Advertisement

அத்தியாயம் 18-1

கொழும்பிலுள்ள பிரதான மருத்துவமனையில் மருத்துவரை காண அமர்ந்திருந்தாள் லாவண்யா. அவள் கூடவே செல்வாவும் வந்திருந்தான்.

சுற்றலா சென்றிருந்தது போது செல்வாவோ லாவண்யாவிடம் நெருங்காமென்று “நான் குழந்தையை பாத்துக்கிறேன். நீங்க கடல்ல குளிக்கிறதா இருந்தா குளிங்க” என்று கூறிப்பார்த்தான்.

“அவன் அத்தைகிட்டயே இருக்க மாட்டான். அதான் அவனை விட்டுட்டு நான் போகல” குழந்தையின் தலையை தடவியவாறு கூறினாள் லாவண்யா.

“பையன் பேர் என்ன?” குழந்தையின் தலையை தடவியவாறே கேட்டான் செல்வா.

“ஹரிகாந்த். மூணு வயசு” என்றாள் லாவண்யா.

சுற்றுலா வந்த அன்றிலிருந்து லாவண்யாவிடம் பேசினானோ இல்லையோ குழந்தையிடம் ஓரிரண்டு  வார்த்தை பேசுவான். ஆனால் பதில் தான் கிடைக்கவில்லை.

“அம்மா போலவே நீயும் இரு” முணுமுணுத்தவாறே கடப்பவன் இன்று ஒரு முடிவோடு தான் லாவண்யாவோடு பேசினான். 

இந்த கொஞ்ச நாட்களாக நன்கு பரிச்சயமான முகம் என்று ஹரிகாந்த் செல்வாவை பார்த்து அழகாய் சிரித்தான்.

“மூணு வயசா? அப்போ நல்லா பேசுவானே. ஆனா இவன் பேசி நான் பார்க்கவே இல்ல”

சுற்றுலா வந்து ஆறு நாட்களாகிறது. லாவண்யா குழந்தையோடு விளையாடுவாள், தூக்கி வைத்து சோறூட்டுவாள். குழந்தை சிரிக்கும், வேறு யாரிடமும் செல்லாமல் அவளிடம் மட்டும் தான் இருக்கும்.

நிர்மலாவுக்கு ஏற்பட்ட நிலமையால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்று மறுத்தவர் கூறியது செல்வாவின் ஞாபகத்தில் வந்து வந்து போனாலும் ஓடியாடும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இருப்பது போல் தெரியவில்லை.

“குழந்தைக்கு ஏதாவது குறை இருக்கிறதா?” என்று லாவண்யாவிடம் கேட்கவும் முடியாது. எந்த குறையும் வந்து விடக் கூடாது என்று கடவுளிடம் பிராத்தினைத்தான் செய்ய முடியும். 

கடலோரத்தில் லாவண்யாவோடு விளையாடும் குழந்தையையும் அவளையும் அவர்கள் அறியாமல் செல்வா அவனது அலைபேசியில் புகைப்படங்களாக பத்திரப்படுத்திக் கொண்டிருந்தான்.

அதை அவளிடம் நிச்சயமாக ஒருநாள் கொடுப்பான். அப்பொழுது அவள் அவன் மீது கோபப்படாமல் புன்னகைப்பாள்.

ஒரு சில காணொளிகளும் அவன் அலைபேசியில் அடக்கம். அதில் கூட ஹரிகாந்த் “அம்மா” என்ற வார்த்தையை தவிர வேறு எந்த வார்த்தையையும் பேசியதில்லை.

அதனால் தான் செல்வா குழந்தை பேசுவதை தான் கண்டதில்லை என்று லாவண்யாவிடம் கேட்டான்.

அவனை ஒரு நொடி வெறித்துப் பார்த்தவள் “பிறக்கும் பொழுதே பேச முடியாத குறையோடுதான் பிறந்தான்” என்றான்.

“அப்படியென்றால் டாக்டர் சொன்னது போல குழந்தையின் தலையில் அடிபட்டுதான் இப்படியாகிருச்சா?” செல்வா சட்டென்று கேட்டிருந்தான்.

“இல்ல அம்மாவோட வலி, வேதனை, அதிர்ச்சி இதனால பாதிப்படைஞ்சிருப்பான் என்று தான் டாக்டர் சொன்னாரு” என்றவள் “உங்களுக்கு உண்மை எல்லாம் தெரியுமா? கதிர் சொன்னானா?”

