Advertisement

அத்தியாயம் 12

வழமைக்கு மாறாக கதிர்வேல் இன்று நேரங்ககாலத்தோடு வீட்டுக்கு வந்தான். அதுவும் குடிக்காமல் கையில் உணவு பொட்டலங்களோடு வருபவனை ஆச்சரியமாக பார்த்தாள் சரோஜா.

   

வெண்ணிலா ஒன்னே

ஒன்னு சூரியனும் ஒன்னே

ஒன்னு வாழ்க்கையும் ஒன்னே

ஒன்னு வாழ்ந்து பாரம்மா

பூவென்றால் வாசம் எடு

தீயென்றால் தீபம் எடு

எதிலுமே நன்மை உண்டு

வாழ்ந்து பாரம்மா

லேலக்கு லேலக்கு

லேலா இது லேட்டஸ்டு

தத்துவம் தோழா நீ

கேட்டுக்கோ காதுல கூலா

அடி மேளா மேளா

கவலை யாருக்கு

இல்ல அத கடந்து போகனும்

மெல்ல ரெக்கைய விரிச்சி

செல்ல ஒரு வானமா இல்ல

கதிர்வேலின் பாட்டு சத்தம் கேட்டதும் “இன்னைக்கும் குடிச்சிட்டு வரானே. இவன் கிட்ட எப்படி பேசுறது?” கதிர்வேலின் நிலைக்கு தான் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியோடு வெளியே வந்தாள் பத்மினி.

“டேய் என்னடா இன்னைக்கு குடிக்காம வந்திருக்க” அவனை பார்த்து கேட்டாள் சரோஜா.

பாடிக்கொண்டு வந்தவன் பாட்டை நிறுத்தி “இனிமேல் குடிக்க கூடாது என்று முடிவு பண்ணேன்” என்று பதில் சொன்னது மட்டுமல்லாது பத்மினியை பார்த்தான்.

பத்மினியிடம் சர்வேஷ் பேசிவிட்டதாக சொன்னான். அவள் என்ன மனநிலையில் இருக்கின்றாளோ? என்ன முடிவெடுத்திருக்கின்றாளோ? தெரியவில்லை. அந்த பதட்டத்தில் சரக்கை கையில் எடுத்து குடிக்கப் போனவன் குடித்து விட்டு சென்றால் தன்னோடு பேச வேண்டும் என்று காத்திருக்கும் பத்மினியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று அவளுக்கு பிடித்ததாக பார்த்து ஏதாவது வாங்கிக் கொண்டு போலாம் என்று நினைத்தான்.

அவளுக்கு கொத்துரொட்டி பிடிக்கும் என்பதால் அதையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தவனுக்கு தான் வந்துட்டேன் என்று எப்படி அவர்களுக்கு தெரியப்படுத்துவது என்று தெரியாமல் தான் வளமை போல் பாட ஆரம்பித்தான்.

“என்ன இவன் நேரங்ககாலத்தோட வந்திருக்கிறான்” என்று சரோஜா வெளியே வந்திருக்க,

தன்னோடு பேசியதை பிரபு கூறியிருப்பாரே அது தெரிந்தும் இன்றும் குடித்து விட்டா வந்தான் என்றெண்ணியவாறு வெளியே வந்தாள் பத்மினி.

அதற்குள் சரோஜா கதிர்வேல் குடிக்காமல் வந்ததை பற்றி கேட்டிருந்தாள்.

“யாரு நீ. நாய் வால நிமிர்த்த முடியாதுடா” என்று சரோஜா அடுத்து பேச ஆரம்பிக்கவும்

“அத்த… அதான் இன்னைக்கு குடிக்காம வந்திருக்கான். இன்னைக்கும் சத்தம் போடணுமா? குடிச்சிட்டு வந்தா ஏன் குடிக்கிறானு கத்துறீங்க. குடிகளனா ஏன் குடிகளனு கேப்பீங்களா? போங்க போங்க போய் தூங்குங்க. நாளைக்கு வேலைக்கு போக வேணாம்” சரோஜாவை முறைத்தாள் பத்மினி

“ஆத்தாடி… இதோடா புருஷ கேட்டா இவளுக்கு பொத்து கொண்டு வருது. எனக்கென்ன வந்தது.  நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை டி. எனக்கு லீவு நாள். உனக்குத்தான் லீவ் இல்லையே. நாள் என்ன கிழமை என்னனு கூட தெரியாம ஓடிக்கிட்டு இருக்க” மருமகளை திட்டியவாறே சரோஜா உள்ளே செல்ல போக

“அம்மோய்… நில்லு அம்மோய்… இந்தா உனக்கு கொத்து கொண்டாந்தேன். எங்க அவனுங்க? அவனுங்களுக்கும் கொடு” என்று ஒரு பார்சலை சரோஜாவிடம் நீட்டியவன் “வா பத்து நாம சாப்பிடலாம்” என்று பத்மினியை அழைத்தான்.

“ஏன்டி என்னாச்சு இவனுக்கு? வர்ற வழில மோஹினி பிசாச பார்த்திருப்பானோ?” சரோஜா பத்மினியின் காதை கடித்தாள்.

