Advertisement

அத்தியாயம் 3

பத்தல பத்தல சம்பளம் பத்தல

சரக்கும் பத்தல சண்டைன்னு வந்தா

அட்றா டேய்

சும்மா இழுத்து வச்சி அட்றா டேய்

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்ற பழமொழிக்கு ஏத்தது போல் வீடு வரும் முன்பாகவே கதிர்வேலின் குரல் மலைக்கு கீழ் கேட்க ஆரம்பித்தது.

 “அத்த பாட்டு சத்தம் ஓவரா இருக்கு இன்னைக்கும் ஓம்புள்ள தண்ணீல மிதந்துகிட்டுதான் வாரான் போல” நொடித்தாள் பத்மினி.

“வரட்டும் வரட்டும் அவனுக்கு இருக்கு இன்னக்கி” கோபத்தில் பொருமினாள் சரோஜா.

“இதையே தான் நீ தினமும் சொல்லுற” அத்தையை முறைத்தாள் மருமகள்.

மலையேறி வந்தவனுக்கு அன்னையும் மனைவியும் காட்ச்சி தர அவர்களை நோக்கி வந்தவாறே பாடலானான். கூடவே அவன் பின்னாடி வீட்டு நாயும் அவனை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. 

எங்கம்மா குத்துற கும்மான் குத்துல

பெத்த புள்ள நீ செத்துடுவான்டி

கொம்மா என் அம்மா உன் புள்ள நான் செத்துடுவேன்

என்ன பார்வை நீ சோத்த போடுடி

லுங்கியை ஏத்தி விட்டு ஆடியவாறே வாசல்படியில் வந்தமர்ந்த கதிர்வேல் இருபத்தியேழு வயதான அவனை சரோஜா இன்னமும் வெளுத்து வாங்குவதை பாட்டிலையே எடுத்து விட்டு வம்பிழுத்தவன் சாப்பாடு போடும்படி பாட்டிலையே மனைவியை ஏவினான்.

கஜானாலே காசில்லே

கல்லாலையும் காசில்லே

கேஸில்ல, பெட்ரோலில்ல

மூணு நாளா கிவ்ல நின்னும் 

ஒன்னத்துக்கும் உதவல.

ஒன்றியத்தின் தப்பாலே

ஒண்ணியும் இல்ல இப்பாலே

சாவி இப்போ திருடன் கையில

தில்லாலங்கடி தில்லாலே

ஏற்கனவே வெள்ளம் வந்து

ஊரு தண்ணில மூழ்குது

நீ கொலம்ப ஊத்துல

வயிறு பசிக்குது.

என்ன ஆனாலும் வயிறு பசிக்குதே

கதவுலையே தாளம் போட்டவாறு பாடியவன் சோறு போடுமாறு பத்மினியை பார்த்தான்.

“தொர எங்கிருந்து வாறீக? இன்னக்கிக்கும் வாயில நல்லா ஊத்திக்கிட்டுதான் வந்திருக்குறீங்க போல” பத்மினி கைகளை கட்டிக் கொண்டு கணவனை முறைத்தாள்.

“ஏன்டா ஒழுங்கா ஒரு வேலைக்கு போறதில்லை. போனாலும் வாங்குற சம்பளம் நீ குடிக்கவே பத்த மாட்டேங்குது. வீட்டு செலவுக்கு நயாபைசா கொடுக்க மாட்டேங்குற, சோறு மட்டும் வைக்கணுமா?” கதிர்வேலின் அன்னை சரோஜா வளமை போல் கோபத்தில் கத்த ஆரம்பித்தாள்.

“பாடிகிட்டு வந்தது போல கேஸ் இல்ல. மழை பெஞ்சதால விறகெல்லாம் நனைஞ்சு போச்சு. அடுப்பு பத்தவைக்க முடியல. அதனால சமைக்கல” என்றாள் பத்மினி இடக்காக.