தனக்கு உதவி செய்த கதிர்வேல் மற்றவர்களிடம் என் கதையை கூறி அனுதாபத்தை சம்பாதிக்க முயல்கின்றானா? என்ற எண்ணம் ஒரு நொடி லாவண்யாவின் மனதுக்குள் தோன்றி மறைந்தது.

“சரோஜா அத்த தான் பேச்சு வாக்குல சொன்னாங்க. அவங்க பையன் வாழ்க்கை சரியாகணும் என்று கவலை பட்ட போதும் சரி, இப்போ கதிர்வேலும், பத்மினியும் ஒண்ணா சேர்ந்த போதும் சரி உங்கள நினைச்சி கவலை பட்டாங்க. உங்களையும் அவங்க பொண்ணாதான் பாக்குறாங்க”

செல்வாவுக்கு நன்றாகவே மனிதர்களை படிக்க முடியும். லாவண்யாவின் முக மாற்றத்தை வைத்தே. தன்னை பற்றி, தன் வாழ்க்கையில் நடந்ததை பற்றி பேசியது அவளுக்கு பிடிக்கவில்லை என்று புரிந்து கொண்டு சரோஜாவை தப்பாக நினைத்து விடக் கூடாதென்று இவ்வாறு கூறினான்.

அவன் கூறிய அனைத்துமே பொய்யில்லை. லாவண்யாவையும் குழந்தையையும் பற்றி சில நேரம் சரோஜா கவலையாக பேசுவதுண்டு.

“ஓஹ்…” என்ற லாவண்யா அமைதியானாள்.  

“சரி குழந்தைக்கு டிரீட்மென்ட்க்கு என்ன பண்ணுறீங்க?”

“பொறக்கும் போதே இருக்குற குறை அத எப்படி சரி செய்யிறது?” சோகமாக கூறினாள் லாவண்யா.

“இல்லங்க அவன் அம்மானு அழகா சொல்லுறானே. கண்டிப்பா பேசுவான். நாம ஒரு நல்ல டாக்டர் கிட்ட காட்டலாம்” என்றான் செல்வா.

“பேசுவானா?” எதிர்பார்ப்போடு கேட்பவளை ஏமாற்ற முடியுமா?

“நாங்க டாக்டர்கிட்ட காட்டி பார்க்கலாம்” என்று புன்னகைத்தான் செல்வா.

சுத்தி சுத்தி சுற்றுலா சென்றிருந்தாலும் பயண முடிவில் அனைவரும் சந்தோஷமாகத்தான் வீட்டுக்கு வந்திருந்தனர்.

வீட்டுக்கு வந்த அன்றிலிருந்தே செல்வா ஹரிகாந்த்தை எந்த மருத்துவரிடம் காட்டலாம் என்று தீர விசாரித்து குழந்தையை லாவண்யாவோடு கொழும்புக்கு அழைத்து வந்திருந்தான்.

ஹரிகாந்த்தை பரிசோதித்த மருத்துவரோ செவித்திறன், மூளையின் செயல்பாட்டில் எந்த குறையுமில்லை என்று பேச்சு மொழி நிபுணரிடம் ஆலோசனை பெற பரிந்துரைத்தார்.

“அப்போ நிஜமாலுமே ஹரிக்கு எந்த பிரச்சினையுமில்லையா?” ஆனந்தக் கண்ணீரோடு செல்வாவிடம் கேட்டாள் லாவண்யா.

மருத்துவரின் உரையாடல் எல்லாமே ஆங்கிலத்தில் இருக்க லாவண்யாவுக்கு எதுவும் புரிந்திருக்கவில்லை. அறையை விட்டு வெளியே வந்த பின் தான் செல்வா அவளிடம் தெளிவாக விளக்கி கூறியிருந்தான்.

லாவண்யாவுக்கு ஹரியின் மீது பாசம் இருந்ததே தவிர படிப்பறிவு கிடையாது. ஹரி பிறந்த போது நிர்மலாவின் வயிற்றில் அடிபட்டதால் குழந்தையின் தலையில் அடிபட்டிருக்க வாய்ப்பிருக்கு, அதனால் குறைபாடுகள் ஏற்படக் கூடும் என்று மருத்துவர் கூறியதால் அவளும் இது பிறவிக்கு குறைபாடு என்று நினைத்து விட்டுவிட்டாள்.

அவளை சொல்லியும் குற்றமில்லை. குழந்தை பேச ஆரம்பிக்கும் பொழுது சிரித்து பேசும் மனநிலையில் அவளில்லை. அமுதாவும், பழனியும் வீட்டுக்கு வருவதோ இரவில் குழந்தையோடு விளையாடவோ, செல்லம் கொஞ்சவோ அவர்களுக்கு நேரமில்லை. வேலை செய்த களைப்பில் உறங்கி விடுவார்கள்.

