Advertisement

அத்தியாயம் 1
“இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை பெறுபவர்…. யார்…. யார் அவர்…” அறிவிப்பாளர் அரங்கத்தை உட்ச்சாக மூட்டியவாறு அதகலப்படுத்த அனைவரும் ஒரேமிக்க குரலில் கூறியது சர்வேஷ் என்ற நாமத்தை தான்.
அகிலத்தையே ஆளும் கடவுளை போல் சினிமா துறையை ஆண்டு கொண்டு இருப்பவன்தான் சர்வேஷ். அவன் பிரபல சினமா இயக்குனர் மற்றும் நடிகருமான ராஜ்பிரபுவின் ஒரே தவப்புதல்வன்.
பெயரில் ராஜா என்று இருப்பதினாலையே என்னவோ தந்தையும் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர் தான். ஆனால் அந்த நிலைக்கு ஒன்று அவர் சட்டென்று வந்து விடவில்லை. பல கரடு முரடான முற்பாதைகளை கடந்துதான் வந்திருந்தார்.
சினிமாவில் சாதித்த பின்தான் திருமணம் என்றிருந்தவர் திருமணம் செய்ய வயது முப்பதை தாண்டியிருந்தது. சாதித்த உடன் கேராளாவை சேர்ந்த தொழிலதிபரும், தயாரிப்பாளருமான லால் பிரகாஷின் ஒரே மகளான லட்ச்சுமிதேவியை கரம் பிடித்தார்.
அன்னையின் கொள்ளையழகும், தந்தையின் சினிமா அறிவையும் கொண்டு பிறந்தவன்தான் சர்வேஷ். தான் சினிமாவில் சாதிக்க எவ்வளவு சிரமப்பட்டோம் என்பதை நன்கு அறிந்திருந்த ராஜ்பிரபு சின்ன வயதிலிருந்தே சர்வேஷுக்கு நடனப் பயிற்சி. சண்டை பயிற்சி, என்று சினிமாவுக்கு என்னென்ன தேவையோ அத்தனையையும் பயிற்றுவிக்கலானார்.
தான் எதற்காக இதெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறியாமல் கற்றுக் கொண்டவனுக்கு இயல்பில்லையே திறமையும் இருந்தது என்பது தான் உண்மை.
ராஜ்பிரபு மகனுக்கு பயிற்சிக் கொடுத்தாலும் குழந்தை நட்ச்சத்திரமாக கூட சர்வேஷை அறிமுகப்படுத்தவில்லை. அதற்கு காரணம் அவனது பெயருக்கு ஏத்தது போல அவன் பரிபூர்ணமானவனாக மக்கள் முன் நிற்க வேண்டும் என்று எண்ணினார்.
வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்து அவனது இருபத்தி மூன்றாம் வயதில் தான் சினிமாவில் அவனை அறிமுகப்படுத்தினார்.
நிறைகுடம் தளும்பாது. அத்தனைக் கலைகளையும் கற்றுக் கொண்டு வந்தவனின் முதல் படமே அசுர வெற்றி. மக்கள் கொண்டாடும் கதாநாயகன் என்ற அந்தஸ்தை எட்டி விட்டான். கன்னியர்களின் கனவுநாயகன். இளைஞ்சர்களின் இதயநாயகன் சர்வேஷ்.
இரண்டு வருடங்களில் எட்டுப் படங்கள். அர்ப்பணிப்பு, நேரம் தவறாமை. சகநடிகர்கோடு தோழமையாக பழகக் கூடியவன். சீனியர் நடிகர்களுக்கு தகுந்த மரியாதை கொடுக்கக் கூடியவன். எந்த கிசுகிசுவில் சிக்காத ஒரே நடிகன் என்ற பெயரைக் கொண்ட ஒரே நடிகன் சர்வேஷ்.
இரண்டு வருடங்களில் இளம் வயதில் இவ்வளவு புகழின் உச்சிக்கு செல்ல அவனது உழைப்பு மட்டும் காரணமல்ல. அவனுக்கு கிடைத்த சரியான வழிகாட்டிதான் காரணம்.
