Advertisement

அத்தியாயம் 21

நான் வம்புச்சண்டக்கு

போறதில்ல

வந்த சண்டைய விடுறதில்ல

வரிப்புலிதான் தோத்ததில்லையடா

நான் தட்டி வெச்சா

புலி அடங்கும்

எட்டு வெச்சா மல உருகும்

தொட்டதெல்லாம் துலங்க

போகுதடா

மானம் தானே வேட்டி சட்ட

மத்ததெல்லாம் வாழ மட்ட

மானம் காக்க வீரம் வேணுமடா

சர்வேஷின் காதில் விழ வேண்டியே சத்தமாக பாடிக் கொண்டிருந்தான் கதிர்வேல். 

சர்வேஷுக்கு கடுப்பாக இருந்தாலும் வேறு வழியில்லை அமைதியாக இருக்க வேண்டிய நிலை. கதிர்வேலன் முகமூடியை கிழிக்க சர்வேஷ் ரொம்பவே எதிர்பார்த்து காத்திருந்தது ரமேஷின் வருகைக்காகத்தான்.

ரமேஷ் அவனுடைய வீட்டார்களோடு வந்து பிரச்சினை செய்யும் பொழுது அண்ணிக்கு அண்ணனின் உண்மை முகம் தெரிந்து விடும், தண்டித்தாலும் பின்னர் அண்ணனை ஏற்றுக் கொண்டு விடுவார்கள். அதன்பின் அண்ணியை ஏமாற்ற வேண்டிய அவசியம் அண்ணனுக்கு இருக்காது என்றெண்ணினான் சர்வேஷ்.

சர்வேஷ் எதிர்பார்த்தது போல் ரமேஷ் அவன் குடும்பத்தாரை கூட்டிக் கொண்டு நியாயம் கேட்க வந்தான் தான். ஆனால் நடந்ததோ வேறு.

“டேய் வெளிய வாடா… எங்கடா ஒளிஞ்சிருக்க? என் கிட்ட சொன்னத தைரியமா எங்க வீட்டாளுங்ககிட்ட சொல்லு பார்க்கலாம்” கதிர்வேலின் வீட்டு வாசலில் நின்று கூட்டம் கொடுத்த தைரியத்தில் வெறி பிடித்தவன் போல் கத்தலானான் ரமேஷ்.

“எவண்டா என் வீட்டு வாசல்ல வந்து நாய் மாதிரி கத்துறது? என் மணி கூட குரல ஒசத்த மாட்டானே” நக்கலடித்தவாறு வெளியே வந்த கதிர்வேலுக்கு வந்திருப்பது ரமேஷ் என்று நன்றாகவே தெரியும். தெரிந்ததுதானே நக்கலடித்தவாறு வெளியே வந்தவன் ஷார்ட் பட்டன்களை போடலானான்.

அவன் பின்னால் வந்த சரோஜாவும், பத்மினியும் வந்திருந்த கூட்டத்தை கண்டு திகைத்து நின்றனர். குறைந்தது இருப்பது, இருத்தியைந்து பேர் இருப்பார்கள்.

பத்மினி சர்வேஷை அழைக்க அலைபேசியை தேடி உள்ளே ஓடினாள்.

“இன்னக்கி என்ன பஞ்சாயத்தை கூட்ட வந்திருக்க, உனக்கு வேற வேலையே இல்லையா?” முடியை கொண்டையிட்டவாறு புஷ்பவள்ளியை பார்த்துக் கேட்டாள் சரோஜா.

“ஏன்டி உன் புள்ள பண்ண காரியத்துக்கு நீ நாக்க பிடிங்கிகிட்டு சாக வேணாம். நீ என்னடான்னனா தெனாவட்டா பேசிகிட்டு இருக்க” புஷ்பவள்ளி சரோஜாவை மட்டம் தட்ட நினைத்தாள்.

