Advertisement

அத்தியாயம் 18 -2

சுற்றுலா சென்று வந்ததில் மிகவும் நெருக்கமான அடுத்த ஜோடி பத்மினியும், கதிர்வேலும் தான்.

பத்மினிக்கு என்னென்ன பிடிக்கும் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தமையால் அவள் கேட்காமாலையே அவற்றை வாங்கிக் கொடுத்து முத்தங்களை பரிசாக பெற்றுக் கொண்டு மெல்ல மெல்ல அவள் தயக்கத்தையும், வெட்கத்தையும் விடைபெற செய்திருந்தான் கதிர்வேல்.     

சுற்றுலாவின் பொழுது இவர்களுக்கு தனிமை கொடுக்க வேண்டி யாரும் இவர்களை தேடவுமில்லை. தொந்தரவு செய்யவுமில்லை. அது இவர்களின் நெருக்கத்துக்கு மேலும் வழி வகுத்தது.

சுற்றுலாவின் போதே தேனிலவை முடித்துக் கொண்டு இன்னும் அந்த கிறக்கம் நீங்காமல் கொஞ்சம் நேரம் அவள் கண்ணில் தென்படவில்லையென்றால் அவளை தேட ஆரம்பித்து விடுவான் கதிர்வேல்.

“பத்து… பத்து… எங்கடி இருக்க? ட்ரிப்பு போயிட்டு வந்த பிறகு என்ன கண்டுகிறதே இல்ல நீ” என்றவாறே வந்த கதிர்வேல் பத்மினி குளித்து விட்டு தலை துவட்டிக் கொண்டிருப்பதை பார்த்து அவளை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டு அவள் தோளில் முகம் புதைத்தான்.

“காலைலயே ஆரம்பிச்சிட்டியா? போ… போய் குளிச்சிட்டு வா…” என்றவாளோ அவனை தள்ளி விடத்தான் இல்லை. 

கண்களை மூடி அவளை வாசம் பிடித்தவன் “நீ என்ன இந்த மழைல குளிச்சிருக்க, சோப்பு வாசன தூக்கலா இருக்கு. நீ என்ன சோப்பு யூஸ் பண்ணுற?”

அவன் தான் வாங்கிக் கொடுத்தான். மறக்கவில்லை. மயக்கத்தில் கேட்டிருந்தான்.

முழங்கையால் அவன் இடுப்பில் குத்தியவள் “என் வாய கிளறாத அத்தான். போ.. போய் குளிச்சிட்டு வா. வீட்டுல யாருமில்ல. நீ தான் கடைக்கு போகணும்” மதியத்துக்கு சமைக்க மீன் வாங்கி வரச் சொல்லித்தான் கூறினாள் பத்மினி.

“என்னது வீட்டுல யாரும் இல்லையா? இத ஏன் டி முதல்ல சொல்லல” அவளை அலாக்காக தூக்கிக் கொண்டு அறைக்குள் நுழைந்திருந்தான் கதிர்வேல்.

“விடு அத்தான். விடு அத்தான்” என்று பத்மினி அவன் தோளில் அடித்தாலும் கொஞ்சம் நேரத்திலையே அவனுள் அடங்கிப் போனாள்.

வெளியே மழை நிற்காமல் பெய்து கொண்டிருக்க, “அப்படியும், இப்படியும் நீ வாடகைக்கு கட்டின அறைய பறிச்சிட்ட. உன் புதுக் தம்பிங்க இப்போ நம்ம வீட்டுல தங்குறாங்க, தூங்குறாங்க. வீட்டு வாடகை வாங்கணுமா என்ன?”

என்று பத்மினியும், கதிர்வேலும் ஒன்று சேர்ந்தார்களோ அன்றிலிருந்து சர்வேஷுக்கு வாடகைக்கு விட கட்டிய அறையில் தான் இவர்கள் தங்கியிருந்தனர்.

அவனும் “இல்ல. இல்ல நீங்க ரெண்டு பேரும் இனி இந்த ரூம்லயே தங்கிக்கோங்க” என்று விட்டான்.