“போ அத்த போ… போய் சாப்பிட்டு தூங்கு” மாமியாரை பத்மினி துரத்த

“உனக்கும் என்னமோ ஆச்சு. அவன் கூட சேர்ந்து என்ன தொரத்துற. எப்படியோ போய் தொலைங்க” என்று விட்டு உள்ளே சென்றாள் சரோஜா.

கதிர்வேல் அழைத்த உடன் வருவாளா பத்மினி? ஆனால் இன்று அமைதியாக அவன் கையில் இருந்த பொட்டலத்தை வாங்கிக் கொண்டு கூடவே நடந்தாள்.

“டேய் எங்கடா இருக்கிறீங்க?” கதிர்வேல் சர்வேஷின் அறையை பார்த்து குரல் கொடுக்க, சர்வேஷும், செல்வாவும் வெளியே வந்தனர்.

“போங்கடா போய் சாப்பிடுங்க. இந்த மணி இன்னும் வீட்டுக்கு வரலையா? அவனுக்கு சாப்பாடு போடாத. எங்க போய் ஊர் சுத்திட்டு வரானே தெரியல”

“ஒரு நாள் நீ நேரங்ககாலத்தோட வீட்டுக்கு வந்ததும் மணிய திட்ட ஆரம்பிச்சிட்டியா?” பத்மினி கதிர்வேலை முறைக்க,  

“அண்ணா… நீயும் அண்ணியும் இந்த ரூம்ல ப்ரீயா பேசிக்கிட்டே சாப்பிடு” என்ற சர்வேஷ் சிரித்தவாறே அவர்களை தாண்டி நடக்க, செல்வாவும் இளித்தவாறு நடந்தான்.

“இவனுங்க முழியே சரியில்லையே” முணுமுணுத்த கதிர்வேல் “வா பத்து நாம சாப்பிடலாம்” என்று பத்மினியை அழைத்துக் கொண்டு சர்வேஷின் அறைக்குள் நுழைய அதிர்ந்து நின்றான்.

வெளியே வந்தவன் அறைக்கு பக்கவாட்டில் சமையலறை கட்ட அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கல்லை எடுத்து “அடேய்…” என்றவாறு செல்லும் அவர்களை நோக்கி வீச அவர்கள் இருவரும் உள்ளே ஓடி மறைந்தனர்.

உள்ளே வந்த பத்மினிக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், சிரிப்பாகவும் இருந்தது.

“சரி சரி டென்ஷனாகாம உள்ள வா” என்ற பத்மினி இருவருக்கும் சாப்பிட எடுத்து வைத்தாள்.

முதலிரவுக்காக அலங்கரிப்பட்ட அறையை பார்த்தவாறு கீழே அமர்ந்த கதிர்வேல் “இவனுங்க வேற கடுப்பேத்திக்கிட்டு. நீ என்னமோ பேசணும். குடிக்காம வான்னு இந்த பிரபு பய சொன்னான். இப்படி பண்ணி வச்சிருக்கானுங்க. நீ என்னனு கேக்க மாட்டியா?”

“பர்ஸ்ட் பேசாம சாப்பிடு. பேசணும்னுதான் காத்திருந்தேன்” அதற்கு மேல் பத்மினியால் எதுவும் பேச முடியவில் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள்.  

அறையை பார்த்தெல்லாம் அவளுக்கு பதட்டம் வரவில்லை. கதிர்வேல் மேல் காதல் இருந்தால் அந்த சிந்தனை தோன்றி பதட்டம் வந்திருக்குமோ?

சின்ன வயதில் அவன் செய்தவைகளை வைத்து அவனை சந்தேகப்பட்டு இப்படி ஒதுக்கி வைத்து விட்டோமே? தான் ரமேஷை காதலித்தது போல் இவனும் யாரையாவது காதலித்திருப்பானா? அத்தைக்காக நானும் என் அம்மாவுக்காக அவனும் கல்யாணம் செய்யும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம்.

அதனால் தான் தன்னிடமிருந்து ஒதுங்கி இருந்தானா? அதனால் தான் தினமும் குடித்து விட்டு வருகிறானோ? இது எதுவும் தெரியாமல் அவன் மீது சந்தேகப்பட்டு ஒதுக்கி வைத்து விட்டோம் என்றெல்லாம் அவள் மனதில் கேள்விகள் தோன்றி மறைய ஆரம்பித்திருந்தன.

இதுநாள் வரையில் இப்படி அவள் சிந்தித்ததே இல்லை. அவன் மீது இருந்த சந்தேகம் என்ற கறையை மனதிலிருந்து துடைத்தெறிந்த பின்தான் அவன் நிலையை பற்றி சிந்தித்தாள். 

அவன் மனதில் என்ன இருக்கிறது என்று அறியாமல் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க முடியுமா? புலம்பிக் கொண்டிருந்தவளுக்கு சர்வேஷ் கதிர் பிறக்கப் போகும் குழந்தைகளுக்காக படிக்கிறான் என்றதும் மனதில் இனம் புரியாத பரவசம் பரவியது என்னவோ உண்மை தான்.

