Advertisement

அத்தியாயம் 22

“டேய் கதிரு என்னடா சொல்லுற? இவன் அந்தாளு புள்ளையா?” சர்வேஷும், கதிர்வேலும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு அதிர்ந்து கையிலிருந்த பாத்திரத்தையும் கீழே போட்டு உடைத்த சரோஜா அவர்களின் அருகே ஓடி வந்தாள்.

கதிர்வேல் தான் ரமேஷுக்கு போதை மருந்து கொடுத்தான் என்பதும் சரோஜாவின் காதில் விழுந்தது. ஆனால் அதை விட அதிர்ச்சியான செய்தி சர்வேஷ் அவளது கணவனின் மகன் என்பது தானே. அதைத்தான் சரோஜா கேட்டாள்.

“எதுக்காக நீ எங்க வீட்டுக்கு வந்த? எந்த நோக்கத்தோடு வந்த? அவருக்கும் எனக்கும் இடைல எந்த சம்பந்தமும் இல்ல. நீ கிளம்பு” சர்வேஷை பார்க்காமலே சொன்னாள் சரோஜா.

ராஜ்பிரபுவின் மீதிருந்த கோபம் சர்வேஷின் மீது வைத்திருக்கும் பாசத்தை ஜெயித்திருக்க, சர்வேஷை வீட்டை விட்டு செல்லுமாறு கூறினாலும் எங்கே அவனை பார்த்தால் பாசம் தலை தூக்குமோ என்று சரோஜா சர்வேஷை பார்க்க மறுத்தாள். 

“அம்மா… நான் இங்க அப்பா சொல்லி வரல. அவருக்கு இன்னொரு குடும்பம் இருக்கு. எனக்கொரு அண்ணன் ஒருத்தன் இருக்கான் என்று தெரிஞ்ச அடுத்த நொடியே இங்க வரணும், உங்கள எல்லாரையும் பார்க்கணும் என்று வந்துட்டேன். நான் வந்தது அப்பாக்கு தெரியாது. அம்மா கிட்ட சொல்லிட்டுதான் வந்தேன்” என்றான்.

எது உண்மையோ அதைத்தான் சொன்னான். தான் இவர்களின் பாசத்தை மட்டுமே எதிர்பார்த்து வந்தேன் என்பதை சரோஜா புரிந்துகொள்ள வேண்டுமே அதனால் அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டியதை சொல்லி விட்டான்.

“ஏன்டா சொல்லிட்டு வந்த சொல்லாம வந்த என்று பேசிகிட்டு இருக்க. நீ இங்க எதுக்கு வந்த என்று சொல்லேன். அம்மாவும் கேட்கட்டும்” நக்கலாகவே கூறினான் கதிர்வேல்.

நீங்க ஏழைகள். பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறீங்க. ஒழுங்கான வீடு இல்லை. வீடு கட்டிக் கொடுத்து எல்லா வசதியும் செய்து கொடுக்க வந்தேன் என்று சர்வேஷ் கதிர்வேலிடம் கூறியதாக கதிர்வேல் கூறியதைத்தான் சரோஜாவிடம் கூறச் சொன்னான்.

அது சர்வேஷுக்கும் புரிந்தது. தான் உதவி செய்ய நினைத்தால், இப்படி அது தன்னையே தாக்கும் என்று அவன் நினைக்கவில்லையே.

“உங்க கூட இருக்கணும். எனக்கு வேற வழியும் தெரியல. அதுக்காகத்தான் வாடகைக்கு வீடு கேட்டு வந்தேன். அறைய கட்டி குடி வந்து அப்படியே உங்க வீட்டையும் கட்டிக் கொடுக்கலாம் என்று நினச்சேன்” என்றான் சர்வேஷ்.

அதுதான் உண்மை. அவன் அவ்வாறுதான் நினைத்தான். தான் யார் என்ற உண்மையை சரோஜா அறிந்து கொண்ட பின் தான் வந்த நோக்கத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லையென்று கூறி விட்டான்.

அவ்வளவுதான் சரோஜாவுக்கு எங்கிருந்துதான் கோபம் வந்ததோ தெரியவில்லை. சர்வேஷை அறைந்து விட்டாள்.

