், திருமணமான இரண்டு குழந்தைகளுக்கு தந்தை. வேலை பார்ப்பவர்களிடம் அனில் கண்டிப்பாக இருப்பதோடு, நலனையும், பாதுகாப்பையும் கவனித்தில்கொள்வான். 

“புரியுது சார். வேற வழியில்ல. வாரம் ஒரு நாள் லீவ் எடுத்துகிறேன்” என்றதும் பத்மினியின் குடும்ப சூழ்நிலையை கருதி மேனேஜர் அனில் சரி என்றிருந்தான்.

பத்மினி விடுமுறை எடுக்காமல் வேலைக்கு வந்தவள் நேற்று கொஞ்சம் உடம்பு படுத்துவது போல் இருக்க,  விடுமுறை எடுத்திருந்தாள். பஸ்ஸில் செல்வதென்றால் டவுன் சென்று செல்ல ஐந்து கிலோமீட்டர் எடுக்கும். போக வர பஸ் காசு வேற. வீட்டிலிருந்து குறுக்கு வழியாக சென்றால் ஒன்றரை கிலோமீட்டர் நடை பயணத்தில் சென்று விடுவாள்.

வேலை முடிந்ததும் வேக எட்டுக்களை வைத்து நடப்பவள் எப்படா வீட்டுக்கு வந்து சேர்வது என்றிருப்பாள்.

அதுவே மின்சாரம் தடைபடும் நேரம் என்றால் பாதையே கும்மிருட்டில் இருக்கும். அலைபேசியின் ஒளியில்தான் பாதையில் நடப்பாள். அச்சத்தில் இதயம் வேறு தொண்டைக்குள் துடிக்கும். மின்சாரம் இருந்தாலும் எல்லா மின்காம்பங்களிலும் மின் குமிழ்கள் கிடையாது. சிலதை போதை ஆசாமிகள் திருடிச் சென்றிருந்தனர்.

ஆறு கிளை பாதைகளில் அவள் நடக்க வேண்டும், எட்டு மணியானால் மெயின் ரோட்டை தவிர மற்ற  பாதைகளில் வண்டிகள் எதுவும் இருக்காது. அப்படியே இருந்தாலும் சவாரி செல்லும் ஆட்டோதான்.

தெரிந்த ஆட்டோவாக இருந்தாலும் சவாரியை ஏற்றி செல்லும் பொழுது இவளை ஏற்ற முடியுமா?  “பாத்து பத்திரமா வாம்மா” என்று விட்டுத்தான் செல்வார்கள்.

“புருஷன் என்று ஒரு தடியன் இருக்கானே ஒண்ணுத்தும் உதவாதவன். வேலைக்கு போய் சம்பாதிக்கிறதுதான் இல்ல. வேலைக்கு போறவ தனியா வராளே துணையா வரணும் என்ற எண்ணம் கூட இல்லை. எவனாவது என்ன கொலை பண்ணி போட்ட பிறகுதான் முழிப்பான். குடிகாரன். குடிகாரன்” கதிர்வேலை வசைபாடியாவரே வீடு வந்து சேர்வாள் பத்மினி.

கொஞ்சம் நாட்களுக்கு முன்பு சூப்பர்மர்கட்டுக்கு அருகே இருக்கும் எரிபொருள் நிலையத்தில் வண்டிகள் வரிசை கட்டி மூன்றாவது கிளை பாதை வரை நீண்டு இருந்தது.

இலங்கையில் இருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டால் எப்பொழுது எரிபொருள் நிலையத்துக்கு எரிபொருள் வந்து சேரும் என்று தெரியாது. வந்தாலும் தங்களுக்கு எரிபொருள் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் முன்கூட்டியே வண்டிகளை கொண்டு வந்து பலர் நிறுத்தி வைத்திருக்க, ஹனுமார் வால் போல் வண்டிகளின் வரிசை நீண்டு கொண்டே இருந்தது.