அன்று வந்த பொழுது ரமேஷை கை நீட்டி அடித்து விட்டாளே. என் மகனை அடித்தவளை எப்படி சும்மா விடுவது என்றுதான் கிளம்பி வந்திருந்தாள் புஷ்பவள்ளி. வந்தது மட்டுமில்லாமல் சரோஜாவை இளக்காரமாக பேசி வம்பிழுத்தாள்

ரமேஷ் ஒரு படையையே அழைத்துக் கொண்டு கதிர்வேலன் வீட்டுப்பக்கம் வருவதை கண்ட செல்வா சர்வேஷை அழைத்து விஷயத்தை கூறி விட்டு, சிறிசேன முதலாளியிடமும் சொல்லிக் கொண்டு அவனும் வீட்டுக்கு விரைந்து வந்திருந்தான்.

ஊரிலுள்ள அனைவரிடமும் நன்றாக பழகக் கூடியவன் கதிர்வேல் என்பதால் வந்திருப்பவர்கள் ரமேஷின் அங்காளி, பங்காளிகள் என்றாலும் பாதி பேர் கதிர்வேலின் நண்பர்கள்.

“என்னடா… இவன் என்னென்னமோ சொல்லுறான். நீதான் இவனுக்கு போதை மருந்து கொடுத்தியாம்” கூட்டத்திலிருந்த நண்பன் ஒருவன் கதிர்வேலை கேட்டான். 

அவனுக்கு பதில் சொல்லாது “நான் தப்பு பண்ணியிருந்தா நான் தானே சாகனும் அதுக்கு எதுக்கு எங்கம்மா சாகனும்? அப்படினா உன் புள்ள தப்பு பண்ணினா நீ சாகுறதா முடிவு பண்ணிட்டுதான் இங்க வந்து கத்திக் கிட்டு இருக்கியா?” கொஞ்சம் கூட அச்சப்படமால் புஷ்பவள்ளியை பார்த்து பேசினான் கதிர்வேல்.

“அப்பா… கதிரு வயசுல பெரியவங்கள மரியாதை இல்லாம பேசாத” கூட்டத்தில் ஒரு பெருசு பஞ்சாயத்து பண்ண வாய் திறந்ததும் தான் தாமதம்,

“டேய் பஞ்சரான பழைய டயர். நாங்க எதுக்கு வந்திருக்கோம் என்று தெரியுமா? நீ என்ன என்னென்னமோ பேசிகிட்டு இருக்க?” கதிர்வேலை சீண்டவேன்றே பேசினான் ரமேஷ்.

கதிர்வேல் கூட்டத்தை கண்டு பயந்து விட்டான். அதனால் தான் உண்மையை மறைக்க, ஏதோதோ பேசி மழுப்ப பார்க்கின்றான் என்று எண்ணி ரமேஷ் கதிர்வேலை சீண்டினான்.  

ரமேஷ் எதற்கு வந்திருக்கின்றான் என்று கதிர்வேலுக்கு தெரியாதா? இத்தனை பேர் முன்னிலையில் தான் தான் ரமேஷுக்கு போதை மருந்து கொடுத்தேன் என்று கூறி விடுவானா?

“அப்போ எதுக்கு வந்தணு பட்டுனு சொல்ல வேண்டியது தானே உன் ஆத்தா எதுக்கு பஞ்சர் ஒட்டிக்கிட்டு இருக்கா?” ஆட்டோவில் இறங்கிய சர்வேஷை பார்த்தவாறே இவன் கூற, பத்மினியும் உள்ளே இருந்து வந்தாள்.

எனக்கா விபுதியடிக்க பாக்குற? அதுக்கெல்லாம் நான் அகப்பட மாட்டேன் என்றிருந்தது கதிர்வேலன் பேச்சு.

ஏற்கனவே செல்வா அழைத்து விட்டதால் சர்வேஷ் வீட்டுக்குத்தான் வந்து கொண்டிருந்தான். பத்மினி அழைத்ததும் வீட்டுக்கு அருகில் தான் இருந்தான். அதனால் உடனே வந்து விட்டான்.

