Advertisement

அத்தியாயம் 23

கதிர்வேலின் வீட்டிலிருந்து பையோடு கிளம்பிய சர்வேஷ் நேராக வந்தது சிறிசேன முதலாளியின் கடைக்கு. வீட்டில் நடந்தது செல்வாவுக்குத் தெரியாது.

அவனுடைய துணிப்பையையும் தள்ளிக் கொண்டு சர்வேஷ் கடைக்கு வந்து நின்றதும் செல்வா பதறிப் போனான்.

“என்ன ஆச்சு? தம்பி” நடந்தவற்றை கேட்டறிந்தவன் “இப்போ என்ன பண்ணுறது? இந்த ஊருல ரெண்ட்டுக்கு வீடு கிடைக்கிறதே குதிர கொம்பா இல்ல இருக்கு” வந்த காரியம் நிறைவேறாமல் சர்வேஷ் ஊர் திரும்ப மாட்டான் என்று செல்வாவுக்குத் தெரியாதா? அதுவும் அவன் இப்பொழுதுதான் லாவண்யாவோடு நன்றாக பேச, பழக ஆரம்பித்திருக்கின்றான். இந்த நேரத்தில் அவளை விட்டு ஊர் திரும்புவதா? முடியாது. முடியவே முடியாது அவன் மனம் துடிக்கலானது.

“ஏன் தம்பி அதான் இன்னும் ரூம் கட்ட நீங்க கொடுத்த காச உங்கண்ணா செட்டில் பண்ணலையே அதையே சாக்கா வச்சி நாம வீட்ட விட்டு போக முடியாது என்று அங்கேயே இருந்துடலாமே” என்றான் செல்வா.

செல்வாவை ஏகத்துக்கும் முறைத்தான் சர்வேஷ். தான் கொடுத்த பணத்தை கதிர் திருப்பிக் கொடுத்து விடக் கூடாது. தங்களுக்குள் எப்படியாவது உறவு நீடிக்க வேண்டும் என்றுதான் உடனே வெளியே வந்திருந்தான் சர்வேஷ்.

செல்வா கூறுவதை போல் பணம் கொடுத்தால் தான் வீட்டை விட்டு செல்வேன் என்று கூறினால் சரோஜா கூறியதை போல், கையிருப்பு, கடன் என்று பணத்தை முகத்தில் அடித்து துரத்தி விடுவார்கள். அதன்பின் அவர்கள் முகத்தில் கூட சர்வேஷால் முழிக்க முடியாது.

“யோவ் செல்வண்ணா கடுப்பேத்தாம கொஞ்ச நேரம் சும்மா இருயா” அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அமர்ந்து விட்டான் சர்வேஷ்.

“கொஞ்சம் இருங்க தம்பி வரேன்” என்று செல்வா கிளம்பி சென்று விட்டான்.

“என்னப்பா பிரச்சின? பெட்டி படுக்கையோடு எங்க கிளம்பிட்ட?” கடையிலிருந்து வெளியே வந்த சிறிசேன முதலாளி சர்வேஷை பார்த்து விசாரிக்கலானார்.

பிரச்சினையை முதலாளியிடம் கூறலாமா? கூறினால் தீர்வு கிடைக்குமா என்று சர்வேஷுக்கு தெரியாது. ஆனால் வாடகைக்கு வீடாவது கிடைக்கும் என்று தான் யார் என்ற உண்மையில் ஆரம்பித்து எதற்காக இங்கு வந்தேன் என்பதை சுருக்கமாக கூறினான் சர்வேஷ்.

“என்னப்பா சொல்லுற?” ஒருவன் பாசத்துக்காக ஏங்கி இவ்வளவு தூரம் வந்ததுமில்லாமல், இத்தனையும் செய்கின்றானா? என்று அவர் சர்வேஷை ஆச்சரியமாக பார்க்க,

“அது மட்டுமில்ல. எனக்கு உங்க பேத்தியை ரொம்பவே பிடிக்கும். கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு பிடிக்கும். அத அவ கிட்டயும் சொல்லிட்டேன். அவதான் எந்த பதிலும் சொல்லல” என்றான்.

