Advertisement

அத்தியாயம் 2
“பத்மினி பத்மினி… எங்கடி இருக்க? ஒரு டீ போட்டுக் கொண்டு வாடி. தலை வலிக்குது” உள்ளே நுழைந்தவாறே சரோஜா கத்தினாள்.
“பால்மா காலி. வேணா இஞ்சி போட்டு ஒரு பிளேன் டீ போடவா?” காய போட்டிருந்த துணிகளை உள்ளே அள்ளிக் கொண்டு வந்து கதிரையில் தொப்பென்று போட்டவாறே கேட்டாள் பத்மினி.
இலங்கையிலுள்ள இரத்தினபுரி என்ற நகரத்திலுள்ள ஒரு தேயிலை தோட்டத்தில்தான் சரோஜாவின் வீடு அமைந்துள்ளது.
சரோஜாவின் முன்னோர்கள் ஆங்கிலேயர்களின் காலத்தில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தேயிலை தோட்டத்தில் வேலைக்காக வந்தவர்கள். சுதந்திரம் கிடைத்த பின்னும் அவர்கள் நாடு திரும்பவில்லை. சரோஜா இங்குதான் பிறந்தாள்.
வெள்ளையர்களிடமிருந்து கைப்பற்றிய நிலங்களை அரசாங்கம் பராமரிக்க முடியாத நிலையில் தனியாருக்கு விற்றிருக்க, சரோஜா தங்கியிருக்கும் தோட்டமும் தனியாருக்கு சொந்தமானதுதான்.
காலங்கள் கடந்த நிலையில் தோட்டத்தில் வேலை செய்வோருக்கு காணிகள் வழங்கல்ப்பட்டதால் அந்த மலையின் கிழக்கால் அமைந்துள்ள குன்றில்தான் சரோஜாவின் வீடு அமைந்திருந்தது.
பத்மினி சரோஜாவின் தம்பியின் மகள் மட்டுமன்றி தனது ஒரே மகனான கதிர்வேலை திருமணம் செய்திருக்கும் மருமகள்.
“ஏன்டி முந்தா நாள் தானே பால்மா வாங்கினேன். நேத்து எப்படி காலியாகும்?” வேலைக்கு சென்று வந்த உடனே ஒரு டீ சாப்பிடவில்லையென்றால் சரோஜாவுக்கு உடலே ஆட்டம் காண கடுப்பானாள்.
இலங்கையில் பால் பண்ணைகள் இருந்தாலும் அதிகமான மக்கள் பால்மா தான் உபயோகிக்கின்றனர். உள்நாட்டு பால் பண்ணைகள் தயாரிக்கும் பால்மா பற்றாகுறையால் வெளிநாடுகளிலிருக்குதும் இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.
பொருளாதார நெருக்கடியால் இறக்குமதி செய்யப்படுவது தடைப்பட்டிருந்த நிலையில், உள்நாட்டு தயாரிப்புகள் பற்றாக்குறை திண்டாட்டம் ஒரு பக்கம் இருக்க, விலையும் உயர்ந்திருந்தது.   
“நீ என்ன ஒரு கிலோ வாங்கி வந்தியா? நானூறு கிராம் பாக்கெட்ட வாங்கி வந்தியா? நூத்தி அம்பது கிராம் சின்ன பாக்கெட்டு, நீ மட்டும் சாப்ட்டா மூணு நாளைக்கு சாப்பிடுவ. காலைல உன் புள்ள அவனாகவே டீ போட்டு சாப்பிட்டு கிளம்பினான். அதான் காலியாகிருச்சு”
காலையில் என்ன நடந்தது என்று மாமியாரிடம் கூற ஆரம்பித்த பத்மினியின் கைகள் துணியையும் மடிகளானது. 
கதிர்வேல் “பத்மினி டீ போட்டுக் கொடு” என்றான். அதிகாரத் தோரணையா? உரிமையில் கேட்கிறானா? என்று பிரித்தறிய முடியாத ஒரு குரல். 
“உனக்கு வேணானும்னா உன் பொண்டாட்டிக்கும் சேர்த்து நீ பால்மா வாங்கி வந்து டீ போட சொல்லி குடி. நான் வாங்கி வந்த பாக்கட்டுல கை வச்சா கொன்னுடுவேன்” மாலையில் தனக்கு டீ வேணும் என்பதால் மகனை மிரட்டினாள் சரோஜா.
