Advertisement

அத்தியாயம் 19

“அப்படினா நான் பிரபு இல்ல சர்வேஷ் என்று உனக்கு தெரிஞ்சிருக்கு. நான் தான் உன் தம்பி என்று எப்படி தெரிஞ்சிகிட்ட? எப்போ உனக்கு தெரிஞ்சது? உண்மை தெரிந்த பின்னாலதான் திட்டம் போட்டது அண்ணி கூட சேர என்ன பயன்படுத்திக்கிட்டியா?” சர்வேஷ் அதிர்ச்சியடையவில்லை.

தன்னுடைய காதல் கைகூட வேண்டுமென்று ரமேஷுக்கு போதை பொருள் கொடுத்தவன், மனைவியோடு சேர என்ன வேண்டுமானாலும் செய்திருக்கக் கூடும்.

“இரு, இரு, எதுக்கு இப்போ பதறுற? இப்படி கொட்டுற மழைல நின்னுக்கிட்டே பேசணும் என்று எனக்கென்ன விதியா? வா அப்படிக்கா ஆட்டோல போய்கிட்டே பேசலாம்” சர்வேஷின் பதிலை எதிர்பார்க்காமல் அவன் பாட்டுக்கு சென்று ஆட்டோவில் சென்று அமர்ந்தான்.

தனக்கொரு அண்ணன் இருக்கின்றான் என்று அறிந்துகொண்ட நொடி தான் எவ்வளவு மகிழ்ந்தோம். ஆனால் தனக்கிருக்கும் மகிழ்ச்சி இவனுக்கு இல்லையே. தான் தான் தம்பி என்று அறிந்துகொண்ட பின்பும் பாசத்தை காட்டாது தன்னையே பகடைக்காயாக பாவித்து விட்டானே என்ற கோபம் கனன்றுக் கொண்டிருக்க, கொஞ்சம் கூட பொருட்படுத்தாது கதிர்வேல் அவனை கடந்து சென்றது மேலும் ஆத்திரமூட்டியது.

தான் யார் என்று கூறாமல் இவன் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்று நினைத்தேன். இவன் குடும்பம் வாழ வேண்டும் என்று நினைத்தேன்.

எல்லாம் அறிந்து இப்படி சுயநலமாக நடந்துகொண்ட இவன் இன்று எனக்கு விளக்கம் கொடுத்தேயாக வேண்டும் என்று கதிர்வேலை ஏற்றிக் கொண்டு ஆட்டோவை கிளப்பினான் சர்வேஷ்.

ஆட்டோவில் வைத்து பேசினால் வாக்குவாதம் ஏற்பட்டால் நாலு பேர் கூடுவார்கள். பிரச்சினை உருவாகும். தான் யார் என்ற உண்மையும் வெளியே வந்து விடும். கதிர்வேலிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காது என்று சர்வேஷ் அமைதிகாத்தான். மதிய உணவை வாங்கிக் கொண்டு இருவரும் நேராக வந்தது வீட்டுக்குத்தான். வீட்டுக்கு வரும் வரை இருவருக்குமிடையில் எந்த பேச்சு வார்த்தையுமில்லை. சர்வேஷ் கதிர்வேலை முறைத்தவாறே வர, கதிர்வேலோ பாட்டுப்பாடிக் கொண்டு வந்தான்.

“பத்து… பத்து எங்கடி இருக்க. சீக்கிரம் வா. சுடச்சுட பிரியாணி கொண்ணாந்தேன்” ஆட்டோவில் இறங்கியவாறே கத்தினான் கதிர்வேல்.

வெளியே வந்த பத்மினியோ சர்வேஷை பார்த்து விட்டு “வரும் போது தம்பியையும் கையேடு கூட்டிட்டு வந்தியா? வாங்க சாப்பிட” கதிர்வேலை பார்த்து சிரித்தவள் சர்வேஷை அழைத்தாள்.

“அண்ணிக்கு நான் யார் என்று தெரியுமா?” சந்தேகமாக அவளை பார்த்தவன் எதுவும் பேசாமல் அமைதியாக சென்று சாப்பிட அமர்ந்தான்.

பத்மினி இருவருக்கும் தட்டெடுத்து வைத்து பிரியாணியை போட்டு கொடுத்து அவளும் அமர்ந்து கொண்டாள்.

