Advertisement

அத்தியாயம் 20

சர்வேஷின் மிரட்டலுக்கெல்லாம் கதிர்வேல் அசரவுமில்லை. அச்சப்படவுமில்லை. ஏன் அந்த ரமேஷ் வந்து பிரச்சினை செய்வான் என்பதை நினைத்துக் கூட கொஞ்சம் கூட கவலை கொள்ளாமல் இரவுணவனுக்கு அலைபேசி வழியாக இடியாப்பம் ஆடர் கொடுத்தவன் பத்மினியை அழைத்தான்.

அடி ரஞ்சிதமே .. ரஞ்சிதமே

மனச கலைக்கும் மந்திரமே

ரஞ்சிதமே ரஞ்சிதமே

உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

நீ வந்ததும் வந்ததும் வந்ததும்

மனசு சத்திரமே சத்திரமே

நீ நித்திர நித்திர நித்திர

கெடுக்கும் சித்திரமே சித்திரமே

“சொல்லு அத்தான். என்ன பாட்டெல்லாம் புதுசா இருக்கு”

அதுக்கு பதில் சொல்வானா இவன்?  “பத்து நைட்டுக்கு இடியப்பம் ஆடர் பண்ணிட்டேன். அத்தைக்கும் சேர்த்துதான். கறி என்ன பண்ணலாம்? நீ என்ன பண்ணாலும் எனக்கு ஓகே. ஆனா எனக்கு தேங்கா சம்பல் வேணும் சரியா?” இவன் குழைந்து குழைந்து பேச,

அதை பார்த்து “இப்படி பேசிப் பேசித்தான் அண்ணிய ஏமாத்திகிட்டு இருக்க” பார்வையினாலையே தான் நினைத்ததை கூறிய சர்வேஷ் சவாரிக்கு செல்ல ஆட்டோவை கிளப்பினான்.

“போடா போடா நீ ஸ்க்ரீன்ல பண்ணாத அழிச்சாட்டியமா?” கதிர்வேலும் அவனுக்கு பார்வையினாலையே பதில் சொன்னான்.

அந்த பக்கத்திலிருந்து பத்மினியோ “என்ன பண்ணவும் நான் வீட்டுல இருக்கணுமா? இல்லையா? என்ன நான் தனியா நடந்து வரவா? நீ வரியா?”

தனியாக போனவளுக்கு தனியாக வரத் தெரியாதா என்ன? உன்னை அழைத்து செல்ல நான் வருகிறேன் என்று சொல்லி விட்டானே. தனக்கு கொடுத்த வாக்கை மீறலாமா? இது போன்ற சின்ன சின்ன விடயங்களை தானே அவள் இதயம் எதிர்பார்க்கின்றது.  என்னை அழைத்து செல்ல வருவதாய் கூறினாய் என்று கூறாமல், நீ வா என்றும் கூறாமல் மிரட்டினாள்.

புன்னகைத்த கதிர்வேலோ “அத்தான் வந்துகிட்டே இருக்கேன்டி. நீ எனக்கு டீ மட்டும் போட்டு வை. ஏதாச்சும் வாங்கிட்டு வரணுமா?” டீ ஷர்ட்டை அணிந்தவாறு கேட்டான்.

“ம்ம்.. அம்மா உனக்காக வட செய்யிறாங்க நீ வா அத்தான்” என்ற பத்மினி அலைபேசியை அனைத்திருக்க, விசிலடித்தவாறு கமலத்தின் வீட்டுக்கு கிளம்பினான் கதிர்வேல்.

“இடியாப்பத்துக்கு மீன் கறி இருந்தா நல்லா இருக்கும். அம்மா நீ செஞ்சி கொடுப்பியே தேங்கா பால் போட்டு அது என்ன மீனு” வடை சாப்பிட்டவாறே கேட்டாள் பத்மினி.  

“மீன் வாங்க காலைல தான் போகணும் பத்து. இந்த டைம்ல எங்க மீன் இருக்கு? நாம ஒரு ப்ரிஜ்ஜு வாங்கலாமா?” இறைச்சி, மீன் என்று வாங்கி வைத்தால் தேவையான போது எடுத்து சமைக்கலாமே என்று எண்ணினான் கதிர்வேல்.

