Advertisement

அவர்கள் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் கரைந்திருந்தது. இரவும், நிலவும் வந்து விட்டிருந்தது. சக்தி தன் அணைப்பை இறுக்கி கொண்டே போனாள். செல்வாவை இம்மியளவும் பிரிய மனமில்லாதது போல அப்படியொரு இறுக்கம். 

“சக்தி…” மெல்ல அழைத்தான் செல்வா. மொட்டை மாடி, குளிர் காற்று, இருள் சூழ்ந்த இரவு என அந்த தனிமை பொழுது அத்தனை ரம்மியமாக இருந்தது. மெல்ல தலையுயர்த்தி அவனைப் பார்த்தாள் சக்தி. கிட்டத்தட்ட அவன் உயரம் இருந்தவளுக்கு அவன் கண்களை ஊடுருவி பார்ப்பது அவ்வளவு எளிதாக இருந்தது. 

நிலவு சிந்திய மெல்லிய வெளிச்சத்தில் அழகனாக, கவர்ச்சியாக தெரிந்தான் செல்வா. 

மீசையோடு உதடு கடித்து, ஒற்றைப் புருவத்தை கேள்வியாக ஏற்றி இறக்கினான். அவனது சட்டையின் மேலிரு பட்டன்கள் போடப்படாமல் இருக்க, காற்றுக்கு படபடத்த அவனின் சட்டையை பார்த்தாள் சக்தி. மெல்ல குனிந்து அவன் மார்பில் உதடுகளை மென்மையாய், அழுத்தமாய் பதித்தாள். அவளை சுற்றியிருந்த அவன் கரங்களில் அழுத்தம் கூட, ஆழ மூச்சிழுத்தான் செல்வா. 

அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் விஷமமும், செல்ல கேலியும் இருக்க, “என்னை என்ன பண்ற நீ சக்தி?” அதை கேட்பதற்குள் திணறிப் போனான் செல்வா. 

“நீங்க என்ன பண்றீங்க? அதைச் சொல்லுங்க முதல்ல” என்றவளின் கண்கள் அவன் கண்களோடு கலந்திருந்தது. மெல்ல மெல்ல அதில் மூழ்கிக் கொண்டிருந்தான் செல்வா. பட்டுச் சேலை, நகை, தலை நிறைத்த மல்லிகை மலர்கள், மிதமான அலங்காரம் என தன் முன் புதிதாய் தேவதையாய் நின்ற பெண்ணை அப்போது தான் முழுமையாக ரசித்துப் பார்த்தான் அவன். 

அவளின் வெற்றிடையில் பதிந்திருந்த அவனின் கரம், மெதுவாக விலகி பின் மீண்டும் அங்கே பதிந்து, வருடி அவளை உணரத் தொடங்கியது. 

அவன் விழிகளில் இருந்து தன் விழிகளை விலக்காத சக்தி, “என்ன பண்றீங்க?” என்றாள் கிசுகிசுப்பாக. அந்த குரலுக்கே தடுமாறி அவளின் நெற்றியில் முட்டினான் அவன். 

“என்னப் பண்றேன்? ஒன்னும் பண்ணல” என்றான் கண் சிமிட்டி. அவளோ பேச்சை மாற்ற விரும்பினாள்.

“நீங்க ஏன் இப்படி இருக்கீங்க? உங்களால எப்படி மத்தவங்களை ஈசியா புரிஞ்சுக்க முடியுது?” திடீரென்று வந்த அந்த கேள்வியில் திகைத்து பின் சிரித்தான் செல்வா.

அப்படியே நெருக்கமாக நின்றபடி அவளை குனிந்து பார்த்தான். 

“எப்படினா? எதை சொல்ற?” அவளைப் போலவே கிசுகிசுத்தான். அந்த குரல் அவளை மயக்க, முறைத்தாள் சக்தி. 

“என்ன?” என்றான் ஹஸ்கி குரலில். கண் மூடி அந்த ஆழ்ந்த குரலை ரசித்த சக்தியின் பார்வை, அவனது ஆடம்ஸ் ஆப்பிளில் (குரல் வளை முடிச்சு) பதிந்தது. மெல்ல ஏறியிறங்கிய அந்த முடிச்சில் கூர்மையாய் பதிந்தது அவள் பார்வை. பல்லைக் கடித்து அவள் பார்வையை விலக்க, “ஓய் என்ன?” என்றான் அவன் சிரிப்புடன்.