சிறிசேன முதலாளி உள்ளுக்குள் அதிர்ந்தாலும் முகத்தில் காட்டாது, எந்த கேள்வியும் கேளாமல் அமைதியாகவே நின்றார்.

தனக்கும் சுரங்கணிக்கும் இடையில் என்னவெல்லாம் நடந்தது என்று சர்வேஷ் யாரிடமும் கூற எண்ணவில்லை. நடப்பவைகளை பார்க்கையில் அவளை பார்க்காமலையே ஊர் திரும்ப நேரிடுமோ என்ற அச்சம் சர்வேஷுக்கு வந்தது. அதனாலயே சிறிசேன முதலாளியிடம் உண்மையை போட்டுடைத்தான்.

இதை கேட்ட பின் முதலாளி நிச்சயமாக உதவி செய்ய மாட்டார். ஆனால் மனதுக்கு நிம்மதியாக இருந்தது. தான் இங்கிருந்து செல்ல நேர்ந்த பின் இவர் மூலமாக சுரங்கணிக்கு நான் யார் என்ற உண்மையும், இங்கிருந்து சென்று விட்டேன் என்ற உண்மையும் தெரிந்து விடும். அது போதும்.

தான் யார் என்ற உண்மை அறிந்த பின் சுரங்கணி இவனை இழந்து விட்டோமே, காதலிக்க தவறி விட்டோமே என்று எண்ணி வருந்த மாட்டாள். அவள் எடுத்த முடிவில் அவள் உறுதியாகத்தான் இருப்பாள்.

பணத்துக்காகவோ, பதவிக்காகவோ, அழகுக்காகவோ மயங்கும் மனம் கொண்டவாளல்ல அவள், மனம் மாறுபவல்ல அவள். 

உண்மையை சொல்வதே என் மனநிம்மதிக்காக. நான் எங்கே சென்றேன்? ஏன் சென்றேன் என்று அறியும் பொழுது நான் யார் என்ற உண்மையும் அறிய வரும். நான் யார் என்ற உண்மையை அறியும் உரிமை அவளுக்கும் உண்டு. சுரங்கணினியின் எண்ணங்களுக்குள் மூழ்கிப் போனான் சர்வேஷ்.

செல்வா அவசர அவசரமாக சென்றது லாவண்யாவின் வீட்டுக்கு. சென்றவன் பூட்டியிருந்த கதவை பலமாக தட்டியவாறு லாவண்யாவின் பெயரை கூறி அழைத்தான்.

என்ன? ஏதோ? என்று பதறியவாறே கதவை திறந்தாள் லாவண்யா.

“லாவண்யா என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா? இப்போ நீ மட்டும்தான் எங்களுக்கு இருக்க. உன்ன விட்டா உதவி செய்ய யாருமில்ல” என்றான் செல்வா.

வாடகைக்கு வீடும் கிடைக்காது. அறிந்தவர், தெரிந்தவர் என்று லாவண்யாவை தவிர இந்த ஊரில் யாரும் இல்லை. அவள் வீட்டில் தங்க முடியாது. தக்க காரணம் வேண்டும். அவளை திருமணம் செய்தால் மட்டும் தான் முடியும் என்று முடிவு செய்து காரண, காரியத்தை விலக்காமல் மொட்டையாக திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்டான்.

அதிர்ந்த லாவண்யாவோ என்ன பதில் சொல்வதென்று யோசிக்க அங்கே வந்து நின்றான் விக்னேஷ்.

“என்னடி நான் வந்தா மட்டும் என்ன துரத்தியடிக்கிற. எவனையோ கூட்டிவந்து கூத்தடிக்கிறியா?” கீழே கிடந்த விறகு கட்டையை எடுத்துக் கொண்டு செல்வாவை அடிக்க பாய்ந்தான் விக்னேஷ்.

அவனை பார்த்ததுமே அது விக்னேஷ் என்று புரிந்து கொண்ட செல்வா “டேய் தப்பா பேசாத. நான் லாவண்யாவை கல்யாணம் பண்ணிக்க போறேன்” என்றான் செல்வா.

