Advertisement

12.1:

திடீர் என்று அவன் மீது சரிந்த ஷிவானியை கண்டு “ஹே வனி ! என்ன ஆச்சு !வனி  இங்க பாரு !”

அங்கு போடப்பட்டு இருந்த  சோபாவிற்கு  தூக்கி சென்றான் .சிவா குரலை கேட்டு நித்யா , சரண்யா  அனைவரும் விரைந்தனர் . பதட்டமான சிவா முகத்தைக் கண்டு சரண்யா “கொஞ்சம் டயர்டா இருக்கா நினைக்கிறேன் .டென்ஷன் ஆகாத சிவா! சாதா மயக்கமா தான் இருக்கும்”  என்று தைரியம் கொடுத்து எலுமிச்சை பழத்தில் ஜூஸ் பிழிந்து எடுத்துக் கொண்டு வந்தாள்.

சிவா மருத்துவன்  என்பதால் அவள் வெளுத்த தோல்  நிறத்தை வைத்தே அவளுக்கு ரத்த சோகை இருப்பதாக கண்டு பிடித்தான் .ஒழுங்கா சாப்பிடுவதே இல்லை  போல ! இவள் வீட்டில் இவளை என்னத்த பார்த்து கிழிக்கிறார்கள்  என்று திட்டிக் கொண்டு இருந்தான் .

ஷிவானி ,பத்து நிமிடத்தில் கண் விழித்தாள். அவளுக்கு  சிவாவை பார்க்க அழுகை முட்டிக் கொண்டு வந்தது .

ஷிவானி விழித்தவுடன் இயல்பு நிலைக்கு திரும்பிய ஷிவேந்தர் குறும்பாக “என் அழகை கண்டு  மேடம் மயங்கி விட்டீர்களோ !”

என்ன என்று பதில் சொல்ல முடியாமல் பாவமாக   தலையை எல்லா பக்கமும் உருட்டினாள். அவள் கண்ணில் நீரை கண்டு  “வனி  என்ன ஆச்சு , காலையில்  என்ன சாப்பிட்ட ! வா ஹாஸ்பிடல் போகலாம்”.

சிவா பதட்டம் கண்டு “எனக்கு ஒன்றும் இல்லை! நான் நார்மலா தான் இருக்கேன்” என்று சிரித்து   மழுப்பினாள்

சிரிக்கும் வாய் மேல் ரெண்டு கொடுத்தால் என்ன என்று தோன்றிய கோப எண்ணத்தை அடக்கி  சிவா பொறுமையாக, “இன்னும் நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லவில்லை .காலையில் என்ன சாப்பிட்ட!” என்று மீண்டும் அழுந்த கேட்டான் .

யோசிக்கும் போது தான் அவள்  நேற்று மாலையில்  இருந்து  ஒன்றும் சாப்பிடாதது  நினைவிற்கு வந்தது .

தலை கவிழ்ந்து சத்தம் இல்லாமல் பதில்  சொன்னவுடன்  சிவா கோபத்தில் “அறைந்தேனா தெரியும். அறிவு இல்லை.நீ படிச்சவ தான ! ஒழுங்கா நேர நேரத்துக்கு  சாப்பிடனும் தெரியாது. காற்றை சாப்பிட்டு உயிர் வாழ முடியும் உனக்கு எந்த ஞானி  சொன்னது. நீ எல்லாம் டாக்டர் சொல்லிடாத !.

காலை உணவு ஒரு மனிதனுக்கு எத்தனை அவசியம்  தெரியுமா ! அந்த நாளுக்கு வேண்டிய அத்தனை சக்தியும் அதில் தான் கிடைக்கிறது . டயடிங் இருந்து  குச்சி போல அசிங்கமா ஆகலாம் நினைப்பா ! ஏற்கனவே  முருங்கை காய்க்கு கை கால் முளைத்தது போல இருக்க!” சந்தடி சாக்கில் “இடுப்பு என்று ஒன்று இருக்கா தேடனும் . விட்டா ஒடிந்து விழுந்திடுவ” .

அடப்பாவி , முருங்கை  காய்க்கு ,கை கால் முளைத்தது போலவா ?

இஞ்சி இடுப்பழகி ,எப்படி  செல்லம் இப்படி சிக்குன்னு  இருக்க , கேட்டது எல்லாம் இவனுக்கு  மறந்து போச்சா என்று கொதித்துக் கொண்டு இருந்தாள் .

