Advertisement

அத்தியாயம் 10

பத்மினியை சூப்பர்மார்கட்டுக்கு அழைத்து செல்லும் பொழுது “அண்ணி உங்க கூட முக்கியமான விஷயம் பேசணும். உங்களுக்கு எப்போ லீவு” என்று கேட்டான் சர்வேஷ்.

இரவில் வீட்டுக்கு வரும் பத்மினி வீட்டுக்குள் சென்றால் மீண்டும் அவளை காலையில் வேலைக்கு செல்லும் பொழுதுதான் காண முடியும். சர்வேஷும் வந்த அன்றிலிருந்து பார்கின்றான் பத்மினி லீவு எடுக்கவே இல்லை. நேற்றிரவே பேசி விடலாமா என்று நினைத்த சர்வேஷ் பத்மினியின் சோர்ந்த முகத்தைக் பார்த்து காலையில் பேசலாம் என்று தள்ளிப் போட்டவன் ஆட்டோவை கிளப்பிய மறுநொடியே கேட்டிருந்தான். பேச வேண்டும் என்று கூறினால் என்ன? ஏது? என்று கேட்பாளில்லையா?  

“நான் லீவ் எடுக்க மாட்டேன். உடம்பு முடியலைன்னா மட்டும் தான் லீவ் போடுவேன். என்ன பேசணுமோ வீட்டுலயே சொல்லுங்க” என்றாள் பத்மினி.

“ஆகா ஆகா ஆகககா…. வீட்டுல பேச முடியும்னா நான் எதுக்கு ஆட்டோல பேச போறேன்” என்ற மைண்ட் வயிசை முறைத்தவன்

“அண்ணன் வீட்டு செலவுக்கு தராம இருக்குறதால தான் நீங்க தினமும் வேலைக்கு போறீங்களா? அண்ணன் வீட்டு செலவுக்கு காசு கொடுத்தா நீங்க ஓவர் டைம் பார்க்க அவசியம் இல்லையே” ஒவ்வொரு பிரச்சினையாகத்தானே சரி செய்ய வேண்டும். முதலில் இந்த பிரச்சினையை சரி செய்யலாம் என்று தான் கேட்டான்.

“அவன் ஒழுங்கா இருந்தா நான் கஷ்டப்பட வேண்டியதில்ல” முணுமுணுத்த பத்மினி வழக்கம் போல சர்வேஷுக்கு எந்த பதிலையும் கூறாமல் அமைதியாக வர, வண்டியை நிறுத்தினான் சர்வேஷ்.

“அண்ணி நீங்க இப்படி அமைதியா நிக்குறதாலையும், பிரச்சினையை வழிவிட்டு போறதாலையும் பிரச்சினை முடியாது. அப்படியே தான் இருக்கும். அண்ணன் கூட பேசுங்க. இல்ல உங்க பிரச்சினை என்னனு என் கிட்ட சொல்லுங்க. நான் அண்ணன் கிட்ட பேசிட்டேன்” என்றான்

“பேசிட்டீங்களா? என்ன சொன்னான்?” பதட்டமாக கேட்டாள் பத்மினி. 

“அண்ணன் சொன்னது இருக்கட்டும். முதல்ல நீங்க சொல்லுங்க. அப்போதான் அவர் சொன்னது உண்மையா என்று நான் முடிவு பண்ண முடியும்” என்று சர்வேஷ் சொல்ல பத்மினி சர்வேஷை யோசனையாக பார்த்தாள்.

“என்ன பாக்குறீங்க? அண்ணன் சொன்னத நம்பாம நான் அப்படி சொல்லல. அவர் சொன்னத நான் அப்படியே நம்புறேன். எனக்கு என்னனா என்ன நடந்தது என்று உங்க வாயாலையும் கேட்டு தெரிஞ்சிக்கணும். உங்க ரெண்டு பேருக்கிடையில இருக்குற பிரச்சினை அப்போதான் தீரும்னு தோணுது. இல்ல சாகுற வரைக்கும் இப்படியே இருக்க போறீங்களா?”

“உண்மைதான் இப்படியே இருந்திட முடியாதே. பிரச்சினை என்று ஒன்று இருந்தால் தீர்வு என்று ஒன்று இருக்க வேண்டுமல்லவா? திருமணமாகி எட்டு மாதங்களாகப் போகிறது இந்த பிரச்சினைக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.