குழந்தைக்கு கதைகள் சொல்லி, எழுத்துக்களை அறிமுகப்படுத்தி, பாடல்களை பாடியிருந்தால் குழந்தை மெதுவாக பேச கற்றுக் கொண்டிருக்கும்.

தாய் சந்தோசமான மனநிலையில் இருந்தால் தானே குழந்தையோடு முழுமனதாக ஒன்றிணைய முடியும்.

பசிக்கு சோறூட்டுவதும், பாலூட்டி தூங்க வைப்பதும் மட்டும் தாயோட வேலையல்லவே. அதைத்தான் லாவண்யா இதுநாள் வரை செய்து கொண்டிருந்தாள்.

“உன் தவறு தான்” என்று அவளை குற்றம் சொல்லாமல் மருத்துவர் பரிந்துரைத்த பேச்சு மொழி நிபுணரிடம் உடனே அழைத்து சென்றான் செல்வா.

குழந்தையிடம் தனியாக ஒரு மணி நேரம் செலவழித்த அந்த பெண்ணுக்கு முப்பது வயது கூட நிரம்பவில்லை. ஒரு குழந்தைக்கு தாயும் கூட என்றதும் செல்வா இவரிடமே ஹரியை விடலாம் என்று லாவண்யாவிடம் கூறி விட்டு வெளியே சென்று அவளுக்கு அருந்த ஜூஸ் பாட்டில் வாங்கி வந்து கொடுத்தான்.

“ரொம்ப நன்றி. இப்படி எல்லாம் இருக்கு என்று எனக்கு தெரியாது” செல்வா கொடுத்த பாட்டிலை வாங்கிக் கொண்டு மெதுவான குரலில் கூறினாள் லாவண்யா.

“வீட்டுக்குள்ளேயே இருந்து உலகத்தை பார்த்துகிட்டு வாழ்ந்துட்டு போகலாம்னா இப்படித்தான்” வளமை போல் ஆரம்பித்தவன் லாவண்யா அவனை பார்க்கவும் “உனக்கென்று எந்த ஆசையும் இல்லையா? நீ என்ன படிச்சிருக்க? ஏதாவது ஜோப் செய்யணும் என்ற ஆச இருக்கா?” அவளை கேள்விகளால் பேசத் தூண்டினான்.

லாவண்யாவோ “அப்படி ஒன்று தனக்கிருக்கா? தனக்குத்தான் வாழ்க்கையில் எந்த ஆசையோ, எதிர்பார்ப்போ இல்லையே” யோசித்தவாறே செல்வாவை பார்த்தாள். 

“என்ன மழைக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்காத கேஸா?” என்னதான் லாவண்யாவை புரிந்து கொண்டு அவளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று செல்வா நினைத்தாலும், அவனையும் மீறி அவனது கிண்டல் பேச்சு எட்டிப் பார்த்து அவனையே அவன் மீது கோபப்பட வைத்துக் கொண்டிருந்தது.

சிரித்து சமாளித்தவன் “அதான் குழந்தைக்கு ஒன்றும் இல்லையே. அவன் இன்னம் கொஞ்சம் நாள்ல நல்லா பேச ஆரம்பிச்சிடுவான். அப்பொறம் ஸ்கூல் போக ஆரம்பிச்சிடுவான். அவன் லைப்ல அடுத்த கட்டத்துக்கு போய்கிட்டே இருப்பான்.

உன் நிலம என்ன? உனக்கென்ன படிக்க விருப்பமோ அதை படி. உனக்கென்று ஆசைகள் இல்லையா? நமக்கு இருக்கிறதே ஒரு வாழ்க்கை. நம்ம வாழ்க்கையை, நம்ம இஷ்டப்படி சந்தோஷமா வாழ்ந்ததுதான் பார்ப்போமே. என்ன பார்க்கலாமா?” கடைசி வாக்கியத்தை என்ன அர்த்தத்தில் சொன்னான் என்று அவனுக்கே தெரியவில்லை. சொல்லி விட்டான்.

அவளோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும் வாழ்வின் இறுதி நொடிவரை அவளோடு இருக்க முடியாத என்ற ஏக்கத்தை அவனுள் தோற்றுவித்திருந்தது.

“சொன்னா கேளு இது நடக்காதுடா. நடக்கவும் கூடாது” குமுறும் நெஞ்சத்தை நீவிவிட்டவன் “நல்லா யோசி” என்று புன்னகையோடு அமைதியானான்.