அதை சர்வேஷ் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியில் கன்னத்தில் கை வைத்திருந்தான். 

“இது இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்” என்று சிரித்துக் கொண்டிருந்தான் கதிர்வேல்.

“அந்தாளு சங்காத்தமே வேணாம்னு தானேடா நானே இருக்கேன். அந்தாளு புள்ள நீ இங்க வந்ததும் இல்லாம பொய் சொல்லி எங்க கூட தங்கி இருக்க. ஆமா எங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க சொல்லி நாங்க கேட்டோமா? நீ யாரு எங்களுக்கு காசு செலவு செய்ய? உன் அப்பன் காசும் வேணாம். உன் ஆத்தா காசும் வேணாம். உன் காசும் எங்களுக்கு வேணாம். ரொம்ப நல்லவன் போல பேசி இப்படி ஏமாத்திட்டியே. இப்போவே நீ இடத்தை காலி பண்ணுற” என்ற சரோஜா “கதிரு அறைய கட்ட எவ்வளவு செலவாச்சு என்று எழுதி வச்சிருக்கேன். ஒரு ரூபா குறையாம நீ சேர்த்து வச்ச காச எடுத்து கொடு. பத்தலையா கடன உடனே வாங்கியாச்சும் கொடுத்து இவன ஊருக்கு அனுப்பிடு” என்றவளுக்கு கோபம் அடங்கவே இல்லை. “என்ன? என்னைய சூடு, சொரண இல்லாதவ என்று நினைச்சிட்டியா?”

“அம்மா… நான் பொய் சொன்னேன் தான். எதுக்கு சொன்னேன்? உங்களுக்கு நல்லது பண்ணனும் என்று தானே. நான் உங்களுக்கு ஏதாவது கெடுதல் பண்ணியிருக்கேனா? உங்க கிட்ட நான் எதிர்பார்த்தது உங்க அன்பு மட்டும் தானே.

உங்களுக்கும் அப்பாக்கும் இடையில என்ன நடந்தது என்று எனக்குத் தெரியல. நான் என் அண்ணனை பார்க்கணும், அவன் கூட இருக்கணும் என்று தான் வந்தேன்” என்றான் சர்வேஷ்.

“கிளம்பு, கிளம்பு சென்டிமென்ட்டா பேசி அம்மா மனச கலைக்க பாக்குறியா?” சர்வேஷின் நெஞ்சில் கை வைத்து வீட்டை விட்டு வெளியேறுமாறு தள்ளினான் கதிர்வேல்.  

“கொஞ்சம் இருப்பா…” சர்வேஷை நிறுத்திய சரோஜா “நீ பாசமா உனக்கொரு அண்ணன் இருக்கான்னு தெரிஞ்சிக்கிட்டு வந்தன்னு சொல்லுற. இது உன் அப்பாக்கு தெரியலனு சொல்லுற. நீ சொல்லுறது உண்மை தான். தெரிஞ்சிருந்தா நிச்சயமாக உன் அப்பா உன்ன இங்க அனுப்பியிருக்க மாட்டாரு.

பாசத்துக்காக வந்த உன் கிட்ட பணம் வாங்க என்னாலயும் முடியாது. நீ செலவு பண்ண மொத்த பணத்தையும் எடுத்துக்கிட்டு போய்டு”

இத்தனை மாதங்களாக சர்வேஷ் இந்த வீட்டில் இருந்திருக்கின்றான். அவன் எவ்வாறு நடந்து கொண்டான். என்ன எதிர்பார்த்து இங்கே தங்கியிருந்தான் என்று சரோஜாவால் புரிந்துகொள்ள முடியாதா?

அவன் பேசிய பின் ராஜ்பிரபுவின் மேலிருந்த கோபத்தில் இவனை அடித்து விட்டோமே என்று உணர்ந்து கொண்டவள் பாசமாக வந்தவனின் மனதை நோகடிக்க வேண்டாமென்று கோபமாக சொன்னதையே பொறுமையாக சொல்லி அவனை அனுப்பி வைக்க முயன்றாள்.