ரமேஷ் அன்று என்ன நடந்தது, கதிர்வேல் எவ்வாறு அவனுக்கு போதை மருந்து கொடுத்தான் என்று விலாவரியாக கூறி கதிர்வேலன் முகத்திரையை இதோ இப்பொழுது கிழிப்பானென்று பதட்டமான நின்றிருந்த செல்வாவின் தோளில் கைபோட்டு சர்வேஷ் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

“ஏன்டா நேத்து என் கூட ரோட்டுல வச்சி சண்டை போட்டியே, அப்போ உண்மையெல்லாம் உளறி கொட்டினியே மறந்துட்டியா?” ரமேஷ் தெனாவட்டாக கூற,

“ஆ… ஆ… ஆ… என்ன சொன்ன? உண்மையா? என்ன உண்மை? மறுவாழ்வு மையத்துக்கு போயிட்டு வந்த பிறகு திருந்திட்டானு நினச்சேன். திரும்ப போதை மருந்து போட ஆரம்பிச்சிட்டியா என்ன? உளறிக்கிட்டு இருக்க?” ரமேஷை பார்த்துக் கேட்டவன் அவன் அண்ணன் பாண்டியை பார்த்து “உன் தம்பி ஒரு போதகை என்று ஊருக்கே தெரியும் உனக்குத் தெரியாதா? தெரியாமத்தான் இவன மறுவாழ்வு மையத்துல கொண்டு போய் சேர்த்தியா?” என்று கேட்டு புஷ்பவள்ளியிடம் திரும்பி “ஏன் பெரியம்மா உனக்கும் உன் பையன பத்தி தெரியுமில்ல. தெரிஞ்சி தானே அவசர அவசரமா தூக்கிட்டு ஓடின. கத்திரிக்கா முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகணும். இதோ வந்துருச்சில்ல” ரமேஷை பார்த்து நக்கலாக சிரித்தான் கதிர்வேல்.

“இது என்னடா புது ட்விஸ்ட்டா இருக்கு?” செல்வா சர்வேஷிடம் முணுமுணுத்தான்.

“டேய் கதிரு என்னடா சொல்லுற? இவன் ஒரு போதகையா?” சரோஜா அதிர்ச்சியாக கேட்டாள்.

பாண்டி அன்னையை முறைத்தான். “உன் அருமை புள்ள பேச்சக் கேட்டு புடவைய தூக்கி சொருகிகிகிட்டு வந்தியே தேவதான் உனக்கு” என்றது அவன் பார்வை.

புஷ்பவள்ளி முகமே பேய் அறைந்தது போல் வெளிறிப் போய் பேச்சற்று நின்றாள். அன்று சரோஜா ரமேஷை அடித்ததற்காக அவளை திருப்பி அடிக்க சந்தர்ப்பம் கிடைத்து விட்டது, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு கதிர்வேல் மீது பழி போட்டு ரமேஷ் மீதிருக்கும் கரையை துடைக்க வேண்டும் என்றுதான் இங்கு வந்தாள்.

ஆனால் கதிர்வேலுக்கு ஏற்கனவே ரமேஷ் போதை மருந்து உட்கொள்கிறான் என்பது தெரிந்திருக்கிறது. இப்பொழுது எவ்வாறு சமாளிப்பாள்?  

அவளை காக்கும் தெய்வமாக வந்தான் சர்வேஷ்.

இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்த சர்வேஷ் “ஆமா அண்ணா ரமேஷ் ஒரு போதைகை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அப்போ கல்யாணத்தப்போவே உங்களுக்கு தெரிஞ்சிருக்கு அதனாலதான் எதோ பண்ணி கல்யாணத்த நிறுத்தினீங்களா?”  என்று கேட்டான்.

போதை மருந்து கொடுத்தியா என்று சர்வேஷால் நேரடியாக கேட்க முடியாது. அவ்வாறு கேட்டால் “நான் தான் போதை மருந்து கொடுத்தேன் என்பதற்கு ஆதாரம் இருக்கா?” என்று கதிர்வேல் இவனையே திருப்பிக் கேட்டு விடுவான். ஆதலால்  ஏதாவது செய்து திருமணத்தை நிறுத்தினாயா என்று மட்டும் கேட்டான்.

