Advertisement

இதற்குள் இரவும் வந்து விட, “நான் மலரை பார்க்கணும்” என்றாள் சக்தி. 

“வேணாம் மா” உடனடியாக மறுத்தான் வீரா. அடுத்த நொடியே மனம் மாறி, அங்கிருந்த செவிலியரை அழைத்து, உள்ளே கூட்டிக் கொண்டு போகச் சொன்னான். 

பத்து நிமிடங்கள் கழித்து வந்த சக்தி, ஒரு ஓரமாக சென்று அமர, செல்வா நிலை கொள்ளாமல் தவித்தான். 

“நான் மலரை பார்க்க போறேன். நீ அவளைப் பாரு” என்று எழுந்து போனான் வீரா. 

“சக்தி” என்றழைத்து அவளுக்கு பக்கத்தில் சென்று அமர்ந்தான் செல்வா. 

“மறதியை வியாதின்னு சொல்றாங்க. என்னை கேட்டா வரம்னு சொல்லுவேன் செல்வா. வாழ்க்கையில் சிலதை மறக்க முடிந்தா, எவ்வளவு நல்லா இருக்கும். இல்ல? ஆனா, முடியாதே? நினைவுகளை அழிக்க மூளைக்கு ஸ்பெஷல் புரோகிராம் எதுவும் இல்லைல்ல?”

“மறக்க முடியலன்னா, அதை கடந்து வந்துடுங்க சக்தி”

“கடந்த காலத்தை கடந்து வரலாம். ஆனா, காயங்களை அவ்வளவு ஈசியா கடக்க முடியுமா செல்வா?” என்று தீர்க்கமாக கேட்டவள், கை உயர்த்தி ஆள் காட்டி விரலால் அவனது நெற்றி காயத்தை தொட்டாள்.

“காயங்கள் எப்பவும் தழும்புகளை விட்டுட்டு தான் போகும் செல்வா. இந்த தழும்பை, இது தந்த காயத்தை உங்களால மறக்க முடியுமா?” அவன் கண் பார்த்து அவள் கேட்க, வசியத்திற்கு கட்டுப்பட்டவன் போல பதில் சொன்னான் செல்வா.

“காலேஜ் லாஸ்ட் யியர். வீராவும், நானும்.. பைக் ஆக்சிடென்ட். தலை, கை, கால் எல்லாமே உடைஞ்சு.. கிட்டத்தட்ட ஆறு மாசம் ஹாஸ்பிடல்ல தான் இருந்தேன்” அவன் சொல்ல சொல்ல, அவன் நெற்றியை, கையை வருடியது அவள் பார்வை. கனிவும், கரிசனமும் கண்ணில் வழிய அவனைப் பார்த்தாள்.

“எதையும் மறக்க வேணாம் சக்தி. நம்மை நாமே குற்றவாளியாக்கி குறுகி போறோம் இல்ல? அதுல இருந்து வெளில வந்தாலே போதும். நாம நல்லா இருப்போம். நமக்கு நடந்தது விபத்து. அது தான் நமக்கு விதிச்சது. நம்ம மதியே, நம்ம கட்டுப்பாட்டில் இருக்கறது இல்ல. இதுல விதியை எல்லாம் எங்க இருந்து கட்டுப்படுத்த?” அவன் சொல்ல, அவள் முகத்தில் மெலிதான புன்னகை வந்துப் போனது. 

“இனி எல்லாமே நல்லதா நடக்கும் நடத்திப்போம். என்ன?” அவன் கேட்க, புன்னகையுடன் தலையசைத்தாள். 

இரவும், காத்திருப்பும் அவளை சோர்வுற செய்ய, “உங்க வீட்டுக்கு போறீங்களா சக்தி? நான் ட்ராப் பண்ணவா?” என்று கேட்டான் செல்வா. மலரின் குழந்தையை பார்க்காமல் அங்கிருந்து நகர மாட்டேன் என்று விட்டாள் அவள். 

சுவரை பார்த்து அமர்ந்திருந்தவள் சிறிது நேரத்தில், அசதியில் கண் சொருக, தூங்கி போனாள். தலை தானாக அவன் தோளை தஞ்சம் அடைந்தது. 

நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்க, பெங்களூரில் இருந்து கார் ஒட்டிக் கொண்டு வந்த அசதி, செல்வாவை கண் மூட செய்தது.