அறையை கட்டியதே வாடகைக்கு கொடுக்க, அதில் நாம் தங்கிக் கொண்டால், வாடகையை பெற முடியுமா? அது நியாயமா? என்றுதான் கணவனிடம் கேட்டாள்.

“நான் ஒன்னும் அறைய கட்டி வாடகைக்கு விடச் சொல்லலையே. நீயும் அம்மாவும் தான் முடிவு பண்ணீங்க. இதையும் நீங்களே முடிவு பண்ணிக்கோங்க” என்றான்.

அன்று குடித்து விட்டு வந்து “யாரை கேட்டு அறையை கட்டி வாடகைக்கு விடுறீங்க?” என்று சண்டை போட்டது மட்டும் தானே பத்மினிக்குத் தெரியும். சர்வேஷிடம் மாதாந்தம் ஐயாயிரம் ரூபாய் கொடுக்கும்படி கூறியது தெரியாதே.  

“சரி என்ன தொழில் பண்ணுறது என்று முடிவு பண்ணிட்டியா?”

“யோசிச்சு கிட்டு தான் இருக்கேன். இன்னும் ஒன்னும் தோணல. தோணும் போது மெதுவா ஆரம்பிக்கலாம். அதுவரைக்கும் நீ என்ன கவனிச்சிக்க. அம்மா வேற சீக்கிரம் பேரன் இல்லனா பேத்தி வேணும் என்று சொன்னாங்க. நாம அந்த வேலைய பார்க்கலாம்” என்று அவளை அணைக்க, 

“திரும்ப ஆரம்பிக்காத. எனக்கு வேல இருக்கு. முடிஞ்சா வந்து உதவி செய்” என்று பத்மினி அவனை தள்ளி விட்டு சமயலறைக்குள் வந்தாள்.

அவள் பின்னால் வந்த கதிர்வேலா “கொஞ்ச நேரம் சுவாசபாசம் பழகலாம்னு பார்த்தா ஒத்துழைக்கிறியா? எப்போ பார்த்தாலும் வேல வேலனு ஓடிக்கிட்டு”

“முத்தத்துக்கு சுவாசபாசம் னு பேரு வச்சு ஆராச்சி பண்ணிக்கிட்டு இருக்க. உனக்கு நான் ஒத்துழைச்சது போதும் என்ன வேல செய்ய விடு. உனக்கு போர் அடிக்குதுனா எனக்கு ஹெல்ப் பண்ணு”  

“இப்போ நீ யாருக்கு இவ்வளவு அவசரமா சமைக்கிற? ” வழமையாக அவன் மதியம் வீட்டில் இருப்பதில்லை. இன்றுதான் இருக்கின்றான். இன்று செல்வாவும் இல்லை. சர்வேஷ் மட்டும் தான் இருக்கின்றான் என்று அறிந்துதான் கேட்டான்.

இடுப்பில் கை வைத்து அவனை முறைத்து “உன் தம்பிக்குத்தான். நீ தான் பகல் சாப்பாட்டுக்கு வீட்டுல இருக்க மாட்டியே” என்றாள்.

இவர்களுக்கு தனிமை தேவையென்று சவாரிக்கு செல்லும் சர்வேஷ் வீட்டுப்பக்கம் வருவதில்லை. செல்வாவுக்கும், அவனுக்கும் சமைத்து கொடுக்க வேண்டுமல்லவா. இன்று செல்வா இல்லை. லாவண்யாவோடு கொழும்புக்கு சென்றிருக்கின்றான். அதற்காக சர்வேஷை கடையில் சாப்பிட சொல்ல முடியுமா?

“இன்னக்கி ஒருநாள் அவன் கடைல சாப்பிடட்டும்டி. அவன் மட்டுமில்ல. நமக்கும் சேர்த்து வாங்கிட்டு வரேன்” என்றான் கதிர்வேல்.

“அதுக்கு நீ வீட்டை விட்டு வெளிய போகணும் அத்தான். நீதான் விடிஞ்சா அந்திபட்டா சமைஞ்ச புள்ள போல வீட்டுக்குள்ளேயே இருக்கியே” என்று அவனை வாரினாள் பத்மினி.