ஆனால் இவன் யார்? எங்கள் குடும்ப விஷயத்தில் மூக்கை நுழைக்க?

“இங்க பாருங்க எனக்கும் கதிருக்கும் நடுவுல இருக்குற பிரச்சினையை நாங்க பாத்துகிறோம். மூணாவதா நீங்க உள்ள வர வேணாம்”

இதை விட நாகரீகமாக மூன்றாவது மனிதன் நீ உள்ளே வராதே என்று பத்மினியால் கூற முடியவில்லை.

தான் கேட்ட உடன் பத்மினி மளமளவென எல்லாவற்றையும் கொட்டித் தீர்ப்பாளென்று சர்வேஷும் நினைக்கவில்லை. அவளிடம் பேசும் விதத்தில் தான் பேச வேண்டும் என்று எண்ணினான்.

“நானும் இந்த வீட்டுலதான் இருக்கேன். அண்ணனை அண்ணான்னு கூப்பிடுறேன். அம்மாவ அம்மானு கூப்பிடுறேன். அப்போ நீங்க எனக்கு அண்ணி தானே. அந்த உரிமைல தான் கேட்டேன்.

அண்ணா டேலி குடிச்சிட்டு வந்து கொட்டகைள தூங்குறது உங்களுக்கு சரினு தோணுதா? அக்கம் பக்கம் வீடு இல்லாததால யாரும் அம்மாவ கேள்வி கேட்கல. கேட்டா அவங்க உங்க கூடத்தான் சண்டை போடுவாங்க. அண்ணன் கொட்டகைள தூங்கியும் அம்மா உங்கள எதுவும் சொல்லாம அண்ணனை குத்தம் சொல்லுறாங்களே அது ஏன் என்று என்னைக்காவது யோசிச்சு பாத்திருக்கிறீங்களா?”

“அவன் விவஸ்த்தைகெட்ட வேல செய்யிறதுக்கு நான் திட்டு வேற வாங்கணுமா? எனக்கு வேலைக்கு நேரமாகுது வண்டிய எடுங்க” என்றாள் பத்மினி.

“ஆமா ஜனாதிபதி வந்து கியுள்ள நிக்கிறாரு பொருள் வாங்க. நீங்க வேலைக்கு போகலைனா அவர் வாங்க மாட்டாராம். பாருங்க. உங்களுக்கு வேல முக்கியமா? வாழ்க முக்கியமா?”

“இது என்ன கேள்வி வாழ்க்கை தானே முக்கியம்” சர்வேஷை முறைத்தவள் “இப்போ என்ன பண்ண சொல்றீங்க? நடந்தத எல்லாம் மறந்துட்டு உங்க அண்ணன் கூட குடும்பம் நடாத்தி புள்ளய பெத்துக்க சொல்லுறீங்களா?”

“கல்யாணம் பண்ணா உடனே கொழந்த பெத்துகிறது தான் வாழ்க்கையா? ஒருத்தர ஒருத்தர் தெரிஞ்சிக்கிறது, புரிஞ்சிக்கிறது என்ற ஒன்னு இருக்கே. சின்ன வயசுல இருந்தே உங்களுக்கு அண்ணனை தெரியும். ஆனா நீங்க அவரை புரிஞ்சிக்கல என்று நான் சொல்லுறேன்” கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு நான் சொல்லுறதுதான் சரி என்பது போல் நின்றிருந்தான் சர்வேஷ்.    

“இங்க பாருங்க சும்மா… அவர் கூடப் பொறந்த தம்பி மாதிரி. கூடவே வளர்ந்தது போல பேசாதீங்க. உங்களுக்கு கதிரை பத்தி என்ன தெரியும்?” என்றவளோ சின்ன வயதில் கதிர் தன்னை என்னவெல்லாம் செய்தான் என்று கோபமாக கூறினாள்.