மறுநொடியே தங்களுடைய குழந்தையென்று கூறவில்லையே. ஒருவேளை அவனுக்கொரு காதலி இருந்து அவளுக்காக படிக்கின்றானோ? என்று மீண்டும் குழம்பினாள்.

குழம்பிய மனநிலையில் இருப்பவள் எதிர்காலத்தை பற்றி சிந்திப்பாளா? அறை அலங்காரத்தை பார்த்து வெட்கம்தான் கொள்வாளா?

அவள் அமைதியை பார்த்து “இவதான் ரூம டெகரேட் பண்ண சொன்னாளா?” அவளை பார்த்தவாறு சாப்பிட்டான் கதிர்வேல்.

கதிர் வருவான் பேசலாம் என்றிருந்த பத்மினிக்கு எப்படி ஆரம்பிக்கிறது என்று தெரியவில்லை. அதனால் தான் அமைதியாக சாப்பிடும்படி கூறினாள்.   

அனால் கதிர்வேலுக்குள் பதட்டமும், கேள்விகளும் நிரம்பி வழிய உணவு கூட இறங்கவில்லை.

“அண்ணிக்கு உண்மை எல்லாம் தெரிஞ்சு போச்சு. உன் கூட பேசணும் என்று வீட்டுல இருக்காங்க. நீ குடிக்காம வந்து சேரு” என்று மட்டும் தான் சர்வேஷ் கூறி இருந்தான்.

“என்ன உண்மை?” தான் அவளை காதலிப்பதை பற்றித்தான் சொன்னானோ? இல்லை நேற்று பிரபுவிடம் கூறிய நீர்வீழ்ச்சியில் நடந்ததை பற்றியும், மாமாவின் சரக்கு பாட்டிலை ஆட்டையை போட்டேன்னு சொன்னேனே அதைத்தான் பத்துகிட்ட சொன்னானோ? என்னானு தெரியலையே என்று வீட்டுக்கு வந்தவனுக்கு பத்மினி அவனுக்கு சாதமாக பேசி சரோஜாவை துரத்தியதில்லையே அவள் தன் மீது கோபமாக இல்லை என்று மட்டும் புரிந்தது.

“ஆமா எதுக்கு நீ டைலியும் வேலைக்கு போற? ஒரு நாள் லீவ் எடுக்கலாம் இல்ல. போதாததுக்கு நைட் வரைக்கும் வேல பாக்குற. நமக்கு என்ன புள்ளையா குட்டியா? நீ சம்பாதிச்சு கொட்ட. இந்தா லெக் பீஸ்” சிக்கன் கொத்துதான் வாங்கி வந்திருந்தான். தன் தட்டில் இருக்கும் சிக்கன் துண்டுகளை பார்த்து பொறுக்கி அவள் தட்டி வைத்தவாறு பேசலானான்.

சற்று முன் சரோஜா நாளை ஞாயிற்றுக்கிழமை ஆனாலும் பத்மினிக்கு விடுமுறை இல்லை என்பது கூறியது ஞாபகத்தில் வரவே கேட்டிருந்தான். வீட்டுச் செலவுக்கு காசு கொடுக்கா விட்டாலும் இரண்டு பேராக இருந்த பொழுது எவ்வளவு செலவாகும் என்று அறிந்திருந்தவனுக்கு மூன்று பேரான போது எவ்வளவு செலவாகும் என்று தெரியாதா?

கல்யாணத்துக்கு முன்பு ஏதாவது இவன் வாங்கினால் இவன் குடும்பத்து மட்டும் வாங்க மாட்டான் பத்மினியின் குடும்பத்துக்கும் சேர்த்துதான் வாங்குவான்.

விலைவாசி அதிகமானதால் செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்பது உண்மைதான். முன்பு போல் செலவழிக்க முடியாது என்பதும் உண்மைதான். சாப்பாட்டுச் செலவு, கரண்ட் பில், போன் பில். தண்ணி பில் தவிர வேறு செலவுகள் கிடையாததால் பெரிதாக தலைவலி இல்லை.

மருந்து மாத்திரைகளின் விலையும் இஷ்டத்துக்கு கூடியிருக்க, ஒரு தலைவலி மாத்திரை போடக் கூட சரோஜா யோசிப்பாள். தேவையான மாத்திரைகள், பாம் என்று இவன் தனக்கு வேண்டும் என்று வாங்கி வைப்பான். இல்லையென்றால் சரோஜா போட மாட்டாள்.

பில் கட்ட சரோஜா கிளம்பினால் “கொடு நான் கட்டுறேன்” பிடுங்காத குறையாக கதிர்வேல் கிளம்புவான்.

“டேய் காசு வாங்கிட்டு போடா” என்று சரோஜா கத்தினாலும் காதில் வாங்காமல் சென்று விடுவான்.

இது எதுவுமே பத்மினிக்கு தெரியாது. சரோஜா சொல்வதுமில்லை. தானும், மாமியாரும் சம்பாதிப்பதுதான் அனைத்து வீட்டு செலவுக்கும் போகிறது கதிர் சம்பாதிப்பதில்லை. சம்பாதிக்கும் காசுக்கு குடித்து விட்டு வருகிறான் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கின்றாள்.  