அதை கேட்கத்தானே இத்தனை கூட்டத்தோடு ரமேஷும் இங்கு வந்தான். சர்வேஷ் எடுத்துக் கொடுத்ததில் “சொல்லுடா… என் கிட்ட நேத்து சொன்னியே. நீ தான் எனக்கு போதை மருந்து கொடுத்தன்னு சொன்னியே. ஒரு அப்பனுக்கு பொறந்தினா… எங்க இப்போ சொல்லு பார்க்கலாம். நல்லவேள உங்கப்பன் உன் அம்மா கழுத்துல தாலிய கட்டிட்டு ஓடிப் போய்ட்டான். இல்லனா அப்பன் பேரு தெரியாதவனா வளந்திருப்ப” தான் எந்த போதை மருந்தும் எடுக்கவில்லை. கதிர்வேல் தான் தனக்கு போதை மருந்து கொடுத்து திருமணத்தை நிறுத்தினானென்று நிரூபிக்க கதிர்வேலை சீண்டினான்.

“டேய் எதுக்கு வந்தியோ அத பத்தி மட்டும் பேசு”

“ஓவரா பேசாத” என்று குரல்கள் ஒலிக்கும் பொழுதே

“யாரைப் பார்த்து என்ன பேச்சு பேசுற?” சரோஜா ஆவேசமாக கத்த, பத்மினி பாய்ந்து ரமேஷை சரமாரியாக அறைந்தாள்.

“உங்க அப்பாவ பத்திதான் பேசுறான் தம்பி கோபப்படாம அமைதியா இருக்கிறீங்க” செல்வா சந்தடிசாக்கில் நக்கலடிக்க,

“இந்த குடும்பத்தை விட்டு ஒடித்தானே போனாரு. அவன் உண்மையத்தானே சொல்லுறான். அதுக்கு எதுக்கு கோபப்படணும்? கோபப்பட்டு நான் அவர் புள்ளன்னு இப்போ சொல்லி வேற பிரச்சினையை கிளப்ப சொல்லுறியா? கொஞ்சம் கம்முனு இரு” செல்வாவின் மண்டையில் குட்டினான் சர்வேஷ்.

பத்மினியை இழுத்து நிறுத்திய கதிர்வேல் “டென்ஷனாகி கோபப்பட்டு கூட நீ அவனை தொடாத பத்து. இவன போல விஷக்கிருமிய தொட்டா நமக்கு கண்ட கண்ட நோய் வந்துடும்” என்றவன் சரோஜாவை பார்த்து “அந்தாள பத்தி பேச்செடுத்தா என்ன டென்ஷனாகதே என்று நீ டென்சனாகாத அமைதியா இரு” என்றான்.

“அண்ணா உங்கப்பாவ பத்தி தப்பா பேசினது தப்புதான். நடக்க இருந்த கல்யாணத்த நிறுத்தினீங்களா? அத சொல்லுங்க” என்னமோ ராஜ்பிரபு யாரோ போல் கேட்டான் சர்வேஷ்.

“டேய் நீ எந்த மொழில கேட்டாலும், எந்த மாடுலேஷன்ல கேட்டாலும், மாத்தி, மாத்திக் கேட்டாலும், நான் சொல்லுற பதில் ஒரே மாதிரித்தான் இருக்கும்” என்பதை போல் சர்வேஷை பார்த்த கதிர்வேல்

“தம்பி உனக்கு இவன பத்தி தெரியாது. நீ கொஞ்சம் நேரம் மூடிக்கிட்டு இருக்கிறியா?” என்றான்.

“இப்போ நீ எதுக்கு அவர அடக்குற? அவர் கேட்டதுல என்ன தப்பு? யார் கேட்டா என்ன பதில் சொல்லு” கதிர்வேலை முறைத்தாள் பத்மினி. அவளுக்கு பதில் தெரிய வேண்டி கேட்கின்றாளா? அல்லது கதிர்வேல் நிரபராதி என்று நிரூபிக்க சொல்லி கேட்கின்றாளா அது அவளுக்கு மட்டுமே வெளிச்சம்.

“உங்கண்ணன் வசமா சிக்கிட்டான்” செல்வா சர்வேஷிடம் கூறியவாறு கதிர்வேலை பார்த்திருந்தான்.