“அன்று அண்ணனும் இதைத்தான் சொன்னான். நீ வந்தது அப்பாவுக்கு தெரியுமா என்றுதான் கேட்டான். இன்று நீங்களும் அப்பாக்கு தெரிஞ்சா கண்டிப்பாக என்னை இங்கே அனுப்பியிருக்க மாட்டார் என்று தான் சொல்லுறீங்க. அப்படி என்னதான் உங்களுக்குள்ள நடந்தது?” இன்று இதை தெரிந்து கொண்டேயாக வேண்டும் என்று சரோஜாவை பார்த்தான் சர்வேஷ்.

தன் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவத்தை மீண்டும் நினைவு கூறுவதே வேதனையை மட்டும் தான் கொடுக்கும். அதை சர்வேஷ் கேட்ட உடன் கூறி விடுவாளா சரோஜா? எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள். 

அவள் அமைதியை பார்த்தே அவனுக்கு பதில் கிடைக்காது என்று புரிந்தது. ஆனால் நடந்ததை அவன் அறிந்து கொண்டேயாக வேண்டுமல்லவா. தந்தையிடம் கேட்கலாம். அவர் கூறினாலும் சரோஜாவின் பக்கமிருக்கும் நியாயம் புலப்படுமா? சந்தேகம் தான்.

“சரி நான் இங்க இருக்க வேணாம்னு சொல்லுறீங்க, பணத்தையும் கொடுக்கிறதா சொல்லுறீங்க. நீங்க சொல்லுறபடியே நான் செய்யிறேன். ஆனா எனக்கு பதில் வேணும். உங்களுக்கும் அப்பாகும் என்னதான் பிரச்சினை? உங்கள விட்டுட்டு அப்பா எதுக்கு எங்கம்மாவ கல்யாணம் பண்ணிகிட்டாரு” நீ பதில் சொன்னால் தான் நான் இங்கிருந்து போவேன் என்று உறுதியாக கூறி, வெளியே அடுக்கியிருந்த செங்கற்களின் மேல் அமர்ந்து கொண்டான்.

“அத போய் உங்கப்பன் கிட்ட கேட்க வேண்டியது தானேடா… என் அம்மாகிட்ட எதுக்கு கேக்குற? இடத்த காலி பண்ணுடா” தன்னுடைய முகத்திரையை கிழிப்பேன் என்ற சர்வேஷின் முகத்திரை கிழிந்ததில் தெனாவட்டாக பேசியது மட்டுமல்லாக குரலை வேறு உயர்த்தி பேசியவாறு சர்வேஷை இழுத்து நிறுத்த முயன்றான் கதிர்வேல்.

“டேய் கதிர் எதுக்கு இப்போ நீ இப்படி நடத்துகிற?” கதிர்வேலை பிடித்து இழுத்த சரோஜா “என்னப்பா உனக்கு இப்போ உண்மை தெரிஞ்சாகனுமா? உண்மை தெரிஞ்சிகிட்ட பிறகு இங்க இருந்து கிளம்பிடுவியா?”

சர்வேஷ் பிடிவாதமாக அமர்ந்து விட்டதில் சரோஜாவும் உண்மையை கூற முடிவு செய்து விட்டாள். உண்மையை சொல்வதில் அவள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. அவள்தான் எந்த தப்பும் செய்யவில்லையே. உண்மையை அறிந்து கொண்ட பின்னும் சர்வேஷ் இங்கிருந்தே செல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கக் கூடாதே. அதற்காத்தத்தான் அவனிடம் உறுதி மொழி வாங்கலானாள் சரோஜா.

“என்னமா நீ. இவன் கேட்டதற்காக நீ நடந்தத சொல்லனுமா? அத சொல்லி உன் மனசுதான் கஷ்டப்படும்” சரோஜாவை தடுத்த கதிர்வேல் சர்வேஷை துரத்த முயன்றான்.