“ஏன் அண்ணி நீங்க சினிமாக்கு எல்லாம் போக மாட்டீங்களா? உங்க பேவரிட் ஹீரோ யாரு?” தன்னை பத்மினிக்கு அடையாளம் தெரியுமா? தெரியாதா? அதை அறிந்துகொள்ளவே இவ்வாறு கேட்டான்.

“எனக்கெங்க சினிமா பார்க்க நேரம் இருக்கு? வீட்டுல டீவி கூட இல்ல. போன்ல பாட்டு கேட்டாத்தான் உண்டு” என்றவள் கதிர்வேலை முறைத்தாள்.

ஏதாவது ஒரு சினிமாவுக்கு சென்று வருபவன் குடித்து விட்டு வந்து இவளை வம்பிழுப்பானே. ஒருநாள் உன் மூஞ்சியெல்லாம் தியேட்டர்க்குள்ள விடமாட்டாங்க என்று சொன்னது ஞாபகம் வந்துதான் முறைத்தாள்.

“பொன்னியின் செல்லவன் ரன்னிங் சக்ஸஸ்புலிடி பத்து. நான் உன்ன கூட்டிட்டு போறேன்” கண்சிமிட்டி சிரித்தான் கதிர்வேல்.

“என்னயெல்லாம் தியேட்டர்க்குள்ள விடுவாங்களோ என்னவோ” நொடித்தவாறே அவள் சாப்பிட,

“உனக்கென்னடி குறைச்சல். எவனாச்சும் விடமாட்டேன்னு சொல்லட்டும். இருக்கு அவனுக்கு” ஆக்ரோஷமாக கதிர்வேல் ஒரு விரல் நீட்டி எச்சரித்தான்.

“பார்த்து, பார்த்து விக்கிக்க போகுது. பேசாம சாப்பிடு. ஓவரா பண்ணாத” அவனை முறைத்தவாறு சாப்பிடலானாள் பத்மினி.

அவர்களின் சம்பாஷணை அவர்களுக்குண்டான ஏதோ ஒரு ரகசியம் என்று மட்டும் சர்வேஷுக்கு புரிந்தது. “இல்ல அண்ணிக்கு தெரியல” யோசனையாக சாப்பிட்ட சர்வேஷ் சட்டென்று “ஏன் அண்ணி வீட்டுலயே இருக்கிறீங்க. ட்ரிப்பு போயிட்டு வந்த பிறகு நீங்க உங்க வீட்டு பக்கமே போகலையே. உங்க அம்மாவ மறந்துட்டீங்களா?” பத்மினியை இங்கிருந்து அனுப்பினால் தானே சர்வேஷ் கதிர்வேலோடு பேச முடியும். கமலம் வீட்டில் இருப்பதால் பத்மினியை அங்கே அனுப்ப முயன்றான்.

“என்ன பத்து போகணுமா? மழை வேற பெய்யுது?” பத்மினியை பார்த்துக் கேட்டான் கதிர்வேல்.

பத்மினியை வீட்டுக்கு செல்ல விடாமல் தடுக்கத்தான் கதிர்வேல் அவ்வாறு கேட்கின்றான் என்று நினைத்த சர்வேஷ் அவனை முறைத்துப் பார்த்தான்.

“இந்த மழை நமக்கு புதுசா அத்தான். நனஞ்சி கிட்டே எத்தனை தடவ நான் இங்க ஓடி வந்திருப்பேன். நீ என் வீட்டுக்கு ஓடி வந்திருப்ப. அம்மாவ போய் பார்த்துட்டு வந்துடுவேன்” சின்ன வயது ஞாபகத்தில் மழையில் நனையும் ஆசை எட்டிப் பார்த்திருக்க, கமலத்தை பார்க்க செல்வேன் என்றாள்.    

எதை சொன்னால் அவள் செல்வாள் என்று கதிர்வேலுக்கு தெரியாதா? அவளது ஒவ்வொரு நினைவிலும், நிகழ்விலும் கலந்தவன் தானே. “இதான் பத்து” சிரித்த கதிர்வேல் “ஆட்டோல போறியா?” என்று கேட்க,

“இங்கன இருக்குற வீட்டுக்கு எதுக்கு ஆட்டோ நான் நடந்தே போறேன்” சாப்பிட்ட தட்டை கழுவ எழுந்தாள்.