“நம்ம அண்ணன் இவ்வளவு குறும்புக்காரனா?” சுவாரஸ்யமாக கேட்டுக் கொண்டிருந்தவன் “கூடப் பொறந்தவங்க இருந்தா அவங்கதான் சீண்டுவாங்க. மாமா பொண்ணு உங்கள சீண்டினதுல என்ன தப்பு? நீங்களும் அண்ணனை வச்சி செஞ்சிருக்கணும். விட்டுடீங்க” என்றவன் சிரிக்கலானான்.

“நான் பட்ட கஷ்டங்களை சொன்னால் என்ன இவன் சிரிக்கின்றான்” என்று சர்வேஷை நன்றாகவே முறைத்தாள் பத்மினி.

“சாரி அண்ணி. அன்னக்கி இருந்த சிட்டுவேஷனும் உங்க மனநிலையும் எனக்கு நல்லாவே புரியுது. எனக்கு ஒரு அண்ணனோ, தம்பியோ இருந்தா எப்படி எல்லாம் விளையாடி இருப்பேன்னு நிச்சேனோ அண்ணா அப்படியே இருக்காரு அதான் சிரிப்பை அடக்க முடியல. சாரி. சாரி அண்ணி” மீண்டும் சிரித்தான் சர்வேஷ்.

“சரி நீங்க சிரிச்சி முடிச்சிட்டு வாங்க நான் கிளம்புறேன்” பத்மினி ஆட்டோவிலிருந்த தனது பையை எடுத்துக் கொண்டு நடக்க போனாள்.

“பிடிவாதம் பிடிக்காதீங்க அண்ணி. சின்ன வயசுல நடந்த சம்பவங்கள அண்ணனை ஏத்துக்காம இருக்கிறீங்களா? இல்ல உங்க கல்யாணம் நின்னதுக்கு அவர் தான் காரணம் என்று அவரை ஏத்துக்காம இருக்கிறீங்களா?”

பேசாமல் இவன் விடமாட்டான் என்று பத்மினிக்கு நன்றாகவே புரிந்தது. 

“கதிர் அது மட்டும் தான் சொன்னானா…”

“அண்ணா என்ன சொன்னாரு என்று சொல்லுற வரைக்கும் நீங்க வாய தொறக்க மாட்டேங்க அப்படித் தானே” என்றவன் கதிர்வேல் என்ன சொன்னானோ அதை சுருக்கமாக கூறினான்.

“அப்பா வச்ச சரக்கு பாட்டிலை எடுக்கத்தான் அன்னக்கி வீட்டுக்கு வந்தானா?” நல்லதம்பியின் நண்பர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தார். வெளிநாட்டு சரக்கு என்று இரண்டு பாட்டில் கொடுத்திருக்க, அதை பத்திரப்படுத்துவதை பத்மினியே பார்த்தாள்.

“என்னப்பா பாரின் சரக்கா… கொண்டு வந்தத ஏர்போட்டுலையே புடிங்கி வச்சிருப்பாங்க. இது இங்க வாங்கி உங்களுக்கு கொடுத்திருப்பார். அதான் ரெண்டு பாட்டில்” என்று இவள் நல்லதம்பியை கிண்டலும் செய்தாள்.

கல்யாணத்துக்கு பிறகு நல்லதம்பி சரக்கு பாட்டில் ரெண்டையும் காணவில்லை. கல்யாணத்து வந்த யாரோதான் எடுத்து குடித்திருக்கணும் என்று புலம்புவது பத்மினியின் காதிலும் விழுந்தது.

“நீங்க யோசிக்கிறது பார்த்தா அன்னக்கி அண்ணன் வீட்டுக்கு வந்தத நீங்க பார்த்திருக்குறீங்க. வீட்டுக்கு போன ரமேஷ பின்னாலையே வந்த அண்ணன் எதோ பண்ணிட்டானு நம்பிட்டீங்க. இல்லையா?”

“ஆமா…”

“ரமேஷ திட்டம் போட்டு ஏதாவது பண்ணனும்னா நீங்க காதலிக்கிறதா சொன்னப்போவே கல்யாணம் வரைக்கும் டைம் இருந்தது. அப்படியே கல்யாணம் அன்னக்கி முந்தைய நாள் தான் பண்ணனும் என்று நினச்சி பண்ணாரு என்றாலும் ரமேஷ் வீட்டுக்கு கிளம்பி அரைமணி நேரத்துக்கு பிறகுதான் அண்ணன் வீட்டுக்கு வந்தாரு. ரமேஷ் காட்டுப்பாக்கம் போனது அண்ணனுக்கு தெரியல. அண்ணா வந்தது சரக்கு பாட்டிலை எடுக்க. அத நீங்க பார்த்ததனால சந்தேகப்பட்டுடீங்க.

