Advertisement

(கவிதை வடிவில்…)
துளிர்விடும் விழுதாய்க் குலம் தழைக்க வந்த உறவொன்று,
மறந்த நினைவுகளையும் மறைத்த உண்மைகளையும் உயிர்ப்பித்து,
தலைமுறை தாண்டிய பந்தமென உணர்த்தியதும் – தலைமகனின்
மனப்பிராந்தி குறைந்தது; மர்மங்களும் கூடியது;
பெற்றவர் முகம் அறியாத பெண்மனம்,
உற்றவனே உலகம் என அகம் மகிழ்ந்து வாழ,
பதிவிரதையின் கண்மூடித்தனமான காதலில்,
உரிமைக்குரல் ஒலித்தது; உரசல்களும் ஓங்கியது;
ஈடேறா ஆசைகளில் துவண்ட தமக்கையின் உள்ளம்,
நிதர்சனங்களை உணர்ந்தும் உணராமல் தத்தளிக்க,
ஈரிய நெஞ்சன் பொழிந்த பாசத்திலும் நேசத்திலும்,
நிம்மதி பிறந்தது; நிபந்தனைகளும் பிணைந்தது;
தாரமா! தமக்கையா! சாயும் திசை தெரியாமல்,
தராசின் முள்ளாய்த் தள்ளாடும் நாயகன்,
தார்மீக பாதையே சாலச் சிறந்தது எனத் தெளிந்தான்.
இம்மையிலும் மறுமையிலும் நீயே!
இரகசியங்கள் ஏதுமில்லை நமக்குள்ளே இன்னுயிரே!
இறுமாப்புடன் ஓதும் இல்லாள் அவளிடம்,
இல்லாத பொய்களை உரைப்பது தான் இல்லறமா?
தந்தையும் தாயுமானாய் நீயே!
தங்குதடையின்றி வரங்களை நல்கும் தம்பியே!
தலைநிமிர்ந்து கோஷமிடும் அக்காள் அவளிடம்,
தள்ளிநின்று உறவாடுவது தான் சகோதர பாசமா?
நன்மைக்குச் சொன்ன பொய்யே என்றாலும்,
நம்பி வந்தவளிடம் ஊமை நாடகமாடியது நியாயமா?
உயிரானவளின் உள்ளம் உடையக் கூடாது என,
உதிரத்தில் கலந்தவளின் உரிமையைப் பறித்தது தர்மமா?
வலிய வந்து சேர்ந்த சொந்தமும்,
வழித்துணையாய் இணைந்த பந்தமும்,
வலி தரும் உறவாய் மாறி வதைத்ததா – இல்லை
வழிகாட்டும் விளக்காய் மிளிர்ந்து,
நிர்மலன் அவன் வாழ்க்கையை வசீகரித்ததா – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள்!!!

Advertisement