“நான் வேலைக்கு போகலனா யாரு வீட்டு செலவுக்கு காசு கொடுக்கிறதாம்? என் மேல இருக்குற கோபத்துல நீ ஒதுங்கி இருந்தா எல்லாம் தானா நடக்குமா? இன்னக்கி மட்டும் சிக்கன் கொத்து வாங்கி வந்து அக்கறையா பக்கத்துல இருந்து சாப்பிடுற. எப்பவாச்சும் இப்படி சாப்பிட்டு இருக்கியா? வாய தொற” என்றவளோ சிக்கன் பீஸோடு அவனுக்கு ஊட்டி விட்டாள். 

இப்பொழுதான் கதிர்வேல் ஏன் இப்படி நடந்துகொள்கின்றான் என்ற உண்மை தெரிந்து விட்டதே. பத்மினி கோபப்படாமல் அவன் செயலை மட்டும் குற்றம் சொன்னாள்.  

சின்ன வயதில் இவ்வாறு ஊட்டிக்கு கொள்வதுதான். அந்த ஞாபகத்தில் சட்டென்று பத்மினி ஊட்டி விட, கதிர்வேலும் வாயை திறந்திருந்தான்.

தான் வீட்டுக்கு எவ்வழியில் செலவு செய்கிறேன் என்பதை கூறாமல் “ஆமா நான் உன் கிட்ட அன்பா, அக்கறையா நடந்து கிட்டா உன் அத்த உன்னைத்தான் ஏறி மிதிப்பாங்க. நான் விலகி இருந்ததால் நீ நல்லவளாகிட்ட எங்க ஆ காட்டு” என்று இவனும் சொல்ல பத்மினியும் அவன் கையால் சாப்பிடலானாள்.

தான் இத்தனை நாள் விலகி இருந்தது நீ என்னை சந்தேகப்பட்டாய். நான் உன் மேல் கோபமாய் இருந்தேன் என்று கதிர்வேல் கூறவில்லை. என் அன்னை உன் மீது கோபடக் கூடாது என்று தான் என்றான்.  

அவனுடைய அந்த வார்த்தைகளே அவன் அவள் மீது எவ்வளவு அன்பும் அக்கறையும் வைத்திருக்கிறான் என்று பத்மினிக்கு நன்றாகவே புரிந்தது. இத்தனை நாள் அவன் மீது இருந்த கோபம் கூட மெல்ல விலக புன்னகைத்தாள்.  

“எதுக்கு குடிச்சி உடம்ப கெடுத்துகிற? இனிமே குடிக்கக் கூடாது. இன்னக்கி போல டேலி இருப்பியா?”

எப்படி பேச்சை ஆரம்பிக்கிறது என்று புரியாமல் இருந்த பத்மினி கதிர்வேல் பேச ஆரம்பித்ததும் சங்கடமில்லாமல் பேச ஆரம்பித்தாள்.

“ஹாஹாஹா…. நல்லவேள இன்னக்கி சரக்கு பாடில கைல எடுத்தும் குடிக்காம வந்தேன். நான் பாட்டுக்கு ஊத்திட்டு வந்து. உன் கிட்ட ப்ரோமிஸ் பண்ணிட்டேன்னு வை. அப்பொறம் மீற முடியாம போய்டும். குடிக்கிறது நிப்பாட்ட முடியாது. வேணா அளவா குடிச்சிக்கிறேன்”

“அடப்பாவி குட்டிச்சாத்தான் சொன்னது மறந்துடுவாங்கனு சொல்வாங்க. என்ன நீ உல்டாவா சொல்லுற”

“நான் அப்படித்தான்” என்று சிரித்தவனை முறைத்தாள் பத்மினி. 

“அப்போ இன்னக்கி இப்போ பேசுறதெல்லாம் காலைல மறந்துடுவியா என்ன?” முக்கியமான விஷயம் பேச அழைத்தோம் இவன் இப்படி சொல்கிறானே காலையில் மறந்து விட்டு பழையபடி ஆகிவிட்டால் என்ன செய்வது?

மீண்டும் சத்தமாக சிரித்தவன் “நான் என்ன சொன்னாலும் சட்டுனு நம்புற பாரு. அது தான் என் பத்து. இடையில காணாம போய்ட்டா. குடிக்க எல்லாம் மாட்டேன் என்று பொய் சொல்ல மாட்டேன். வேணா டேலி குடிக்க மாட்டேன். கொஞ்சம் கொஞ்சமா குறைச்சிக்கிறேன்னு சொல்லவா?”

சின்ன வயதில் பதமினி ஏதாவது செய்து கொடுக்கும்படி கூறினால், இன்று என்னால் முடியாது நாளைக்கு பண்ணிக்க கொடுக்கவா என்று இப்படித்தான் பாவமாக கேட்பான்.

அந்த ஞாபகங்கள் கண்ணுக்குள் வந்து போக சிரித்தவள் சரியென்று தலையசைத்தாள்.