“அப்போ மறக்காம குடை எடுத்து போ. சரியா. நைட்டானாலும் பரவால்ல எவ்வளவு நேரமானாலும் அங்க இரு. நானே வந்து கூட்டிட்டு வரேன். டின்னர் ஏதாச்சும் நான் ஏற்பாடு செய்யிறேன்” என்றவனை புன்னகையோடு பார்த்தாள் பத்மினி.

சர்வேஷுக்கு கதிர்வேலை இந்த விஷத்தில் தான் புரிந்துகொள்ள முடியவில்லை. தனக்கு உண்மை தெரிந்து விட்டது என்று அவன் அச்சப்படவுமில்லை. பேச வேண்டும் என்று பத்மினியை வெளியே அனுப்ப வேண்டும் என்று நான் நினைத்ததை புரிந்து கொண்டு அனுப்பி வைக்கின்றான். இவன் என்ன மாதிரியானவன் என்று இன்னும் சர்வேஷுக்கு புரியவில்லை.  

பத்மினி கிளம்பி செல்லும் வரையில் அமைதியாக நின்ற சர்வேஷ் கதிர்வேலிடம் வந்து “இப்போ சொல்லு, ரமேஷுக்கு எப்படி போதை மருந்து கொடுத்த? நான் விசாரிச்ச எல்லாருமே உன்ன ரொம்ப நல்லவன், வல்லவன் என்று சொன்னாங்க. எப்படி அத்தனை பேர் கண்ணையும் மறச்சி கொடுத்த?” இத்தனை பேரை ஏமாற்றி இருக்கின்றானே. இது எப்படி சாத்தியம்? இவனால் எப்படி முடிந்தது என்ற கேள்வி சர்வேஷின் மண்டையை குடைந்தது.

“என்னோட பெர்சனல் லைப்பை பத்தி ஷார் பண்ணுற அளவுக்கு நீயும் நானும் ரொம்ப க்லோஸ் இல்லையே தம்பி” நாடியை தடவியவாறே நக்கல் செய்து சர்வேஷின் மூக்கை உடைந்தான் கதிர்வேல்.

கூட இருந்த நண்பர்களுக்கே தெரியாத ரகசியத்தை சர்வேஷ் கேட்ட உடனே சொல்லி விடுவானா?

“சரி சொல்லாத. எதோ அண்ணிய லவ் பண்ணுற அதனால பிளான் பண்ணி அவங்கள கல்யாணம் பண்ணிகிட்ட. அவங்க உன்ன சந்தேகப்பட்டாங்க. நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சி இருந்தீங்க. அதுவரைக்கும் ஓகே. நடுவுல நான் எங்க வந்தேன்? எதுக்கு என் கிட்ட நடிச்ச? அதுவும் நான் தான் உன் தம்பி என்று தெரிஞ்ச பிறகு உன்னால எப்படி என் கிட்ட நடிக்க முடிஞ்சது? என்ன ஏமாத்த முடிஞ்சது?” நெஞ்சம் முழுவதும் கோபம் எரிமலையாய் கொந்தளித்தாலும் அவனுக்கு கதிர்வேலிடமிருந்து பதில் தேவை. அதனால் பொறுமையையை ரொம்பவே கையாண்டான்.

“தம்பியா? யார் தம்பி? நீயா? நீ என்ன என் கூட பொறந்தியா? என் அம்மாக்கு பொறந்தியா? என் கூடத்தான் வளந்தியா? உண்மையிலயே நீ என் தம்பினா வந்த அன்னைக்கே ஏன் என் கிட்ட சொல்லல? பிரபு என்று பொய் சொல்லி நீதாண்டா என்கிட்ட  நடிச்ச. அப்படிப்பார்த்தா அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு” அலட்டிக்கொள்ளாமல் பதில் சொன்னான் கதிர்வேல்.