“என்னமோ கேட்டுட்டு இருந்த?” ஒற்றை விரல் கொண்டு அவளின் நாடியுயர்த்தி அவன் கேட்க, அவள் பார்வை மீண்டும் மீண்டும் அவன் கழுத்திற்கு தான் சென்றது. 

“உங்களால எப்படி அவங்களை ஈசியா மன்னிக்க முடிஞ்சது? யார்னு தெரியாத எனக்கு எப்படி ஹெல்ப் பண்ண முடிஞ்சது?”

“மன்னிக்க.. அது அவ்ளோ ஈசியா எல்லாம் முடியல சக்தி” என்று உண்மை பேசியவன், “என்னால அவளை புரிஞ்சுக்க முடிஞ்சது. அவ மனசை, சூழ்நிலையை… அவளோட நிலைமையை.. புரிஞ்சுக்கிட்டேன். அதுக்கு அப்புறமும் கோபப்பட்டு என்ன ஆகப் போகுது? எந்த ஃபீலிங்ஸையும் தேவையில்லாம கொட்ட கூடாது சக்தி” என்றான் நிதானமாக. 

“ஆனாலும்.. நீங்க ரொம்ப நல்லவர் தான். எனக்கு கூட யார்னு தெரியாமயே ஹெல்ப் பண்ணீங்களே”

“இட்ஸ் ஜஸ்ட் அ ஹெல்ப் சக்தி. மனிதாபிமானம். வேற என்ன சொல்ல?”

“ஓகே. ஆனா, உங்களை ஹர்ட் பண்ண ஒருத்தருக்கு அவங்க பிடிச்சதை செய்ய சொல்லி அட்வைஸ் எல்லாம் பண்ணியிருக்கீங்க. அது..” அவளை பேச விடாமல், “சக்தி” என்று அழுத்தமாய் அழைத்தான் செல்வா. 

“இங்கிலீஷ்ல எம்பதின்னு (Empathy) ஒரு வார்த்தை உண்டு. கேள்வி பட்டிருக்கியா? அதுக்கு சரியான அர்த்தம் தெரியும் தானே?” அவன் கேட்க, முகத்தை நிமிர்த்தி அவனை முறைத்தாள் சக்தி.

“ஒருத்தரோட உணர்வுகளை, அவங்க மனநிலையை, அவங்க சூழ்நிலையை, அவங்களோட இடத்தில் இருந்து பார்த்து, அவங்க மனநிலையில் இருந்து அதை உணர்ந்து புரிஞ்சுக்கறதுக்கு பேர் தான் எம்பதி.” என்றவன், “நான் என்னை சுத்தி இருக்கவங்களை, பொதுவா மனுஷங்களை அவங்க இடத்தில் நின்னு, அவங்க பாய்ண்ட் ஆப் வியூவில் பார்த்து, புரிஞ்சுக்க டிரை பண்றேன் சக்தி. அதனால, தான் இப்படி இருக்கேன் போல” என்றான் புன்னகைத்து. 

“உனக்கு தெரியுமா? ஸ்கூல், காலேஜ்னு எங்க லைஃப் முழுக்க.. அதாவது, நான், வீரா அப்புறம் எங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லோரையும் யாருமே புரிஞ்சுக்கிட்டது கிடையாது. அட, அவனுகளா? அடங்காத பசங்க. அப்படினு தான் சொல்லுவாங்க. வீரா ஏன் முரடா இருந்தான்? நான் ஏன் அமைதியா இருந்தேன்? யாரும் யோசிச்சதே கிடையாது. புரிஞ்சுக்க, தெரிஞ்சுக்க முயற்சி பண்ணது கிடையாது. எங்களை அப்படியே கை கழுவிட்டு போனவங்க தான் அதிகம். நான், வீராவை அவனோட இடத்தில் இருந்து பார்த்தேன். சீரியல் நடிகை அம்மா, அரசியல்வாதி அப்பா, அப்பாவோடவே இருக்கற அண்ணா. அவனுக்காக இத்தனை பேர் இருந்தும் தனியா நின்ன வீரா, தனக்கு யாரும் தேவையில்ல அப்படினு கெத்து காமிக்க நினைப்பான். ஆனா, அது திமிரா வெளில தெரியும். யாரும் அவன்கிட்ட பேசாம, நட்பு பாராட்டாம ஒதுங்கி போவாங்க. ஆனா, எனக்கு அவனை புரிஞ்சுது.”

