Advertisement

15.1

ஷிவானி வீடு இருக்கும் தெருவிற்குள்  நுழையும் போது சிவா உடல் ஜெர்க் ஆனது . இந்த தெருவிலே பெண்ணா? என்ன கொடுமை சிவா ? கண்ணை மூடி அமர்ந்து கொண்டான்.

நம்ம கல்யாணம் என்றால் எங்க அப்பா தெரு முழுதும் பந்தல் போட்டு, பேண்ட் வாத்தியத்துடன் வரவேற்பார்கள்  சிவா என்று எத்தனை ஆசையாக சொன்னாள்.

அவள் வீடு காம்பௌண்டில் வண்டி நுழையும் போது , அவனால் அவன் கண்ணையே சுத்தமா  நம்ப முடியவில்லை . என் கண்ணம்மாவை தான் பெண் பார்க்க போறேனா?  யாஹூ குதித்து குணாவிற்கு முத்தம் கொடுத்தான்..

“ நான் சிஸ்டர் இல்லை டா ..கொஞ்சம் அவங்களுக்கும் மிச்சம் வை”

டேய் குணா ,சீப்பு கொடு !

கண்ணாடியில் அவன் சவரம் செய்யாத முகத்தைக் கண்டு “அச்சோ, ஷேவ் செய்யவில்லையே! அவளுக்கு இப்படி  இருந்தால் பிடிக்காதே! வேற யாரோ என்று நினைத்துக் கொள்ள போறா? டேய் எருமை, முதலிலே  சொல்வதற்கு என்ன டா! போய் ஷேவ் செய்துக் கொண்டு வந்திடட்டா” என்று அலம்பல் செய்யும் சிவாவை பார்த்து  குணா சந்தோசம்  கொண்டான் .

அருகில் நின்ற வண்டியில் இருந்து இறங்கிய மணிவாசகமும் ,விசாலமும்   “இவனுக்கு  தான் இந்த பெண் வேண்டாம் சொன்னானே! அப்படியே போக சொல்லு குணா. நாங்க அந்த பெண்ணிடம் சொல்லிக்கிறோம் ” என்றதும் வேகமாக  வண்டியில் இருந்து இறங்கி “நான் எப்ப அப்படி சொன்னேன் விசால்” என்று அவரை அனைத்துக் கொண்டான் .

“டேய், உன் செல்லம்  சண்டைக்கு வர போறா” என்று குணாவும் என் ப்ராபெர்டியை விடு டா என்று மணிவாசகமும் கிண்டல் செய்தனர் . .

வீட்டிற்குள்  நுழைந்தவர்களிடம் கண்ணன் ,நிர்மலா முகம் கொடுத்து பேசவில்லை .பாட்டி கோமதி, தாத்தா ,செல்வம்,அவர் மனைவி ,கதிர் அவர் மனைவி என்று விழுந்து உபசரித்தனர் .

கண்ணன் வேண்டா வெறுப்பாக “ இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம். அதற்கு பிறகு இவள் இங்கு வர கூடாது! எனக்கு இவள் மகள் இல்லை. எனக்கு எதிரா எப்ப அந்த காரியத்தை  செய்தாலோ அப்பவே எல்லாம் முடிந்தது”  என்றவுடன் ஷிவானிக்கு துளி கூட வருத்தம் இல்லை .

பல நாள் கழித்து ஷிவேந்தரை கண்ட சந்தோஷத்தில் பறந்து கொண்டு இருந்தாள். மூஞ்சியை பாரு ! ஷேவ் செய்தால் என்ன குரங்கு என்று மனதில்  திட்டிக் கொண்டாள். இப்ப கூட  அழகா தான்  இருக்கான் என்று கொஞ்சினாள்

சிவாவிற்கு, அங்கு நடப்பது எதையும்  நம்ப  முடியவில்லை . நம்பாமல் இருக்கவும் முடியவில்லை . சுற்றியும் அனைவரும்  இருக்க எழில் ஓவியமாக அவனை விழுங்கும்  அவன் இனியவளை ரசிக்கக் கூட முடியவில்லை. இது எப்படி சாத்தியம் ஆனது என்று குழப்பம் .. அதை மீறின சந்தோசம் ..

கண்ணன் பேச்சுக்கு , “அப்படி எல்லாம் இல்லை சம்மந்தி . அண்ணா ஏதோ கோபத்தில்” என்ற கதிரை அடக்கி “ நான் சொன்னால் சொன்னது தான்” என்று கண்ணன் முடித்தார்  .