அதை தான் அவனும் விருது வாங்கும் பொழுது கூறினான்.
“அப்பா… என்னோட வழிகாட்டி. என்னோட ரோல்மாடல். என்னோட இன்ஸ்பிரேஷன் எல்லாம் எல்லாம் அப்பாதான். என்னோட ஒவ்வொரு செயலிலும், நடத்தையிலும் அவர் இருப்பாரு. அவர் மட்டும் தான். ஐ டெடிகேட் திஸ் டு மை அப்பா…” ரொம்பவே சந்தோசமாக உணர்ச்சி பூர்வமாக உரத்த குரலில் கூறினான்.
பாவம் அவன் அறிந்திருக்கவில்லை. நாணயத்துக்கும் மறுபக்கம் என்று ஒன்று இருக்கும். ராஜ்பிரபுவுக்கும் மறுபக்கம் என்ற ஒன்று உண்டு அதை அறிந்து கொள்ள நேரும் பொழுது அவன் என்ன மாதிரியான மனநிலைக்கு தள்ளப்படுவானோ!
சினிமா அவார்ட்ஸ் வழங்கும் விருது வழங்கும் விழா முடிந்த பிறகு கிராண்ட் ஹோட்டலில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார் ராஜ்பிரபு.
“வணக்கம் சார் வாழ்த்துக்கள். ஒத்த புள்ளைய பெத்து சினிமாக்கு அர்பணிச்சிட்டீங்க. அடுத்து என்ன? பையனுக்கு கல்யாணம் பண்ணி பாக்குறது தானே” மூத்த நடிகர் ஒருவர் கேட்க,
புன்னகைத்த ராஜ்பிரபு “நல்ல வரன் வந்தா பார்க்கலாம்” என்றார். தன்னுடைய அனுபவத்தில் எதையும் சட்டென்று பேசிவிட மாட்டார் ராஜ்பிரபு. அமைதியை கடைப்பிடித்து நிதானமாகத்தான் பேசுவார். தனக்கு முன் இருப்பவரின் முகபாவனையை கவனித்து என்ன நோக்கத்தோடு பேசுகிறார். என்று கூர்ந்து கவனிக்கவும் தவற மாட்டார். 
ஒருகாலத்தில் ராஜ்பிரபுவுக்கு வலை விரித்து பார்த்து தோற்றப் போனவளாக இருப்பாளாக இருக்கும். “பார்த்து சார் ஏதாவது ஒரு நடிகையை காதலிச்சு. இவதான் என் பொண்டாட்டி என்று வந்து நிக்க போறான்” என்றாள் ஒரு மூத்த நடிகை.
அதே புன்னகை மாறாமல் “பையன் ஆசைப்பட்டா கல்யாணம் பண்ணிக்க சொல்வேன். அதுல என்ன இருக்கு” என்றார் அசராமல். அவர் வழிகாட்டுதலில் கிசுகிசுக்களில் சிக்காதவன் எந்த ஒரு நடிகையிடமும் மனதை பறிகொடுத்திருக்க மாட்டான் என்பது ராஜ்பிரபுவின் அசைக்க முடியாத நம்பிக்கை.  
கணவனின் அருகில் வந்த தேவி “சாப்பிடலாமா?” என்று கேட்டதோடு அருகில் இருந்தவர்களிடமும் சாப்டீங்களா? என்று கேட்டாள்.
மனைவியை அணைத்தவாறு செல்லும் ராஜ்பிரபுவை பார்த்து “மனுஷன் குடும்பத்தையும் சரியா கவனிச்சிக்கிட்டு, பையனையும் ஒழுங்கா வளர்த்து இருக்காரு. சினிமால எத்தனை பேர் இப்படி இருக்காங்க?”
