Advertisement

கலங்கரை கோபுரம்
(அன்பின் நினைவுச் சின்னம்)
(வரலாற்று சிறுகதை)
எழுத்தாளர் : பாரதிப்பிரியன்

கதாபாத்திரங்கள் அறிமுகம்
இளங்குமரன் – சோழ கடற்படை உப தளபதி
இராஜேந்திர சோழர் – சோழ சக்கரவர்த்தி
வேல் சென்னி – இளங்குமரன் தோழன்
சஞ்சீவ சித்தர் – சோழ கடற்படை தலைமை வைத்தியர்
பூர்வ குடிகள் தலைவன்
வானவன் மாதேவி – சோழ பட்டத்து அரசி
தேவயாழினி – இளங்குமரன் மனைவி
செந்தமிழ் செல்வி – இளங்குமரன் மகள்

கதைக்களம் : “சோழக் கடற்படை காடாரத்தை வென்ற பின் தாயகம் திரும்பும் வேளையில் நிகழ்வதாக” கற்பனை படைப்பு.
காலம்: கி.பி. 1024 இராஜேந்திர சோழ சக்கரவர்த்தி ஆட்சி காலம்
கதை நடைபெறும் இடம் : வங்கக்கடலில் கடாரம் தொடங்கி மாநாக்காவாரம் வரை.

கி.பி 1024 –ம் ஆண்டின், “ஒரு அந்தி சாயும் அற்புதமான பொழுதில், அலைகடல் பெருவெளியில் ஆர்ப்பரித்தபடி பயணிக்கும் நாவாய்கள்”….. ஒவ்வொரு நாவாயின் மேல் தளத்திலும் மனிதர்களின் உற்சாகக் குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்க, காற்றின் வேகத்தில் கடல் பரப்பை கீறிப் பிளந்தபடி, மேற்கு கரை நோக்கி பயணப்பட்டன புலிக்கொடி தாங்கிய மரக்கலன்கள். இருநூறுக்கும் மேற்பட்ட நாவாய்களின் நடுவே, சற்று பெரிய வடிவில் பயணித்துக்கொண்டிருந்த நாவாயின், பாய்மர உச்சியில் இருந்த மரத்தாலான கண்காணிப்பு மடத்தில், “கடலரசி பிரவாகித்து வெளியிட்ட தென்றலில்” லயித்திருந்தான், “இளங்குமரன்”…. சோழர் கடற்படையின் உபதலைவன், வாணர்குல வீரர் வந்தியத்தேவனின் சகோதரி, ஈன்றெடுத்த செல்வமகன். வீரத்தின் பெருமையை விழுப்புண்களாக உடலில் தாங்கி, உயரத்திலும் உடலமைப்பிலும், தன் மாமாவை அப்படியே அச்சில் வார்த்தவன்.


சோழத்தின் மீது தீராத காதலும், தெவிட்டாத பக்தியும் கொண்டவன். பேரரசர் இராஜேந்திரர், கடார மன்னன் மீது போர் தொடுக்க தீர்மானித்தபோது, வலுவில் அவரிடம் சென்று கடற்படைத் தளபதி பொறுப்பை வேண்டி பெற்றவன். பதினைந்து திங்கள்கள் கடலிலும், கரையிலும் கடந்து போயிருந்த நிலையில், தாயகம் நோக்கி பயணிப்பதால் தன்னிலை மறந்து, கண்காணிப்பு மாடத்தின் மீதிருந்து…. தாய்மண்ணை எதிர் நோக்கி நின்றிருந்தான்.