கோமதி, “ கண்ணன், வந்தவர்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுத்து பேசு” என்றதை காதில் வாங்காமல் கல்யாணம் செய்வதோடு சரி, அவரிடம் இருந்து ஷிவானியோ, இல்லை  மணிவாசகம் குடும்பமோ  எதையும் எதிர் பார்க்க கூடாது என்று கறாராக கூறிவிட்டார் .

கோமதியும் , ரத்தினமும் எங்க பேத்தி எப்போதும் எங்க வீட்டு மஹாலக்ஷ்மி !அவளுக்கு நாங்க இருக்கிறோம் என்று தன்மையாக கூறினார்கள்.

கணவன் பேசியது நிர்மலாக்கு சங்கடத்தை கொடுத்தது. என்ன தான் இருந்தாலும் அவர் ரத்தம் தானே! எப்படி ஒரேடியா விட்டுக் கொடுக்க முடியும் .

ஷிவேந்தரை கண்டு நிர்மலா திருப்தியுற்றாள். அவனை ஏற்கனவே அவர் பள்ளியில் பார்த்து இருக்கிறார். ஷிவேந்தர் பொறுமை குணமே திருப்தி அடைய செய்தது.

சரண்யா, நித்யா அவன் பாட்டி மகளிடம்  பழகுவதை கண்டு சந்தோசம் அடைந்தாள் . நிர்மலாக்கு, அவள் மாமியார் கோமதியை கண்டால் எப்போதும் பிரமிப்பு , மதிப்பு இருக்கும் .இன்று ஷிவானி விஷயத்தில் அவர்கள் எடுத்த அதிரடி முடிவை எண்ணி  கூடுதலாக மதிப்பு தோன்றியது. தன்னை விட தன் மகளை பற்றி சரியாக கணித்து வைத்து இருக்கிறர்கள் என்று கொஞ்சம் பொறாமை உணர்வும் எட்டி பார்த்தது .

வேலை,வேலை  என்று ஓடி மகளை கவனிக்காமல் விட்டேனோ என்ற குற்ற  உணர்ச்சியும் கூட …

அண்ணி, எப்படியாவது என்  ஷிவானியுடன் பேசணும் என்று சரண்யா  காதை கடித்தான் . இப்ப சரியான தருணம் இல்லை சிவா என்று அவனை அடக்கினாள்.

அங்கு நடப்பவைகளை வைத்து ஷிவேந்தருக்கு ஏதோ சரி இல்லை என்று மட்டும் பட்டது . அன்று அப்படி கோபமாக பேசின அவன் அப்பா மணிவாசகம்  எப்படி  திருமணத்திற்கு சரி சொன்னார் என்று அவனுக்கு புரியாத புதிர் .

ஒரு வாரத்தில் கல்யாணம்  என்று சந்தோஷமாக இருந்தாலும் அப்படி என்ன அவசரம் என்று சிவாக்கு தோன்றியது . கல்யாணத்துக்கு எப்படி ஒத்துக்கொண்டீர்கள் என்று அவன் கேட்டும் மணிவாசகம் எதையும் சொல்லவில்லை .

ஒரு வேலை குடும்பம் வேறு, அலுவலகம் விஷயம் வேறு என்று எண்ணி  இருப்பாரோ ? தீபன் மூலமா அறியலாம் என்றால் அவனும் பத்து நாளாக ஊரில் இல்லை .டெல்லி  சென்று இருந்தான் .

கண்ணன் மாமா பணத்தை கட்டி இருப்பாரோ ! ச அதற்கு கண்டிப்பா வாய்ப்பே இல்லை !

அப்போது தான் அவனுக்கு ஒன்று உரைத்தது . கண்ணன் ஷிவானி மீது  கோபமாக இருப்பது! வனி மீது அவருக்கு என்ன கோபம் . அவ என்ன செய்தா ? எங்க கல்யாண விஷயத்தில் அவர்  பட்டும் படாமல் இருப்பது எதனால்?

பெண் பார்க்க சென்ற போது, கல்யாணம் பிறகு மகளுக்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல சொன்னாரோ!