எல்லாரும் ஒன்னாதான் சர்க்கடிச்சிருக்காங்க. ரமேஷ் எர்லியா கிளம்பிப் போய் இருக்காரு. என்னோட ஊகம் என்னனா போதைல வழிமாறி காட்டுப்பக்கமா போய் கல் தடுக்கி விழுந்திருப்பாரு, இல்ல மயங்கி விழுந்திருப்பாரு.

ஒருவேளை ரமேஷ் முன்ன பின்ன சரக்கு அடிச்சே இல்லாம இருக்கலாம். அன்னக்கி அடிச்ச சரக்கு ஒத்துக்காம இருக்கலாம். எதோ ஒரு காரணத்தால போதை அதிகமாகி இருக்கலாம். கடைசில பழி அண்ணன் மேல வந்து விழுந்தது” என்றான் சர்வேஷ்.

“ஒருவேளை அப்படியும் இருக்குமோ? தான் தான் கதிர் மேல் வீணான பழி போட்டு விட்டோமோ என்று எண்ணிணாள்.

“சரி அண்ணன் உங்க கல்யாணத்த நிறுத்தவென்றே ரமேஷுக்கு போதை மருந்து கொடுத்ததாகவே எடுத்துக்குவோமே”

“இப்போதான் இல்லனு சொன்னீங்க. இப்போ இப்படி சொல்லுறீங்க?” புரியாது முழித்தாள் பத்மினி.

“அண்ணன் ரமேஷுக்கு எந்த போதை மாத்திரையும் கொடுக்கல. நான் ஒரு பேச்சுக்கு சொல்லுறேன். ஏன் கொடுத்தாரு? எதுக்கு கொடுத்தாரு? உங்க கல்யாணத்த நிறுத்த உங்கள கல்யாணம் பண்ண. இது தானே உங்க குற்றச்சாட்டு”

தலையசைத்தாள் பத்மினி.

“உங்க கல்யாணம் நடக்காது என்றதும் அண்ணன் என்ன சொன்னாரு?” கல்யாணத்த இன்னொரு நாள் வச்சிக்கலாம் என்று தானே சொன்னாரு”  

“ஆமா… அம்மாதான் ஜாதகத்துல, பிரச்சினை, தோஷம் என்று உடனே கல்யாணம் பண்ணனும் என்றாங்க. அப்போ இருந்த மனநிலைல நானும் எதுவும் யோசிக்கல. அத்த சொன்னதும் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஒருவேளை கதிர்தான் அம்மாவ அப்படி பேச சொல்லி இருப்பானோ?” அங்க சுத்தி, இங்க சுத்தி கதிரை குற்றம் சொல்ல பத்மினியின் மனம் அலைபாய்ந்தது. 

“பாத்தீங்களா, பாத்தீங்களா சட்டுனு அண்ணனையே சந்தேகப்படுறீங்க. இந்த சந்தேகத்தை உங்க அம்மா கிட்ட பேசினா தீர்ந்திடும். இப்போ கேள்வி என்னன்னா… உண்மையிலயே நீங்க ரமேஷ லவ் பண்ணி இருந்தா… யார் என்ன சொல்லி இருந்தாலும் நீங்க அண்ணனை கல்யாணம் பண்ணி இருக்கக் கூடாது.  ரமேஷ் போதை மருந்துக்கு அடிமையாகி இருந்தா அவன திருத்தி அவனையே கல்யாணம் பண்ணிக்கணும் என்றுதானே நினைச்சி இருப்பீங்க? உண்மையிலையே நீங்க ரமேஷ லவ் பண்ணீங்களா?” சர்வேஷ் சரியான கேள்வியை தான் கேட்டான்.

அவனை ஒருநொடி திகைத்துப் பார்த்தாள் பத்மினி. 