“வான்மகள் தன் நெற்றியில் இட்ட குங்குமமாக கதிரவன் மேற்குக் கடலில் தகித்துக் கொண்டிருந்தான். சுற்றிலும் சிறிதும் பெரிதுமாக தெரிந்த சிறு,பெரும் தீவுகள். நீலமும், கருப்பும், பச்சையும் கலந்து கிழக்கு கடலும், கருப்பும் சிவப்பும், மஞ்சளும் கலந்து மேற்கு கடலும், காட்டிய வர்ண மாயாஜாலத்தில் காண்போரின் கண்கள் அகத்திரையில் ஆயிரம் ஓவியங்கள் தீட்டும். அத்தகைய காட்சிகளை உள்வாங்கியபடி பயணித்துக்கொண்டிருந்த “இளங்குமரன்” இதயம், நாகை துறைமுகத்தை எட்டும் வேளையை எண்ணி தவித்தது”. “செந்தமிழ்ச்செல்வி” -யை எண்ணிய இளங்குமரன் உள்ளத்தில், கோடி மலர் மொட்டுகள் வெடித்துப் பூத்தன. “ஸ்ரீவிசயத்” தின் தங்கமணல் கடற்கரைகள் போன்ற தேகம், “ஜாம்பி” கடல் பரப்பில் துள்ளிக்குதிக்கும் மீன்களென கண்கள், “சுமத்ரா” தீவுகளின் கானகத்தில் மருண்டு விழிக்கும் மான்களின் குணமொத்த முகபாவங்கள்….. இத்தனைக்கும் சொந்தக்காரி தான் “செந்தமிழ் செல்வி.” இளங்குமரன், தேவயாழினி பெற்றெடுத்த இரு வயதுப் பேரழகி. அந்த பேரழகியின் மீதான பாசத்தில் நின்றிருந்த இளங்குமரனை….

ஒரு குரல் அழைக்க, மாடத்தில் இருந்து கீழே நோக்கினான். கீழே நின்றிருந் வேல் சென்னி, கீழே வரச்சொல்லி சைகை காட்டினான். அவனிடம் தெரிந்த பரபரப்பை கண்டு துணுக்குற்ற இளங்குமரன், வேகமாக கீழே இறங்கிவந்தான்.


சொல் சென்னி, என்ன விஷயம்? என்றான் இளங்குமரன்.
குமரா!…. கடாரத்திலிருந்து மூன்று தினங்களுக்கு முன் புறப்பட்ட நம் நாவாய்களில் ஐந்து, இலங்கைக்கு முன்புள்ள பகுதியில் தாக்கப்பட்டதாக தகவல். முன்னே செல்லும் நம் நாவாய்க்கு, வணிக கலனில் வந்தவர்கள் தகவல் கூறியுள்ளனர். அந்த நாவாயின் தலைவன் அனுப்பிய செய்தி, அடுத்தடுத்த நாவாய்கள் மூலம் தற்போது என்னை எட்டியது என்றான்.


என்ன சொல்கிறாய் சென்னி?….கிழக்குக் கடலில் நமக்கு எதிரிகளே கிடையாது. நாகை முதல் கடாரம் வரையுள்ள மொத்த கடல்வெளியும் இப்போது, நம்முடையது அல்லவா? என்றான் இளங்குமரன்.


நீ சொல்வது சரிதான்… ஆனால் செய்தியை நீயே வந்து பார்! என்றான் சென்னி.


இருவரும் நாவாயின் முகப்பிற்கு சென்றனர். முகப்பிலிருந்து முன்னே சென்ற நாவாய் மிகத் தெளிவாக தெரிந்தது. அதன் பின்புறத்தில் ஒரு வீரன் நின்று கொண்டிருந்தான். அவன் விரித்துப் பிடித்திருந்த பெரிய துணியில், எழுத்துக்கள் தெளிவாக தெரிந்தன. “இலங்கையின் கடற்பரப்பிலிருந்து ஆயிரம் கடல்மைல் தொலைவிலுள்ள, “மாநாக்காவாரம்” தீவுப்பகுதியில் பயணித்த, கடற்படை நாவாய்கள் தாக்கப்பட்டன. தீவிலிருந்து பாய்ந்து வந்த அம்புகளாலும், இனம் காணவியலா ஆயுதங்களாலும், நாவாயில் இருந்த அனைவரும் மாண்டனர். அபாயகரமான அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டாம்” தகவல் தெளிவாக இருந்தது.
இளங்குமரன் மனதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. சென்னி…. பேரரசர் நமக்கு தந்த கடல் வரைபடத்தை எடுத்து வா!!??… என்றான் யோசித்தபடியே.