“டேய் இருடா… இவ்வளவு தூரம் வந்திருக்கான். போய் உங்கப்பா கிட்ட கேட்டு அவர் என்னத்த சொல்வாரோ, என்ன நடந்தது, நம்ம பக்க நியாயத்தையும் தெரிஞ்சிக்கட்டுமே” என்று கதிர்வேலை சமாதானப்படுத்தினாள். ஆனால் அதை விட பாசத்தை எதிர்பார்த்து வந்த சர்வேஷோடு எந்த உறவையும் வைத்துக்கொள்ள சரோஜாவுக்கு இஷ்டமில்லை. உண்மையை அறிந்த பின் நிச்சயமாக சர்வேஷ் இவர்களை நாடி, தேடி வர மாட்டான் என்று தான் உண்மையை கூற முடிவு செய்தாள்.

கல்யாணம் முடிஞ்ச கையோட என்ன இந்தியாகு கூட்டிட்டு போறதாகத்தான் சொன்னாரு. ஆனா கதிர் உண்டானதால இங்கயே இருந்துட்டேன். இந்தியா போன அவர் மாசக் கணக்கா அங்கதான் இருப்பாரு. அவருக்கு அங்கதான் வேல என்று நானும் எதுவும் கேட்கல.

கதிரோட மொத பொறந்த நாளைக்கு கூட வராதவர், கல்யாணநாளைக்கு வந்திருக்கார் என்று சந்தோஷப்பட்டேன். ஆனா…

“சரோஜா இந்த பத்திரத்துல ஒரு கையெழுத்து போடுட்டுக் கொடு” வீட்டுக்குள் நுளைந்தவாறே கேட்டான் ராஜ்பிரபு.

“நேத்து கல்யாணநாள் அதுவுமா காலைல போனவரு. இப்போதான் வாறீங்க. முதல்ல சாப்பிடுங்க. குளிக்கிறதா இருந்தா குளிச்சிட்டு வாங்க. சாப்பிடலாம். ரெஸ்ட் எடுங்க. இத அப்பொறம் பார்த்துக்கலாம்” இன்முகமாக கணவன் கொடுத்த பத்திரத்தை வாங்கிக் கொண்ட சரோஜா அதை மேசையின் மீது வைக்கப் போனாள்.

“உனக்கு ஒருதடவ சொன்னா புரியாதா? எனக்கு ஒரு மண்ணும் வேணாம். முதல்ல இந்த பத்திரத்துல சைன் பண்ணு” கோபமாக கர்ஜித்தான் ராஜ்பிரபு.

ராஜ்பிரபு எதற்காக கோபப்படுகிறான் என்று புரியாத சரோஜா ஒரு கணம் பயந்து விட்டாள்.

தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தை எழுந்து விடப் போகிறது என்று அறைக் கதவை சாத்தியவள் “கதிரோட மொத பொறந்த நாளைக்கு கூட நீங்க ஊருல இருந்தீங்க. கல்யாணநாள்ல கூட நாம ஒண்ணா இல்ல. இப்போ என்ன இந்த பத்திரத்துல கையொப்பம் போடணுமா? போட்டுடுறேன். இன்னக்கி எங்கயும் போகாம வீட்டுல இறீங்க” வெளியே சென்று வரும் கணவனுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும். அந்த கோபத்தில் கத்தி விட்டார் என்றெண்ணி, கணவனின் கோபத்தை தணிக்க கையொப்பமிட ராஜ்பிரபுவின் சட்டைப்பையிலிருந்த பேனாவை எடுத்தாள்.

ராஜ்பிரபு சரோஜாவை பாத்திருந்தானே ஒழிய எதுவுமே சொல்லவில்லை.

“ஆமா இது என்ன பத்திரம்?” என்றவாறு சரோஜா கையொப்பமிட குனிந்தாள்.

ஆங்கிலம், தமிழ், சிங்களம் என்று மூன்று மொழியிலும் எழுத்துக்கள் இருந்தாலும் எதையும் படிக்காமல் கணவன் மீதிருந்த நம்பிக்கையால் கையொப்பம் என்ற இடத்தில் பேனாவை வைத்திருந்தாள் சரோஜா.

“விவாகரத்து பத்திரம்” என்றான் ராஜ்பிரபு.

“என்ன?” நம்பாத பார்வையை ராஜ்பிரபுவின் மீது வீசியவள் பத்திரத்தை புரட்டிப் பார்த்தாள்.

