Advertisement

 நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை

 

 அத்தியாயம்-1

 மும்மூர்த்திகளில் ஒருவரான ஈசனின் ஆலயத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க ஐயர் மந்திரங்கள் ஓத அதைக்கேட்டு மீண்டும் மணமகன் கர்ம சிரத்தையாக உச்சரிக்கிறான்.

 

 எம்பெருமான் ஈசனின் கோவிலின் அருகே பிரம்மாண்டமான திருமண மண்டபம் திருமணத்திற்கான சகல அம்சங்களையும் பெற்று மக்களின் சலசலபினால் மிகுந்த உற்சாகத்தோடு காணப்படுகிறது.

 

 மணமகளின் வரவை எதிர்பார்த்து மண மகனின் கண்களில் ஆவலும் ஆசையும் போட்டி போட்டுக்கொண்டு மணமகளின் அறை வாயிலையே நொடிக்கொருமுறை பார்த்தபடி இருக்கிறான்.

 

 அவனின் ஆசையையும் ஆவலையும் ஐயர் புரிந்து கொண்டாரோ என்னவோ அவனின் தவிப்பை போக்குவதற்கு உரிய வார்த்தையான                                   ” மணப்பெண்ணை அழைச்சிண்டு வாங்கோ. ” என்று ஐயர் கூறி அவனது கண்ணிற்கும் காதுக்கும் அமைதியையும் சாந்தத்தையும்  கொடுத்து அவனின் தவிப்பை அடக்கினார்..

 

 ஐயர் கூறிய சிறிது நேரத்தில் மணப்பெண்ணுக்கே உரிய சர்வ அலங்காரத்தோடு அடிமேல் அடிவைத்து தலைகுனிந்து வெண்ணிலவே தரையில் இறங்கி நடைபயிலுதோ என்று ஆச்சரியப்படும் அளவிற்கு பதுமையாக பேதைப் பெண் நடந்து வந்தாள்..

 

 அவளின் மெதுவான நடையைப் பார்த்து அவனது கண்கள் சற்றே கோபம் கொண்டது..

 

 அவனது கோபத்தை சற்று தணிக்கும் விதமாக பெண்ணவள் அவன் அருகில் வந்தமர்ந்தாள்..

 

 தூரத்தில் வரும் போது முழுமையாக அவளது அழகை பருக முடியாத தனது இயலாமையை போக்கும் விதமாக அருகில் இருக்கும் அவளின் முக அழகையும் அக அழகையும் சற்று நேரத்தில் அவனுக்கே சொந்தமாகப் போகும் பாவையை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்..

 

அவனின் அட்டகாசத்தை கண்கொண்டு பார்க்க முடியாமல் ஐயரே கோபம் கொண்டு ”  க்கும் க்கும் ” என்று தொண்டையை செருமி அவரின் இருப்பை அவனுக்கு தெரியப்படுத்தினார்..

 

 அதை உணர்ந்த அவன் கோபம் கொண்டு அவரை சற்று முறைத்துவிட்டு அவர் தொடர்ந்து கூறிய மந்திரத்தை அவனும் அவளும் இணைந்து கூறி அவளை அவனுக்கானவளாக நிரந்தரமாக சொந்தமாக்கும் நேரத்தை துரிதப்படுத்தினான்..

 

 இவ்வளவு காலம் அவனையும் அவனது மனதையும்  ஒரு நிலை இல்லாமல் தவிக்க வைத்த மங்கையை இன்னும் சற்று நேரத்தில் கை பிடிக்க போகின்றோம் என்ற ஆனந்தத்தில் மிதந்தான் அவன்..

 

 அவன் எதிர்பார்த்த நேரமும் வந்தது. அவனின் உறவுக்காரப் பெண் திருமாங்கல்யத்தை அங்கு கூடியிருந்த பெரியவர்களின் ஆசியை பெற்று ஐயரிடம் ஒப்படைத்தாள்..

 

 ஐயரும் அதைவாங்கி அவனது கையில் கொடுத்து. ” இந்தாங்கோ பிடிங்கோ திருமாங்கல்யத்தை மண பெண்ணுக்கு கட்டுங்கோ ” என்றார் சற்றே சிடுசிடுவென்ற முகத்தோடு. ஏனென்றால் அவரும்  எத்தனையோ திருமணங்கள் செய்து வைத்திருக்கிறார். ஆனால் இந்தத் திருமணம் போன்றும் இந்த மணமகன் போன்றும் அவருக்கு எதுவிதமான தொல்லைகளும் இதுவரை இருந்ததில்லை.

