அத்தியாயம் 15

சிங்களத்து சின்னக்

குயிலே எனக்கு ஒரு

மந்திரத்தை

சொல்லு மயிலே

ஜிங்கள ஜிங்கா

ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா

ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா

ஜிங்கள ஜிங்கா

“என்ன தம்பி பாட்டெல்லாம் ஓவரா இருக்கு. ரொம்ப குஷியோ” சர்வேஷ் பாட்டுப்பாடியவாரு தலை துவட்டுவதை பார்த்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தான் செல்வா.

“பின்ன என் மனசுல இருக்குற பாரமே கொறஞ்சி, பறக்கிறது போல ஒரு பீல்” டீ ஷர்ட்டை அணிந்தவாறு சர்வேஷ் சொல்ல

“இந்த பீலிங் அங்க இல்லையே” முணுமுத்தான் செல்வா. முழு நாளும் கடையில் தானே இருந்தான். சர்வேஷ் பேசி விட்டு சென்ற பின் சுரங்கணி எவ்வாறு நடந்து கொண்டாள் என்று கூட நின்று பார்த்தவன் தானே. சர்வேஷ் பேசியதற்கு எந்த பிரதிபலிப்பும் இல்லை என்ற கோபம் செல்வாவுக்கு இருந்தது.  

“ஆமா என் டார்லிங் சுரங்கணி எப்படி இருக்கா? என்ன பண்ணுறா?” இந்த நேரத்தில் அவள் வீட்டுக்கு சென்றிருப்பாள் என்று அறிந்தே தான் கேட்டான் சர்வேஷ்.

“அவங்களுக்கென்ன?  வளமை போல நல்லாத்தான் இருக்காங்க. ஒரு ஆட்டோகாரன் கல்யாணம் பண்ண அவங்களுக்கென்ன தலையெழுத்தா? முதல்ல நீங்க யாரு என்று சொல்லுங்க அப்போ உங்கள வேணான்னு சொல்வாங்களானு பாப்போம்” கோபத்தில் பொரிந்தான் செல்வா.

“ஓஹ்… பணம் தான் பிரச்சினை என்று நீயே முடிவு பண்ணிட்டியா? எந்த பொண்ணுதான் லவ்வ சொன்ன உடனே ஓகே சொல்லி இருக்காங்க? எல்லா பொண்ணுகளும் பசங்கள அலைய விட்டுத்தான் ஓகே சொல்வாங்க” சிரித்தான் சர்வேஷ்.

தான் யார் என்று அறிந்தால் தான் மறுப்பாளே ஒழிய, நிச்சயாமாக சுரங்கணி பணத்துக்காக தன்னை வேண்டாம் என்று கூற மாட்டாள். மதத்தையும் தாண்டி மனித நேயம் கொண்டவள். காதலுக்குள் மதத்தை கொண்டு வரவும் மாட்டாள். அண்ணா சொல்வது போல் படிப்பும் அவளுக்கு பொருட்டில்ல.

தன்னை வேண்டாம் என்று அவள் கூற, தக்க காரணம் இருக்கத்தான் செய்யும். அதை கூட தன்னால் சமாளித்து விடலாம். தான் யார் என்ற உண்மையை கூறத்தான் சர்வேஷ் அஞ்சினான்.

“ஆமா… ஆமா… உங்க ப்ரோபோசள நானும் தான் பக்கத்துல இருந்து பார்த்தேனே. சுத்தி வளைச்சி பேசிகிட்டு. பட்டுனு சொல்ல வேணாம்” சர்வேஷை முறைத்தான் செல்வா.

“உனக்கு புரிஞ்சது. அவளுக்கு புரியலையா?”

“புரிஞ்சிருந்தா இப்படி அமைதியா இருப்பாங்களா? அவங்களுக்கு என்னமோ உளறலாத்தான் தெரிஞ்சிருக்கும். இல்லனா உங்கள இப்படி கடைல இருந்து துரத்தி இருப்பாங்களா?  ப்ரொபோஸ் பண்ணுறாராம் ப்ரொபோஸ். எத்தனை படத்துல ப்ரொபோஸ் பண்ணி இருக்குறாரு? எத்தனை தடவ ரிஹாஸல் பண்ணி இருப்பாரு? படத்துல பண்ணதுல ஒரு பெர்சண்டேஜ் வாழ்க்கைல பண்ணி இருந்தா காலைல கடைய விட்டு துரத்தி இருப்பாங்களா? எங்க? எழுதிக் கொடுத்தா தானே பேசுவீங்க? சொந்தமா பேசத் தெரியாதே” கண்டமேனிக்கு சர்வேஷை திட்டினான் செல்வா.