அவள் பாட்டியும், தாத்தாவும் தான ஆதரவா பேசி முடித்தார்கள்.  அப்போது  இருக்கும் மனநிலையில் ஒன்றையும் கண்டு கொள்ளவில்லையே! இதில் ஏதோ இருக்கு! என் செல்லம்மாவை  உயிருக்கு உயிரா பாதுகாக்க, பூ போல தாங்க நான் இருக்கேன்,  யாரும் தேவை இல்லை என்று வீராப்பா எண்ணினான் .

இத்தனை சீக்கிரமா கல்யாணம்  செய்யணும் என்ன அவசியம். அவனே வீட்டில் பல  முறை கேட்டு விட்டான். கேட்டால் ஜாதகம், அவள் அப்பா ஆறு, ஏழு  மாத வெளிநாடு பயணம் செல்கிறார் , அவன் அக்கா டெலிவரி என்று ஏகப்பட்ட காரணங்களை  அடுக்கினார்கள் .

இப்போது எல்லாம், ஷிவானி அவனிடம் பேசாமல் வீட்டில் அண்ணி , பாட்டியிடம் தான் அதிக நேரம் பேசுகிறாள் என்று கோபமானான். அப்படி பேசினாலும் முக்கியமான வேலை , வெளியே போகணும். இன்று ஜீவா வரான் ..  இன்னும் ஒரு வாரம் தான், அப்புறம் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவள், அதற்கு நான் பட்ட கஷ்டம் எனக்கு தான தெரியும் என்று பேசி அவன் வாயை அடைத்து விடுவாள்.

அந்த வானரம் எங்க இருந்து  வந்து குதிச்சானோ ! என் உயிரை வாங்கறான். ஜீவா என்ற பெயரை கேட்டாலே அவனுக்கு  கோபம் தலைக்கு ஏறியது .

எப்படியோ அவன் கண்ணம்மா அவனுக்கு என்ற சந்தோஷமே அப்போதைக்கு அவனுக்கு போதுமானதாக இருந்தது .

*****

மகள் திருமண விஷயத்தில் கண்ணன் எதையும் முன் நின்று செய்யவில்லை .பாட்டியும் ,தாத்தாவும் அவர்கள் ஊரிலே கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் , கல்யாணம் முடிந்த அடுத்த நாள்  மாலை சென்னையில் வரவேற்பு வைத்துக் கொள்ளலாம்  என்று முடிவு செய்தனர் .

பல வருடம் கழித்து தாய்மை அடைந்து இருக்கும் அவர்கள் மகள் ரஞ்சனி  ,இந்த நேரத்தில் பயணம் செய்ய வேண்டாம்  என்று  மணிவாசகமும் ,விசாலமும் ஊரிலே  திருமணம் நடத்த உடனே  ஒத்துக் கொண்டனர் .

ஷிவானியை பெண் பார்க்கும் படலம் முடிந்த கையேடு அவள் பாட்டி தாத்தா ஊருக்கு அழைத்து சென்று விட்டனர் .

சிவா அவளை அழைத்து , “ ஷிவானி, உங்கள் வீட்டில் செய்வது அநியாயம் . பார்க்க கூட விடாமல் பிரித்து விட்டார்களே” என்று புலம்பலை கேட்டு சிரித்துவிட்டாள். “ என் புலம்பல் உனக்கு சிரிப்பா இருக்கா ? இரு உன்னை வெச்சுக்கிறேன்” என்று போலியாக மிரட்டினான். அவளுக்கு நேரம் இல்லை என்றாலும் பேச வைத்து தான் விட்டான் .சரியான திருடன் என்று மனதில் திட்டிக் கொஞ்சிக்  கொண்டாள்.

ஊரில் கல்யாணம் என்றதில் இருந்து கோமதிக்கு நேரம் ரக்கை கட்டி பறந்தது. மகன் கண்ணன், அவளை பேசியே நோகடிப்பன் என்று கையோட பேத்தி ஷிவானியை அழைத்து வந்துவிட்டார். அவள் பெரிமா ,சித்தி அவளை ஆசையாக பார்த்துக் கொண்டார்கள் .

முதல் பேத்தி கல்யாணம் , ஊரே மூக்கு மேல்  விரல் வைக்கணும்  என்று அவருக்கு ஆசை . பேரன் கல்யாணத்தையே சென்னையில் நடத்தி விட்டார்கள் என்று ஆதங்கம். வீடே கல்யாண கலை கொண்டது…

பாட்டி கோமதி காலில் சக்கரத்தை கட்டி ஓடிக் கொண்டு இருந்தார்.  ராசாத்தி எங்க போன? போட்டது போட்ட படி அப்படியே இருக்கு . இந்த பரணி எங்க போனான் . சந்தையில் இருந்து சாமானம் வந்தாச்சு. அதை எல்லாம் வண்டியில் இருந்து இறக்கி வைக்க சொல்லலாம் பார்த்தால்  கண்ணில் சிக்காமல் ஆட்டம் காட்டறான்.