அந்நேரம் வீரா வெளியில் வர, பதறி கண் விழித்தான் அவன். செல்வா, சக்தி இருவரையும் இயல்பாக பார்த்த வீரா, “ரூமுக்கு போய் படுத்து இருக்கலாம் இல்ல? ஏன் டா, இங்க உட்கார்ந்து தூங்குற?” என்று அக்கறையுடன் கேட்டான். 

“ரொம்ப முக்கியம். மலர் எப்படி இருக்கா, அதை சொல்லு?” 

“வலி வர்றதும், போறதுமா இருக்கு டா. அவளைப் பார்க்கவே முடியல. எல்லாம் என்னால தான், இனிமே அவ கிட்டவே போக மாட்டேன் நான்” வீரா சொல்ல, செல்வா சிரிப்பை அடக்கிக் கொண்டு, “யாரு, நீயி?” என்று கேட்க, “விவஸ்தை கெட்டவனே” என்று நண்பனின் தோளில் பொய் கோபத்துடன் அடித்தான் வீரா.

“மிஸ்டர் வீரா” செவிலி அழைக்க, எழுந்து ஓடினான் வீரா. 

அந்த அதிகாலை வேளையில், அந்த தளத்தையே தன் அழுகை சத்தத்தால் நிறைத்தபடி, உலகிற்கு வந்தான் வீராவின் வாரிசு. 

முழுதாக ஒரு நாள் போராடிய சோர்வில் மலர் மயங்கி பின் உறங்கி விட, குழந்தையை கழுவி, துடைத்து, உடை அணிவித்து அவர்களிடம் ஒப்படைத்தார்கள். 

அனைவரையும் முந்திக் கொண்டு தன் குழந்தையை கையில் வாங்கினான் வீரா. மலர்க் கொத்தை போல மென்மையாய் கையில் ஏந்தினான். ரோஜா பூங்கொத்தை போலிருந்தான் அவனின் ராஜா. 

“உன் மருமகன், டா” என்றான் திரும்பி நண்பனை பார்த்து, கண்கள் தளும்ப நண்பனையும், அவனின் மகனையும் மாறி மாறிப் பார்த்தான் செல்வா. சட்டென அவன் கண்கள் பனிக்க, குழந்தையை அவன் கையில் கொடுத்திருந்தான் வீரா. 

விலை மதிப்பில்லா பொக்கிஷத்தை கையில் ஏந்தியது போல பூரித்து நின்றான் செல்வா. அவனை ஒட்டிக் கொண்டு நின்ற சக்தி, அவன் கையில் இருந்த குழந்தையை கண்ணெடுக்காது பார்த்தாள். 

“எவ்ளோ அழகா இருக்கான் இல்ல? குட்டி கை, குட்டி கால், அதுல செப்பு போல விரல். கொள்ளை அழகா இருக்கான்.” என்றவள், “நமக்கும் இப்படியொரு குழந்தை வந்தா..” பாதியிலேயே பேச்சை நிறுத்தி நாக்கை கடித்தாள் அவள். சட்டென அவனை விட்டு விலகி, பின்னே போனாள்.

உணர்ச்சி மிகுதியில் வரும் வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்க விரும்பவில்லை செல்வா. அவள் சொன்னது அத்தனை பிடித்தது. ஆனாலும், அதை வைத்து அவளை பிடிக்க விரும்பவில்லை அவன். 

குழந்தையை மலரின் அம்மாவிடம் கொடுத்து விட்டு, நண்பனை இறுக அணைத்து விடுவித்தான் செல்வா. 

“நீ இப்போ அப்பா டா, வீரா” என்றவனின் குரலில் அலாதியான ஆனந்தம் இருந்தது. 

சக்தியை கூட்டி போய் அவளது வீட்டில் முன் இறக்கி விட்டு, மருத்துவமனைக்கு திரும்பினான் செல்வா. அன்றைய தினத்தை தன் வீட்டில் பெற்றோருடன் கழித்து விட்டு, மறுநாளே பெங்களூர் திரும்பியிருந்தாள் சக்தி.

சுகப் பிரசவம் என்பதால் மூன்று நாட்களில் வீடு திரும்பி இருந்தாள் மலர். அதற்கு முன்னே, கடமை, வேலைகள் அழைக்க பெங்களூரு திரும்பி விட்டான் செல்வா. மலரின் நர்சரி, வீராவின் பூக்கடை, அவர்களின் அலுவலகம் என அவனுக்கு கழுத்து வரை வேலைகள் காத்திருந்தது. 

