Advertisement

மன்னன் நாவாயின் முகப்பில் இருந்த பாய் மரத்தின் பிடிக் கயிருக்கு அருகில் சென்று, தீவை நன்றாக கூர்ந்து கவனித்தான். சோழர்களின் நாவாய்கள் அரைவட்டமாக தீவை ஒட்டி நின்றிருக்க, “மாநாக்காவாரம்” துறைமுக கலங்கரை கோபுரத்தை கண்ட மன்னனின் முகம் மலர்ந்தது. நாவாய்களை தாண்டிய மணற்பரப்பில், துறைமுகம் போரினால் சேதமடைந்த காட்சி தெரிந்தது. ஒரு முனை அடர் காடுகளாகவும், பார்வையில் தெரியும் பகுதி காலியான நிலப்பகுதியாகவும் தெரிந்தது. அந்த பகுதியில் இருந்து புகை எழுதுவதை கண்ட சோழ வேந்தன் மகிழ்ச்சியுற்றான். பின் சஞ்சீவ சித்தரிடம் திரும்பிய அரசன், “வைத்தியரே நாவாய்களை பொறுமையாக துறைமுகத்தை நோக்கி, நகர சொல்லுங்கள். நங்கூரம் இறக்க உத்தரவிடுங்கள். பதட்டம் வேண்டாம். பொழுது புலரும் முன் நமக்கு செய்தி வரும் என கூறினார். சஞ்சீவ சித்தருக்கு ஆச்சரியம். “அரசன் மிகவும் மதிநுட்பம் உடையவன். நிச்சயமாக ஏதோ ஒரு அனுகூலமான விஷயத்தை, அரசன் நோக்கி இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். ஆனால் வேந்தனிடம் கேட்கவில்லை.


சோழப் பேரரசனின் நாவாயும், முன்னே நின்றிருந்த சோழக் கடற்படை நாவாய்களுக்குப் பின் பத்துக் கல் தொலைவில் நங்கூரம் இறக்கின.


அதே வேளையில் “மாநாக்காவாரம்” தீவின் வெட்டவெளி மணல் பரப்பில், சோழப் படைகள் கூடாரம் அமைத்திருந்தன. உணவுகள் சமைத்தும், நெருப்பு மூட்டி ஒளி உண்டாகியும், வீரர்கள் அந்த தீவின் அற்புதத் சூழலை அனுபவித்துக் கொண்டிருந்தனர். கடல் பரப்பை கண்காணித்துக் கொண்டிருந்த ஒரு வீரன் ஓடிவந்தான். இருள் பரவத் தொடங்கி இருந்த அந்த வேளையில், கையில் பந்தம் பிடித்தபடி வந்தவன்… இளங்குமரனிடம் புதிதாக நாவாய்கள் வந்திருப்பதை கூறினான்.குமரனும், சென்னியும் பரபரப்படைந்தனர். அதேவேளையில் நிதானம் கொண்ட இளங்குமரன் கலங்கரை விளக்கின் கோபுரத்தை நோக்கி விரைவாக சென்றான். வீரர்கள் இருவர் உடன் வர கலங்கரை விளக்கு கோபுரத்தில் ஏறியவன், கடல் பரப்பை உற்று நோக்கினான். ஒரு விஷயம் மட்டும் குமரனுக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்தது. நின்று கொண்டிருந்த புதிய நாவாய்களின் நடுவே, பிரதானமாக இருந்த நாவாய் ஒன்றின் முனைப் பகுதியில், புலி ஒன்று முகம் காட்டிக் கொண்டிருந்தது. வீரன் ஒருவனை பந்தம் எடுத்துக்கொண்டு மேலே வரக் கட்டளையிட்டான் இளங்குமரன். அவன் வந்ததும் அவனிடம் இருந்து பெற்றுக்கொண்ட பந்தத்தை நாவாய்களை நோக்கி ஆட்டினான். சற்று நேரத்திற்கு கடலில் இருந்த நாவாய்களில் எந்த நகர்வும் ஏற்படவில்லை. மீண்டும் ஒருமுறை இளங்குமரன் பந்தத்தை ஆட்டிக் காட்ட, இந்த முறை பிரதான நாவாயிலிருந்து, பதிலுக்கு தீப்பந்தம் ஆட்டப்பட்டது.