“எதுக்கு ப்ரிஜ்ஜு வாங்கணும்? நீ பேசாம மீன் கடையே வை அத்தான். நம்ம ஏரியால கோழிக்கடை இருக்கு. மூணு, நாலு மளிகைக்கடை இருக்கு. மீன் கடை இல்லல” ஏதாவது தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறானே, இது நல்ல யோசனையாக இருப்பதாக தனக்கு தோன்றவே கூறினாள் பத்மினி.

“ஆமா வேலு. மீன் வாங்க டவுனுக்கே போகணும். ஆட்டோக்கு அதிகம் காசு செலவாகுது, மீன் விலை என்று யாரும் வாங்கவே யோசிக்கிறாங்க. சின்னதா ஆரம்பிச்சாவே போதும்” என்றாள் கமலம்.

“மீன் டவுன்ல இருந்துதான் வாங்கிட்டு வரணும். காலைலதானே வியாபாரம் இருக்கும். கடை போட்டா வியாபாரம் ஆகுமா? இல்ல ஆட்டோல தெருத்தெருவா போய் விக்க வேண்டி வருமா?” எதை செய்தாலும் சரியாக திட்டமிட்டு செய்பவனுக்கு பல கேள்விகள் எழுந்தன. 

“இல்ல வேலு. வேலைக்கு போயிட்டு வாறவங்க நைட்டு சமைக்கவும் மீன் வாங்கிட்டு போவாங்க. இப்போதைக்கு சின்னதா கடைய ஆரம்பிக்கலாமே. அப்பொறமா ஆட்டோ வாங்கி மீன் விக்கிறத பத்தி யோசிக்கலாம்” என்றாள் கமலம்.

“ஐடியா நல்லா தான் இருக்கு யோசிக்கலாம்” என்றவன் பத்மினியை பார்த்து புன்னகைத்தான்.

இனி சர்வேஷோடு சேர்ந்து எதையும் செய்யும் எண்ணத்தில் இல்லையே. தன்னுடைய குடும்ப விஷயங்களில் அவனை எந்த காரணத்துக்காகவும் சேர்த்துக்கொள்ளக் கூடாது. “என்னையே கேள்வி கேட்கிறானா? என் முகமூடியை கழட்டுவானாமே! டேய் நான் முகமூடி போட்டிருந்தா தானேடா கழட்ட. நீதான்டா பிரபு என்று உங்கப்பன் முகமூடியை போட்டிருக்க. மறந்திட்டியா? ஒரு செக்கன் ஆகாத உன் முகமூடியை நான் கழட்ட?” தனக்குள் சிரித்த கதிர்வேல் தான் எவ்வாறு பத்மினியை திருமணம் செய்ய திட்டம் போட்டோம் என்பதை சிந்தித்துப் பார்த்தான்.  

கதிர்வேல் ஊரிலுள்ள அத்தனை பேரிடமும் வம்பு வளர்த்தாலும் அனைவருக்கும் தன்னாலான உதவிகளை செய்வதும், பார்வர்கள் அனைவரோடும் பேசுவது என்று ஊரிலுள்ள அனைவரையும் அறிந்து வைத்திருந்தான்.

“ஏன்டா அவன் கூட பேசுற? அவன் சரியான போதகைடா…” என்று சரோஜா தடை போட்டால்,

“அக்கா பையன பெத்து வச்சிருக்க, வீட்டுக்குள்ள வச்சி வளர்க்க முடியுமா? அவன் நாலு இடத்து போவான், வருவான், நாலு பேர பார்க்கத்தான் செய்வான். பார்க்குறவங்க, பழகுறவங்க எல்லாரும் நல்லவங்களா இருக்க முடியுமா?

யார் கூட பழகினாலும் நல்ல விசயத்த எடுத்து கிட்டு கெட்ட விசயத்த தொடாம வர நாம தான் பசங்களுக்கு சொல்லி வளர்க்கணும்” என்ற நல்லதம்பி தான் தந்தையில்லாத கதிர்வேலுக்கு வழி காட்டியானான்.

கதிர்வேலன் வாழ்க்கை லட்ச்சியமே பத்மினியை திருமணம் செய்து கொண்டு அழகான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான்.