அதிகாலையில் எழுந்து ஓடுவதும், பின்னிரவில் வீடு திரும்புவதுமாக இருந்தான் அவன். முழுதாக மூன்று நாட்கள் கழித்து வேலைகள் குறைய, அன்று பத்து மணி போல வீடு திரும்பினான் அவன். 

எதிர்வீட்டில் இருந்து பாட்டு சத்தம், அவன் வீடு வரை கேட்க, “அலெக்ஸா” என்றழைத்தான். 

அவன் வீட்டில் இளையராஜா இசைக்கத் தொடங்கினார். அவன் குளித்து, உடை மாற்றி பசியோடு பால்கனியில் அமர, அழைப்பு மணியின் ஓசை கேட்டது. 

கதவை திறக்க, எதிரில் புன்னகையுடன் சக்தி. அவள் கைகளில் உணவு நிரம்பிய பாத்திரங்கள். 

“இன்னும் சமைக்கல தானே நீங்க? எனக்குத் தெரியும்” உரிமையாய் பேசியபடி உள்ளே வந்தாள். 

உணவு மேஜையில் பாத்திரங்களை வைத்து, “சுத்த அசைவம் தான் வச்சிருக்கேன். கூடவே இட்லி. சாப்பிடுங்க” என்றாள் சக்தி. 

சுவரில் சாய்ந்து நின்று, கைகளை மார்பில் கட்டிய படி அவளையே இமைக்காமல் பார்த்திருந்தான் செல்வா. அந்த பார்வையில் சற்றே தடுமாறினாள் சக்தி. 

சில வாரங்கள் முன்பு, பிறந்த வீட்டிற்கு பல வருடங்கள் கழித்து அவள் சென்ற போது, சிவப்பு கம்பளம் விரித்து அங்கே யாரும் அவளை வரவேற்கவில்லை. 

அதிர்ச்சி, கோபம், கண்ணீர் என கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தி, கத்தி, திட்டி, குற்றம் சாட்டி, பின்னர் அவள் நிலை உணர்ந்து அமைதியாகி அவளை அணைத்து அரவணைத்தனர். 

மகளிடம் முகம் திருப்ப முடியாமல் உடனே இளகி, இறங்கி வந்தார் அவளின் அப்பா. ஆனால், அம்மாவோ அத்தனை எளிதில் சமாதானமாகவில்லை. 

அவருக்கு இன்னமும் மகள் மீது கோபமும், வருத்தமும் மலையளவு இருந்தது. அண்ணனும் அண்ணியும் அன்பாய் பேசினார்கள் தான். ஆனாலும், தாயிடம் கிடைக்கும் அன்பை போல வருமா? மனம் சுணங்கி தான் பெங்களூர் திரும்பினாள் அவள். 

மறு வாரமே பாட்டி பத்மினியுடன் போய் இறங்கினாள். அவளின் அத்தை சுஜாதாவும் போனில் தம்பி குடும்பத்துடன் பேசினார். மகள் அனுபவித்ததை மீண்டும் ஒரு முறை கேட்டு அறிந்த அவளின் அம்மா, இம்முறை இறங்கி வந்தார். மகளை மடி சாய்த்துக் கொண்டார். அத்தோடு நின்றிருக்கலாம் தான். ஆனால், பாட்டி பத்மினி உள்ளே நுழைந்து நல்லது செய்வதாக நினைத்து, குட்டையை மீண்டும் குழப்பி விட்டார். 

உண்மையில் பேத்தியின் நன்மைக்காக தான் யோசித்தார் அவர். ஆனால், அவளின் விருப்பம்? யாரும் கேட்கவில்லை. 

சந்தோஷ் அவளுக்கு கொடுக்கும் தொல்லையை பற்றி பத்மினி சொல்ல மகளுக்காக கொதித்து எழுந்தார் ஜெய்சங்கர். 

“இன்னும் என்ன வேணுமாம் அவனுக்கு.. அவனை உள்ள தள்ளாம விடப் போறதில்ல நானு” கர்ஜித்தார் அவர். அலைபேசியை தேடி எடுத்து, அவருக்கு பரிச்சயமான வக்கீலை அழைத்தார்.

“அப்பா.. அவனால என்னை ஒன்னும் பண்ண முடியாது. என்கிட்ட கோர்ட் ஆர்டர் இருக்கு. விடுங்க பா” என்றாள் சக்தி.