“ஆமா நானும் பார்த்திருக்கேன். எந்த பார்ட்டிக்கு போனாலும் தனியா போக மாட்டாரு. வைப்போடதான் போவாரு. அந்தம்மா கூடத்தான் சாப்பிடுவார். மனமொத்த தம்பதியர்கள்”
“இந்த மாதிரி பேரண்டசோட பையன கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த குடும்பத்துல வாக்குப்படுற பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவ. யாருக்குத் தான் அதிர்ஷ்டம் இருக்கோ” சக கலைஞ்சர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்க,
“சர்வேஷ் சாப்பிட்டானா?” என்று கேட்டார் ராஜ்பிரபு.
“அவன் அப்போவே சாப்பிட்டான். உங்க புள்ள பசி தாங்க மாட்டான்” சிரித்தாள் தேவி.
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று பார்ட்டி கலைகட்ட, சர்வேஷோடு நடித்த நாயகிகள் அவனை சுற்றி அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தனர்.
“என்ன சர்வேஷ் அடுத்து காதலா? கல்யாணமா?” அவனோடு ஐந்தாவது படத்தில நடித்த நடிகை மதுவந்தி கேட்டாள். மதுவந்தி அவனை விட சீனியர் நடிகை அதனாலயே சர்வவசாதாரணமாக அவனை பெயர் சொல்லி அழைக்கின்றாள்.
“காதலிக்கிறதா இருந்தா நம்மள்ல யாராவது காதலிச்சிருந்திருக்கலாமே. நம்ம கிட்டயே சிக்க மாட்டேங்குறான். இவனெல்லாம் ஒரு பொண்ண பார்த்து காதலிப்பானா? அதுவும் இவங்கப்பா சாதாரண பொண்ணா இவனுக்குப் பார்ப்பார். பெரிய இடத்து சம்பந்தமில்லை பார்ப்பாரு” கொஞ்சம் நக்கலாக கூறினாள் அவனோடு நான்காவது படத்தில் ஜோடியாக நடித்த நடிகை சந்திரமதி. அவளும் சீனியர் நடிகை தான்
“ராஜபிரபு சார் படங்களை பார்த்தா மகனுக்கு அப்படி கட்டுப்பாடு போடுவாரு என்று தோணல. ஏன் சர்வேஷ் சார். ராஜபிரபு சார் அப்படி ஏதாவது சொன்னாரா?” தோழமையாக பழகக் கூடிய நடிகை மம்தா கேட்டாள். அவள் தான் இவனோடு இரண்டாவது படத்திலும் ஆறாவது படத்திலும் நடித்திருந்தாள்.
“இல்ல முதல் படத்துல நடிச்ச நாயகி கூடவே காதலா? நம்ம கிட்டாதான் சொல்லாம அமைதியா இருக்கீங்களா?” அவனோடு ஏழாவது படத்தில் ஜோடி சேர்ந்த விழிமொழி கேட்டாள்.
“ஐயோ அப்படி எதுவுமில்லை. நான் அண்ணனுக்கு எப்பயோ ராகி கட்டிட்டேன்” என்றாள் அவனது முதல் பட கதாநாயகி ரத்னபிரியா. அதுதான் அவளுக்கும் முதல் படம். அஞ்சி சுற்றி என்ன நடந்துக்க கொண்டிருக்கிறது என்று புரியாமல் இருந்தவளுக்கு இவன் தான் தைரியமூட்டி நடிக்க வைத்திருக்க, இவனை அவளுக்கு ரொம்பவே பிடித்திருக்க, சகோதரனாகவே ஏற்றுக் கொண்டிருந்தாள்.
ரத்னபிரியா ராகி கட்டி விட்டேன் என்று கூறியிருந்தால் கூட சுற்றியிருந்தவர்கள் நம்பியிருக்க மாட்டார்கள் அண்ணனுக்கு ராகி கட்டினேன் என்றதில் அவளது அப்பாவித்தனத்தைக் கண்டு சர்வேஷுக்கு மெலிதான புன்னகை எட்டிப் பார்த்திருந்து.
“இது தேராத கேசு”
“இன்னும் நீ வளரும் பாப்பா…” என்பதை போல் மற்றவர்கள் ரத்னாவை பார்த்து வைத்தனர்.