தமிழில் விவாகரத்து பத்திரம் என்று இருந்ததால் கணவன் விளையாடவில்லை என்று புரிந்து கொண்டவள் “என்னங்க இது?” அதிர்ச்சியையும் தாண்டி கோபமாக கேட்டாள்.

ஆறு வருடங்களுக்கு முன் தான் ராஜ்பிரபு சினிமா படப்பிடிப்புக்காக இந்த ஊருக்கு வந்திருந்தான். தேயிலை பறிக்க செல்லும் பெண்கள், தேயிலை பறிக்கும் பெண்கள் என்று இயற்கை காட்சிகளாக படம் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் சரோஜாவை பாத்தான்.

கேமரா வழியாகவே பார்த்திருந்தவனுக்கு அவளே வந்து பேசியதும் மனதில் காதல் ஊற்றெடுத்தது.

“என்ன சார் வளச்சு வளச்சு எங்களையே எடுக்குறீங்க. நாங்களும் படத்துல வறோமா?”

கூடியிருந்த பெண்கள் கூட்டம் “கேளுடி கேளுடி” என்று சரோஜாவை முன்னாடி தள்ளியதில் வாயாடியான சரோஜா கேட்டிருந்தாள்.

“ஏன் வராம. ஆனா அது நீங்கதான் என்று தெரிய மாட்டீங்க” என்று சொல்லிச் சிரித்தான் ராஜ்பிரபு.

“அப்போ எதுக்கு எங்களை போட்டோ புடிக்கிறீங்க? மூஞ்சி தெரியாம ஒரு படம்” சரோஜா ராஜ்பிரபுவை நக்கலடிக்க ஆரம்பிக்க, அவன் அதை பற்றி விளக்கலானான்.

சரோஜாவை பிடித்திருந்த ஒரே காரணத்துக்காக அவளை சந்திக்கவும், பேசவும் சந்தர்ப்பங்களை அமைத்துக் கொண்டான் ராஜ்பிரபு.

ஒருநாள் அவனே அவளிடம் அவளை விரும்புவதாக கூற வாய் விட்டு சிரித்தவள் “உங்க படத்துல இப்படி ஏதாச்சும் காட்ச்சி வைக்க போறீங்களா? அது எப்படி சினிமால மட்டும் பட்டுனு காதல் வருது? இதெல்லாம் நடைமுறைக்கு சரிவராது” என்று விட்டு சென்றாள்.

தான் கூறியதை புரிந்து கொண்டு அவள் பதில் கூறினாளா? அல்லது புரியாமல் பதில் கூறினாளா ராஜ்பிரபுவுக்கு புரியவே இல்லை. அவளை திருமணம் செய்துகொள்வதுதான் ஒரே வழியென்று சரோஜாவின் சகோதரன் நல்லதம்பியிடமே சரோஜாவை திருமணம் செய்துகொள்ள கேட்டான்.

நல்லதம்பி சந்தோசமாக சம்மதம் சொன்னாலும், அக்காவிடம் கேட்க வேண்டும் என்று சரோஜாவிடம் பேசினான்.

“அது சரிப்பட்டு வராதுடா. எனக்கிருக்குறதே நீ மட்டும்தான். கல்யாணம் பண்ணி நான் அங்க போய்ட்டா உனக்கு யார் இருக்கா?”

“வேண்டாம் என்று சொல்ல இதுதான் காரணமா? கல்யாணமான பிறகு நீ மட்டுமல்ல உன் தம்பியும் நம்ம கூடவே இருக்கலாம். அவனுக்கு ஒரு நல்ல வேலைய நான் தேடிக் கொடுக்குறேன்” நல்லதம்பியின் பின்னால் வந்திருந்த ராஜ்பிரபு சரோஜாவை சம்மதிக்க வைக்க முயன்றான்.

“இல்ல சார் உங்க வீட்டுல…” சரோஜா மறுக்க

“எனக்குன்னு யாருமில்ல. நீயும், உன் தம்பியும் தான் என் குடும்பம்” என்று பேசியே அவளை திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தான்.