இந்த ஊரில் வந்து ஒரு சிங்கள பெண்ணையா காதலிக்க வேண்டும்? இது சரியில்லை என்றெல்லாம் சர்வேஷுக்கு அறிவுரை கூறாமல், அவன் சந்தோசம் தான் முக்கியம் என்று அவனுக்காக கோபப்படும் செல்வாவை சர்வேஷுக்கு ரொம்பவே பிடிக்கும்.

ஒரு அண்ணனாக, நண்பனாக கூட இருப்பவனுக்கு புரிய வைக்க வேண்டியது தன்னுடைய கடமை என்று எண்ணியவன் “சரி இன்னக்கி அவ கடைல என்னெல்லாம் பண்ணானு சொல்லு” என்று அவனை வம்படியாக கேட்டான் சர்வேஷ்.

“என்ன பண்ணாங்க? டேலி என்ன பண்ணுறாங்களோ அதெல்லாம் பண்ணாங்க” சர்வேஷை முறைத்தான் செல்வா.

“அப்போ இதற்கு முன்னாடி என்னெல்லாம் பண்ணலையோ அப்படி ஏதாவது இன்னக்கி பண்ணாளா?” செல்வா கோபத்தில் சொல்லவும் கேள்வியை மாற்றிக் கேட்டான்

“லன்ச் சாப்பிடல. அடிக்கடி ரோட்டை பார்த்துகிட்டு இருந்தாங்க. படிக்க புக்க கைல வச்சிக்கிட்டு பல தடவ புரட்டினாங்க ஆனா படிக்கவே இல்ல” என்று சொல்லிக் கொண்டே போன செல்வா “தம்பிசார் இதெல்லாம் கருமம் லவ் என்று சொல்லிடாதீங்க. சகிக்கல. சினிமாலையே பல தடவ பார்த்து புளிச்சு போச்சு. லவ்வ சொன்னா ஏத்துக்கணும். இப்படி மாத்தி பண்ணக் கூடாது. என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு” கடுப்பானான் செல்வா.

“அவ நெர்வஸா இருக்கா அதான் அப்படி பண்ணுறா. விருப்பம் இல்லனா மூஞ்சிக்கு நேரா சொல்லிடுவா. கொஞ்சூண்டாச்சும் நான் அவளை டிஸ்டர்ப் பண்ணி இருப்பேன். அதான் டிஸ்டப் ஆகிட்டா” சொல்லும் போதே சுரங்கணி எப்படியெல்லாம் பதட்டமாக இருந்திருப்பாள் என்று நினைத்து சிரித்தான்.

“இப்படி அந்த புள்ளய வதைக்கிறதுக்கு பேசாம மதியம் வந்து பேசியிருக்கலாமே. லவ் பண்ணுறது. அப்பொறம் சொல்ல தயங்குறது. சொல்லிட்டா என்ன பதில் சொல்வாங்களோ என்று தவிக்கிறது. லவ் பண்ணுறாங்க என்று தெரிஞ்சா இப்படித்தான் தவிக்க விடுவீங்களா? இதெல்லாம் நல்லதில்ல, சொல்லிட்டேன்”  செல்வாவுக்கு கோபம் வரவே வார்த்தைகளை கக்கினான். 

“மதியம் நான் போய் இருந்தா என்ன பார்த்து கோபம் தான் படுவா. போகாததனாலதான். ஏன் நான் வரலன்னு ரோட்டை பார்த்துகிட்டு படிக்க எடுத்த புக்க கூட படிக்காம உக்காந்து இருந்தா” என்னமோ சர்வேஷ் அருகில் இருந்து பார்த்தது போல் கூற,

எதிர்த்து செல்வா எந்த கேள்வியும் கேட்கவில்லை. “பீல் மை லவ்” என்று காதல் காட்ச்சிகளில் உருக்கமாக நடிக்க சில டைரக்டர்கள் இவனுக்கு பாடம் எடுப்பது பார்த்திருந்தவன் தானே. அந்த அனுபவத்தில் கூறுகின்றான் என்று செல்வா புரிந்துக்கொண்டான்.

“முன்ன பின்ன லவ் பண்ணி இருந்தா தானே, இந்த எழவெல்லாம் புரியும். சின்ன வயசுலயே அத்த பொண்ண கட்டிக்கணும் என்று தலைல எழுதிட்டாங்க. நானும் அப்படியே வளர்ந்துட்டேன்” பெருமூச்சு விட்டுக் கொண்டான் செல்வா.