அவள் எங்கே ரமேஷை காதலித்தாள். அவன் தான் காதலிப்பதாக இவள் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தான். கண்டிப்பாக தனக்கு வீட்டில் கதிரை தான் திருமணம் செய்து வைப்பார்கள் அதை விட தன்னை காதலிக்கும் ரமேஷை திருமணம் செய்து கொள்ளலாம் தன்னுடைய வாழ்க்கை நிம்மதியாகவும், சந்தோசமாகவும் இருக்கும் என்று எண்ணி வீட்டில் வந்து பெண் கேட்குமாறு கூற, வீட்டாரும் சம்மதம் தெரிவித்து கல்யாணம் வரை சென்று கடைசியில் அவள் எண்ணியது போல் அவளுக்கு பிடிக்காத கதிரையே திருமணம் செய்து கொண்டாள். 

“என்ன அமைதியாகிட்டீங்க? இப்படி ரோட்டுல நின்னு பேச முடியாது. முதல்ல மேனேஜருக்கு போன் போட்டு லீவ் சொல்லுங்க. நாம உங்க வீட்டுக்கு போலாம். அத்தையும் வீட்டுலதான் இருக்காங்க”

கமலம் வேலை செய்யும் வீட்டில் மூன்று நாள் வெளியூர் பயணம் சென்றிருக்க, கமலத்துக்கு வேலை இல்லை. நல்லதம்பி சமையலறை கட்டும் வேலையில் இருப்பதால் நல்லதம்பிக்கு சமைக்கும் போது மதியம் செல்வாவுக்கும், சர்வேஷுக்கும் தான் சமைப்பதாக கூறி இருந்தாள்.

அன்னையையும் சந்திக்க வேண்டும் என்பதால் பத்மினி அமைதியாக ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள்.

வீட்டுக்கு செல்லும் வரை சர்வேஷ் எதுவும் பேசவில்லை. சர்வேஷ் ஆட்டோவை நிறுத்திய அடுத்த நொடி திபு திபுவென ஆட்டோவில் இருந்து இறங்கிய பத்மினி வீட்டுக்குள் ஓடினாள்.

சர்வேஷ் வீட்டுக்குள் செல்லும் போதே “அம்மா அம்மா சொல்லுமா… கதிர் அத்தான் தானே என் ஜாதகத்துல பிரச்சினை இருக்கு. உடனே கல்யாணம் பண்ணனும் என்று அன்னக்கி உன்ன சொல்ல சொன்னது. சொல்லுமா சொல்லு”

சின்ன வயதிலிருந்தே கதிர்வேல் பதமினியை சீண்டிக்கொண்டே இருந்ததால் கண்டிப்பாக அவன் தான் தப்பு பண்ணி இருப்பான் என்ற சந்தேகம் பத்மினியின் மனதில் ஆழமாக பதிந்துப் போய் இருந்தது. அது உண்மையில்லை என்று சர்வேஷ் ஆணித்தரமாக சொல்ல. அதை அவள் மனம் ஏற்றுக்கொள்ள விரும்பாமல் எங்கே அவன் கமலத்திடம் சென்று பேசி கதிர்வேலுக்கு சாதகமாக கமலம் பேசிவிடுவாளோ என்று இவள் ஓடிவந்து பேசியிருந்தாள்.

“என்னடி உளறுற? என்னதான் பிரச்சினை உனக்கு? இன்னக்கி வேலைக்கு போகலையா?”

“நீ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”

“அண்ணி… பொறுமை, பொறுமை. வந்ததும் வராததுமா அத்த கிட்ட கேள்வி கேட்டா அத்தையே குழம்பிப் போவாங்க” என்றவன் “அத்த எனக்கும் அண்ணிக்கும் குடிக்க சூடா டீ கொடுங்க” என்றவன் அமைதியாக அமர்ந்து விட பத்மினி அவனை ஏகத்துக்கும் முறைத்தாள்.

கமலம் டீ எடுத்து வரேன் என்று உள்ளே செல்ல, “கொஞ்சம் நேரம் பதட்டப்படாம இருங்க” என்ற சர்வேஷ் வெளியே சென்று நின்று கொண்டான்.

தான் நினைத்தது தவறு என்றாகிப் போனால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பத்மினிக்கு புரியவில்லை. அந்த பதட்டம் தான் அவளுக்குள் இருந்தது. அதை சர்வேஷ் சரியாக புரிந்துக் கொண்டான்.