“எங்க வாழ்க்கை முழுக்க, எங்களுக்கு காமிக்கப் படாத எம்பதியை நான் மத்தவங்க கிட்ட காட்டுறேன். அவளோ தான் சக்தி” அவன் சொல்லி முடிக்க, அவனை பிரமிப்புடன் பார்த்தாள் சக்தி. எத்தனை பேருக்கு இவனைப் போல பரந்த மனமிருக்கும்? தனக்கே இல்லையே என்ற எண்ணத்துடன் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். 

“சரி. சரி. ரொம்ப பேசிட்டீங்க. எனக்கு பசிக்குது” என்றாள். 

“அடிப்பாவி. நான் மூச்சை பிடிச்சு பேசினா.. நீ என்ன சொல்ற?” அவன் கோபம் போல கேட்க, மீண்டும், “உண்மையா ரொம்ப பசிக்குது. நம்ம எங்கேஜ்மென்ட் டென்ஷன்ல இன்னைக்கு முழுக்க நான் ஒழுங்காவே சாப்பிடல” சிணுங்கலாய் அவள் சொல்ல, சிரித்தான் செல்வா. 

“கவனிச்சேன். ரொம்ப கஷ்டப் பட்டு சாப்பிட்டுட்டு இருந்த. நான் ஏதாவது சொல்லப் போய், சுத்தமா சாப்பிடாம நீ எழுந்துட்டா.. அதான் நான் ஒன்னும் சொல்லல” என்றவன், “ரொம்ப நேரமாச்சு. பசிக்குது வேற சொல்ற. வீட்டுக்கு போகலாமா?” என்று கேட்டான். 

“பசிக்குது தான். ஆனா, இப்படி உங்களோட இருக்கவும் பிடிக்குதே” கீழுதட்டை பல்லால் கடித்து அவள் சொல்ல, “அச்சச்சோ. நீ சரியில்ல. வா, போவோம்” பட்டென்று சொன்னான் செல்வா. 

அவள் முறைக்க, “ஈஸி சக்தி” என்றான் முதல் முறையாக காதலுடன் அவள் கண்களைப் பார்த்து. 

“ஒரு பொண்ணோட இப்படி நெருக்கமா நிக்க முடியும்னு நான் நினைச்சதே இல்ல. ஆனா, இன்னைக்கு உன் கூட இப்படி.. எல்லாமே உன்னால..”

“எஸ், சக்தியை தவிர வேற யார் கூடவும் உங்களால இப்படி நிக்க முடியாது.” என்றாள் சக்தி, அவனை மேலும் நெருங்கி நின்று. 

“சக்தி…” என்றான் பதட்டத்துடன், ஒருவித அவஸ்தையுடன். 

“தள்ளி நில்லு. இல்லனா..”

“இல்லனா…” குறும்பாக கண் சிமிட்டினாள். “இன்னைக்கே எல்லாத்தையும் டிரை பண்ணி பார்த்திடுவேன்” என்றான் ஹஸ்கி குரலில், குனிந்து அவள் காதில்.

அந்த குரலிலும் வார்த்தைகளிலும் அவளுக்கு சிலிர்த்தது. அதை அவன் கைகளும் உணர சத்தமாக சிரித்தான். 

“செல்வா…” அவன் மார்பில் முட்டினாள். ஒரு வேகத்துடன் அவள் முகத்தை கைகளில் ஏந்தினான் செல்வா. முழு மதியாய் ஜொலித்தவளின் முகத்தில் வான்மதியின் வெளிச்சம் விழ, இமைக்காமல் அவளையே பார்த்தான் செல்வா. அவள் இமைகள் எதிர்பார்ப்புடன் மெல்ல மூடத் தொடங்க, அந்நேரம் கீழே அழைப்பு மணியோசை கேட்டது.

“ப்ச்..” சலித்தான் செல்வா. தனிமையும், இனிமையும் கலைக்கப்பட்ட கோபம் அதில் தெரிய, புன்னகைத்து, “யாருன்னு பார்க்கலாம். வாங்க” என்றாள் சக்தி. 

ஒருமுறை அவளை இறுக அணைத்து விடுவித்தான் செல்வா. பின்னர் இருவரும் ஒன்றாக கீழிறங்கி போனார்கள். 

அங்கே அவர்களுக்காக காத்திருந்தது உணவு. அவர்களுக்காக ஹோட்டலில் இருந்து இரவு உணவை வருவித்திருந்தார்கள். 

“எவ்ளோ ஆச்சு?” செல்வா கேட்க, “ஏற்கனவே பே பண்ணியாச்சு சார்” என்று உணவை கொடுத்தார் வந்திருந்தவர். 