“என்ன பெத்த ஆத்தா
டீக்கு தடை போட்டா
காசு கொடு ஆத்தா
நான் கடைல சாப்பிடுறேன் பாஸ்தா 
சொல்லிச் சொல்லி ஆறாது
சொன்னா துயர் தீராது
சொல்லிச் சொல்லி ஆறாது”
“சீ வாய மூடு. காலையிலையே ஒப்பாரி வைக்காத. என்ன பேசினாலும் பதில் பேசுறியா? பாட்டுலையே பதில் சொல்லுற. பேசாம ஏதாவது டீவி ப்ரோக்ராம்ல போய் பாடு. பையன் சம்பாதிச்சு என்ன உக்காரவச்சி சோறு போடுவான்னு பார்த்தா. இன்னும் இவனுக்கு நான் கஞ்சி ஊத்த வேண்டி இருக்கு” மகனை திட்டியவள் மருமகளை பார்த்து “பழைய சோறு இருந்த இந்த நாய்க்கு போடு. தின்னுட்டு போகட்டும். பாஸ்தா வேணுமாம் பாஸ்தா. முதல்ல உருப்படியா ஒரு வேலை செஞ்சி நாலு காச வீட்டுக்கு சம்பாதிச்சிக் கொடு” தினமும் காலையில் சரோஜா கத்துவதும், கதிர்வேல் பாடுவதும் இந்த வீட்டில் நடப்பதுதான்.
மகனை திட்டியவாறே சரோஜா வேலைக்கு கிளம்பி சென்றிருக்க, சரோஜா செல்லும்வரை  குட்டி போட்ட பூனை போல சுற்றி வந்தவன் “பத்மினி டீ போடு” என்றான். ஆகா மொத்தத்தில் சரோஜா திட்டியதெல்லாம் இந்த காதில் வாங்கி இந்த காதில் வெளியேறியாச்சு என்ற கணக்குதான் கதிருக்கு.
“எதுக்கு அத்த கிட்ட நான் திட்டு வாங்கவா? உனக்கு வேணும்னா நீ போட்டுக் குடி” பத்மினி அவனை கண்டு கொள்ளாது வீட்டு வேலைகளை பார்த்தவாறு கதிர்வேல் என்ன செய்கின்றான் என்று நோட்டமிட்டாள். 
டீ போடு
Strong’அ டீ போடு
டீ போடு
Lite’அ டீ போடு
டீ போடு
Medium டீ போடு
டீ போடு
இஞ்சி டீ போடு
பால்மா விலை ஏறிச்சு.
சுகர் விலை எறிச்சு.
கடைல குடிக்க முடியல டீ
புத்தனும் சொன்னதில்ல
புத்தகத்தில் கண்டதில்ல
தத்துவம் பாடம் சொல்லும்
டீ டீ டீ
மாட்டு பாலில்
போட்டு பாரு
தீர்ந்து போகும் டீ
ஞான பாலில்
போட்டு பாரு
தீர்ந்திதாட டீ
சொன்ன பேச்சு கேக்காத பொண்டாட்டி.
கட்டி கிட்ட பாவத்துக்கு தினமும் ஒரு டகால்டி
டகால்டி… டகால்டி… டகால்டி..
இவதான் எனக்கு பொண்டாட்டி.. பொண்டாட்டி.. பொண்டாட்டி..          
பாடியது மட்டுமல்லாது அதற்கேற்றது போல் ஒரு ஆட்டத்தையும் போட்ட கதிர்வேல் டீ போட்டு குடிக்கலானான்.
“போன ஜென்மத்துல புலவரா பொறந்திருப்பானோ? எதுக்கெடுத்தாலும் பாட்டு பாடுறான். பஸ்ஸுல பாட்டுப் பாடியாவது வீட்டுக்கு சம்பாதிச்சு கொடுத்திருக்கலாம். அந்த எண்ணம் கூட இல்ல. குடி, குடி, குடி அது மட்டும் தான் இவனுக்கு தெரியும்”
கதிர்வேலை பார்த்தும் பார்க்காமலும் தனது வேலையில் கவனமாக இருந்தாள் பத்மினி. அவனோடு எந்த பேச்சு வார்த்தையும் பத்மினி வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அவனோடு பேசினாலே இவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும். “இவன் கிட்ட பேசி என் பிபியை எகிற விடணுமா?” என்று அவனிடமிருந்து விலகி இருக்கத்தான் பார்ப்பாள்.