திருமணமும் முருகன் கோவிலில் எளிமையாக நடந்தேறியது. படப்பிடிப்பு முடிந்த பின் அனைவரும் இந்தியா செல்ல முடிவு செய்திருக்க, சரோஜா கருவுற்றாள்.

இந்த நிலையில் அவள் பயணம் செய்யக் கூடாதென்று ராஜ்பிரபு மட்டும் இந்தியா சென்றான்.

பட வேலைகளை முடித்துக் கொண்டு மனைவியை காண வரலாம் என்றிருந்த ராஜ்பிரபுவை அணுகினார் லால் பிரகாஷ்.

தனது பணம், சொத்து எல்லாமே தனது ஒரே மகளான லட்சுமிக்கு என்றும், தன்னுடைய ஒரே மகளான லட்சுமிக்கு ராஜ்பிரபுவை ரொம்பவே பிடித்திருப்பதாகவும், தன்னுடைய மகளை திருமணம் செய்து கொண்டால் ராஜ்பிரபுவின் சொந்த வாழ்க்கை மட்டுமல்ல சினிமா வாழ்கை அந்தஸ்திலும், வாழ்க்கை தரத்திலும் உயர்ந்து விடும் என்று பேச ராஜ்பிரபு அமைதியாகத்தான் இருந்தார்.

அதற்கு பின் எப்படி ராஜ்பிரபுவின் மனம் மாறியது என்று தெரியவில்லை. உடனே லட்சுமி தேவியை திருமணம் செய்து கொண்டான்.

அதனால் தான் கதிர்வேலின் முதலாவது பிறந்த நாளைக்கு கூட ராஜ்பிரபு இருக்கவில்லை.

லட்சுமி தேவியை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த நொடியே சரோஜாவை விவாகரத்து செய்ய முடிவு செய்து விட்டான்.

அதற்கான வேலைகளை பார்க்க இலங்கை வந்தவன் வீட்டுக்கு வந்து கல்யாணநாளென்றும் பாராமல் தேவையான பத்திரங்களோடு வெளியேறி சென்று மறுநாள் காலையிலையே வந்தவன் சரோஜாவிடம் விவாகரத்து பத்திரத்தில் கையொப்பம் கேட்கலானான்.

சரோஜாவை ஏமாற்ற ராஜ்பிரபு நினைக்கவில்லை. ஏமாற்ற நினைத்திருந்தால் அவள் கையொப்பம் போட போகும் பொழுது அது விவாகரத்து பத்திரம் என்று கூறியிருக்க மாட்டானே.    

சரோஜாவுக்கு அப்படியொரு கோபம் வந்தது. திருமணம் என்ன விளையாட்டா? தனக்கு யாருமில்லை. அது, இது என்று உணர்வுபூர்வமாக பேசி திருமணம் செய்து கொண்டு, இப்பொழுது விவாகரத்து கோரினால் கோபம் வராதா?

“என்ன இது? நான் என்ன தப்பு பண்ணேன்னு இப்போ என்னக்கு விவாகரத்து கொடுக்க போறீங்க?”

“நீ எந்த தப்பும் பண்ணல. என்னாலதான் உன் கூட இனி வாழ முடியாது” என்றான் ராஜ்பிரபு.

“அப்படினா நீங்க ஏதாவது தப்பு பண்ணினீங்களா?”

“நான் எந்த தப்பும் பண்ணல. எனக்கு எது சரியென்று தோணுதோ அதைத்தான் செய்யிறேன்”

“எது சரி என்ன விவாகரத்து செய்யிறதா? அப்போ நம்ம பையன்?”

“உன்னால பையன வளர்க்க முடியாது என்றா நான் என் கூட கூட்டிட்டு போறேன்”

“போய்” கோபமாக முறைத்தாள் சரோஜா.

“ஏதாவது ஒரு அநாதை ஆசிரமத்துல சேர்த்துடுவேன். சேர்த்து நானே பார்த்துப்பேன்” என்றான் ராஜ்பிரபு.