மூன்று நாட்களுக்கு ஒருமுறை அல்லது ஒரு வாரத்துக்கு ஒருமுறை எரிபொருள் வந்தாலும் வண்டிகளின் வரிசை மட்டும் குறையவில்லை. இதில் காருக்கு தனி வரிசை, பைக்குக்கு தனி வரிசை என்று இரண்டு வரிசை.

பத்மினிக்கு வண்டிகளை பார்க்கும் பொழுது யாராவது தன்னை இழுத்து வண்டிக்குள் போட்டு கற்பழித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் வண்டிகள் இருக்கும் பக்கம் நடக்காமல் மறுபக்கமாகத்தான் நடப்பாள்.

எரிபொருள் வராது என்று அறிந்தால் வண்டிகளை அப்படியே போட்டு விட்டு சிலர் வீட்டுக்கு செல்வார்கள். சிலர் வண்டியின் பகுதிகளை திருடிக்  கொண்டு போய் விடுவார்களோ என்று அஞ்சி வண்டியிலையே இரவு முழுவதும் தூங்குவார்கள்.

சத்தம் கேட்டு அவர்கள் எட்டிப் பார்த்தாலோ, வண்டியை விட்டு இறங்கினாலோ போதும் “முருகா…” என்று பத்மினி ஓட்டம் பிடிப்பாள்.  

“ரோட்டுல நாலு பேர் இருந்தா பயமில்ல. பாதுகாப்பா இருக்கும் என்று நினச்சா. நாடு இருக்குற நிலமைல பாக்குற எல்லார் மேலையும் சந்தேகம் தான் வருது”

யாராவது தன்னை கவனிக்கிறார்களா என்று பார்த்தவாறே நடந்தவள் “ஆமா தெரியாதவங்கள விட தெரிஞ்சவங்களாலத்தான் ஆபத்து அதிகமா வரும். என் புருஷனே போதும்” கதிர்வேலை வசைபாட காரணம் கிடைத்ததில் முணுமுணுத்தவாறே வீடு வந்தாள்.  

இவள் வீட்டுக்கு வந்த பின் தான் வேல் வீட்டுக்கு வருவான். வந்தவனுக்கு இவள் சாப்பாடு போட்டு தான் தூங்க செல்ல வேண்டும்.

வேலைக்கும் சென்று, வீட்டு வேலையும் செய்து, இவனையும் கவனிக்க வேண்டும் என்றதில் பத்மினிக்கு கடுப்பாகும். 

கதிர்வேல் இரவுணவை மட்டும்தான் வீட்டில் சாப்பிடுவான். காலையில் ஒரு டீ அவ்வளவுதான். அதிசயமாக வீட்டில் இருந்தாலும் கடையில் சாப்பிடுவதாக கிளம்பி விடுவான்.

நாடு இருக்கும் நிலைமையில் அளவாக சமைத்து, அளவாக சாப்பிட வேண்டிய நிலை. இன்று அவன் தூங்கிக் கொண்டிருக்க, சரோஜா பத்மினியின் காலை உணவை அவனுக்கு கொடுக்கும்படி கூறி விட்டு சென்று விட்டாள்.

கொடுப்பதில் என்ன பிரச்சினை பத்மினிக்கு? கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை. அவள் சம்பாதித்து. சமையலும் செய்து சாப்பிட முடியவில்லை. அது மட்டுமா? இன்னொரு செலவாக சாப்பாடு வாங்கி வேற சாப்பிட வேண்டும். கதிர்வேலை நினைக்கையில் கோபம் கோபமாக வர வேலைக்கு கிளம்பினாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலையிலையே கூட்டம் கூட ஆரம்பித்திருக்க, பத்மினியால் நகரக் கூட முடியவில்லை. மணி பத்தை தாண்டிக் கொண்டிருந்தது. பசி ஒரு புறம், கழிவறைக்கு செல்ல வேண்டும் என்றிருக்க, யாரிடம் பொறுப்பை கொடுப்பது என்று பார்த்தவாறே பொருட்களை நிறுக்கலானாள். 