ஆளாளுக்கு அவன் திருமணத்தை பற்றியே பேச கோபப்பட வேண்டிய சர்வேவ் அமைதியாகே நின்றான்.
அவன் சினிமா கதாநாயகன் தான். அவன் நடித்த எட்டு படங்களில் நான்கு படங்கள் காதல் படம். இரண்டு குடும்பப் படங்கள். ஒரு த்ரில்லர் படம். கடைசியாக ஒரு மூத்த நடிகருக்கு தம்பியாக ஒரு முக்கியமாக கதாபாத்திரத்தில் நடித்திருந்தான்.
சினிமாக் காதல் என்றும், எப்பொழுதும் சுகமான முடிவுதான். எந்த ஏற்றத்தாழ்வும் பார்க்காது. சுற்றி இருப்பவர்களும் அவர்களை எந்தக் கேள்வியும் கேளாது ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் நிஜ வாழ்க்கை அவ்வாறல்ல.
சாமானிய மக்களின் வாழ்க்கையில் நடப்பவைகளை சாதாரண நிவ்ஸாக ஒளிபரப்பான பின் மக்களும் மறந்து விடுவார்கள். அதை ஒளிபரப்பியவர்களும் மறந்து விடுவார்கள். ஆனால் பிரபலங்களின் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் பொன்னேட்டில் பொறிக்கப்பட்டது போல் காலத்துக்கும் அழியாமல் மக்கள் மனதிலும் இருக்கும். மீடியாவும் அதை மக்கள் மறந்து விடாமல் அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருப்பார்கள்.
அதுதான் அவன் தந்தை அவனுக்கு வழங்கிய அறிவுரை. அதனால் எது செய்தாலும் மிகவும் கவனமாகவும், ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும்படி கூறியிருந்தார். யாரோடு வேணுமானாலும் பேசலாம், பழகலாம். அது எந்த எல்லைவரை. எந்த மாதிரியான பேச்சு என்றும் கவனமாக இருக்கும்படியும் மற்றவர்களை பேச விட்டு கூர்ந்து கவனிக்குமாறும் அறிவுரை கூறியிருந்தார்.
தன்னுடைய தந்தை கூறினால் எதையுமே மறுக்காத சர்வேஷ் அச்சுப் பிசகாமல் அவ்வாறே வளர்ந்திருந்தான். இன்றும் அதைத்தான் செய்து கொண்டிருந்தான். பெண்களை பேச விட்டு வேடிக்கை பார்த்திருந்தான்.
ஆளாளுக்கு சர்வேஷின் திருமணத்தை பற்றி பேசி வாய் சண்டை போட்டுக்கொள்ள இதற்கு மேல் போனால் கலவரம் வெடிக்கும் என்று புரிந்துக் கொண்டவன்
“ஓகே கேர்ள்ஸ் எனக்கு தூக்கம் வருது. நீங்க பேசிகிட்டு இருங்க. நான் கிளம்புறேன்” அவர்களின் பதிலையும் எதிர்பாராமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.
நேராக தனது பெற்றோரிடம் சென்றவன் “இப்போதான் சாப்பிடுறீங்களா? ஏன் இவ்வளவு லேட்டா சாப்பிடுறீங்க? கேஸ்ட்டை கவனிக்கணும் என்று காரணம் சொல்லாதீங்க. அவங்க கூடவே சாப்பிட்டு இருக்கலாம்ல”
“நீ சாப்பிட்டல்ல” தேவி மகனை கனிவாக பார்த்து கேட்டாள்.
“சாப்பிட்டேன். லேட்டாகிருச்சு. டயட். தூங்கணும். நான் கிளம்புறேன்” அன்னைக்கு கன்னத்தில் முத்தம் வைத்தவன், தந்தையை அணைத்துக் கொண்டு விடை பெற்றான்.
வீட்டுக்கு சென்று அலைபேசியை அனைத்து விட்டு கட்டிலில் விழுந்தவன் தான் அவனது மேனேஜர் செல்வா வந்து கதவை தட்டும் வரை நன்றாக தூங்கியிருந்தான்.