அவள் முக உணர்வுகளை ரசித்து , நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டான். “உனக்கு  இன்னும் நீ குழந்தை நினைப்பா ? உன்னை நீ பார்த்துக் கொள்ள மாட்டாயா கண்ணம்மா”

தப்பு செய்த குழந்தை போல தலை கவிழ்ந்து  நிற்கும் வனியை வாரி அனைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடன் சுற்றியும் உணர்ந்து அவனை கட்டுபடுத்தினான் .

அவன் பாட்டி வைதேகி, “மிரட்டாத டா ! குழந்தை பயப்படுறா பாரு! சொன்னால் புரிந்து கொள்வாள் ,சின்ன பெண் தான!”

பாட்டியை முறைத்து ஷிவானியை  சீண்டும் விதமாக “உன் குழந்தையை மடியில் தூக்கி கொஞ்சறேன்! நீ வந்து வேடிக்கை காட்டு ! அறிவு என்று இருந்தால் இப்படி சாப்பிடமால் இருப்பாளா ? என்னை பார்த்தால் மட்டும் நாலு ஐஸ்க்ரீம்  வேண்டும் சண்டை போட சொல்லு!  இதில் உன் செல்லம் வேற” என்று கோபமாக முடித்தான்.

ஷிவானி முறைப்பை கண்டு  கண்டிக்கும் தோனியில் “ இதுக்கு எல்லாம் அசர மாட்டேன்” .

போதும் சிவா, என்று சரண்யா  எலுமிச்சை பழ ஜுசுடன் அருகில் வந்தாள். “முதலில் இதை குடி!” 

இவன் இத்தனை பேசினதுக்காகவே சாப்பிட கூடாது என்று ஷிவானி மனதில் பொருமினாள். அவள் பார்வையை அசராமல் எதிர் கொள்ளும் சிவாவை கண்டு உள்ளுக்குள் வனிக்கு குளிர் எடுத்தது . சிவாக்கு இருக்கும் கோபத்தில் எங்கே அவளை அடித்திடுவானோ பயந்து ஒரே மிரடில் குடித்து முடித்தாள்.

ஷிவானி, “மணி ஆகிவிட்டது, நாம கிளம்பலாம்”  என்று சொல்லியும் அவளை சாப்பிட வைத்து தான் அழைத்து சென்றான் .வண்டியில் ஷிவானி அவள் நினைவில் மூழ்கி இருந்தாள்.

இவங்க அப்பா மணிவாசகம்  தான் எங்கள் வீட்டுக்கு ரைட் வந்ததா! சிவா சொன்ன இன்கம் டக்ஸ் ஆபிசரா ? அச்சோ கடவுளே !

உங்க கேள்விக்கு பதில் கிடைத்ததா மக்களே? போட்டோவில், அவர்கள் குடும்ப படத்தில், அவரை பார்த்து தான் ஷிவானிக்கு அதிர்ச்சி, மயக்கம்.

நல்ல வேலை அவரை வீட்டில்  இங்கு பார்க்கவில்லை . பார்த்து இருந்தால் எத்தனை அசிங்கமா ஆகி இருக்கும். காலையில் எங்க அப்பா செய்த அலம்பலில், பேசிய பேச்சில் இவளை போயா  காதலித்த என்று சிவாவை முகத்துக்கு  நேரிலே கேட்டு இருப்பார் .

காலையில் வீட்டில் நடந்ததை சொன்னால் சிவா எப்படி எடுத்துக் கொள்வார் . இத்தனை கௌரவமான  இடத்தில் ரெண்டு மருமகளை  பெண் எடுத்து இருக்கும் மணிவாசகம் அங்கிள்  எப்படி  எங்க வீட்டில் பெண் எடுக்க சம்மதிப்பார் . ஒரு ஏழை வீட்டு பெண் என்றாலும் கூட ஒத்துக் கொண்டு இருப்பர்களோ, என்னமோ! இப்படி  ஏமாற்றும் குடும்பத்தில் இருந்து பெண் என்றால் ?

எங்கள் காதல் கல்யாணத்தில் முடியாதா ? சிவா எனக்கு இல்லையா என்று நினைக்க, நின்ற அழுகை முட்டிக் கொண்டு  வந்தது. கொஞ்ச நேரம் முன்பு எத்தனை சந்தோஷமாக இருந்தேன் ..