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிருச்சா? என்று அவளை பார்த்தவன் “கல்யாணத்துக்கு முன்னாடியே இவன் ஒரு போதைகை என்று எனக்கு தெரிஞ்சிருந்தா உன் கிட்ட சொல்லியிருக்க மாட்டேனா பத்து” என்றவன் “சொன்னாலும் அப்படியே நம்பியிருப்ப பாரு” என்று முணுமுணுக்க வேறு செய்தவன் “இவன மறுவாழ்வு மையத்துக்கு கொண்டு போனங்களே அப்போ விசாரிச்சேன்.

போதை மருந்தே எடுக்காதவன எதுக்கு அவங்க இன்னும் திருப்பி அனுப்பாம இருக்காங்க என்று சந்தேகம் வந்தது, என்றவன் சட்டென்று உக்குதொரயை அலைபேசியில் பிடித்து, அலைபேசியை ஸ்பீக்கர் மூடில் போட்டான்.

“டேய் சொல்லுடா மச்சான். எதுக்கு நீ எனக்கு போன் பண்ணி இருக்க, நீதான் ஐஸ் வாங்கவும் மாட்ட, விற்கவும் மாட்டியே” என்றே ஆரம்பித்தான் உக்குதொர.

அவன் பேச்சிலையே அங்கிருந்தவர்களுக்கு கதிர்வேலுக்கு எந்தவிதமான போதை மருந்து பழக்கமும் இல்லையென்று தெரிந்தது.

“ஏண்டா உனக்கு போன் பண்ணாலே ஐஸ் வாங்கத்தான் என்று ஏன் தான் நினைக்கிறியோ? நல்லா இருக்கிறியான்னு கேட்க போன் பண்ணக் கூடாதா?”

“நீ ஒருத்தன் தாண்டா ஊருக்குள்ள எவனை பார்த்தாலும், நல்லா இருக்கியா, சாப்டியான்னு கேக்குற” உக்குதொர கதிர்வேலை பற்றி நல்லவிதமாக பேச கூட்டத்தில் இருந்தவர்களும் கிசுகிசுத்தவாறே அதை ஆமோதித்தனர்.

“இப்போ எதுக்கு நீ அவனுக்கு போன் பண்ணுற?” ரமேஷ் கதிர்வேலின் அலைபேசியை பிடுங்க முயன்றான்.

“யாரு ரமேஷா? என்னடா காலைலயே கதிர்வேல பார்க்க போய் இருக்க, ஐஸ் வாங்க பணம் கடன் கேட்க போய்ட்டியா என்ன? டேய் விக்கிறவன் நானே சொல்லுறென்டா, புலி வால புடிச்ச கதையா விட முடியாம நான் மாட்டிகிட்டு இருக்கேன். ஐஸ் அடிக்கிற நீங்களாச்சும் விட்டுத் தொலைங்கடா. அப்போவாச்சும் இந்த போதை மருந்து எங்குற கேன்சர் நாட்டை விட்டு ஒழியட்டும்” என்றான் உக்குதொர.

“சரிடா மச்சான் நான் வைக்கிறேன்” என்ற கதிர்வேல் பத்மினியை தான் பார்த்தான்.

“உங்க அண்ணணானுக்கு உடம்பெல்லாம் மூள தம்பி. அவர யாராலயும் அசைக்க முடியாது” செல்வா சிரித்தான்.

அங்கிருந்த பாதிக்கும் மேலிருந்தவர்களுக்கு ரமேஷ் போதை மருந்து எடுப்பது தெரியும், மீதி பேரில் ஒரு சிலர் “ஏன்டா ரொம்ப நல்லவன் போல பேசி எங்களை இங்க கூட்டிட்டு வந்தியே உன் வண்டவாளம் தண்டவாளம் எறிரிச்சே. உனக்கு போய் சப்போர்ட் பண்ண வந்த எங்களை சொல்லணும்” காரி துப்பாத குறையாக கிளம்பி இருந்தனர்.