கொஞ்ச நாட்களாகிகவே படப்பிடிப்பு, களைப்பு என்று தூக்கத்தை தொலைத்திருந்தவன் இன்றுதான் நிம்மதியாக தூங்கியிருந்தான்.
தூக்கக்கலக்கத்திலையே கதவை திறந்தவன் “என்ன செல்வா என்ன பிரச்சினை?” கண்ணை கசக்கியவாறே கேட்டான்.
“சார் அப்பாவும், அம்மாவும் போன கார் ஆக்சிடன்ட் ஆச்சு. ஆஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க. நியூஸ் பார்த்துதான் எனக்கே தகவல் தெரிஞ்சது. உங்களுக்கு தகவல் சொல்ல போன் பண்ணா போன் சுவிட்ச் ஆப் என்று வருது” பதட்டமாகவே பேசினான் செல்வா.
அலைபேசியை அனைத்து வைத்ததை பற்றி செல்வா எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. நிம்மதியான தூக்கம் வேண்டும் என்றால் அலைபேசியும் அவனோடு சேர்ந்து தூங்க வேண்டும் என்று நினைப்பவன் சர்வேஷ். அது செல்வாவுக்கும் தெரியும், பதட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் இவனுக்கு அழைத்துக் கொண்டிருந்தான்.    
சர்வேஷின் தூக்கம் பறந்தோடி, என்ன நடந்தது என்ற கவலை தொற்றிக்கொண்டது.
உள்ளுக்குள் பதட்டமாக இருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்பது தந்தையின் அறிவுரை. குளியலறை கதவை திறந்து வைத்துக் கொண்டே பல் துலக்கி முகம் கழுவியவாறே தனது பெற்றோர் எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று கேட்டுக் கொண்டவன் ஆடையணிந்து வண்டியை நோக்கி வேக எட்டுக்களை எடுத்து வைத்தான்.
மருத்துவமனை வாசல் வழியாக அவன் நுழைய முடியாதே. நுழைந்தால் அவனை சுற்றி கூட்டம் கூடி விடுமே. மருத்துமனை வாகனங்கள் நிறுத்துமிடத்தில் உள்ள மின்தூக்கியில் நுழைந்தவன் முக கவசமொன்றையும் அணிந்துக் கொண்டான்.
வரும் வழியில்லையே தலைமை மருத்துவரிடம் பேசி விட்டதால் மின்தூக்கியை விட்டு சர்வேஷ் வெளியேறும் பொழுதே அங்கே நின்று அவனை வரவேற்றவர் ராஜ்பிரபு மற்றும் தேவி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்.
“சீட் பெல்ட் போடாம வண்டியோட்டி இருக்காரு. அம்மாவும் சீட் பெல்ட் போடல அதனால தலை வேகமா டேஷ்போர்டுல மோதியிருக்கு அது தவிர அவங்களுக்கு ஒன்னும் இல்ல. ஆனா உங்க அப்பாவுக்குத்தான்…” நடந்துக்க கொண்டே அவர்களின் நிலையையும் எடுத்துக் கூறலானார்.   
“ட்ரைவர் வண்டியொட்டாம அப்பா ஏன் வண்டியோட்டினாரு செல்வா? லேட் நைட்? ட்ரிங்க்ஸ் பண்ணி இருந்திருப்பாரே” தந்தையை அறிந்தவனாக பேசினான் சர்வேஷ்.
“அப்பா அளவாகத்தான் குடிப்பார் சார். அம்மா கூட லோங் ட்ரைவ் போகலாம் என்று அவரே வண்டியோட்டி இருப்பாராக இருக்கும்” என்றான் செல்வா.