“இந்த செல்வா கூட சேராதே சேராதே என்று சொன்னா கேட்டியா? இப்போ அவன் கூட கருவறைல இருந்தது போலயே பேசு” இவனும் அவளை வாரி விட்டு குளிக்க சென்றான்.

இந்த நேரத்தில் டவுனுக்கு செல்ல பஸ் இருக்காது. கொஞ்சம் தூரம் நடக்கலாம், ஆட்டோ வந்தால் ஏறி செல்லலாம் என்று கதிர்வேல் டவுனுக்கு செல்ல நடந்து கொண்டிருந்தான்.

அவன் நடந்து செல்வதை ஆட்டோவில் வந்து கொண்டிருந்த ரமேஷ் பார்த்து விட்டு ஆட்டோவிலிருந்து இறங்கி அவன் பின்னால் வந்தான்.

ஆட்டோ கதிர்வேலை தாண்டி சென்று நின்றதால் ஆட்டோவில் யார் சென்றார்கள் என்று கதிர்வேல் கவனிக்கவில்லை. அவன் பத்மினியின் சிந்தனையில் நடந்து கொண்டிருக்க, பின்னால் வந்த ரமேஷ் அவன் தோளில் கை வைத்து நிறுத்தினான்.

மழை வேறு தூறிக் கொண்டிருந்தமையால் சாலையில் கூட ஆள் நடமாட்டம் இருக்கவில்லை. ரமேஷை எதிர்பார்க்காத முகபாவனையை கொடுத்த கதிர்வேல் அவன் கையை தட்டி விட்டது மட்டுமல்லாது. சட்டையை வேறு தட்டி விட்டான்.

“என்னடா பெரிய பிஸ்தா மாதிரி பண்ணிக்கிட்டு இருக்க. என் மினி. அவளை என்ன சொல்லி மிரட்டி உன் கூட வச்சிக்கிட்டு இருக்க?” ரமேஷ் கோபத்தை அடக்கிக் கொண்டுதான் பேசினான்.

“உன் மினியா? அப்படி யாரையும் எனக்கு தெரியாது. எனக்குத் தெரிஞ்சது எல்லாமே என் பத்து மட்டும் தாண்டா” தெனாவட்டாக கூறிய கதிர்வேல் நிற்காமல் நடக்க ஆரம்பித்தான்.

ஆனால் ரமேஷ் விடுவதாக இல்லை. “அவ என் மினிடா. அவளை எப்படி கூட்டிட்டு போகணும் என்று எனக்குத் தெரியும்” என்றான்.

“நீ கூப்ட்டா அவ வந்துடுவாளா? அவ என் பொண்டாட்டிடா. சொன்னா கேளு என் கிட்ட தோத்துட்டேன்னு ஒத்துக்கிட்டு ஒதுங்கி போய்டு. கதிர்வேலின் பேச்சில் திமிரும், ஆணவமும் அதிகமாகவே தெறித்தது.

அதற்கு காரணம் பத்மினி ரமேஷை காதலிக்கவில்லை என்பதும், அவள் இப்பொழுது தன்னுடைய மனைவி என்பதும் தான்.

“அவ என் காதலிடா. நீ தாலிய கட்டிட்டா அவள அப்படியே விட்டுடுவேனா? அவள எப்படி கூட்டிட்டு போகணும் என்று எனக்குத் தெரியும். அவ வரலைனா கடத்திட்டு போவேன்” என்றான் ரமேஷ்.

அந்த வார்த்தை கதிர்வேலை சீண்டியது. “கடத்திட்டு போவாராம். கடத்திட்டு போற மூஞ்சி. உனக்கு உன்னையே பார்த்துக்க தெரியல. உன்ன தூக்க நாலு பேர் வேணும்” உள்ளற்றத்தோடு நக்கலடித்த கதிர்வேல் “உன்ன மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பினதுக்கு பதிலா மனநல காப்பகத்துக்கு அனுப்பி வச்சிருக்கணும். ரொம்ப துள்ளாத உன் அம்மாவே உன்ன அனுப்பி வைக்கிற மாதிரி ஏற்பாடு செஞ்சிடுவேன் பாத்துக்க” என்று கதிர்வேல் விரல் நீட்டி ரமேஷை மிரட்டினான்.