“அது இருந்தும் உன்னை டார்ச்சர் பண்றான் இல்லம்மா. அதுக்கு ஒரு முடிவு கட்டணும் இல்ல?” அவர் சொல்ல,

“ஒரு நல்ல பையனா பார்த்து சக்திக்கு கல்யாணம் பண்ணி வைப்போம். அது தான் அவளுக்கு பாதுகாப்பு. ஆனா, நல்ல குடும்பமா அலசி ஆராஞ்சு தான் கொடுக்கணும்” பத்மினி சொல்ல யோசிக்க ஆரம்பித்தனர் சக்தியின் பெற்றோர். சாதக பாதகங்களை அலச ஆரம்பித்தனர். அன்றிரவே திருமணம் தான் சரியான தீர்வு என்ற தீர்க்கமான முடிவிற்கு வந்திருந்தனர். 

அறிந்தவர், தெரிந்தவர் குடும்பங்களை பற்றி அவர்கள் பேச ஆரம்பிக்க, தனது அறையில் அமர்ந்து அத்தனையையும் கேட்டு கொண்டிருந்த சக்தியின் மனம் தன் சக்தியை இழந்திருந்தது.

மறுநாள் இரவு பெங்களூரு திரும்பியதும் பாட்டியிடம் எவ்வளவோ சொல்லி பார்த்தாள். அத்தையிடம் கெஞ்சிப் பார்த்தாள். ஒன்றும் பலனளிக்கவில்லை.

இறுதியில் அப்பாவிடமே நேரடியாக அவள் பேச, அவ்வளவு தான். அவளிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார் அவர். 

இரண்டு நாட்களுக்கு மேல் பொறுக்க முடியாமல் அவள் தான் இறங்கி போக வேண்டியிருந்தது.

“சாரி ப்பா” என்றவள், சரியென்றும் சொல்லியிருந்தாள். இந்த முறை பெற்றவர்களை வருத்த விரும்பவில்லை அவள்.

இரண்டாம் திருமணத்துக்கு மாப்பிள்ளை அப்படியொன்றும் எளிதில் கிடைத்து விட மாட்டான் என்ற நம்பிக்கையில் சற்றே மெத்தனமாக தான் இருந்தாள். 

அந்த சமயம் தான் செல்வா அவனின் விருப்பத்தை அவளிடம் தெரிவித்து இருந்தான். 

அதுவரையில் அவனை நட்பாக பார்த்தவள், அந்த கணத்தில் இருந்து அவனிடம் தடுமாற ஆரம்பித்தாள். 

ஏற்கனவே அவனிடம் இயல்பாக பேசிய நொடிகள் நினைவில் வர, அவனைப் பிடித்தது. ஆனால், பிரியம்? லேசாக அவளையும் அறியாமல் மொட்டு விடத் தான் செய்தது. அதை மலர விடாமல் தடுத்து வைத்தாள் சக்தி. 

இப்போது, அவன் தொண்டையை செரும, நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் சக்தி. 

“ஐ ஆம் சாரி” என்றாள் சக்தி. கண்களை அவளிடம் இருந்து அகற்றாமல், அவளிடம் வந்தான் செல்வா.

“எதுக்கு, சாரி?” கரகரத்த குரலில் கேட்டான். 

“கல்யாணம்.. உங்களை.. சாரி” திக்கினாள் சக்தி. 

“கல்யாணம், அதை அப்புறம் பார்க்கலாம். என்னைப் பிடிக்குமா உனக்கு? பிடிச்சிருக்கா? அதை சொல்லுங்க, போதும்” என்றான். 

இருவருக்கும் இடையே இடைவெளி இருந்தது. ஆனாலும், இம்சையாய் உணர்ந்தாள் சக்தி. 

“சொல்லுங்க சக்தி” 

“பிடிக்க கூடாதுன்னு நினைக்கறேன். அப்போ தான் பிடிக்க ஆரம்பிக்குது” என்றாள், அவனை நேராக பார்த்து. அந்த பதிலில் அவன் முகத்தை நிறைத்தது புன்னகை. கண்கள் மலர, புருவம் ஏற்றி இறக்கினான். தலை கோதி கொண்டான். பற்கள் தெரிய சத்தமில்லாமல் சிரித்தான். இதற்கு முன் இத்தனை கவர்ச்சியாய் அவனைப் பார்த்ததில்லை சக்தி. கண்களை சிமிட்டி அவனைப் பார்த்தாள். அதற்கும் சிரித்தான் அவன். 