இளங்குமரன் மகிழ்விற்கு அளவேயில்லை. மளமளவென்று கோபுரத்திலிருந்து கீழே இறங்கியவன், சென்னியிடம் விவரத்தை பகிர்ந்தான். பின் சென்னி படைவீரர்களை நோக்கியும், இளங்குமரன் கடற்கரை நோக்கியும் பயணமாகினர். சற்று நேரத்திற்கெல்லாம் இளங்குமரன் ஒரு சிறு படகின் மீது பயணப்பட்டு சோழ வேந்தனின் நாவாயை அடைந்தான். சோழப் படை முகாமுக்கு திரும்பி இருந்த சென்னிக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. தீவுவாசிகள் இருவர் அங்கே நின்று கொண்டிருந்தனர். அவர்களின் முகத்தில் கலவரம் தெரிந்தது. சென்னியிடம் அவர்கள் இளங்குமரனை காண வேண்டும் என்று கூறி, சைகை செய்தனர். இளங்குமரன் நாவாய்க்கு சென்றிருப்பதை சைகை மூலம் காட்டி தெரிவிக்க முயன்றான் சென்னி.


அதற்குள் வந்த இருவரில் ஒருவன் சட்டென்று தரையில் விழுந்தான். இருமுறை உடல் வெட்டியவன் உயிர் பிறந்தது. மற்றொரு தீவுவாசிக்கு கண்களில் கர்ணகடூரமான பயம் தெரிவதை சென்னி உணர்ந்தான். உடனே அந்த தீவுவாசியை சமாதானப்படுத்திய சென்னியை அவன் நச்சரிக்கத் தொடங்கினான். இளங்குமரனை மீண்டும் மீண்டும் கேட்டான். சென்னி எவ்வளவோ முறை நாவாய்களை காட்டி சைகை செய்ததை அவன் புரிந்து கொள்ளவில்லை. அதற்குள் சோழ வீரர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. தீவுவாசி ஒருவன் இருந்தது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
சென்னி வீரர்களில் ஒருவனிடம் கலங்கரை கோபுரம் சென்று, பந்த ஒளி மூலம் நாவாய் நோக்கி சைகை காட்ட கூறினான். அவன் ஓடிச்சென்று கலங்கரை விளக்கின் மீது ஏறி, பந்தம் மூலம் சைகை காட்டினான்.


சோழ சக்கரவர்த்தியுடன் உரையாடிக் கொண்டிருந்த இளங் குமரன், நடந்த விவரங்களை பூரணமாக சக்ரவர்த்தியிடம் எடுத்து கூறியிருந்தான். சக்கரவர்த்தி எதேச்சையாக கலங்கரை கோபுரத்தின் மீது தெரிந்த ஒளி சைகையை கவனித்தார். குமரா…!!! அங்கே பார்!! கலங்கரை கோபுரத்திலிருந்து சைகை ஒளி தெரிகின்றது, என்றார் சோழ சக்கரவர்த்தி. திரும்பி கலங்கரை கோபுரத்தை நோக்கிய குமரனுக்கு, சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது. எனினும் சென்னிதான் தன்னை அழைக்கின்றான் என்பதை உணர்ந்து கொண்டவன், சக்கரவர்த்தியிடம்… சென்னி அவசரமாக அழைப்பதாக உணர்கின்றேன் என்றான்.
சரி வா போகலாம் என்றார் சக்கரவர்த்தி. மன்னர் மன்னா!!!.. முதலில் நான் சென்று விபரம் அறிந்து தங்களுக்கு தெரிவிக்கின்றேன். பிறகு நீங்கள் வருவதே நலமாக இருக்கும் என்றான் இளங்குமரன். இராஜேந்திரர் இளங்குமரனை நோக்கி… குமரா ஆபத்தை சேர்ந்தே எதிர்கொள்வோம். பாதகமில்லை!!!.. நம் படைகள் தான் நிலப்பரப்பில் உள்ளனவே!!?? என சமாதானம் கூறியவர், உடனே புறப்பட ஆவண செய்யுமாறு உத்தரவிட்டார்.