அவன் அங்கு இருந்தால் அவளது பதட்டம் அதிகரிக்குமே ஒழிய குறையாது. யாரும் இல்லையென்றால் கொஞ்சமாச்சும் சிந்திப்பாளென்றுதான் சர்வேஷ் வெளியே சென்றான்.

கமலம் டீ எடுத்து வரும் பொழுதே சர்வேஷை காணாமல் விசாரிப்பது சர்வேஷின் காதில் விழ உள்ளே வந்தவன் “முதல்ல டீயை குடிங்க. அப்பொறம் பேசலாம்” என்று கமலம் கொடுத்த டீயை எடுத்து அமைதியாக அருந்தலானான்.

டீயை பத்மினியிடம் கொடுத்த கமலத்துக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது?

வேலைக்கு செல்லும் மகள் வேலைக்கு செல்லாமல் வீட்டுக்கு வந்திருக்கிறாள். மருமகனோடு சேர்ந்து வாழ்வதுமில்லை. அந்த ரமேஷ் வேறு ஊருக்கு வந்திருக்கின்றான். இதில் இந்த பையனை வேறு அழைத்து வந்திருக்கிறாள். என்ன பிரச்சினை என்று தெரியாமல் இருவரையும் மாறிமாறி பார்த்தவாறே டீயை பருகினாள்.

டீ குடித்து கப்பை வைக்கும் பொழுது பத்மினி நிதானமாக இருந்தாள்.

பத்மினி சர்வேஷை பார்க்க, அவன் பேசும்படி சைகை செய்தான்.

“சொல்லுமா? என் ஜாதகத்துல என்னதான் பிரச்சினை? உண்மையிலயே அன்னக்கி எனக்கு கல்யாணம் ஆகலைனா இந்த ஜென்மத்துல எனக்கு கல்யாணம் ஆகாதா?”

“இது கேள்வி. கேள்வியை இப்படி கேட்கணும்” மனதுக்குள்ளேயே நினைத்த சர்வேஷ் அமைதியாக பார்த்திருந்தான்.

“சொல்லுமா…”

“என்ன இத்தனை நாள் இல்லாம இன்னக்கி வந்து கேக்குற?”

“என் ஜாதகம், என் கல்யாணம். எனக்கு பிரச்சினை. அதான் கேக்குறேன். என் ஜாதகத்தக் கொடு. ஒரு நல்ல ஜோஸ்யக்காரன் கிட்ட போய் என்ன எது என்று பார்க்குறேன்” பத்மினி சாதாரண முகபாவனையில் கேட்டாலும் அவள் மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

“இங்க பாரு பத்மினி. உனக்கு கல்யாணம் ஆகிருச்சு. அதான் இப்போ எந்த பிரச்சினையும் இல்லையே” கமலம் பூசி மழுப்ப முயன்றாள்.

“இடையில் குறுக்கிட்ட பத்மினியோ “என்ன கல்யாணம் முடிஞ்சிருச்சு? நான் என்ன என் புருஷன் கூட சந்தோஷமா குடும்பம் நடத்துறேனா? புள்ளகுட்டியதான் பெத்தேனா?” என்று விட்டு சர்வேஷை பார்த்தாள்.

அவன் புன்னகைக்க கூட இல்லை. நிர்மலான முகத்தோடு இருந்தான்.

பத்மினி கேட்கும் விதத்திலும், சர்வேஷ் அமர்ந்திருக்கும் விதத்திலும் பிரச்சினை பெரிது என்று மட்டும் தெரிந்தது. தான் உண்மையை கூறாவிட்டால் கதிருக்கும், பத்மினிக்கும் இடையில் மேலும் விரிசல் விழுமோ என்று அஞ்சினாள்.

“இப்போ என்னடி தெரிஞ்சிக்கணும்? உன் ஜாதகத்துல எந்த பிரச்சினையும் இல்ல. எங்களுக்கு நீ கதிர கல்யாணம் பண்ணிக்கணும் என்று ஆச. கழுத காதல் என்று வந்து நின்ன. அவனும் உன் விருப்பம் தான் முக்கியம் என்று. உன் இஷ்டபடிதான் எல்லாம் செய்யணும் என்று கல்யாண வேலைய பாக்குறான். என் பெத்த வயிறு பத்தாதா? எம்புட்டு ஆச வச்சிருந்தோம்.