எப்பொழுது அவன் வீட்டை விட்டு கிளம்புவான் என்று இவள் முற்றத்தை பெருக்கிக் கொண்டிருக்க, வழக்கம் போல் ஷோர்ட்டுக்கு மேலால் ஒரு லுங்கியை அணிந்தவன் ஷார்ட் கையை மடித்து மேலே ஏற்றி விட்டு கிளம்ப, வாசலில் படுத்திருந்த நாய் மெதுவாக கண்களை திறந்து பார்த்தது.
“ஏய் பத்து…. மறக்காம அந்த பழைய சோத்த மணிக்கு வைடி. பாவம் அவன் நைட் டியூட்டி பார்த்து தூங்குறான்” என்றவன் நாயை பார்த்து “என்ன பார்த்து சரோஜா நாய்னு சொன்னா மணி. நான் நயினா நீ யாரு? இந்த வீட்டு வாரிசா?” சத்தமாக சிரித்தவன்
“வாரிசு படத்துல இருந்து பாட்டு வரட்டும் பாடியே சரோஜாவ வெறுப்பேத்துறேன்” என்றவன் “பத்து நான் கிளம்புறேன் டி…” என்னமோ அவள் வாசல்வரை வந்து வழியனுப்பி வைப்பது போல் விடைபெற்றான்.
“ஆமா சார் கிளம்புறாரு. வண்டிவரைக்கும் போய் நாங்க வழியனுப்பனும்” அவனது குரலுக்கு பதில் சொன்ன பத்மினி எட்டிக் கூட பார்க்கவில்லை. நாள் முழுவதும் கதிர்வேலை வசைபாடியவாறே சரோஜா வரும் வரை வேலைகளை செய்யலானாள்.
சரோஜா வீடு வந்த உடன் பஞ்சாயத்தை கூட்டியிருந்தாள்.  
“யாரு கதிரா? சாப்பாடு போடமாட்டேன் என்று சொன்னதும் அவனே போட்டு சாப்பிட ஆரம்பிச்சிட்டானா? நயா பைசா சம்பாதிக்க துப்பில்ல. கழுதைக்கு சோறு மட்டும் கேக்குது” மாலையில் அருந்தும் டீ பறிபோனதில் கோபத்தின் எல்லைக் கோட்டை கடந்திருந்தாள் சரோஜா.
“ஒரு வேலைல ஒழுங்கா இருக்கானா? என்ன பண்ணுறான்னே தெரியல. சம்பாதிக்கிறது வீட்டுக்கு கொடுக்குறதும் இல்ல. பொம்பளைங்க நாங்க சம்பாதிச்சு அவனுக்கு சோறு போட வேண்டியிருக்கு. நம்ம குடும்பத்து ஆம்பிளைக ஏன் தான் இப்படி இருக்காங்களோ. உங்கப்பன் வேற தண்டமா வீட்டுல உக்காந்துகிட்டு உங்கம்மாவ வீட்டு வேலைக்கு அனுப்பி உக்காந்து சாப்பிடுறான். வெவஸ்த கெட்டவன்” பத்மினியின் தந்தை நல்லதம்பியையும் சேர்த்து திட்ட ஆரம்பித்தாள்.
அப்பாவை திட்டுவதை பத்மினியால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.
“நீ டீ சாப்பிடணும் என்று நானே உன் பால்மால கை வைக்க மாட்டேன். நானே குடிக்காதத, எங்கப்பா வந்தாவா போட்டுக் கொடுக்க போறேன்? இப்போ எதுக்கு நீ வீணா அவரை இழுக்கிற? ஒன்னு நீ வாங்கிட்டு வர்றத உன் பையனோட கண்ணுல சிக்காம ஒழிச்சு வைக்கணும், இல்ல போதுமான அளவு வாங்கிட்டு வரணும்” பத்மினி எரிச்சலானாள்.
“ஆமாண்டி பால்மா விக்கிற விலைல உனக்கும், உன் புருஷனுக்கும் சேர்த்து நான் வாங்கிட்டு வரணுமா? நீயும் தான் வேலைக்கு போற. வாங்குற சம்பளத்துல ஹேர் கிளிப்பு. பேண்டு, பவுடர், கிரீமு என்று எல்லாத்தையும் வாங்குறியே. வயித்துக்கு சாப்பிட ஏதாவது வாங்குறியா? மேனாமினிக்கி. மேனாமினிக்கி” மருமகளையே வசைபாட ஆரம்பித்தாள்.