ஆகட்டும் குமரா!… என்ற சென்னி மளமளவென நாவாயின் கீழ் தளத்திற்குச் சென்றான். சற்று நேரத்திற்கெல்லாம் திரும்பி வந்த சென்னியின் கையில், பெரிய வரைபட சுருள் இருந்தது.


நாவாயின் மேற்பரப்பில் இருந்த மேஜை போன்ற தளத்தில், சென்னியும் இளங்குமரனும், வரைபடத்தை விரித்து பிடித்தனர். கடாரம், ஸ்ரீவிசயம் என்று தீவுகளின் பெயர்களையும், வரைபட குறிப்புகளையும் தொட்டு தொட்டு உச்சரித்து வந்த இளங்குமரன் கண்கள், ஆச்சரியத்தில் விரிந்தன. உதடுகள் மெல்லிய அதிர்வுடன் உதிர்த்த வார்த்தைகள்….. “மாநாக்காவாரம்”!!!. இளங்குமரனும், சென்னியும் சற்று துடுக்குற்றனர்.


சென்னியின் முகம் வெளிறிப் போயிருந்தது. பரபரப்புடன் மீண்டும் நாவாயின் கீழ்த்தளம் சென்றவன், ஒரு பெரிய மர பெட்டியை சுமந்து வந்தான். பெட்டியை திறந்து உள்ளிருந்த குறிப்புகள் அடங்கிய ஓலைச்சுவடிகளை, ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து வந்தவன்… சிகப்பு துணியில் சுற்றி இருந்த ஒரு ஓலைச் சுவடியை எடுத்தான். துணியை விலக்கி ஓலைச்சுவடியை இளங்குமரனிடம் கொடுத்தான். அந்த சுவடியை பிரித்து ஒவ்வொன்றாக பார்த்து வர, பதினைந்தாவது ஓலையில் குறிப்பு இருந்தது. அதை வாசித்தான் இளங்குமரன்.


சென்னி….நம் வெற்றிக் கொண்டாட்டம் முழுமையடையவில்லை. நம் பயணம் முடிந்து விட்டதாக நாம் நினைப்பது தவறு. இன்னும் ஒரு நிலப்பரப்பு மிச்சமுள்ளது. உடனே நாம் செயல்பட வேண்டும் என்றான் இளங்குமரன்.
“நம் கடல்கோள் ஆய்வாளர்களும், வணிகர்களும் கொடுத்த குறிப்புகளை எடுத்து வா!!!… அதில் இந்த நிலப்பரப்பு குறித்து இருக்கும் தகவல்களையும், குறிப்புகளையும் நாம் ஆராய வேண்டும் என்றான் இளங்குமரன்.


“ஐநூறுக்கும் மேற்பட்ட தீபங்களின் கூட்டம்!..ஸ்ரீவிசயத்தின் வாணிபத் துறைமுகம்…..!!! “பெரிய மாநாக்காவாரம்” கருத்த தேகத்தான் வீசும் நஞ்சின் கணைகள் உயிர்குடிக்கும்…!!???.. தேன் பாயும் தீவகம்…. “பெரிய மாநாக்காவாரம்” தவிர்ப்பீர்…..”


குறிப்பை வாசித்த இளங்குமரன் உச்சி முடிகள் குத்திட்டு நின்றன. சென்னியின் முகத்தில் ஈயாடவில்லை. சிறிது நேரம் பிரமை பிடித்த நிலை நீடித்தது. முதலில் மவுனம் கலைத்த இளங்குமரன், சிறிது தைரியத்துடன் கூறினான்.


“சென்னி முதல் நாவாய் தொடங்கி இறுதி நாவாய் வரை தகவல் அனுப்பு. காற்றின் வேகம்,… இரண்டாம் ஜாமத்திற்க்குப் பிறகு குறையும். அப்போது பாய்களை சுருட்டி விடவும், துடுப்பு வலித்து நாவாய்களை செலுத்தவும் உத்தரவிடு. அனைத்து நாவாய்களுக்கும் முன் நம் நாவாய் செல்லட்டும். நம் உத்தரவுப்படி மற்ற நாவாய்கள் செயல்பட வேண்டும்” என்றான் தீர்க்கமாக இளங்குமரன்.