“ஏன்டா லவ்வே இல்லாம எதுக்கு பெரியவங்க சொல்லுறாங்க என்று அத்த பொண்ண கல்யாணம் பண்ண போற? உனக்கு பிடிச்ச லாவண்யாவையே கல்யாணம் பண்ணலாம்ல” 

“அட போங்க தம்பிசார். இந்த பொண்ண தான் லவ் பண்ணுறேன் என்று கல்யாணம் பண்ணிக்கிட்டு போய் நின்னா, என்ன சாதி, என்ன குலம் என்று கேட்டு சோத்துல விஷம் வச்சி கொன்னுடுவாங்க. இதுல இந்த புள்ள வேற புள்ளயோட நிக்குது. கூட்டிட்டு போய் குழி தோண்டி புதைக்கிறதுக்கு அது இங்கயே இருந்துட்டு போகட்டும்” முயன்று சோகத்தை குரலில் காட்டாது கிண்டல் செய்ய முனைந்தான் செல்வா.

சதா கேலி செய்து, சிரித்துக் கொண்டே இருக்கும் செல்வாவுக்குள் இப்படி ஒரு சோகம் இருக்குமென்று சர்வேஷ் நினைத்துக் கூட பார்த்ததில்லை. இதுநாள் வரை குடும்பத்தை பற்றி கேட்டால் சந்தோஷமாக பேசுபவன் இன்றுதான் இப்படி பேசியிருந்தான்.

எல்லா காதலின் முடிவும் சந்தோஷமாக முடிவதில்லை. முடிவு இதுதான் என்று அறிந்தால் விலகி இருப்பதுதான் மேல் என்ற முடிவில் செல்வா இருக்கிறான் என்று சர்வேஷுக்கு புரிந்தது.

“ஆமா அந்த லாவண்யா பொண்ணுக்கு என்னதான் பிரச்சினை?” அன்று சர்வேஷ் சொல்ல வரும் பொழுது கேட்ட பிடிக்காதது போல் விலகிச் சென்றவனுக்கு இன்று அவ்வாறு செல்ல தோணவில்லை.

“அதான்  அன்னக்கி மனுஷனா பொறந்தா ஆயிரத்தெட்டு பிரச்சினை இருக்கத்தான் செய்யும். லாவண்யாவுக்கு கல்யாணம் ஆகலனா… அது அக்கா புள்ளையா இருக்கும். இல்ல அண்ணனோட புள்ளையா இருக்கும். இத சொல்லுறேன்னு பஞ்சாயத்து பண்ணி அவளுக்கு வாழ்க கொடுக்க வச்சிடுவீங்க போல என்று பேசினியே. இன்னக்கி என்ன அக்கறையா விசாரிக்கிற?”

சர்வேஷ் கிண்டலாக ஒன்றும் கேட்கவில்லை. லாவண்யா மேல் செல்வாவுக்கு விருப்பம் இருந்தும் விலகி இருக்கிறான். அப்படிப்பட்டவன் அவளை பற்றி கேட்கிறான் என்றால் அது அவளுக்கு உதவி செய்யத்தான் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். தெரிந்தே தான் கேட்டான்.

“இல்ல நான் வரும் போது இந்த நைட்டுல விறகு வெட்டிக் கிட்டு இருந்தா” என்று நடந்தை கூறலானான்.

  

பட்டய கெளப்பு

குட்டய கொழப்பு

பட்டய கெளப்பு

பட்டி தொட்டி எல்லாம்

பட்டய கெளப்பு

குரவ மீன பிடிக்க

குட்டய கொழப்பு

கட்டு கட்டா சோ்த்த

நோட்டு கட்டு

பெரும் பூட்டு

போட்டு கெடக்கு

பறவைக்கெல்லாம்

ஒரு வங்கி இல்லை

அது பட்டினியா கெடக்கு

பொறப்பும் இறப்பும்

அவன் கையில

நாம வாழும் வாழ்க்க

நம்ம கையில…ஹே

பொறப்பும் இறப்பும்

அவன் கையில

நாம வாழும் வாழ்க்க

நம்ம கையில…

“இந்த இருட்டுல நம்ம வாய்ஸ்ல பாட்டு பாடினா பாம்பெல்லாம் தெறிச்சு ஓடும். கதிர் அண்ணா இதனாலதான் டையிலி பாடிகிட்டு வராரோ என்னவோ” பாட்டுபாடியவாறு வீட்டுக்கு வர மலை ஏறிக் கொண்டிருந்தான் செல்வா.

“தட் தட்” என்று லாவண்யாவின் வீட்டிலிருந்து சத்தம் வர “என்ன இந்த சத்தம்? நடு ராத்திரில கொலை பண்ணினவன, துண்டு துண்டா வேண்டுறது போல ஒரு சத்தம். காத்து வேற சில்லுனு ஒரே அமானுஷ்யமான இருக்கு. என்னனு பார்க்கலாமா? வேணாம் வேணாம் நம்மளையும் போட்டுத் தள்ளுவாங்க. எத்தனை சினிமால பார்த்திருக்கேன். வீணா மூக்க நுழச்சி தலைய துண்டாக்கிக்கணுமா?” என்று செல்வா முணுமுணுக்க, லாவண்யா வெட்டியா விறகுகளை சுமந்து கொண்டு வந்து வாசலில் அடுக்கலானாள்.