“அடியேய் பத்து… எங்கம்மா வைக்கிற மீன் குழம்பு மலை அடிவாரம் வரைக்கும் மணக்கும்டி… கதவிடாம போ… போய்  சோத்தக் கொண்டு வாடி…” போதை தலைக்கேறி இருந்தாலும் வாய் குளறாமல் மீன் குழம்பின் வாசம் பிடித்தவாறே பேசினான்.

“ஏன்டா இன்னைக்கு நான் மீன் வாங்கினது உனக்குத் தெரியாது? தெரிஞ்சுக்கிட்டு நீ தாண்டா கதவிடுற. போ… முதல்ல போய் குளி.. வீடே நாறுது” மகனின் முதுகில் இரண்டு அடி போட்டாள் சரோஜா.

“ஏய் சவுண்டு சரோஜா… அடிக்கிற வேலையெல்லாம் வச்சிக்காத. சரியா…” அன்னையை முறைத்தவன் “நீ என்ன முறைக்குற. சோத்தப் போடுடி…” பதமினிக்கு உத்தரவு போடலானான் வேல்.

“இவன அடிச்சி என் கை வலிக்குது. கல்லு போல நிக்கிறான் பாரு. இவன என்ன பண்ணலாம்” மகனை எவ்வாறு வழிக்கு கொண்டு வருவது என்று புரியாமல் கோபத்தில் கொந்தளித்தாள் சரோஜா.

தினமும் இரவில் வாங்கும் அடிதானே. அது அவனுக்கு பழக்கமானது. சரோஜாவின் கைகள் வலித்திருக்க, அவனுக்கு அது பொருட்டே இல்லாதது போல் அமர்ந்திருந்தான்.

“போ… போ… முதல்ல குளிச்சிட்டு வா… அத்த சொன்னது காதுல விழலையா. நீ மட்டும் குளிக்கல உனக்கு வைக்க வேண்டிய சோத்த நாய்க்கு வைப்பேன்” என்று மிரட்டினாள் பத்மினி.

“நீ அடிச்சி அடிச்சே என் உடம்பு மறத்து போச்சு. இப்போ அடிக்கிற அடியெல்லாம் மசாஜ் மாதிரிதான் தெரியுது” என்று சரோஜாவை பார்த்து கூறியவன் “புருஷனையே மதிக்காம நாய் மாதிரிதான் நடத்துற. இதுல நீ என் சோத்த நாய்க்கு வேற போடுறியா? அது சாப்பிடுமா?”

மனைவியிடம் கேள்வி கேட்டவன் நாயிடம் திரும்பி “டேய் மணி என்ன இவ உனக்கு சோறு போடமாட்டாளா? நாட்டு நிலைமை நமக்கே சோறு இல்ல. உன்னக்கெல்லாம் யாரு சோறு போடுவா? உனக்கென்ன கண்டதையும் சாப்பிட்டு உடம்ப வளத்துக்குவ? நான் அப்படியா? வாய்க்கு ருசியா தின்னு பழகிட்டேன். கறி விலை ஏறிப்போச்சு. மீன் விலை ஏறிப்போச்சு. வாங்க காசும் இல்ல. குடிக்க சரக்கும் இல்ல. நாடு நாசமா போச்சு” அவன் பாட்டுக்கு போதையில் புலம்ப ஆரம்பித்தான்.

“விடியிற வரைக்கும் புலம்பிகிட்டே கிடப்பான். நீ கதவை சாத்திடு வந்து தூங்கு” என்ற சரோஜா உள்ளே சென்று விட்டாள்.

இது இந்த வீட்டில் தினமும் நடக்கும் கூத்துதான். இவனை திருத்த முடியாது என்று சரோஜாவும், இவன் திருந்த மாட்டான் என்று பத்மினியும் முடிவே செய்திருக்க, குடித்து விட்டு வந்தால் உனக்கு சோறு கிடையாது என்று இவர்கள் சொல்வதும் அவன் பஞ்சாயத்து பண்ணுவதும் தினம் நடப்பதுதான்.