 

 அவனும் ஆசையோடு  திருமாங்கல்யத்தை கையில் வாங்கி அவளது முகத்தைப் பார்ப்பதற்காக இடுப்பில் கிள்ளினான். ” ஸ் ஆஆஆஆ” என்று மெதுவாக சத்தமிட்டாள்.

 

இதுவரை பார்க்காமல் தலை குனிந்து இருந்த  அவளின் சரி பாதியான அவனின் திரு முகத்தை பார்ப்பதற்காக நிமிரும் போதும்  அவனும் அவளின் சங்கு கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்க போகும் அந்த நொடியில் இரண்டு மனங்களும் பேசிக்கொள்ளும் வேளையில் எங்கிருந்தோ அதை கெடுக்கும் விதமா சத்தம் ஒன்று நீண்ட நேரமாக ஒலித்துக் கொண்டிருந்தது..

 

” ம்மாஆஆ ம்மாஆஆ எழுமா சீக்கிரம் எழுமா ” என்றாள் பத்து வயதே ஆனா மீரா.

 

 ஆனால் அந்த சத்தமோ மிகவும் அருகே அழுதபடி கேட்டது.  அந்த நேரத்தில் அவளது இரண்டு புருவங்களும் திறந்துகொண்டு  கனவிற்கு விடுதலை அளித்து  துயிலை கலைத்தது.

 இந்த பத்து வருடங்களும் அவளது மனதில் அழுத்திய பாரத்திற்கு ஒரு வடிகாலாக வந்து சென்றதே இந்த கனவாகும்..

 

 காலையில் கண்ட கனவு பலிக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறாள்.

 

அந்த கனவிலிருந்து கலைந்தும்  அவளது முகத்தில் புன்னகை பூத்தபடி இருந்தது.

 அந்த அழகிய கனவையும் இனிமையான தருணத்தையும் மனதில் நிறுத்தி இன்றைய நாளை புத்துணர்ச்சியோடு ஆரம்பித்தாள்.

 

அவளும் படுக்கையில் இருந்து எழுந்து கண்களை கசக்கிக் கொண்டு அருகில் அழுதபடி எழுந்து நிற்கும் மகளை பார்த்து புன்னகைத்தாள்.

 

 புதிதாக தாயின் முகத்தில் பார்க்கும் மலர்ந்த புன்னகையை கண்டு மீராவும் உடனே அழுகையை நிறுத்தி புன்னகைத்து கொண்டாள்.

 

” ம்மா ஷுச்சு போகணும் கூப்பிட்டு போம்மா. ” என்றாள் செல்லச் சிணுங்கலோடு தாயை அணைத்துக் கொண்டு.

 

 அவள் படிக்கும் மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் நாகரிகமாக நடந்து கொள்வாள். ஆனால் தாயிடம்  மட்டும் சிறு குழந்தையாக அடம் பிடிப்பாள் மீரா.

 

 அவளின்  மன பாரத்தையும் கவலைகளையும் சற்று நேரம் மறந்து  இருப்பது மீராவின் சேட்டைகளில் குறும்புகளிலும் மட்டுமே.

 

 மகளின்  பயந்த குணத்தை கண்டு நேரம் அதி காலை 3 மணி என்பதை அவ்வீட்டில் இருக்கும் சிறிய கடிகாரத்தில் பார்த்து தெரிந்து கொண்டு வீட்டின் வெளிப்புறத்தில் இருக்கும் கழிவறைக்கு அழைத்து சென்றாள். 

 

அவளின் மனதில் எண்ண ஓட்டங்கள் பலவாறாக இருந்தது.

 

 பத்து வயது குழந்தையின் தாய்க்கு புதிதாக நடைபெறும் திருமணம் போன்று அலங்காரங்களும் பிரம்மாண்டமான திருமண மண்டபமும் ஆட்களும் புடைசூழ  திருமணம் நடப்பது. போன்று வந்த கனவு அவளின் வாழ்வில் ஒரு காலம் இனி நடைபெற வாய்ப்பே இல்லை என்பது அவள்  நன்கு அறிந்த ஒன்று.