“ஓஹ்… விறகுதான் வெட்டினாளா?”

“யாரு அங்க?” யாரோ நிற்பதை பார்த்து கையில் கத்தியோடு முறைத்தாள் லாவண்யா.

“யம்மா.. நான் தான் செல்வா. சத்தம் வந்ததால என்னனு பார்த்தேன். ஒண்ணுமில்ல. அதான் கேஸ் சிலிண்டர் வந்திருச்சே. எதுக்கு இன்னமும் விறகு வெட்டிக்கிட்டு இருக்க? சிலிண்டரை வாங்க வேண்டியது தானே. முன்ன போல சிலிண்டர் இப்போ வெடிக்கிறது கூட இல்ல” என்று சத்தமாக சிரித்தான்.

குறைந்த விலையில் மக்களுக்கு விநியோகம் செய்ய கேஸை மாற்றி அமைத்ததில் பல இடங்களில் வெடிப்பு சம்பவங்கள் நடந்தேறியது செய்திகளில் வந்தது. ஏன் இரத்தினபுரியில் கூட இரண்டு சம்பவம் நடந்திருந்தது. வீட்டிலையே பாமை வைத்துக் கொண்டு எப்படி வாழ்வது என்று மக்கள் விறகை தேடி சென்றிருக்க, கேஸ் விலையும் அதற்கொரு காரணமாக அமைத்திருந்தது.

ஆனால் இப்பொழுதுதான் பிரச்சினை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்களே. இன்னும் ஏன் விறகை வெட்டிக் கொண்டு சிரமப்பட வேண்டும் என்று தான் கேட்டான் செல்வா.

“எங்க வீட்டுல கேஸ் குக்கர் இல்ல. சிலிண்டரை வாங்கி பூஜை செய்யவா?” என்று விட்டு வெட்டிய விறகுகளை கட்டலானாள்.

“அடுப்பே இல்லையா? சரிதான்” லாவண்யாவின் வீட்டில் அவளை, அவளுடைய குழந்தையை தவிர யாரையும் அவன் பார்த்ததில்லை. அவன்தான் காலையில் கடைக்கு சென்றால் இரவில் வீடு வருகிறான். கடைக்கும் லாவண்யாதான் குழந்தையை சுமந்து கொண்டு வருகிறாள். “ஆமா இந்த வீட்டில் யார் இருக்கிறார்கள்? இவள் புருஷனுக்கு என்ன ஆச்சு என்று எண்ணியவன், இவளுக்குத்தான் கல்யாணமே ஆகலானு தம்பிசார் சொன்னாரே” என்று

“வீட்டுல அம்மா, அப்பா இல்லையா?” என்று மட்டும் தான் கேட்டான். 

“எதுக்கு பொண்ணு கேட்கவா? அவங்க செத்து பல வருஷமாச்சு. நீ செத்து போய் தான் அவங்க கூட பேசணும். உனக்கு என் வீட்டு வாசல்ல என்ன வேல. கதிர் வீட்டுல இருக்கீனா சரோஜா அம்மாவோட மரியாதைய காப்பாத்திக்கிட்டு இரு. என் கிட்ட வாலாட்டனும் என்று நினச்சா. கழுத்துக்கு மேல தலை இருக்காது” கத்தியை தூக்கிக் காட்டியவாறே கூறினாள்.

“அம்மா, அப்பா வீட்டுல இல்லையா என்று கேட்டது ஒரு குத்தமா? டாடி மம்மி வீட்டில் இல்ல தடை போட யாரும் இல்ல, என்னமோ இவ கூட குடும்பம் நடாத்த கேட்டது போல பேசுற” என்று அவளை முறைத்துப் பார்த்தவன் “நீ என்ன சீரியல் கில்லரா? இல்ல உன்ன நீ உலக அழகி என்று நினைச்சி கிட்டு இருக்கியா? சாதாரணமா பேசினா எறிஞ்சி விழுற. உன் மூஞ்சியும், நீயும். உன் மூஞ்சிய எப்பவாச்சும் கண்ணாடில பார்த்திருக்கியா? மனசுல இம்புட்டு குப்பையை வச்சிருக்குறதாலதான் வாழ்க்கைல இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிற. இவ்வளவு பட்டும் உன் வாய் கொழுப்பு அடங்கல, பார்த்தியா அங்க நிக்கிற நீ. உன்னயெல்லாம் பூதம் கூட தீண்டாது. என்ன பார்த்து…” என்று செல்வா வார்த்தைகளை அனலாய் கக்க,

அவன் பேசப் பேச அவனை அதிர்ச்சியாக பார்த்திருந்த லாவண்யா உள்ளே ஓடியிருந்தாள். 