ஆனால் பத்மினியோ திடிரென்று தான் ரமேஷை விரும்புவதாக கூறிவிடவும் அதிர்ச்சியில் உறைந்த கதிர்வேலால் அன்று எதுவுமே பேச முடியவில்லை. பத்மினியின் விருப்பப்படி அவளது திருமணம் நடக்கட்டும் என்று விட்டான். அவசரமாக அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்தேறி இருக்க, கதிர்வேல் யாரிடமும் எதுவுமே கூறாது அமைதியாகத்தான் இருந்தான்.

வழமையாக அவன் கமலத்தின் வீட்டுக்கு சென்று அவள் கையால் டீ அருந்துவான். அன்றும் சென்றிருக்க, கமலம் தன் மனதில் உள்ள ரணத்தை இவனிடம் கொட்டித் தீர்க்கலானாள்.

“சின்ன வயசுல இருந்தே உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று நானும் உன் மாமாவும் பேசிக்குவோம். இந்த சிறுக்கி இப்படி பண்ணிட்டாளேடா”

“விடு அத்த என்ன பண்ணுறது?” என்ற கதிர்வேல் கமலத்தின் மடியில் படுத்துக் கொண்டு அவன் பத்மினியை எவ்வளவு நேசிக்கின்றான் என்று கூறி அழுதான். அன்று கமலத்தால் அவனை சமாதானப்படுத்தவே முடியவில்லை.

அன்று பத்மினி கோவிலுக்கு சென்றிருந்தமையால் வீட்டில் நடப்பது எதுவும் அவளுக்கு தெரியவில்லை.

“டேய் உன் மனசுல இம்புட்டு ஆசைய வச்சிக்கிட்டு எதுக்கு அவள இன்னொருத்தனுக்கு கட்டி வைக்கிற? பேசாம தாலி கட்டுற நேரத்துல நீ தாலி கட்டிடு. மத்தத நான் பாத்துக்கிறேன்” என்றாள் கமலம்.

அதை அவன் யோசித்திருக்க மாட்டானா? பலதடவை யோசித்து விட்டான். பத்மினியை காயப்படுத்தாமல் அவளை திருமணம் செய்துகொள்ள வேண்டும். தனக்கும் அவளுக்கும் திருமணம் என்ற ஒன்று நிகழ்ந்து விட்டால் போதும் யாரும் தங்களுக்கு நடுவில் வந்து விட மாட்டார்கள்.

என்ன செய்வது? என்று சிந்தித்தவனுக்கு ரமேஷை கடத்தி எங்கயாச்சும் கொண்டு போய் வைத்தால் தான் உண்டு என்ற தீர்வுதான் கிடைத்தது.

கடத்தி எங்கே வைப்பது? எங்கே வைத்தாலும் தப்பித்து வந்து விட மாட்டானா? வந்தவன் கடத்தியது யார் என்று கூற மாட்டானா? அப்படியே அவனுக்கு தெரியவில்லையென்றாலும் போலீஸ் கேஸ் என்றாகி பிரச்சினை பெரிதாகும்.

எத்தனை நாட்கள் அடைத்தது வைப்பது? திருமணம் நடந்தேறும் வரையிலுமா? அப்படியே வெளியே விட்டாலும் வந்தவன் தனக்கு என்ன நிகழ்ந்தது. தான் எங்கே இருந்தோம் என்று கூறினால் மொத்த சந்தேகமும் தன் பக்கம் தான் திரும்பும்.

எது செய்தாலும் எந்த சந்தேகமும் தன் பக்கம் வரக் கூடாது. எந்த பிரச்சினையும் வராமல் இருக்க வேண்டும் அப்படி என்ன செய்ய முடியும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் உக்குதொர என்பவன் வந்து கதிர்வேலிடம் ஒரு உதவி கேட்டான்.

இந்த ஊரில் எவன் போதை மருந்து பாவிப்பான், எவன் போதை மருந்து விற்கின்றான் முதற்கொண்டு கதிர்வேலுக்கு அத்துப்படி.

உக்குதொர மடகஸ்கார் சென்று மாணிக்கல் வியாபாரம் செய்தவன்தான். பணக் கஷ்டத்தால் போதை மருந்து விற்க ஆரம்பித்திருந்தான்.