 

கனவு கலைந்ததில் அவளுக்கு தற்போது ஒரே ஒரு கவலை மட்டுமே கனவிலும் அவள் அருகில் இருந்த மணவாளனை யாரென்று காண முடியவில்லை என்பது மட்டுமே.

 

 ” ஒருவேளை அவர் தான் மீரா  அப்பாவா இருப்பாரோ?..

காலம் எனக்கு என்ன வச்சி இருக்கு என்றே தெரியலையே.” என்று நீண்ட பெரு மூச்சை இழுத்து விட்டபடி காலத்தின் ஓட்டத்தில் நாமும் போவோம் என்று முடிவெடுத்து விட்டு  மகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றாள்..

 

 அவளே மீராவின் தாய் இருபத்தி எட்டு வயது மங்கை துளசி மணி.

 

 நித்திரை கலைந்த பின் மீண்டும் உறங்குவதற்கு விருப்பமில்லாமல் அவளது தினசரி வேலைகளை அப்போதே ஆரம்பித்து விட்டாள்.

 

 மீராவோ மீண்டும் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றுவிட்டாள்.

 

 கைகள் அவளது வேலைகளை செய்து கொண்டிருந்தாலும் அவளது சிந்தனை முழுவதும் தற்போது வந்த கனவை ஒட்டியே இருந்தது.

 

  கனவில் கண்டவற்றை மீண்டும் நினைத்துக்கொண்டே  இருந்தாலும் வேளைகளில் எந்தவிதக் குறையும் இன்றி திறம்பட செய்து முடித்துவிட்டு மீண்டும் நேரத்தை பார்த்தாள் காலை 7:30 ஆகிவிட்டது.

 

 துளசி ஒரு தனியார் நிறுவனத்தில் கடைநிலை ஊழியராக பணியாற்றுகிறாள்.

 

 இன்னும் ஒரு மணி நேரத்தில் அவளும் பணிக்கு செல்லவேண்டும் மகளும் மெட்ரிகுலேஷன் ஆங்கில வழிக் கல்வி கற்றுக்கொடுக்கும் பாடசாலைக்கு செல்ல வேண்டும்..

 

 ஒரு வழியாக ஐந்து நிமிடம் செலவழித்து போராடி மீராவை எழுப்பி அவளை  தயார் படுத்துவதற்கு ஆரம்பித்துவிட்டாள் துளசி.

 

” ம்மா இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க இன்னைக்கு போல எப்பவும் சிரிச்சுக்கிட்டே இரும்மா பார்க்கவே ரொம்ப க்யூட்டா இருக்க ம்மா.. ” என்று  தாயின் முகத்தில் புதிதாக இடம்பெற்றிருக்கும் மென் புன்னகையில் தானும் புன்னகைத்து தாயின் கன்னத்தை கிள்ளி கொஞ்சி பேசினாள் மீரா..

 

 ஒருவழியாக  ரெடியாகி அவர்களது சிறிய வீட்டை பூட்டி விட்டு வெளியேறினார்கள் இருவரும்.

 

 ஒன்பது முப்பதுக்கு நிறுவன உத்தியோகஸ்தர்கள் வருவதற்குள் துளசியும் அவளுடன் சேர்ந்து இன்னும் மூன்று பெண்களும் அந்த நிறுவனத்தை கூட்டி துடைத்து சுத்தப்படுத்தி வைக்கவேண்டும்..

 

 துளசிக்கு மட்டும் அந்த நிறுவனத்தில் இருக்கும் சமையலறையில் அதிக நேர வேலை இருந்து கொண்டே இருக்கும்.

 

 அதனால் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மற்றவர்களுக்கு துளசியை பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை..

 

 அந்த நிறுவனத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் மற்றும்  கடைநிலை ஊழியர்கள் அனைவருக்கும் மதிய உணவு மற்றும் காபி டீ போன்ற அனைத்து விதமான உணவுகளும் குறைந்த விலையில் தரமானதாக அங்கேயே பெற்றுக் கொள்ள முடியும்.