அடுத்த சில நாழிகைகளில்… இளங்குமரன், சக்கரவர்த்தி, மற்றும் வைத்தியருடன் புறப்பட்ட படகு, வேகமாக கரையை ஒட்டி இருந்த மணல் திட்டை எட்டியது. மூவரும் வேகமாக படை முகாமை நோக்கி நடந்தனர். அதற்குள் முகாமிலிருந்த இரண்டாவது தீவுவாசியும், மூர்ச்சையடைந்து தரையில் வீழ்ந்தான். இதனிடையே இளங்குமரன், சக்கரவர்த்தி வைத்தியர் மூவரும் முகாமை எட்டினர். சென்னி அரசரை வணங்க, சோழப் படை வீரர்கள் தலைதாழ்த்தி பேரரசருக்கு வணக்கம் செலுத்தினர். சென்னி நடந்தவற்றை முழுமையாக மூவரிடமும் விளக்கினான். வைத்தியர் காலம் தாழ்த்தாது விழுந்து கிடந்தவர்களை பரிசோதித்தார். பின் உதட்டைப் பிதுக்கி கதர் இருவரும் இறந்து விட்டதை உறுதி படுத்தினார்.


இளங்குமரன் கானகத்தின் முகப்பை அடைந்து, அங்கிருந்த படியே கானகத்தை நோக்கி சமிஞ்சை ஒலி ஒன்றை எழுப்பினான். குரல் எழுப்பிய சில நாழிகைகள் கழித்து பதில் வந்தது. ஒலியின் தன்மையை கொண்டு தகவலை உணர்ந்து கொண்டவன், மீண்டும் சமிஞ்சை செய்ய, சிலர் ஓடி வரும் ஒலியும், தீ எரியும் ஒளியும் தெரிந்தது. மூன்று தீவுவாசிகள் பெரியக் கட்டைகளை கைகளில் ஏந்தி ஓடி வந்தனர். அவர்கள் மூவருடைய கட்டைகளும் பாதி எரிந்தும், எரியாமலும் இருந்தன. வந்தவர்கள் குமரனிடம் சைகையில் ஏதோ கூறினார்கள். பதிலுக்கு இளங்குமரன், பேரரசரையும், அருகில் நின்ற வைத்தியரையும் காட்டி குறிப்பளித்தான். அவர்கள் மூவரும் தலையசைக்க, சென்னியை அங்கேயே நிற்க கூறிவிட்டு…இளங்குமரன், சக்கரவர்த்தி, வைத்தியர் மூவரும் அந்த கானகவாசிகளுடன் புறப்பட்டனர். கையில் வைத்திருந்த அணையும் நிலையில் இருந்த கட்டைகளில், மூவரும் இடுப்பில் இருந்து ஒரு பொடியை எடுத்துத் தூவினர். உடனே நெருப்பு பற்றி எரிய தொடங்கியது. இராஜேந்திரர் வியந்து போனார். கானகவாசிகளின் சைகை மொழியும், அதை இளங்குமரன் கையாண்ட விதம் குறித்தும், கானகவாசிகளின் தீப்பந்த யுக்தியும் அரசருக்கும், வைத்தியருக்கும் பெரும் விந்தையாக இருந்தது.


அரை நாழிகை வேகமான பயணத்தில், அவர்கள் அந்த தீவுவாசிகளின் கிராமத்தை அடைந்தனர். அங்கே பலர் இறந்து கிடந்தனர். பலர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். மூவருக்கும் பெரும் அதிர்ச்சி தொற்றிக்கொண்டது. அதற்குள் தீவுவாசிகளின் தலைவன் இளங்குமரனை எதிர்கொண்டு வரவேற்றான்.
அவனிடம் சைகைளிலும், குரல் மூலமும் தகவல்களை தலைவன் கூற, அதை அரசரிடமும், வைத்தியரிடமும் இளங்குமரன் விளக்கினான்.