அன்னையையும் தன்னையும் சந்தோசமாக வைத்துக்கொள்ள தந்தை என்னவெல்லாம் செய்வாரென்று அவனுக்குத் தெரியாதா? நேத்து பார்ட்டி இருந்ததால் கண்டிப்பாக குடித்திருப்பார். குடித்த சரக்கு வேலை செய்ய இளமை திரும்பி அன்னையை குஷிப்படுத்த ஏதேதோ செய்ய முனைந்திருப்பார். அது விபத்தில் வந்து முடிந்திருக்கிறது. தந்தையை நினைத்து சிரிப்பாக இருந்தாலும், நடந்த விபத்தால் அவருக்கு ஏதும் ஆகி இருக்குமோ என்ற கவலையில் மருத்துவரை ஏறிட்டான்.
“எக்சிடண்ட் ஆனதுல அவருக்கு பெரிசாக அடியேதும் இல்ல. ஆனா… அதிர்ச்சியில் ஹார்ட் எட்டாக் வந்திருச்சு. மைல்டு எட்டாக் தான் அவரை காப்பாத்தியாச்சு. ஆனாலும்…” நடையை நிறுத்திய தலைமை மருத்துவர் சர்வேஷை பார்த்தார்.
“என்ன பிரச்சினை டாக்டர்? அப்பா உயிருக்கு?” அதிர்ச்சியோடும் அச்சத்தோடும் கேட்டான் சர்வேஷ். 
“இல்ல இல்ல உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்ல” கண்டேன் சீதையை என்பது போல் சட்டென்று கூறியவர் “ரெண்டு கிட்னியும் பெலியர். அவருக்கு கிட்னி டோனர் வேணும்” யோசனையாக அவன் முகம் பார்த்தார்.
“என்ன டாக்டர் நீங்க? என் அப்பாக்கு நான் என் கிட்னியை கொடுக்க மாட்டேனா? இத சொல்ல இவ்வளவு தயங்குறீங்க?”
சர்வேஷ் புகழின் உச்சியில் இருக்கும் நடிகன். அவன் வெளித்தோற்றம் மட்டுமல்ல. உள்ளுறுப்புகளும் எந்தக் குறைபாடுமில்லாமல் இல்லாமல் இருப்பதுதான் அவன் இருக்கும் துறைக்கு நல்லது. அறுவை சிகிச்சையில் வடு உடம்பில் ஏற்பட்டால் அது திரையில் தெரியும் என்பது ஒரு புறம் இருக்க, அவனுக்கு ஏதாவது உடல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க அவன் எந்தக் குறையுமில்லாமல் இருக்கவும் வேண்டும் என்று நினைக்க மாட்டானா? என்று நினைத்துத் தான் மருத்துவர் அவனிடம் கூறத் தயங்கினார்.
பணம் கொடுத்தால் சிறுநீரக தானம் செய்பவர் ஒருபவரை தேடிக் கொள்வது ஒன்றும் சிரமமில்லையே. ஆனால் ஒரு மருத்துவராக விஷயத்தைக் கூறுவது அவர் கடமையல்லவே.
தானம் செய்பவரை தேடலாம் என்பதும், தானே கொடுப்பேன் என்பதும் அவன் முடிவு. ஆனால் அவன் கொடுப்பான் என்று கூறுவான் என்று மருத்துவர் எதிர்பார்க்கவில்லை போலும் அது அவர் முகத்தில் பிரதிபலிக்கவும் செய்தது.
“டெஸ்ட் எடுத்து பார்த்துடலாம்’ என்று மருத்துவர் கூறும் பொழுதே செல்வா மறுத்தான்.
“சார் வேணாம் சார். உங்க அப்பாவே இதுக்கு விரும்ப மாட்டாரு. நாம டோனர் யாராவது தேடலாம். காசு கொடுத்தா ஆயிரம் பேர் கிடைப்பாங்க”
“கண்டிப்பாக கிடைப்பாங்க. கஷ்டத்துக்காக கிட்னியை கொடுப்பாங்க. அது தானம் ஆகாது. மனம் முழுக்க வேதனையோடு கிட்னியை கொடுத்தா அப்பா நல்லா இருப்பாரா? கண்டிப்பா மாட்டாரு செல்வா”
இதற்கு மேல் அவனிடம் பேச முடியாது என்று புரிந்துக் கொண்ட செல்வா அமைதியானான்.
