Advertisement

காதல் துளிர் 8:

அவள் அப்பாவும் , அம்மாவும் ஒன்றாக அமர்ந்து கொண்டு இருப்பதை பார்த்து  கிழக்கும் மேற்கும் ஒன்றாக அமர்ந்து கொண்டு இருக்கிறது ..உலகம் தலை கீழா சுற்றுதா என்று யோசித்து அவர்கள் அருகில் சென்றாள்

அவள் படிப்பை பற்றி தான் பேச போகிறார் என்ற யூகம். அவள் ஒன்றும் சின்ன குழந்தை இல்லையே ! அவள் முடிவில் தெளிவா இருக்கும் வரை யாரும் அவளை எதுவும் செய்ய முடியாது எண்ணம் .

கண்ணன் சுற்றி வளைக்காமல் ஷிவானியிடம் நேரடியாக  ” வனி ,இன்னும் ரெண்டு மாதத்தில் படிப்பு முடிய போகுது . நீ படிப்பை பற்றி  உன் முடிவை சொல்வதா இல்லை. என் முடிவை கேட்டுகோ! என் நண்பன் ராஜ்  மகன் தேவாவிர்க்கும், உனக்கும் கூடிய சீக்கிரம் திருமணம்! தேவா உனக்காக தான் காத்துக் கொண்டு இருக்கிறான். திருமணம் செய்து கொண்டு, மேல் படிப்பை தொடரலாம் ! இங்க என்றாலும் சரி வெளியே எங்கயாவது போகணும் என்றாலும் சரி ! ரெண்டு பேரும் போங்க !!”

ஷிவானி அதிர்ச்சியா “என்னது கல்யாணமா?” இப்ப ரொம்ப முக்கியம். அவனும் அவன் மூஞ்சியும் என்று திட்டும் போது “என்ன பதில் கேட்கிறேன் ல!”

“நான் காத்துக் கொண்டு இருக்க சொல்லவில்லையே அப்பா!”

அவள் பதிலில் கோபமடைந்த கண்ணன் “என்ன பேச்சு ! உன்னை மதித்து தான கேட்கிறேன் . என்ன பழக்கம் நிர்மலா! இப்படி தான் பேச கத்து கொடுத்து இருக்கியா” என்று மகளிடம் தொடங்கி மனைவியிடம் முடித்தார்.

“தேவா டாக்டர் என்று உனக்கே தெரியும். அவங்களுக்கு இருக்கும் சொத்துக்கு நீ படிக்க கூட தேவை இல்லை ..இருந்தாலும் ஸ்பெசலிஸ்ட் என்றால் இன்னும் பெருமை தான ..MD  படிப்பு  தொடங்கி ஒரு மாதத்திற்குள் திருமணம். MD   என்றால் பேரும் ஆச்சு! பெருமையும் ஆச்சு .

உங்க கல்யாணத்தால் ரெண்டு பெரிய குரூப் ஒன்றா இணைந்து விடும்! என்னுடைய நெடு நாளைய கனவே அது தான். அப்படி மட்டும் இணைந்து விட்டால் மருத்துவ சாம்ராஜ்யத்தில் நாம தான் நம்பர் ஒன்னாக இருப்போம் .  இப்போது  தென் இந்தியாவில் விரிந்து இருக்கும் மருத்துவமனை கிளைகளை , வட இந்தியாவிலும் விரிவு செய்ய திட்டம்  போட்டாச்சு.

ராஜ்  இதற்கு சரி  சொல்லியாச்சு. வெளிநாட்டில் இருக்கும் தேவா சென்னை திரும்பியவுடன் நிச்சயம். நிச்சயம் முடிந்த ஒரு மூன்று மாதத்தில் திருமணம். இப்பவே ஏற்பாட்டை ஆரம்பித்தாச்சு!” என்று அடுத்த குண்டை போட்டார் .

மகள் பெரிய வீட்டில்  வாக்கப்பட போகிறாள் என்று நிர்மலாக்கு பூரிப்பு . மகள் முகத்தைக் கண்டு ஏதோ சரி இல்லையே? கல்யாணம் என்று பயமா? யாரையாவது காதலிக்கிறாளா? அவங்க அப்பாவை பற்றி தெரிந்து கண்டிப்பா அப்படி செய்ய மாட்டா !

இருந்தாலும் இவரை  எதிர்க்கணும் என்று ஏதோ முடிவு செய்து இருந்தா ?

ஒரு  வேலை  அந்த  டான்ஸ் நண்பர்களுடன் இன்னமும் தொடர்பில்    இருக்கிறாளா? கண்ணன் விட மாட்டாரே ! இவள் ஏதோ சொன்னால் கண்ணன் வேற கோபப்படுவரே!

“சின்ன வயதில் இருந்தே தேவாக்கு நம்ம வனி என்றால்  இஷ்டம் தாங்க. பையனும் ஸ்மார்ட் . அவங்க அம்மா சுந்தரி  கூட மகன்,  மாதத்துக்கு பாதி நாள் வெளிநாட்டிலே தான் இருப்பான் பெருமையா  சொன்னாங்க” என்று தேவா பற்றியும், அவர்கள் குடும்பத்தை பற்றியும்  பெருமையா பேசினாள். “நீ இப்போதைக்கு தேவாவை பார்த்தாயா வனி!”