“என்னது பெத்த பையனையே அநாதை  ஆசிரமத்துல சேர்பியா?” ராஜ்பிரபுவின் சட்டையை பிடித்து உலுக்கிய சரோஜா “உனக்கு ஏதாவது தீராத நோய் இருக்கும். அதனாலதான் என்ன விவாகரத்து செஞ்சிட்டு எங்களை விட்டு விலக்கிப் போகப்போறன்னு நினச்சேன். ஆனா நீ… சொல்லுயா உண்மைய சொல்லு. என்ன காரணம்” வெறி பிடித்தவள் போல் கத்தினாள் சரோஜா.

அவளை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தியவன் “மனுசனா பொறந்தவன் வாழ்க்கைல தவிர்க்க முடியாத தப்புக்களை செய்வான். அப்படி நான் பண்ண தப்புதான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டது.

உன் ஏழ்மை கூட பிரச்சினை இல்ல. அழகா அலங்கரிச்சு உன்ன நான் பழகுற மக்கள் மத்தில கூட்டிட்டு போலாம். படிப்பறிவில்லாத, இங்கிலிஷ் ஒரு வார்த்த கூட ஒழுங்கா பேசாத தெரியாத உன்ன கூட்டிகிட்டு போய் சபைல விட்டா, உன்னாலதான் எனக்குத் தலைகுனிவு.

அசிங்கப்படவும், அவமானப்படவும் என்னால முடியாது. எனக்கு பெர்பெக்ட்டான வைப் வேணும். அது நீ இல்ல”

“ஒஹ்.. ஓஹ்.. தொரைக்கு வெள்ளத் தோலோட, இங்கிலீசு பேசுற பொண்டாட்டிதான் வேணுமோ? அப்போ எதுக்கு என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தையையும் பெத்துக்கிட்டீங்க?” கோபம் கனன்றாலும் கணவன் தன்னை விட்டுச் செல்வதில் உறுதியாக இருக்கின்றான் என்று புரிய சரோஜாவின் கண்கள் கலங்கி கண்ணீர் எட்டிப் பார்த்திருந்து.

“அதான் சொன்னேனே நீ நான் செஞ்ச தப்புனு”

“நான் என்ன உங்களுக்கு ஏத்தது போல மாத்திக்கிறேன். அதுக்காக நாம பிரியணுமா?” தொண்டையடைக்க கேட்டாள்.

“உனக்கு நான் சொல்லுறது புரியலையா? உன்ன விட அழகான, படிச்ச பொண்ணா பார்த்துட்டேன். சொல்லப்போனா கல்யாணம் பண்ணிட்டேன். பல கோடி சொத்தோட. நான் அவ கூட இருந்தா தான் என் கனவு, லட்ச்சியம் எல்லாம் நான் நினச்சபடி நிறைவேறும்”

“என்ன?” என்றவள் ராஜ்பிரபுவை அறைந்தாள்.

இது தனக்கு தேவைதான் என்று அமைதியாக ராஜ்பிரபு “விவாகரத்து பத்திரத்துல சைன் பண்ணு” என்றான். 

“எப்படி எப்படி உன்னால இப்படி பண்ண முடிஞ்சது. கேவலம் பணத்துக்காக. பெத்த பையன பத்தி கொஞ்சமாச்சும் நினைச்சி பார்த்தியா? பாவி, பாவி…

நீ என்னய்யா சொல்லுறது நானே உன்ன விவாகரத்து செய்யிறேன். உன் சங்கார்த்தமே வேணாம். எந்த காரணத்தைக் கொண்டும் நீ இங்க வரக் கூடாது. உனக்கும் என் பையனுக்கும் எந்த உறவும் இல்ல. மீறி வந்த வெட்டி பொழி போட்டுடுவேன்” கண்களில் பெருகும் கண்ணீரை அவசர அவசரமாக துடைத்தவள், அதை விட அவசரமாக விவாகரத்து பத்திரத்தில் கையொப்பமிட்டுக் கொடுத்து ராஜ்பிரபுவை வீட்டை விட்டு வெளியேறுமாறு கத்தினாள்.

அன்று சென்றவன் தான் அதன் பின் சரோஜா அவனை சந்திக்கவுமில்லை, சந்திக்க நினைக்கவுமில்லை. 