பேசியவாறே தேவி இருந்த அறைக்கு வந்திருக்க, என்ன மாதிரியான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்? எப்பொழுது மேற்கொள்ள வேண்டும் என்று சர்வேஷ் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துக் கொண்ட பின் அன்னையை பற்றி விசாரிக்கலானான்.
“ஓகே மிஸ்டர் சர்வேஷ் உங்க ப்ளாட்டை கலெக்ட் பண்ண நான் ஒரு நர்ஸை அனுப்புறேன். ப்ளாட் ரிசால்ட்ஸ் வந்த பிறகுதான் நீங்க கிட்னி டோன்ட் பண்ண முடியுமா? முடியாதா? என்று தெரிய வரும்”
“சார் நானும் என்னுடைய ப்ளாட்டை கொடுக்குறேன். ஒருவேளை உங்க ப்ளாட் பொருந்தாம போனா…” சர்வேஷ் கிட்னி தானம் செய்வது செல்வாவுக்கு சரியென்று தோன்றவில்லை. இதற்கு அவனது பெற்றோர்களே ஒருகாலமும் சம்மதிக்க மாட்டார்கள் அதனாலயே அவன் கொடுக்க முன் வந்தான்.
“உங்க அம்மாவுடைய ப்ளாட்டும் அப்பாவுடைய பிளாட்டும் வேற வேற அவங்களால கொடுக்க முடியாது. சோ உங்களால உங்க அப்பாவுக்கு கிட்னி கொடுக்கும் சான்ஸ் பிப்டி பிப்டி தான். எதற்கும் இன்னொருத்தர் லிஸ்ட்டுல நெக்ஸ்ட் இருக்குறது நல்லது” என்ற தலைமை மருத்துவர் வெளியேறினார்.
அவர் சென்ற சில நிமிடங்களின் பின் தாதி வந்து சர்வேஷ் மற்றும் செல்வாவின் இரத்தத்தை பரிசோதனைக்காக எடுத்து சென்றார்.
செல்லும் பொழுதே பரிசோதனை முடிவுகள் மாலைக்குள் வந்து விடும். என்று விட்டு சென்றிருக்க, “சார் நம்ம ரெண்டு பேரோட ப்ளாட்டுமே பொருந்தலைனா வேற டோனர் தேட வேண்டியிருக்குமே நான் இப்போவே அந்த வேலைய பார்க்குறேன். நீங்க வீட்டுக்கு கிளம்புறீங்களா? இல்ல இங்கயே இருக்கிறீங்களா?” எனக் கேட்ட செல்வாவை முறைத்தான் சர்வேஷ்.
தன்னுடைய தந்தைக்கே சிறுநீரகம் கொடுக்கக் கூடாது என்று ஒருவன் நினைத்தால் அவன் மீது கோபம் வருமா? வராதா? அவன் கூறுவதை நியாயம் இருக்க, சர்வேஷ் ஒன்றும் செல்வாவை அதற்காக முறைக்கவில்லை. தந்தை தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றார். அங்கு செல்ல அனுமதியில்லை. அதனால்தான் அன்னையோடு அமர்ந்திருக்கின்றான். இவன் என்னவென்றால் வீட்டுக்கு செல்கின்றாயா? என்று கேட்கின்றானே என்று தான் செல்வாவை முறைத்தான் சர்வேஷ்.
அது செல்வாவுக்கு நொடியில் புரிந்தது. இல்லையென்றால் அவனது மேனேஜராக கூடவே இருக்க முடியுமா என்ன? “இல்ல சார் காலைல சாப்பிடாம வேற வந்துட்டீங்க. வீட்டுக்கு போனா குளிச்சிட்டு சாப்பிடுவீங்க. இங்கயே இருந்தா, என்னென்ன வேணுமோ அதெல்லாம் கொண்டு வர ஏற்பாடு செய்யத்தான் கேட்டேன்” நிர்மலான முகத்தோடு கூறினான் செல்வா.