பதில் ஒன்றும் சொல்லாமல் மனதில், நீங்க என்ன வேண்டும் என்றாலும் சொல்லிகோங்க, என் கல்யாணம் என் இஷ்டப்படி தான் நடக்கும், என்னை மீறி என்ன செய்திடுவீங்க பார்க்க தான போறேன். எனக்கு ஒரு சந்தர்ப்பம் அமையும் போது விடுவேனா! அவள் சரி என்றும் சொல்லவில்லை எதிர்ப்பையும் காட்டவில்லை..

நான் சிங்கப்பூர் படிக்க செல்ல என்னை  தயார் செய்த போது, என்ன வேண்டும் என்றாலும் செய்துக்கோ, கடைசியில் அவங்க இஷ்டம் என்று தான பேசாமல் இருந்தாங்க ! எனக்காக பேசின  என் டான்ஸ் நண்பர்களையும்  அவமான  படுத்தினாரே! இவர் செய்ததுக்கு  எல்லாம்  tit for tat  என்று சிரித்துக் கொண்டாள்.

ஷிவானி, ஷிவேந்தர்  கண்களை வரைந்ததில் இருந்து ரோட்டில் எந்த பைக் பார்த்தாலும் அவனா என்று ஆர்வமா தேட தொடங்கினாள். கண்ணில் சிக்க மாடீங்கிரானே. ரெண்டு மூன்று தடவை  அதே ஹெல்மெட் பார்த்து ஷிவேந்தர் என்று ஏமாந்து இருக்கிறாள் . அவளை அறியாமலே ஷிவேந்தர் அவள் மனதில் புகுந்து விட்டான் .

ஷிவேந்தர் யார் என்று கூறாமல் ஷிவானிக்கு  சாக்லேட், அழகிய பொக்கே  அனுப்பினான் . அவள் நண்பன் ஹரியிடம் கூறின போது  “இப்படி  ஒரு பெயர் தெரியாத விசிரியா? என்ஜாய் வனி. கண்டிப்பா ஏதோ கிளு கிடைக்கும், கண்டு பிடி . நம்ம கல்லூரியில்  யாராவது இருப்பாங்களா ? வெளி வட்டார நண்பர்கள்.. நம்ம கல்லூரி என்றால் இத்தனை நாள் விட்டு கல்லூரி முடியும் போது எதுக்கு இப்படி செய்யணும் .ஒரு வேலை இப்ப தான் அவனுக்கு உன் மீது லவ் ஸ்டார்ட் ஆகி இருக்கோ !”

ஹரி சிறந்த நண்பனா ஷிவானிக்கு வந்த கொரியர்  மூலம் அனுப்பினது யார் என்று கண்டு பிடிக்க முயற்சி செய்தான் .

ஷிவானிக்கு ஏனோ அந்த பைக் நபர் மீது தான் சந்தேகம் . சரியா வீடு கண்டு பிடித்து சுட்டீஸ் அனுப்பினானே ! நாளாக நாளாக அவனே தான்  என்று உறுதியாக நம்பினாள்.

ஒரு நாள் எதேர்ச்சையாக அவள் அறைக்குள் நுழையும் போது புது கட்டிலை கண்டவுடன், ஹே, ஒரு வேலை அன்று பார்த்த நபரோ! பேர் கூட சிவா ..! அந்த சிவாவா  இருக்கலாம், இல்லாமையும் போகலாம் .

ஆனா அன்றே லக்கி டிரா என்று பரிசு கொடுத்தானே! தோழிகள் கூட அப்படி எல்லாம் இல்லை, உனக்கும் மட்டும் எப்படி ஸ்பெஷல் கேட்டாங்களே ! அவனையே கேட்டு விடவேண்டியது தான்! நான் கேட்டு தப்பர்த்தம் கொண்டு விட்டால் ?

எதற்கும் கொஞ்சம் பொறுத்து பார்க்கலாமா ?

அப்படியும் அவளால்  விடமுடியவில்லை. அடுத்த நாளே அவள் அறைக்கு அழகிய ஊஞ்சல் வாங்க வேண்டும் என்று தேனாம்பேட்டையில் உள்ள ஷிவேந்தர் கடைக்கு சென்றாள்.

ஆனால்  அங்கு அவனை காணாமல் ஏமாற்றம் அடைந்தாள். அன்று அந்த பேச்சு பேசினான்! வேலையை விட்டு தூக்கிட்டாங்களோ?  இல்லையே…… அவன் கடை போல தான சொன்னான்.

ஏனோ ஊஞ்சல் வாங்கும் இண்டரஸ்ட் இல்லாமல்  கடை விட்டு வெளியேறும் போது வண்டியில் உள்ளே நுழைந்த ஷிவேந்தர், ஷிவானியை பார்த்து விட்டான் . ஆஹா என்னை தேடியா ?