சென்னி உத்தரவுகளை நிறைவேற்ற விரைந்தான். முதலில் சுக்கானை பிடித்திருந்த மாலுமி வீரனிடம், “நம் நாவாயை அனைத்து நாவாய்களுக்கும் முன்னே செலுத்து” என உத்தரவிட்டான்.


சென்னி நாம் செல்லும் திசையில் இருந்து, இடதுபுறமாக, வடமேற்கு திசையில் நாவாயை செலுத்த சொல். துடுப்பு வலிப்போரில் பாதிப் பேர் துடுப்பு வலித்தால் போதும். இவ்வாறு பயணம் தொடரும் பட்சத்தில் நாளை உச்சிப் பொழுது கடக்கும் போது, நாம் “மாநாக்காவரம்” அருகில் முப்பது கடற்கல் தொலைவில் இருப்போம். சூழ்நிலைகளை உறுதிப்படுத்திக்கொண்டு, செய்ய வேண்டியதை பிறகு திட்டமிடலாம் என்று முடித்தான் இளங்குமரன்.
அதன்படி மாலுமியிடம் உத்தரவுகளை பிறப்பிக்க சென்னி சென்றான்.


அதற்குள் நூறு முறையேனும் இளங்குமரன் அந்த ஓலைச்சுவடியை படித்திருந்தான். அவனது இதயமும், மூளையும் ஒருசேர பயணித்து, பல விஷயங்களை அவனுக்கு படிப்பித்து தந்திருந்தன.


சென்னியும் இளங்குமரனும், சினேகிதர்கள். இருபத்தைந்து ஆண்டுகால நட்பு உடையவர்கள். இளங்குமரன் இதயமாக செயல்படுபவன் சென்னி. சோழர்களின் கடற்படை தலைவராக ராஜேந்திர சோழ சக்கரவர்த்தி இருந்தார். அவரின் வழிகாட்டுதலில் களத்தில் படைநடத்தி வெற்றிகளை குவித்து வருவதில் முன்னிலையில் இருவரும் இருந்தனர். தேவயாழினியின் அகால மரணத்தால் நிலைகுலைந்து போன இளங்குமரனை, போர்க்களத்திற்கு திருப்பியவன் சென்னி. “செந்தமிழ் செல்வி”யை இராஜேந்திரரின் துணைவி வானவன் மாதேவி அரண்மனைக்கு கொண்டு சென்று, தன் பொறுப்பிலேயே வளர்த்து வருகின்றார். தன் தளபதியின் செல்வ மகளை, அவன் களத்திலிருந்து திரும்பும் வரை… வளர்ப்பதும், பாதுகாப்பதும் தன் கடமை என கருதிய அரசனும், அரசியும் எத்துணை பெருமைக்குரியவர்கள். இவ்வாறு தன் நண்பனை குறித்து சிந்தித்தபடியே, நாவாயின் மேல் தளத்திற்கு வந்தான் சென்னி. வந்தவன், இளங்குமரன் சிந்தனையை கலைத்தான்.


குமரா!… எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன். நாம் மாநாக்காவாரம் செல்ல வேண்டும் என, நீ தீர்மானித்தது ஏன்? ஆபத்தை நாம் விலை கொடுத்து வாங்குகிறோம் என்று தோன்றுகிறது!!?? என்றான் சென்னி.