போதை மருந்து பாவிப்பதை அறிந்தவர்களும் கதிர்வேலும் போதை மருந்து உட்கொள்பவனாக இருப்பான். அப்படிப்பட்டவன் இவனய் குற்றம் சொல்வானா? அவனை உண்டு, இல்லை என்று ஒருவழி செய்ய வேண்டும் என்றுதான் வந்திருந்தனர்.

கதிர்வேல் போதை மருந்து எடுப்பதில்லை என்பதே அவர்களுக்கு பெருத்த ஏமாற்றம். என்ன செய்வது என்று அவர்கள் முழித்துக் கொண்டிருந்தனர்.

“அட சீ… போயும் போயும் உன்ன போய் நல்லவன் என்று ஏமார்ந்து கல்யாணம் பண்ண போய்ட்டேன்” என்று பத்மினி ரமேஷை முறைத்தாள்.

அவன் விடுவானா? “ஏன்டா நீ நல்லவன். நான் கெட்டவனா? அந்த உக்குதொரக்கு எவ்வளவு பணம் கொடுத்து இப்படி பேச சொன்ன?” கதிர்வேலின் சட்டையை பிடித்து அடிக்கப் பாய்ந்தான் ரமேஷ்.

சர்வேஷுக்கோ அது அபத்தமாக தோன்றியது. பணம் கொடுத்து ஒருவனிடம் நான் போன் செய்தால் நீ இவ்வாறு கூறு என்று சொல்லி வைத்தாலும், எப்பொழுது? என்ன என்று அச்சு பிசகாமல் பேசத்தான் முடியுமா? அதுவும் அந்த உக்குதொர ரமேஷின் குரலை கேட்ட பின்தான் ரமேஷை பற்றியே பேசினான்.

“யார் மேலடா கை வைக்கிற? கைய எடுடா” பத்மினி  ரமேஷை பிடித்து தள்ளி விட்டாள்.

“கத்தி, கோபப்பட்டு பேசினா நீ நல்லவன் என்று ஊர் நம்பாதுடா…” என்று ரமேஷை அவனிடமிருந்து பிரித்த கதிர்வேல் “நீ கெட்டவன் என்று நிரூபிக்க, நான் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. உன் நடத்தையே போதும். இங்க இருக்குறவங்க எல்லாருக்கும் தெரியும் நீ போதை மருந்து எடுக்குறான்னு. நீ திருந்தி நல்லவனா வாழனும் என்று உண்மையா ஒருத்தங்க நினச்சா உன்ன நல்ல வழிக்கு கொண்டு வந்திருப்பாங்க.

இப்படி நீ சொல்லுறதுக்காக வரிஞ்சி கட்டிக்கிட்டு என் வீட்டு வாசல்ல வந்து நின்னு சண்டை போட மாட்டாங்க” என்று புஷ்பவள்ளியை பார்த்தான்.

“ஏய் மினி உன் அத்தான் நல்லவன் என்று நினைச்சுகிட்டு இருக்கிறியா? அவன் தாண்டி எனக்கு போதை மருந்து கொடுத்து நம்ம கல்யாணத்தையே நிறுத்தினான்” ரமேஷ் பத்மினியிடம் கெஞ்சினான்.

“என்னமோ என் அத்தான் தான் உனக்கு போதை மருந்து எடுக்க சொல்லிக் கொடுத்தா மாதிரியே பேசுற? அப்படியே ஏதாவது பண்ணி அத்தான் கல்யாணத்த நிறுத்தி இருந்தாலும் அவர் எனக்கு நல்லதுதான் பண்ணி இருக்காரு. உன்ன போல ஒருத்தன் கிட்ட இருந்து என்ன காப்பாத்திட்டாரே. உன்ன கட்டிக்கிட்டு நான் என்னென்ன அவஸ்தாய அனுபவிக்க இருந்தேனோ. என் மூஞ்சிலயே முழிக்காத. போய்த் தொல” முகத்தை திரும்பியவள் உள்ளே சென்றாள்.

அதிர்ந்த ரமேஷ் “மினி, மினி” என்று கத்த, அவர்கள் வந்த நோக்கம் நிறைவேறாமல் கூட்டம் கலைய ஆரம்பித்தது.