உன்னை இல்லை, உன் கடையை என்று அடக்கிய மனசாட்சியை கண்டு கொள்ளாமல் வேகமாக பார்க் செய்து நுழைவதற்குள் ஷிவானி கிளம்பி இருந்தாள்.

ச, மிஸ் செய்துட்டேனே !

ஷிவானிக்கு, மாலை குரியர் மூலம் அழகிய செயின் மற்றும் காதணி செட் வந்தது . பார்க்கவே ரொம்ப அழகாக கண்ணை பறிப்பது போல  இருந்தது . கண்டிப்பா அங்கு வாங்கியது இல்லை, ஏதோ வெளியூரில் இருந்து தான்  என்று அவளுக்கு நன்றாகவே தெரியும் .

 விலை உயரந்தது என்று சொல்ல முடியாது . சின்னதாக இருந்தாலும் யார் என்று அறியாமல் எப்படி ஏற்றுக் கொள்வது ..

யார்? யார்? என்று குழம்பி, கண்ணுக்கு தெரியாத பேயை எங்கு தேட? தேவை இல்லாத குழப்பம்.  தானே வெளி வரட்டும் என்று ஒதுக்கி அவள் வேளையில் கவனத்தை செலுத்தினாள்.

மருத்துவமனையில்  வேலை   முடித்த  ஷிவேந்தர், இதற்கு மேல் பொறுமையாக இருக்கவே முடியாது, அதுவும் மாலை கண் முன் வந்து, பேச முடியாமல் போனதை எண்ணி, இரவு ஒன்பது மணி என்று யோசிக்காமல் ஷிவானிக்கு அழைத்தே விட்டான்.

அழைத்து விட்டானே  தவிர  என்ன பேச என்று தயக்கம். அவனா இப்படி என்று அவனுக்கே சந்தேகம் ..

“ஹலோ மேடம், நான் சிவா பேசறேன் !”

எந்த சிவா !என்னிடமே நக்கல் விடரானா?

“உங்களுக்கு என்ன வேண்டும் சார் …” மனதில் நீ  தான் அம்முகுட்டி சொல்லி “மேடம் என்னை தெரியல !” பேசறவன் கண்டிப்பா லூசா தான் இருப்பான் திட்டி “நான்  இன்னும் வீடியோ வசதி உள்ளே போன் வாங்கவில்லை. வாங்கின பிறகு  பார்த்து சொல்லறேன்! இப்போ வைக்கட்டுமா?”

“வனி ,வனி . வெச்சிடாத.”

“என்னது….”

“இல்லை ஷிவானி மேடம், நீங்க இன்று எங்க கடைக்கு வந்ததா சொன்னாங்க. ஊஞ்சல் வாங்க  வந்தீங்க போல”

இவனை பார்க்கணும் தான் கடைக்கு சென்றேன். அவனே அழைத்ததை எண்ணி மனதில் சந்தோசம் துளிர்விடுவதை அவளால் தடுக்க முடியவில்லை .

ஷிவானிக்கு சந்தேகம் வராத படி ஊஞ்சல் பற்றி பேசி  பேச்சை தொடர்ந்தான் . அவளுக்குமே அவனுடன்  ரொம்ப நாள் அறிமுகம், பழகினவன் கூட பேசுவது   போல தான் இருந்தது .

அதற்கு பிறகு ஷிவேந்தர் அவளுக்கு காலை  வணக்கம், இரவு goodnight  ,சின்ன சின்ன கடி ஜோக்குகள் , அவனை சிந்திக்க வைத்த sms ,ரசித்த sms என்று அவளுடன்  பகிர்ந்து கொண்டான் .

ஷிவேந்தர் , சும்மா சும்மா  பேசினால் தப்பா எடுத்துக் கொள்வாளோ எண்ணி அவளுடன் பேசுவதை தவிர்த்தான்.

இருவரும் பேசிக் கொள்ளவில்லை தவிர இருவரிடையே அழகிய நட்பு மலர்ந்து இருந்தது. ஹரி மேல் படிப்புக்கு தயார் செய்ய பிசியாக இருந்ததால் ஷிவேந்தரிடம் கேட்கலாமா, பகிர்ந்து கொள்ளலாமா, சொன்னால்  என்ன நினைப்பான், வெளியே செல்ல அவனை அழைக்கலாமா ? என்று நினைக்கும்  அளவிற்கு அவர்கள் நட்பு வளர்ந்து இருந்தது .

ஷிவானியே, ஊஞ்சல் டிசைன் அனுப்பறேன் சொன்னீங்களே ,எப்ப அனுப்பறீங்க என்று அவனை  அழைத்து பேசினாள்  .

குஷியான ஷிவேந்தர், பிரின்சஸ் உபயோகிக்கும் ஊஞ்சல்,  இன்னும்  கொஞ்ச நாள்  பொருமா என்று உரிமையாக  பேச்சை தொடர்ந்த போது அவளுள் என்ன என்று சொல்ல முடியாத   சந்தோஷ  உணர்வு .

இதுவே தொடர்கதையானது………….