“ஏன் அத்த நான் என்ன வாங்குற சம்பளத்த உனக்கு தராம உன் பையன போல வெட்டி செலவு பண்ணுறேன்னு சொல்லுறியா? வீட்டு செலவுக்கு நானும் காசு தரேன் இல்ல.
நம்ம நாடு இருக்குற நிலமைல அத்தியாவசிய பொருளெல்லாம் விலையேறி போச்சு. எங்க நான் டீ குடிச்சா. உனக்கு இல்லாம போகும் என்று நான் டீ குடிக்காம இருந்தா. உன் பையன் பால்மாவை காலி பண்ணதுக்கு நான் உன் கிட்ட பேச்சு வாங்கணுமா? எங்க உன் பையன் வந்தா அவன் கிட்ட பேசேன்.
டீக்கு காசாவது வாங்கிக்கிறியா? வீட்டு செலவுக்கு உன் பையன் கிட்ட காசு கேட்காத. அவன் பண்ணுறதுக்கெல்லாம் என்ன திட்டு” துணிகளை மடித்தவாறே பொறியலானாள் பத்மினி.
கதிர்வேல் வீட்டில் இல்லை. அவன் எப்பொழுது வருவான் என்றும் இவர்களுக்கு தெரியாது. வீட்டில் இல்லாத அவனால் தினமும் இவர்களுக்கிடையில் பிரச்சினை நடந்து கொண்டுதான் இருக்கும்.
அவன் ஒரு வித்தியாசமான பிரச்சினை. மகனின் மேல் பாசம் கொண்டு மருமகளை சரோஜா என்றுமே திட்டியதே இல்லை. கணவன் மீது காதல் கொண்டு மாமியாரோடு பத்மினியும் சண்டை போட்டது கிடையாது.
அவன் மீது இருக்கும் கோபமும், வெறுப்பினாளையுமே இவர்களுக்குள் சண்டை நிகழும். அவன் ஒரு வினோத பிறவி. வித்தியாசமான உயிரினம். அப்படித்தான் பத்மினி அவனை பார்ப்பாள்.
“அவன் உன் புருஷன் தானே. அவன் என்ன வேல பாக்குறான்? எவ்வளவு சம்பாதிக்கிறான் என்று பொண்டாட்டி நீ கேட்டு தெரிஞ்சிக்க வேணாம். இஷ்டப்பட்டு தானே கட்டிக்கிட்ட. தருதலையா சுத்துறவன திருத்தி உன் வழிக்கு கொண்டு வர வேணாம்?”
சரோஜா கூறுவது போல் பத்மினி ஒன்றும் கதிர்வேலை இஷ்டப்பட்டு திருமணம் செய்து கொண்டிருக்கவில்லை. வேறு வழியில்லாமல் திருமணம் செய்திருந்தாள்.
 “உன் புள்ளைய திருத்தத்தான் பூமில நான் பொறந்து வளர்ந்தேன் பாரு. நீ புள்ளையா பெத்து வச்சிருக்க? சரியான தொல்லைய இல்ல பெத்திருக்க. அவனையெல்லாம் என்னால சமாளிக்க முடியாது. நீ பெத்தத நீயே திருத்து” மடித்த துணிகளை எடுத்துக் கொண்டு கோபமாக அறைக்கு சென்றாள் பத்மினி.  
சரோஜாவின் ஒரே தம்பி நல்லதம்பி எனும் ராஜு. ஒரு கூலித்தொழிலாளி. கமலத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டவனுக்கு திருமணத்திற்கு முன்பிலிருந்தே குடிப்பழக்கம் இருந்தது. குடித்து விட்டு வருவதால் கமலம் சண்டை போட ஆரம்பித்திருக்க, பத்மினி பிறந்த பின்னும் சண்டை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. 
தினம் தினம் வீட்டில் நடக்கும் சண்டையை பார்த்து வளர்ந்தவளுக்கு ஆறுதலாக இருந்த ஒரே ஜீவன் கதிர்வேல்தான்.
“அழாதே பத்து… அழாதே பத்து…” என்று இவளது கண்ணீரை துடைத்து அருகிலையே அமர்ந்திருப்பான்.        
“அத்தான்… அத்தான்…” என்று அவன் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தவள் தான் அவன் செய்பவைகள் பிடிக்காமல் மெல்ல, மெல்ல அவனை விட்டு விலக ஆரம்பித்தாள். 