“டேய் வாத்து முட்ட. ஒரு பொண்ணு கிட்ட இப்படித்தான் பேசுவியா? பிடிக்காத பொண்ணு கிட்ட கூட எந்த மடையனும் இப்படி பேச மாட்டான். நீ என்ன புடிச்ச பொண்ணு மனச இப்படி காயப்படுத்திட்டு வந்திருக்க?” சர்வேஷுக்கு கோபம் அடங்கவில்லை.

கையை நீட்டி சர்வேஷை தடுத்த செல்வா “எல்லாம் எனக்குத் தெரியும். நான் யாரு என்று அவளுக்கு தெரியாம இருக்கலாம். ஆனா நான் சரோஜா அத்த வீட்டுல இருக்கேன். கதிர் மச்சான் கூட ப்ரெண்டா இருக்கேன் என்று அவளுக்குத் தெரியும் தானே. சாதாரணமா பேசினா இப்படித்தான் பேசுவாளா?

அப்படி பேசினா எதிரே நிக்குறவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும் என்று அவளுக்கு புரிய வைக்கத்தான் நானும் ஹார்ஷா பேசினேன். இனிமேல் என்ன பார்த்தா அப்படி பேச மாட்டா. என் கிட்ட மட்டும் இல்ல யார் கிட்டயும் அப்படி பேச மாட்டா” என்றான் செல்வா.

சரோஜாவை அம்மாவென்றும், கதிரை அண்ணா என்றும் அழைத்துக் கொண்டிருந்தவன் திடிரென்று அத்தை, மச்சான் என்று அழைத்திருந்தான். அதை சர்வேஷ் கவனித்தானா?

“புரிய வைக்க பேசினியா? நல்ல பேசின போ… உன்ன திரும்பிக் கூட பார்க்க மாட்டா” சர்வேஷுக்கு கோபம் அடங்கவே இல்லை. செல்வாவை முறைத்துக் கொண்டே இருந்தான்.

“தேவையில்ல. நான் என்ன அவள கல்யாணம் பண்ணி குடும்பம் நடாத்தவா போறேன்? அவ நல்லா இருக்கணும் என்று நினைக்கிறேன். அதுக்காகத்தான் அவ லைப்ல என்னதான் நடந்தது என்று தெரிஞ்சிக்கணும் என்று கேட்கிறேன்” என்று புன்னகைத்தான் செல்வா.

அவன் புன்னகையில் சோகம் மறைந்திருக்க, சர்வேஷின் கோபம் கூட மறைந்து போனது. செல்வாவின் முகத்தில் இருந்த உறுதியை பார்த்தே தான் அறிந்து கொண்ட உண்மையை கூறலானான் சர்வேஷ்.

வாழ்க்கை ஒவ்வொரு மனிஷனையும் எந்த மாதிரியான பிரச்சனைகளை கொண்டு சோதிக்கும் என்று யாராலயும் கணிக்க முடியாது.

மனுஷனாக பிறந்த எல்லாருக்குமே பிரச்சினைகள், கஷ்டங்கள், சோகங்கள், துன்பங்கள் என்று வாழ்க்கையில் பல அடிகள் விழத்தான் செய்யும்.

அதிலிருந்து பலர் மீண்டு வந்தாலும், சிலர் மீள முடியாமல் தற்கொலை என்ற முடிவை எடுத்து விடுவாங்க. அப்படி தற்கொலை செய்து கொள்ளுறவங்கள நாம கோழை என்று சொல்லுறோம். ஆனா உண்மையில் அந்த முடிவை எடுக்கவும் ஒரு குருட்டுத்தனமான தைரியம் வேணும்” என்ற சர்வேஷ் பெருமூச்சுவிட்டான்.

“யார் தற்கொலை செய்து கொண்டார்கள்? அவர்களுக்கும் லாவண்யாவின் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டு செல்வா சர்வேஷின் பேச்சில் குறிக்கிடவில்லை. அமைதியாக அவன் பேசுவதை கேட்டிருந்தான்.  

லாவண்யாவோட அம்மா இந்த ஊருதான். பதுள்ளைல கல்யாணம் பண்ணி கொடுத்திருக்காங்க. லாவண்யா கிடைச்சப்போ இறந்துட்டாங்க. அவளுக்கு ஒரு அக்கா வேற இருந்திருக்காங்க. அப்பா ரெண்டாம் தாரமா இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டாரு. கல்யாணம் பண்ணது என்னவோ தன்னோட ரெண்டு பொண்ணுங்களுக்காகத்தான். ஆனா சித்தியா வந்தவளோட கொடுமைகளை பார்த்து லாவண்யாவோட தாய்மாமன் பழனி குழந்தையா இருந்த லாவண்யாவையும், அவ அக்கா நிர்மலாயாவையும் இங்க கூட்டிட்டு வந்துட்டாரு.