நேற்று இரவிலிருந்து இவர்களில் பலருக்கும் காய்ச்சல் ஏற்பட்டதாகவும், இவர்கள் கொத்துக் கொத்தாக இறக்க தொடங்கியதாகவும் தலைவன் கூறுகிறான். ஏதோ கடவுள் குற்றம் ஏற்பட்டு விட்டதாக இவர்கள் கருதுகின்றனர்…. என்றான் இளங்குமரன். கடவுள் குற்றமா? என்ற இராஜேந்திரர், அப்படி தவறு என்ன நடந்தது? என விசாரி என்றார். அரசரும் இளங்குமரனும், அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த வேளையில் சஞ்சீவ சித்தர், அவர்களில் சிலரை நாடி பிடித்து சோதித்து இருந்தார். சட்டென்று முகம் மாறியவர். பேரரசே இவர்களின் நோய்க்கு தெய்வ கோபம் காரணம் அல்ல.!!!???.. நாமே காரணம்!!! என மெல்லிய குரலில் கூறினார்.


சக்கரவர்த்தி அதிர்ச்சியும் கோபமும் கலந்த குரலில் கேட்டார், என்ன சொல்கிறீர் வைத்தியரே? நாம் எவ்வாறு இவர்களுக்கு ஏற்பட்ட நோய்க்கு காரணமாக முடியும்? என்றார்.
“முடியும் அரசே இவர்கள் பிறந்தது முதல் இறக்கும் வரை இயற்கையோடு வாழ்ந்து இயற்கையின் சூழலுக்கு ஏற்ப பழகியவர்கள். இவர்களுக்கு வெளிப்பகுதியில் இருந்து வருபவர்களிடம் உள்ள உடல் எதிர்ப்பு சக்தி இருக்காது. இவர்களை நம்முடைய சுவாச சூடு கூட எளிதாக நோய்வாய்ப்பட வைத்துவிடும். மேலும் நம்முடைய உணவுப் பழக்கமும், நாம் உபயோகிக்கும் உணவு பொருட்களிலுள்ள வாசமும் கூட விஷமாக தாக்கக்கூடும். இவர்களுக்கு ஏற்பட்டுள்ள விஷக்காய்ச்சல் உயிரிழப்பும் அதுவே என உறுதிபடக் கூறினார். இதற்கு மருந்து எதுவும் கொடுத்து குணப்படுத்த இயலாதா வைத்தியரே!!?? என்றார் பேரரசர்.


இல்லை அரசே நாம் உபயோகிக்கும் எந்த மருந்தையும் இவர்களுக்கு கொடுக்க இயலாது. காரமும்,புளிப்பும், கசப்பும் கலந்திருக்கும் நம் மருந்துகள் மேலும் இவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். நம்முடைய மருந்துகளும், வைத்திய முறைகளும் இவர்களுக்கு குணம் தர இயலாது என்றார்… சஞ்சீவ சித்தர்.


வைத்தியரே என் கண் முன்னே ஒரு தவறும் செய்யாத இந்த பூர்வகுடி மக்கள் கொத்துக்கொத்தாக இறப்பதை எப்படி காண இயலும். நம்முடைய படைகளை உடனடியாக விலக்கிக் கொள்ள செய்துவிட்டால், இவர்களுக்கு குணம் ஏற்படும் என்கிறீர்கள். அதை இப்போதே செயல் படுத்திவிடலாம். ஆனால் உயிருக்கு போராடுபவர்களையும், உயிரோடு இருப்பவர்களையும் காப்பாற்ற வழி ஏதேனும் கண்டுபிடியுங்கள் என்றார். சக்கரவர்த்தி இதைக் கூறியபோது “குடிமக்களை காக்கத் துடிக்கும் அரசனாக மட்டுமல்லாது, ஒரு தகப்பனாகவே மாறியிருந்தார். அரசர் அவரின் விழிகளில் கட்டி நின்ற கண்ணீரை” இளங்குமரனும் வைத்தியரும் காணத் தவறவில்லை.