“மச்சான் இந்த ஒரே ஒரு உதவிய மட்டும் செய்டா… போலீஸ் கெடுபிடி ஜாஸ்தி. ஐஸ கைமாத்தி விடணும். என்னால போக முடியாது. நீ அந்த பக்கம் தானே போற இந்த தடவ மட்டும்” என்று கெஞ்சினான்.

“இங்க பாரு இந்த வேலையெல்லாம் நான் பண்ண மாட்டேன். ஆனா நீ ஏதோ பிரச்சினைல இருக்கானு மட்டும் தெரியுது. இன்னக்கி மட்டும் செய்யுறேன். ஆமா இந்த ஐஸு ஒரு பின்ச் எடுத்தாவே சும்மா குப்புனு ஏறுமாமே உண்மையா?”

“என்னடா விற்க மாட்டேன்னு, வாங்க பக்குறியா?” நக்கலடித்தான் உக்குதொர.

“சும்மா தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன்” என்றவன் விபரமாக கேட்டறிந்துக் கொண்டான்.

பொருளை கைமாற்ற பெற்றுக்கொண்டவன் அதிலிருந்து மில்லிகிராம் அளவு பத்திரப்படுத்திக் கொண்டுதான் கொடுத்தான்.

இதே மாதிரி ஊரை சுற்றி விற்கப்படும் எல்லா போதை மருந்தையும் சிறிதளவு பெற்றுக் கொண்டவன் எல்லாவற்றையும் கலந்து வைத்து கொண்டது மட்டுமல்லாது பத்மினியுடைய கல்யாண வேலையையும் மும்முரமாக பார்கலானான்.

“உனக்கும் அவளுக்கும் நடக்க வேண்டிய கல்யாணம். இப்படி நீ அவளுக்காக வேல பாக்குற” கவலையாக சொன்னான் நல்லதம்பி.

“நம்ம வீட்டு கல்யாணம் மாமா” என்று புன்னகைத்த கதிர்வேலோ “என் கல்யாணத்துக்கு நானே வேல பாக்குறேன் இதுல என்ன இருக்கு” மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

போதை மருந்துகளை பாவிப்பவர்களின் வாயைக் கிளறி பெற்றுக்கொண்ட தகவல்களின்படி ஒருசில போதை மருந்துகளை எடுத்தால் இரண்டு மூன்று நாட்களுக்கு கூட போதை தெளியாமல் இருப்பதாக அறிந்து கொண்டவன், திருமணமன்று காலையில் மாப்பிளையை அலங்காரம் செய்து குடிக்க ஜூஸ் கொடுக்கும் போது அதில் போதை மருந்துகளை கலந்து விடலாம் என்று எண்ணினான் கதிர்வேல்.

ஆனால் அவனுக்கென்றே வாய்த்த சந்தர்ப்பம்தான் நீர்வீழ்ச்சியில் நடந்த பேச்சுலர் பார்ட்டி. பத்மினி ரமேஷை அனுப்ப மாட்டாளோ என்ற சந்தேகத்தில் தான் ரமேஷை திட்டினான். ஆனால் அவனை அழைத்து செல்லுமாறு அவள் இவனை திட்டினாள்.

அனைவருக்கும் சரக்கை இவன்தானே ஊற்ரிக் கொடுத்தான். ரமேஷுக்கு கொடுக்கும் பொழுது அதுவும் பாரின் சரக்கை கொடுக்கும் பொழுது தான் போதை மருந்தை கலந்து கொடுத்திருந்தான்.

அந்த இருளில், ஒரே ஒரு மின்விளக்கின் ஒளியில் இவன் போதை மருந்தை கலந்ததை யாரும் கவனிக்கவுமில்லை. கவனிக்கும் மனநிலையிலும் யாருமில்லை.

ரமேஷ் வீட்டுக்கு செல்லும் பொழுது குடித்து விட்டு சென்றால் வழியில்லையே போதையாகி மயங்கி விழுவான் என்று கதிர்வேலுக்கு தெரியும். அவன் வீட்டுக்கும் செல்லக் கூடாது. இங்கயும் மயங்க கூடாது. இங்கே மயங்கினால் அவனை அனைவரும் வீட்டுக்கு தூக்கிச் சென்று விடுவார்களே.

அவன் நினைத்தது போல் ரமேஷ் மயங்க ஆரம்பிக்கும் பொழுதுதான் வீட்டுக்கு கிளம்பியிருந்தான். செல்லும் வழியில்லையே மயங்கி விழுந்திருந்தான்.