அப்பொழுது பத்மினிக்கு பன்னிரண்டு வயது. கதிருக்கு பதினான்கு.
பாடசாலைக்கு செல்ல பத்மினியின் வீட்டு வாசலில் தினமும் காலையிலையே வந்து நிற்பான் கதிர்வேல்.
“பத்து….. உன் அத்தான் வந்துட்டான். ஸ்கூலுக்கு கிளம்பு” கமலம் மகளை அழைக்க,
“நான் அவன் கூட போக மாட்டேன்” என்று அடம்பிடிக்கலானாள்.
“ஏன்டி உன்ன பத்திரமா கூட்டிட்டு போக அவன் காலையிலையே வாரான். நீ என்னடான்னா வீம்பு பிடிக்கிற. போடி…” பத்மினியின் முதுகில் இரண்டு வைத்தாள்.
“அத்த இன்றவளுக்கு மிட்டாய் வாங்க காசு கொடு” என்னமோ பத்மினிக்கு வாங்கிக் கொடுக்க பணம் கேட்பது போல் கேட்டான் கதிர்வேல்.
“இருடா தங்கம் தரேன். ஐஸ் சாப்பிடாதீங்க” என்றவாறே புடவை முந்தியில் முடிச்சிருந்த பணத்தை எடுத்துக் கொடுத்தாள் கமலம்.
கதிர்வேலை முறைத்தவாறே பத்மினி நடக்க, அவனோ அவளை கண்டுகொள்ள கூட இல்லை. பாதையில் நடப்பவைகளை வேடிக்கை பார்த்தவாறு நடந்தான்.
“அம்மா என்னவோ இவன் எனக்கு பார்ட்டிகார்ட் போல பேசுறாங்க. இவன் என்ன கூட்டிட்டு போறதே அவனை பாதுகாக்க” தன்னை கசாப்பு கடைக்கு இழுத்து செல்லும் பலியாட்டை போல் கற்பனை செய்து பார்த்தவள் தலையை உலுக்கிக் கொண்டாள்.
பாடசாலைக்கு செல்பவன் அமைதியாக செல்ல வேண்டியது தானே. கீழே கிடக்கும் கற்களை பொறக்கியவாறே வந்தவன் பாதையில் தூங்கிக் கொண்டிருக்கும் நாய்களை குறி பார்த்து அடித்தவாறே சென்று கொண்டிருந்தான்.
நாய் குறைக்க ஆரம்பிக்க, பாடசாலை செல்லும் குழந்தைகள் அஞ்சியவாறே ஒதுங்கி செல்ல, பத்மினியும் கதிர்வேலை முறைத்தவாறே நகர்ந்தாள்.
ஒரு நாய் கதிர்வேலை துரத்த அவன் தனியாக ஓடாமல் பத்மினியின் கையை பற்றி இழுத்துக் கொண்டு ஓடலானான்.
பத்மினி அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் இழுத்த இழுப்பில் அருகில் இருந்த குப்பை மேட்டில் விழுந்தாள்.
விழுந்தவளை தூக்கி விடக் கூட கதிர்வேலால் முடியவில்லை. ஓட்டம் பிடித்தவன் அருகிலிருந்த மரத்தின் மேல் தான் ஏறி நின்றான்.
கீழே விழுந்த பத்மினியோ விழுந்து வலிப்பதாக அழுவதோடு குப்பை மேட்டில் விழுந்ததை எண்ணி ஓவென அழ ஆரம்பித்தாள். பாடசாலைக்கு சென்று கொண்டிருக்கும் மாணவர்கள் எல்லாம் அவளை பார்த்து சிரிக்க, கதிர்வேல் மேல் பத்மினிக்கு கொலைவெறியே வந்தது. மளிகைக் கடை  வைத்திருக்கும் சிறிசேன முதலாளி அவளை தூக்கி விட்டு வீட்டுக்கு செல்லுமாறு கூற, அழுதவாறே வீட்டுக்கு வந்தாள்.
“ஏய் என்னடி ஸ்கூலுக்கு போனவ அழுது கிட்டு வர” கமலம் கறை படிந்திருந்த பத்மினியின் சீருடையை பார்த்தவாறு கேட்டவள் பதறியவாறே மகளின் அருகே ஓடி வந்தாள்.
