Advertisement

பார்வையில் மதுச்சாரல் -3(2)

அத்தியாயம் -3(2)

கர்ணா கண் திறக்கையில் மினி அவனுக்கு காட்சி தந்தாள். கண் மூடி கை கூப்பி நின்றிருந்த அவளது கோலம் கர்ணாவின் நெஞ்சத்தை நிறைத்தது.

விநாயகரிடம் என்ன டீல் பேசிக் கொண்டிருந்தாளோ மெல்ல அவள் சிரிக்க அந்த தெத்துப் பல் அழகில் கர்ணா இதழ் விரித்தான்.

தன் வேண்டுதலை முடித்து தாமினி கண்கள் திறக்க அவள் முன்னே அவளையே பார்த்த வண்ணம் ஏதோ ஓர் வாலிபன். தாமினி முறைக்க தன் தலையில் லேசாக தட்டிக் கொண்டு மீண்டும் விநாயகரை பார்த்தான் கர்ணா.

தாமினிக்கு உள்ளுக்குள் உறுத்தல் மீண்டும் தன்னை கவனிக்கிறானோ என்ற எண்ணம் எழ ரகசியமாக பார்த்தாள். கர்ணா பாவமாக கணபதியை பார்த்திருக்க தலை திருப்பிக் கொண்டாள். சில நொடிகள் கழித்து மீண்டும் தாமினி அவனை பார்க்க அவனும் அவளையே பார்த்திருந்தான்.

என்ன பார்வை இது? தாமினி ஆராய்ந்து கொண்டிருக்க, ‘என்னடா செய்ற? அவ என்ன நினைப்பா?’ தன்னை கடிந்தவன் முகம் சுளித்து கண்களை இறுக மூடிக் கொள்ள அவனது அந்த பாவனையில் தாமினி சுவாரஷ்யமாக அவனை பார்த்தாள்.

கர்ணா கண்களை திறக்க தாமினி ‘என்ன?’ என புருவங்கள் உயர்த்த ஒரு கையால் தன் காதை பிடித்துக்கொண்டு “சாரி” என வாயசைத்தான் கர்ணா.

கர்ணாவின் பார்வை தாமினியின் கண்களில் நிலைத்திருந்தது, பார்க்க கண்ணியவானாக தெரிந்தான், அவன் செயலிலும் சிறு பிள்ளைத் தனம் தென்பட்டதே ஒழிய தவறாக எதுவும் அவளுக்கு தோன்றவில்லை. ஆனாலும் பொய்யாக முறைத்தாள் தாமினி.

அவளின் அந்த கோவ பார்வையில் கர்ணாவுக்கு என்னவோ போலானது, தன் செய்கை அவளை புண் பட செய்து விட்டது போல என்றெண்ணியவன் இப்போது இரண்டு காதுகளையும் பிடித்துக்கொண்டு முட்டி போட, பார்ப்பவர்களுக்கு கணபதியை மனமுருக வேண்டுகிறான் என்றே பட்டது, ஆனால் தாமினிக்கு மட்டும் அவன் தன்னிடம்தான் மன்னிப்பை வேண்டுகிறான் என்பது புரிந்தது.

தாமினி விழி விரித்து அவனை பார்த்தாள். அவளின் அந்தப் பார்வை கர்ணாவிடம் சட்டென சாரலில் நனைந்த இதம் பரப்ப முட்டி போட்டுக் கொண்டிருந்தவன் முழுதும் எழாமல் பாதியில் அப்படியே நின்றான்.

தாமினி கண்களால் ‘என்ன இது?’ என கேட்க சுதாரித்த கர்ணா முழுதும் நிமிர்ந்து நேராக நிற்க தாமினி தன் தெத்துப் பல் சிரிப்பால் கர்ணாவை ஈர்த்தாள். கர்ணாவும் சிரிக்க அவள் முறைத்தாள். கர்ணா தனக்கு பின்னால் திரும்பி பார்க்க சிறு குழந்தை நிற்க, ‘ஓஹ் குழந்தை பார்த்து சிரிச்சாளா?’ என நினைத்துக்கொண்டே தாமினியை பார்க்க அவளின் முறைப்பு மாறவில்லை.