என்ன அக்கம்பக்கத்தில் வீடுகள் இல்லாததினால் யாரும் எந்த புகாரும் அளிப்பதில்லை.

“ஆமா… ஆமா உனக்கு மட்டும் எங்கயிருந்தாவது குடிக்க காசும் கிடைக்குது காரணமும் கிடைக்குதே. உனக்கென்ன? வீட்டு பொம்பளைங்க சம்பாதிக்கிறாங்க. அதுல சோத்த தின்கிற. உனக்கு கொஞ்சம் கூட வெக்கம், மானம் சூடு, சொரணை இல்லையா” ஏன் தான் இவன் இப்படி இருக்கிறானோ? அத்தையின் மனதை நோகடிக்காமலாவது இருக்கலாமே என்ற கோபம். சின்ன வயதிலிருந்தே அவன் மீது இருக்கும் வெறுப்பு என்று அவனை இவ்வாறு பார்க்கும் பொழுது பத்மினிக்குள் எரிய ஆரம்பிக்க, வார்த்தைகளை கக்கினாள்.

“ஓய்… இப்படியெல்லாம் பேசினா? நான் திருந்திடுவேனா? இங்க பாரு நானே நாட்டு நிலைமையை நினைச்சி வருத்தத்துல இருக்கேன். என்ன கடுப்பேத்தாம சோத்த போடு”

“நேத்துதான் நீ உன் தலைவன் படம் விக்ரம் சூப்பரா ஓடிக்கிட்டு இருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கறதா குடிச்சிட்டு வந்த. இன்னக்கி திரும்ப நாட்டு நிலைமையை நினைச்சி வருந்துரியாக்கும். நேத்து மட்டும் நாட்டு நிலைமையை நினைக்கிறத லீவு விட்டியா என்ன?”

“அடி போடி கூறுகெட்டவளே. லீவு விட நம்ம நாட்டு பிரச்சினை என்ன நாளைக்கே முடியப்போகுதா என்ன? கொஞ்சம் பிரேக் விட்டேன்” என்று சத்தமாக சிரித்தான்.

“இவனுக்கு பைத்தியம்தான் பிடித்திருக்கிறது” என்று அவனை முயன்ற மட்டும் முறைத்தவள் “ஆமா போன மாசம் தளபதி படம் ஊத்திக்கிச்சு என்று குடிச்ச. அதுக்கு முந்தின மாசம் தல படம் புட்டுகிச்சுனு குடிச்ச. நேத்து ஒரு காரணம். ஆகா மொத்தத்துல உனக்கு குடிக்க மட்டும் காரணம் தேடு” கடுப்பான பத்மினி வாசற்கதவை பலமாக தள்ள அது வேலின் மீது பலமாக மோதி நின்றது.

“ஆ…” வலியில் கத்தியவன் “யம்மோ இங்க பாருமோ… பத்து என்ன கொல்ல பாக்குறா… என்னனு வந்து கேளு” விடலைப்பையன் போல் அன்னையிடம் புகாரளித்தான்.

“இன்னைக்கி நீ இப்படி வளந்து நிப்பானு தெரிஞ்சிருந்தா உன்ன கருவருத்திருப்பேன். ஒழுங்கு மறுவாதியா குளிச்சிட்டு வந்து சோத்த தின்னுட்டு தூங்குடா” உள்ளே இருந்து கத்தினாள் சரோஜா.

“ஆமா குளிச்சி சுத்தபத்தமா, வெள்ளையும் சொள்ளையுமா முதலிரவு அறைக்குள்ள போகப்போறேன் பாரு. இந்த குளிருல குளிக்க சொல்லுற நீயெல்லாம் தாயா… பேய். பேய். என்ன உசுரோட கொல்ல பாக்குற” பதிலுக்கு இவனும் கத்தினான்.