ஷிவேந்தர், ஷிவானியுடன்  எதாவது சாக்கு  வைத்து பேசிவிடுவான் . ஒரு   நாள்  பேசவில்லை  என்றாலும்  அவனுக்கு  ஒரு  யுகம்  போல  தோன்றிவிடும். என்ன தான் பேசினாலும், இப்படி யாரோ போல பேசுவது அவனுக்கு சுத்தமா பிடிக்கவில்லை . கூடிய சீக்கிரம்  நேரிலே அவன் காதலை சொல்லி அவளிடம் உரிமையாக பேசணும் ஆர்வம், ஆசை  அதிகம் ஆகியது. அவனை ஏற்றுக் கொள்வாளா என்ற தயக்கம் வேறு ?

நகரில் அது ஒரு புகழ் பெற்ற உணவகம் . கூட்டம் நிரம்பி வழிந்தது. ஷிவானி  , அவள் பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்களுக்கு ட்ரீட் கொடுக்க  அந்த உணவகத்தில் முதலிலே டேபிள் புக் செய்து இருந்தாள். கூட்டம்  அதிகமானதால் அவர்களால் சொன்ன  நேரத்துக்கு இடம் அளிக்க முடியவில்லை .

நண்பர்கள் எல்லாரும் உணவு முடித்து சினிமாவிற்கு வேற போக வேண்டும் என்று ப்ளான் வைத்து இருந்தார்கள் .

தெரிந்த ஹோட்டல் என்று வந்தால் இப்படி சொதப்பனுமா? ஷிவானி  நண்பர்களிடம், இந்த ஹோட்டல் மனேஜர் எனக்கு தெரிந்தவர் .எதாவது ஏற்பாடு செய்ய முடியுமா பார்க்கிறேன் என்று அந்த அறைக்குள் நுழையும் போது ஷிவேந்தர் மும்மரமாக யாரோ பெண்ணிடம்  பேசிக் கொண்டு இருந்தான் . அவன் முதலில் ஷிவானியை   கண்டு கொள்ளவில்லை.

ஆஹா சிவா! இவன் எங்க இங்க ? யார் அந்த பெண். பார்க்கவும் அந்த பெண் மிக அழகாக இருந்தாள். தனியா அப்படி என்ன பேசறாங்க?

அவளை கண்டுகொள்ளாமல் அந்த பெண்ணிடம் உரிமையாக  பேசுவதை பார்த்து  ஷிவானி பொறாமை உணர்வு தலை தூக்கியது . இந்த உணர்வு சரி இல்லை தப்பு என்று  தட்டி  அடக்கினாள்.

ரவி அண்ணா எங்கே ? ஒரு வேலை ரவி அண்ணா வேற இடத்துக்கு  மாறிவிட்டாரா ? என்ற கேள்வி அவள் மண்டையை குடைந்தது .

வண்டாக குடையும் கேள்வி மீறி , ஏனோ அவனை பார்த்தவுடன் சந்தோசம் . இவனுக்கு தெரிந்தவர் ஹோட்டலா இருக்குமோ ? இல்லை இங்கு வேலை பார்க்கிறானா ?

அந்த அறையில் அந்த இருவரை தவிர வேற யாரும் இல்லை என்ற காரணத்தால் “சார் ,இங்க மனேஜர் ரவியை பார்க்க முடியுமா? ” என்ற குரலில்  நிமிர்ந்தவன் , கண் முன்னால் சிரித்த படி நிற்கும்  ஷிவானியை கண்டு கனவா? நிஜமா என்று அவன் தோழி சீமாவை கிள்ளினான். அவள் அலறினவுடன் நிஜம் தான் .”ஹே, நீ எங்க  இங்க ? என்னை பார்க்க வந்தாயா?”

ஷிவானி கோபமாக ” நீங்க இங்க இருக்கீங்க என்று எனக்கு ஜோசியமா தெரியும் ? நான் உள்ளே நுழைந்தவுடன் ரவி இருக்காறா கேள்வி கேட்டேனே? நீங்க தான் உலகத்தை மறந்து பேசிக் கொண்டு இருந்தீங்களே! அப்புறம் எப்படி நான் பேசினது உங்களுக்கு கேட்கும்” .

ஹா பாய்லர்! உன்னாலே  இந்த அறை ரொம்ப சூடா  ஆகிடுச்சு! சீமா, ஏசி    ரெண்டு     பாயிண்ட்  கம்மி  செய்  என்று ஷிவேந்தர் சந்தோஷமாக வம்பளந்தான்.

அவள்       முகத்தை     கண்டு   அவனே  சமாதானம் செய்யும்  விதமாக  “சாரி ,கோபம் வேண்டாமே  ஷிவானி ! ரவி வெளியே போய் இருக்கான். உங்களுக்கு என்ன ஹெல்ப் வேண்டும்?”

அவள் சொன்னவுடன், அவளுக்கு சந்தோஷமாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பெரிய பார்ட்டி ஹாலை அவளுக்காக ஸ்பெஷலா ஒதுக்கி கொடுத்தான் .

வனி, உனக்கு இங்க இத்தனை செல்வாக்கா என்று நண்பர்கள் கேட்டவுடன்  ஷிவேந்தர் மீது இருந்த கோபம் காணாமல் போனது .