அவனது பதிலில் “இந்த அளவுக்கு ஒருவன் தன்னை கவனிக்க இருக்கின்றானே” என்று உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் “அம்மாவுக்கும் சேர்த்தே சாப்பாடு கொண்டு வரச் சொல்லு செல்வா. அவங்க கண்ணு முழிச்சா கண்டிப்பா டிரஸ் மாத்தணும் என்று சொல்வாங்க. சாந்தாம்மா கிட்ட சொன்னா அம்மாவோட டிரஸ் எடுத்துக் கொடுப்பாங்க. நீ வரலைனாலும் ஓகே” என்றான்.
“இல்ல நானே வரேன்” என்ற செல்வா விடைபெற்றான். 
செல்வா வரும் பொழுது தேவி கண்விழித்து அமர்ந்திருந்தாள்.
வந்ததும் வராததுமாக உள்ளே வந்தவன் “ப்ளாட் டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் வந்தாச்சா? யாருடைய ப்ளாட் சாருக்கு பொருந்துது?” என்று கேட்க தேவி என்னவென்று விசாரித்தாள்.
தந்தையின் உயிரை காப்பாற்ற அன்னை மறுப்பாளா? இந்த வயதிலும் இருவரும் எவ்வளவு காதலில் மூழ்கி திகழ்கிறார்கள். அவர்களின் மொத்த காதலுக்கும் ஒரே சாட்ச்சி நான். கர்வமாக நினைத்தவன், அன்னையிடம் தந்தையின் நிலையை எடுத்துக் கூறி சிறுநீரக தானத்துக்காக தானும் செல்வாவும் இரத்த பரிசோதனை மேற்கொண்டதையும் கூறினான்.
அவ்வளவுதான். வெகுண்டுலுந்தாள் தேவி. “யாரக் கேட்டு நீ உன் அப்பாவுக்கு கிட்னி கொடுக்கப் போற? உன் கெரியர் என்ன ஆகும்?”
“அம்மா என்ன பேசுறீங்க? என் கெரியரை விட அப்பாவோட உயிர் முக்கியம்”
“முக்கியம் தான். நாம வேற டோனர் தேடிக்கலாம் பணம் கொடுத்தா ஆயிரம் பேர் வருவாங்க. நீ வேணாம்” தேவி சொன்னதும் செல்வா சர்வேஸை தான் பார்த்தான். அவனும் அதைத்தானே சொன்னான்.
செல்வாவை முறைத்தவாறே “வருவாங்க. என் அப்பாவுக்கு நான் ஒரே மகன். அவர் நலனில் அக்கறை இருக்குற என்னை தவிர யாரும் அவருக்கு கிட்னி கொடுக்க முடியாது” சர்வேஷ் சீற்றமாக சொல்ல,
“யார் சொன்னா நீ மட்டும் தான் உன் அப்பாவுக்கு மகன் என்று? அந்தாளுக்கு சிலோன்ல ஒரு பையன் இருக்கான். வந்து அவனை கிட்னி டொனேட் பண்ண சொல்லேன் பண்ணுறானான்னு பார்க்கலாம்”
“அம்மா நீ என்ன சொல்லுற?” அதிர்ந்து நின்றான் சர்வேஷ்.
சர்வேஷின் அதிர்ந்த முகம் பார்த்த பின்தான் கோபத்தில் கத்திய தேவி தான் என்ன சொன்னோம் என்று முழித்தாள்.
இலங்கையில் இருக்குறவனோ ராஜ்பிரபுதான் தன்னுடைய தந்தை என்று அறிந்தால் அவன் தன்னுடைய சிறுநீரகத்தை தானம் செய்வானா?
ராஜ்பிரபுவின் இரண்டு புதல்வர்களும் நடிகர்கள்தான் சர்வேஷ் திரையில் நடிக்கும் நடிகன் என்றால், இவனோ தரையில் நடிக்கும் மகா நடிகன்.       

Advertisement