Advertisement

பார்வையில் மதுச்சாரல் -3(1)

அத்தியாயம் -3(1)

கல்லூரிப்பருவம் அனைவருக்குமே மறக்க முடியாத இனிய பருவம்தானே. கர்ணாவின் கல்லூரிக் காலமும் அப்படித்தான். கர்ணாவும் அஷ்வினும் ஒரே பொறியியல் கல்லூரிதான் என்றாலும் வெவ்வேறு துறைகள். கர்ணா சிவில் இன்ஜினியரிங், அஷ்வின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்.

கல்லூரி சென்று விட்டால் அவசியம் என்றால் மட்டும்தான் பார்த்துக் கொள்வார்கள், இருவருக்குமே தனித்தனியாக நண்பர்கள் பட்டாளம் உண்டு.

அந்த வயதுப் பேச்சுக்கள் படிப்பு, விளையாட்டு, சினிமா என இருந்தாலும் சுற்றி வளைத்து காதல் பற்றி வந்து விடும்.

கர்ணாவின் நண்பர்கள் சிலர் காதலில் இருந்தார்கள், சிலர் அப்படி தீவிர காதலில் இல்லாத போதும் அழகான பெண்கள் குறித்து சிலாகித்து பேசுவார்கள், சிலர் காதலிக்க முயன்று முடியவில்லை என்பார்கள். அப்படி அஷ்வினும் முதல் வருட படிப்பின் பாதியிலேயே காதல் என சொல்ல கர்ணாவுக்கு வியப்பு.

வீட்டில் யாருக்கும் தெரியாமல் தன் வகுப்பு தோழி கல்யாணியை கர்ணாவுக்கு மட்டும் அறிமுகம் செய்து வைத்தான் அஷ்வின். அன்று பார்த்ததோடு சரி, பின்னர் அஷ்வின் சொல்வதை கேட்டுக் கொள்வானே தவிர, காதலர்களை அவர்களுக்கான இடம் கொடுத்து விலகியே இருப்பான்.

எப்படியும் வேணுப்பா ஒத்துக் கொள்வார், அஷ்வினே சொல்லட்டும் என கர்ணா அமைதி காத்தான். படிக்கும் வயதில் காதல் பற்றி அப்பாவிடமோ அண்ணனிடமோ சொல்ல அஷ்வினுக்கு பயம், அதிலும் அண்ணன் மணமாகாமல் இருக்க எப்படி சொல்வது என தயங்கி கல்யாணி பற்றி வீட்டில் சொல்லவே இல்லை அஷ்வின்.

கல்யாணியை மிகவும் ஆழமாகவே நேசித்தான் அஷ்வின். அவன்தான் முதலில் அவளிடம் காதல் சொல்லியது, அவளும் உடனே ஒத்துக்கொண்டாள். சின்ன சண்டைகள், செல்ல சமாதானங்கள், மாலை வேளைகளில் வீட்டினருக்கு தெரியாமல் ஊர் சுற்றுவது என எல்லா காதலர்களை போலவே மிகவும் அழகாக சென்றன அவர்களின் இளமை நிறைந்த நாட்கள்.

இப்போதெல்லாம் கர்ணாவுடன் அதிகம் வெளியில் செல்வதில்லை அஷ்வின். ஒன்று கல்யாணியுடன் சினிமா, கோயில் என செல்வான், அல்லது கர்ணாவுடன் வெளியில் செல்வது போல எங்காவது சென்று கைபேசியில் அவளுடன் பேசிக் கொண்டே இருப்பான்.

அஷ்வின் பெரும்பாலும் கர்ணாவுடன் அல்லது அவன் நண்பர்களுடன் வெளியில் செல்வது வழக்கம்தான் என்பதால் அவ்வளவாக அவனை வேணுவும் அரவிந்தும் கண்டுகொள்ளவில்லை. வளர்ந்தாலும் அவர்களுக்கு அஷ்வின் சிறு பிள்ளையாகவே தோன்றினான் போலும், காதலில் இருக்கிறான் என்ற சந்தேகம் துளி கூட அவர்களுக்கு எழவில்லை.