அவன் யாருடன் பேசினால்  என்ன ? எதற்கு கோபம் என்று அவளுக்கு புரியவில்லை  ..

ஷிவேந்தர்,  ஷிவானிக்கு  வேண்டிய ஏற்பாட்டை கவனித்து அவளிடம் வழியாமல் Its your special day. என்ஜாய் என்று டீசண்டாக  விலகி  சென்றான்.  இந்த செயலால் அவள் மனதில் உயர்ந்து நின்றான் .

ஹோட்டல் சார்பாக  ஷிவானிக்கு கேக் பரிசளித்தனர் . அவள் கேக் வெட்டும் போது ஷிவேந்தர் எங்கயாவது கண்ணில் தென் படுகிறானா என்று கண்கள் அலைபாயிந்தது. சிவா அவன் அறையில் இருந்து ஷிவானியை  நோட்டம் விட்டுக்  கொண்டு தான் இருந்தான் . இருந்தாலும் அவள் கண் முன்னால் செல்லவில்லை. அடுத்த பிறந்தநாள் என்னுடன் தான் என்று சிரித்துக் கொண்டான்.

அவள் கிளம்பும் முன் அவனிடம் நன்றி சொல்லணும் என்று எண்ணிய போது மனேஜர் ரவி, உங்களுக்காக  ஸ்பெஷல் பரிசு என்று அழகிய பெட்டியை தந்தான்.

ரவி அண்ணா , அது தான் கேக் என்று திக்கும் போது, எப்படியாவது அவளை அந்த  பரிசை வாங்க வைத்து விட வேண்டும். இல்லை நண்பன் சிவா வில்லன் சிவா ஆகிடுவான் பயந்து  , “அது வேற ஷிவானி  சிஸ்டர் . இன்று இத்தனை பெரிய பில் கட்டினவ நீ தான். சோ, உனக்கான ஸ்பெஷல்” என்று அவள் கையில் திணித்து விட்டு நகர்ந்தான்.

கையில் கவருடன்  நிற்கும் ஷிவானியிடம் தனிஷா , “என்ன வனி  ,கையில் கிபிட் .கப் கேக்கா?  வா கிளம்பலாம், தியேட்டர் போக சரியா இருக்கும்” .அதற்கு பிறகு அவளுக்கு பொழுது இனிமையாக கடந்தது .

அன்று இரவு, ஷிவேந்தருக்கு நன்றி மெசேஜ் அனுப்பிவிட்டு அவனை பற்றிய எண்ணத்தில் மூழ்கினாள் . அன்று அங்க  எக்சிபிஷனில்,  இன்று ஹோட்டலில். பல தொழில் போல .நல்ல  வேலை மருத்துவன் இல்லை என்று நிம்மதியனாள்.

எதற்கு என்று என்னும் போது காரணம் புரியவில்லை .

அவனே அழைப்பான் எதிர்பார்த்தாள். பிஸி போல!  இல்லை இந்த நேரத்தில் பேசிவிடுவானே என்று அவள் எண்ணம் முழுதும் அவனே நிறைந்து இருந்தான்.

எதேர்ச்சையாக திரும்பின  போது, அவள் வரைந்திருந்த  கண் ஓவியத்தை பார்த்து திடுக்கிட்டாள்.  அவளுள் எழுந்த சந்தேகத்தை போக்க உடனே ஷிவேந்தர் முகத்தை  மனதில்  கொண்டு வந்து வேகமாக வரைய தொடங்கினாள்.

 முக  வடிவை வரைந்து கண்களை வரையும் முன் அவளை அறியாமல் அவள்  கைகளுக்கு நடுக்கம். 

 கண்ணை மூடிய படி வரைந்து முடித்து, படத்தை பார்த்தவுடன்  அதிர்ந்தாள் . அவளால் அவள் கண்களையே நம்ப முடியவில்லை. அந்த கண்ணிற்கு சொந்தமானவன்  ஷிவேந்தரா .. சரியான திருடன் .அவன் யார் என்றே சொல்லாமல் இத்தனை நாள் பேசி இருக்கிறான் …

அவளை மீறி சந்தோசம் பெருகியது .

டேபிள் மீது இருந்த கிபிட் பாக்ஸ் பிரிக்க சொல்லி கைகள் பரபரத்தது.  கண்டிப்பா அந்த சிவா தான் கொடுத்து இருப்பாரு. எனக்கு வேண்டும் என்கிற உதவி செய்து, கூட இருந்து வழியாமல்   எத்தனை டீசன்ட் நகர்ந்துவிட்டார் . கொஞ்சம் நல்லவன் தானோ !

அன்றைக்கு மேடி போல வசனம் பேசினது .. சும்மா விளையாட்டுக்கா?

ஏற்கனவே அந்த கண்களை காணும் போது எல்லாம் அந்த   கண்களுக்கு சொந்தமானவை காதலிக்கிறோமா என்ற குழப்பம் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருந்தது . இன்று அவன் இந்த சிவா என்று தெரிந்த பிறகு அவளுக்கு கொஞ்சம் படபடப்பாக இருந்தது .