சூழ்நிலையால் சுயநலமாக எடுத்த முடிவுதான். ஆனால் இப்பொழுது விக்னேஷை பார்த்ததும் அந்த முடிவு லாவண்யாவுக்காகவும், தனக்கானதாகவுமாக மாறி தனது முடிவில் உறுதியாக நின்றான் செல்வா.

“என்ன கல்யாணமா?” நக்கலாக சிரித்தான் விக்னேஷ்.

“யாரை அடிக்க பாக்குற? ஆமாண்டா நான் இவரைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். உனக்கென்ன வந்தது?” செல்வாவை அடிக்க விடாது அவனை மறித்து நின்றாள் லாவண்யா.

“பண்ணிடுவீய நீ. இவளை கல்யாணம் பண்ணிடுவியா நீ? தாலி கட்ட விட்டுடுவேனா? கொன்னுடுவேன்” என்று விக்னேஷ் எகிறிக் கொண்டு வர, எங்கிருந்தோ வந்த கட்டையொன்று அவன் தலையில் “தட்” என்று பட்டது.

“அம்மா” என்று விக்னேஷ் அலற,

“என்னடா எவ்வளவு அடிச்சாலும் திரும்ப திரும்ப வந்து நிக்கிற? வெக்கமே இல்லையா உனக்கு” கீழே இருந்த செங்கல் பாதியை எடுத்துக் கொண்டு மிரட்டினான் கதிர்வேல்.

கதிர்வேலை பார்த்ததும் நிம்மதியாக மென்னகை செய்த லாவண்யா “இவன் தொல்லை தாங்க முடியல கதிர். நான் கல்யாணம் பண்ணாத்தான் இந்த தொல்லை ஒழியும் போல. என் கல்யாணத்த நீதான் முன் நின்று நடாத்தி வைக்கணும்” என்றாள் லாவண்யா.

லாவண்யாவுக்கு உண்மையிலயே செல்வாவை திருமணம் செய்ய விருப்பம் இருக்கா இல்லையா? தெரியவில்லை. விக்னேஷிடமிருந்து தப்பிக்க செல்வாவை திருமணம் செய்துகொள்வதாக கூறினாளா தெரியவில்லை.

செல்வா திருமணம் செய்துகொள்ளலாமா என்று கேட்ட நேரம் விக்னேஷ் வந்ததால் இவளும் சம்மதம் கூறி விட்டாள்.

கதிர்வேல் அவளுக்கு பதில் சொல்லாமல் “டேய் விக்னேஷ் லயாவுக்குத்தான் உன்ன கல்யாணம் பண்ண இஷ்டமில்லையே. அதுவும் அவ அக்காவை கொடும செஞ்ச உன்ன அவ எப்படி கல்யாணம் பண்ணிப்பா? சூடு சொரணை இருக்கா உனக்கு? எவ்வளவு பட்டாலும் பத்தாதா?”

“டேய் நண்பனுக்கே உதவி செய்யாத நீ எல்லாம்…” பல்லை கடித்தவன் கதிர்வேலை அடிக்க ஓடி வந்தான்.

பக்க வாட்டிலிருந்து வந்த சர்வேஷ் விக்னேஷை தள்ளி விட்டு கதிர்வேலை காப்பாற்றினான்.

விக்னேஷ் வருவதை பார்த்த சிறிசேன முதலாளி சர்வேஷிடம் அவன்தான் விக்னேஷ் என்று கூறி இருக்க, லாவண்யாவுக்கு குடைச்சல் கொடுக்கத்தான் செல்கிறான் என்று சர்வேஷ் விரைந்து வந்து கதிர்வேலை காப்பாற்றினான்.

அதற்குள் விக்னேஷை பிடித்து அடிக்கலானான் கதிர்வேல்.