 

இது அந்நிறுவனத்தின் முதலாளியின் கட்டளையாகும்..

 

 காலை எட்டு முப்பது மணியிலிருந்து மாலை ஐந்து முப்பது மணி வரை மட்டுமே துளசி காண வேலை நேரம் ஆகும்.

 

 முதலாளியை தவிர்த்து மற்ற அனைவருக்கும் சமைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று ஆனால் அதை கஷ்டம் என்று நினைக்காமல் மனநிறைவோடு செய்து முடிப்பாள் துளசி.

 

அதேபோன்று அவளது இன்றைய பணியையும் ஆரம்பித்து விட்டாள்.

 

சென்னையில் பணவசதி படைத்தவர்களின் குழந்தைகள் படிக்கும் மெட்ரிக்குலேஷன் ஸ்கூல் அது.

 

சம்மர் லீவ் முடிந்து இன்று மீண்டும் ஆரம்பித்து உள்ளனர்..

 

மாணவர்கள்  அவர்களின் வசதிகளுக்கு ஏற்ற வகையான கார்கள் மோட்டார் பைக் போன்றவற்றில் வந்தபடி இருக்கிறார்கள்..

 

அந்த ஸ்கூலுக்கும் அவளுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லாதது போன்று கண்ணில் பயத்தை தாங்கியபடி  நடந்து உள்ளே வந்துகொண்டு இருந்தாள் மீரா..

 

மீராவின் பயப்பார்வையை எப்பொழுதும் தங்களின் சந்தோஷமாக எண்ணும் அவளின் வகுப்பு சக மாணவர்கள் வழமை போன்று இன்றும் மீரா செல்லும் வழியில்  குறுக்கே வந்து நின்று அவளை சுற்றி ரவுண்ட் கட்டி நின்றுகொண்டு நம்பியார் போன்று கையால் சைகை செய்தபடி சுற்றி வந்தார்கள்..

” ஹே ஹே ஹே அழுமூஞ்சி அழுக்குமூட்டை சன்ஆஃப் துளசிமணி ஹே ஹே அப்பா பெயர் தெரியாதவளுக்கு படிப்பு ஒன்னுதான் குறை” என்று கூடி இருந்த அனைவரும் அவளை திட்டிக்கொண்டு இருந்தார்கள்..

 

மீராவும் கேவி கேவி அழுது கொண்டு இருந்தாள்..

இது தினமும்  நடக்கும் ஒன்றுதான்..

 

இதற்கு காரணம் அவளின் படிப்பு திறமை தான். பணத்தை தண்ணீராக செலவு செய்யும் பெற்றோர்களின் பிள்ளைகள் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மொபைல் கேம்ஸ் . கேலிக்கை விடுதிகள் போன்ற இடங்களில் அவர்களின் படிப்பையும் வாழ்க்கையும் தொலைத்து விடுவார்கள்.

ஆனால் காலர்ஷீபில் படிக்கும். மற்றும் படிக்க வசதியற்ற குடும்பத்து குழந்தைகளுக்கு சரஸ்வதி அருள் எப்பொழுதும் சற்று அதிகமாகவே இருக்கும் அதற்கு உதாரணமாக மீரா இருந்தாள்.

 

அறிவுகூர்மை சட்டென்று புரிந்துகொள்ளும் தன்மை ஞாபகசக்தி என அனைத்தும் அவளுக்கு இயற்கையாக சற்று அதிகப்படியாக சரஸ்வதி தேவி அருள் புரிந்து விட்டார்.. அதுதான் அவளுக்கு தற்போது பாதகமாக போய்விட்டது.

மிஸ் வகுப்பறையில் ஒருமுறை சொல்லிக்கொடுப்பது அச்சு பிசகாமல் அவளின் மனதில் பதிந்துவிடும். 

 

ஒரு வேலைகாரியின் மகளும் முதலாளியின் பிள்ளைகளும் ஒரே பாடசாலையில் படிக்கின்றார்கள்.

 

ஆனால் பரிட்சையில் அதிக மதிப்பெண் எடுத்து படிப்பில் படு திறமையாக மீரா இருப்பதும். ஆசிரியர்கள் உதாரணமாக மீராவை காட்டுவதும் பணம் கொழுத்த வீட்டு பிள்ளைகளுக்கு பிடிக்கவில்லை.