என்ன  தான் ஷிவானி  அளவாக பேசினாலும் ஷிவேந்தர் பேச்சில் எப்போதும் கொஞ்சம் உரிமை இருப்பது போல தான் தோன்றும்  . அது எதனால் என்று அவளே பல முறை யோசித்து இருக்கிறாள்?

ஷிவேந்தரிடம் தோன்றியது ஈர்ப்பு சொல்ல முடியாது . அதில் தெளிவாக இருந்தாள். அவள் இப்போது ஒரு மருத்துவர் . இது வரை படித்தது  எல்லாம் இருபாலர் படிக்கும் பள்ளி கல்லூரியில் தான் . பள்ளியில் இருந்து அவள் பின்னால் சுற்றியவர்கள் ஏராளம். அந்த வயதில் வருவது காதல் இல்லை என்று இவளே பல பேருக்கு அட்வைஸ் செய்து அனுப்பி இருக்கிறாள் . ஏன் ஜீவா கூட உயிரா காதலிப்பதாக கூறினவுடன் மறுத்தேனே !

கல்லூரியிலும்  இதுவரை அவளுக்கு லவ் ப்ரபோஸ் செய்தவர்கள் ஏராளம் .

இவன் செய்த குறும்புத்தனம் என்னை ஈர்த்ததா ? வம்பு செய்ததா? இவனிடம் எது என்னை ஈர்த்தது ..

எதையோ யோசித்த படி கிபிட் பிரித்து இருந்தாள் . அந்த அழகிய கிபிட் பாக்ஸில் கிறிஸ்டல் பொம்மையால் ஆனா அழகிய அன்ன பறவை ஜோடி,  கூடவே மனதை கொள்ளை கொள்ளும்  கொஞ்சம் விலையுர்ந்த  பச்மினார் வூல் மற்றும் சில்கிலான அழகிய ஸ்கார்ப் ஒன்று இருந்தது. ரசனை மிக்கவன்   தான்  .

அதில் இருக்கும் காகிதத்தில் will you be my ????  ஸ்மைலி படம் ……..

அந்த எழுத்துக்கள் அவள்  எண்ணத்தை பிரதிபலித்ததோ…….எப்படி  உணருகிறாள் என்று அவளுக்கு புரியவில்லை..

மறுபடி அதை படித்தவுடன் பச்சை மிளகாய்  கடித்தது  போல கோபம் சூர் என்று ஏறியது. இவனுக்கு கொஞ்சம் நஞ்சம் திமிர் இல்லை. எத்தனை தைரியம் இருந்தா லவரா இரு சொல்லுவான் . எத்தனை கொழுப்பு .

அப்படி இருக்காதோ ?

பிறகு அப்படி தான் முடிவு செய்தாள்.

அன்று யார் என்று சொல்லாமல் ரோட்டில் அப்படி வம்பளந்தானே..

உடனே அவன் எண்ணிற்கு அழைத்து, “கொஞ்சம் நேரம் முன்பு தான் உங்களை நல்லவன் நினைத்தேன். அதற்குள் இப்படி செய்தால் ? நான் உங்களிடம் கிபிட் கேட்டேனா ?”

ஷிவானி  குரலை கேட்ட சிவா சந்தோஷமாக “ஹே வனி, போனை எடுத்தா யாரு என்று சொல்லி பேசமாட்டியா? சொல்லு, என்ன விஷயம்.  நான் கேட்டதுக்கு சம்மதமா?”

“கொஞ்சம் சிரிச்சு பேசினா உடனே நீங்களா எதாவது கற்பனை செய்திடுவீங்களா? அது எப்படி மிஸ்டர் நீங்க கேட்டவுடன் உங்களுக்கு சரி சொல்லுவேன் அத்தனை நம்பிக்கை” .

“என்னை ஏமாத்திவிட்டாயே  வனி !”

பட்டென்று “என் நண்பர்கள் தவிர யாரும் என்னை வனி கூப்பிட அனுமதிக்க மாட்டேன்” .

“ஹே எதுக்கு  இப்படி  மிளகாய் சாப்பிட்டது போல கோபம்  ..சொல்லிவிட்டு திட்டு” .

“நீங்க கேட்டவுடன் உங்க காதலியா , இல்லை மனைவியா  வர சம்மதிப்பேன் நினைத்தீர்களா? இந்த  நினைப்பில் தான் ஸ்கார்ப் கொடுத்தீங்களா ? இத்தனை நாள் பேசுனீங்களா? உங்களிடம் இருந்து இதை நானா எதிர்பார்க்கவில்லை சிவா ..”

ஷிவேந்தர் பலமாக சிரிக்க தொடங்கினான் . ஆஹா கண்டு கொண்டாலே ராட்ஷசி  ! சமாளி சிவா ! நான் கோபமானா  தான் மேடம் சாந்தமாவாங்க .

”இப்ப எதுக்கு சிரிப்பு .உங்களை ஒரு நல்ல நண்பனா தான நினைத்தேன். நீங்க இப்படி செய்தால்  கோபம் வராதா ?” என்று ஷிவானி பொரிந்து கொண்டு இருந்தாள்.