சென்னி…. சோழச் சக்கரவர்த்திகளின் ஆணைப்படி, ஸ்ரீவிசயத்து வணிகத் துறைமுகங்கள் இந்த “மாநாக்காவாரம்” தீவில் உள்ளன. முழுமையான வெற்றி என்பது, அதையும் நம் சாம்ராஜ்யத்திற்கு பெற்றுத் தருவதில் அல்லவா உள்ளது?. அதை நிறைவேற்றாமல், தாயகத்தை நாம் எட்டுவது முறையாகாதே!!?? என்றான் இளங்குமரன்.
ஆனால் “பெரியநாக்காவாரம்” ஆபத்து நிறைந்தது என குறிப்புகள் கூறுகின்றனவே.!!! நம்முடைய நாவாய்கள் தாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பெரியநாக்காவாரம் நோக்கிய பயணம் என்பது சரியாக இருக்குமா? ஒருவேளை எதிரிகள் அங்கே பெரிய அளவில் முகாமிட்டிருந்தால், நம் நிலை என்னவாகும்? என கவலையோடு பேசினான் சென்னி.
சென்னி!.. முடியுமா என நாம் நமக்குள் கேட்டிருந்தால்?… பெகு முதல் மாதமாலிங்கம் வரையான கடார நாடுகளை, ஒரு குடையின் கீழ் கொண்டு வந்திருக்க முடியுமா? ஐந்து தினங்களுக்கு முன் நம் பேரரசர் இராஜேந்திரர், கடாரத்தில் புலிக்கொடியை பறக்கவிட்டாரே!!?? அதுதான் சாத்தியப் பட்டிருக்குமா? இயலுமென்பதில் கிஞ்சித்தும் சறுக்காமல் பயணித்தால், இடர்கள் எல்லாம் நம் காலடியில் கிடக்கும் காலனியாக ஆகிப்போகும். “மாநாக்காவாரம்” வணிகத் துறைமுகங்கள் உடையது என்று குறிப்பு கூறுகிறது. அப்படி எனில் “பெரிய நாக்காவாரம்” அதுபோன்ற பகுதியாகவே இருக்கக்கூடும். அதனை உள்ளடக்கிய மர்மத்தை நாளை நண்பகலுக்கு பின் நாம் விலக்குவோம்!!!… கவலை வேண்டாம் என்றான் இளங்குமரன்.


“ஆதவன் ஆழ் கடலில் நீராடிவிட்டு, மெல்ல மேலெழுந்து தன் கதிர்களைப் பரப்பத் தொடங்கியிருந்த காலை நேரம்….. ஸ்ரீவிசயத்திலிருந்து புறப்பட்டிருந்த சோழ நாவாய்கள் அணிவகுப்பு கடல் நீரில் நீந்திச் செல்லும் நாரைகள் போல காட்சி அளித்துக் கொண்டிருந்தன. லெமூரியாவில் இருந்து நூறு கடல் கல் தொலைவில் பயணம் சென்று கொண்டிருக்க, சோழ கடற் படைத் தலைவன் இளங்குமரன், கண்காணிப்பு மாடத்திலிருந்து நாவாய் கடலில் பயணப்படும் வழியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் திட்டப்படி “மாநாக்காவாரம்” துறைமுகத்தை முதலில் கைப்பற்றுவது என்பது திண்ணமான முடிவாக இருந்தது.


ஸ்ரீவிசயம் வெற்றி கொள்ளப்பட்டுவிட்டது என்றாலும், “மாநாக்காவார” த்தில் தனியாக நியமிக்கப்பட்டிருந்த தலைவன் கட்டுப்பாட்டில்தான், அது இன்னமும் இருக்க வேண்டும், என்பது இளங்குமரன் கணக்கு. அவன் நிச்சயமாக ஒரு வலிமையுள்ள படையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் தாம்… முன்னே சென்ற நாவாய்களை தாக்கி இருக்கலாம்!!?? என்று உறுதியாக நம்பிய இளங்குமரன், “திரிசூல வியூகத்தில்” துறைமுகத்தை தன்வசப்படுத்த தீர்மானித்தான். அதற்கான திட்டங்களை வகுத்து வைத்திருந்தவன், நிலப்பரப்பு ஏதேனும் தென்படுகிறதா!!!! என கூர்ந்து நோக்கிய வண்ணம் இருந்தான். நாவாயின் மேல் பரப்பு தளத்தில் இருந்த மரஆசனத்தில், “கடற்காற்றின் குளிர்விப்பில்” அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் சென்னி.


நேரம் கடந்து கொண்டிருந்தது. இளங்குமரன் காலை உணவு அருந்தவும் கீழே வரவில்லை. பலமுறை உணவருந்த அழைத்தும் இளங்குமரன் வராததால், சென்னியும் உணவை தவிர்த்திருந்தான். நேரம் செல்ல செல்ல, வெப்பக் காற்று கடல் வெளியில் வீசத் தொடங்கியது.

Advertisement