வெள்ளை, அல்லது இளம் பச்சை நிறத்தில் இருக்கும் பாலிதீன் கவரில் தான் காய்கறிகளையும், பழங்களையும் வாடிக்கையாளர்கள் போட்டுக் கொண்டு வருவார்கள்.

ஒருவர் வந்து தான் வாங்கிய பழங்களையும், காய்கறிகளையும் பத்மினியிடம் கொடுக்க, அவளும் நிறுத்து கொடுக்கலானாள்.

“என்னமா இப்படித்தான் வர்றவங்கள ஏமாத்துறீங்களா?” அவர் பத்மினியை முறைக்க அவளோ புரியாது பார்த்தாள். 

“பத்து பெரிய கொய்யா வாங்கி இருக்கேன். நீ என்னடான்னா பச்சை ஆப்பிளுக்கு விலை போட்டிருக்க. பத்து கொய்யா வாங்கினதுக்கு முப்பது கொய்யாவோட விலை போட்டிருக்க”

“சாரி சார்”

ஆப்பிளும் பச்சை. கொய்யாவும் பச்சை. பாலிதீன் கவரினூடாக பார்த்ததில் பத்மினி சரியாக கவனித்திருக்கவில்லை. பசி மயக்கம், கழிவறைக்கு செல்ல வேண்டும் உடல் முழுவதும்  வியர்த்துக் கொண்டிருந்தவள் வாடிக்கையாளரின் சத்தத்தில் அச்சத்தாலும் படபடத்தாள். 

“என்னம்மா என்ன பிரச்சினை” அங்கே ஓடி வந்தான் அனில்.

வடிக்கையாளரோ பத்மினியின் கவனக்குறைவை குற்றம்சாட்டி கத்தி பேசியதோடு. தான் கவனிக்காமல் வீட்டுக்கு போய் பார்த்து பில்லோடு வந்தாலும் மாத்தி கொடுத்திருப்பீர்களா என்று கேட்டு கத்தலானார்.

“சீசீடிவி இருக்கு சார். கஸ்டமருக்கு அநியாயம் பண்ண மாட்டோம்” என்றான் அனில். வாடிக்கையாளரையும் பகைத்துக்கொள்ள முடியாது. வேலை செய்பவளையும் விட்டுக்கொடுக்க முடியாது. அமைதியாகவும், பொறுமையாகவும் பேசினான்.

“ஆமா பெட்ரோல் விக்கிற விலைல நான் கொய்யாக்காக அவ்வளவு தூரத்துல இருந்து வரணும். விலையா இருந்தாலும் பரவால்ல பெட்ரோல் தாராளமா கிடைக்கிறதா இருந்தா. அஞ்சி நாள் கிவ்வுள நின்னு பெட்ரோல் போட்டேன். ரெண்டு நாள் ஒழுங்கா தூங்க கூட இல்ல. முதல்ல இந்த மாதிரி பொண்ணுங்கள வேலைல வைக்கிறத நிறுத்துங்க” பத்மினியை திட்டியவாறே நகர்ந்தார்.

பத்மினிக்கு கண்ணீர் முட்டிக்கு கொண்டு வந்தது.

“நாட்டு நிலைமை ஒவ்வொரு மனுஷனோட பொறுமையையும் கொதிக்குது” என்ற அனில் “போம்மா போ.. போய் மூஞ்ச கழுவிட்டு வா” என்று பத்மினியை அனுப்ப தலையை குனிந்தவாறே நடந்தாள். 

இது போல் சம்பவங்கள் எப்பவோ ஒருநாள் நடப்பதுதான். வாடிக்கையாளர் திட்டினால் இன்முகமாக அதை எதிர்கொள்ள வேலைக்கு சேரும் பொழுதே பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தது.