“சொந்த குடும்பத்துக்கே அநியாயம் பண்ணுறியா? நிர்மலாவைத்தான் கொடும படுத்தியே கொன்ன. லயாவயாச்சும் நிம்மதியா இருக்க விடு”

“நம்பிக்கை துரோகி. நண்பனுக்கே துரோகம் பண்ணுறியா? எவனையோ கட்டிக்கிட்டு இவ நிம்மதியா இருந்துடுவாளா? பாத்துக்கிறேன்டி” கதிர்வேலிடம் அடி வாங்க முடியாமல் லாவண்யாவை மிரட்டி விட்டு அங்கிருந்து ஓடிவிட்டான் விக்னேஷ்.

“இவரு சொந்த பொண்டாட்டியே ஏமாத்திகிட்டு இருக்காரு அது பரவாலயாம். ஊருக்கு மட்டும்தான் உபதேசம்” கதிர்வேலன் காதுபடவே கூறிய சர்வேஷ் செல்வாவை பார்த்து “நீ இங்க என்ன பண்ணுற?” எங்கே தங்குவது? அடுத்து என்ன செய்வது என்ற பிரச்சினை இருக்க, இதோ வருகிறேன் என்று சென்றவன் லாவண்யாவை பார்க்கவா வந்தான்? “சரிதான் அவனவனுக்கு அவனவன் பிரச்சினை” செல்வாவை பார்த்து முறைத்ததோடு சிரித்தான் சர்வேஷ்.

“டேய் கூத்தாடி என் வீட்டுக்கும் உனக்கும் தான் எந்த சம்பந்தமும் இல்லனு ஆகிருச்சே. என் விசயத்துல தலையிடாத. பாத்தல்ல. அவனுக்கு விழுந்ததுதான் உனக்கும்” சர்வேஷை அடிப்பேன் என்று மிரட்டினான் கதிர்வேல்.

“ஆமா இவர் கை நீட்டும் போது என் கை மட்டும் தடவி கொடுக்குக்குமா என்ன? நான் கராத்தே, ஜுடோ கத்து வச்சிருக்கேன். என் கிட்ட வாலாட்டினா வால ஒட்ட நறுக்கிடுவேன். அதான் தம்பியே இல்லனு சொல்லிட்டியே” பதிலுக்கு சர்வேஷும் கதிர்வேலை மிரட்டினான்.

“என் மேலயே கை வைப்பியா? எங்க வை பார்க்கலாம்” சட்டை கையை மடித்தவாறு சர்வேஷின் பக்கம் அடியெடுத்து வைத்தான் கதிர்வேல்.

“டேய் கதிர் என்னதான்டா உங்களுக்குள்ள பிரச்சினை? சீனியும், எறும்பும் போலதானேடா இருந்தீங்க” லாவண்யா புரியாமல் கேட்க,

“இப்போ நாம சித்தெறும்பா கடிக்கிறோமாம்” வளமை போல் நக்கலடித்தான் செல்வா.

லாவண்யா செல்வாவை செல்லமாக முறைக்கும் பொழுதே “ஏய் லயா என்ன நீ இவன போய் கல்யாணம் பண்ண முடிவு செய்திருக்க, முதல்ல இவன் யார் என்று தெரியுமா உனக்கு? எங்கிருந்து வந்தான்னு தெரியுமா உனக்கு? எங்கம்மா ஏமாந்தது போல நீயும் இவன நம்பி ஏமாந்துடாத” தந்தையின் மீதிருந்த மொத்த வெறுப்பையும் இவர்களின் மீது கக்கினான் கதிர்வேல். ஆனாலும் செல்வாவை பற்றி தப்பாக ஒரு வார்த்தியேனும் கதிர்வேலன் வாயிலிருந்து வரவில்லை.  

“என் பேரு செல்வா. நடிகர் சர்வேஷட மேனேஜர் நான். சர்வேஷட அப்பாதான் இதோ இந்த கதிர்வேலாட அப்பா. நாங்க எதுக்கு வந்தோம் என்று தெரிஞ்சி கிட்டாரா, அவரோட அப்பா சம்பந்தப்பட்ட யாரையும் பார்க்க பிடிக்காம எங்களையும் துரத்தியடிக்கிறாரு” பிரபு தான் சர்வேஷ் என்று கூறாமல் மொத்த கதையையும் லாவண்யாவுக்கு புரியும்படி கூறினான் செல்வா.