சற்று நேரத்தில் தானே கதிர்வேல் நல்லதம்பியின் மற்றுமொரு சரக்கு பாட்டிலை எடுத்து வருவதாக வீட்டுக்கு கிளம்பினான்.

செல்லும் வழியில் விழுந்து கிடந்த ரமேஷை தூக்கிச் சென்று காட்டுக்குள் போட்டவன் பத்மினியின் வீட்டுக்கு சென்று எதுவுமே தெரியாதது போல் சரக்கு பாட்டிலோடு மீண்டும் நீர்வீழ்ச்சிக்கு வந்து சேர்ந்தான்.

ரமேஷோடு பத்மினிக்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி விட்டான் தான். தனக்கும் அவளுக்கும் எவ்வாறு திருமணம் நிகழும்? அதை எவ்வாறு நிகழ்த்துவது என்று கதிர்வேல் சிந்திக்கும் பொழுது கமலம் ஒரு பொய்யை சொல்லி அவர்களின் திருமணத்தை நடாத்தியிருந்தாள். 

தனக்கு விருப்பம் இல்லையென்றால் கதிர்வேல் கேள்விகள் கேட்டே திருமணத்தை நிறுத்தியிருப்பான். எந்தக் கேள்வியும் கேட்காமல், கமலத்தின் விருப்பத்துக்கு இணங்குவதாக காட்டிக் கொண்டு தன்னுடைய காதல் ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருந்தான்.

ஆனால் அவனும் எதிர்பாராதது பத்மினி அவனை சந்தேகப்பட்டதுதான். தான் நீர்வீழ்ச்சிக்கு ரமேஷை அழைத்து செல்ல மாட்டேன் என்று கூறியும் அவள் தன் மீது சந்தேகப்படுகிறாள் என்றால் அவளிடம் ரொம்பவே ஜாக்கரதையாக நடந்துகொள்ள வேண்டும் என்று தான் விலகியிருந்தான்.

கதிர்வேலால் அவளிடம் சென்று விளக்கம் கொடுக்க முடியாது ஏற்றுக்கொள்ள மாட்டாள். தன்மீதுதான் தவறு என்று பத்மினியை மற்றவர்கள் முன்னிலையில் நல்லவளாகி அவள் பார்வையை இவன் புறம் திருப்ப முனைந்தான். அவள் அவனை கண்டு கொள்ளத்தான் இல்லை.  

என்ன செய்வது? பத்மினியோடு எவ்வாறு ஒன்று சேர்வது என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் எங்கிருந்தோ வந்த சர்வேஷ் என்ன நடந்தது என்று கேட்டுக் கேட்டு குடைந்தெடுத்தான்.

சர்வேஷ் யார் என்று அறிந்து கொண்ட நொடி கோபம் தலைக்கேறியது என்னவோ உண்மைதான். இவனை வைத்துதான் நான் என் பத்மினியோடு ஒன்று சேர வேண்டும் என்று முடிவு செய்த கதிர்வேல் திட்டமிட்டு பத்மினியோடு இணைந்திருந்தான்.

யாரிடமும் மாட்டிக் கொள்ளக் கூடாது, எந்த பிரச்சினையிலும் சிக்கக் கூடாது என்று திட்டமிட்டு ரமேஷுக்கு போதை மருந்து கொடுத்த கதிர்வேல் “நான் தாண்டா உனக்கு போதை மருந்து கொடுத்தேன்” என்று  ரமேஷிடம் தைரியமாக கூறினான் என்றால் அதற்கும் காரணமிருக்காதா என்ன?

ரமேஷ் ஏற்கனவே போதை மருந்துக்கு அடிமையானவன்.

“டேய் என்னடா போயும் போயும் அவனை உன் மாமா பொண்ணுக்கு கட்டி வைக்க போற, அவன் ஐஸ் அடிக்கிறாண்டா…” பலபேர் கதிர்வேலிடம் கூறிய பொழுதும் அவன் அதை பற்றி வீட்டாரிடம் எதுவும் கூறவில்லை.

மாறாக ரமேஷை பின் தொடர்ந்து உண்மையை கண்டறிந்தான். உண்மையிலயே அவன் உக்குதொரயின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருகின்றான்.