சீக்கிரம் இதே கேள்வியை உன்னை கேட்க வைக்கிறேன் செல்லம் என்று மனதில்  கொஞ்சி    “ ஹே, அதில் Will you be my best friend  தான கேட்க  எண்ணினேன் . உன் நண்பன் எண்ணியதால்  தான் வனி  என்று  அழைத்தேன் . ஏற்கனவே நாம அறிமுகம் ஆனவர்கள் தானே ! சரி,  இனி பெஸ்ட் பிரெண்ட்ஸ் இருக்கலாம் கேட்டால் ? உன்னுடன் பத்து நாளா பேசிக் கொண்டு தான இருக்கிறேன்.

நான் சொல்வதை கேட்டுக்கோ !  உன்னுடன் யாரோ போல பேசுவது எனக்கு பிடிக்கவில்லை . என்னுடைய எண்ணத்தை உன்னுடன் தடையில்லாமல் பகிர்ந்து கொள்ள வேண்டும் ஆசை. நீயும் யாரோ போல பேசாமல் என்னுடன் பேசாமல் உரிமையா பேசணும் .. நட்பு என்ற உரிமை இருந்தால் தயக்கம் வராதே! ”

காதலனா உரிமையா பேசணும் என்று சொல்ல வந்ததை விழுங்கினான்.

ஷிவானி மனதில் , இவன் சொல்வதும் உண்மை தானே! நானே இவனுடன் வெளியே போகலாமா கேட்க தயங்கி இருக்கேனே ! இதுவே நண்பன்  என்றால் ஆர்டர் போடலாமே ..

ஷிவேந்தர் கடுமையாக “எனக்கு உரிமை வேண்டும் எண்ணத்தில் அப்படி  கேட்டேன்.  அது உனக்கு பிடிக்கவில்லை என்றால் சொல்லிவிடு”  என்று மிரட்டி  பிளேட் திருப்பி போட்டான் .

அவன் உள்ளுக்குள், பட்டென்று பிடிக்கவில்லை சொல்லிவிட்டால்? உன் வாயே உனக்கு சத்ரு,  அவளுக்கு தெரியாததையும் எடுத்துக் கொடு  என்று அவள் பதிலுக்காக டென்ஷனா  காத்துக்கொண்டு இருந்தான் .நல்ல வேலை அப்படி எதுவும் அவள் சொல்லவில்லை.

கோபமாக  “நீயா என்னை எப்படி அப்படி  நினைக்கலாம் . ஒரு அழகான  பையன் வந்து பேசினாலே இப்படி தப்பு அர்த்தம்  கொண்டால் ? உன்னிடம் இருந்து நான் இதை கண்டிப்பா எதிர்பார்க்கவில்லை ஷிவானி. உதவி செய்ததுக்கு இப்படி தான் நன்றி சொல்லுவீங்களா ? நான்  யாரோ போல உனக்கு கோபம் வருது? அது எப்படி வரலாம் ”

அப்போதும் ஷிவானிக்கு கொஞ்சம் சந்தேகம் .. ஷிவானி, குரலே எழும்பாமல் “நீங்க சொல்வது  நிஜமா ? உண்மையா அப்படி தான !”

மேலே பேசினால்   எங்கே   ஆமாம் , நான் உன்னை காதலிக்கிறேன் .. நீ நினைப்பது  தான் உண்மை சொல்லிடுவானோ பயந்து “பாய், குட் நைட்” என்று போனை அணைத்துவிட்டான் .

ஷிவேந்தர் பேசின  அதிர்ச்சியில் இருந்தே ஷிவானி மீளவில்லை .

தப்பு தப்பா யோசித்து நல்ல ப்ரெண்ட் ஷிப் கெடுத்துக் கொண்டேனோ என்று புலம்பித்  தள்ளினாள். ஆனால் அன்று பேசினது ? ஒரு வேலை அவன் இவன் இல்லையோ! அவள்  வரையும்  திறன் மீது அவளுக்கு இரு நூறு சதவீதம் நம்பிக்கை இருக்கே! அதே கண்கள்! அவனா இவன் என்று அவனிடம் கேட்கலாமா ? அதுக்கும் கோபம் கொண்டு சாமி வந்தது போல ஆட போறான் பயந்து அமைதியானாள் .

அது எதுக்கு கேள்வி குறி ?  ப்ரெண்ட் தெளிவா எழுதி இருந்தா நான் எதுக்கு இப்படி குழம்ப போறேன் . என்னை பற்றி என்ன நினைப்பார் என்று வருந்தி “சாரி , CAN  I   BE YOUR   BEST FRIEND? “ என்று மெசேஜ் அனுப்பினாள்.

ஷிவேந்தரை பற்றி   அவள் என்ன நினைக்கிறாள் என்று அவளுக்கே புரியவில்லை.  அவன் , பெஸ்ட் ப்ரெண்டாக  இரு என்று தான கேட்டேன் சொன்னவுடன் ஷிவானிக்கு  சப்பென்று ஆனது . காதலியா இருப்பாயா கேட்கணும் நினைத்தேனா?