வைத்தியர் சிறிது நேரம் தீவிரமாக யோசித்த படியே சிறிது தூரம் நடந்தார். ஒரு கானகவாசி சிறுவன், கையில் வைத்திருந்த வில்லையும், கல்போன்ற பொருளையும், கண்ட போது அவருடைய முகத்தில் நம்பிக்கை ரேகை பரவத் தொடங்கியது. வேகமாக இளங்குமரனிடம் திரும்பியவர், குமரா பூர்வகுடி தலைவனிடம் அதோ அந்த சிறுவன் வைத்திருக்கும் வில் செய்யப்பட்ட மரத்தின் இலைகளையும், அவன் கையில் வைத்துள்ள உருண்டை பற்றியம் விசாரி. அவை இரண்டும் எனக்கு உடனே வேண்டும். மேலும் மலைத்தேன் இருக்குமெனில் அதையும் கொண்டு வர சொல் என்றார். இளங்குமரன் பூர்வகுடி தலைவனிடம் சைகையில் தகவல்களை கேட்டான். அவனும் வைத்தியர் கூறியவற்றை கொண்டுவர, மற்றவர்களை அனுப்பினான்.


சற்று நேரத்திற்கெல்லாம் கானகத்தின் உள்ளே சென்ற பூர்வகுடிகள் வைத்தியர் குறிப்பிட்டிருந்த இலைகளையும் பிசின் போன்ற அந்த உருண்டையையும் தேனையும் கொண்டுவந்து வைத்தியர் முன் வைத்தனர். அவற்றைப் பெற்றுக்கொண்ட வைத்தியர் அருகில் இருந்த ஒரு பாறை குழிக்குள், மலை வேம்பு இலைகளை இட்டு, ஒரு கல்லால் அரைக்கத் தொடங்கினார். வைத்தியர் இலைகளை அரைத்ததை கண்ட அந்த பூர்வகுடிப் பெண்கள் வீடுகளுக்குள் சென்று பெரிய மரத்துண்டுகளை கொண்டு வந்தனர். அதன் நடுவே ஒரு குழி இருந்தது. வைத்தியர் செய்வது போன்றே அவர்களும் இலைகளை இடித்து அறைந்து வைத்தியருக்கு உதவினர். அவர்களின் அரவை அனைத்தையும் வைத்தியர் பதம் பார்த்தார். பின் அவற்றை ஒன்றாக ஒரு மறக்குடுவையில் சேகரித்தார் அதிலுள்ள சாரு தெளியும் வரை வைத்தவர், பிசின் கட்டிகளை பாறையின் மீது வைத்து பொடித்தார். அருகில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் இருந்து கனல் துண்டுகள் சிலவற்றை தனியே பிரித்தார். அவற்றின் மீது அந்த பிசின் பொடியையும் மலை வேம்பு தளைகள் சிலவற்றையும் ஒன்றாக போட்டார். அதிலிருந்து எழும்பிய புகை கானகம் முழுவதும் பரவி மணம் வீசியது.

சற்று அதிகமாக மீண்டும் மீண்டும் அந்த புகையை போடுமாறு கூறியவர், இளங்குமரன் உதவியுடன் அந்த மலைவேம்பு சாறை வடிகட்டி, அதில் தேனை கலந்து ஒவ்வொருவரையாக அழைத்து குடிக்க கொடுத்தார்.