சில சமயங்களில் கர்ணாவுக்கு அஷ்வின் மீது கோவமாக வரும், “அப்படி என்னத்தடா பேசுவீங்க?” சலிப்பும் கோவமுமாக கேட்பான்.

“நீ லவ் பண்ணு உனக்கே தெரியும் இதெல்லாம். லவ் பண்ணலைனா ஏதோ மிஸ் பண்றேன்னு அர்த்தம்டா, லவ் பண்ணு கர்ணா” அஷ்வின் குழைவாக சொல்லும் போது “போடா மடையா!” என சொல்லி சிரிப்பான் கர்ணா.

கர்ணாவுக்கு காதல் செய்யக் கூடாது என கட்டுப்பாடெல்லாம் இல்லை. அது தானாக வர வேண்டும் என்ற எண்ணம். சுற்றி உள்ளவர்கள் பேசிப் பேசியே என்னவோ அவனுக்கும் தனக்கான ஒரு பெண், கட்டுக்கடங்காத அன்பின் பரிமாற்றங்கள் என அழகான கனவுகள் பிறந்தன.

முகம் தெரியாத ஒரு பெண்ணின் கற்பனை உருவம் மீது வாஞ்சை பிறந்தது, யாரென தெரியாத அவளிடம் தன் மொத்த அன்பையும் கொட்டி விட இப்போதிலிருந்தே துளி துளியாக தன் காதலை சேகரித்து வைக்க ஆரம்பித்தான். அந்த தனக்கே தனக்கான பெண்ணுக்காக ஆசையாக ஆவலாக காத்திருந்தான் கர்ணா.

நான்காவது வருட படிப்பில் இருந்த போது செமஸ்டர் விடுமுறை வர கல்யாணியை நேரில் காண முடியாமல் தவித்துப் போனான் அஷ்வின். கல்லூரி செல்லும் போது வகுப்பு தாமதமாகிறது, சிறப்பு வகுப்பு, பேருந்து நெரிசல் என ஏதாவது காரணம் சொல்லி அஷ்வினுடன் நேரம் செலவு செய்யும் கல்யாணியால் விடுமுறையில் எதுவும் பொய் சொல்லி வெளிக் கிளம்ப முடியவில்லை.

அன்று கல்யாணி திருச்சி மலைக்கோட்டை பிள்ளையாரை தரிசிக்க தன் குடும்பத்தினரோடு வரப் போவதாக சொல்ல காய்ச்சலில் படுத்துக் கிடந்த அஷ்வின் எழுந்து விட்டான். மற்ற நேரமாக இருந்தால் கண்டு கொண்டிருக்க மாட்டார் வேணு, உடம்புக்கு சுகமில்லாத சமயத்தில் வெளியில் போக வேண்டாம் என கண்டிப்பாக கூற கர்ணாவின் உதவியை நாடினான் அஷ்வின்.

நண்பனின் பிறந்தநாள் விழா, கர்ணாவும் உடன் வருவான் என பொய் சொல்லி கர்ணாவோடு கிளம்பி விட்டான் அஷ்வின்.

“அப்படி என்னடா பொய் சொல்லி லவ் பண்ணனும்? வெட்கமா இல்லடா?” கடிந்து கொண்டான் கர்ணா.

“லவ் பண்ணி பாருடா கர்ணா…” இடையில் இருமிக் கொண்டே சொன்னான் அஷ்வின்.

“இன்னைக்கு உன்னோட இந்த நிலைல வாழ்வே மாயம் கமல் நினைவு வர்றார்” கிண்டலாக சொன்னான் கர்ணா.