“தங்க யு பத்து” சின்ன வயசில் எப்படி சொன்னானோ அப்படித்தான் கூறினான்.

“ஆமா நீ வேலைக்கு போறியாம். கம்பியூட்டர் கத்துக்க போறியாம். உன் திடீர் தம்பி சொன்னான். சம்பாதிக்கிற பணத்தை படிக்க செலவு செய்யிறியா என்ன?”

இவள் காலையில் வேலைக்கு சென்றால் இரவு எட்டு மணிக்குத்தான் வீட்டுக்கு வருகிறாள். கதிர்வேல் எங்கே செல்கிறான்? என்ன செய்கிறான்  என்று திருமணத்து பின் தெரியவில்லை. திருமணத்துக்கு முன் நேரங்காலத்தொடு வேலையிலிருந்து வந்தாலும் கதிர்வேலை பிடிக்காதவளுக்கு அவன் என்ன செய்கிறான் என்று அறிந்துகொள்ளும் எண்ணமும் இருக்கவில்லை.

“பூராத்தையும் சொல்லிட்டானா அந்த பிரபு பய?” எங்கே தான் பத்மினியை காதலிப்பதை பற்றியும் கூறி விட்டானோ? அதை அறிந்து இந்த வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி விடுமோ என்று அஞ்சினான்.

ஆனால் சர்வேஷ் தான் பத்மினிக்கும், ரமேஷுக்கு திருமணம் நடக்க இருந்த பொழுது என்ன நடந்தது என்பதை புரிய வைத்திருந்தானே ஒழிய கதிர்வேலனின் காதலை பற்றி பத்மினியிடம் மூச்சு விடவில்லை.

காதலை யாரும் யாருக்கும் ஏத்தி வைக்கவோ, தூது போகவோ கூடாது என்று நினைப்பவன் சர்வேஷ். கதிர்வேல் தான் அவனுடைய காதலை பத்மினியிடம் கூறவும் வேண்டும் புரிய வைக்கவும் வேண்டும். புரிய வைக்க வேண்டிய சூழ்நிலையில் தான் கதிர்வேலும் இருக்கின்றான்.

அதனால் கதிர்வேலின் காதலை மட்டும் பத்மினியிடம் சர்வேஷ் கூறவில்லை.

“ஆ… சொன்னான் சொன்னான்” சாப்பிட்டு முடித்த தட்டுக்களை கழுவ புதிய சமையலறை பக்கம் செல்ல, கதிர்வேலும் கை கழுவ அவள் பின்னால் சென்றான்.  

“எங்கப்பாவோட சரக்க ஆட்டைய போட்டது நீதான் என்று சொன்னான்” என்று சிரித்தவள் தான் சர்வேஷோடு சென்று கதிர்வேல் மற்றும் செல்வாவின் நண்பர்களை சந்தித்தது பற்றி கூறவில்லை.

கூறுவதை பற்றி அவளுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. இதை அறிந்தால் கதிர்வேல் வருந்துவான் என்று கூறாமல் மறைத்தாள்.

“ஓஹ்… அதைத்தான் சொன்னானா?” கதிர்வேல் நிம்மதியாக புன்னகைக்க, 

 “ஏன்டா நான் தான் கோபத்துல எதோ சொல்லிட்டேன். நீ உண்மைய சொல்லாம என்ன கோபப்படுத்துறது போலவே தான் பேசுவியா?” கதிர்வேலின் காதை திருகினாள்.

“ஏய் சாம்பு பூசணிக்கா வலிக்குது டி…”

சின்ன வயதில் பத்மினி கொஞ்சம் குண்டாக இருப்பாள். போதாததற்கு இவன் செய்யும் சேட்டைகளால் இவள் துணியில் கறை படியும். அதனால் இவள் இவனை முறைக்க,

“ஓய்… பூசணிக்கா நீ சாம்பல் பூசணிக்கா எப்ப பார்த்தாலும் அழுக்கா இருக்க. சோப் போட்டு குளிச்சா உன் கறை போகாது ஷாம்போ போட்டு குளி”  என்று கிண்டல் செப்பவன் நாளடைவில் சாம்பு பூசணிக்கா என்றே அழைக்க ஆரம்பித்திருந்தான்.

வேலைக்கு செல்ல ஆரம்பித்த பின் நடந்து நடந்தே இளைத்திருந்தாள் பத்மினி.

“வலிக்குதா… வலிக்குதா நல்லா வலிக்கட்டும். பூசணிக்கானா சொல்லுற? நீ வெருளி டா… {சோளக்காட்டு பொம்மை} அதுவும் கண்ணாடில போய் உன் மூஞ்ச பாரு”

ஆளாளுக்கு ஒருவரை ஒருவர் வாரியவாறே சிறுபிள்ளைகள் போல் சண்டை போட ஆரம்பித்தனர்.

“என்ன தம்பி ரெண்டு பேரும் பேசி இன்னக்கி ஒண்ணா சேர்ந்துடுவாங்கனு சொன்னீங்க?” இவர்கள் போடும் சண்டை வீட்டுக்குள் இருந்த மூவருக்குமே கேட்டிருக்க, செல்வாதான் பயந்தான்.