சிவா கணவனா வர அப்பா முதலில் ஒத்துக் கொள்வாரா? கண்டிப்பா பிரச்சினை செய்வார் ! மணிவாசகம் அங்கிள் மீது அத்தனை கோபமா இருந்தாரே ! யாரையாவது  அவருக்கு பிடிக்கவில்லை,  அவர் வழியில் குறுக்கே வந்தால்… அவர்களை சும்மா விடமாட்டார் . அவள் அப்பா கோபம் நன்கு அறிந்தவளாயிற்றே!

ஐந்து வருடம் முன்பு ,ஷிவானி  பள்ளி படிப்பை முடித்த  அந்த லீவில் வெஸ்டேர்ன் டான்ஸ் கத்துக்க சென்றாள். அங்கு பல நண்பர்கள் அறிமுகம் ஆனார்கள். அப்போது  இன்ஜினியரிங் கடைசி வருடம் படிக்கும் ஜீவா ,நிகில் ,ஆதி என்பவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் மூவரும் கல்லூரி கல்டுரல்ஸ் விழாவில் கலந்து கொள்ள, நடனம் பயில வந்து இருந்தனர் .நிகில் ,ஆதி, ஜீவாவுடன் ஷிவானி இயல்பாக பழகினாள். பழகின கொஞ்ச நாளிலே நெருங்கின நண்பர்களானார்கள்.

ஷிவானி துருதுருப்பு, அழகை கண்டு ஜீவா காதல் வயபட்டான் . அவன் காதலை சொன்னவுடன்  ஷிவானி அது போல எல்லாம் எனக்கு  எண்ணம் இல்லை ஜீவா என்றதும், எண்ணம் வரும் வரை நண்பர்களாக இருப்போம், நான் காத்துக் கொண்டு இருப்பேன் என்று உறுதியாக பேசினான் .நண்பர்களா பல இடத்திற்கு சென்று வந்தனர்   .

மருத்துவம் தான் படிக்கணும் என்று அவள் அப்பாவுடன் சண்டை வந்த போது ஜீவா  அவளுக்காக ஆறுதலாக பேசினான் .

அடிக்கடி பல இடத்தில் நால்வரும் சந்தித்துக் கொண்டார்கள். அப்படி சேர்ந்தால் ஒரே  கொண்டாட்டம் தான் . ஜீவா அவன்  காதலை சொன்ன பிறகு,   ஷிவானியை துளி கூட தொந்தரவு செய்யவில்லை .

எப்படியும் வாழ்க்கையில்  அவன் செட்டில் ஆவதற்குள் ஷிவானியும் மருத்துவ  படிப்பை முடித்து விடுவாள், அதற்குள்  கண்டிப்பா  அவன் காதலை உணருவாள் ,இல்லை உணர வைத்திட முடியும்   என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது .

கண்ணன், நண்பன் மூலம்  ஷிவானி    நிகில் ,ஆதி ,ஜீவாவுடன் அடிக்கடி வெளியே சுற்றுவதை கேள்விப்பட்டு கோபம் கொண்டார் . அவர்களை கூப்பிட்டு கண்டித்து இருக்கிறார் .

ஜீவாவை கண்டித்தும் ஒரு பயனும் இல்லை . ஜீவா மட்டும்  கண்ணனை  எதிர்த்தான் . அவனால் ஷிவானியை விட்டுக் கொடுக்க முடியாமல் ,என் நட்பு வேண்டாம் அவளா சொல்லட்டும், அப்புறம் உங்க மகள் இருக்கும் திசை பக்கம் கூட  வர மாட்டேன் என்று  ஜீவா எதிர் வாதம் செய்தான் .  அந்த கோபம் ஷிவானி  மீது திரும்பியது. ஜீவாவால் வீட்டில் பெரிய சண்டை வந்தது.

கண்ணன் , பொருக்கி பசங்களுடன் என்ன வேலை .நீ எந்த கிளாசும் போக வேண்டாம் என்றவுடன் எப்போதும் போல அவரை எதிர்பதற்காக அவர்கள் அனைவரும் என் நண்பர்கள் . அவர்களை எப்படி நீங்க அப்படி சொல்லலாம் . அவர்கள் எல்லாரும் என்ஜினீயர்கள். அவர்களும் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்.  அடுத்த வருடம் மேற்படிப்பு படிக்க வெளிநாடு செல்ல இருக்கிறார்கள்  என்றவுடன் கண்ணன் கோபம் தலைக்கு ஏறியது .