அதற்குள் கிழக்கு வானில் சூரியன் உதயத்தை தொடங்கியிருந்தான். மருந்தை குடித்து, நறுமண புகையை சுவாசித்தவர்களுக்கு, மேற்கொண்டு காய்ச்சலோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. பூர்வகுடிகளின் தலைவன் பெருமகிழ்ச்சி கொண்டான். விடிந்த பின்பு தான் இராஜேந்திர அரசருக்கும், வைத்தியருக்கும் தாங்கள் ஒரு சொர்க்க புரியில் நிற்பது தெரிந்தது. சுற்றியிருந்த ஒவ்வொரு மரங்களும், செடிகளும் சுனை நீரும், மூங்கிலும் அவற்றை வெட்டி அவர்கள் சேகரித்து வைத்திருந்த அரிசியும், சாம்பிராணி மரங்களும், அவற்றில் வடிந்து கட்டி நின்ற பிசினும், மரங்களுக்கு இடையே கட்டப்பட்டிருந்த தேன்கூடுகளும், இராஜேந்திரரை மலைக்கச் செய்தது. வைத்தியருக்கும் அது ஒரு சஞ்சீவி மலை காடாக காட்சியளித்தது.


விடியும் வரை அங்கிருந்த பாறை மேட்டில் அமர்ந்து இருந்த சோழ சக்ரவர்த்தியை பூர்வகுடி தலைவனும், அவன் மக்களும் வணங்கி நின்றனர். தங்கள் உயிர் காக்க வந்த கடவுளாக பாவித்தனர். ஒரு பெரிய “முத்தை” சோழ சக்கரவர்த்திகளுக்கு பரிசாக அளித்தனர். சக்கரவர்த்தி அந்த மக்களின் அன்பில் திக்கு முக்காடிப் போனார்.


இளங்குமரனை அழைத்த பூர்வகுடி மக்கள் தலைவன் சோழ சக்கரவர்த்தியிடம் கூறுமாறு சில தகவல்களை கூறினான். அது என்னவென்றால்,


“இந்தக் கடவுளை போன்ற மனிதருக்கு நாங்களும் எங்கள் தலைமுறைகளும் கட்டுப்பட்டு இருப்போம். இந்த கடல் பரப்பில் நிகழும் அத்தனை விபரங்களையும் ஒற்றறிந்து அவருக்கு அனுப்பி வைப்போம். எந்த சூழ்நிலையிலும் சோழ சக்கரவர்த்தி, இவரை சார்ந்தவர் தவிர்த்த வெளியாட்களை இந்த மண்ணில் அனுமதியோம் என்றும், எங்கள் உயிர் உள்ளவரை எங்கள் விசுவாசம் மாறாது”


என்பது தான் அந்த தகவல். இதைக் கூறிய பின் தலைவன் முதல், குழந்தை வரை தங்கள் கைகளை கிழித்து சோழ சக்கரவர்த்தியின் நெற்றியில் திலகம் இட்டு சத்தியம் செய்தனர். சக்கரவர்த்தி மெய் சிலிர்த்து நின்றார்.
இளங்குமரனை அழைத்தவர், உடனே சோழப் படைகள் தாயகம் திரும்ப உத்தரவிட்டார். அந்த நாளின் உச்சி வேளையில் சோழப் படைகள் பெரியநாக்காவாரம் என்னும் அந்த தீவை விட்டு வெளியேறின.


நாவாயின் முகப்பில் நின்றிருந்த சக்கரவர்த்தி திரும்பிப் பார்த்தார். கலங்கரை கோபுரத்தின் மீது புலிக்கொடி பறந்துகொண்டிருந்தது. இளங்குமரனை நோக்கி திரும்பியவர், குமரா நீ …இந்த தீவு மக்களின் அன்பை எனக்குப் பெற்றுக்கொடுத்து இருக்கின்றாய். “அவர்கள் நிலப்பரப்பை அவர்களிடமே நாம் ஒப்படைத்து விட்டோம். இதில் எனக்கு பெரிய மனத்திருப்தி. நம்மைப் போன்ற மனிதர்கள், மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசைகளால் மற்றவர்களின் உயிரை அவருக்கே தெரியாமல் குடிப்பவர்கள் ஆனோம்”. “நம் மூச்சுக் காற்றுக் கூட நஞ்சு” என்பதை இந்த பூர்வ குடிகள் எனக்கு கற்றுத் தந்து விட்டனர். “இந்த ஒரு செயல் நிறைவேறவோ என்னவோ பதினைந்து திங்கள் கடார பகுதியில் போரிட்டோம் போலிருக்கிறது ஆனால் முடிவு சுகமாக அமைந்தது” என்ற இராஜேந்திர சக்கரவர்த்தி இளங்குமரனை ஆரத்தழுவிக் கொண்டார்.