உனக்காக, உனக்காக என்று எல்லாரும் பொறுமையா போனா அந்த போதகை விடிஞ்சா கல்யாணத்த வச்சிக்கிட்டு போதையாகி மட்டையாகிட்டான். எவ்வளவு கஷ்டப்பட்டு சேர்த்த காசு? பார்த்து பார்த்து செலவு பண்ணின கல்யாணம் நின்னு போச்சு.

அது கூட பரவால்ல கிரகம் தொலஞ்சான்னு விட்டுடலாம்னு பார்த்தா. கதிரு நின்ன கல்யாணதத இன்னொரு நாள் நடத்தலாம்னு சொல்லுறான். அதான் உன் ஜாதகத்துல பிரச்சினை என்று சின்னதா ஒரு பொய்ய சொன்னேன்.

நான் பொய் சொல்லுறேன்னு மட்டும் தெரிஞ்சிருந்தா சரோஜா கல்யாணத்த நடக்கவிட்டிருக்க மாட்டா. உனக்கு ஒன்னு என்றதும் தான் கல்யாணத்த நடத்தி வச்சா” தன் பக்கமிருந்த உண்மையை போட்டுடைத்திருந்தாள் கமலம்.

அப்படியென்றால் அம்மா சொன்ன பொய்க்கு அவள் மட்டும்தான் காரணம். வேறு யாருமே காரணம் கிடையாது. யாரும் எந்த சதியும் செய்யல. உண்மையறியாமல் இதற்கும் அத்தானை சம்பந்தப்படுத்தப் பார்த்தேனே என்று நொந்து கொண்டாள் பத்மினி.

“ஒழுங்கா போய் கதிர் கூட குடும்பம் நடத்துற வழிய பாரு. வந்துட்டா கேள்வி கேக்க” கமலம் பத்மினியை வசைபாடியவாறே உள்ளே சென்றாள்.

“என்ன அண்ணி திடீர் சந்தேகம் போச்சா? நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்துக்க வேணாம்?” சர்வேஷ் கேட்க,

ஜாதகத்தில் பிரச்சினை என்று அன்னையை பேசச் சொன்னது கதிர் தான் என்ற தன்னுடைய திடீர் சந்தேகம் போயாச்சு என்று தலையசைத்தவள் கதிர்வேல் ரமேஷுக்கு போதை மருந்து கொடுத்தானா? இல்லையா? என்று அறிந்துகொள்வது தன்னுடைய நீண்ட நாள் சந்தேகம் என்பதனால்”எப்படி?” என்று கேட்டாள்.

“அன்னக்கி நைட் நீர்வீழ்ச்சில யார் யாரெல்லாம் பேச்சுலர் பார்ட்டிய கொண்டாடினாங்க என்று தெரியுமா?”

“ஆ… தெரியும்” என்று தலையசைத்தாள்.

“சரி வாங்க போலாம். போய் சந்திச்சு பேசலாம்”

“என்னானது பேச?”

“நீங்க வாங்க நான் பேசுறேன்” என்று அழைத்து சென்றது ரமேஷுக்கும் கதிர்வேலுக்கும் பொதுவாக இருந்த நண்பனொருவனை காணத்தான்.

“ஏம்மா எதுக்குமா இப்போ அத பத்தி கேக்குற? அதான் உனக்கும், கதிர்வேலுக்கும் கல்யாணம் ஆகிருச்சே. அவன் கூட சந்தோசமா வாழுமா. அவன் நல்லவன்மா”

கதிர்வேலுக்கும் பத்மினிக்கும் இடையில் அன்று நடந்த சம்பவத்தால் மீண்டும் பிரச்சினை அதனால் தான் விசாரிப்பதாக எண்ணி பேச மறுத்தான் அவன்.

“அதான் பிரச்சினை பண்ணறதுக்கேண்ணே ஒருத்தன் வந்துட்டான் அண்ணா” என்றான் சர்வேஷ்.

“யாரு ரமேஷா? என்னவாம்?” கொஞ்சம் கோபமும் எட்டிப் பார்க்க கேட்டான்.