“என்ன?” லாவண்யா அதிர்ந்து விழித்தாள். சரோஜாவின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று ஓரளவுக்கு தெரியும். தந்தையின் மீது கதிர்வேலுக்கு இருக்கும் வெறுப்பும் தெரியும். லாவண்யாவின் வாழ்க்கையிலையே ஏகப்பட்ட பிரச்சினை. இதில் இவர்களின் பிரச்சினைக்கும் இவள் செல்வதா? புரியாமல் முழித்தாள் லாவண்யா.

“லாவண்யா நீ செல்வாவ கல்யாணம் பண்ணி சென்னைல எங்க கூட இருந்தா தான் விக்னேஷோட தொல்லை இல்லாம நிம்மதியா இருக்கலாம். இங்க இருந்தா கல்யாணம் பண்ணாலும் குழந்தையை கேட்டு பிரச்சினை பண்ணுவான்” என்றான் சர்வேஷ்.

சர்வேஷ் சொல்வது சரிதான். ஆண்கள் வேலைக்கு செல்லும் பொழுது லாவண்யாவையும், குழந்தையும் யார் பாதுகாப்பது. குழந்தை வளர்ந்து பாடசாலைக்கு செல்ல ஆரம்பிக்கும் பொழுது விக்னேஷ் குழந்தையை சந்திக்க முயற்சி செய்யாமலா இருப்பான்? இங்கே இருந்தால் பிரச்சினை ஓயாது.

இலங்கையோ குட்டி தீவு எங்கே இருந்தாலு தேடி கண்டு பிடித்து விக்னேஷ் விடாமல் வந்து விடக் கூடும். நாட்டை விட்டே சென்றால் தான் உண்டு என்று லாவண்யாவுக்கு தோன்றியது தான் கதிர்வேலுக்கும் தோன்றியது.

லாவண்யாவை திருமணம் செய்தால் இவர்கள் இங்கே தங்கி விடுவார்கள் என்று தன்னுடைய சுயநலத்துக்காக யோசித்து லாவண்யாவின் வாழ்க்கையை வீணடிக்கவும் முடியாது. அதற்காக செல்வாவுக்கு திருமணம் செய்து வைக்கவும் முடியாதே.   

“உன்ன எப்படி நம்புறது? லாய எனக்கு கூடப் பொறக்காத தங்கச்சிதான். கல்யாணம் பண்ணி கொடுத்தாலும் அவ நல்லா இருக்காளா? சந்தோசமா இருக்காளா? நிம்மதியா இருக்காளா னு தெரிஞ்சிக்கணும். அதுக்காக நீ எனக்கு போன் பண்ணி கொஞ்சுறது எனக்கு சுத்தமா பிடிக்கல” அதை சொல்லும் பொழுது சர்வேஷை முறைத்தவாறுதான் கூறினான் கதிர்வேல். சர்வேஷின் சகவாசம் வேண்டாம் என்ற முடிவில் தான் இருக்கின்றான். ஆனால் லாவண்யாவை விட்டுக் கொடுக்கவும் முடியாதே.

“யோ நான் எதுக்கு உன் கூட கொஞ்சிப் பேசப் போறேன். என் பொண்டாட்டி போனாப்போட்டு நல்லா இருக்கேன்னு சொன்னா நம்புறியா?” கடுப்பில் கத்தினான் செல்வா.

“டேய் இன்னும் கல்யாணமே ஆகலடா” சர்வேஷ் சிரிக்க,

“இதோ இன்னக்கி இப்போவே பண்ணிடுவேன். தங்க வீடு கூட இல்லையே” முணுமுணுத்தான் செல்வா.

“உன் அவசரத்துக்கெல்லாம் கல்யாணம் பண்ண முடியாது. போ… போய் ஊரு எல்லைல இருக்குற ரிசார்ட்ல தங்கிக்க, அதான் உங்க கிட்ட பணம் கொட்டிக் கிடக்கே” நக்கலடித்தான் கதிர்வேல்.