அவருக்கு ஒரு பையன் தான். அதனால பொண்ணு இல்ல என்ற குறை போய் இவங்க ரெண்டு பேரையும் இவங்க பொண்ணா வளர்த்திருக்காங்க. அதுவும் லாவண்யா என்றா அவங்களுக்கு பொண்ணுதான். ஏன்னா நிர்மலாவை அவங்க பையன் விக்னேஷுக்கு கட்டிக் கொடுக்கணும் என்ற எண்ணம்.

நிர்மலாவுக்கு பதினெட்டு வயசு வந்ததுமே விக்னேஷுக்கும் நிர்மலாவுக்கு கல்யாணம் பண்ணனும் என்று வீட்டுல பேசியிருக்காங்க

 “என்ன அவசரம் இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்” என்றான் விக்னேஷ்.

“அவன் சொல்லுறதும் சரிதான். அவனுக்கு இப்போ தானே இருபத்தியொரு வயசாகுது. இருபத்தி அஞ்சானாலும் பரவால்ல. ஒழுங்கா வேலைக்கு போய். நாலு காச சேர்த்து வைக்கட்டும்” என்றாள் அவன் அன்னை அமுதா.

“சரிதான். ரெண்டு வருஷத்துல லாவண்யாக்கும் பதினெட்டாகிடும். அவளுக்கும் ஒரு மாப்பிளையை பார்த்தா ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா பண்ணிடலாம். என்ன சொல்லுற?” மனைவியை ஏறிட்டான் பழனி.

“இதுவும் நல்லாத்தான் இருக்கு” என்ற பெற்றோரை முறைக்க முடியாமல் நின்றிருந்தான் விக்னேஷ்.

காலங்கள் உருண்டோடி லாவண்யாவின் பதினெட்டாவது பிறந்தநாளும் வந்தது.

“அப்பாடா… இனி எனக்கும் அத்தானுக்கு கல்யாணம் நடந்துடும். உன்ன பத்தி கவலைப்பட வேண்டியதில்ல” என்றாள் நிர்மலா.

சின்ன வயதிலிருந்தே விக்னேஷ் உனக்குத்தான் என்று பழனியும், அமுதாவும் சொல்லி சொல்லி வளர்த்ததில் நிர்மலா அவனை தாண்டி எதையுமே சிந்திக்க மாட்டாள்.

“என்ன கவலைப்பட வேண்டியதில்ல. நீ பாரு அத்தான் என்னதான் கட்டிக்கணும் என்று சொல்லுவாரு. உன்ன விட நான் தான் அழகு” என்று அக்காவை வம்பிழுத்தாள் லாவண்யா?

விக்னேஷும், லாவண்யாவும் சேர்ந்து நிர்மலாவை வம்பிழுப்பதுதான்.

“போ அத்தான்… இவ வேற” என்று ஒரு நாளும் நிர்மலா அதை பெரிதுபடுத்த மாட்டாள். அவர்கள் கிண்டல் செய்வது அவளுக்கு நன்றாகவே தெரியும். விக்னேஷ் அவளிடம், லாவண்யாவிடனும் ஒரே மாதிரிதான் பழகுவான். அதனால் அவள் ஒருநாளும் அவன் மீதோ, லாவண்யா மீதோ சந்தேகம் கொண்டதும் கிடையாது.

லாவண்யா அக்காவை கிண்டல் மட்டும்தான் செய்தால். ஆனால் விக்னேஷின் மனதில் கள்ளத்தனம் புகுந்திருந்தது. அவனுக்கு நிர்மலாவை விட லாவண்யாவைதான் பிடித்திருந்தது. தனக்கு மனைவி என்றால் அது லாவண்யா மட்டும் தான் என்று முடிவு செய்ததினால் தான் திருமணத்தையே தள்ளிப் போட்டான். நிர்மலா மீது ஆசை வைத்திருந்தால் திருமணத்தை தள்ளிப் போட எந்தக்காரணமும் இல்லையே. லாவண்யாவுக்கு பதினெட்டு வயது ஆகட்டும் என்றுதான் காத்திருந்தான்.

“என்னப்பா எப்போ கல்யாணத்த வச்சிக்கலாம்?” பழனி மகனிடம் கேட்கும் பொழுது மொத்த குடும்பமும் அங்குதான் நின்றிருந்தனர்.