“டேய்… நான் உனக்கு நல்லது பண்ணனும் என்று உண்மைய மறைச்சேன். ஆனா நீ என்ன ஏமாத்தி அண்ணி கூட சேர்ந்தது மட்டுமில்லாம அவங்களையும் ஏமாத்திகிட்டு இருக்க. நீ பண்ணதெல்லாம் அண்ணிக்கு தெரிஞ்சா”

“என்ன சொல்லிடுவேன்னு மிரட்டுறியா? கொன்னுடுவேன். என் உலகமே என் பத்துதான். அவளுக்கும் எனக்கும் நடுவுல யார் வர நெனச்சாலும் கொன்னுடுவேன்” சர்வேஷை ஆக்ரோஷமாக மிரட்டினான் கதிர்வேல்.

அப்படியொரு கதிர்வேலை இதுவரை கண்டிராத சர்வேஷை மிரண்டுதான் போனான்.

“உனக்கு என்ன பத்தி என்னடா தெரியும்? உன்ன பார்க்க பிடிக்காமத்தான் உங்கப்பன் ஓடிட்டான் என்று ஸ்கூல்ல பசங்க கேலி பண்ணுவாங்க. அப்போ என் பத்துதான் என்ன சமாதானப்படுத்துவா. என் தேவதடா அவ.

அப்பன் என்ற ஒருத்தன நான் பார்த்ததே இல்ல. அப்பானா இப்படித்தான் இருப்பாரு. ஏன் எனக்கு மட்டும் அப்பா இல்ல. உண்மையிலயே என்ன பிடிக்காமத்தான் ஓடிப்போனாரா? இந்த மாதிரியான கேள்விகள் சின்ன வயசுல வரும். பதில் கிடைக்காது.

அம்மா கிட்ட கேட்டா, அந்தாள பத்தி எதுக்கு கேக்குற? உனக்கு அம்மாவும் நான்தான் அப்பாவும் நான்தான் என்று சொல்வாங்க. அப்போ புரியல” என்றவனோ தந்தையை பற்றி கூறுவதை நிறுத்தி

“ஆமா… நீ இங்க வந்தது உன் அப்பனுக்குத் தெரியுமா? சொல்லிட்டுதான் வந்தியா? தெரிஞ்சிருந்தா அந்தாளு உன்ன இங்க அனுப்பியிருக்க மாட்டானே. அப்போ தெரியாது. ஏன்னா ஏதோ ஆபரேஷன் பண்ணி ஓய்வெடுக்குறதா பேஸ்புக்ல பார்த்தேன்.

நீ எந்த நோக்கத்தோடு இங்க வந்த? நாங்க ஏழைங்க பணம் இல்லாம கஷ்டப்படுறாங்க. ஒழுங்கா வீடில்ல. எல்லா வசதியும் பண்ணிக் கொடுத்தா உன் மேல பாசத்த கொட்டுவோம்னு நினைச்சியா? இல்ல என் அப்பனுக்கு இன்னொரு மகன் இருக்கானு உலகத்துக்கு சொல்ல வந்தியா? அப்படி சொன்னா அந்தாளு நாக்க பிடுங்கிகிட்டு சாக மாட்டான்.

நல்லது பண்ண வந்த மூஞ்சி. பணத்த தண்ணியா செலவு செஞ்சா நீ நல்லவனாகிவிடுவியா? ஏன் அந்த பணத்த எனக்கு சம்பாதிச்சு வீட்டை கட்ட தெரியாதா? ஐசு புள்ளைய வித்தாவே உன்னைவிட பணக்காரனாகிடுவேன். காரு, பங்களானு வாழலாம். வாழ்க்கைல பணம் மட்டும் முக்கியமில்ல தம்பி. உன் அப்பன் தான் பணம் முக்கியம் என்று போய்ட்டான்.

ஒருகாலத்துல சம்பாதிச்சு. அந்தாள போய் பார்த்து நாக்கை புடிங்கிறது போல நாலு கேள்வி கேக்கணும் என்று தோணிருச்சு. என்னக்கி அந்தாளு பணத்துக்காக எங்கம்மாவை விட்டுட்டு போய்ட்டான்னு தெரிஞ்சிகிட்டேனோ அன்னக்கி முடிவு பண்ணேன் அந்தாளோட முகத்துல கூட முழிக்கக் கூடாதென்று. 

என்னமோ எங்கள தேடி வந்துட்டியே கொஞ்சம் நாள் இங்க இருந்துட்டு போகட்டும் என்று விட்டா ஓவராதான் துள்ளுற” சர்வேஷையே குற்றவாளியாக்கினான் கதிர்வேல்.