சங்கடமாக நெளிந்த கர்ணா அவளை பார்ப்பதை தவிர்த்தான். கல்யாணியின் தங்கையிடம் திடீரென கர்ணா காதலில் விழுந்த கதை அஷ்வினுக்கு தெரியாமலே போனது.

தாமினியின் குடும்பத்தினரும் உச்சி பிள்ளையாரை காண வர அஷ்வினும் அங்கு வர கர்ணா கவனமாக இருந்து கொண்டான். தாமினி அவ்வப்போது அவனை பார்த்தது அவனுக்கு தெரியவில்லை. தான் பார்த்தது அவளுக்கு பிடிக்கவில்லையோ என கர்ணா உள்ளுக்குள் தவிப்பதை தாமினியால் உணர முடியவில்லை.

அன்றைய முதல் சந்திப்பு கர்ணாவுக்கு பெரும் தாக்கத்தை கொடுக்க தாமினியும் அவனை ஏதோ ஒரு விதத்தில் நினைத்துக்கொண்டுதான் இருந்தாள்.

தாமினிக்கு தன் அக்கா கல்யாணியின் காதல் பற்றி தெரியாது, ஆதலால் கர்ணா பற்றிய விவரங்களும் தெரியாது. ஆனால் தாமினி யாரென கர்ணாவுக்கு தெரிந்திருந்தும் அவளை சந்திக்க முயலவில்லை. அஷ்வினிடம் சொல்லவும் கூச்சமாக இருக்க அதைவிட தாமினிக்கு தன்னை பிடிக்கவில்லையோ என்ற எண்ணம் அவனை அவளை தேடி வர தடை போட்டு விட்டது.

நாளாக நாளாக மினி தன் உள்ளமெங்கும் வியாபிக்க ஆரம்பிக்க கர்ணாவுக்கு ஆச்சர்யமாகிப் போனது. பழகிப் பாராமல் அவள் குணம் பற்றி அறியாமல் வெறும் தோற்றம் கொண்டு அவளை இந்த அளவுக்கு பிடிக்கிறதா, இது சரியா? பார்த்தவுடன் காதல் என்றால் அந்த பெண்ணே சிரிப்பாள் என நினைத்தான்.

ஆனாலும் நண்பர்கள் காதல் என்று பேச்செடுத்தாலே அவன் நினைவில் தாமினி வந்தமர்ந்து கொண்டாள். யாரையாவது ஜோடியாக பார்க்க நேர்ந்தால் கற்பனையில் அவனும் அவளுமாக தெரிந்தார்கள். அவன் வீட்டில் அவளது நடமாட்டம் இருந்தால் எப்படி இருக்கும் என்ற அவனது கற்பனை காட்சிகள் சிறகுகள் கட்டிக் கொண்டு பறந்தன.

இருந்தும் இது வெறும் ஈர்ப்பு, அவளுக்கு தன்னை அத்தனை பிடிக்கவில்லை, நான் உறுதியாக இருந்து கொள்வேன் என சப்பைக் கட்டுகள் கட்டி தான் கட்டுக் கோப்பாக இருப்பது போல தனக்கு தானே காட்டிக் கொண்டான்.

காதல் வலியது, அவனை அவன் சம்மதமின்றி அலைக் கழித்தது. ஏன் சரியாக சாப்பிடுவதில்லை என பத்மினி பாட்டி கவலை கொள்ள ஆரம்பித்தார், என்னடா பிரச்சனை உனக்கு என கேள்வி கேட்க ஆரம்பித்தார் வேணுகோபால், என்ன கர்ணாவுக்கு என அஷ்வினிடம் விசாரித்தான் அரவிந்த்.