பெண் தப்பா எதிலோ மாட்டிக்  கொள்வாளோ, அவர் கௌரவத்திற்கு  இழுக்கு  வருமோ   என்று ஷிவானிக்கு தெரியாமல்  “என் பெண்ணுடன் பழக வேண்டாம் .கம்ப்ளைன்ட் கொடுத்தால் எங்கும் செல்ல முடியாது, ஜாக்கிரதை” என்று அவர் செல்வாக்கை வைத்து மிரட்டி அவர்களை ஆள் வைத்து அடித்து இருக்கிறார் . அவர்கள் என்ன ஆனார்கள் என்று  இது வரை அவளுக்கு தெரியாது.

அதற்கு பிறகு ஜீவா ,நிகில்,ஆதியை அவள் பார்க்கவே இல்லை .உரிமையாக , நட்பா தோழியா பழகினவர்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் போவது தான் நட்பா ! இந்த ஜீவா, அப்படி காதல் என்று அளந்தான் . எல்லாம் பிதற்றல்.

ஒரு வேலை ஜீவா சொன்னது போல அவனை காதலித்து இருந்தால் …….அப்பவும்  இப்படி தான் ஓடி இருப்பான் . மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினது போல தான் .. அந்த வயதில் வருவது காதல் இல்லை என்றாலும் கேட்கவில்லை .

நல்ல மரியாதை தெரிந்தவர்கள் என்று அவர்களை நினைத்தாலே  இப்ப கூட கோபம் தான் வரும்  .

ஒரு கட்டத்தில் அவள் அப்பா தான் ஏதோ  செய்து இவளை சந்திக்க விடாமல் தடுத்து இருக்கிறாரோ ? அப்படி தான் என்று உறுதியாக நம்பினாள். அவரிடம் அதை பற்றி  கேட்கவும் பயம் தான் .

முதலில் சிவா பொக்கே, சின்ன பரிசுகள் அனுப்பிய போது ஜீவாவா இருக்கலாம் என்று எண்ணினாள்.  பின்னர், அதற்கு வாய்ப்பே இல்லை! நாலு வருடம் முன்பு சொல்லாமல், கொள்ளாமல் ஓடினவன் எப்படி ? என்று அதை அப்படியே  விட்டாள்.

ஜீவா ,ஆதி ,நிகிலை பிரித்தது போல  என் சிவாவையும் பிரித்து விட்டால்?

அவர்கள் மூவரும் நண்பர்கள் மட்டும் தான் ..ஆனா சிவா….. என் உயிர் ஆச்சே என்று பயம் கொண்டாள்.

அவள் மனதில் உறுதியாக, அவர்களை போல என் சிவாவை எங்க அப்பா மிரட்ட முடியாது . மிரட்டினாலும் ஆதி ,நிகில் ஜீவா போல  எல்லாம் சிவா  ஓடி ஒளிய மாட்டான். அவருக்கு தக்க பதில் கொடுத்திடுவான் என்று மனதில் சந்தோசம்  கொண்டாள்.

முதலில் அவள் அப்பா மட்டும் தான் ,சிவா துணையால் அவரை தைரியமாக எதிர் கொள்ளலாம், சமாளிக்கலாம்  என்று எண்ணியவள் இன்று சிவா வீட்டிலும் கண்டிப்பா எதிர்ப்பு வரும் என்றதும் அவள் கோட்டை ஆட்டம் கண்டது .

தீவிர சிந்தனையில் இருக்கும் ஷிவானி  மௌனத்தை கலைக்க எண்ணி  “வனி , இனி எக்காரணம் கொண்டும் சாப்பிடாமல் இருக்காதே , கொஞ்சம் இரும்பு சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள். ப்ளீஸ் எனக்காக ! இனி எல்லா நேரமும் உன்னை அழைத்துக்  கேட்பேன்! சாப்பிடவில்லை என்றால்  நேரிலே வந்திடுவேன் !ஜாக்கிரதை” என்று மிரட்டினான் . அவனின் அக்கறை நினைத்து உள்ளம் குளிர்ந்தாலும்

ஷிவேந்தர் எங்கு இருந்தாலும் நல்லா இருக்கணும் என்று  “இப்படி மிரட்டும் வேலை எல்லாம் என்னிடம்  வேண்டாம் ! நீங்கள் யார் என்னை பேச  ?  நீங்க எப்படி என்னை திட்டலாம் . உங்களுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது !உங்களுக்கு மட்டும் தான் கோபம் வருமா?” என்று சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் பேசி சண்டை தொடங்கினாள்.