“இவன இப்படியே விட்டா மனநல காப்பகத்துலதான் விட வேண்டி இருக்கும். இவன கூட்டிட்டு போய் முறையான ட்ரீட்மென்ட்டை கொடுங்க” என்றான் கதிர்வேல்.

ரமேஷுக்கு கதிர்வேலை பார்க்கையில் கொலைவெறியே வர அவனை அடிக்க பாய்ந்தான்.

ரமேஷின் அண்ணன் பாண்டி ரமேஷை அடித்து இழுத்து செல்ல, புஷ்பவள்ளி அழுதவாறு சென்றாள்.

“என்ன தம்பி ஜோ என்று மழை பேஞ்சாலும் நிலம் நனையாத கணக்கா உங்க அண்ணா ஸ்டோங்கா நிக்கிறாரு” நீ நினைத்தது நடக்கலையே தம்பி என்று சர்வேஷை செல்வா குத்திக் காட்ட,

கெட்டதுளையும் ஒரு நல்லது நடக்கும் என்று சொல்லுவாங்களே. அதுதான் இது. அண்ணா ஏமாத்தி, பொய் சொல்லி அண்ணிய கல்யாணம் பண்ணி இருந்தாலும் அந்த ரமேஷ் கிட்ட இருந்த காப்பாத்தி இருக்காரு” நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றான் சர்வேஷ்.

உள்ளே வந்த பத்மினியின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக பெருகியது. எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து தப்பியிருக்கின்றாள். நினைக்கும் பொழுதே உடல் ஆட்டம் கண்டது.

“லவ் யு பத்து. எங்க நீ அவன் சொல்லுறத கேட்டு என்ன நம்பாம திரும்ப என்ன விட்டு விலகி போய்டுவியோன்னு நினச்சேன்” பத்மினியின் பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான் கதிர்வேல்.

அவனறியாமல் கண்களை துடைத்துக் கொண்டு அவன் பக்கம் திரும்பியவள் “ரொம்ப தேங்க்ஸ்” என்று அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

“இப்போ எதுக்கு எனக்கு நன்றி சொல்லுற? அப்படி என்ன பண்ணிட்டேன் நான்” புரியாது அவளையே பார்த்தான்.

“ரமேஷ் போதை மருந்து எடுக்குறது கல்யாணத்துக்கு முன்னாடியே தெரிஞ்சி அத நீ சொல்லியிருந்தாலும், என்னோட பிடிவாதத்தால் உன்ன நான் நம்பியிருக்க மாட்டேன்”

“அதான் தெரியுமே” என்று இவன் முணுமுணுக்க,

“எவ்வளவு பெரிய பிரச்சினைல இருந்து தப்பிச்சேன் தெரியுமா?”

“சரி விடு பத்து. எதுக்கு இப்போ அவன பத்தி பேசிகிட்டு” அவள் கன்னம் கிள்ளி மெதுவாக அவள் இதழ் நோக்கி குனிந்தான்.

“கொஞ்சம் பேச விட்டேன். எப்போ பார்த்தாலும்” என்று அவனை தள்ளி விட்டவள் “அந்த உக்குதொர உனக்கு மட்டும் சர்ட்டிபிகேட் கொடுக்கிறான். அவ்வளவு நல்லவனா நீ” முறைத்தவாறே பத்மினி கேட்க,

“ஆமா எப்படி நீ என்ன நம்பின? நீ என்ன இப்படி சட்டுனு நம்புறவ கிடையாதே” கேலி போல் கேட்டாலும் அவள் பதில் அவனுக்கு அவசியமாக இருந்தது.  

“அந்த போதை மருந்து விக்கிற உக்குதொரய பத்தி ஊருக்குள்ள பல வதந்திகள் இருக்கு. பணத்துக்காக போதை மருந்து விற்க ஆரம்பிச்சவன் இன்னக்கி மானம் மரியாதை இழந்து தவிக்கிறதாக பேசிக்கிட்டாங்க”

“என்ன சொல்லுற?”

“நீ சொன்னது போல போதை மருந்து கேன்சர் தான் அத அழிக்க வேண்டிய அரசாங்கமும், அதிகாரத்துல இருக்குறவங்களும் கைகட்டி, காசுக்காக அமைதியாக இருக்கிறாங்க.