“அதுங்க சின்ன வயசுல இப்படித்தான் சண்டை போட்டுக்கொள்வாங்க தம்பி. நீங்க வந்து தூங்குங்க” நிம்மதியாக புன்னகைத்த சரோஜா தூங்க சென்றாள்.

“ஒருத்தர ஒருத்தர் நல்லா தெரிஞ்சி வச்சிருந்தா இப்படித்தான் போல” என்ற சர்வேஷ் “அண்ணா குட் நைட்” என்று கத்தி சொல்ல

“டேய் நீங்க இன்னும் தூங்கலையா டா..” கதிர்வேல் வீட்டை பார்த்து குரல் கொடுத்தான்.

“உங்க புருஷன் பொண்டாட்டி சண்டையை கொஞ்சம் ரூம்ல போய் வச்சிக்கிறீங்களா? நாங்க தூங்கணும். காலைல கடைக்கு வேற போகணும்” என்றான் செல்வா.

“வா பத்து நாம போலாம். பொறாமை புடிச்சவனுங்க”

“கேட்டிருச்சு கேட்டிருச்சு…” சர்வேஷ் சத்தமாக கூற செல்வா சிரிக்க “இருடா உங்கள காலைல வச்சிக்கிறேன்” என்றவாறே அறைக்கு வந்தான் கதிர்வேல்.

“சரி நீ பெட்ல தூங்கு நான் கீழ தூங்குறேன்” என்று ஒரு தலையணையை மட்டும் எடுத்துக் கொண்டு கீழே போடப் போனவனின் தலையணையை பிடுங்கினாள் பத்மினி.

“எங்க போற? நான் இன்னும் பேசவே ஆரம்பிக்கல” என்றாள்.

“சரி சொல்லு’ என்று கீழே அமரபோனவனை கட்டிலில் அமரவைத்தவள்

“நீ யாரையாச்சும் காதலிக்கிறியா?” என்று கேட்க,

“ஏன் கேக்குற?” என்று இவன் பதறினான்.

“இல்ல… கல்யாணமான நாள்ல இருந்து என் கிட்ட இருந்து விலகி ஓடிக்கிட்டே இருக்கியே அதான் கேட்டேன்.

“அதான் சொன்னேனே. அம்மா உன் மேல கோவிக்க கூடாதுனு”

“சரி… இப்போ எதுக்கு ஓடுற? அதான் இப்போ எந்த பிரச்சினையும் இலையே. உன் மேல எந்த தவறும் இல்லனு நான் புரிஞ்சிக்கிட்டேன். இப்பவும் நீ ஓடுறான்னா” ஒருவேளை ரமேஷ்தான் காரணமா?

ரமேஷை தான் காதலிப்பதால் தான் தன்னை விட்டு விலகி இருக்கின்றானோ? தான் இதை ஏன் சிந்திக்கவில்லை.

“ஏய் லூசு. நான் அவனை லவ் பண்ணவே இல்ல. அவன் தான் என்ன லவ் பண்ணான். என்ன லவ் பண்ணினவன கல்யாணம் கட்டிக்கிட்டா நான் சந்தோஷமா இருக்கலாம்னு நினச்சேன்” என்றவளோ எனக்கு உன்னை பிடிக்காமல் போனதால் தான் இந்த முடிவையே எடுத்தேன் என்று மறந்தும் கூறவில்லை.

“நிஜமாவா சொல்லுற” என்றவன் பத்மினியின் கையை பிடித்து இழுக்க அவளும் அவனருகில் அமர்ந்து கொண்டாள்.

“பண்ணாத லவ்வுக்கு அவனுக்கு இவ்வளவு வக்காலத்து வாங்கியிருக்கக் கூடாது”

“நீயும் தான் என்ன கோப்படுத்தாம என்ன நடந்தது என்று எனக்கு புரிய வச்சிருக்கலாம்” என்று பத்மினி சொல்ல, கதிர்வேல் எதுவுமே பேசாமல் அமைதியாக அவளையே பார்த்திருந்தான். 

“எனக்கு சின்ன வயசுல இருந்தே உன்ன ரொம்ப பிடிக்கும். நீ பண்ணுற சேட்டையாலதான் உன்ன பிடிக்காம போனது. சீண்டிகிட்டே இருப்பியே”

“உன்னத தவிர எனக்கும் வேற யார்தான் இருக்கா? சீண்டவும், கொஞ்சவும், விளையாடவும், எல்லாத்துக்கும் நீ மட்டும் தான். அண்ணா? தம்பியா? நீ மட்டும் தானே” சோகத்தை பெருமூச்சோடு சொன்னான் கதிர்வேல். 

“அப்போ உனக்கு என்ன ரொம்ப பிடிக்கும் அதனாலதான் சீண்டிக்கிட்டே இருந்திருக்க” சர்வேஷ் அப்படித்தானே சொன்னான். அதை உருத்திப்படுத்திக்கொள்ள கதிர்வேலிடமே கேட்டாள் பத்மினி.    