“நீங்க எப்போ சொல்லுறீங்களோ அப்போ வச்சிக்கலாம். ஆனா நான் லாவண்யாவதான் கல்யாணம் பண்ணிக்குவேன். எனக்கு அவளைத்தான் பிடிக்கும். நிர்மலாவை என்னால என் பொண்டாட்டியா பார்க்க முடியல” என்றான்.

“அத்தான் விளையாடாத. பாரு. அக்கா மூஞ்சி எப்படி மாறிருச்சுனு. சீரியஸ்ஸா பேசும் போது கூட அவள கிண்டல் பண்ணாம இருக்க மாட்டியா?” என்று லாவண்யா சொல்ல,

“நான் விளையாட்டுக்கு சொல்லல, நானும் சீரியஸ்சாதான் பேசிகிட்டு இருக்கேன்” என்றான் விக்னேஷ்.

இவர்களிடம் விளையாட்டாக பேசுபவன் பெற்றோரிடம் விளையாட்டாக பேச மாட்டான் என்று லாவண்யாவுக்கும் தெரியும். நிர்மலா விக்னேஷ் மீது எவ்வளவு ஆசை வைத்திருக்கின்றாள் என்றும் லாவண்யாவுக்கு நன்றாகவே தெரியும். தன்னால் அக்காவுக்கும், குடும்பத்திலும் எந்த ஒரு பிரச்சினையும் வந்து விடக் கூடாதென்று தான் பேசினாள்.

தங்களிடம் விளையாட்டாக பேசும் அத்தான், பெற்றவர்களின் முன்னிலையில் கூறியது சத்தியம் என்று நிர்மலாவுக்கு புரியாதா என்ன? நிர்மலா எதுவும் பேசவில்லை. நேராக சமயலறைக்கு சென்று கத்தியை எடுத்து வந்தவள் கையை அறுத்துக் கொண்டாள்.

“ஏய் என்ன பண்ணுற?” அனைவரும் அவளை நெருங்க,

“அங்கேயே நில்லுங்க யாரும் கிட்ட வரக் கூடாது. சின்ன வயசுல இருந்தே. அத்தான் தான் என் புருஷன் என்று சொல்லி சொல்லி வளர்த்துட்டு, இப்போ என்ன கல்யாணம் பண்ண மாட்டார் என்றா நான் உசுரோடயே இருக்க மாட்டேன்”

அமுதா அழ, லாவண்யா அழுதவாறே “அத்தான் உன்னத்தான் கட்டிக்குவாரு அக்கா. நான் பேசுறேன். நீ வா ஹாஸ்பிடல் போலாம்” என்றாள்.

“டேய் விக்னேஷ். என்னடா மரம் மாதிரி நிக்கிற? போ… போய் ஆட்டோ பிடி” கத்திய பழனி நிர்மலா விலக, விலக அவள் கையில் இருந்த கத்தியை பிடுங்கி தூர எரிந்து அவளை மருத்துவமனையில் சேர்த்திருந்தான். 

இரத்தப்போக்கு அதிகமானதால் மருத்துவமனைக்கு செல்லும் பொழுதே மயங்கி இருந்தாள் நிர்மலா. செல்லும் வரையில் விக்னேஷை பற்றி மட்டுமே பேசினாள்.

விக்னேஷிடம் வந்த அமுதா “இங்க பாரு விக்னேஷ் அம்மா சொல்லுறேன் கேளு. நான் வளர்த்த பொண்ணுங்க உன்னால கஷ்டப்படுறத என்னால பாத்துகிட்டு நிற்க முடியாது. லாவண்யா உன்ன விரும்பல. நீ இல்லனா நிர்மலா செத்துடுவா. அவ சாவுலதான் நீ லாவண்யாவ கல்யாணம் பண்ணனும் என்று ஆச படுரீனா நானே உனக்கு லாவண்யாவ கட்டி வைக்கிறேன். அக்காவை கொண்டுட்டா என்ற பழியோட அவ உன் கூட சந்தோஷமா வாழ்வாளா? நல்ல யோசிச்சு நீயே முடிவெடு” என்று விட்டு சென்றாள்.

அதன்பின் விக்னேஷ் நிர்மலாவை திருமணம் செய்துகொள்ள எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அமைதியாக அவளை திருமணமும் செய்து கொண்டான்.

லாவண்யா இருக்கும் வீட்டில் அவர்கள் இருந்தால், வீணான பிரச்சினைகள் உருவாகக் கூடும் என்று அமுதா கணவனிடம் பேசி அவர்களை தனிக்குடித்தனமும் அனுப்பி வைத்தாள்.  