பத்மினியை ரமேஷ் காதலித்ததால் திரும்ப வந்து திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்கிறான் என்றெல்லாம் சர்வேஷ் கூறவில்லை. அவ்வாறு கூறினால் ஊருக்குள் எவ்வாறான வதந்திகள் பரவும் என்று அவனுக்குத் தெரியாதா?

   

“கல்யாணம் நின்னதுக்கு கதிர் அண்ணாதான் காரணம் என்று அண்ணி கிட்ட வம்பிழுக்குறான். கதிர் அண்ணாதான் அவனுக்கு போதை மருந்து கொடுத்தானாம்” என்றான்.

“அவன் சொன்னா யார் நம்புவாங்க? அன்னக்கி உங்கப்பாவோட பாரின் சரக்கு பாடில எடுத்துட்டு வந்து கதிர்தான் எல்லாருக்கும் ஊத்திக் கொடுத்தான். எல்லாரும் தான் குடிச்சோம். நாங்க எல்லாருமா போதையானோம்? இல்ல அவனை போல விழுந்து கிடந்தோமா? அவன் என்னத்த குடிச்சானோ? இல்ல பழக்கமே இல்லையோ? வேற ஏதாவது பிரச்சினையோ யாருக்குத் தெரியும்?

சரக்கு காலியாகிருச்சு. பத்து மணிக்கு வைன் ஷாப் மூடியிருக்கும் என்று கதிர கட்டாயப்படுத்தி உங்கப்பாவோட மத்த பாரின் சரக்கு பாட்டிலையும் கொண்டு வரச்சொல்லி எல்லாரும் தான் உங்க வீட்டுக்கு அனுப்பினோம்.

உங்க அப்பா கண்ணுல படாம, கல்யாண வீடு யார் கண்ணுலையும் சிக்காம பாட்டிலோட வந்து சேர்ந்தான். அப்பொறம் எல்லாரும் ஒன்னாதான் வீட்டுக்கு கிளம்பினோம்.

எதோ கதிர் உங்கப்பாவோட சரக்கு பாடில எடுக்க வீட்டுக்கு போனான்னு அவன்தான் ரமேஷ எதோ பண்ணான்னு சொல்லுறது அநியாயம். பிரச்சினை பண்ணுறான்னா சொல்லு நான் வந்து பேசுறேன்” என்றான்.

ரமேஷின் நண்பர்கள். கதிர்வேலனின் நண்பர்கள் என்று அன்றிரவு அங்கிருந்தவர்கள் அனைவரிடவும் முயன்ற மட்டும் விசாரிக்க, எல்லோரும் ஒரே மாதிரியான பதிலைத்தான் கூறினார்கள்.

கதிர்வேலனின் நண்பர்கள் ஒரு படிமேலே போய் “உனக்கு கல்யாணம் என்று அவன் ரொம்ப சந்தோஷமா இருந்தான்மா… அவனால என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாம் செய்யணும் என்று சொல்லிக்கிட்டு இருந்தான்” என்றனர்.

அதில் ஒருவன் “அவன் ஒருநாளும் உனக்கு அநியாயம் பண்ண மாட்டான். என் பத்து, என் பத்து என்று உன்ன பத்திதான் பேசுவான். நாங்களும் அவனை உன்ன லவ் பண்ணுறான்னு ஓட்டுவோம். ஆனா நீ அந்த ரமேஷ இல்ல…” என்று நிறுத்தி “உன் சந்தோசம் தான் முக்கியம் என்று கல்யாண வேலை எல்லாமே இழுத்து போட்டு செஞ்சான். அவன் நல்லவன். சந்தோசமா இருங்க” என்றான்.

அழுகையை அடக்கி வைத்திருந்த பத்மினி ஆட்டோவில் ஏறிய உடனே ஓவென அழ ஆரம்பித்தாள். அவளால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

“அண்ணி ரோட்டுல போறவங்க எல்லாம் ஆட்டோ உள்ள எட்டிப் பாக்குறாங்க. கொஞ்சம் கண்ரோல் பண்ணிக்கோங்க” என்ற சர்வேஷ் வீட்டுக்கு சென்று பத்மினியை இறக்கி விட்டான். 

Advertisement