அஷ்வினுக்கும் லேசான சந்தேகம் கர்ணா பற்றி. தனியாக அழைத்து, “என்னடா லவ் பண்றியா யாரையும்?” என அஷ்வின் சரியாக கேட்க கர்ணா விழித்தான்.

“அப்போ அதுதான்” அஷ்வின் சிரிக்க கர்ணாவிடம் சின்ன வெட்கம்.

கர்ணாவின் வயிற்றில் குத்திய அஷ்வின், “யார்டா?” எனக் கேட்டான்.

மினியின் நிலை பற்றி அறியாமல் அவளை பற்றி யாரிடமும் சொல்ல கர்ணாவுக்கு விருப்பமில்லை.

“இன்னும் நான் சொல்லலை, வெறும் ஒன் சைட்”

“போடா முட்டாள், ஃபர்ஸ்ட் ப்ரொபோஸ் பண்ணு”

“அப்படியெல்லாம் சொல்லி சங்கட படுத்த முடியாது, பார்க்கிறேன்… அவளுக்கும் என் மேல இன்ட்ரெஸ்ட்னு தெரிஞ்சாதான் சொல்வேன்”

“எந்த காலத்துல இருக்க நீ, சொன்னாதானே என்னன்னு தெரியும், சும்மா நீயா ஆசை வளர்க்க கூடாது” அறிவுரை வழங்கினான் அஷ்வின்.

“என்னை பத்தி எதுவும் தெரியாம சும்மா நான் சொன்னவுடனே ஓகே சொல்வாளா?” நக்கலாக கேட்டான் கர்ணா.

“என்னதான்டா சொல்ல வர்ற?”

“அவளுக்கு பிடிக்காது, இது ஜஸ்ட் இன்ஃபாச்சுவேஷன்னு நினைச்சு வேணாம் முடிவு பண்ணினேன். இப்போ அப்படி ஈஸியா விட முடியாது, அவளை தாண்டி வேற யோசிக்க கஷ்டமா இருக்கும்னு புரியுது, பட் அவசர படமாட்டேன் டா, நான் என்னை பத்தி அவளுக்கு சொல்லணும், அவ கூட பழகி நான் இப்படின்னு அவளுக்கு புரிய வைக்கணும், அவ சொல்லாமலே அவளுக்கும் என்னை பிடிக்கும்னு நான் தெரிஞ்சுகிட்ட பிறகு…” சொல்லாமல் நிறுத்திய கர்ணா அஷ்வின் முகம் பாராமல் தொலைவாக பார்த்து ரசனையாக சிரித்தான்.

நண்பனின் கற்பனை என்னவென அஷ்வினுக்கு தெரியவில்லை, ஆனால் அவன் கண்களின் ரசனையும் முகத்தின் வெளிச்சமும் அஷ்வினுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

“டேய் கர்ணா உன்னை இப்படி மாத்தின அந்த லக்கி கேர்ள் யாருன்னு எனக்கு மட்டும் சொல்லேன் டா” கெஞ்சலாக கேட்டான் அஷ்வின்.

அஷ்வினை தீவிரமான பார்வை பார்த்த கர்ணா, “எதுவும் முடிவு தெரியாத வரைக்கும் யாருக்கும் இது தெரியக்கூடாது, அவ ஓகே சொன்னதும் முதல்ல உன்கிட்டதான் சொல்வேன்” என்றான்.

“அப்போ யாருன்னு சொல்ல மாட்ட” முறைத்துக் கொண்டே கேட்டான் அஷ்வின்.

“ம்ஹூம்… என் லைஃப் ஷேர் பண்ணிக்க போறவளை உங்க எல்லாருக்கும் சொல்வேன், சப்போஸ் என் நினைவா மட்டும்தான் அவ இருக்க போறான்னா… ப்ச்… என்னை தவிர யாருக்கும் அவளை தெரிய வேணாம்”

கர்ணா தலையில் கொட்டி, “கண்டிப்பா எங்க எல்லோருக்கும் அந்த பொண்ணை யாருன்னு சொல்வ, என்ஜாய்டா கர்ணா” என சொல்லி கண்கள் சிமிட்டி சிரித்தான் அஷ்வின்.