வேலை ஆளுங்க தெரியாம எப்போதும் போல ஸ்டோர் ரூமில் இறக்கிட போறானுங்க. பரணி இல்லை என்றால் கோவிந்தனை எடுத்து வைக்க சொல்லு .  சமையல் செய்யும் இடத்திலே சமையல்காரங்க எடுக்க வசதியா, அங்கேயே இறக்க சொல்லிடு.

ஏன் டீ பேச்சி ,என் வாயை பார்க்காமல்  உரல ஒழுங்கா இடி . இல்லை உன் கண்ணை நோண்டி புடுவேன். உன்னுடைய ஏமாத்து வேலை எல்லாம் இங்க வேண்டாம் .விரசா செய் .உனக்கும் ,உலக்கைக்கும்  ,நோகாம தடவிக்கிட்டு இருக்க. பலகாரம் செய்ய அந்த பெரிய அண்டாவை இறக்கி கொடுத்தானா மருது.

“ஆச்சு ஆத்தா! ஒவ்வொன்னா கேளு ஆத்தா . மொத்தமா கேட்டா மறந்திடும் ல” என்று அந்த வீட்டில் வேலை செய்யும் முல்லை குரல் கொடுத்தாள்.

“ இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. ராவுக்குள்ள வேலை ஆகல, முதுகு தோலை உரிச்சிப்புடுவேன் கழுதை .ஆகர சோலிய பாரு” .

கோமதி பேச்சில் தான் அதட்டல் இருக்குமே தவிர மனிதர்களிடம் அவள் கோப முகத்தை காட்டியதே கிடையாது . இப்படி அதட்டினாலும் யாருக்காவது உதவி, நல்லது , கெட்டது என்றால் தயங்காமல் போய் முதல் ஆளா  உதவி செய்பவளும்  அவளே! அதனாலே அவள் சொல்லுக்கு எல்லோரும் கட்டுப்பட்டு பழகி இருக்கிறார்கள் .

“அத்தை, இந்தாங்க காபி .கொஞ்சம் குடிச்சு புட்டு மத்த வேலையை பாருங்க .சோர்ந்து தெரியரீங்களே ! அசதியா இருந்தா சித்த ஒய்வு எடுத்து அப்புறம் செய்யலாமே !” என்றால் மூத்த மருமகள்  தேவி.

“என்ன தேவி பேசற ! என் பேத்தி கல்யாணம், இப்ப உட்கார்ந்தா வேலை நடக்குமா ? எங்க உன் புருஷன், என் மகன் செல்வம்”  .

“அவர் வாசலிலே பந்தல் காரனோட சண்டை போட்டுகிட்டு இருக்காரு அத்தை” .

“அவனை நேற்றே வர சொல்லி இருந்தேனே. நான் போய் பார்க்கிறேன். உங்க மாமா எங்க போனாரு ! குடோனில் இருந்து அரிசி மூட்டையை கொண்டு வந்து இறக்க சொல்லி இருந்தேனே! சோலியை முடித்து வந்தாரா? இல்லை வேலை கொடுத்திடுவேன் அங்கேயே இருந்துட்டாரா ?”

தேவிக்கு மாமியாரை பார்க்க பெருமையா இருந்தது .ஒத்தை ஆளா எல்லாத்தையும் நின்ற இடத்திலே வேலை வாங்கும் திறமை அவருக்கு மட்டும் தான் இருக்கு .அவர் அந்த இடத்தில் இல்லை என்றால் அந்த வேலை முடியவே முடியாது .

தேவி, தேவி  , மாப்பிளை  வீட்டு ஆளுங்களுக்கு மதியம் சமையல் கொடுத்து அனுப்பனும். சமையலை விரசா முடிக்க சொல்லு . அவிங்க பட்டணத்து ஆளுங்க ..நேரத்திலே சாப்பிட்டிடுவாங்க.  நம்மளை போல இல்லை  என்றதும்  ஆகட்டும் அத்தை என்று  தேவி  உள்ளே இருந்து குரல் கொடுத்தாள்.

