Advertisement

சென்னையின் போக்குவரத்து நெரிசல் அற்ற இரவு சாலையில், அவனோடு நெருக்கமாக அமர்ந்து பயணிப்பதே அவ்வளவு பிடித்தது சக்திக்கு. அவன் லேசாக நெளிந்தாலும் கூட விடவில்லை அவள். அவன் இடுப்பில் கைக் கோர்த்து, முதுகில் உடல் பதித்து நெருக்கமாக அமர்ந்தே பயணித்தாள். 

இன்னும் நீளாதா தூரம் என்று இருவரும் ஆசைப்பட்ட அந்த பயணம் அடுத்த பத்து நிமிடங்களில் முடிவுக்கு வந்திருந்தது. 

சக்தியின் குடும்பத்தினர் மாலையே செல்வாவின் வீட்டில் இருந்து கிளம்பி இருக்க, அவளை நேராக அவளது வீட்டில் கொண்டு போய் விட்டான் அவன்.

வீட்டு தோட்டத்தில் அவளுக்காக காத்திருந்தான் அவளின் அண்ணன். 

அவளோடு வீட்டுக்குள் சென்றான் செல்வா. இரண்டு நிமிடங்கள் அவர்களிடம் பேசி விட்டு, சக்தியிடம் விழிகளால் விடை கொடுத்து விட்டு வெளியில் வந்தான்.

“இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே.. அன்பே” கையில் வண்டி சாவியை சுழற்றியபடி, பாடலை சத்தமாக பாடிய வண்ணம் அவன் வீட்டுக்குள் நுழைய, “என்ன செய்ய போறேனா? இறுக்கி அணைச்சு, ஒரு உம்மா தான்” என்று கிண்டலாக சொன்ன வீரா, நண்பனை நிஜமாகவே இழுத்து ஆத்மார்த்தமாக அணைத்து கொண்டான். 

அந்த கணம் இருவருக்குமே மனம் நெகிழ்ந்திருந்தது. முதலில் சுதாரித்த செல்வா, “வெண்ண, விடுடா என்னை. எனக்கு கல்யாணம் ஆகப் போகுது” என்றான் கிண்டலாக. 

“ஆகட்டும். ஆகட்டும். ஆனாலும், நீ முதல்ல எனக்கு…” வீரா முடிக்கும் முன்பே, “என்னது?” என்றபடி அங்கு வந்தாள் மலர்.

“மலரே…” அழைப்பிலேயே அணைக்க முடியும் என்றால், அது வீராவால் மட்டுமே முடியும்.

“மலரே.. என் செல்லக் குட்டி. என் மலர் குட்டி என்ன சொல்றான்..” என்றபடி மனைவியையும், மகனையும் நடுவீட்டில் வைத்து கூச்சமே இல்லாமல் கொஞ்ச ஆரம்பித்திருந்தான் வீரா.

“டேய்.. நடு வீடு டா…” செல்வா முணுமுணுக்க, “நம்ம வீடு டா” என்று கண்ணடித்தான் வீரா. 

“வாப்பா செல்வா. மருமகளை பத்திரமா அவங்க வீட்ல விட்டுட்டு வந்துட்டியா?” அம்மா கேட்க, “இப்ப தான் விட்டுட்டு வரேன் மா” என்றபடி அறையை நோக்கி நடந்தான் செல்வா.

“முகம் கழுவிட்டு சாப்பிட வா, தம்பி” அவர் சொல்ல, “இல்லம்மா. நான் சக்தி கூட சாப்பிட்டுட்டேன். நீங்க சாப்பிட்டீங்களா?” அவன் கேட்க, அந்த தாயின் முகத்தில் மகிழ்ச்சியின் ரேகைகள் மட்டுமே இருந்தது. சக்தியுடன் இனி மகன் வாழ்வு மலர்ந்து விடும் என்று அகமகிழ்ந்து போனார் அவர். 

“நாங்க சாப்பிட்டோம் ப்பா” அவர் சொல்ல, அவரின் பதிலை சிறு தலையசைப்புடன் கேட்டுக் கொண்டே அறைக்குள் சென்றான் அவன்.

அன்றிரவு அவன் வீட்டிலேயே தங்க முடிவு செய்திருந்தது வீராவின் குடும்பம். செல்வாவின் அறையை மொத்தமாக குத்தகை எடுத்து தன் அறையாக ஒரே நாளில் மாற்றியிருந்தான் வீராவின் மகன் சர்வா.  

அவனது அறையை நிறைத்திருந்த சர்வாவின் பால் மணம், பேபி பவுடர் மணம் செல்வாவுக்கு, அவனின் சக்தியை ஞாபகப்படுத்தியது. அவளை வீட்டில் விட்டு விட்டு வந்து அரை மணி நேரம் கூட முழுதாக கடந்திருக்க வில்லை. அதற்குள் அவளை தேடத் தொடங்கியது அவன் மனம். 

மீசை கடித்து சிரித்துக் கொண்டான் அவன். குளித்து, உடை மாற்றி வெளியில் சென்றவன், முதல் வேலையாக குழந்தையை கைகளில் அள்ளிக் கொண்டான். 

“மாமா கொஞ்சுறான்னு பொக்க வாய் காட்டி சிரிக்காத டா செல்லம். அவன் இன்னும் ரெண்டே வாரத்தில உன்னை மறந்துடுவான். அடுத்த வருஷம் உன்னைப் போலவே ஒருத்தனை…” வீரா மகனிடம் சொல்லிக் கொண்டே போக,

“ச்சே ச்சே, பையன் இல்லடா. பொண்ணு தான் வேணும் எனக்கு” என்றான் செல்வா சிரிப்புடன். ஏனோ வீராவிற்கு கண்கள் கலங்கி விட்டது. 