“ஆமா மீடியா என்ற ஒன்றால் நம்மை போன்ற செலபிரடிகளின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கிறது என்று உடனுக்குடன் பிளாஷ் நிவ்சாக போட்டு விடுகிறார்களே இவன் எங்களை பற்றி அறிந்து கொள்வதில் தடை எங்கே இருக்கிறது? தந்தையை பற்றி அறிந்தும் கொஞ்சம் கூட கவலை இல்லை. கோபம் மட்டும் தான். அவன் கோபம் கூட நியாயமானது தான்” என்றெண்ணிய சர்வேஷ்  

“இங்க பாரு அப்பாகும் சரோஜா அம்மாக்கும் நடுவுல என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. அதுக்கும் என் அம்மாக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. அப்பாக்கு இன்னொரு குடும்பம் இருக்கிறதே சமீபத்துலதான் நான் தெரிஞ்சிகிட்டேன். தெரிஞ்சிகிட்ட அடுத்த நொடியே உங்கள தேடி வந்தேன்.

நீயும் அண்ணியும் ஒன்னு சேரனும். வீட்டை கட்டிக் கொடுக்கணும். என்னாலான எல்லா உதவியும் உங்களுக்காக செய்யணும் எங்குறதுதான் என் நோக்கம்” சர்வேஷ் புரிய வைக்க முயன்றான்.

“ஆமா எங்களுக்காக பண்ண நீயாரு? பணம். பணம்தான் எல்லாமே என்று நினைக்கிற நீ அந்தாளோட புள்ளத்தான். எங்க வீட்டை கட்டிக் கொடுக்க நீ யாரு? நாங்க கேட்டோமா?” கதிர்வேல் கோபமெல்லாம் படவில்லை. சாதாரணமாகத்தான் பேசினான். 

இவன் புரிந்து கொள்ளவே மாட்டானா என்ற கோபம் எட்டிப் பார்த்திருக்கவே “அப்போ எதுக்கு அறைய கட்டி வாடகைக்கு விட சம்மதிச்ச? என் கிட்டயே ஐயாயிரம் ரூபா காசு எக்ஸ்டரா கேட்ட?” பணம் முக்கியமில்லையென்றால் பணம் எதற்கு கேட்டாய் என்று அண்ணனையே திருப்பிக் கேட்டான் சர்வேஷ்.

“அங்கதாண்டா நீ மாட்டிக்கிட்ட. வாடகைக்கு வீடு கிடைக்கலைன்னு நீ அறைய கட்டிக் கொடுத்து தங்கிக்கிறது எல்லாம் நல்ல பிளான் தான். எனக்கு பிடிக்கல. உன்ன துரத்தத்தான் பணம் கேட்டேன். நீ அதையும் கொடுக்க முன் வந்த. அப்போ உன்கிட்ட எதோ தப்பிருக்கு என்று உன்ன பாலோ பண்ணேன். பெரிசா எதுவும் கிடைக்கல. நீயும் அறைய கட்டி குடி வந்த.

அப்போ ஒருநாள் உன் லக்கேஜை கிளறினேன். உன் பாஸ்ட்போர்ட் சிக்கிருச்சு. நீ யார் என்று கண்டு பிடிச்சதும் உன்னைய எங்கயோ பார்த்தா மாதிரி இருந்திச்சே என்று அன்னைக்கு தோணினப்போ கண்டுக்கல. தி கிரேட் ஆக்டர் சர்வேஷ்  இந்தியால இருந்து இங்க வந்து எதுக்கு பொய் சொல்லி இங்க நம்ம கூட தங்குற என்று உன் போன இன்னொருநாள் எடுத்து நோண்டினேன். அப்போதான் அந்தாள் கூட உன் போட்டோஸ் பார்த்தேன். நீயாரு? அந்தாளுக்கு உனக்கும் என்ன சம்பந்தம் எல்லாம் புரிஞ்சிக்கிட்டேன்.

பரவால்லடா அந்தாளு உன்ன ஒரு நடிகனா வளர்த்து விட்டிருக்காரு. என்ன உன்னால என் கிட்ட நடிக்க முடியல மாட்டிக்கிட்ட” என்று சிரித்தான் கதிர்வேல்.