“ஒ ஹோ ! நான் அப்படி  பேசியதால் அம்மணிக்கு கோபமா? அது தான் இந்த மௌன விரதமா ?” ஹஸ்கி வாய்சில் “குட்டிமா கோபத்தை போக்கிடலாமா ?எனக்கு வழி தெரியுமே, ரெடியா ?”   என்று கண்ணடித்து  பேசி  அவள் அருகே முன்னேறும்  போது “ஒழுங்கா அங்க இருந்தே பேசுங்க”  என்று அவள் பையை வைத்து தள்ளினாள்.

“செல்லம்  செம சூடா இருக்கீங்க போல! வேண்டும் என்றால் என் செல்லத்துக்கு மூன்று ஐஸ் கிரீம் வாங்கி தரட்டா !”

“ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்திட்டா  உங்க பின்னால்  வந்திடுவேன் நினைப்பா ? நீங்க செய்தது சரி என்று ஆகிவிடுமா ? நீங்க யார் எனக்கு வாங்கி கொடுக்க ? ஏமாற்றுக்காரன் .பிராட் .”

எதுக்கு இவளுக்கு இத்தனை கோபம் .அவள் பேசுவதை வைத்து ஒருவேளை   நான் மருத்துவன் என்று தெரிந்துவிட்டதா? வீட்டில் மருத்துவ சம்மந்தமா  எதையோ பார்த்து தான் கோபமா இருக்காளா?  பாட்டி ,அண்ணி எதாவது வாய் தவறி  சொல்லி இருப்பாங்களா ?

இருக்காதே ! எதற்கு இந்த திடீர் கோபம் ! ஒழுங்கா தான இருந்தா?

ஷிவானி பேசிக் கொண்டே செல்வதை கண்டு  கோபமாக “வனி  ஸ்டாப் !  என்ன பேசற புரிந்து தான் பேசறியா ? என்னையா யாரு கேட்கிற ?”

“ ஆமாம் ! உங்களை தான் . திருவாளர் ஷிவேந்தர் அவர்களை தான் கேட்கிறேன் ! எதற்கும் லிமிட் இருக்கு. இப்பவே இப்படி என்றால் கல்யாணம் ஆனால் எப்படி எல்லாம் மிரட்டுவீங்க !”

 இவ புரிந்து பேசறாளா ? இல்லை புரியாமல் பேசறாளா ? இவள் அப்படி மயங்கினவுடன் நான் எப்படி டென்ஷன் ஆனேன் எனக்கு தான தெரியும் .கோபத்தில் ஒரு சொல் சொல்ல கூடாது என்றால் எப்படி !

இருந்தாலும் பொறுமையாக “வனி, நான் பேசினது உன்னை ஹுர்ட் செய்து இருந்தால் சாரி ! இதுவரை நான் அப்படி டென்ஷன் ஆனதே இல்லை .இனிமேல் அப்படி கோபப்படமாட்டேன் டா”  . அவன் பேச்சால் உள்ளம் குளிர்ந்தாலும் , இளகாமல் அவள் மனதை கல்லாக்கி

“அப்படி கோபப்படமாட்டேன்… ஆனா கோபப்படுவீங்க சொல்லறீங்க !அப்படி தான !” சிவா மனதில் அலுத்த படி இவ  இத்தனை சென்சிடிவா …ஆனா அப்படி தெரியவில்லையே “வனி,  சின்ன விஷயம்  டா  ,அதை எதுக்கு பெரிது செய்யற ?இதை விட்டிடு !” இவன் என்ன மாட்டு வண்டியா ஓட்டறான்! இன்னும் எத்தனை தூரம் இந்த கல்லூரி என்று உள்ளுக்குள்  திட்டி, மனதில் முடிவு எடுக்க முடியாமல் திணறி “எது சின்ன விஷயம் .உங்களுக்கு வேண்டும் என்றால் சின்ன விஷயமா  இருக்கலாம் .. எனக்கு அப்படி இல்லை .எல்லார் முன்னால் அப்படி திட்டறீங்க ! நாளைக்கு  நான்  உங்க மனைவி ஆகிட்ட இன்னும் எப்படி திட்டுவீங்க ? ”

அயோ ! குழந்தை போல திரும்ப திரும்ப இதையே சொன்னால் ? இவள் முடிவோட  தான் இருக்கா  .. இனி  பேசி பிரயோஜனம் இல்லை . இருவரும் பேசி  ,வாக்குவாதம் செய்ய , அது தக்க தருணம் இல்லை என்று வாயை அழுந்த மூடிக் கொண்டான் .