“ஓஹ்… உனக்கு அந்த நினைப்பு வேற இருக்கோ? வீட்டுல ரெண்டு பொம்பளைங்க இருக்காங்களே அவங்கள பாத்துக்கணுமே. பொறுப்பா ஒரு வேலைக்கு போய் சம்பாதிச்சு குடும்பத்தை நடாத்தனும் எங்குற எண்ணமில்லை. பொம்பள சோக்கு மட்டும் கேக்குதோ. முதல்ல ஆம்பளையா லட்சணமா நடந்துக்க. அப்பொறம் புருஷனா நடந்துக்கலாம்” என்றாள் பத்மினி.

“புருஷனுக்கும் ஆம்பளைக்கு என்னடி வித்தியாசம்? நீயெல்லாம் சினிமா நடிகர் மாதிரி அழகான புருஷன் வேணும். உலகத்துல இருக்குற நம்பர் வன் பணக்காரன் புருஷனா வேணும் என்று பகல் கனவு காண்டிருப்ப. நான் வந்து வாச்சேன் இல்ல. உன்னால பொறுக்க முடியல. ஏத்துக்க முடியல. சந்தர்ப்பம் கிடைச்சா சோத்துல விஷம் வச்சி என்ன போட்டு தள்ளுவ. கொலைகாரி. கொலைகாரி” பத்மினியி பார்க்காமல் அவளை திட்டலானான்.

அவள் திருமணம் யாரோடு நடக்க இருந்தது. ஏன் நடக்க இருந்த திருமணம் நின்று கதிர்வேலோடு திருமணம் நிகழ்ந்தது என்று அவனுக்கும் நன்றாகவே தெரியும். தெரிந்திருந்தும் இவன் இவ்வாறு பேசுகிறான் என்றால் அவன் உண்மையை மறைக்க முயல்கிறானா? அல்லது உளறுகிறானா? என்று அவனை பார்த்து “என்ன இன்னக்கி சினமாலை புருஷன பொண்டாட்டி கொல்லுறது போல ஸீன் வந்துச்சா இங்க வந்து உளறிக்கிட்டு இருக்க” பார்க்கும் சினமாவை வைத்தும் இவன் உளறுவான் என்று அறிந்ததினால் கடுப்பில் கேட்டாள் பத்தமினி.

அதற்கு கதிர்வேலோ “என்ன உன்னைய சினிமாக்கு கூட்டிட்டு போகலானு கடுப்பா இருக்கா? உன் மூஞ்ச எல்லாம் தியேட்டருக்குள்ள விடமாட்டாங்களாம். உனக்கெல்லாம் டிக்கட் கொடுத்தா படம் ஓடாதாம்” என்றவன் பெரிய காமெடியை சொன்னது போல் கைகொட்டி சிரிக்கலானான்.

தனது திருமணத்தின் போது உண்மையிலயே என்ன நடந்தது.  தான் சந்தேகிப்பது போல் எல்லாவற்றுக்கும் காரணம் கதிர் தானா? என்று இன்னும் அறிய முடியாத கோபம் உள்ளுக்குள் கணக்க, கதிர்வேல் பேசியதில் கடுப்பில் உச்சத்துக்கே சென்ற பதமினிக்கு இவனை தன் கையினாலையே கொன்றால் என்ன என்று கூட தோன்றியது.

“பொறுமை பத்து பொறுமை… உனக்கு இவன்கிட்ட பொறுமை ரொம்ப அவசியம்” தாக்குத தானே கூறிக் கொண்டாள். 

கதிர்வேல் எப்பொழுதிலிருந்து குடிக்க ஆரம்பித்தான் என்று யாருக்கும் தெரியாது. திருமணத்துக்கு முன்பே அவனுக்கு இந்த பழக்கம் இருந்ததா? அதற்கு பின் குடிக்க ஆரம்பித்தானா? அவன் பிரச்சினை தான் என்ன? என்றுமே அவன் சொன்னதில்லை.   