“தெரிஞ்சிகிட்டல்ல. அப்போ ஏன் என் கிட்ட கேட்கல? என்ன வச்சி கேம் ஆடி அண்ணி கூட சேர்ந்ததுமில்லாம அவங்கள ஏமாத்திகிட்டு இருக்க”

“கேம் தான். ஆனா நானா ஆடல. நீதான் தானா வந்து என்ன பிரச்சினை என்னு கேட்டு கேட்டு குடைஞ்ச தம்பி மறந்துட்டியா? இப்படி பழியை தூக்கி என் மேல போடக் கூடாது” சத்தமாக சிரித்தான் அந்த மகா நடிகன்.

சர்வேஷ் சொன்னது உண்மைதான் பத்மினியிடம் கதிர்வேலால் பேசி புரியவைக்க முடியாது மூன்றாவது நபர் பொறுமையாக பேசி புரியவைத்தால் தான் உண்டு. அது அவர்களின் வயதை ஒத்த ஓவருவரால் தான் முடியும்.

லாவண்யாவை அணுகலாமா என்று கதிர்வேல் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் சர்வேஷ் தானாக வந்து தலையை கொடுத்திருந்தான். எதை எவ்வாறு சொல்ல வேண்டுமோ, அதை அவ்வாறு புறா நாடகத்தில் தொடங்கி கதையாக கூறி இருந்தான்.

ஆனால் அவன் கண்ணீர் பொய்யில்லை. ரமேஷ் விஷயத்தில் மட்டும் உண்மையை மாற்றி கூறி இருந்தான் அவ்வளவுதான். 

“உன் அப்பன் என் அம்மாவ லவ் பண்ணி கல்யாணம் பண்ணி நான் எங்கம்மா வயித்துல இருக்கும் போது பல கோடி சொத்தோட உங்கம்மா வந்ததும் பணம் தான் முக்கியம் என்று எங்கம்மாவையும் என்னையும் விட்டுட்டு உங்கம்மாவ கல்யாணம் பண்ணிகிட்டாரு.

அவர் ரெத்தம் தானே என் ஒடம்புல ஓடுது. என்ன பணத்துக்கு பதிலா எனக்கு என் பத்து முக்கியமா போய்ட்டா. அவளுக்காக கொலை கூட பண்ண தயங்காத நான் அவளை விட்டுக் கொடுக்க முடியாது என்று ஒரே ஒரு காரியம் பண்ணேன். அதுக்காக நான் வருந்தக் கூட அவசியமில்ல. பிகோர்ஸ் பத்து தான் ரமேஷ லவ் பண்ணவே இல்லையே.

எக்சுவலி தம்பி. என் பத்து இருக்காளே என் மேல இருக்குற கோபத்தாலதான் அவனை கல்யாணம் பண்ண சம்மதிச்சா என்று எனக்கு தெரிஞ்சதாலதான் அவன கொலை பண்ணாம மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வச்சேன்.

உன் கிட்ட சொன்னேனே பொண்டாட்டிய விட்டுக் கொடுக்கவே கூடாது என்று. பத்துவ நான் என் பொண்டாட்டியா நினைச்சி வாழ்ந்துகிட்டு இருந்தா எவனோ ஒருத்தன் கூட்டிட்டு போக விட்டுடுவேனா?

என்னால அவள கஷ்டப்படுத்தவும் முடியாது. அவ கஷ்டப்படுறத பார்க்கவும் முடியாது. அந்த விக்னேஷ் போல முட்டாள் தனமா எந்த முடிவையும் எடுக்கவும் முடியாது. என் பத்து எனக்கு வேணும். அதுவும் அன்போடு. பழைய பத்துவா. என்ன நேசிக்கிற பத்துவா.

உன் கிட்ட எல்லாமே இருக்கு தம்பி. என் கிட்ட என் பத்து மட்டும்தான் இருக்கா. எதுக்காகவும், யாருக்காகவும் நான் அவளை விட்டுக் கொடுக்கிறதா இல்ல”

தீவிரமானமுகபாவனியில் கூறியவனை “என்ன இவன் சைக்கோ மாதிரி பேசுறான்?” என்று பார்த்தான் சர்வேஷ்.