அதனால் சக வேலையாட்களுக்கு நடந்த சம்பவம் ஒரு சாதாரண சம்பவம். இவளை சமாதானப்படுத்தும் எண்ணமும் அவர்களுக்கு இல்லை. அதற்கு நேரமும் இல்லை. அவர்கள் அப்படியொரு சம்பவமே நிகழாதது போல் தங்களது வேலையை பார்களாயினர்.

முகத்தை குளிர்நீரால் அடித்துக் கழுவிய பத்மினி ஒரு சாக்லட் பேவர் சேர்த்த பால் பாக்கட்டை எடுத்து அருந்தி விட்டு மீண்டும் வேலையை பார்கலானாள்.

எட்டு மணியானதும் வேலை முடிந்ததும் வளமை போல் இதயம் பட படக்க, பாதையில் இறங்கி நடந்தாள். 

மெயின் ரோட்டை தாண்டி முதலாவது கிளைப்பாதைக்கு நுழைந்ததும் பாதையில் ஒரு நாய் கூட இல்லாததை பார்த்து “பெட்ரோல் கிவ் இருந்தவரைக்கும் பயமாக இருந்தாலும், ஆள் நடமாட்டம் இருக்கிறதே என்ற நிம்மதி இருந்தது. இப்போ அதுவும் இல்ல” என்றவாறே வேக எட்டுக்களை எடுத்து வைத்தாள். 

“மினி நில்லு மினி. நில்லு”

யாரோ அழைக்கும் குரல் கேட்கவே திடுக்கிட்டவள் திரும்பிக் கூட பார்க்காமல் ஓடாத குறையாக நடந்தாள்.

பாதையின் வளைவுகளால் மின்கம்பங்கள் ஒளி எல்லா இடத்திற்கும் தெளிவாக விழாது. அதுவும் மலை பாதை என்பதால் சில இடங்கள் கும்மிருட்டாக இருக்க, அழைத்து யார் என்று சட்டென்று பத்மினிக்கு தெரியவில்லை.

“மினி நான் தான் ரமேஷ். நில்லு நில்லு” பின்னாலையே ரமேஷ் ஓடி வந்தான்.

“ரமேஷா…” என்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு திரும்பிப் பார்த்தாள். 

“எப்படி இருக்க மினி” அலைபேசி ஒளியில் அவள் முகம் பார்த்து குரல் கமற கேட்டான் ரமேஷ்.

“நீ இங்க என்ன பண்ணுற? மறுவாழ்வு மையத்திலிருந்து நீ எப்போ வந்த?” அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இவள் கேள்வி கேக்கலானாள்.

“நீ என்ன ராத்திரில தனியா போற? எங்க உன் புருஷன்” பத்மினி கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் ரமேஷ் அவளை திருப்பிக் கேட்டான்.

புருஷன் என்றதில் தான் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற ஞாபகம் வர மீண்டும் நடக்க ஆரம்பித்தாள் பத்மினி.

“என்ன மினி பேசாம போற? நில்லு”

“நைட்டு வேற. இப்படி ரோட்டுல நின்னு பேசுறத யாராச்சும் பார்த்தா தப்பா பேசுவாங்க. வீட்டுக்கு போகணும்” குழந்தை போல் கூறியவாறே நடப்பவளை எட்டி பிடித்து நிறுத்தினான் ரமேஷ்.

“நான் எந்த போதைப்பொருளை எடுக்கலடி. அவன்தான் அவன்தான் என்னமோ பண்ணிட்டான். விடிஞ்சா கல்யாணத்த வச்சிக்கிட்டு நான் போய் போதை மருந்தெல்லாம்… நீ என்ன நம்பவே மாட்டியா?”

பத்மினி திருமணம் செய்ய இருந்தது ரமேஷை. அதுவும் காதல் திருமணம். தனது திருமணத்தில் நடந்த குளறுபடிகளுக்கு கதிர்வேல் தான் காரணம் என்று பத்மினிக்கு சந்தேகம் இருந்தாலும் சாட்ச்சியோ, ஆதாரமோ இல்லை.