“ஏன்டா இப்படி குடிச்சு கெட்டு குட்டிச்சுவரா போற?” என்று சரோஜா கதற, கதிர்வேல் எந்த பதிலும் சொல்வதில்லை. கதறிப் பார்த்தவள் ஒரு கட்டத்துக்கு மேல் அடிக்க ஆரம்பிக்க இன்று வரை அடித்துக் கொண்டிருக்கின்றாள்.

“உனக்கு என்னதான்டா பிரச்சினை? என்ன பிரச்சினைன்னு சொன்னா தானே புரியும்” பத்மினியும் பல தடவை பொறுமையாக கேட்டுப் பார்த்தாள். அமைதியாக பேசினால் அவன் மனம் திறப்பான். அவன் பிரச்சினை என்ன என்று அறிந்துகொள்வதோடு, தனது கல்யாணத்தில் நடந்த குளறுபடியால் கதிர்வேலுக்கு பங்கிருக்குமோ என்று அறிந்துகொள்ள முயன்றாள்.   

“எனக்கென்ன நான் ராஜா மாதிரி இருக்கேன். எனக்கென்னடி கொற? எங்கம்மாக்கு நான் ஒத்த புள்ள டி. நான் சாகும் வரைக்கும் என்ன உக்கார வச்சி என் ஆத்தா எனக்கு சோறு போட மாட்டாளா? வந்துட்டா அன்பா, அக்கறையா விசாரிக்க” பத்மினி எந்த நோக்கத்தில் நெருங்கி வருகிறாள் என்று அவனுக்கு தெரியாதா? 

“தான் என்ன கேட்டால் இவன் என்ன உளறுகின்றான்? ஒத்த புள்ளய பெத்து வச்சிருக்கும் அத்த கடைசி காலத்துல இவன் அவங்களுக்கு கஞ்சி ஊத்துவான்னு சொல்லிக்கிட்டு இருக்கு. இவன் என்னடான்னா அவங்க இவனுக்கு சோறு போடணும் என்று சொல்லிக்கிட்டு இருக்கான். கிறுக்கு பய” இவனிடம் கேட்டுப் பிரயோஜனம் இல்லையென்று பத்மினி  அதன் பின் கேட்பதையே விட்டு விட்டாள்.  

“என்ன அப்படி முறைக்குற? என்னய உன் கையாலையே கொல்லணும்னு தோணுதா? சோத்துல விஷம் கிஷம் வச்சிடாதடி. அப்பொறம் நீ விதவையாகிடுவ. புருஷன் என்று ஒருத்தன் வெட்டியா, குடிகாரனா கூட இருந்தா தான்மா பாதுகாப்பு. இல்லனா கண்டவனும் வீடு புக பார்பான் தெரிஞ்சிக்க” போதையில் மனைவிக்கு புத்திமதி கூற ஆரம்பித்தான்.

அதற்கெல்லாம் பத்மினி அசரவில்லை “கட்டின புருஷனையே பக்கத்துல படுக்க விட்டதில்லை. கண்டவனையும்தான் விடுவேன் பாரு. வெட்டி வீசிட மாட்டேன்” என்றாள்.

“பைத்தியக்காரி பைத்தியக்காரி ஆம்பளைங்க எல்லாரையும் என்னய போலன்னு நினச்சிட்டியா? அவனவன் காஞ்சிப்போய் கிடக்கிறான். கருவாடு கிடைச்சாலும் பாஞ்சிடுவான். பாத்துக்க”

“ஆம்பளைங்க எல்லாரும் உன்ன போல இல்லனு சொன்னியே அத ஒத்துகிறேன். என்னைய கருவாடு என்று சொல்லுறியா? நீ தாண்டா குடிச்சி குடிச்சி காஞ்ச கருவாடா போய் இருக்க. உன் உள்ளுறுப்புல எது எல்லாம் வேலை செய்யுதோ வேலை செய்யலையோ, யாருக்குத் தெரியும். எதுக்கும் டாக்ட்ருக்கிட்ட போய் செக்கப் பண்ணிக்க” கோபத்தில் கூறினாலும் மனதுக்குள் அவனுக்காக வேண்டிக் கொள்ளலானாள் பத்மினி.