தலையை பலமாக ஆட்டி ஒத்துக் கொண்டவன் “ரொம்ப பிடிக்கும்” என்று கைகளை விரித்து வேறு காட்டினான்.

குழந்தையாக இருக்கும் பொழுது யாரை பிடிக்கும் என்று கேட்டால் “பத்துவத்தான் பிடிக்கும். இவ்வளவு பிடிக்கும்” என்று கைகளை விரித்துக் காட்டுவான். 

“நீ மாறவே இல்லை அத்தான்” கால்களை மடக்கி கட்டிலில் அமர்ந்திருந்தவள் சிரிக்க,

“நீயும் தான்” என்றான் கதிர்வேல்.

“என்னதான் ரொம்ப பிடிக்கும்னு சொல்லுற. உண்மையிலயே நீ யாரையும் லவ் பண்ணலையா?”

“சொல்லாம விட மாட்டா போலயே…” என்று கதிர்வேல் யோசிக்க,

“ரமேஷ கல்யாணம் பண்ணிக்க போனதால உனக்கு என் மேல கோபம் இல்லையே” அவன் முகம் நோக்கினாள் பத்மினி.

“சே சே லூசு… என்ன பேசுற?” அவள் தலையில் தட்டைப் போனவன் கழுத்தில் கையை போட்டு அணைத்துக் கொண்டான்.

பத்மினி விலகவில்லை “நான் தான் பேசிக்கிட்டே இருக்கேன். நீ எதுவும் சொல்ல மாட்டேங்குற, சரி எனக்காக ஒரு பாட்டு பாடு”

“பாட்டா என்ன பாட்டு?”

“என்ன நினைச்ச என்ன பாட்டு பாடுவ? இல்லை இப்போ என்ன தோணுதோ பாடு” அதை வைத்தே அவன் மனநிலையை புரிந்துகொள்ள முயன்றாள் பத்மினி.

மனதில் நின்ற காதலியே

மனைவியாக வரும்போது

சோகம் கூட சுகமாகும்

வாழ்க்கை இன்ப வரமாகும்!

உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம்

ஒன்றாகச் சேர்ந்திட வேண்டும்

பூவே உன் புன்னகை என்றும்

சந்தோஷம் தந்திட வேண்டும்

ஆசைக் காதல் கைகளில் சேர்ந்தால்

வாழ்வே சொர்க்கம் ஆகுமே!

நேரமெடுக்காமல் இந்த பாட்டை பாட பத்மினி அவனையே பார்த்திருந்தாள்.

கதிர்வேலின் நண்பர்கள் கூறியது அனைத்தும் ஞாபகத்தில் வரவே “இவன் நம்மளாதான் லவ் பண்ணுறானா? ரமேஷை லவ் பண்ணுறதாக சொன்னதும் தன் காதலை சொல்லாம என் சந்தோசம் தான் முக்கியம் என்று விட்டுக் கொடுத்துட்டானா? இவன போய் சந்தேகப்பட்டுட்டேனே” என்று கண்ணீர் வடித்தாள்.

அவளை திரும்பிப் பார்த்தவன் “ஏய் எதுக்கு அழுகுற? என்னாச்சு?” பதறியவாறு கதிர்வேல் கண்ணீரை துடைத்து விட பத்மினியோ அவனை இழுத்து கன்னத்தில் முத்தமிட்டிருந்தாள். 

“என்னடி பொசுக்குன்னு கிஸ் பண்ணிட்ட”

கதிர்வேலுக்கு ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் பத்மினியின் அழுகையை நிறுத்த கிண்டல் செய்தான்.

சின்ன வயதில் பட்டு பட்டு என்று கன்னத்தில் முத்தம் வைப்பவள் தான். இன்றும் அத்தான் என்ற உரிமையில் முத்தமிட்டிருந்தாள். ஆனால் கதிர்வேல் இன்று அவளது அத்தான் மட்டுமல்லவே அவளது கணவனும் கூட.

அவன் தன்னை காதலிக்கின்றான். அதை சொல்ல தயங்குகிறான். அவனுக்கென்று ஆசைகள் இருக்காதா? இப்படி முத்தமிட்டால் அவனை தூண்டி விட்டது போல் ஆகாதா? மெல்ல புன்னகைத்தவளுக்குள் வெக்கம் கொஞ்சம் எட்டிப் பார்த்திருந்து.

“தூங்கலாமா?” அவளை சங்கடப்படுத்த வேண்டுமா? என்று தான் கேட்டான் கதிர்வேல்.

தலையசைத்தவாறே “ஆனா ரெண்டு பேரும் பெட்டுலதான் தூங்கணும். நீ கீழ தூங்க கூடாது” என்றாள்.

“பார்டா எங்கம்மாவ கட்டிப்பிடிச்சு தூங்கினவளுக்கு தனியா தூங்க முடியாதாம்” கிண்டல் செய்தவாறே கட்டிலில் தூங்கலாம் என்று கட்டிலின் மறுபுறம் வந்து படுத்துக் கொண்டவன் “இதுல எப்படி தூங்குறது. மெத்த பூரா பூவ கொட்டி வச்சிருக்கானுங்க கிறுக்கு பயலுங்க” சர்வேஷையும், செல்வாவையும் திட்டியவாறே மலர் இதழ்களை அப்புறப்படுத்தலானான்.