போதை மருந்து விற்பவனின் வீட்டில் இவனுக்கு ன்ன வேலை? வாங்க செல்கின்றானா? விற்க செல்கின்றானா? மாலையில் செல்பவன் வாங்கத்தான் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் கதிர்வேல்.

தன்னுடைய திருமண நாளன்று காலையே ரமேஷ் போதை மருந்து உட்கொண்டு விழுந்துக் கிடந்தான் என்றதும், அவனது குடும்பத்தில் யாருமே அவன் அந்த தப்பை செய்திருக்க மாட்டான் என்று கூறவில்லை. காரணம் அவனது வீட்டாருக்கு அவன் போதை மருந்து உட்கொள்வது தெரிந்திருக்கிறது.

அதனால் தான் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைத்திருந்தனர். பரிசோதித்தால் ரமேஷ் போதை மருந்து உட்கொள்கின்றானா? இல்லையா? என்று மையத்தில் இருப்பவர்களுக்குத் தெரியாதா? அதனால் தானே ஆறு மாதங்கள் ரமேஷ் மையத்தில் இருந்து விட்டு வந்தான்.

சர்வேஷை பற்றியெல்லாம் கதிர்வேலுக்கு கவலையில்லை. சர்வேஷ் சென்று தான் தான் ரமேஷுக்கு போதை மருந்து கொடுத்ததாக கூறினாலும், ரமேஷை பற்றி அறிந்த யாருமே அதை நம்பப் போவதில்லை என்பதுதான் உண்மை. அதனால் கதிர்வேல் ரமேஷை பற்றியோ, சர்வேஷை பற்றியோ கவலை கொள்ளாது பத்மினியை எவ்வாறு சமாளிப்பது என்று மட்டுமே சிந்தித்தான். 

கொழும்பிலிருந்து வந்திறங்கிய செல்வா வண்டிக்கு பணம் கொடுத்து விட்டு பொருட்களை எடுத்துக் கொண்டு வர, தோளில் தூங்கும் குழந்தையோடு வீட்டுக் கதவை திறந்தாள் லாவண்யா.

“ரொம்ப நன்றி” என்று லாவண்யா ஆரம்பிக்கும் பொழுதே

“அத நீயே வச்சிகிறியா” கொண்டு வந்த பொருட்களை வாசலில் வைத்தவாறே “டயட் என்றும் பார்க்காம எனக்கு ஒரு காபி போட்டு கொடு” என்றான் செல்வா.

காபி போட்டு கொடுக்க முடியுமா? என்றெல்லாம் செல்வா கேட்கவில்லை. நீ போட்டு கொடுத்தேயாக வேண்டும் என்ற தொனியில்தான் தான் கேட்டான்.

இவ்வளவு செய்த இவனுக்கு ஒரு காபி போட்டுக் கொடுக்க மாட்டாளா? ஒரு தலையசைப்பில் சரியென்றவள் தூங்கும் ஹரியை கட்டிலில் கிடத்தி விட்டு சமயலறைக்குள் நுழைந்தாள். 

“நான் உள்ள வரலாமா?” செல்வா அனுமதி கேட்டாலும் லாவண்யாவின் பதில் வரும் வரையில் காத்திருக்காமல் சமயலறைக்குள் சென்றவன் பின்பக்க கதவை திறந்து பின்னால் என்ன இருக்கிறது என்று பார்த்தான்.

“பரவாலையே நாடு இருக்குற நிலமைல வீட்டுல செடி, கொடி எல்லாம் வச்சிருக்கியே. இருக்குற விலைவாசிக்கு கொஞ்சமாச்சும் உதவும்” மாலை மங்கும் வேளை லாவண்யாவின் வீட்டுத் தோட்டத்தில் கதிரவன் பரப்பிய ஒளிகளினூடே தெரிந்த செடிகளை கதவருகே நின்று பார்வையிட்டான் செல்வா. 

“கொரோனா டைம்லயே நட்டதுதான். பின்னாடி நிறைய இடமிருக்கில்ல” என்றவளோ காபி போடுவதில் கவனமானாள்.   

கொஞ்சம் நேரம் தோட்டத்தை பற்றி பேசியவர்கள் காபி கப்புகளை கையில் ஏந்திக் கொண்டனர்.