“வாயில நல்லா வருது வேணாம்… பசின்னு சொல்லுறவனுக்கு சோத்தை போட மாட்டேங்குற. நல்லா சாப்பிட்டா தானே, உடம்பு தெம்பா இருக்கும். நான் நல்லா இருப்பேன். நீ சோறே போட மாட்டேங்குறேன். போடி… போடி… என்ன பேச விட்டு வேடிக்கை பாக்குறியா?” தினமும் போல் சம்பாஷணையின் முடிவாக பத்மினியை விரட்டலானான் வேல்.

“முதல்ல போய் குளிடா குடிக்கிறதையே பொழப்பா வச்சிருக்க. உன் கிட்ட மனுஷன் நெருங்குவானா. நாத்தம் கொடல் பொரட்டுது”

“மணி என்கிட்டே நெருங்குறானே அவனுக்கு மூக்கு இல்லையா? என்ன மணி? நாறுதா? இல்லல” தன்னை முகரும் நாயை தடவிக் கொடுக்கலானான் கதிர்வேல்.

“நான் சொன்னது மனுஷன் நெருங்க மாட்டான் என்று. உன் கிட்ட நாய் மட்டும்தான் நெருங்கும். அதுதானே குப்பையை கிளறும்” என்ற பத்மினி அவனை போலவே கைகொட்டி கேலியாக சிரிக்கலானாள்.

அவளை ஒரு பார்வை பார்த்த கதிர்வேல் “என்ன பழிவாங்குறியா? வெறுப்பேத்துறியா? போடி போ… போய் நல்லா தின்னுட்டு தூங்கு”

“ஏன் நீ பட்டினியா படுத்து காலைல எங்க உசுர வாங்கவா. வா வந்து கொட்டிக்க” தங்களது பேச்சை இவன் கேக்கவே மாட்டான் என்ற கோபத்தில் அவனுக்கு சாப்பாடு எடுத்து வைக்க சென்றாள் பத்மினி. 

கதிர்வேலின் முகத்தில் சட்டென்று புன்னகை மலர்ந்து மறைந்தது. கதிர்வேலின் குடி பழக்கத்தால் சாப்பாடு போட மாட்டேன் என்று சரோஜா அடித்தாலும், பத்மினி மிரட்டி சண்டை போட்டாலும் ஒரு நாளும் கதிர்வேலின் வயிறை வாட விட்டதில்லை. அது அவனுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் அவனும் பிடிவாதமாக  குளிக்க செல்லாமல் சண்டை போட்டவாறு அமர்ந்திருந்தான்.

பத்மினி அழைத்ததும் லுங்கியை ஏத்தி கட்டியவன் பின் பக்கமாக செல்ல மணியும் வாலையாட்டியவாறு அவன் பின்னால் சென்றது.

பின் பக்கமிருந்த வாளியில் நிரம்பியிருந்த மழை நீரில் முகத்தை அடித்துக் கழுவியவன் சமையலறை வாசலிலையே அமர்த்துக் கொண்டான்.

எஞ்சியிருந்த சாதத்தை தட்டில் கொட்டி மீன் குழம்பை ஊற்றி அவன் முன்னால் “நங்” என்று சத்தம் வர வைத்த பத்மினி அவன் பத்தினியாக தண்ணீரும் கொண்டு வந்து வைத்தாள்.

“இதுக்கு ஒன்னும் குறைச்சலில்ல” என்பது போல் அவளை பார்த்தவன் “என்னடி இது ஒரே ஒரு மீன் துண்ட வச்சியிருக்க? மத்ததெல்லாம் எங்க?” தட்டில் கைவைக்காமல் கடுப்போடுதான் கேட்டான்.