ஷிவானி அனுப்பினதை படித்து  , சிரித்து  பதில் அனுப்பாமல்  YOU ARE  MY  cute  செல்ல பெண்டாட்டி குட்டிமா . என்னமா  கோபம் வருது ஸ்வீடி உனக்கு  என்று கொஞ்சிக் கொண்டான். சரியான பாதையில் தான் போகிற ராசா என்று அவனே அவனை பாராட்டிக் கொண்டான் .

ஷிவானி  அவன் பேசியதை எண்ணி , சந்தடி சாக்கில் அழகான பையன்  என்று  பீத்தல் வேற சிரித்துக் கொண்டாள்.

உங்க லொள்ளுக்கு அளவே இல்லை. அழகான பையன்  யாரை  சொன்னீங்க  என்று மெசேஜ் அனுப்பி வம்பு செய்தாள்.

குறும்பான மெச்செஜ் படித்து குட்டி பிசாசு கொஞ்சிக் கொண்டான் .

ஷிவானியா  மறுபடியும் அழைக்கும் வரை பேச கூடாது , கொஞ்சமாவது யோசிக்கட்டும் என்று ஷிவேந்தர் பேசாமல் இருந்தான் ..

ஒரு நாள் பேசாமல் இருந்த ஷிவானி,  தப்பு செய்தால் உடனே சரி செய்து கொள்ளனும்  அடுத்த நாளே அவனுக்கு அழைத்து சாரி தெரிவித்தாள்.

அதற்கு பிறகு வழக்கம் போல காலை  வணக்கம் , சாபிட்டாச்சா, எங்க இருக்க?  என்று  அவர்கள் நட்பு நாளுக்கு நாள் வளர்ந்தது . மெச்செஜ் மட்டும் இல்லாமல் நினைத்த நேரத்தில் பேசிக் கொண்டார்கள் .

ஷிவேந்தர்  உரிமையான பேச்சை எண்ணி ,ஷிவானிக்கு உள்ளுக்குள் கேள்வி அரித்துக் கொண்டு தான் இருந்தது . மண்டை குடைந்தது . அன்று உண்மையா தான் காதலிப்பதாக சொல்லி இருப்பாரோ ! அது எப்படி பார்த்தவுடன் காதல் ?

எதாவது கேட்டு தப்பர்த்தம் கொண்டு  விட்டால் ? ஏனோ  ஷிவேந்தருடன் தொடரும்  நல்ல ப்ரெண்ட்ஷிப்  இழக்க விரும்பவில்லை .

ஷிவானி , பழகிய சில நாட்களிலே  ஷிவேந்தர்  தவிர யாரும்  அவளுக்கு  சிறந்த வாழ்க்கை   துணையா வர முடியாது  தெளிவாக இருந்தாள். அவளுக்கு என்று ஒரு நபர் இருப்பதை எண்ணி சந்தோசம் கொண்டாள்..

 இதை சிவாவிடம் எப்படி சொல்ல என்று தயங்கினாள். நான்  உன்னிடம்  நண்பனா  தான் பழகறேன் சொல்லிவிட்டால் ?     

அவன் எப்படியோ நான்  அவனை  காதலிக்கறேன்… அவன் தான் எனக்கு கணவர்..

ஒரு நாள் கல்லூரி முடிந்து வீடு திரும்பும் வேளையில் அவள் அன்னையை அழைத்து செல்ல பள்ளி கூடத்துக்கு சென்றாள். அது மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளிக்கூடம் என்பதால் ஷிவேந்தர் அங்கு வந்து இருந்தான். வாரம் மூன்று முறை அங்கு வந்து  சென்றான்.  அவனால் முடிந்த உதவியை  அந்த குழந்தைகளுக்கு செய்வான் .

 இது எதுவும் ஷிவானிக்கு தெரியாது. அவள் உள்ளே நுழையும் போது சிவா  கார் வெளியே சென்றது ..

அந்த வண்டியில் போவது சிவா போல இருக்கே ! இங்கு எங்க ?

ஒரு வேலை முன்பு  பாட்டி சொன்னது போல அவங்க கடையில்  பள்ளிக்கு எதாவது table, chair  வாங்கி இருப்பங்களோ ! அதை பார்க்க தான் வந்து இருப்பாரோ !அப்படி தான் என்று அவளே முடிவு செய்து கொண்டாள்.

அவர்கள் பேசும் போது சுத்தமா  அதை பற்றி மறந்து விட்டாள்.  அவர்கள் பேச தான் ச்வீட் நதிங்க்ஸ் என்று ஒன்றும் இல்லாத விஷயங்கள் அணிவகுத்து இருக்குதே !

ஷிவேந்தர், ஷிவானி மனதில் இடம் பிடிக்க தொடங்கி இருக்க அவன் மருத்துவன் தெரிந்தால்?????

அவள் அப்பா பிடிவாதம் ஜெயிக்குமா? இல்லை ஷிவானி பிடிவாதம் ஜெயிக்குமா?

Advertisement