சர்வேஷால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. தந்தை இல்லாமல் வளர்ந்ததனால், கேலிகிண்டல்களுக்கு ஆளாகி இருக்கின்றான். அதனால் மனதளவில் பாதிப்படைந்தானா? அவனுக்கு ஆறுதலாக அண்ணி இருந்திருக்கிறாங்க. அதனால அவங்க மேல ரொம்ப அட்டாச் ஆகி இருக்கலாம். அதனால அவங்கள யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது என்று சொல்கிறானா?

“இங்க பாரு உன்ன யாரும் அண்ணிய விட்டுக் கொடுக்க சொல்லல. அவங்களும் உன்னதான் விரும்புறாங்க. அவங்கள ஏமாத்த வேணாம்னு தான் சொல்லுறேன். நீ பண்ணுறது தப்பு. நடந்த எல்லாத்தையும் அவங்க கிட்ட சொல்லுறதுதான் உனக்கு நல்லது. அவங்களுக்கு உண்மை தெரிஞ்சா உன்ன வெறுக்க ஆரம்பிச்சிடுவாங்க. அது நடக்காம இருக்கணும் என்றா நீயே உண்மைய சொல்லி மன்னிப்பு கேளு. அவங்க உன்ன கண்டிப்பா மன்னிச்சி ஏத்துப்பாங்க” இதுதான் சரியான வழி என்று சர்வேஷ் புரிய வைக்க முயன்றான்.

கதிர்வேல் பத்மினியின் மேல் வைத்திருந்த காதல் உண்மையானது. அவன் நினைத்திருந்தால் கணவன் என்ற உரிமையை நிலைநாட்ட என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். இன்னொரு விக்னேஷாக நடந்துகொள்ளாமல் பத்மினியின் மனஉணர்வுகளை புரிந்து கொண்டு பத்மினியின் மனம் கோணாமல் அவளுக்கு ஏத்த கணவனாகத்தான் நடந்து கொள்கின்றான். தன் காதலை அவளுக்கு புரியவைத்து, அவளையும் தன்னை காதலிக்க வைத்து வெற்றி கொண்டு விட்டான். 

அவன் வெற்றிகொள்ள காரணமும் பத்மினிதான். ஏற்கனவே பத்மினிக்கு கதிர்வேல் மேல் பாசம் இருந்தது. எதோ கோபத்தில் தான் விலகி இருந்தாள். கோபம் விலகிய உடன் அவனது காதலை புரிந்து கொண்டாள்.

சர்வேஷ் சொல்வது போல் ரமேஷுக்கு போதை மருந்து கொடுத்தது கதிர்வேல் என்பதை அறிந்து கொண்டால் பத்மினி கதிர்வேலை மன்னிப்பாளா? தண்டிப்பாளா?

“பத்துகிட்ட யார் நடந்தத சொல்லப் போறாங்க? நீயா உனக்கே என்ன நடந்தது என்று முழுசா தெரியல. நீ போய் என்னனு சொல்லுவ? சம்பவம் நடக்குறப்போ நீ அங்கேயே இல்லையே நீ சொன்னா என் பத்து நம்புவாளா?” சத்தமாக சிரித்தான் கதிர்வேல்.

“நீ மறந்துட்டியா? ஒண்ணுமே நடக்கலைனு என்று எப்படி உன்னால பேச முடியுது? மதியம் தானே ரமேஷ் கூட ரோட்டுல வச்சி சண்டை போட்ட. அவன் போய் வீட்டுல சொல்லி, அவங்க வீட்டாளுங்க பிரச்சினை பண்ண வர மாட்டாங்களா? அப்போ அண்ணிக்கு உண்மை தெரியாதா?” என்ன இவன் ஆழிப்பேரலையாய் பிரச்சினை கண்முன் நிற்கிறது. எதுவுமே நடக்காது என்று எதிர்கொள்ள நிற்கிறான் என்று கதிர்வேலை புரியாது பார்த்தான் சர்வேஷ்.