மகனோடு சேர்த்து நண்பனையும் மனம் நிறைய பார்த்தான் அவன். 

“பொண்ணு தானே டா? ஒன்னு என்ன? பத்து கூட பெத்து கொடு. மாமன் நான் இருக்கேன் வளர்க்க..” வீரா சொல்ல,

“வெண்ண, நெஞ்ச நக்காத டா” என்றான் செல்வா நக்கலாக. அத்தனையும் கவனித்துக் கொண்டிருந்த மலர், செல்வா சொன்னதில் அடக்க முடியாமல் சத்தமாக சிரிக்கத் தொடங்கியிருந்தாள். 

அவளது சிரிப்பு அவர்களையும் தொற்றிக் கொண்டது.  

மறுநாளே மலரை அவள் வீட்டில் விட்டு விட்டு பெங்களூரு திரும்பி இருந்தார்கள் நண்பர்கள். சக்தியை இரண்டு நாட்கள் கழித்து அவளது பெற்றோரே பெங்களூரில் கொண்டு வந்து விட்டனர். அவளுக்கு துணையாக பத்மினி பாட்டியையும் விட்டு விட்டே சென்றனர். 

செல்வாவிற்கு அலுவகத்தில் இமைக்க கூட முடியாத அளவு வேலைகள் இருந்தது. இரவு தூங்க மட்டுமே வீடு திரும்பினான் அவன். அப்போதும் அவன் கண்கள் எதிர் வீட்டை தான் ஏக்கத்துடன் பார்த்தது. அங்கே இளமதி மட்டுமே இருந்தாள். செல்வாவின் கண்களோ, அவன் மதியை தேடியது. சக்தி இல்லாமல், அவளைப் பார்க்காமல், சக்தியின்றி வாடினான் அவன்.

மூன்றாம் நாள் காலை அவன் அலுவலகம் சென்ற பின்னரே வீடு திரும்பியிருந்தாள் சக்தி. அவளும் அவசர அவசரமாக கிளம்பி அலுவலகம் சென்று விட்டாள்.

இரவு தாமதமாகவே வீடு திரும்பினார்கள் நண்பர்கள் இருவரும். வீரா நேராக அவனது வீட்டிற்கு சென்று விட்டான். 

செல்வா வீடு திரும்பி, குளித்து, உடை மாற்றி, பால்கனியில் அமர்ந்தான். 

“சமைக்கணும். பசிக்குது” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அழைப்பு மணியோசை கேட்டது. 

அவனையும் அறியாமல் உதடுகள் சிரிப்பில் பிரிய எழுந்து சென்று கதவை திறந்தான் அவன். 

ரோஜா வண்ண இரவு உடையில் கையில் ஏந்திய உணவு தட்டுடன் அங்கே நின்றிருந்தாள் அவனின் சக்தி. 

“வீரா அண்ணாக்கு சாப்பாடு கொடுத்தாச்சு. நீங்க சாப்பிடுங்க” உணவை மேஜையில் வைத்தபடி அவள் சொல்ல, பால்கனி கதவில் சாய்ந்து நின்று அவளைப் பார்த்தான் செல்வா.

பின்னணியில், “நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா..” ஓடிக் கொண்டிருந்தது. 

“இப்பவே சாப்பிடுறீங்களா?” என்று கேட்டபடி தட்டை கையில் எடுத்தாள் சக்தி. 

லேசாக நகர்ந்து உணவை எட்டிப் பார்த்தான் செல்வா. காய்கறிகள் நிறைந்த ரவா கிச்சடி, தேங்காய் சட்டினியுடன் இருக்க, அவன் முகம் போன போக்கில் சக்திக்கு அப்படியொரு சிரிப்பு வந்தது. 

“என்ன பார்வை அது?” சக்தி கேட்டபடி அவனை நோக்கி நடந்தாள். இப்போது செல்வாவின் கண்களுக்கு சுற்றுப் புறம் மறந்து அவள் மட்டுமே தெரிந்தாள். 

“நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா…” ஆத்மார்த்தமாக அந்த வரிகள் மட்டுமே மனதில் ஓடியது. அவன் பார்வையில் உள்ளம் உருக, அவனிடம் சென்று நின்றாள் சக்தி. இருவருக்கும் நடுவில் இடைவெளி இருந்தது. அதை குறைக்கும் எண்ணம் இருவருக்கும் இருக்கவில்லை. 

செல்வாவின் தொண்டைக் குழி மெல்ல ஏறியிறங்க, சக்தியின் பார்வை அழுத்தமாய் அங்கே பதிந்தது. 

அவன் தோள்களில் இரு புறமும் கைப் பதித்து, அவனது கழுத்தை நோக்கி குனிந்தாள் சக்தி.

“சக்தி.. என்ன.. பண்ற.. சக்தி…” தடுமாறினான் செல்வா.  

அவன் பேசும் போது ஏறியிறங்கிய அந்த ஆடம் ஆப்பிளில், (குரல் வளையில்) மென்மையாய் பல் தடம் பதித்தாள் சக்தி.

“ச…க்…தி…” 

இப்போது அதை விட மென்மையாய் இதழ்களை அங்கு பதித்தாள். ஆழ மூச்சிழுத்து அப்படியே நின்றான் செல்வா. 

Advertisement