பணம் சம்பாதிக்க உக்குதொர தப்பான வழிய தேடிகிட்டான். இன்னக்கி அவன போலீஸ் கேஸ் என்று பிடிச்சிட்டு போறதும், அவன காப்பாத்த அவன் பொண்டாடி ராத்திரில போலீஸ்காரன் வீட்டுக்கு போறது ஊரறிந்த ரகசியம் தானே.

“ஏய் யாரடி உனக்கு இதெல்லாம் சொல்லுறாங்க?” புலி வாலை புடிச்சிட்டேன் விட முடியாது என்று உக்குதொர சொன்னது அவன் குடும்ப வாழ்க்கையைத்தான்.

நேர்வழியில் கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கே ஆயிரம் பிரச்சினைகள் வந்து சேரும். ஒவ்வொன்றாக சமாளித்து முன்னேறலாமென்று பார்த்தால் குழிபறிப்பவர்களும், குடைச்சல் கொடுப்பவர்களும் கூடவே இருப்பார்கள்.

நேர்வழியில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கே இந்த நிலமையென்றால் தப்பான தொழில் செய்பவர்களின் நிலையை சொல்லவா வேண்டும்?

இதையெல்லாம் கதிர்வேல் வீட்டில் பேச மாட்டான். பெண்கள் பயந்து விடுவார்கள் என்று இதுநாள் வரையில் மறைத்திருக்க, இவள் அறிந்து வைத்திருக்கிறாள்.  

“ஏய் உனக்கேப்பிடிடி இதெல்லாம் தெரியும்”

“இந்த ஊருலதான் நாங்களும் இருக்கோம்” என்றவள் “அத விடு அத்தான். நான் தான் இத்தனை வருஷமா உன்ன புரிஞ்சிக்காம விலகி இருந்துட்டேன். நீ ரொம்ப பொறுமையா எனக்காக காத்துக்கிகிட்டு இருந்தியே அது எவ்வளவு பெரிய விஷயம். ரொம்ப தேங்க்ஸ்” என்று அவனை இழுத்து முத்தமிட்டாள்.

அதை சற்றும் எதிர்பார்க்காத கதிர்வேல் ஆனந்த அதிர்ச்சியோடு அவளுக்கு ஒத்துழைத்தான். 

அடுத்து வந்த நாட்களில் சர்வேஷை பார்க்கும் பொழுதெல்லாம் பாட்டுப்பாடியே வெறுப்பேற்ற ஆரம்பித்தான்.

இன்றும் அப்படித்தான் பாட்டுப்பாடி வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான் கதிர்வேல்.

“போதும்டா… போதும்டா…” என்று சர்வேஷ் கண்களாளேயே பதில் கூறிக் கொண்டிருந்தவன் பொறுக்க முடியாமல் கதிர்வேலன் அருகில் சென்று நெருங்கி நின்று “ரொம்ப துள்ளாத, அந்த ரமேஷ் ஏற்கனவே போதகை எங்குறதால அவன் சொன்னது எடுபடல. அதுக்காக நீ அவனுக்கு போதை மருந்து கொடுத்தது இல்லையென்று ஆகாதே. நீ அவனுக்கு போதை மருந்து கொடுத்தேன் என்று நீயே சொன்னதை நானே என் காதால கேட்டேன்” என்றான் சர்வேஷ்.       

“டேய் தம்பி என் பத்து என்ன சொன்னான்னு உன் ரெண்டு காதலையுமே கேட்டியே. இப்போ சொன்னா அவ அத பெருசா எடுத்துக்க மாட்டா. நீ தான் இப்போ மூட்ட முடிச்ச கட்ட ரெடியா இருக்கணும். ஏன்னா நீதான் பிரபு இல்லையே ராஜ்பிராவோட பையனாச்சே” நக்கலாக சிரித்தான் கதிர்வேல்.

பாத்திரம் விழும் சத்தம் கேட்டு கதிர்வேலும் சர்வேஷும் திரும்பிப் பார்த்தனர்.

Advertisement