 

அதனால் அவளை அழவைக்கும் அவர்களின் ஒரே ஆயுதம் தான் தகப்பன் பெயர் தெரியாதவள் என்பது..

 

அதை தினமும் பார்க்கும் இடமெல்லாம் தாயின் பெயரான துளசிமணி என்னும் பெயரை கூறி அவர்கள் நினைத்தது போன்று அவளை அழவைத்து இவர்கள் சிரித்து மகிழ்வார்கள்..

அதுவே இன்றும் நடக்கிறது..

 

அப்போது அதே பாடசாலையில் முதலாம் வருடம் படிக்கும் நிஷாஸ்ரீ         பீ எம் டபிள் யூ காரில் வந்து இறங்கினாள். 

 

அவளுக்கும்  மீராவை பிடிக்காது ஆனால் இவர்களை போன்று நடந்துகொள்ளமாட்டாள்.

 

கண்டும் காணாமலும் கடந்து போய்விடுவாள் நிஷா.

 

” பாய் டாடி ஈவ்னிங் நாம ஐஸ்கிரீம் சாப்பிடலாம். சீக்கிரம் ஆபீஸ் பூட்டிட்டு வந்துடுங்க.” சிரித்துக்கொண்டே கை அசைத்து அந்த கூட்டத்தை கடந்து அவளது கிளாஷிற்கு சென்றுவிட்டாள் நிஷா..

 

அன்றய நாள் மாலை பாடசாலை முடிந்ததும் மாணவர்கள் கலைந்து சென்றார்கள்..

 

” துளசிமணிஇஇஇ” என மாணவர்கள்  ஒன்று சேர்ந்து கத்தி அழைக்கவும். நிற்காமல் அழுதுகொண்டு நடந்து சென்றாள் மீரா.

 

மீரா வரும்போது தான் துளசியும் அப்போதுதான் வேலைமுடித்து களைத்துபோய் வீடுவந்து சேர்ந்தாள்.

 

அவளது ஆசை மகள் முகம் வாடி இருப்பதை பார்த்து மீராவின் அருகில் அமர்ந்து அவளின் தலையை தடவி விட்டாள் துளசி. 

 

”  என்னடா கண்ணா பசி வந்துடுச்சா. இரு அம்மா இதோ வடை வாங்கிட்டு வந்தேன் எடுத்துட்டு வரேன் சாப்பிடுவியாம்..”  என்று எழுந்தாள் துளசி.

அப்போது அவளின் கையை பிடித்த மீரா       ”  அம்மா நான் ஒன்னு கேட்பேன் நீயும் அழக்கூடாது. சரியா? ” என்று கேட்டாள்.

 

ஏனென்றால் இரவில் துளசி அழுவதை மீரா பார்த்திருக்கிறாள்.

 

அதனால் தான் தானும் தாயை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று இதுவரை இந்த கேள்வியை கேட்கவில்லை.

 

ஆனால் இனியும் அமைதியாக இருந்தால் இன்னும் துன்பப்பட வேண்டிவரும் என்று அறிந்த குழந்தை தாயிடம் கேட்டே விட்டாள்.

”  அம்மா பிளீஸ் மா சொல்லு மா யாரு மா என்னோட அப்பா?..  எல்லாரும் ரொம்ப கேலிபண்ணுறாங்கமா அழுகையா வருது மா யார் மா சொல்லுமா?. ” என்றாள் மீரா 

 

துளசியின் உயிரை உருக்கும் கேள்வி அது ஆனால் அவளுக்கும் விடை தெரியாதே. 

 

மீரா தாயிடம் கேட்டாள்.

 

ஆனால் துளசி யாரிடம் கேட்பாள்.

 

அவர்களின் கூடலுக்கு சாட்சியான மழை வந்து பதில் கூறுமா? மீராவின் அப்பா யாரென்று.

 

இல்லை அந்த இறைவனா?  இறங்கிவந்து யாரென்று  அடையாளம் காட்டுவார்.

 

தற்போது மொத்தமாக அழுவதற்குதானோ என்னவோ காலையில் அந்த அழகிய கனவு வந்ததோ துளசிக்கு யார் அறிவர்..

விடை காலத்தின் கையில்…

Advertisement