“நான் உங்கள எப்படி கூப்பிட? அண்ணான்னு கூப்பிடவா?” லாவண்யா சட்டென்று கேட்டு விட, புரையேறி செல்வா இருமலானான்.

அவன் முதுகை நீவிவிடுவதா? வேண்டாமா? என்று லாவண்யா யோசிக்க, செல்வாவே பேசினான்.

“என்ன நீ என் கூட பொறந்தியா? அண்ணனாம் அண்ணன். என் பேர சொல்லியே கூப்டு” கடுப்பில் சீறினான்.

அவன் திடீர் கோபம் லாவண்யாவுக்கு புரியவில்லை. அவனை சீண்ட “பேர சொல்லி கூப்பிட்டா, நீயா எனக்கு பேரு வச்ச என்று கேக்க மாட்டிங்களா?” என்று சிரித்தாள்.

அவளுடைய இந்த அவதாரம் செல்வாவின் மனதை ரொம்பவே கவர்ந்திருந்தது. “பார்டா… டைமிங் ஜோக் அடிக்கிறா” என்றவன் “பேர் வைக்கிறது கூப்பிடத்தான் நீ என் பேர் சொல்லியே கூப்பிடு. உனக்கு பேர் சொல்ல சங்கடமாக இருந்தா… அத்தான், மாமா என்று கூப்டேன். நான் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டேன் என்று” அவளை உத்துப் பார்த்தான்.

செல்வா என்ன அர்த்தத்தில் பேசுகிறான் என்று கவனம் சிதறி, அத்தான் என்றதில் விக்னேஷின் ஞாபகம் வந்து முகம் சுணங்கினாள் லாவண்யா. 

அதை கவனித்த செல்வாவோ “வேணும்மா சிங்களத்துல அய்யேனு கூப்பிடுறியா? யாருக்கும் சந்தேகம் வராது” என்று சிரித்தான்.

அவன் சிரிக்கும் பொழுதுதான் அவன் பேச்சின் அர்த்தம் மெல்ல மெல்ல அவளுக்கு புரிய ஆரம்பித்தது.

“நீங்க என்ன பேசுறீங்க என்று தெரியல. காபி குடிச்சீங்கன்னா கிளம்புங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு” அவன் கையிலிருந்த கப்பை பறித்தவள் அவனை வெளியேறுமாறு தள்ளி விட்டாள்.

“நான் இன்னும் குடிச்சி முடிக்கவே இல்ல” செல்வா கத்த, அவனை துரத்தாத குறையாக வீட்டை விட்டு அனுப்பி கதவை சாத்தியவள், கதவிலையே சாய்ந்தமர்ந்தாள். நெஞ்சம் பட படவென வந்தது. 

வழமையாக செல்வா கேலி, கிண்டல் செய்பவன்தான். இன்று அவனது பேச்சும், பார்வையும் அவளுக்கு வேறு அர்த்தம் கூறுவது போல் இருக்க, தனக்குள் ஏற்படும் இந்த உணர்வு அவளுக்கே புதிது. அதை ஏற்றுக்கொள்ள முடியாமலும், எப்படி கையாள்வது என்று தெரியாமலும் தான் அவனை வீட்டை விட்டு அனுப்பினாள்.

உடல் உதறலெடுத்து ஜுரம் வருவது போல் இருக்க, மெதுவாக எழுந்து சென்றவள் ஹரியை அணைத்துக் கொண்டு கண் மூடினாள்.

“ஒரு காபி கேட்டது குத்தமா? குடிச்சி முடிக்கிறதுக்குள்ள பிடிங்கி எடுத்துட்டா கிராதகி” புலம்பியவாறே வெளியே வந்தான் செல்வா.

அப்பொழுதுதான் பத்மினியை அழைத்துக் கொண்டு கதிர்வேலும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான். செல்வாவை கண்ட கதிர்வேல் “இப்போதான் கொழும்பிலிருந்து வந்தியா? போன காரியம் என்ன ஆச்சு?” என்று கேட்டான்.

“அதெல்லாம் அமோகமா ஆச்சு. தங்கச்சி எனக்கு ஸ்ட்ரோங்கா காபி போட்டுக் கொடுமா. அந்த லாவண்யாகு காபி கூட ஒழுங்கா போட தெரியல”  கப்பை பிடுங்கிய கடுப்பில் லாவண்யாவை திட்டினான் செல்வா.