“ஓஹ்… அவன சொல்லுறியா? தம்பி உனக்கும் எனக்கும் இருக்குற வித்தியாசம் இதுதான். ஒரு காரியத்தை பண்ணும் போது நீ எமோஷனலா திங்க் பண்ணுற. நான் நடக்க வேண்டிய விஷம் பக்காவா பிளான் பண்ணபடி நடக்கணும் என்று திட்டம் போட்டு பண்ணுவேன். ஏ டு இசட் பக்காவா திட்டம் போட்டா எங்கயும் பிசிறு தட்டாது.

என் பத்துவ பொறுத்தவரைல நான் ரொமப நல்லவன். அந்த விம்பம் என்னைக்கும் அவ மனசுல இருக்கும். எனக்கும் அவளுக்கும் நடுவுல வர நினைக்காத. திஸ் ஈஸ் மை வார்னிங். புரிஞ்சதா” சிரித்தான் கதிர்வேல்.

நான் இவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறன். ஆனால் இவன் எதையுமே கண்டு கொள்ளாமல் அவன் செய்வதுதான் சரி என்று நடந்துகொள்கிறான். இவனை என்னதான் செய்வது?

சிலபேருக்கு பட்டால் தான் புரியும். இவனும் அந்த ரகம் போலும் ரமேஷ் அவன் வீட்டுக்கு சென்று நடந்தை கூறி ஆட்களை அழைத்து வந்து பிரச்சினை செய்தல் தான் இவன் முழிப்பான். அண்ணிக்கு உண்மை எல்லாம் தெரிந்து இவனுக்கு ஒரு அறை விட்டால் தான் இவன் விழிப்பான் என்று கதிர்வேலை பார்த்து கேலியாக சிரித்தான் சர்வேஷ்.

“என்னடா…” கதிர்வேல் புருவம் உயர்த்திக் கேட்க,

“இல்ல நான்தான் உன் தம்பி என்று தெரிஞ்சிகிட்டல்ல அத ஏன் அம்மா கிட்ட சொல்லல?” அதற்கும் ஏதாவது காரணம் இருக்கிறதா? இவனது திட்டம்தான் என்ன? என்று அறிந்துகொள்ள வேண்டியே கேட்டான்.

“ஆரம்பத்துல நீ எதோ சூட்டிங்கு லொகேஷன் பார்க்க வந்திருப்பியோ, இல்ல படம் டைரெக்ஷன் பண்ண கதை எழுத வந்திருப்பியோ, அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோ என்றெல்லாம் யோசிச்சு பார்த்தேன் எதுவும் செட்டாகால.

நீ காசு செலவு பண்ணுறதும், பாசத்தை காட்டுறதும் கொஞ்சம் ஓவராத்தான் இருந்தது. அப்பொறம் தான் நீ பிரபுவா வரல தாராளபிரபுவா வந்திருக்கனு புரிஞ்சது.

நீ என்ன பண்ணாலும் நான் அம்மாகிட்ட சொல்ல மாட்டேன். நான் எதுக்கு சொல்லணும்? நான் சொல்லி பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்து என் அம்மா அழுறதுக்கா? நீ சொன்னா உன்ன வெளிய போடான்னு அவங்களே சொல்லிடுவாங்க. மூட்ட முடிச்ச கட்டிக்கிட்டு நீயே போய்டுவ. அதுக்காகத்தான் நான் காத்துகிட்டு நிக்குறேன். எப்போ உண்மைய சொல்லி எப்போ கிளம்ப போற?” சர்வேஷையே அசரவைத்தான் கதிர்வேல்.

“சரோஜா அம்மா மேல் வைத்திருக்கும் பாசத்தால் தான் தான் தம்பி என்ற உண்மையை சொல்லாமல் இருக்கின்றானா? வசதியாக போச்சு” என்றெண்ணிய சர்வேஷ் “அப்போ நானா சொல்லுறவரைக்கும் நீ சொல்ல மட்ட. அப்படித்தானே?” உறுதிப்படுத்திக்கொள்ள மீண்டும் கேட்டான்.

“அதத்தாண்டா சொன்னேன்” கொஞ்சம் கடுப்பாக சொன்னான் கதிர்வேல்.

“அப்போ நான் யார் என்று நீ சொல்ல மாட்ட. ஆனா நான் உன் முக மூடிய கழட்டாம இங்க இருந்து கிளம்ப மாட்டேன்” என்று சவால் விட்டு சென்றான் சர்வேஷ்.

Advertisement