“போம்மா… போம்மா… நான் அப்பவே சொன்னேன். அவன் கூட போக மாட்டேன்னு. கூட்டிட்டு போய் என்ன குப்பைமேட்டுல தள்ளி விட்டான்” அழுதவாறே கூறியவள் கதிர்வேலை அடிக்க முடியாத கோபத்தில் கமலத்தை அடிக்கலானாள்.
“என்ன பத்து… நாய் துரத்தி நீ குப்பைமேட்டுல விழுந்ததுக்கு நான் தள்ளி விட்டேன்னு சொல்லுற” என்றவாறே அங்கே வந்தான் கதிர்வேல்.
“நாய் துரத்தி தான் விழுந்தியா? இவன் மேல உனக்கு அப்படி என்னடி கோவம்? எல்லாத்துக்கும் அவனையே குத்தம் சொல்லுற?” அப்பாவி போல் நின்றிருந்த கதிர்வேலை பார்த்தவாறு கமலம் கூற, இருவரையும் பத்மினியால் முறைக்க மட்டும்தான் முடிந்தது.
“அப்பா… வேல் நீ கிளம்பு. இவ அழுகுற அழுகைக்கு இன்னைக்கு ஸ்கூல் போக மாட்டா” பத்மினி சொல்வதை காதிலையே வாங்காமல் “போ… போய் குளி நாறுது” மகளை திட்டினாள் கமலம்.
“பத்து.. போய் குளி…” என்றவாறே ஸ்கூலுக்கு ஓடினான் கதிர்வேல்.
பாடசாலை செல்லும் பொழுது நாயை தூங்க விடாமல் செய்வானென்றால், வரும் பொழுது ஊரான் மரத்தில் காய்க்கும் பழங்களை பறிக்க கல் எரிவான் கதிர்வேல்.
பலமுறை மாங்காய் பறித்து மாட்டிக் கொண்டும் இருக்கின்றான். கல் எரிந்ததில் சிலரது மண்டையை உடைத்தும் இருக்கின்றான்.
சரோஜாவின் வீடு தேடி வந்து பலர் புகார் வாசித்து விட்டு செல்ல, சிலர் சண்டை போட்டு விட்டு செல்வார்கள்.
கதிர்வேல் வீடு வந்த உடன் குச்சியால் சரோஜா அவனை வெளுத்து வாங்குவாள் என்று பார்த்தால், அவன் வீட்டுக்கு செல்ல மலை ஏறும் பொழுதே கீழ் வீட்டில் இருக்கும் லாவண்யா “போ போ… இன்னக்கி கறி விருந்துதான்” என்று நக்கல் செய்வாள்.
அது என்னவோ குறியீட்டு வார்த்தை போல் சரோஜா கோபமாக இருப்பதை புரிந்துகொள்வான் கதிர்வேல்.
இவனை பார்த்த உடனே யார் வந்தார்கள் என்ன நடந்தது என்று சரோஜா கத்த ஆரம்பிப்பாள்.
“நான் அப்போவே பத்துகிட்டே சொன்னேன். மாங்கா பறிக்க சொல்லாதே என்று. கேட்டாளா? இப்போ பிரச்சினையாகிருச்சு” பழியை தூக்கி பத்மினியின் மேல் அசால்டாக போடுபவன் “நீ அவளை அடிக்க மாட்ட, மங்கா பரிச்ச என்ன இல்ல அடிப்ப. அடி அடி… நல்லா அடி” என்று அவள் முன்னால் போய் நிற்க, பத்மினிக்காக மங்கா பறித்தான் என்றதும் அடிக்காமல் திட்டியவாறே சரோஜா அமைதியானாள். 
ஒருநாள் சரோஜாவிடம் வந்து “அம்மா காசு கொடு பத்து லவரியா சாப்பிடணும் என்று கேட்டா. சிறிசேன மாமா கடைல சுடச்சுட லவரியா போட்டிருக்காங்க” என்றான்.
பத்மினி ஆசைப்பட்டாள் என்றதும் சரோஜாவும் சற்றும் யோசிக்காமல் பணத்தை எடுத்துக் கொடுத்து “மூணு வாங்கு. நீ ஒன்னு சாப்பிட்டு அவளுக்கு ரெண்டு கொடு” என்றாள் சரோஜா.
“பெத்த புள்ள எனக்கு ஒன்னு அவளுக்கு ரெண்டா?”  அன்னையை முகம் மலர பார்த்தவன் “சரிம்மா… சரிம்மா…” என்று பணத்தோடு வெளியேறினான்.