இரத்தினபுரியிலிருந்து பன்னிரண்டு கிலோமீட்டரில் இருக்கும் ஒரு துணி பாக்டரியில் தான் விக்னேஷ் வேலை பார்க்கிறான். ஆதலால் குருவிட்ட என்ற அந்த ஊருலையே வீடெடுத்து தங்கியிருந்தனர் புதுமணத்தம்பதியினர்.

குடும்பத்தாரை விட்டு தனியாக சென்றது நிர்மலாவுக்கு வினையாக அமைந்து போனது.

கொரோனா லாக்கடவன் என்பதால் குடும்பத்தார் அவளை சென்று பார்க்க முடியாத நிலை. தினமும் குடித்து விட்டு வந்து அவளை அடிக்க ஆரம்பித்தான் விக்னேஷ்.

“உன்னோட ஆசையால, உன் ஒருத்தியோட ஆசையால என் ஆச மண்ணா போச்சு. உனக்கு நான் தானே வேணும். வா… வா…” என்று தினமும் அவளை கணவனாக ஆட்கொள்ள ஆரம்பித்தான்.

என்னதான் விக்னேஷ் வார்த்தைகளாலும், உடல்ரீதியாக கொடுமைகள் இழைத்தாலும் நிர்மலா வீட்டில் எதை பற்றியும் வாய் திறக்கவில்லை.

விக்னேஷ் ஒருநாள் தன்னை புரிந்துகொள்வான். தன்னை முழுமனதாக ஏற்றுக்கொள்வான் என்று கண்ணீரோடு காத்திருந்தாள்.

நிர்மலா கர்ப்பமாக இருப்பதை அறிந்த அன்று லாவண்யா அவளை வந்து அமுதாவோடு பார்த்து விட்டு சென்றதோடு சரி, விக்னேஷின் வீட்டுக்கு அவள் வருவதே இல்லை. எங்கே தான் வந்தால் அக்காவின் நிம்மதி குலைந்து விடுமோ என்று அஞ்சினாள்.

தானும் அத்தானோடு சேர்ந்து கிண்டல், கேலி செய்ததால் தான் அத்தானின் மனதில் இப்படி ஒரு எண்ணம் வரக் காரணம். ஆரம்பத்திலையே இதை தடுத்திருந்தால் இப்படியொரு சூழ்நிலையே வந்திருக்காது என்று தினமும் கண்ணீர் வடிப்பாள்.

அந்த குற்றஉணர்ச்சியினாலையே நிர்மலாவை விட்டு விலகி இருந்தாள் லாவண்யா.   

அமுதாவும், பழனியும் மட்டும் வந்து விட்டு செல்வார்கள். கர்ப்பமாக இருப்பதால் நிர்மலாவை அமுதா வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்று விக்னேஷிடம் கூற, தான் சென்றால் அவன் பட்டினியாக கிடக்க வேண்டி வரும் என்று நிர்மலா மறுத்து விட்டாள்.

ஒருவழியாக மகனும், மருமகளும் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்று கருதினாள் அமுதா.

குழந்தையின் வருகையால் எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று நிர்மலாவும் நினைத்தாள்.

ஆனால் கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிந்தும் உதைப்பான் விக்னேஷ்.

“ஏன் அத்தான் உனக்கு என்ன பிடிக்கல. உன் புள்ள தானே என் வயித்துல இருக்கு. புள்ளைக்கு ஏதாவது ஆகிடப் போகுது” நிறைமாத வயிற்றைப் பிடித்துக் கொண்டு கதறுவாள் நிர்மலா.

“உன்னையே எனக்கு பிடிக்கல. இதுல உன் வயித்துல வளருற சனியனை பத்தியா நான் கவலைப்படப் போறேன்? பொறக்கட்டும். அதுக்கும் உன் கதிதான். இதுக்குத்தான் ஆசபட்ட. சாவுடி” என்று அறைந்து விட்டு சென்றான்.

குழந்தையின் வருகையால் எல்லாம் மாறிப் போகும் என்றிருந்த ஒரே நம்பிக்கையும் சிதறிப் போனதில், இந்த உலகத்தில் பிறந்து இந்த குழந்தை இன்னல்களை அனுபவிக்க வேண்டுமா என்று தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தவள் மண்ணெண்ணையை ஊற்றி தன்னையே எரித்துக் கொண்டாள்.

காலைவேளை விக்னேஷ் வேலைக்கு சென்றிருக்க, அக்கம்,பக்கத்தில் இருந்தவர்கள் தான் அவளை மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். 

குருவிட்ட மருத்துமனையில் போதிய வசதியில்லை என்று உடனடியாக இரத்தினபுரி பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தாள் நிர்மலா.

விக்னேஷ் வந்து சேர்வதுக்குள், லாவண்யாவோடு அமுதா மற்றும் பழனியும் மருத்துவமனையில் நின்றிருந்தனர்.