“அப்போ பிடிக்கும்னு வச்சுக்கலாமா?” என்று அவன் கேட்க,

“ம்ம்” என்றாள் சக்தி உதடு கடித்து சிரிப்பை மறைத்து. 

இருவருக்குமே அவர்களது செய்கை சிறுபிள்ளைத் தனமாக தான் தோன்றியது. 

“வார்த்தையில் சொல்லுங்க சக்தி” அழுத்தமாக கேட்டான். மூச்சை ஆழ உள்ளிழுத்து, “பிடிச்சிருக்கு.” என்றாள். 

“ஆனா, எங்க வீட்டை மீறி எதுவும் பண்ண மாட்டேன். அதுனால.. இது சரி வ…” அவள் முடிக்கும் முன்பே ஒற்றை விரலை அவளின் உதட்டில் வைத்து பேச்சை நிறுத்தினான். 

“நெகடிவ்வா எதுவும் சொல்லாதீங்க சக்தி” என்றவன், “எனக்கு உங்க மேல இந்த நிமிஷம் காதல் எல்லாம் இல்ல. ஆனா, கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சா உங்க முகம் மட்டும் தான் மனசுல வருது. என்ன பண்ணட்டும் நான்?” அவன் கேட்க, முழித்தாள் சக்தி. 

“என்னை நிச்சயமா பிடிச்சிருக்கு இல்ல சக்தி?”

“காரணம் தெரியல. ஆனா, பிடிக்குது. நீங்க என்னை காயப்படுத்த மாட்டீங்கன்னு என் மனசு நம்புது. அதுனால கூட இருக்கலாம்” உண்மையாய் அவள் பேச, அப்போது தான் செல்வாவிற்கு அவளை அதிகம் பிடித்தது. மனம் நெகிழ, மொழி மறந்து போயிருந்தது அவனுக்கு. 

அவள் முகத்தை கையில் ஏந்தினான். கண்கள் அலைபாய அவனைப் பார்த்தாள் சக்தி.

“வீட்டுக்கு போங்க சக்தி. நம்ம கல்யாணம் முடியற வரை இந்த பக்கம் வாரதீங்க” என்றான் உணர்வுகளை அடக்கிய குரலில். இருவரின் கண்களிலும் அதிர்ச்சி. 

சக்தியிடம் இயல்பாக நெருக்கத்தை தேடிய தன்னை நினைத்தே அதிர்ந்தான் செல்வா. ஒரு ஆணின் தொடுகையை பயமின்றி, அருவருப்பின்றி தன்னால் இயல்பாக ஏற்றுக் கொள்ள முடிந்ததை அதிர்வுடன் கவனித்தாள் சக்தி.  

“நாம பேசணும் செல்வா” என்றாள் சக்தி.

“முதல்ல நம்ம வீட்ல பேசலாம். அப்புறம் நாம பேசலாம்” என்றான் செல்வா. 

“வீட்ல எப்படி? ஒருவேளை வேணாம்..”

“ஷ்ஷ், பார்த்துக்கலாம் சக்தி” என்றான் முடிவாக. 

அவள் கண்களில் குழப்பத்தை கண்டவன், “கை வசம் ஒரு மந்திரக்காரன் இருக்கான். அவன் கிட்ட சொன்னா போதும். எல்லாத்தையும் பார்த்துப்பான்” குறுஞ்சிரிப்புடன் செல்வா சொல்ல, “யார் அது?” என்றாள் சக்தி, புருவம் சுருக்கி கேள்வியாக. 

“உங்க பாட்டியும், அத்தையும் எப்படி உங்க வீட்டுக்கு வந்தாங்கன்னு முதல்ல கண்டுபிடி.” அவன் சொல்ல,

“அது, என் ப்ரெண்ட் அதிதி சொல்லி வந்தேன் சொன்னாங்க. ஆனா, அதிதிக்கு யார் சொன்னா கேட்டா பதிலே வரல? யார் சொன்னா?”

“நீயே கண்டுபிடி.” 

“ஐயோ.. பிளீஸ். நீங்களே சொல்லிடுங்க” அவள் கேட்க, மறுப்பாக தலையசைத்து, அவளை தள்ளிக் கொண்டு போய் வெளியில் விட்டான் செல்வா. 

கதவை அடைத்த பின்பும், திறந்தே இருந்தது இருவரின் மனமும். 

Advertisement