கதிர்வேல் தான் காரணமா என்று தெரியாமல் அவன் மீது குற்றம் சொல்ல பத்மினிக்கு இஷ்டமில்லை. கதிர்வேலை விட்டுக் கொடுக்கவும் அவள் மனம் முரண்டியது.

“கல்யாணத்த வச்சிக்கிட்டு சரக்கடிக்கணும் என்று நினைக்கிறவன் போதை மருந்தை எடுத்தா என்ன? இப்போ அதை பத்தி பேசி பிரயோஜனம் இல்ல. எனக்கு கல்யாணம் ஆகிருச்சு. நீயும் நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி உன் வாழ்க்கையை வாழப்பாரு” கண்களில் பெருகும் கண்ணீரை மறைக்க அலைபேசி ஒளியிலிருந்து விலகினாள்.

“என்ன பேசுற நீ. நாம காதலிச்சோம். கல்யாணம் பண்ண முடிவு செஞ்சி வீட்டார் சம்மத்தோட கல்யாணம் பண்ணவும் முடிவு செஞ்சோம். இடையில அந்த கதிர் தான் உன் மேல ஆசைப்பட்டு எனக்கு சரக்க ஊத்திக்க கொடுத்து கல்யாணத்த நிறுத்தி. உன்ன அவன் கல்யாணம் பண்ணிகிட்டான்” ரமேஷின் வார்த்தைகளில் கோபம் மட்டுமே கொப்பளித்தது.

“இங்க பாரு முதல்ல நான் உன்ன லவ் பண்ணேன்னு சொல்லுறத நிறுத்து. நீ என்ன லவ் பண்ணுறேன்னு சொன்ன வீட்டுல வந்து பொண்ணு கேளு சம்மதிச்சா உன்ன கட்டிக்கிறேன்னு சொன்னேன். அப்படித்தானே சொன்னேன்” மிரட்டும் தொனியில் கேட்டாள் பத்மினி.

“ஆமா… ஆமா… உனக்கு விருப்பம் இல்லாமலா வீட்டுல வந்து பேசச் சொன்ன?” கடுப்பானவன் “போதைமருந்து எடுத்தேன்னு என்ன மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பிட்டு அந்த குடிகாரன் கூட குடும்பம் நடாத்துறியா? முதல்ல அவனை விட்டு வா. நாம சேர்ந்து வாழலாம்” என்று பத்மினியின் கையை பிடித்து இழுத்தான் ரமேஷ்.

பத்மினிக்கு கதிர்வேலை பிடிக்காதுதான். சூழ்நிலையால் அவன் இவளது கணவன் என்றாகி விட்டான். அவனோடு சேர்ந்து குடும்பமும் நடாத்தவில்லை. பேசாமல் ரமேஷோடு சென்று வாழலாமா என்று கூட தோன்றியது.

தான் விரும்பியவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டால் இந்த உலகத்தில் பலபேருக்கு திருமணமே நிகழ்ந்திருக்காது. 

அதுவும் ஒரு பெண் ஆசைப்பட்டவனை சட்டென்று திருமணமே செய்துகொள்ள இந்த சமூகம் விடுமா?

காதலிக்கும் போதே எத்தனை பேச்சுக்கள் கேட்க வேண்டி இருக்கிறது. ஒரு கன்னி பெண்ணிக்கே இந்த நிலைமை என்றால் இன்னொருவனை திருமணமே செய்து விட்டு காதலனோடு வந்து விட்டால் எப்படியெல்லாம் ஊர் தூற்றும்?

பெற்றோரின் சாபத்தால் நிம்மதியாகத்தான் வாழ்ந்திட முடியுமா?

எதையுமே சிந்திக்காமல் காதலித்தவனின் கரம்பிடித்து சென்றால் அவன் வீட்டார் மதிப்பார்களா?