“ஓகே. தேங்க்யூ” என்று உணவை வாங்கி கொண்டு அவன் உள்ளே வர, “யார் ஆர்டர் பண்ணாங்கன்னு கேட்கவே இல்ல நீங்க” என்று கேட்ட சக்தியை கைப் பிடித்து உள்ளே அழைத்துக் கொண்டு போனான் அவன்.

அலைபேசியை எடுத்து நண்பனுக்கு அழைத்தான். “எவ்ளோ நேரம் டா?. இன்னுமா பேசிட்டு இருக்கீங்க? சீக்கிரம் சாப்பிட்டு வீட்டுக்கு வந்து சேரு.” எடுத்ததும் அதைத் தான் சொன்னான் வீரா. 

“வீரா…”

“நன்றி சொல்லாத டா, நாயே. சாப்பிடு முதல்ல” என்று விட்டு அழைப்பை துண்டித்திருந்தான் வீரா. 

முகம் நிறைத்த சிரிப்புடன் உணவு மேஜையில் அமர்ந்தான் செல்வா. வீட்டின் சமையல் அறையை குடைந்து தட்டுகளை எடுத்து வந்தாள் சக்தி. 

“வீரா ண்ணா, ஆர்டர் பண்ணாங்களா? அவள் கேட்க, “ம்ம்” என்றவன், உணவை பிரிக்க ஆரம்பித்தான். 

அங்கே ஆடு, கோழி என சுத்த அசைவம் மட்டுமே இருக்க, முறைத்தாள் சக்தி. 

“உங்களுக்கு இருக்கு” அவள் முணுமுணுக்க, “என்ன சக்தி சொன்ன? கேட்கல, சத்தமா சொல்லு” என்று கேட்டான் அவன். 

“உங்களுக்கு கேட்க கூடாதுன்னு தான் மெதுவா சொன்னது” உதடு சுழித்து விட்டு, அவனுக்கு உணவை பரிமாறினாள் அவள். 

உணவின் போது ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை இருவரும். அதுவரை ஒருவரையொருவர் தேற்றுவதற்காக சலசலவென்று பேசிக் கொண்டிருந்தவர்கள், இப்போது அமைதியாகி இருந்தனர். இருவர் மனதிலும் ஏதேதோ எண்ணங்கள் ஊர்வலம் சென்றுக் கொண்டிருந்தது. 

செல்வாவிற்கு இப்படி நடந்திருக்க வேண்டாம் என்பது மட்டுமே சக்தியின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. கணவன், மனைவியாக பின்னாளில் அவர்களின் நெருக்கம் பற்றியெல்லாம் அவள் யோசிக்கவே இல்லை. ஆனால், செல்வாவை அவனது கடந்த காலத்தில் இருந்து வெளியில் கொண்டு வர வேண்டும். அவனை கடுமையாய் துரத்தும் அந்த கொடிய இரவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவளின் தற்போதைய ஆசையும், லட்சியமும், கவலையுமாக இருந்தது. 

இதற்கு முன் அவளையே ஒதுக்கியவன், இன்று அவளிடம் மனம் திறந்த பின், சற்றே இயல்பாகி அவளை அணைத்ததை மிகப் பெரிய முன்னேற்றமாக பார்த்தாள் சக்தி. 

“சாப்பிடுங்க சக்தி” மீண்டும் பன்மைக்கு மாறி இருந்தான் செல்வா. அவள் தட்டில் இடியாப்பமும், ஆட்டுக் கால் பாயாவும் அவன் வைக்க, “ஐயோ, ஆட்டு காலா? எனக்கு வேணாம். எடுங்க” என்று அலறினாள் அவள்.

“ஏன் என்னாச்சு? மட்டன் சாப்பிடுவ தானே?”

“மட்டன் சாப்பிடுவேன். ஆனா, அதோட ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம்..” சொல்லும் போதே அவள் முகம் அஷ்ட கோணலாக, சட்டென அவள் தட்டை தன் பக்கமாக நகர்த்தி உண்ணத் தொடங்கியிருந்தான் செல்வா.

“வேற தட்டு எடுத்துக்கோ போ” அவன் சொல்ல, அவனை முறைத்து விட்டு, எழுந்து போனாள் சக்தி. 

பரோட்டா, சிக்கன் குருமாவை தனக்கு பரிமாறி கொண்டு, உணவில் கை வைக்க, மீண்டும் தட்டை மாற்றினான் செல்வா. 