“ஏன்டா நாடு இருக்குற நிலைமையை பத்தி உனக்கு தெரியாது? மீன் என்ன விலைல விக்கித்து? கால் கிலோ மீன் எவ்வளவு தெரியுமா? எதோ இன்னக்கி சனிக்கிழமைனு அத்த வரும் போது மீன் வாங்கிட்டு வந்திருச்சு. போற போக்க பாத்தா கருவாடு நெத்தலி மீன் கூட சாப்பிட முடியாம போகும் போல. ஒரு துண்டு மீனே நமக்கு பெரிய விஷயம். மூடிக்கிட்டு சாப்பிடு”

“ஆ… நாடும், நாட்டு மக்களும் நாசமா போகட்டும். மணி நம்ம குடும்பத்து பையன் இல்லையா? அவனுக்கு மீன் கொடுக்கல?” அவனை ஏக்கமாக பார்த்திருந்த மணியை இவன் பாவமாக பார்த்தான்.

“டேய்…டேய்.. நானும் பொறுமையா போகணும்னு பாக்குறேன் விடமாட்டேங்குற. மணி என்ன மாடா? பால் கொடுக்குதா? இல்ல வீட்டுக்கு சம்பாதிச்சுதான் கொடுக்குதா? நாய் தானே…”

“அடியேய்… மணிய நாய் னு சொல்லாத அவன் என் தம்பிடி…”

“தொம்பியாம் தொம்பி… உன்ன போலவே அதுவும் ஊற சுத்திட்டு நீ வரும் போதுதான் வீட்டுக்கு வருது. வீட்டையாவது காவல் காக்குதா? அதுக்கு நான் சோறு போடணுமா? எனக்கு இருக்குற கோவத்துக்கு ரெண்டு பேரையும் அடி வெளுத்துடுவேன்” கோபத்தில் சீறிப்பாய்ந்தாள். 

“சரி சரி பத்ரகாளியாகாத. ஊறுகாயாவது தா…” என்றவன் “என்ன மணி அண்ணி சொல்லுறது உண்மையா? வீட்டுல இருக்காம எங்கதான் போற? புதுஷா யாரையாவது சைட் அடிக்கிறியா என்ன?” சோற்றை பிசைந்து மீன் துண்டோடு நாய்க்கு வைத்தவன் ஊறுகாயோடு சாப்பிடலானான்.

பதமினிக்கு கதிர்வேலை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை. படிப்புதான் ஏறவில்லை. தேயிலை தோட்டத்தில் கூலி வேலைக்கு சென்று சம்பாதித்திருக்கலாம். பிடிக்கவில்லையென்றால் வேறு ஏதாவது ஒரு வேலையை தேடிக் கொண்டிருக்கலாம். எதுவுமே செய்யாமல் இப்படி எதுக்குத்தான் குடித்து சீரழிகின்றானோ.

அப்படியும் சொல்ல முடியாதே. அவனுக்கு யாரிடமும் கைகட்டி வேலை பார்ப்பது பிடிக்காது. ஆரம்பத்தில் வேலைக்கு சென்றவன் தான் ஏதாவது பிரச்சினை, பஞ்சாயத்து என்று ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தான்.

அதையும் ஒழுங்காக பார்த்தானா? பாடசாலைக்கு மாணவர்களை காலையில் அழைத்து செல்வதும், மதியம் அழைத்து வருவதும் குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டிய பொறுப்பான காரியம். இவனால் அதை கூட சரிவர செய்ய முடியாமல் ஆட்டோ உரிமையாளர் ஆட்டோவை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டார்.

சம்பாதிக்க வேண்டும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று எண்ணுபவன் போய் பேசி ஆட்டோவை வாங்கி ஓட்டியிருப்பான். கதிர்வேலோ விட்டது தொல்லை என்று வேறு வேலை தேடலானான்.