அங்கு வந்து இருந்த நிர்மலாவும், கண்ணனும் இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

தேவி, கதிர் மனைவி கயலிடம் ஷிவானிக்கு தைக்க கொடுத்த ப்ளௌஸ் வந்துச்சா கேளு  ! இன்று கொரியரில் அனுப்பிறேன் சொல்லி இருந்தாங்களே !

கயல் அக்கம் பக்கம் பார்த்த படி , நம்ம வீட்டு கல்யாணம் என்று  எப்படி சந்தோஷமா செய்யறோம், நிர்மலா அக்காவும் ,கண்ணன் அத்தானும் ஏன் இப்படி இருக்காங்க ?  யார் வீட்டு கல்யாணமோ என்று பட்டும் படாமல்  இருந்தால் எப்படி அக்கா ? கருண் , மருமகள் தாரா கூட அதே போலவே இருக்காங்க. நாம எல்லாம் அவிங்க சொந்தம் தான ?அந்த பெண் தாரா கொஞ்சம் பேசி சிரிச்சா தான் என்னவாம் .இவ சொத்தையா பிடுங்கிக்க போறோம் !

வனிக்கு எத்தனை கஷ்டமா இருக்கும் என்று கயல்  புலம்பினதை கேட்டு தேவி , “அவளுக்கு என்ன டி ! இனி தான் அவ சந்தோஷமா இருக்க போறா ! இவங்க  எல்லாம் அவளை எப்போது பார்த்து இருக்கிறார்கள் இன்று பார்க்க? இனி அவளுக்கு என்று குடும்பம் அமைய போகுது ! அவளை ஆசையா பார்த்துக்க  ஆள் வந்தாச்சு …

நம்ம வனி  தங்கம் மனசுக்கு ஏத்தது  போல அவளுக்கு வாழ்க்கை அமைந்து  இருக்கு . மாப்பிளை தம்பி அவள் மீது உசிரையே வைத்து இருக்கார் .அதை விட என்ன வேண்டும்” என்றதை கேட்டுக் கொண்டு இருந்த ஷிவானிக்கு அப்பவே ஷிவேந்தரை  பார்க்கணும் தோன்றியது .

இவனுக்காக உலகில் எதையும் இழக்க தயார் என்று சந்தோஷமாக சிரித்துக் கொண்டு அவள் அறைக்கு ஓடினாள்.

அங்கு எதேர்ச்சியா வந்த நிர்மலாவும் இதை கேட்டுவிட்டாள். யாரோ அவளை அறைந்தது போல இருந்தது .

எல்லா குழந்தைகளும் அவங்க பிறந்த வீட்டில் தான சந்தோஷமாக இருப்பாங்க !முக்கியமா பெண் பிள்ளைகள்.  மகள் ஷிவானி எங்கள் வீட்டில் அப்படி இல்லையா ?அவள் எங்களிடம் அன்பை தான எதிர்பார்த்தாள்? அதை கூட என்னால் கொடுக்க முடியலையா?

நிர்மலா செய்தது அத்தனையும் தவறாக தெரிந்தது. இவர்கள் என் மகள் மீது வைத்து இருக்கும் பிரியம் கூட எனக்கு இல்லையா  என்று அந்த தாயுள்ளம் வருந்தியது .கண்ணீர் சிந்தியது .

கணவன் என்ன சொன்னாலும் இனி மகளை விட்டுக் கொடுக்க கூடாது என்று உறுதியாக இருந்தாள்.

அதற்குள் பாட்டி வைதேகி, ஏன் தேவி ! சென்னையில் இருந்து மேக் அப் ,  மெஹந்தி போட வர சொல்லி இருந்தோமே? வந்தாங்களா ?

“ உனக்கு ஓவர் லொள்ளு கோமதி! இங்க ஆளே  இல்லாத  மாதிரி அங்க இருந்து வரவழைக்கிறாய் ! அப்படி என்ன அக்கா ஸ்பெஷல்” என்று செல்வம் மகள் நந்தினி சண்டைக்கு வந்தாள்.

“ உன்னை மாதிரி எதிர்த்து பேசாம இருக்காளே அதுவே ஸ்பெஷல் தான்! இந்த  கல்யாணத்தில் உனக்கு  ஒரு மாப்பிளை  பிடித்து கட்டறேன் ! அவன் எப்படி இருந்தாலும் சரி ! உன்னை அடக்கும் காளை மாட்டை பிடிக்கிறேன்” .