“கர்ணாவுக்கு ஒண்ணுமில்ல, நல்லாத்தான் இருக்கான். என்னை விட அவனை பத்தி உங்களுக்கு அதிகம் தெரியுமா?” எனக் கேட்டு மற்றவர்களை சமாதானம் செய்தான் அஷ்வின். யாருக்கும் தன் நிலை இத்தனை பகிங்கிரமாக தெரியாமல் கவனமோடு நடந்து கொண்டான் கர்ணா.

இரு நாட்களில் தாமினி படிக்கும் கல்லூரி, வார இறுதி நாட்களில் அவள் செல்லும் நடன வகுப்பு பற்றி எல்லாம் அறிந்து கொண்டான். ஆனால் அவளை எப்படி சந்திப்பது என தடுமாற்றம்தான். கர்ணா இயல்பாக அத்தனை கூச்ச சுபாவி அல்ல என்றாலும் இந்த விஷயத்தில் நிறைய தயக்கங்கள் தடுமாற்றங்கள் கூச்சம் எல்லாம் வந்து சேர்ந்து கொண்டன.

சனிக்கிழமை காலை தாமினி நடன வகுப்பு வரும் நேரமறிந்து கொண்டு பக்கத்தில் இருந்த சிற்றுண்டி கடையில் எதையோ ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தான் கர்ணா. யாரோ பெண் அவளை ஸ்கூட்டியில் ட்ராப் செய்து விட்டு சென்றாள். அந்த பெண் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவள் முகத்தை அவன் காணமுடியவில்லை.

அடுத்த நாளும் வந்தான், அவனின் இருப்பு பற்றி தாமினிக்கு தெரியவே இல்லை. அடுத்த வாரம் சனிக்கிழமை அவளே ஸ்கூட்டியில் வந்தாள். வகுப்பு முடிந்து அவள் திரும்பி செல்கையில் துணிந்து அவளை பின்தொடர்ந்து பைக்கில் சென்றான் கர்ணா.

தாமினி வண்டியோட்ட கற்ற புதிது. எப்பொழுதும் தீபிகாவோ அல்லது அவளது அப்பாவோதான் அழைத்து வருவார்கள். இன்று இருவருமே வேறு வேலையாக இருக்க தெரிந்த ஆட்டோவில் செல்லட்டும் என்ற தந்தையின் சொல்லை மீறி அம்மாவை சமாதானம் செய்து அவளே ஸ்கூட்டி எடுத்துக் கொண்டு வந்திருந்தாள்.

இவ்வளவு தூரம் தனியாக ஸ்கூட்டியில் வருவது இதுவே முதல் முறை. அதீத உற்சாகத்தில் அவளை தொடர்ந்து வந்த கர்ணாவின் பைக்கை அவள் கவனித்திருக்கவில்லை.

நகர்ப்புறத்தை தாண்டி அவள் வீட்டுக்கு செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத இடம் ஒரு மைல் அளவுக்கு இருக்கும். அந்த சாலையில் தாமினி வண்டியை செலுத்திக் கொண்டிருக்க அப்போதுதான் அவளை தொடர்ந்து வரும் பைக்கை கவனித்தாள்.

சட்டென மனதில் பயம் சூழ பதட்டத்தில் வண்டியோட்டுவதில் வைத்திருந்த கவனத்தை தவற விட்டாள் தாமினி. சீராக சென்ற அவளின் ஸ்கூட்டி திடீரென சாலையில் செல்லாமல் பள்ளத்தில் இறங்கி முள் புதருக்குள் சென்று மறைய தன் வண்டியை நிறுத்திய கர்ணா திக் என்ற உணர்வோடு அப்படியே உறைந்து போனான்.

Advertisement