இவர்களின் பேச்சின் அர்த்தம் லாவண்யாவுக்கு சுத்தமாக புரியவில்லை. புரியாத மொழியை பேசுபவர்கை வேடிக்கை பார்ப்பது போல் நின்றிருந்தாள். அவள் திருமணம், அவள் வாழ்க்கை அவள் கையை மீறி செல்வது போல் அவளுக்கே தோன்ற கையை பிசைந்தாள்.

“ஏய் லயா இப்போ போறேன். நைட் வந்து உன் மாமா, அத்த கிட்ட கல்யாணத்த பத்தி பேசுறேன். அடுத்த முகூர்த்துலையே நம்ம கல்யாணம். கல்யாணத்துக்கு உனக்கு, ஹரிக்கு, இன்னும் யார் யாருக்கெல்லாம் என்னென்ன வாங்கணுமோ லிஸ்ட்டு போட்டு வை” கதிர்வேலை பார்த்தவாறே கூறிய செல்வா கிளம்பினான்.

நடந்த பிரச்சினையால் லாவண்யாவை திருமணம் செய்துகொள்ள செல்வா முடிவு செய்து விட்டானே. இனி அவன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றெண்ணியவாறு சர்வேஷ் நிம்மதியாக கூட நடந்தான். 

லாவண்யாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. அவளுக்கு செல்வாவை பிடித்திருந்தது. ஆனால் திருமணம் செய்ய எடுத்த முடிவு சரிதானா? அதுவும் தாய் நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு சென்று தன்னால் வாழ முடியுமா? அத்தையும், மாமாவையும் விட்டு செல்ல முடியாதே. ஹரியை கொடுக்க முடியாது என்று கூறி விட்டால், இந்த திருமணத்துக்கு அர்த்தமே இல்லையே. என்னன்னவோ லாவண்யா சிந்தித்துக் கொண்டிருந்தவள் அமுதாவும், பழனியும் வீட்டுக்கு வந்த பொழுது எதுவும் பேசாது அமைதியாக இருந்தாள். 

திருமணத்தை பற்றி பேச சர்வேஷோடு செல்வாவும் வந்து நிற்க, அமுதாவும், பழனியும் அவர்களை ஆச்சரியமாக பார்த்தனர்.

கொஞ்சம் நேரத்திலையே கதிர்வேலும், பத்மினியும் அங்கு வரவே அவர்களை எதிர்பார்க்காத சர்வேஷ் லாவண்யா தான் அவர்களை அழைத்திருப்பாள் என்று புரிந்து கொண்டான்.

செல்வா தன்னை பற்றிய உண்மைகளை கூறி பழனியிடம் பெண் கேட்க, பழனி யோசனைக்குள்ளானான்.

“யோசிக்க ஒண்ணுமில்ல. செல்வா நல்ல பையன் தான். உங்க பையன் தொல்லை இல்லாம லயா நிம்மதியா இருக்கணும் என்றா அவ இங்க இருந்து தூர போகணும்” என்றான் கதிர்வேல்.

திருமணத்தை நடக்க விடாமல் செய்வான் என்று நினைத்தால் இவனே திருமணத்தை நடக்க வழி செய்கிறானே. அவ்வளவு நல்லவனா இவன்? என்று செல்வா கதிர்வேலை பார்த்தான்.

சர்வேஷோடு எந்த சகவாசமும் வைக்கக் கூடாது என்று நினைத்தால் லாவண்யா-செல்வா திருமணத்தை நிறுத்தத்தான் பார்த்திருப்பான் கதிர்வேல். அவனுக்கு லாவண்யாவின் வாழ்க்கை முக்கியம். சர்வேஷிடம் வேலை பார்க்கும் ஒரே காரணத்துக்காக செல்வாவை வெறுப்பது சரியில்லை என்று புரிந்து கொண்டு இருவருக்கும் திருமணத்தை நடாத்தி வைக்க முடிவு செய்ததனால் பழனியிடம் அதற்கேற்றது போல் பேசினான்.