நிரந்தரமாக எந்த வேலையிலும் ஒரு வாரம் கூட இருக்க மாட்டான். அவன் சம்பாதிப்பதே குடிக்க மட்டும்தான். இவனை எப்படி வழிக்கு கொண்டுவருவது என்று புரியாமல் திண்டாடுவதுதான் பத்மினியின் வாழ்க்கையாக இருக்கிறது.

கதிர்வேல் இவளை கண்டு கொள்ளாது பத்மினி போட்ட சாப்பாட்டை சாப்பிட்டு எழுந்துதவன் வெளியே இருந்த வாளித் தண்ணீரிலையே கையை அலம்பி வாயையும் கொப்பளித்து விட்டு அணிந்திருந்த லுங்கியை தூக்கி வாயை துடைத்துக் கொண்டு பத்தமினி வைத்திருந்த செம்பிலிருந்த தண்ணீரை அருந்தினான்.

அவன் செய்கையை பார்த்திருந்தவளுக்கு கடுப்பாக இருந்தது. இவன் எதற்காக லுங்கி அணிகிறான் என்றே தெரியவில்லை. லுங்கிக்கு உள்ளே ஒரு அரைகால்ச்சட்டை. குடித்து விட்டு லுங்கியை ஏற்றிக் கொண்டு பாடியவாறே வருவதால் காற்சட்டை அணிகிறான் கூறிட முடியாது. அவன் ஆடையே அதுதான்.

சாப்பிட்டு விட்டு கை துடைப்பதும், வாய் துடைப்பதும், காலையில் முகம் கழுவி விட்டு முகம் துடைப்பதும் குளித்து விட்டு தலை துடைப்பதும் லுங்கியில் என்றால் படுக்கும் போது அவனது போர்வையும் கூட லுங்கிதான்.

“அட்டையை தூக்கி மெத்தைல வச்சாலும் அது காட்டுக்குத்தான் போகுமாம் அது மாதிரிதான் இவனும். திருந்தாத ஜென்மம்” முறைத்துப் பார்த்தவள் முகம் திருப்பலானாள்.

“என்னடி லுக்கு என்ன லுக்குனு கேக்குறேன்?”

“நல்ல கொட்டிக்கிட்டல்ல? போ… போய் தூங்கு” சமயலறைக் கதவை அடித்து சாத்தினாள் பத்மினி.

“வா மணி போலாம்…” இவன் முன்னால் நடக்க மணி பின்னால் நடந்தது.

பத்மினி கதிர்வேலை ஒதுக்கி வைத்திருப்பதால் அவன் வீட்டுக்குள்ளும் தூங்க மாட்டான்.

வீட்டுக்கு வெளியே  ஓலை கூரை போட்ட சுவரில்லாத விறகுகளை அடுக்கி வைக்க ஒரு கொட்டகை கட்டியிருந்தாள் சரோஜா.

விறகுகளுக்கு மேல் ஒரு மெத்தையை போட்டு அங்குதான் தூங்குவான் வேல்.

இவன் பின்னால் வந்தாலும் மணி அங்கு தூங்காமல் வராண்டாவில் தான் தூங்கும்.

“டேய் வீட்டுக்குள்ள வந்து தூங்குடா…” என்று சரோஜா பலமுறை கூறியும் அவன் கண்டுகொள்ளாது இங்குதான் தூங்குகிறான்.

அவனுடைய தர்ம பத்தினி பத்மினி அவனை ஒருநாள் கூட அழைக்கவில்லை. அவள் அழைத்தால் உள்ளே வருவானோ! என்னவோ!

தனது திருமணத்தில் நிகழ்ந்த குழப்பங்களுக்கு பதில் கிடைக்காமல் பத்மினி கதிர்வேலோடு சேர்ந்து வாழ எண்ணவும் மாட்டாள். அதனால் தான் அழைக்காமல் இருக்கின்றாளோ என்னவோ?

Advertisement