“கட்டறது ஆச்சு! வெளிநாட்டு காளையா  பிடித்து  கட்டு ! உன்னை பார்த்து போர் அடிக்குது” என்று நந்தினி  துடுக்காக பேசியதை கேட்டு

“அடியே ! உனக்கு அடங்காத அலங்காநல்லூர்  காளையை பிடித்துக் கட்டறேன், கொஞ்சம் பொறு” என்று பேத்தியை சீண்டி  சென்றாள் கோமதி .

வெளிநாடு என்றவுடன் ஷிவானிக்கு, ஜீவா முகம் தான் தோன்றியது. அப்படியே ஏன் செய்ய கூடாது . இருவருக்கும் நல்ல பொருத்தம் என்று சிரித்துக் கொண்டாள்.

ரஞ்சனி,  அவள்  ஊரில் தம்பிக்கு கல்யாணம் ,சொந்தம் அனைவரையும் ஒன்றா பார்க்க சந்தோசம் அடைந்தாள் . எல்லாரும் பக்கத்தில் இருக்கும் பண்ணையிலே தங்கிக் கொண்டார்கள் .

போன் அலறியவுடன் தெரியாமல் ஸ்பீக்கர் ஆன் செய்த சிவா காதில் “ ஹே   புருஷா எங்க இருக்கீங்க ! என்ன செய்யறீங்க ! இப்பவே எனக்கு உங்களை பார்க்கணும்” என்றவுடன் சிவா திணறித்தான் போனான் .

போனை எப்படி  ஆப் செய்யணும் என்று  கைகள் மறந்தன.

“ என்ன இந்தர் பதிலையே காணோம் ! எப்போதும் போனை எடுத்தவுடன்  நீங்க ஆசையாக  தரும் கிஸ் மிஸ்ஸிங் . சீக்கிரம் கொடுங்க .உங்க செல்லம் வைடிங் “  என்று நிறுத்தாமல் பட பட என்று பேசும் ஷிவானி குரலை கண்டு அனைவரும் வாயை மூடி சிரித்துக் கொண்டு இருந்தனர் .   சுற்றியும் அனைவரும் அமர்ந்து இருந்தததால் பேச மறந்து , பேந்த முழித்து அசடு வழிந்தான் .

இவ இன்னும் பேசி என் மானத்த வாங்க போறா என்று உடனே ஆப் செய்தான் .

அதற்கு பிறகு கேட்கவா வேண்டும் .அனைவரும் ஒட்டி தள்ளினர் .

ரஞ்சனி கணவர் கார்த்திக் இது தான் சாக்கு என்று கிடைத்த சந்தர்பத்தை விடாமல் கிண்டல் செய்து கொண்டு இருந்தான்  .

ஆறு வருடம் முன்பே  ஷிவானியை பார்த்து  மயங்கிவிட்டாயா சிவா ! கோபம் வந்தது போல நடித்தாய் தான ?

போங்க மாமா என்று வெட்கப்பட்டான் .

குணா, “அப்ப சிஸ்டரை முன்பே பார்த்து இருக்கிறாயா ? அது தான் மாதவன் பட டியாலாகா ? எப்படி டா? இந்த பூனையும் மில்க் குடிக்குமா என்பது போல இருந்து கொண்டு இப்படி” என்று அவன் பங்கிற்கு  கிண்டல் செய்தான். 

ஷிவானி பேசியதில் இருந்து அவளை எப்படியாவது பார்க்கணும் என்று துடித்துக் கொண்டு இருந்தான் . மாமா நீங்க தான் உதவி செய்யணும் என்று கார்த்திக்கிடம் கேட்ட போது “ நீ எனக்கு தர்மடி வாங்க வைக்காமல் ஊருக்கு போக மாட்ட போல!”

அவன் கெஞ்சுவதை பார்த்து சரி , ஊர் அடங்கின பிறகு இரவு ஒரு பதினோரு மணிக்கு மேல் போகலாம் என்றான் .

அங்கு ஷிவானி போன் பேசினால் , பதில் பேசாமல் கட் செய்தால் என்ன அர்த்தம், என்று கத்தி கொண்டு இருந்தாள்.

அறை பால்கனியில்  எதோ நிழல் ஆட , கல்யாணம் என்றவுடன் திருடன் , நகை திருட வந்து இருப்பானோ! இருக்கும் .. போன முறை வந்த போது இதே போல் கல்யாண வீட்டில்  திருட வந்ததா சொன்னாங்களே! என்ன செய்ய ?