பழனிக்கு இதில் முழு சம்மதம். காலை ஆட்டியவாறு அமைதியா கேட்டுக் கொண்டிருந்தவன் கல்யாணத்தை எப்பொழுது வைத்துக் கொள்ளலாம் என்று கேட்டான்.

“என்னங்க… என்ன நீங்க கல்யாணத்த எப்போ வைக்கலாம் என்று கேக்குறீங்க? திடீர் என்று எப்படி கல்யாணம் பண்ணுறது? நமக்கு இருக்கிறதே இவ ஒருத்திதான். இவள விட்டு நாம எப்படி இருக்குறது? இவ குழந்தையை கூட்டிட்டு போய்டுவா. நமக்கென்று யார் இருக்கா?” அமுதா கவலையாக சொல்ல,

“நம்ம சுயநலத்துக்காக அவளுக்கு அமையிற நல்ல வாழ்க்கை வீணடிக்க முடியாது அமுதா” மனைவியை சமாதானப்படுத்தலானான் பழனி.

லாவண்யா எதுவும் பேசவில்லை. அவள் இரண்டு மனநிலையில் இருந்தாள். ஹரியை தன்னோடு வைத்துக்கொள்ள விடுவதே போதும் என்று இருந்தாள்.

திருமணத்தை எங்கே, எப்பொழுது வைத்துக் கொள்ளலாமென்று பழனியோடு கதிர்வேலும், செல்வாவும் பேசிக் கொண்டிருக்க, லாவண்யா பத்மினியோடு அவர்களுக்கு குடிக்க தேநீர் தயாரிக்க சென்றாள்.

அமுதா ஹரியை தூங்க வைத்துக் கொண்டிருக்க, சர்வேஷ் மெதுவாக நகர்ந்து சமயலறைக்கு வந்தான்.

சர்வேஷ் வீட்டை விட்டு வரும் பொழுது பத்மினி வீட்டில் தான் இருந்தாள். “எங்க போறீங்க? ஏன் போறீங்க?” என்று ஒரு வார்த்தைக்கு கூட பத்மினி கேட்கவில்லை.  

வீட்டில் நடந்தது அவளுக்கு தெரியுமா? தெரியாதா? அவள் குளிக்க சென்ற பொழுதுதான் கதிர்வேலோடு வாக்கு வாதம் ஏற்பட்டு சரோஜா வந்து பேசினாள்.

தெரியா விட்டால் என்ன? ஏது? என்று கேட்டிருப்பாள். தெரிந்தும் அமைதியாக இருக்கின்றாளா? அதை அவளிடமே கேட்கலாமென்று தான் சர்வேஷ் சமயலறைக்கு வந்தான்.

“ஏன் சரோஜா அம்மா வரல” லாவண்யா கொடுத்த டீயை வாங்கி கொண்ட சர்வேஷ் பத்மினி லாவண்யாவோடு வாசலுக்கு சென்று விடாது பேச்சுக் கொடுத்தான்.

“தலைவலி னு சொன்னாங்க” என்ற பத்மினி நழுவ பார்க்க, அவளுக்கும் டீயை கொடுத்த லாவண்யா சென்று விட்டாள்.

காலையில் நடந்த பிரச்சினையால் இரவாகியும் சரோஜாவுக்கு தலை வலியா?  அல்லது பழைய ஞாபகங்களால் மனம் துவண்டு விட்டாளா தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் லாவண்யாவின் திருமணத்தை பேச வராமல் இருக்க காரணம் தான் தான் என்று சர்வேஷுக்கு புரிந்தது. 

“நாங்க வீட்டை விட்டு வந்துட்டோம். நீங்க ஒரு வார்த்த கேட்கல” வீட்டை விட்டு வந்தது தெரியுமா? தெரியாதா? ஏன் வந்தோம் என்றெல்லாம் சர்வேஷ் காரணம் கூறவில்லை சட்டென்று கேட்டு விட்டான்.