அவன் தான் சந்தர்ப்ப, சூழ்நிலையால் குத்திக் பேசாமல் இருப்பானா?

எத்தனை எத்தனை சம்பவங்களை பார்த்தும், கேட்டும் இருக்கின்றாள் பத்மினி. தெரிந்தும் அதே தவறை செய்வாளா?

“நீ புரிஞ்சிதான் பேசுறியா?” அவனிடமிருந்து கையை உதறியவாறே இருளிலும் அவளை முறைத்தவள் நடந்தவாறே “எனக்கும் உனக்கும் இடையில் இருந்த எல்லாமே முடிஞ்சி போச்சு. இல்ல நான் தான் வேணும். நான் இல்லாம உன் வாழ்க்கையே இல்லனு நீ பினாத்திக்கிட்டு திரியிரினா முதல்ல போய் உங்கம்மாகிட்ட சொல்லு. எனக்கு பத்மினிய மறக்க முடியல. அவ இல்லாம என்னால வாழ முடியாது. அவதான் எனக்கு வேணும் என்று. உங்கம்மா சம்மதம் சொல்லட்டும்”

“எங்கம்மா சம்மதம் சொன்னா நீ என் கூட வருவியா?” நம்பிக்கையோடு அவளோடு கூட நடந்தான் ரமேஷ்.

“கேட்டுத்தான் பாரேன். அடுத்தவன் பொண்டாட்டி வேணுமான்னு செருப்பாலையே அடிப்பாங்க” மனதுக்குள் நினைத்தவள் “உங்கம்மா சம்மதிச்சா மட்டும் பத்தாது. ஆனா முதல்ல உங்கம்மா சம்மதம் வேணும்” நடக்காத ஒன்றை இவனுக்கு இப்படித்தான் புரிய வைக்க முடியும் என்று தலையை உலுக்கியவாறு நடந்தவள் சட்டென்று நின்று “உங்கம்மா சம்மதிக்காம இப்படி கண்ட இடத்துல எல்லாம் என் கூட பேசுற வேலைய வச்சிக்காதே” என்று விறுவிறுவென நடந்தாள்.

“எங்கம்மாக்கு என் சந்தோசம் தான் முக்கியம். கண்டிப்பா சம்மதிப்பாங்க” இருளில் கத்தினான் ரமேஷ்.

சொடக்கு மேல

ஹே ஹே ஹே

சொடக்கு மேல

அடியேய் பத்து

சொடக்கு மேல

சொடக்கு போடுது

பார்க்கக் கூடாதத

பார்த்துட்டு வந்து

சொடக்கு மேல

சொடக்கு போடுது

திரும்ப வந்துட்டான்னு

ஊரு சொல்லுது

அவன என்ன

பண்ணலாம் என்று

மைண்டு ஓடுது

வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது

ஊருக்குள்ள வந்தவன

வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது

கத்தி, கம்பு, அருவா எது கிடைச்சாலும்

வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது

அடியேய் பத்து…

வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது

இன்னக்கி நானா அவனான்னு பார்க்க தோணுது

அடியேய் பத்து…

வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது

“அத்த உன் புள்ள வந்துட்டான்”

“வந்துட்டான்ல சோத்த போட்டு தூங்க வை. நான் தூங்க போறேன். கல்யாணம் பண்ணி வச்சும் ஒவ்வொன்னத்தையும் நான் சொல்ல வேண்டி இருக்கு. இதுங்க எப்போ என்னகி ஒண்ணா ஒத்துமையா வாழ்க்கைய வாழ்வாங்களோ” முணுமுணுத்தவாறே சரோஜா தூங்க சென்றாள். 

வளமை போல் சோறு போட மாட்டேன் போய் குளி என்று பத்மினி சண்டையை ஆரம்பித்தாள்.