“வேண்டாம் அத்தான். நல்லாத்தான் இருக்கு” அவன் புறம் திரும்பிப் படுத்தவாறே கூறினாள் பத்மினி.

அவன் புறம் திரும்பிய கதிர்வேல் “பத்து நான் உன் கைய பிடிச்சிக்கவா?” என்று கேட்டவரே அவள் அனுமதிக்கு காத்திருக்காமல் கையேடு கையை கோர்த்துக் கொண்டான்.

“நான் சம்பாதிச்ச பணத்தை உன் பேர்லயும், என் பேர்லயும் போட்டு வச்சிருக்கேன். நீ ஓவர் டைம் எல்லாம் வேலை பார்க்காத. பிரபு ஏதாவது பிஸ்னஸ் பண்ணலாம் என்று சொல்லுறான். இப்போதைக்கு ஒன்னும் தோணல தோணும் போது ஏதாவது ஆரம்பிக்கலாம்” என்றான்.

தலையசைத்த பத்மினியின் மனம் நிறைந்திருந்தது.

“அத்த பேர்ல காசு போடாம என் பேர்ல போட்டு வச்சிருக்க, அது தெரிஞ்சா அத்த துள்ளும்” சரோஜா கோபப்படுவாள் தான் ஆனால் சண்டை போட்டு பிரச்சினை செய்ய மாட்டாள். சந்தோசமாக இருங்க போங்கடா என்று விடுவாள் என்று அறிந்துதான் பத்மினி கேட்டாள். 

“அம்மாக்கு ஒன்னுனா நீயும், நானும் தான் பார்க்கணும். அதோட பேர்ல காச போட்டு வச்சா. அது ஆஸ்பத்திரில படுக்குறப்போ காச எடுக்க பேங்க்குக்கு அலைய வேண்டி இருக்கும்” என்றவனை பார்த்து சிரித்தாள் பத்மினி.

“கார்டு இருக்கே கார்டு”

“எங்களுக்கும் தெரியும். பெரிய அமவுண்ட்னா கார்ட்ல எடுக்க முடியாது என்றும் தெரியும்” என்றான்.

“சரிதான்” என்றவள் காலை தூக்கி அவன் மேல் போட்டுக் கொண்டாள். காலுக்கு ஒரு தலையணை இல்லாமல் அவளால் தூங்க முடியாது. அதனால் தான் சரோஜாவை கட்டிப் பிடித்து தூங்குவதாக கிண்டல் செய்தான்

“தூக்கம் வருதா?”

“ஆமா…”

“அப்போ நான் உன்ன கட்டிபிடிச்சி கிட்டே தூங்கவா?” என்று கதிர்வேல் கேட்க பத்மினி அவனை நெருங்கி வந்தாள்.

இவனும் அவளை தன் கைவளைவுக்குள் கொண்டு வர அவளும் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

அவள் நெற்றியில் முத்தமிட்டவன் “தூங்கு” என்று அவளையே பார்த்திருக்க, பத்மினியும் அவனையே பார்த்தவாறு தூங்கிப் போனாள்.

இதழ் பிரித்து தூங்கும் அவளை பார்த்து “சின்ன வயசுல இருந்தே நான் உன்ன நேசிச்சா… நீ எவனையோ லவ் பண்ணுவேன்னு வந்து நிப்பியா? உன்ன யாருக்கும் விட்டுக் கொடுக்க நான் என்ன பைத்தியமா? நீ எனக்குதாண்டி.

உன் சந்தோசம் எனக்கு முக்கியம் தான். எனக்கு என் சந்தோஷமும் முக்கியம். ஏன்னா என் சந்தோசம். நிம்மதி. காதல். வாழ்க எல்லாமே நீதான். நீ இல்லாம நான் பொணம் டி.

உன் கல்யாணத்த எப்படி நிறுத்துறது என்று மண்டைய பிச்சிகிட்டு நின்னேன். அந்த ரமேஷ் ஆடு தானா வந்து சிக்கிருச்சு. வெட்டி பிரியாணி பண்ணிட்டேன்.

உனக்கு ஒன்னு தெரியுமா? நாய்க்குத்தானே மோப்ப சக்தி அதிகம் என்று சொல்வாங்க ஆனா உண்மையிலயே நாயையும் விட மோப்ப சக்தி இருக்குற மிருகங்கள் இந்த உலகத்துல இருக்கு. ஆனா மனிஷன்களுக்கு உள்ளுணர்வு என்ற ஒன்று இருக்கே அது படு டேஞ்சரஸ். நீ என்ன மோப்பம் பிடிச்சிட்ட. உன் கிட்ட இருந்து தப்பிக்க நானும் விலகி இருந்தேன்.

ஆனா… ஆனா.. ஹாஹாஹா.  இனிமேல் நமக்கு நடுவுல யாரும் வர முடியாது” என்றான் அந்த மகா நடிகன்.

Advertisement