“கதிர் அவங்கப்பாவால எவ்வளவு மனஉளைச்சலுக்கு ஆளானான் என்று கூட நின்னு பார்த்தவ நான். அவர் சம்பந்த பட்ட எதையும், யாரையும் பார்க்கவோ, பேசவோ, நாங்க விரும்பல. நீங்க எங்களை ஏமாத்தி வீட்டுல தங்கி இருந்தீங்க. உங்க பணத்தை லாவண்யா கல்யாணம்மண்ணைக்கு கதிர் கொடுத்துடுவான்” என்றவள் டீ கப்பை கழுவலானாள்.

“அப்போ காலைல என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியும். யாரும் சொல்லி நீங்க தெரிஞ்சிக்கல. அங்கதான் இருந்திருக்குறீங்க. அப்படித்தானே” சர்வேஷ் சந்தேகப்பட்டது சரிதான். அதை உறுதிப்படுத்திக் கொள்ளத்தான் மீண்டும் கேட்டான்.

“ஆமா நான் அங்கதான் இருந்தேன். நீங்க ரெண்டு பேரும் பேசியதெல்லாம். எல்லாமே கேட்டேன்” என்றவள் சர்வேஷை உத்துப் பார்த்தாள்.

குளிக்க சென்ற பத்மினி சோப் தீர்ந்ததென்று எடுக்க வந்த பொழுதுதான் சர்வேஷ் மற்றும் கதிர்வேலன் பேச்சை கேட்டிருந்தாள். இவள் அதிர்ந்து நிற்க, சரோஜா அங்கே சென்று பேசியிருந்தாள்.

பத்மினி எல்லாமே என்றது கதிர்வேல் ரமேஷுக்கு போதை மருந்து கொடுத்ததையும் தான் என்று புரிந்து கொண்ட சர்வேஷ் அதிர்ச்சியாக அவளை பார்த்தான்.

“அண்ணன் தான் போதை மருந்து கொடுத்தான் என்று தெரிஞ்சும் நீங்க அமைதியாக இருக்குறீங்கன்னா நீங்க அவன மன்னிச்சிட்டீங்க என்று புரியுது. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தாலே போதும்” என்றான்.

“உண்மை தான். கதிர் என்ன விரும்புறான். என்ன விட்டுக் கொடுக்க முடியாமத் தான் கல்யாணத்த நிறுத்த ரமேஷுக்கு போதை மருந்து கொடுத்தான். கதிர் தப்பே பண்ணாலும் எனக்கு நல்லது தான் பண்ணான். நான் தான் அவன புரிஞ்சிக்காம இருந்துட்டேன். என் கிட்ட சொல்லிடுவேன்னு அவன் சும்மா சும்மா மிரட்டுற வேலைய வச்சிக்காதீங்க” என்று விட்டு பத்மினி விறு விறுவென வாசலுக்கு சென்றாள்.

“பார்டா. இவங்களுக்கு நல்லது பண்ண நினச்சா. என்னையே வில்லனாகிட்டாங்க. நல்லா இருங்க” சிரித்தவாறே வாசலுக்கு வந்தான் சர்வேஷ்.  

அவனுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. பத்மினிக்கு உண்மை தெரிந்தாலும் அவள் கதிர்வேலிடம் ஒரு வார்த்தையேனும் கேட்டிருக்கவில்லை. அதற்கு காரணம் இப்பொழுது அவள் அவனை புரிந்து கொண்டு, மன்னித்து விட்டாள். அது மட்டுமா? காதலிக்கவும் செய்கிறாள்.

கதிர்வேல் நல்லவன் தான் ஆனால் பத்மினியிடம் அவனே உண்மையை கூறி மன்னிப்புக் கேட்டிருக்கலாம். இனிமேல் எந்த காரணத்துக்காகவும் கதிர்வேல் யார் முன்னிலையிலும் தலைகுனியாக் கூடாது என்று பத்மினி பிடிவாதமாக இருக்கின்றாள். அது அவளானாலும் சரியே. அதனால் தான் அவள் அவனிடம் எதுவுமே கேட்கவில்லை. 

செல்வா-லாவண்யா திருமணத்தை அடுத்த முகூர்த்தத்தில் நடத்தலாமென்று தீர்மானம் செய்து, ஆளாளுக்கு கல்யாண வேலையை பார்களாயினர். 

Advertisement