நேராக சென்றது பத்மினியின் வீட்டுக்குத்தான்.
பத்மினி இருக்கின்றாளா என்று சுற்றிமுற்றி பார்த்தவன் “எங்க அத்த பத்து” என்று அன்பாக விசாரித்தான்.
அவன் உள்நோக்கம் புரியாமல் “வடை வாங்க இப்போதான் கடைக்கு போனா நீ பார்க்கல”
சரோஜாவின் வீட்டிலிருந்து கமலத்தின் வீட்டுக்கு வர சிறிசேன முதலாளியின் கடையை தாண்டித்தான் வர வேண்டும். அதனால்தான் கமலம் அவ்வாறு கேட்டாள்.
கடையில் இருந்த பத்மினி தான் கதிர்வேல் வருவதை பார்த்ததும் மறைந்து கொண்டாளே. இவன் எப்படி அவளை பார்ப்பான்?
“சிறிசேன மாமா கடைல சுடச்சுட லவரியா போட்டிருக்காங்க அம்மா கிட்ட காசு கேட்ட கொடுக்கல. நான் உனக்கு புள்ளையா பொறந்திருக்கணும் அத்த. பத்து என்ன கேட்டாலும் நீ வாங்கிக் கொடுக்குறியே. எங்கம்மாவும் இருக்காங்களே” சரோஜாவிடம் என்ன கூறினானோ அதை கொஞ்சம் மாற்றிக் கூறினான்.
“டேய் என்னடா… அம்மா கைல காசு இருந்திருக்காது. ஒத்த பொம்பளையா வேலைக்கு போய் அவ உன்ன பார்த்துகிறாளே…” என்றவள் சட்டென்று பேச்சை மாற்றி “இரு நான் காசு தரேன்” என்று பணம் கொடுக்க கதிர்வேல் லவரியா வாங்க கடைக்கு கிளம்பினான்.
இவன் கடைக்கு செல்லும் பொழுது பத்மினி கடையிலிருந்து வடை வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தாள்.
“பத்து… வடை வாங்கிட்டியா? எல்லாத்தையும் சாப்பிடாத. எனக்கும் வை. நான் லவரியா வாங்க போறேன். அத்த கிட்ட டீ போட்டு வைக்க சொல்லு” அவளது பதிலையும் எதிர்பார்க்காமல் நடக்க,
செல்லும் அவனை முறைத்தவள் “எங்கம்மா கிட்ட காசு வாங்கி லவரியா வாங்குறதுக்கு இல்லாம, டீ வேற போட்டு வைக்கணுமா” அவன் சொன்னதை காதில் விழவே இல்லை என்பது போல் வீட்டுக்கு சென்றவள் “அம்மா டீ போடு” என்றாள்.
கமலம் மூன்று கப்பில் டீ கொண்டு வந்து வைத்ததும் “ஓஹ்… டீ குடிக்க வரதா ஏற்கனவே சொல்லிட்டுதான் போய் இருக்காரு தொர” மனதுக்குள் இவள் பொரும கதிர்வேல் உள்ளே நுழைந்தான்.
பத்மினி வாங்கி வந்ததோ இரண்டு பெரிய மசாலா வடை அதில் ஒன்றை அவள் சாப்பிவிட்டு ஒன்றை அன்னைக்கு கொடுக்க, கமலம் அதை கதிர்வேலுக்கு கொடுத்தாள்.
“இந்தாங்க அத்த லவரியா” என்றவன் ஆளாளுக்கு ஒன்றை எடுத்துக் கொடுத்து ஒன்றை பத்திரப்படுத்தினான்.
“யாருக்குடா… அம்மாக்கா?” என்று கமலம் கேட்க,
“கொடுப்பான் கொடுப்பான். போற வழியிலையே காலி பண்ணிடுவான்” அவனை குத்திக் பேசிய பத்மினி உள்ளே சென்றாள்.
“அவ கெடக்குறாடா விடு” மருமகனை சமாதானப்படுத்தினாள் கமலம்.
“அம்மா கிட்ட காசு வாங்கி, அத்தைகிட்ட காசு வாங்கி. ஆளுக்கு ஒன்னு லவரியா சாப்பிட்டு. காசையும் மிச்சம் புடிச்சாச்சு” தன்னை மெச்சிக் கொண்டவன் டீயை அருந்தலானான்.