“அடி வாங்கப் போறீங்க” அவள் கத்த, “அடி பார்ப்போம்” என்றான் தெனாவெட்டாக.‌ “அடியேன் பார்ப்போம்” என்றான் மீண்டும் அவளை சீண்டும் விதமாக. 

“உங்களை…” அவள் எகிறிக் கொண்டு வர, “சாப்பிடு” என்று சிக்கனை, சிக்கனம் பார்க்காமல் அவள் வாயில் திணித்தான் அவன். 

அதை எதிர்பாராத சக்தி, சட்டென தணிந்து புன்னகைத்து, உணவை மென்றாள். 

இருவருக்குமே கடந்த காலமும் மிக கசப்பான ஒன்று. அதையே நினைத்துக் கொண்டு, அங்கேயே நின்று விட்டால், வாழ்கையை எப்படி வாழ்வது? நகர்தல் தானே வாழ்க்கை? தன் வாழ்க்கையை இனியாவது இனிமையாக வாழ வேண்டும் என்று சக்தியின் முகம் பார்த்து முடிவு செய்திருந்தான் செல்வா. அத்தனை சிறிய வயதில் அவள் பார்த்தது அவனை விட மிகக் கொடிய உலகம். அவள் இழந்தது, அவளின் உயிருக்கு உயிரான ஒரு உயிரை. அவளின் இழப்புக்கு முன்பு, அவனுக்கு நேர்ந்த எதுவுமே இப்போது செல்வாவுக்கு பெரிதாக படவில்லை.

தன்னை நம்பி, தன் மேலுள்ள நம்பிக்கையில், பிரியத்தில், தன்னோடு வாழ்க்கையை இணைத்துக் கொள்ள பிரியப்படும் சக்திக்கு, பிரிய பூக்களை மட்டுமே பரிசளிக்க விரும்பினான் செல்வா. 

என்றோ நடந்ததை இன்றும் நினைத்து, வருந்தி அதிலேயே உழன்று கொண்டிருந்தால் மனம் மேலும் பாதிக்கப்படுமே தவிர, அதனால் வேறு எந்த பயனும் இல்லை என்ற தெளிவு அவனுக்கு எப்போதும் இருந்தது தான். ஆனால், இன்றைக்கு அதை தன் மனதில் அழுத்தமாய் பதிய வைத்துக் கொண்டான் செல்வா. 

இருவரும் உணவு முடித்து, வீட்டிற்கு கிளம்பினார்கள். 

செல்வாவிற்கு எப்போதுமே ஆதரவாக நின்ற வீடு அது. உயிர் நண்பன் வீராவைப் போலவே அவனது இந்த வீடுமே செல்வாவின் வாழ்வின் முக்கியமான தருணங்களில் உடன் நின்றிருக்கிறது. கல்லூரி காலம் தொட்டு அடிக்கடி இந்த வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருந்திருக்கிறான் அவன். 

அவனுக்கு சுபத்ராவுடனான கல்யாணம் தந்த மோசமான கனவில் இருந்து தப்பித்து இங்கு தான் அடைக்கலம் ஆனான் அவன். இங்கு வைத்து தான் சென்னையை உதறி விட்டு பெங்களூரு செல்வதென முடிவெடுத்தார்கள் அவனும், வீராவும்.

சுபத்ராவை அந்த மோசமான இரவிற்கு பின் இரு முறை இங்கு வைத்து தான் சந்தித்தான் அவன். அவளை நிரந்தரமாக பிரியும் முடிவையும் இந்த வீட்டில் தான் எடுத்தான். 

இப்போது கடந்த காலத்தையும் இங்கு வைத்து தான் கடக்க முயன்று கொண்டிருக்கிறான். 

இதோ, இப்போது அவனுக்கு எதிரில் நிற்கிறாள், அவனின் வருங்காலம். அவளை இங்கு அழைத்ததில் அவனுக்கு அப்படியொரு மகிழ்ச்சி. தனக்கு பிரியமான இடத்தை அவளிடமும் பகிர்ந்து கொண்ட உணர்வு. 

வீட்டை அண்ணாந்து பார்த்தான் செல்வா. சுபத்ராவை பற்றிய அனைத்து எண்ணங்களையும், அதன் சுவடின்றி அங்கேயே விட்டு விட்டு திரும்பி நடந்தான். 

“போலாம் சக்தி” அவன் சொல்ல, அவனோடு இரு சக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தாள் சக்தி. 

Advertisement