“நாலு நாள் ஷேவ் பண்ணல, உடனே அவர் ஞாபகம் வந்திட்டாரா? கல்யாணிக்கு எப்பவும் பிரைட்டா இருக்கணும், நைட் போன்ல திட்ட போறா”

“எப்பவும் பிரைட்டா இருக்க நீ மேக்கப் போட்டுத்தான் சுத்தணும், உன் கல்யாணிக்கு ஃபீவர் வந்தாலும் பிரைட்டா இருப்பாங்களா?”

“அவ என் கண்ணுக்கு எப்பவும் அழகுதான்” வானத்தை பார்த்து அஷ்வின் கனவில் மிதக்க, “நீ மட்டும் வாய மூடிட்டு வரலை மவனே டெட் பாடி ஆக்கிடுவேன்” மிரட்டினான் கர்ணா.

மாலை நேரம் கல்யாணி, அவள் அம்மா, பெரியம்மா, மற்றும் தாமினியுடன் வந்திருந்தாள். உச்சிப் பிள்ளையாரை தரிசிக்க நால்வரும் படிக்கட்டுகளில் ஏற கர்ணாவும் அஷ்வினும் இயல்பாக யாரோ போல அவர்களுக்கு இடைவெளி கொடுத்து படிகளில் ஏறினார்கள்.

உடலில் அத்தனை சக்தி இல்லாமல் போனாலும் கல்யாணியின் கடைக்கண் பார்வைக்காக சிரித்த முகத்துடன் படி ஏறினான் அஷ்வின். இந்த நிலையில் இது தேவையா என நண்பன் மீது கோவம், எரிச்சல் எல்லாம் இருந்தாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் அவனுடன் நடந்தான் கர்ணா.

“மினி, மெல்ல ஏறு” என்ற வத்சலாவின் அதட்டலில்தான் கர்ணாவின் கவனம் அந்த மினியிடம் சென்றது.

அஷ்வினுக்காக கல்யாணி தன் அம்மா பெரியம்மாவுடன் இணைந்து மெதுவாக ஏறிக் கொண்டிருக்க தாமினி பாவாடை தாவணியில் அவர்களுக்கு முன்னால் துறு துறுவென ஏறிக் கொண்டிருந்தாள்.

அவள் அணிந்திருந்த இளஞ்சிவப்பு நிற பார்டர் கொண்ட மெரூன் வண்ண பட்டுப் பாவாடையில் மயில் தோகைகள் கண்ணை கவர்ந்தன. நடப்பதற்கு ஏதுவாக அவள் அந்த பட்டு பாவாடையை தூக்கிப் பிடித்திருக்க கணுக்காலில் கொலுசுகள் தெரிந்தன.

கர்ணா உற்றுப் பார்க்க கொலுசுக்கு போட்டியாக கணுக்கால் சுற்றி மருதாணி வைத்திருப்பாள் போலும், செக்க செவேல் என பாதத்திற்கு அழகு சேர்த்தது. அவளின் துள்ளலான நடையும் மருதாணி சிவப்பும் அவனை ஈர்த்தன.

முதுகு வரை மட்டுமே இருந்தாலும் நல்ல அடர்ந்த கூந்தலை பின்னலிட்டு அளவாக மல்லி வைத்திருந்தாள். பார்டர் நிறத்திலேயே அவள் அணிந்திருந்த இளஞ்சிவப்பு தாவணி காற்றில் பட படத்தது. கர்ணாவுக்கு அவள் முகத்தை காண வேண்டும் போல பெரிய உந்துதல். அஷ்வின் நல்ல உடல்நிலையில் இருந்திருந்தால் கண்டிப்பாக ஓடி சென்றிருப்பான் அவள் முகம் காண.

கர்ணாவையோ வேறு எதையுமோ கவனிக்கும் நிலையில் இல்லை அஷ்வின், அவன் செல்கள் அனைத்தும் கல்யாணியை மட்டுமே தொடர்ந்து கொண்டிருந்தன.