சரோஜா பத்மினியின் மேல் வைத்திருக்கும் அன்பும், கமலம் அவன் மீது வைத்திருக்கும் அன்பும் தான் கதிர்வேலின் ஆயுதம்.
எப்படி பேசினால் அன்னையும், அத்தையும் நம்புவார்கள் அவர்களை எப்படி சமாளிக்க முடியும் என்று நன்கு அறிந்து வைத்திருந்தான்.
சரோஜா பத்மினியிடம் கதிர் லவரியா வாங்கி வந்தானா என்று கேட்பாள். அல்லது லவரியா சாப்பிட்டாயா? என்று கேட்பாளே ஒழிய இரண்டு வாங்கிக் கொடுக்கும்படி சொன்னேன் உனக்கு இரண்டு வாங்கிக் கொடுத்தானா? என்றெல்லாம் கேட்க மாட்டாள்.
பத்மினி “சாப்பிட்டேன் அத்த” என்றால் பிரச்சினை இல்ல. “லவரியா வாங்க நீதான் காசு கொடுத்தியா? அம்மா கிட்ட காசு வாங்கினான்” என்று போட்டுக் கொடுத்தால்? வேலுக்கு நிச்சயமாக பிரச்சினை உண்டு.
“டேய் இங்கவாடா… நான்தான் லவரியா வாங்க காசு கொடுத்தேனே. அப்பொறம் எதுக்கு அத்த கிட்ட போய் காசு கேட்ட” கதிர்வேலின் காதை திருகினாள் சரோஜா.
“போட்டுக் கொடுத்துட்டாளா?” என்று பத்மினியை பார்த்தவன் “ஆமா நீ மூணு வாங்கத்தான் காசு கொடுத்த அத்தையும் சாப்பிடணும், நாங்க மட்டும் சாப்பிட்டா போதுமா? நீ சாப்பிட வேணாம். அதான் கேட்டேன். அத்த கொடுத்தாங்க. எல்லாருக்கும் வாங்கிட்டு வந்தேன். உனக்கும் ஒன்னு கொடுத்தேனே”
“நிஜமாகவே இவன் எடுத்து சென்றது அத்தைக்கா?” நம்ப முடியாமல் அவனை பார்த்தாள் பத்மினி.
“பத்துக்கு ரெண்டு கொடுத்ததுல அவ ஒண்ண எனக்கு கொடுத்ததா சொன்னியே” சரோஜா பத்மினியை பார்த்தாள். 
“அடப்பாவி… எனக்கு கொடுத்ததே ஒன்னு” என்று பத்மினி யோசிக்க,
“யாரு இவ உனக்கு கொடுப்பாளா? என்ன போட்டுத்தான் கொடுப்பா. என் அம்மாக்கு நான் தான் பண்ணனும். எங்க உன் மருமகளை பத்தி நீ தப்பா நினைக்கக் கூடாது என்று அவளை பத்தி பிட்டு பிட்டா நல்ல விதமா சொன்னேன். அவளே அத கெடுத்து கிட்டா” என்று சிரித்தான்.
ஆகா சரோஜாவிடம் வாங்கிய காசில் பத்மினிக்கு ரெண்டு லவரியா வாங்கிக் கொடுத்தாச்சு. கமலம் கொடுத்த காசில் தான் கமலத்துக்கும், சரோஜாவுக்கும் லவரியா வாங்கி வந்தேன் என்றான்.
சரோஜா கமலத்திடம் சென்று எவ்வளவு காசு கொடுத்தாய் என்று கேட்க மாட்டாள். ஏன் கொடுக்கிறாய் என்று கண்டிக்க வேணா செய்வாள்.
“என்ன நீ இதுக்கெல்லாம் கணக்கு பாக்குற” என்று கமலம் பதிலுக்கு சரோஜாவை கடிவாள்.  
கதிர்வேல் இதை நன்கு அறிந்ததால் பத்மினி அடுத்து பேச முடியாதபடி அவளை இறுக்கினான்.
தனக்கு ஒன்றுதான் கொடுத்தான் என்று இப்பொழுது சொன்னால் சரோஜா நம்பமாட்டாள் என்று புரிய பத்மினிக்கு பற்றிக் கொண்டு வந்தது.
இப்படித்தான் அவன் தப்பிக்க, பத்மினியை சிக்க வைப்பவன் கொஞ்சம், கொஞ்சமாக பத்மினியின் மனதிலிருந்து வெளியேறி இருந்தான்.

Advertisement