“அப்போ நீதான் சரக்குல போதை மறந்து கலந்து கொடுத்தியா பாவி” என்று ரமேஷ் கதிர்வேலன் சட்டையை பிடித்திருக்க,

அவனை நெருங்கி நின்ற கதிர்வேலோ “என் பத்துவையா என் கிட்ட இருந்து பிரிக்க பாக்குற? திட்டம் போட்டு உன் சரக்குல போதை மருந்து கலந்து உன்ன மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பின எனக்கு உன்ன என்னவேனாலும் பண்ண முடியும். பொழச்சி போன்னு விட்டா சீண்டிகிட்டே இருக்க இனி உனக்கு கஷ்ட காலம்டா”

கோபத்தில் ரமேஷ் கதிர்வேலை அடிக்க முனைய, கதிர்வேல் அவனை நாலு சாத்து சாத்தினான்.  

“இருடா உன்ன பாத்துக்கிறேன். இப்போவே போய் இந்த உண்மைய என் அம்மாகிட்ட சொல்லுறேன்” கதிர்வேலை தன்னால் தனியாக சமாளிக்க முடியாததால் ரமேஷ் வீட்டுக்கு விரைந்தான்.

“போடா போ… அம்மா கொண்டு” கத்தினான் கதிர்வேல். 

இவர்கள் இருவரும் பேச ஆரம்பிக்கும் பொழுதே அந்த பக்கமாக சர்வேஷ் ஆட்டோவில் வந்திருக்க அவனும் ஒரு ஓரமாக ஆட்டோவை நிறுத்தி விட்டு இவர்களை நெருங்கி இருந்தான்.

கதிர்வேல் கூறிய அனைத்தையும் கேட்ட சர்வேஷ் அதிர்ந்து நின்றது ஒரு நொடிதான். அடுத்த கணமே அவன் தோளில் கை வைத்து அவனை திருப்பினான்.

இப்பொழுது யார் என்று கோபமாகவே சர்வேஷின் பக்கம் திரும்பினான் கதிர்வேல்.

“நீ சொன்னதெல்லாம் கேட்டுட்டேன். நீ அண்ணிய லவ் பண்ணதால கல்யாணத்த நிறுத்த ரமேஷுக்கு போதை மருந்து கொடுத்திருக்க, அண்ணி உன்ன சந்தேகப்பட்டாங்க. சந்தர்ப்ப, சூழ்நிலையால் நீ அவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டியா? இல்ல அதுவும் உன் திட்டமா?

அண்ணி உன்ன ஏத்துக்கணும். ஆனா நீ பேசினா அவங்க உன் மேல கோபத்தை மட்டும்தான் காட்டுவாங்க. அவங்க கிட்ட பொறுமையா பேச ஒரு ஆள் தேவ பட்டிருச்சு. அதுதான் நான். இல்லையா?

நான் என்ன பாவம் பண்ணேன்? எதுக்கு நீ என் கிட்ட நடிச்ச? கட்டின பொண்டாட்டிக்கு உண்மையில்லை. எல்லார் கிட்டயும் நடிக்கிற. யார் தான் நீ?” கோபத்தில் சீறினான் சர்வேஷ்.

முகத்தில் வழிந்த மழை நீரை பொறுமையாக துடைத்த கதிர்வேல் “நீ நடிக்கல சர்வேஷ். ஆமா உன் நிஜப் பேர் சர்வேஷ் தானா? இல்ல உங்கப்பன் சினிமாக்காக உனக்கு சர்வேஷ் என்று பேர் வச்சானா?

அப்பா?

எப்படி இருக்குறாரு உங்கப்பா? ரொம்ப நல்லா இருக்கிறாரா? என் அம்மாவ கல்யாணம் பண்ணி ஏமாத்தி ஓடிப்போனவரு.

உன் உடம்புல ஓடுற அதே ரெத்தம் தான் என் உடம்புலயும் ஓடுது.

நீ வில்லன்னா. நான் வில்லாதி வில்லன்.

நீ நடிகன்னா. நான் மகா நடிகன்டா” என்றான் கதிர்வேல். 

Advertisement