“ரமேஷ் வந்துட்டான் போல. புணருத்தாபன கதவுறல {மறுவாழ்வு மையம்}இருந்து அவ்வளவு சீக்கிரமா வந்துட்டான்” ரமேஷ் வந்துட்டான். அது தனக்கு தெரியும் என்று சொல்லாமல் சொன்னான் கதிர்.

இவனே ஒரு குடிகாரன். முதல்ல இவன்தான் மையத்துக்கு போக வேண்டும். ரமேஷ் போதைப்பொருள் உட்கொண்டு விட்டான் என்றதும் அவன் அன்னை மகனின் மயக்கம் தெளியும் முன்னே மையத்தில் சேர்த்திருந்தாள்.

“அவன் என்ன கொலை குத்தம் பண்ணி ஜெயிலுக்கு போனானா இல்ல. அன்கொடைல {மெண்டல் ஹாஸ்ப்பிடல் இருக்கும் ஊர்} அட்மிட் ஆகி இருந்தானா? வெளிய விடாம இருக்க? அவன் போதை மருந்து எடுத்திருந்தாவே மூணு மாசமோ, ஆறுமாசமோ உள்ள வச்சி ட்ரீட்மெண்ட் கொடுத்திருப்பாங்க. அவன் என்னடான்னா போதை மருந்து எடுக்கவே இல்லனு அடிச்சி சொல்லுறான்” என்றாள் பத்மினி.

“அவன் சொன்னா யார் நம்புங்க? அவன பெத்த ஆத்தாவே நம்பள” கேலியாக உதடு வளைத்தான் கதிர்வேல்.

“நான் அவன நம்புறேன். அவன் எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டான்” ரமேஷ் போதை மருந்து எடுத்தானா? இல்லையா என்பது வேறு பிரச்சினை. தனது திருமணத்தில் நடந்த குளறுபடிக்கு இவன்தான் காரணமா ரமேஷை பற்றி பேசினால் ஏதாவது உளறுவானா என்றுதான் பத்மினி அவ்வாறு கூறினாள்.

“அப்படினா… நீ அவன பார்த்து பேசியிருக்க” அமர்ந்திருந்தவன் அவள் முழு உயரத்துக்கு நிமிர்ந்து நின்று “என்ன ரெண்டு பேரும் ஊர விட்டு ஓடலாம்னு திட்டம் போடுறீங்களா?” என்று சீற்றத்தோடு கேட்டான்.

அருகில் நின்றவனிடமிருந்து சரக்கு வாடை வீசியது. ஆனால் அவன் தெளிவாக இருந்தான். கண்களில் போதை இல்லை. கோபம் மட்டுமே.

“என்ன இவன் என்னைக்குமே இல்லாம வித்தியாசமா இருக்கான்” அவனை சந்தேகமாக பார்த்த பத்மினி “ஆமா உண்மையிலயே நீ குடிச்சிருக்கியா?” என்று கேட்டாள்.

அவள் மேலையே சாய்ந்தவன் “பத்து…. ஐ லவ் யு பத்து. அழகிடி நீ. என் தேவதை நீ. புள் அடிச்சும் போதை இல்லை. புள் பியர் அடிச்சும் கிக்கு இல்லை. கல்லு குடிச்சும் தூக்கம் இல்லை. கண்ண மூடினா கனவுல நீதானே”

“அட நாசமா போன்றவனே. இன்னக்கி எந்த சினிமாக்குடா போயிட்டு வந்த லவ் டயலாக்கா வாந்தி எடுக்குற. வா வந்து சோத்த தின்னுட்டு தூங்கு” கடுப்பான பத்மினி அவனை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தினாள்.

“போடி போடி போய்… சோத்த போடுடி. வா மணி” என்று நாயை அழைத்தவாறு பின் பக்கமாக நடந்தான் கதிர்வேல்.

“ஒருநிமிஷம் நான் ஆடிப் போய்ட்டேன்” முணுமுத்தாள் பத்மினி.

Advertisement