“உங்கப்பாக்கு தெரிஞ்சா நீ இங்க வந்திருக்கவே முடியாது. உனக்கு என்ன தெரிஞ்சிக்கணுமோ தெரிஞ்சிகிட்டல்ல இப்போ போ” என்ற சரோஜா உள்ளே சென்றாள்.

 சரோஜா சொன்னதை கேட்டு அதிர்ந்து நின்றான் சர்வேஷ்.

சரோஜாவும், ராஜ்பிரபுவும் காதலித்து திருமணம் செய்திருப்பார்கள். இலங்கையில் இவர்கள் இருக்க இந்தியாவில் அம்மாவை சந்தித்து ஏதாவது ஒரு காரணத்துக்காக அம்மாவை திருமணம் செய்து கொண்டிருப்பார். அதை அறிந்து சரோஜா விலகி சென்றிருப்பாள் என்றுதான் நினைத்தான்.

இப்படி தந்தை சரோஜாவுக்கு துரோகம் இழைத்திருப்பார் என்று கொஞ்சம் கூட சர்வேஷ் நினைக்கவில்லை.

 “எங்கப்பா என்னாலதான் ஓடிபோய்ட்டாரு என்று ஊரே என்ன கேலி செஞ்சப்போ எங்கம்மா அமைதியா என்ன சமாதானப்படுத்தினாங்க. ஆனா என்ன நடந்தது என்று நான் மாமா கிட்ட கேட்டு தெரிஞ்சிகிட்டேன். காதலிச்சு கல்யாணம் பண்ணின பொண்டாட்டிய விட, பெத்த பையன விட அந்தாளுக்கு பணம் மட்டும் தான் முக்கியம். எந்த காரணத்துக்காகவும் அந்தாளு இந்த வீட்டுக்கு வர முடியாது. அந்தாளுக்கு உறவு என்று நீ வந்தா உன்ன ஏத்துப்போமா? பாசமா வந்து பணம் செலவு பண்ணா ஒத்துப்போமா? பணம் தான் முக்கியம்னா அத சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு தம்பி. அத பத்தி உன் கிட்ட ஏற்கனவே சொன்னேனே. கிளம்பு கிளம்பு” கதிர்வேல் கடுப்பாக சொன்னான்.

“ஆஹ்… அப்போ எதுக்கு நீ அப்போ அப்போ அப்பாவை பத்தி பேசின?”

“அந்தாளு என்னோட பெர்த் சேட்டிபிகேட்டுல மட்டும் தான் இருக்கான். என்ன பொறுத்தவரையிலே அந்தாளு ஒரு மிதியடி மட்டும் தான். அப்போ அப்போ தேவை படும் போது யூஸ் பண்ணிப்பேன்” என்றான் கதிர்வேல்.

“அண்ணா…. அப்பா பண்ணதுக்கு நான் என்ன பண்ண? நான் உனக்காக வந்தேன்” என்றான் சர்வேஷ். அவன் கண்களில் கதிர்வேல் மீது பாசம் மட்டும்தான் இருந்தது.

“இது உங்கம்மாக்கு தெரியுமா? அந்தம்மா சத்தியமா என்ன அவங்க மகனா ஏத்துக்க மாட்டாங்க. எனக்காக நீயும், உனக்காக நானும் பார்த்தா நீ உன் அம்மாவ கஷ்டப்படுத்த வேண்டி வரும், நான் என் அம்மாவ கஷ்டப்படுத்த வேண்டி வரும். அத விட உன் அப்பா மூஞ்சில முழிக்க எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்ல.

நீ இங்க வந்து போக இருந்தா அது தெரிஞ்சி அவர் கோபப்படுவாரோ இல்ல, அவரும் வந்து போக ஆரம்பிச்சிடுவாரோ. என்ன நடந்தாலும் வீண் பிரச்சினைதான். அதனாலதான் சொல்லுறேன் கிளம்பு”

கதிர்வேல் அவ்வளவு கூறிய பின் சர்வேஷால் அங்கே இருக்க முடியுமா? கிளம்பி விட்டான். அந்த வீட்டை விட்டு கிளம்பி விட்டான். 

Advertisement