“யாரு லயாகா? இத அவகிட்ட போய் சொல்லிப்பாரு” என்ற கதிர்வேல் உள்ளே செல்ல

“லயாவா? இவன் எதுக்கு செல்ல பேரெல்லாம் வச்சிருக்கான்” கோபமாக செல்வா அறைக்குள் நுழைய சர்வேஷ் படுத்திருந்தான்.

“என்ன தம்பிசார் உடம்பு முடியலையா? இந்த நேரத்துல படுத்திருக்குறீங்க?” எல்லாம் மறந்து சர்வேஷின் அருகில் ஓடினான் செல்வா.

அவன் குரல் கேட்டதும் தான் சர்வேஷின் முகத்தில் ஒளி தெரிந்தது.

“நீ இல்லாம போர் அடிக்குது செல்வா அண்ணா. இப்பவாச்சும் வந்துட்டியே. என்ன போன காரியம் சக்ஸஸ்ஸா? உனக்கும் லாவண்யாக்கும் இடைல எல்லாம் ஸ்மூத்தா போகுதா?”

“அட போங்க தம்பி நீங்க வேற கடுப்பேத்திக்கிட்டு, இவ்வளவு செஞ்ச பிற அண்ணான்னு கூப்பிட போனா லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டு வந்துட்டேன்” என்றான்.

“ஹாஹாஹா எதையுமே எதிர்பார்க்காமத்தான் உதவி செய்யணும். நீ என்னடான்னா அந்த புள்ளையாவே கேக்குறியே நியாயமா இது?” சர்வேஷ் கிண்டல் செய்ய,

“நான் ஒன்னும் அவள கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்கலையே, அண்ணனு கூப்பிடாதே என்றுதான் சொன்னேன். தமிழ்ல வேணாம் சிங்களத்துல அய்யே என்று கூப்பிட சொன்னேன். அதுக்கு குடிச்சிகிட்டு இருந்த காபியையும் பிடிங்கி வெளிய துரத்திட்டா” கொஞ்சம் கோபக்குரலில் தான் செல்வா சொன்னான்.

செல்வாவின் கோபமெல்லாம் சர்வேஷுக்கு பொருட்டே இல்லை. “ஆமா சிங்களத்துல அய்யா என்றா  தமிழ்ல அண்ணான்னு அர்த்தம். நீ என்ன ஸ்பெஷலா சிங்களத்துல சொல்ல சொல்லிட்டு வந்திருக்க” புரியாது கேட்டான் சர்வேஷ்.

“நீங்க சிங்களம் கத்துக்கிட்டு என்ன பிரயோஜனம்? இந்த ஊரு பொம்பளைங்க அண்ணாவையும் அய்யே என்றுதான் கூப்பிடுறாங்க, கட்டின புருஷனையும் அய்யே என்றுதான் கூப்பிடுறாங்க”

“என்ன?”

“ஆமா ஒரே வார்டு… ஒரே அர்த்தம்.. ஆளுங்கதான் வேற வேற. யார் கூட பேசுறோம், யாரை பத்தி பேசுறோம் என்று பொறுத்து இருக்கு” செல்வா சுவாரச்சயாமாக வண்டி ஓட்டுனரது நடந்த சம்பாஷணையை கூறினான்.

“அப்படியா? சரி சரி” என்ற சர்வேஷ் யோசனையாகவே இருக்க,

“என்ன தம்பி ஊருக்கு போன சுரங்கணி புள்ள போன் பண்ணவே இல்லையா?” இதனால் தான் சர்வேஷ் கவலையாக இருக்கின்றானோ என்று செல்வா கேட்க,

“அவ போன் பண்ணல தான். அது கூட இப்போ பிரச்சினை இல்ல. அண்ணா…” என்றவன் ரமேஷோடு நடந்த பிரச்சினையையும், அதன் பின் தான் கதிர்வேலோடு பேசியதையும் செல்வாவிடம் கூறினான்.

“என்ன நீங்கதான் அவரோட தம்பி என்று அவருக்கு ஏற்கனவே தெரியுமா?” அதிர்ந்தான் செல்வா.

Advertisement