முற்றும்.


நாவாய்கள் நாகை துறைமுகம் நோக்கி விரைவாக விரைந்தன. “இந்த அன்பின் பிணைப்பு, இன்றும் தொடர்கிறது. “பெரிய நாக்காவாரம்” தீவின் முனைப் பகுதியில் இன்றும் அந்த கலங்கரை கோபுரம் கம்பீரமாக நிற்கின்றது. தமிழனின் அரசு இங்கு வரை வியாபித்திருந்தது என்பதனையும், இந்திய தேசத்தின் தென் எல்லை குமரி அல்ல, இந்திரா முனை என்னும் உண்மையையும், இந்த கலங்கரை கோபுரம் உரக்க உலகிற்கு சொல்லிக் கொண்டிருக்கிறது”.

மூலங்கள்

  1. திரு. மா. இராசமாணிக்கனார் எழுதிய சோழர் வரலாறு நூல்- பக்கம் 107
    மாநாக்காவாரம் ஸ்ரீவிசய பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதற்கான தகவல்.
  2. திரு. அ. இராஜராஜ சோழன் அவர்கள் எழுதிய
    “வரலாற்றுப் பக்கங்களில் மட்டுமே மணக்கும் கங்கை கொண்ட சோழபுரம்” நூலில் இருந்து
    @. ஸ்ரீவிசயத்தின் அரசன் – விஜயோத் துங்க வர்மன் என்னும் ஆதாரம்
    @. பக்கம் 20 முதல் 22 முடிய.
    @. சோழர்கள் கடலின் தோழர்கள் என்னும் தகவல் பக்கம் 31 முதல் 34 வரை
  3. திரு. மா. இராசமாணிக்கனார் எழுதிய இராஜேந்திர சோழன் நூலிலிருந்து
    @. கடாரப் போரும், மாநாக்காவாரம் குறித்த தகவலும் பக்கம் 62 முதல் 64 வரை
  4. இராஜேந்திரன் செய்திக்கோவை நூலிலிருந்து
    @. இராஜேந்திரன் மெய்கீர்த்தி –( 46-50), (61-65)
    @. கடலில் வென்ற நாடுகள் – காரணம் – பக்கம் 9
  5. திரு.இராஜசேகர தங்கமணி எழுதிய முதலாம் இராசேந்திர சோழன் நூலிலிருந்து.
    @. மாநாக்காவார தீவின் வெற்றி- பக்கம் 143-161 வரை குறிப்பாக பக்கம் 157.
  6. www.vaettoli.blogspot.com/2014/08/blog-post_27.html
    @.கி.பி. 1024 முதல் மாநாக்காவாரம் தீவுகளில் குடியேற்றம்
    @. கி.பி. 1066 -ல் இராஜேந்திரரின் இரண்டாம் வருகை
    @. “கங்கா நதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர் கோன் என்னும் கல்வெட்டு தூண் நங்கௌரி தீவில் இன்றும் உள்ளது.
    @. மாநாக்காவாரம் என்பதே இன்றைய கிரேட் நிக்கோபார் தீவுகள்
    @. நாக தீபம் என்பதே இன்றைய நங்கௌரி தீவு. இது லிட்டில் நிக்கோபார் தீவில் உள்ளது.
    @. காரதீபம் என்பதே கார் நிக்கோபார் தீவுகள்.
    @ நக்க சாரணர் என்றும், நாகர் மலை என்றும் மணிமேகலையில் குறிப்புள்ளது.

Advertisement