உடனே, தோட்ட நாய்கள் இருக்கும் போது அப்படி யாரும் வர முடியாதே ! காவலுக்கு என்று இருக்கும் நாய்களை பார்த்தாலே அவளுக்கு  உடல் நடுங்குமே ?அதையும் மீறி !

பெரிப்பாவை அழைக்கலாமா என்னும் போது ஷிவானி போன் அலறியது .உடல் வியர்த்தது ..எண்ணை பார்க்காமல் அழுத்தி இருந்தாள் ..  யாரு என்று மெதுவாக கேட்டவுடன் உன் புருஷன் .கதவை திறடி !

சிவா குரலை கேட்டவுடன் “சிவா, நீங்களா ? நிஜமாவா ?”

நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டவுடன் வேகமாக சென்று கதவை திறந்தாள் .

“ஹே ஜில்லு !” அவன் அணைத்தவுடன் சில் என்று இருக்கும் அவள் உடலை கண்டு  , “ ஹே செல்லம் என்ன இப்படி வியர்த்து இருக்குது ! AC  போட்டு தான இருக்கு” .

அவள் நினைத்ததை சொன்னவுடன் “ நல்ல வேலை சிட்டு ,ஊரே கூடி மொத்தும் படி செய்யவில்லை” என்று அவளை அசடு வழிய  வைத்தான் .

“இந்த நேரத்தில் நீங்க, இங்க எப்படி?” என்று வார்த்தை திக்கி திக்கி வந்தது .

“நீ கேட்டதை நேரில் கொடுக்க தான் வந்தேன் .. ரெடியா?”

“ஹா ,நான் என்ன கேட்டேன் …”

அவள் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்து “ இதை தான் . நீ கேட்டதை கொடுத்திட்டேன், நான் கேட்க போறதை கொடுத்தாய் என்றால் அப்படியே  திரும்பி போய்டுவேன் !”

அவன் குரலை வைத்தே எதோ வில்லங்கமா கேட்க போறான் தோன்றியது . “என்னது?” என்று காத்து தான் வந்தது ..

அவன் உதட்டை காட்டியவுடன் “ போடா வேற ஆளை  பாரு !”

“ஓகே, எனக்கும் ஜாலி தான் .உன்னுடன் சுற்றிக் கொண்டு இருக்கும் அந்த பெண் ஆர்த்தியை  கூப்பிடு !”

சந்தேகமாக  “எதுக்கு சிவா …”

“நீ தான வேற ஆளை பாரு சொன்ன ?”

காளி அவதாரம் எடுத்த ஷிவானி அவனை ஒரு வழி செய்து தான் விட்டாள். அவளை ஆசையாக சிறைபிடித்து “கண்ணம்மா , இது தான் துரத்தி துரத்தி அடிப்பதோ!”

அவள் கைகளில் அழகா சிவந்து இருக்கும் மெஹந்தியை கண்டு அழுந்த முத்தம் பதித்தான் . “சரி தூங்கலாம் வா ,மணி ஆச்சு” என்றவுடன் “என்னது …இங்கயா ?நீங்களா ?”

“எதுக்கு கண்ணம்மா இத்தனை அதிர்ச்சி!”

“விளையாடாதீங்க சிவா! யாரவது வந்திட போறாங்க !”

வரட்டும் என்று மெத்தையில்  படுத்துக் கொண்டான் .”ஏன் டா படுத்தற! கிளம்பு மணி ஆச்சு !”

அவன் பிடிவாதம் கண்டு அவன் கேட்டதை கொடுத்தவுடன் தான் கிளம்ப ஒத்துக் கொண்டான். “ நாளைக்கு உங்க பெண்டாட்டி  ஆகிட்ட இப்படி மிரட்ட முடியாதே !ஒரே அறையில் தான இருப்போம்..”

“அதுக்கு வேற வழி யோசிக்க மாட்டேனா செல்லம் . நாளைக்கு இருக்கு கச்சேரி” என்று அவளை மேலும் கொஞ்ச நேரம் கொஞ்சி , சிவக்க வைத்து கிளம்பினான் .

என்ன தான் காதலி என்றாலும் வரம்பு மீறாத அவன் காதலை எண்ணி சந்தோசம் கொண்டாள்.

Advertisement