அதற்கு பிறகு ஷிவானிக்கும் அலுத்து விட்டது . சின்ன பிள்ளை தனமா  செய்யறோமோ ! ஷிவேந்தரிடம் என்ன என்று சொல்லலாமா ? எதாவது வழி இருக்குமோ ?  எப்படி தொடங்க ?எங்கு தொடங்க ? என்ன நினைப்பார்?

அவனை திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டு வந்தாள். அவனா கொஞ்சம் கூட  இவள் பக்கம் திரும்புவதாக இல்லை .

இனி என்ன செய்ய ?

கல்லூரி வாசலில், வண்டியில் இருந்து இறங்கி சிவாவை பார்த்து “என்னிடம் பேச கூட பிடிக்கவில்லை என்றால் இனி எப்போதும் பேச வேண்டாம் .குட் பாய்” என்று கதவை அறைந்து சாற்றி அவனை பார்க்காமல் சென்றுவிட்டாள்.

சிறு குழந்தை போல சண்டை போட்டு செல்லும் ஷிவானியை பார்க்க அவனுக்கு சிரிப்பு வந்தது .எதேர்ச்சியாக திரும்பிய ஷிவானி, ஷிவேந்தர் சிரித்த முகத்தை கண்டு மயங்கி , பழிப்பு காட்டி சென்றாள்.

காற்றில் முத்தத்தை பறக்க விட்டு ராட்ஷசி , இவள் கோபமும் அழகு தான் என்று வர்ணித்துக் கொண்டான் .

இத்தனை நாள் பார்த்த வரையில் ஷிவானி இது போல இல்லையே ! ஒரு வேலை எனக்கு   இன்று தான்  இவள் குணம் தெரிகிறதா ?

ஒரு மனநல மருத்துவனான எனக்கு இத்தனை நாள் பழகிய என் இனியவளின்  குணம் எப்படி  கண்டுபிடிக்க முடியாதா? மேடத்தை  மிரட்டினேன் தான் இந்த ஆட்டம். வரட்டும் இன்று ! என்று  குஷியாக விசில் அடித்து கிளம்பினான் .

ஷிவானி தொடர்ந்து எல்லா வருடமும்  டிச்டின்ஷன் வாங்கியதால்   ஜெர்மனியில்   மேல் படிப்பு படிக்க  ஸ்காலர் ஷிப் கிடைத்தது . யாருக்கும் கிடைக்காத அறிய வாய்ப்பு என்று அனைவரும் அவளை புகழ்ந்து தள்ளினர் .

சந்தோஷத்தை அனுபவிக்கும் மனநிலையில் அவள் இல்லை .அவள் எண்ணம் முழுதும் ஷிவேந்தர் தான் நிறைந்து இருந்தான் .

விழா முடிந்து வெளியே வரும் போது சிவா அவளுக்காக காத்துக் கொண்டு இருந்தான் . இவன் இன்னமும் போகாமல் இங்கயே இருக்கானா ? இவனை விழாக்கு அழைத்து,  நான் பாட்டுக்கு கிளம்பி போனேனே ! என்ன மரியாதை இல்லா தனம் .  அவள் செய்ததை எண்ணி தலையில் குட்டிக் கொண்டாள்.

இவனை விட்டு எப்படி விலக ? ஒரு வேலை இந்த விஷயம் நான் நினைப்பது போல  பெரிய விஷயம் இல்லையோ ?

இல்லையே ! சிவா கூட அவன்  அப்பா ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்  , பிறரிடமும் அதை எதிர்பார்ப்பவர், அவன் அண்ணன் காதலித்தாலும்  அண்ணி வீட்டை கூட அப்படி தான் தேர்ந்து எடுத்தார் என்றதை  பல முறை சொல்லி இருக்கானே !

அதற்குள் அவள் வீட்டில் இருந்து அதுவும் அவள் அப்பா எண்ணில் இருந்து பல போன் கால்கள் வந்து இருந்தது . அதை கண்டு கொள்ளும் மன நிலையில் அவள்  இல்லை.

Advertisement