இதற்கு மேல் பேசினால் “நாம கல்யாணம் பண்ணிக் கொள்ளலாமா” என்று கேட்டு விடுவேனோ என்று அவனுக்கே அச்சம் ஏற்பட்டிருந்தது.

“சாரி. உங்க எல்லா வேலையையும் விட்டுட்டு நீங்க எங்களுக்காக வந்திருக்குறீங்க. நீங்க பதட்டமா இருக்குறது போல இருக்கு. உங்களுக்கு ஏதும் பிரச்சினையா? என் கிட்ட சொல்ல விரும்பம் என்றா சொல்லுங்க. என்னாலான உதவிய நான் செய்யிறேன்” செல்வா தன்னையே ஆசுவாசப்படுத்திக் கொள்வதை பார்த்துதான் கேட்டாள் லாவண்யா.

“அட நீ கொஞ்சம் நேரம் அமைதியா அந்த ஜூசை சாப்பிடுமா” என்ற செல்வா எழுந்து வெளியே சென்று விட்டான். அங்கிருந்தால் உளறிக் கொட்டி விடுவானோ என்றுதான் எழுந்து தான் சென்றான்.

ஹரிகாந்த் ஓடி வந்து லாவண்யாவை கட்டிக் கொள்ள, அவள் மனம் நிறைந்தது.

வீட்டில் என்ன மாதிரியான பயிற்சிகள் குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என்று நிபுணர் கூற, செல்வாவும், லாவண்யாவும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

மதிய உணவை முடித்துக் கொண்டு செல்வா அவர்களை ஒரு குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் நிறைந்த கடைக்கு அழைத்து சென்றான்.

“எதுக்கு நாம இங்க வந்திருக்கோம்” என்று லாவண்யா கேட்டாலும் குழந்தைக்கு பயிற்றுவிக்க சில பொருட்க தேவைபடும் அதை வாங்க வேண்டும் என்று அவளுக்கும் தெரியும். ஆனால் அவள் கையில் காசே இல்லை.

வண்டிக்கு செல்வா தான் கொடுப்பதாக கூறி இருந்தான். மருத்துவருக்கு உண்டான பணத்தை அவள் கொடுத்தாள். நிபுணருக்குண்டான பணத்தையும் செல்வா தான் கொடுத்தான். தேவையான பொருட்கள் வாங்க அவளிடம் பணம் இல்லை. ஊருக்கு சென்று பிறகு வாங்கிக் கொள்ள வேண்டியது தான் என்று நினைத்திருந்தாள்.

செல்வா கடைக்கு அழைத்து வந்தது குழந்தைக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்க என்று அவளுக்கும் தெரியும். அவனையே தொல்லை செய்ய முடியுமா? மறுப்பதற்காகத்தான் இந்த கேள்வியை கேட்டாள்.

அதை சரியாக புரிந்து கொண்ட செல்வாவோ “இங்க பாரு லாவண்யா குழந்தையோட விசயத்துல விளையாட முடியாது. ஒவ்வொரு பொருளா வாங்கி நீ ஹரிக்கு பயிற்சி கொடுக்கும் போது அவனுக்கு அஞ்சி வயசத் தாண்டிடும். அந்தம்மா என்ன சொன்னாங்க? அடுத்த மாசம் வரும் போது ஹரி மூணுல இருந்து பத்து பொருளைக்குள்ள பேர் சொல்லணும். அப்போதான் முன்னேற்றம் காணலாம் என்று சொன்னாங்க இல்ல. வீட்டுல எந்த பொருளும் இல்லாம நீ என்னத்த சொல்லிக் கொடுப்ப? கொஞ்சம் அமைதியா இரு?”

“இல்லங்க பணம்”

“நான் உன் கிட்ட பணம் கேட்டேனா? நான் தானே உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன். அப்போ ஹரி என் பொறுப்பு. நீ கொஞ்சம் நேரம் அமைதியா இருக்கிறியா? எப்போ பார்த்தாலும் தொண, தொணனு பேசிகிட்டு. குழந்தையை பார்த்துக்க” அவளை கண்டு கொள்ளாது குழந்தைக்கு தேவையான புத்தகங்கள், விளையாட்டு பொருட்கள் என்று என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டுமோ அவற்றை வாங்கலானான்.

“தான் இப்பொழுது என்ன அதிகமாக பேசி விட்டோம்? எதற்காக இப்பொழுது கோபப்படுகிறான். என்ன நடக்கிறது” என்று புரியாது முழித்தாள் லாவண்யா.

Advertisement