எத்தனையோ முறை கர்ணா மலைக்கோயில் வந்திருக்கிறான். மாலை நேரத்தின் இதமான காற்றை ரசித்து அங்கு நிலவும் நேர்மறை ஆற்றலை உள் வாங்கி ஒவ்வொரு படியையும் நிதானமாக கடந்து வருவான். வழியில் ஏதாவது குழந்தையை பார்த்தால் சிரித்திருக்கிறான், மற்றபடி என்றுமே வேறு சிந்தனைகள் கொண்டு நடந்தது இல்லை.

இன்று இப்படி மருதாணியால் சிவந்த இரு மென் பாதங்கள் தன்னையே மறக்க வைக்கும் என சற்று நேரம் முன்னர் கூட நினைத்திருக்க மாட்டான். ஆமாம் சட்டென்ற மாற்றம்தான். முகம் தெரியாத பெண் சுற்றம் மறந்த நிலையில் கர்ணாவை அவள் பின்னால் வர செய்திருந்தாள்.

தன் கற்பனைகளில் வந்த உருவமில்லாத பெண் இவளோ என்ற கேள்வியும் இவளாக இருக்க கூடாதா என்ற ஆசையும் கர்ணாவுக்குள் ஒருமித்து எழ அவள் நின்று திரும்பினாள்.

“டேய் கொஞ்சம் உட்கார்ந்து போலாம்” என அஷ்வின் சொல்ல கர்ணா நண்பனை பார்க்க அதற்குள் அவள் “வேகமா ஏறுங்க” என தன் குடும்பத்துக்கு குரல் கொடுத்து விட்டு செல்ல ஆரம்பித்து விட்டாள்.

அவளின் முகம் காண்பதை தடை செய்த நண்பன் மீது கோவம் எழுந்தாலும் அவனது சோர்வு வெளிக் காண்பிக்க முடியாமல் தடுக்க, “என்னடா செய்யுது?” என அக்கறையாக கேட்டான் கர்ணா.

“கொஞ்சம் டயர்ட், டூ மினிட்ஸ் உட்கார்ந்து போலாம்” என அஷ்வின் சொல்ல ஏக்கத்தோடு அங்கேயே நின்று விட்டான் கர்ணா.

தன் கண் பார்வையிலிருந்து அவள் தள்ளிப் போய் விடக்கூடாதே என தவிப்பாக கர்ணா பார்த்திருக்க அவளும் தன் குடும்பத்தினர் வருவதற்காக நின்று விட்டாள். கர்ணா நிம்மதியாக மூச்சு விட்டான்.

ஐந்து நிமிடங்களுக்கு பின் மீண்டும் படியேற ஆரம்பித்தனர். மருதாணி பாதங்களை ரசித்துக் கொண்டே மலையேறி விட்டான் கர்ணா. கல்யாணியின் அம்மாவும் பெரியம்மாவும் ஓய்வாக மலையில் அமர கல்யாணியும் அமர தாமினி விநாயகரை காண சென்று விட்டாள்.

தூரமாக கல்யாணியை பார்த்த வண்ணம் அஷ்வின் அமர்ந்து கொள்ள, “இவ்ளோ தூரம் வந்திட்டேன் பிள்ளையாரை பார்த்திட்டு வந்திடுறேன்” என சொல்லி கர்ணாவும் அவன் மினியை தேடிக் கொண்டு சென்றான்.

பிள்ளையார் என்னை பாராமல் அவளை பார்க்க செய்ய மாட்டேன் என அடமாக இருந்தார் போலும், மினியை காணாமல் கணபதியின் முகம் பார்த்து அவள் முகத்தை பார்க்கணும் என மானசீகமாக கர்ணா வேண்ட தம்பியின் காதலுக்கு உதவி செய்தவராகிற்றே, கர்ணாவின் வேண்டுதலுக்கும் செவி சாய்த்து விட்டார்.

Advertisement